Author: தமிழ் மதுரம்
•7:53 AM
அனைவருக்கும் வணக்கம்! உங்கள் அனைவரையும் மிக நீண்ட நாட்களின் பின்னர் ஈழத்து முற்றத்தின் வாயிலாக ஒரு பதிவோடு சந்திப்பதில் மிக மகிழ்ச்சியடைகின்றேன்! இனிப் பதிவுக்கு வருவோம்.



‘டேய் உனக்குச் ’’சொன்னானெல்லே. இது பிழை எண்டு?
என்ன மச்சான் கதைக்கிறாய்? நான் சொல்லுறன், இந்தத் தேற்றத்திற்கு இது தாண்டா விடை.
உனக்கென்ன லூசே. முதல்லை தேற்றத்தின்ரை சமன்பாடை இன்னும் நிறுவவே இல்லை. அதுக்குள்ளை வந்து ’’கதை விடுறியே?
நல்லாத் தான் ’’புலுடா விடுறாய்’’ மச்சான். நான் சொல்லுறன் A+B=C இது தானே மச்சான் விடை. என்ன டா?
உதோ விடை. உன்னைக் ’’கொம்மா கொப்பா அடிச்சு வளக்கேல்லையோ? ’’அறளை பேந்த மாதிரி வந்து அலட்டுறாய்? ’’நீயும் உன்ரை மோட்டுப் புத்தியும். வாயை மூடிக் கொண்டு வந்த வழியைப் பாரு மச்சான்.


மேற் குறித்த ஒரு உரையாடல் எங்கடை மக்கோணாப் பள்ளிக்கூடத்திலை கணித பாட வகுப்பிலை நடந்ததாக நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. ஆனாலும் மேலே உள்ள உரையாடலில் இருந்து எமது ஈழத்தில் அன்றாடம் இடம் பெறும் சம்பாஷணைகளின் போது பயன்படுத்தப்படும் ஒரு சில சொற்களினை நீங்கள் அடையாளம் கண்டு கொள்ளலாம். இனி அச் சொற்களிற்குரிய பொருள் விளக்கத்தினைப் பார்ப்போம்:



சொன்னானெல்லே:
இது ஏற்கனவே நான் உங்களுக்கு ஒரு விடயத்தினைச் சொல்லியிருக்கிறேன் என்ற பொருள் பட வரும் ஒரு வசனம்.


’’கதை விடுறியே: கதை விடுதல்/ கதையளத்தல் எனும் பொருளிலும் இது வரும். இதனைத் திரைப்படங்களில் ‘’ஓவராப் பீலா விடுறியே என்ற பொருளிலும் பயன்படுத்துவார்கள். இச் சொல்லின் பொருளானது தனக்குத் தான் எல்லாம் தெரியும் எனப் பொய் சொல்லுபவர்களைக் குறிக்கப் பயன்படும். அதிகம் படித்தவர்கள் போல தாங்களே முந்திக் கொண்டு பதிலளிப்பார்கள். ஆனால் ஒரு சில இடங்களில் சறுக்கி விழுபவர்களைக் குறிக்கவும் இச் சொல்லினை ஈழத்தில் பயன்படுத்துவார்கள்.


’’கொம்மா கொப்பா அடிச்சு வளக்கேல்லையோ: இது அம்மா, அப்பா அடி போட்டு வளர்க்கவில்லையே எனும் பொருளில் வரும். அநேகமாக அனைவருக்கும் தெரிந்த வார்த்தை இது.



’’அறளை பேந்த மாதிரி வந்து அலட்டுறாய்?: இந்தச் சொல்லுக்குரிய சரியான அர்த்தம் எனக்குத் தெரியாது. ஒரு விடயத்திற்குச் சம்பந்தமில்லாமல் கதைப்பவர்களைக் குறிக்க இச்சொல்லினைப் பயன்படுத்துவார்கள் என நினைக்கிறேன்.


’’நீயும் உன்ரை மோட்டுப் புத்தியும்: இது அதிகமாகக் கோபப்படுவர்கள், கொஞ்சம் உணர்ச்சிவசப்படுகிறவர்கள் பாவிக்கிற வசனம். மோட்டுப் புத்தி என்பது- அறிவில்லாதவர்களினைக் குறிக்கப் பயன்படும். அறிவில்லாதவர்கள் ஆலோசனை நடத்தினால் எப்படி இருக்குமோ அது போலத் தான் உன்னுடைய அறிவும் எனும் பொருளில் இச் சொல்லினை எமது ஈழத்தில் உபயோகிப்பார்கள்.



‘’ஆரடா உங்கை... ஈழத்து முற்றத்திலை வந்து மோட்டுப் புத்தி பற்றி கதைக்கிறது?? எடடா அந்தப் பொல்லாங் கொட்டண்ணை’ என ‘உம்மாண்டித் தாத்தா வெருட்டுவது கேட்கிறது. அவர் வர முதல் நான் வெளிக்கிடட்டே:)))
|
This entry was posted on 7:53 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

5 comments:

On June 27, 2010 at 8:11 AM , நிலாமதி said...

கிராமத்து மொழி வழக்கில் உங்கள் சம்பாஷனை ....நன்றாய் இருக்கிறது. புலம் பெயர்ந்தாலும் மறக்கவில்லை .
ரத்தத்தில் ஓடுகிறது கிராம வழக்கு. அறளை=மாறாட்டம்,மாறாட்டக்கதை

 
On June 27, 2010 at 9:50 AM , Pragash said...

//அறளை பேந்த மாதிரி//இச்சொற்றொடர் பின்வருமாறு திரிபடைந்திருக்கலாம்.
அறவே நினைவு பெயர்ந்த மாதிரி, முற்று முழுதாக சுயநினைவு (மயக்க நிலை அல்ல) விடுபட்டு போன நிலை. அறநினைவு என்பது அறளையாகவும், பெயர்ந்த என்பது பேந்த என்பதாகவும் மாறியிருக்கலாம். ஊரில் என்னுடைய நண்பரொருவர் சகஜமாக வேலை செய்து கொண்டிருக்கையில், உரையாடிக்கொண்டிருக்கையில் திடீரென அசைவற்று நின்றுவிடுவார். உயிர் மூச்சு எல்லாம் இருக்கும். கண் எங்கேயோ நிலைகுத்தி பார்த்துக்கொண்டிருக்கும். ஆனால் செய்த வேலையை மட்டும் ரோபோ மாதிரி செய்து கொண்டிருப்பார்.சிறிது நேரத்தில் சகஜநிலைக்கு திரும்பி விடுவார். அந்த இடைப்பட்ட நேரத்தில் இடியே விழுந்தாலும் தெரியாது.

 
On June 28, 2010 at 1:52 AM , தமிழ் மதுரம் said...

நிலாமதி said...
கிராமத்து மொழி வழக்கில் உங்கள் சம்பாஷனை ....நன்றாய் இருக்கிறது. புலம் பெயர்ந்தாலும் மறக்கவில்லை .
ரத்தத்தில் ஓடுகிறது கிராம வழக்கு. அறளை=மாறாட்டம்,மாறாட்டக்கதை//


வாங்கோ நிலாமதி.. சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரைப் போல வருமா? பாடியவர் இளையராஜா. ம்... நன்றிகள் உங்களின் கருத்துக்களுக்கும் வருகைக்கும்.

 
On June 28, 2010 at 1:53 AM , தமிழ் மதுரம் said...

PRAKASH said...
//அறளை பேந்த மாதிரி//இச்சொற்றொடர் பின்வருமாறு திரிபடைந்திருக்கலாம்.
அறவே நினைவு பெயர்ந்த மாதிரி, முற்று முழுதாக சுயநினைவு (மயக்க நிலை அல்ல) விடுபட்டு போன நிலை. அறநினைவு என்பது அறளையாகவும், பெயர்ந்த என்பது பேந்த என்பதாகவும் மாறியிருக்கலாம். ஊரில் என்னுடைய நண்பரொருவர் சகஜமாக வேலை செய்து கொண்டிருக்கையில், உரையாடிக்கொண்டிருக்கையில் திடீரென அசைவற்று நின்றுவிடுவார். உயிர் மூச்சு எல்லாம் இருக்கும். கண் எங்கேயோ நிலைகுத்தி பார்த்துக்கொண்டிருக்கும். ஆனால் செய்த வேலையை மட்டும் ரோபோ மாதிரி செய்து கொண்டிருப்பார்.சிறிது நேரத்தில் சகஜநிலைக்கு திரும்பி விடுவார். அந்த இடைப்பட்ட நேரத்தில் இடியே விழுந்தாலும் தெரியாது.//



வாங்கோ பிரகாஷ்! அவருக்குப் பக்கத்தை நிற்கும் போது அவதானமாக நில்லுங்கோ:))
கருத்துக்களுக்கு நன்றிகள் நண்பர்களே!

 
On June 28, 2010 at 3:34 AM , ஹேமா said...

சிரிப்பாய் இருந்தாலும் ஒருக்கா எங்க வீட்டு முத்தத்துக்குப் போய்ட்டு வந்திட்டன் கமல்.

நீங்களும் உங்கட மோட்டுப் புத்தியும்...!