Author: கானா பிரபா
•5:52 AM
ஈழத்தில் புழங்கும் பயன்பாட்டுச் சொற்கள் வரிசையில் சில தின்பண்டங்கள் குறித்துப் பயன்படுத்தும் சொற்களை இங்கே தருகின்றேன். இங்கே பலகாரங்கள் அல்லாத தீனிப்பண்டங்கள் சிலவற்றின் பயன்பாட்டுச் சொற்களைத் தருகின்றேன்.

தமிழக வழக்கில் "சாக்லேட்" (chocolate) என்று பரவலாகப் பயன்படுத்தும் சொல்லை ஈழத்து மொழி வழக்கில் சொக்கிளேற் என்று பயன்படுத்துவர்.
Milk chocolate என்று ஆங்கிலத்தில் புழங்கும் இனிப்புப் பதார்த்ததை ஈழத்தில் பொதுவாக கண்டோஸ் என்று அழைப்பார்கள். அதற்குக் காரணம் Kandos என்ற பெயரில் பிரபல நிறுவனமே இந்த இனிப்புப் பதார்த்தங்களை அங்கே தயாரித்து விற்பனைக்காகச் சந்தைப்படுத்துகின்றது. பின்னாளில் 80 களிலே Edna என்ற நிறுவனம் போட்டியாக இந்தத் தொழிலில் இறங்கியிருந்தாலும் Edna வின் உற்பத்திகளையும் கண்டோஸ் என்று பொதுவழக்கில் சிலர் பயன்படுத்துவது இங்கே கவனிக்க வேண்டிய விஷயம்.

தமிழக வழக்கில் பிஸ்கெட் (biscuit) என்று அழைப்பதை ஈழத்து மொழி வழக்கில் பிஸ்க்ற் என்றும் கிராமப்புறங்களில் விசுக்கோத்து என்றும் அழைப்பார்கள். (சிலரை கேலி பண்ண விசுக்கோத்து என்று அழைப்பது வேறு கதை ;-))

தமிழக சஞ்சிகைகளில் ரொட்டி என்று பழங்கும் சொல் கூடவே பிரெட் (bread) என்றும் பயன்படுத்தும் பண்டம் ஈழ வழக்கில் பாண் என்று மட்டுமே அழைக்கப்படும்.
பாண் என்ற இந்த உணவுப்பொருள் வழக்கமான வடிவில் கிடைக்கும் அதே வேளை, சப்பையாக இருக்கும் ஒரு வடிவிலும் இருப்பது என் அறிவுக்கு எட்டியவரை ஈழத்தில் மட்டுமே கிடைக்கின்றது இதை றோஸ் பாண் அல்லது சப்பட்டைப் பாண் என்றும் அழைப்பார்கள்.

ஈழத்தவர் ஒருவர் சென்னையில் இருந்த வேளை ஒரு மளிகைக்கடைக்குப் போய் "பாண் இருக்கா" என்று கேட்க மளிகைக்கடைக்காரர் பேந்தப் பேந்த முழித்தாராம். பிறகு அவர் கடையினுள் நோட்டம் விட்டு கண்ணாடிப்பெட்டியில் இருந்த அந்தப் பாணைக் கண்டு "இது தான் இதைத்தான் கேட்டேன்" என்று சொல்லவும், மளிகைக்கடைகாரர் "அட, பிரெட்ன்னு தமிழ்ழ சொல்ல வேண்டியது தானே" என்றாராம் என்று வேடிக்கையாகச் சொல்லும் கதை உண்டு.

தமிழக வழக்கில் பன் (bun)என்று பயன்படுத்தும் சொல், ஈழவழக்கில் பணிஸ் என்று அழைக்கப்படும். இனிப்பான, அல்லது இனிப்பு சேர்க்கப்படாத இந்தத் தின்பண்டம் பல வடிவில் கிடைக்கும். உருண்ட வடிவில் இருப்பது பொதுவாக பணிஸ் என்றும், நீள் கொம்பு வடிவாக இருப்பது கொம்பு பணிஸ் என்றும் அழைக்கப்படும்.

பாண், பணிஸ் பற்றி வந்தியத் தேவன் ஈழத்து முற்றத்தில் முன்பு எழுதிய சுவையான பதிவு இதோ காலையும் நீயே மாலையும் நீயே

தமிழக வழக்கில் மிட்டாய் (toffee) வழங்கும் பதார்த்தத்தினை ஈழத்துப் பேச்சு வழக்கில் ரொபி என்றே குறிப்பிடுவார்கள். கூடவே இனிப்புத் துண்டங்களாப் பொதி (pack)செய்யாமல் இருக்கும் பதார்த்தை "இனிப்பு" என்ற பொதுவான குறீயீட்டுப் பெயராக அழைக்கும் பண்பும் உண்டு. குறிப்பாக போத்தல்களில் நிரப்பியிருக்கும் தோடம்பழச் சுவை கொண்ட இனிப்புக்களை "தோடம்பழ இனிப்பு" என்று அழைப்பதோடு இவை விலையிலும் மலிவு என்பதால் குழந்தைகளின் விருப்புக்குரிய தேர்வாக இருக்கும்.

மில்க் ரொபி, புளுட்டோ ரொபி (ஞாபகப்படுத்திய பகீ இற்கு நன்றி) போன்றவை பெரும்பாலும் உள்ளூர் உற்பத்திகளாகச் செய்யப்பட்டுச் சந்தைப்படுத்தப்படும்.

மேலே படத்தில் இருப்பது பஞ்சு மிட்டாய் /பஞ்சு முட்டாஸ் படம் நன்றி: பதிவர் மீனாக்ஸ் வலைப்பதிவு

மேலே படத்தில் இருப்பது தும்பு முட்டாஸ் , நன்றி துஷ்யந்தினி கனகசபாதிப்பிள்ளை

பஞ்சு மிட்டாய் அல்லது பஞ்சு முட்டா என்ற இனிப்புப் பதார்த்தத்தை கோயில் திருவிழாக்காலத்தில் அதிகம் காணலாம். பொதுவாக மிட்டாய் என்ற சொற்பிரயோகத்துக்கு மாற்றீடாக ஈழமொழி வழக்கில் முட்டாஸ் என்ற சொல்லே பயன்பாட்டில் இருக்கின்றது. பஞ்சு முட்டாஸ் என்ற இனிப்புப் பதார்த்தை விட எங்கள் ஊர்க் கோயில்திருவிழாக்களில் தும்பு முட்டாஸ் எனப்படும் இனிப்புப் பண்டம் பெரும் கிராக்கியில் இருப்பதைச் சொல்லி வைக்க வேண்டும். காரணம் அதைக் கைக்கு அடக்கமான தாளில் சுற்றியே கொடுத்து விடுவார்கள். எடுத்துத் தின்பதும் இலகுவாக இருக்கும்.

அப்பளம் (ஞாபகப்படுத்திய சினேகிதிக்கு நன்றி) என்ற பெயரில் பல்வேறு நிறத்தில் தட்டையாகச் செய்யப்பட்ட பெரிய அப்பள வடிவில் இருக்கும் இனிப்புப் பதார்த்தமும் இருக்கின்றது, இது தமிழகத்தில் இருக்கின்றதா தெரியவில்லை. அதற்கான பதிலீட்டுச் சொல்லும் நான் அறியவில்லை.

விடுபட்ட சொற்கள் தொடரும்.
This entry was posted on 5:52 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

34 comments:

On September 26, 2009 at 7:00 AM , ஆயில்யன் said...

//சொக்கிளேற்றும் விசுக்கோத்தும்///

பாஸ் டைட்டில் ச்சும்மா டெரரா இருக்கு!

 
On September 26, 2009 at 7:04 AM , ஆயில்யன் said...

/ஈழத்தவர் ஒருவர் சென்னையில் இருந்த வேளை ஒரு மளிகைக்கடைக்குப் போய் "பாண் இருக்கா" என்று கேட்க மளிகைக்கடைக்காரர் பேந்தப் பேந்த முழித்தாராம். பிறகு அவர் கடையினுள் நோட்டம் விட்டு கண்ணாடிப்பெட்டியில் இருந்த அந்தப் பாணைக் கண்டு "இது தான் இதைத்தான் கேட்டேன்" என்று சொல்லவும், மளிகைக்கடைகாரர் "அட, பிரெட்ன்னு தமிழ்ழ சொல்ல வேண்டியது தானே" என்றாராம் என்று வேடிக்கையாகச் சொல்லும் கதை உண்டு.//

இங்கு வந்தப்போது என் ஈழ நண்பர்களோடு எனக்கும் இதே போன்றதொரு அனுபவம் இருக்கு! ஏன்ய்யா ப்ரெடை போய் பாண் சொல்லுறீங்க கேட்டவன்ல மீ 2 :)))

 
On September 26, 2009 at 7:08 AM , ஆயில்யன் said...

ஒரு முறை இங்கு கடையில் நீஸ் பிஸ்கெட் என்ற ஒரு ஐட்டத்தை வாங்கி வந்தேன் பிரித்துபார்த்தபிறகுதான் தெரிஞ்சுது அது எங்க ஊரு ஜீனி பிஸ்கெட்டுன்னு :)))

 
On September 26, 2009 at 7:14 AM , *இயற்கை ராஜி* said...

//முட்டாஸ் //

சாப்பிடறவங்கள முட்டாள்ன்னு சொல்லாம இருந்தா சரி:-)

 
On September 26, 2009 at 7:24 AM , ☼ வெயிலான் said...

முதலில் கண்டோஸ் என்ற வார்த்தையைக் கேட்டு முழித்ததுண்டு. பின் கண்டோஸ் என்றால் சாக்லேற் என்று புரிந்தது :)

 
On September 26, 2009 at 7:29 AM , நிஜமா நல்லவன் said...

/ஆயில்யன் said...

//சொக்கிளேற்றும் விசுக்கோத்தும்///

பாஸ் டைட்டில் ச்சும்மா டெரரா இருக்கு!/

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்.....

 
On September 26, 2009 at 8:04 AM , தமிழன்-கறுப்பி... said...

தனியா கடைக்கு போகத்தொடங்கின காலம் துண்டு துண்டா ஞாபகம் வருது...

கன்டோஸ் என்பதுதான் பரவலாக இருந்திருக்கிறது,சொக்கிளேற் என்பது அம்மம்மா தலை முறையினரின் சொல் வழக்காக இருந்ததாகத்தான் எனக்கு ஞாபகம்... ஒரேஞ் முட்டாஸ் அல்லது தோடம்பழ முட்டாஸ் இது உண்மைல டேஸ்ட் தான் அண்ணன்.

பஞ்சு முட்டாசுக்கு முதல் தும்பு முட்டாஸ் இருந்தது தெரியுமோ அதுவும் ஒரு தனி சுவை..அந்த சுவை இந்த பஞ்சு முட்டாஸ்ல கிடைக்கேல்லை..

:)

 
On September 26, 2009 at 8:07 AM , சினேகிதி said...

எனக்கு ஞாபகம் வாறதுகள் orange முட்டாஸ், எள்ளுருண்டை, கலர் கலரா அப்பளம், இறுங்குப்பொரி உருண்டை ,பூனை பிஸ்கற்.

 
On September 26, 2009 at 8:09 AM , அன்புடன் அருணா said...

நிஜம்மாவே என்னவோ ஏதோன்னு பயந்து போய் வந்தேன்!

 
On September 26, 2009 at 8:44 AM , பகீ said...

நான் இப்பயும் சாப்பிடுறது எண்டா..

புளுட்டோ ரொபி, கறுவா இனிப்பு, கலர்கலர் பப்படம், தோடம்பழ இனிப்பு, தேங்காய்ப்பூ இனிப்பு

ஊரோடி பகீ
http://oorodi.com

 
On September 26, 2009 at 8:45 AM , கானா பிரபா said...

அன்புடன் அருணா said...

நிஜம்மாவே என்னவோ ஏதோன்னு பயந்து போய் வந்தேன்!//

ஆகா ஏதாவது உள்குத்து இருக்கா ;)

 
On September 26, 2009 at 8:54 AM , கானா பிரபா said...

அப்பளத்தை ஞாபகப்படுத்திய சினேகிதிக்கும் புளுட்டோவை ஞாபகப்படுத்திய பகீ இற்கும் நன்றி,

மேலதிகமாக அவை பற்றிச் சேர்த்திருக்கின்றேன்.

 
On September 26, 2009 at 9:02 AM , வர்மா said...

குளிர்பானத்தை யாழ்ப்பாணத்தில் பொதுவாக சோடா என்பார்கள், கொழும்பில் சோடா என்று கேட்டால் பிளேன் சோடாதான் கொடுப்பார்கள்.

அன்புடன்
வர்மா

 
On September 26, 2009 at 9:15 AM , ஹேமா said...

பிரபா,இங்க சொன்ன இனிப்புகளை விட சூப்புத்தடி இனிப்பு,கச்சான் அல்வா.

பாணைப்பற்றிச் சொல்ல றோஸ் பாணும் இடிச்ச சம்பலும் ஞாபகத்துக்கு வந்து வாய் ஊறுது.

 
On September 26, 2009 at 9:18 AM , கானா பிரபா said...

வணக்கம் ஹேமா

இனிப்பு பட்டியல் என்பதை விட தமிழக - ஈழ மொழி வழக்கில் இவற்றின் பயன்பாடு என்ற கோணத்தில் கச்சான் அல்வாவை அங்கே கடலை அல்வா என்பார்கள் இல்லையா?

சூப்புத்தடி என்ற அந்த இனிப்பை குச்சி இனிப்பு என்று சொல்வார்கள் என நினைக்கிறேன்.

 
On September 26, 2009 at 10:38 AM , வந்தியத்தேவன் said...

எங்கடை ஊர்ப் பக்கம் அப்பளத்தை காவேலை அப்பம் எனவும் அழைப்பார்கள். இப்பவும் கொழும்பில் பாடசாலைகளுக்கு முன்னால் விற்கின்றார்கள். ஒரு தடியில் சுற்றி அதிலிருந்து இழுத்து இழுத்து விற்கப்படும் பம்பாய் முட்டாசும் சில இடங்களின் காண்கின்றானான்.

 
On September 26, 2009 at 3:00 PM , கலை said...

இந்தியாவில் கடையில் உப்பு கேட்டு அவர்கள் புரியாமல் விழித்து, பிறகு உப்பை காட்டியதும், ”சால்ற்னு தமிழ்ல சொல்லக் கூடாதா” என்று திருப்பிக் கேட்ட நேரடி அனுபவம் உண்டு :).

 
On September 26, 2009 at 4:38 PM , கலை said...

கேலியாக, விளையாட்டாக 'ஒரு விசுக்கோத்து' என்று சொல்வதை கேட்டுவிட்டு ஒரு குழந்தை, அப்பாமேல் ஏதோ கோவம் வர, 'நீங்கதான் ஒரு biscuit' என்று சொன்னது :).

 
On September 26, 2009 at 4:58 PM , Unknown said...

கச்சான் அலுவா, மில்க் ரொவி அப்பிடி எண்டு ஆரம்பிச்சு கடைசிவரை விடாமல் சாப்பிட்டது கண்டோசைத்தான்... கண்டோஸ் என்பது ஒரு நிறுவனப் பெயர் இல்லையா... ஒரு கொஞ்சக்காலம் இந்தக் கிரிக்கெட் விளையாட்டுக் காரரின்ர ஸ்ரிக்கர் உள்ளை வச்சு 'எட்னா' எண்டொரு சொக்கிளேற்று வந்தது பாருங்கோ... அப்ப பொடியள் அடிக்கடி கடையில போய்க் கேப்பாங்கள் ‘எட்னா கண்டோஸ்' தாங்கோ எண்டு... அந்தளவுக்கு எங்கட பக்கத்தில கண்டோஸ் பிரபலம்.

கிட்டத்தட்ட மில்க் ரொபி மாதிரி ஐஸ்கிரீம் இனிப்பு எண்டும் ஒண்டு வித்தவை.

சோளப்பொரியை சீனிப்பாணி, சிவப்புக் கலரிங் சேத்து உருண்டையாக்கி ஒரு இனிப்பு வித்தவை. அதத்தான் சினேகிதி ‘இறுங்குப்பொரி உருண்டை' எண்டுறாவோ தெரியேல்லை. அதே சேப்பில கச்சான் அலுவாவும் வித்தவை. அதே போல் எள் அல்வாவும் வித்தவை.

எல்லா இனிப்பிலும் எனக்குப் பிடிச்சது ‘என்ர பெம்பிளை' ரொவிதான்.

பி.கு-1: ‘ரொவி' என்ற சொல் எங்கள் மத்தியில் ஒரு குழுமச் சொல்லாகப் பயன்பட்டதுண்டு, பல விபரீத அர்த்தங்களுடன் (உ-ம்: அவன் ஒரு சரியான ரொவியனடா')

பி.கு-2: இறால் பொரி எண்டொரு உறைப்பு ஐட்டம் எங்கட ஊரில விக்கிறவை. பேர்தான் அசைவமே ஒழிய சுத்த சைவச் சாப்பாடு. நீர் மோரோட சேத்து சைடிஷ்ஷா பாவிச்சாலே சும்மா பிடுங்கும். மொடாக் குடிகாரர் எல்லாற்றையும் விருப்பத்துக்குரிய சைடிஷ் அது. இனிப்பைப் பற்றிக் கதைக்கேக்கை அந்த உறைப்பு ஏனோ ஞாபகம் வந்திட்டுது பாருங்கோ

 
On September 26, 2009 at 5:28 PM , Anonymous said...

கானா, பஞ்சு மிட்டாய் இங்க கூட கிடைக்குது. போன வாரம் வாங்கி சாப்பிட்டேன்.

 
On September 26, 2009 at 6:07 PM , கானா பிரபா said...

வணக்கம் கீத்

முன்னர் நான் சொன்னது போல இங்கே நான் இனிப்பு வகைகளைப் பட்டியல் இடவில்லை அவற்றுக்கு ஈழ தமிழக மொழிவழக்கைப் பகிர்ந்தேன். கண்டோஸ் ஒரு நிறுவனப்பெயர் என்றும் அதுவே அவற்றின் உற்பத்திப்பொருட்களுக்கும் பொதுப்பெயராக அமைந்ததையும் பதிவில் சொல்லியிருக்கிறேன்

வாங்க சின்ன அம்மிணி

பஞ்சு மிட்டாய் தமிழகத்தில் இருக்கின்றது, அதன் ஈழப்பேச்சு வழக்கை இங்கே பகிர்ந்து கொண்டேன்.

 
On September 26, 2009 at 6:38 PM , கானா பிரபா said...

கலை said...

கேலியாக, விளையாட்டாக 'ஒரு விசுக்கோத்து' என்று சொல்வதை கேட்டுவிட்டு ஒரு குழந்தை, அப்பாமேல் ஏதோ கோவம் வர, 'நீங்கதான் ஒரு biscuit' என்று சொன்னது :).//

ஆகா ;-)))

 
On September 26, 2009 at 10:53 PM , Unknown said...

இனிப்பான பதிவு :)

சவ்வு மிட்டாய், தேன் மிட்டாய், முக்கோண மிட்டாய், கல்கோணா, மீன் மிட்டாய், "சுத்துற" மிட்டாய், "உந்துற" மிட்டாய் இதெல்லாம் இருக்கா ஈழத்தில்? இதெல்லாம் நம்ம பள்ளிகாலத்து 'ஜன்க் ஃபுட்ஸ்' :)

இன்னும் எங்க கிராமத்தில் சில பெருசுங்க, "முட்டாஸ்" சொல்லிக் கேட்டிருக்கிறேன். முட்டாய், முட்டாசி போலவும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

பஸ், சால்ட், ரோடு, சைக்கிள், ப்ரெட், ஜாம், கார், பைக், சார், மேடம், அங்கிள் இதெல்லாம் தமிழ் வார்த்தைகள்னு தெரியாதா? எந்த ஊர்ல எந்தக் காலத்துல இருக்கீங்க? இதென்ன தமிழுக்கு வந்த சோதனை? :(

 
On September 27, 2009 at 12:53 AM , சயந்தன் said...

பஞ்சுமுட்டாசின் முன்னைய வடிவம்தான் தும்பு முட்டாஸ் என நினைக்கிறன்.. மின்சாரமில்லாதபடியால அது பஞ்சுமுட்டாசாய் வாற அளவிற்கு அதில வேலைகள் செய்யமுடியாதென்று தும்புமுட்டாஸ் சின்னையாண்ணை சொன்னதாக நினைவிருக்குஇ

புளூட்டோ மண்ணிற கலரிலதானே இருக்கிறது..? தும்புமுட்டாஸ் காரர் சிவப்பு வெள்ளை கலரில (கோயில் சுவர்கள் போல) சூப்புத்தடி என்றொரு இனிப்பும் விற்பார்கள்.

தடியில சுத்தி இழுத்து இழுத்து பிய்த்துக் கொடுக்கிற இனிப்புக்கு நாங்கள் ஈச்சான் பீச்சான் என்ற பெயரிலதான் சொல்லியிருந்தோம். உண்மை பெயர் என்ன..?

இதை விட குமரப்பா குண்டு ஒரு பூசணிக்காய் மாதிரியான குண்டு இனிப்பு நினைவிருக்கா.. கடாபி என்றொரு இனிப்பும் இருந்தது.

 
On September 27, 2009 at 1:24 AM , கானா பிரபா said...

தஞ்சாவூரான் said...

இனிப்பான பதிவு :)

சவ்வு மிட்டாய், தேன் மிட்டாய், முக்கோண மிட்டாய், கல்கோணா, மீன் மிட்டாய், "சுத்துற" மிட்டாய், "உந்துற" மிட்டாய் இதெல்லாம் இருக்கா ஈழத்தில்? இதெல்லாம் நம்ம பள்ளிகாலத்து 'ஜன்க் ஃபுட்ஸ்' ://


வணக்கம் தஞ்சாவூரான்

சவ்வு மிட்டாய் தான் கீழே சயந்தன் குறிப்பிட்ட ஈச்சான் , பீச்சான் என்று நினைக்கிறேன், மற்றவைகளின் படங்களைப் பார்த்தால் தான் என்னால் உறுதிப்படுத்த முடியும் போல, அல்லது சக நண்பர்கள் சொல்கிறார்களா பார்ப்போம்


//பஸ், சால்ட், ரோடு, சைக்கிள், ப்ரெட், ஜாம், கார், பைக், சார், மேடம், அங்கிள் இதெல்லாம் தமிழ் வார்த்தைகள்னு தெரியாதா?//

ஆகா ;-)

வணக்கம் சயந்தன்

ஈய்ச்சானுக்கு தஞ்சாவூரான் சொன்னது பொருத்தமானது போல.
கடாபி கோடு போட்ட யூனிபோர்மில் கொஞ்சம் காரமாக இருக்கும் இல்லையா ;-) தமிழகத்தில் அதன் பெயர் தெரியவில்லை. குமரப்பாவை இப்ப தான் கேள்விப்படுகிறேன்.
தும்புமுட்டாஸ்காரரை கூட விட்டு வைக்கவில்லை போல ;)

 
On September 27, 2009 at 2:32 AM , பகீ said...

///// கடாபி என்றொரு இனிப்பும் இருந்தது.////

இப்பயும் இருக்குது..

ஓமோம் புளுட்டோ மண்ணிறம் தான்..

 
On September 27, 2009 at 5:11 AM , யசோதா.பத்மநாதன் said...

நல்ல பகிர்வு பிரபா,

அந்த பெரிய அப்பளம் போல இருக்கிறத எங்கள் பள்ளி நாட்களில் "நைஸ்" என்று அழைத்தோம்.

பிங் கலரில் இருக்கும்.மெல்லிய இனிப்புச் சுவை உடையது.உடைத்து நாக்கில் வைத்தவுடன் கரைந்து விடும்.காற்றடித்தால் காற்றிலும் பறந்து விடும்.:-)

 
On October 8, 2009 at 8:09 AM , Anonymous said...

ஈழத்தில் பாண் என்ற சொற்பதம் போத்துக்கேய வரவாக இருக்கலாம். அண்மையில் ஒரு மெக்சிகோ கடையில் பாண் என்ற சொல் கண்டேன். கேட்டபோது bread எனச் சொன்னார்கள். மேலும் ஸ்பானிய ஆங்கில அகராதியிலும் அவ்வாறே உள்ளது.
http://www.wordreference.com/es/translation.asp?tranword=BREAD

 
On October 15, 2009 at 10:24 PM , Anonymous said...

பாண் என்பது (Pan) என்றதில் இருந்து வந்தது. பாண் தமிழரின் உணவு அல்லவே. அதனால், அதனை பெரிய விசயம் ஆக்கக்கூடாது.

இயக்கம் அதுக்கு வெதுப்பி என்டு பெயர் வைச்சவ. பேக்கரிக்கு வெதுப்பகம், ஐஸ்கிறீமுக்கு குளிர்கழி, சைக்கிளுக்கு ஈருருளி...

ஒரு சம்பவம் ஞாபகம் வருது. என்ட அம்மா கேக் அடிக்க ஆரம்பித்த போது அது கேக் மாதிரி வராது. அப்பாவின்ட அண்ணாக்கள் (வேலை செய்பவர்கள்) அதுக்கு சீனிப் பாண் என்டு பெயர் வைத்தார்கள். அம்மா பிறகு எவ்வளவு தான் நல்லா கேக் அடிச்சாலும் , ஏன் விதம் விதமாக கேக் அடிச்சாலும், அக்காவின்ட சீனிப் பாண் வந்து இருக்கு என்டுதான் சொல்லுவார்கள்..

கலர் அப்பளத்துக்குப் பேர் நைஸ். ஒன்டு 5 சதத்துக்கு வித்தவ நாங்கள் குட்டியா இருக்கேக்க.

நான் வெளி நாட்டுக்கு வந்த போது கண்டோஸ் சாப்பிட்டனான் என்டால், என்ன என்டு முழிப்பார்கள். சொக்லட் என்டு மாத்த சரியான கஷ்டப்பட்டனான். பிறகு பிரான்டின் பேரை சொல்ல வெளிக்கிட்டன். மார்ஸ், டொப்லரோன் சாப்பிட்டனான் என்டு சொல்ல வெளிக்கிட்டனான். இப்ப கூட சொக்லட் என்டு சொல்ல விருப்பமில்லை. ஏனோ கன்டோஸ் என்டு சொல்லேக்க ஒரு சுகமா இருக்கு. எனக்கும் ஞாபகம் இருக்கு எட்னா கன்டோஸ் தாங்கோ என்டு என்ட பிரன்ட் ஒராள் கடையில் கேட்டது.

கிட்டடியில் பிரான்டின் பெயரால் அழைக்கப்படும் பொருட்கள் பற்றி ரிசேச் செய்தனாங்கள். நேரம் கிடைக்கேக்க பதிவொன்டு போடுறன்.

 
On October 16, 2009 at 12:40 AM , கலை said...

//கிட்டடியில் பிரான்டின் பெயரால் அழைக்கப்படும் பொருட்கள் பற்றி ரிசேச் செய்தனாங்கள்.//

Photocopy எடுக்கிறதை Xerox எடுக்கிறது எண்டு சொல்லுறது, vaccum cleaner பாவிக்கிறதை Hover பிடிக்கிறன் எண்டு சொல்லந்து எல்லாம் இதில் அடங்குமென நினைக்கிறன். உங்கட research ல இதெல்லாம் முதலே வந்திருக்கலாம். வராட்டி, இதையும் சேர்த்துக் கொள்ளுங்கோ :).

 
On November 10, 2009 at 10:29 AM , Anonymous said...

//Photocopy எடுக்கிறதை Xerox எடுக்கிறது எண்டு சொல்லுறது, vaccum cleaner பாவிக்கிறதை Hover பிடிக்கிறன் எண்டு சொல்லந்து எல்லாம் இதில் அடங்குமென நினைக்கிறன். உங்கட research ல இதெல்லாம் முதலே வந்திருக்கலாம். வராட்டி, இதையும் சேர்த்துக் கொள்ளுங்கோ :).//

Thanks Kalai.. Those two were in the top list :D However, thnx for ur concern... Good day

 
On April 1, 2010 at 2:19 AM , Anonymous said...

இனிப்பு அப்பளம் என்று சொல்வது நயிஸ் என்ற இனிப்பு பண்டத்தை இன்று எண்ணுகிறேன்.

 
On April 1, 2010 at 2:27 AM , Anonymous said...

இனிப்பு அப்பளம் என்று சொல்வது நயிஸ் என்ற இனிப்பு பண்டத்தை இன்று எண்ணுகிறேன்.
முட்டாஸ் என்பதைவிட முட்டாசி என்ற பதம் தான் பாவனையில் உள்ளது

 
On August 20, 2015 at 11:27 PM , Anonymous said...

பாண் - பவும் (போா்ததுக்கேய மொழி) கொய்யா, அன்னமுன்னாவும் அவா்களுடயதே.
எந்த பிராண்ட் சிகரட்டும் இலங்கையருக்கு பிறிஸ்டல்
சொசேஜ் இலங்கையருக்கு கீல்ஸ் (கொம்பனிபெயா்)