Author: Unknown
•1:24 PM
என்ர மூண்டு வில்லன்மாரைப் பற்றி இந்தப் பதிவில எழுதப்போறன். எனக்கு இண்டைக்கும் இவை மூண்டு பேரையும் நினைச்சா தூக்கிப் போடும் பாருங்கோ. ஏனோ தெரியேல்லை இவயளைக் கண்டா எனக்கு வெறுப்பும் பயமும் கலந்து ஒரு புதுவிதமான உணர்வு வரும்பாருங்கோ. இனி இவையளைப் பற்றிப் பாப்பம்.

மசுக்குட்டி
இவையள்ள எனக்குத் தெரிஞ்சு இரண்டு வகை. ஒருத்தர் இந்த முருங்கை, வாழை இதுகள்ள இருக்கிற வெள்ளை மசுக்குட்டி. மற்றவர் முள்முருங்கையை வதிவிடமா வச்சிருக்கிற கறுத்த மசுக்குட்டி. இவையள் பூவரசு மா போன்ற மற்ற மரங்களிலையும் இருப்பினம். வெள்ளை மசுக்குட்டி பற்றின ஞாபகம் 1991க்குப் போகும். நாங்கள் இந்தியாவுக்குப் போட்டு வீட்ட திரும்பின நேரம். அப்பர் கொழும்பிலை நிண்டவர். ஒரு நாள் படுத்திட்டு காலமை எழும்பிறன் உடம்பெல்லாம் தடிப்பு. நல்ல வெக்கை எண்டுட்டு கதவைத் திறந்து விட்டிட்டுப் படுத்தனாங்கள். ஞாயிற்றுக்கிழமை எண்டபடியால் அம்மா என்னைப் பிந்தி எழும்ப விட்டவ. கருமம் பிடிச்ச வெள்ளை மசுக்குட்டி பக்கத்திலை இருந்த முருங்கை மரத்திலை இருந்து, காலமை வெயிலுக்கு கூட்டமா இறங்கி, படுக்கை வரை வந்திட்டுது. தடிக்கவும் கடிக்கவும் தொடங்க ஐயோ ஆத்தேரோ எண்டு குழறினனான். அக்கா வெங்காயம் எல்லாம் பூசி என்னவோ எல்லாம் செய்துதான் ஒருமாதிரி கடியும், தடிப்பும் குறைஞ்சது. அண்டேல இருந்து மசுக்குட்டிக்கும் எனக்கும் உறவு தொடங்கீச்சுது.

1996ல கொஞ்சக் காலம் கரணவாயில எங்கட மாமி வீட்ட இருந்தனாங்கள். அங்க இரு கறுத்த மசுக்குட்டிப் பண்ணையே இருந்தது. எனக்கு வெள்ளை மசுக்குட்டியக் கண்டா அருவருப்பா இருக்கும். கறுத்த மசுக்குட்டியக் கண்டா கடிக்கவே தொடங்கீடும். இதுக்காகவே 11 வயதிலையும் என்னை மடியிலை வச்சிருப்பார் அப்பா. அந்தளவு பயம். அதுவும் இந்தக் கறுப்பு மசுக்குட்டி சரியான மொத்தம் வேறை. இதுக்காகவே நான் கரணவாய்ப் பக்கம் போறது குறைவு. கொஞ்ச நாள் பொறுத்து மாமி வீட்டச் சுத்தி இருந்த எல்லா முள்முருக்கு மரங்களையும் வெட்டி, முட் கிளுவை போட்டு அடைச்சவ. பேந்து தகரம் போட்டு அடைச்சவ.

மசுக்குட்டியள் என்னை வீட்டில மட்டும் பயப்படுத்தேல்லை. எங்கட பாலர் பள்ளிக்கூடத்திலை குப்பை பொறுக்கச் சொல்லி விடுறவை முந்தி. அதிலை ஒரு மாமரத்திலை மசுக்குட்டி இருந்து படுத்தின பாட்டை மறக்கேலாது. அதே போல குழவியடி அம்மனிலை ஒருமுறை காலமை வெய்யிலுக்கு முருங்கையில இருந்து இறங்கின மசுக்குட்டிப் படையையும் மறக்கேலாது. அதே போல் ஹாட்லீல படிக்கேக்க ஈசப்பாவின்ர விஞ்ஞானக் கொப்பியிலை மேலை இருந்து வந்து விழுந்த கறுத்த மசுக்குட்டியையும் மறக்கேலாது. இவேன்ர தொல்லை தாங்காமல் நான் வாழைப்பழம், முருங்கக்காய் கறி, முருங்கை இலை வறை இதெல்லாம் சாப்பிடிறதே இல்லை எண்டால் பாருங்கோவன்.

எரி புழு
இவருக்கு ஏன் இந்தப் பேர் வந்தது எண்டு தெரியேல்லை. ஆள் கறுப்பும் பச்சையும் கலந்த ஒரு கலரில பாக்க மயிர்க்கூச்செறியிற மாதிரி இருப்பர். புல்லுகளிலைதான் இவர் வாசம் செய்வார். ஆள் கடிப்பாரோ, அரிப்பாரோ ஒண்டும் தெரியாது. ஆனாப் பாத்தா நடுங்கும். ஏனெண்டு தெரியாது. இவர் முதல் நாலு மாசங்களுக்க, அதுவும் இந்த நெல்லு முத்திற காலத்துக்குக் கிட்ட வந்திடுவார். மூஞ்சைக்குக் கிட்ட சிவப்பா என்னவோ இருந்து இன்னும் பயப்பிடுத்தும். ஆளாலை இன்னொரு பெரிய தொல்லை இருக்கு. இவர்வந்து நெல்லை நாசம் பண்ணீடுவார் எண்டு சொல்லி அடிக்கடி இவற்றை காலத்திலை மருந்தடிக்க வேண்டி வாறது. மசுக்குட்டி அளவுக்கு இல்லை எண்டாலும், இவரும் எனக்கு ஒரு வில்லன்தான்.

அட்டை
மழைகாலம் எண்டால் தொடங்கீடும் இவேன்ர பிரச்சினை. இவையள்ள நான் பாத்தது மூண்டு வகை. சிவத்த அட்டை, சரக்கட்டை, பாக்கர் அட்டை. மழை காலம் எண்ட உடன அவ்வளவு காலம் எங்கை இருந்தினம் எண்டு தெரியாது, ஆனா வந்திடுவினம். சிவப்பு அட்டை எண்டுறவர் சிவப்பும் கறுப்பும் கலந்த உடம்பும் சிவப்புக் கால்களும் உள்ளவர். வீட்டுக்குள்ள வந்த இவரை ஈர்க்கால தட்ட வெளிக்கிட்டா, உடனை இந்தச் சக்கர வாணம் மாதிரி சுருண்டிடுவார். இவரில என்ன அருவருப்பு எண்டால் என்ர சித்தீன்ர பொடியன் ஒருத்தன் கொஞ்சக் காலம் எங்கட வீட்டில இருந்தவன். தாயும் தேப்பனும் கொழும்பில. ஒரு நாள் இந்த அட்டையைப் பிடிச்சு, இரண்டா பிரிச்சு ஆள் சாப்பிட ரெடி. நல்ல காலம் அக்கா கண்டு பறிச்சு எறிஞ்சது. அந்தப் பிஞ்ச அட்டையப் பாத்த நாள் தொடக்கம் எனக்கு அட்டை எண்டாலே அருவருப்பு.

சரக்கட்டை எண்டுறவர் கறுப்பும் மஞ்சளுக் கலந்த கலரில இருப்பார். ஆள் சிவப்பு அட்டையை விடச் சின்னவர். சிவப்பு அட்டை அளவுக்கு இவர் அருவருப்புத் தரமாட்டார். அருவருப்பின்ர உச்சம் எண்டால் பாக்கர் அட்டைதான். ஆண்டவா, என்ன பெரிய அட்டை அது. அந்த அட்டையப் பாத்த பிறகு பாக்கர் பேனையே எனக்குப் பிடிக்கிறேல்லை. பாக்கர் பேனை மாதிரி இருக்கிறபடியால்தான் இவரைப் பாக்கர் அட்டை எண்டு சொல்லிறவை எண்டு நினைக்கிறன். நான் பாக்கோணும் எண்டு நினைச்சுப் பாக்காம விட்டது இந்த மலைநாட்டு அட்டையளைத்தான். நுவரெலியா போனபோது ஒரு தேயிலைத் தோட்டத்துக்கும் போகேல்லை எண்ட குறை இருக்கு. போனா அட்டையையும் பாத்திருக்கலாமோ என்னவோ.

ஆனாப் பாருங்கோ, நான் உந்த மட்டத்தேள், பூரான் ஏன் புலிமிலச்சிலந்தியைக் கூட அடிச்சிருக்கிறன். கிழிஞ்ச கொப்பி மட்டைய மேல போட்டு புலிமிலச் சிலந்தியை நசுக்கி இருக்கிறன். ஆனா மசுக்குட்டி, எரி புழு, அட்டையை பெரிய தடியால தள்ளிவிடவே பயம் பாருங்கோ..... உங்களுக்கும் பயம்தானே??? சும்மா புழுகாதையுங்கோ.... இந்த மூண்டு பேரும் எல்லாருக்கும் வில்லன்மார்தான்... எனக்கு வடிவாத் தெரியும்......ஊரிலை வயல் விதைக்கினமாம், அதில எனக்கிருக்கிற அனுபவம் பற்றிப் பிறகு எழுதிறன்.

மசுக்குட்டி: மயிர்கொட்டி. வண்ணத்துப்பூச்சியின் பரிணாம வளர்ச்சியின் முதலாவதோ, இரண்டாவது வடிவம்.
எரி புழு: ஒரு புழு, பெயர்க் காரணம் தெரியாது
சரக்கு அட்டை: ஒரு வகை அட்டை
பாக்கர் அட்டை: ஒரு வகை அட்டை. பாக்கர் பேனா மாதிரி இருப்பதால் இந்தப் பெயர் என்று கேள்விப்பட்டேன். உண்மையா?
முள்முருக்கு, முட் கிளுவை, கிளுவை: வேலி அடைக்க கதியால்களாகப் பயன்படும் மரங்கள். சில இடங்களில் பூவரசங் கதியாலும் பயன்படும்
பேந்து: பிறகு
அண்டேல இருந்து: அன்றில் இருந்து
மட்டத்தேள்: ஒரு பூரான் வகை. (நாங்கள் பூரான் என்று சொல்வது ‘தேள்' என்று நினைக்கிறேன்)
புலிமிலச்சிலந்தி: புலி முகச் சிலந்தி என்ற சிலந்தி வகை.
This entry was posted on 1:24 PM and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

4 comments:

On September 4, 2009 at 2:46 AM , வலசு - வேலணை said...

மசுக்குட்டி பட்டால் நல்லெண்ணை தடவி ஒரு ஓலையாலை வழிச்சாலும் சுகம் வரும். வெங்காயம் வெட்டிப் பூசுவதிலும் இது கூடிய நிவாரணம் தரும்.

 
On September 5, 2009 at 5:18 AM , சினேகிதி said...

வாசிக்கவே ஒரு மாதிரியிருக்கு. எனக்கு முதல் முதல் மசுக்குட்டி கடிச்சது பருத்தித்துறை சிவன்கோயில்ல வச்சு. அது கடிச்ச நேரம் பணிஸ் சாப்பிட்டுக்கொண்டிருந்தனான். என்ன புதிரோ தெரியா அண்டைல இருந்து ஒரு 10 வருசத்துக்கு நான் என்ன மா சாப்பாடு சாப்பிட்டாலும் உடம்பெல்லாம் தடிக்கத் தொடங்கிடும். பிறிட்டோன் என்டொரு நித்திரைக்குழுசை இருக்கு அந்தக்குழுசைல நான் எத்தினைய சாப்பிட்டிருப்பன்.

உமக்கொரு சந்தோசமான செய்தி :)) இங்க கனடாலயும் மசுக்குட்டியிருக்கு. Brimley & Lawrence சில புது வீடுகள் இருக்கு தெரியுமா? அவடத்தில முந்தி மரங்கள் இருந்தது. ஒருநாள் நாங்கள் பள்ளிக்கூடத்தால நடந்து வரேக்க நல்ல வெயிலுக்கு மசுக்குட்டியெல்லாம் மயங்கிப்போயிருக்கு. பத்தாததுக்கு மரத்தில இருந்து தொங்கிக்கொண்டு வேற இருந்தவை.

ஒரு முறை காம்பிங் போயிருந்தநேரம் நானும் தங்கச்சியும் நடக்கப் போனாங்கள். ஒரு சோளக் காணியில் ஊருப்பட்ட மசுக்குட்டி. குளறிக்கொண்டு ஓடி வந்திட்டம் திரும்ப.

மற்றது இங்க மழை நிண்டதும் நாக்குழிப்புழுக்கள் நிறையக் கிடந்து நெழியும்.

விடிய வெள்ளன நல்ல முழுவியளம் உம்மட பதிவு :))

 
On September 5, 2009 at 5:25 AM , Unknown said...

வலசு..
அட.. இப்பிடியும் ஒரு வைத்தியம் இருக்கே

 
On September 5, 2009 at 5:26 AM , Unknown said...

சினேகிதி..
கனடால மசுக்குட்டி கனதரம் கண்டிட்டன்.... சம்மரில கிரிக்கெட் விளையாடப் போன இடங்களில கண்டிருக்கிறன்.... அதுசரி சோளக்காணிகளுக்கையும் மசுக்குட்டி இருக்கிறதே???