Author: shangar
•8:25 AM

நீண்ட கோடைக்குப் பின் மேகம் கறுத்து காற்று பலமாக வீசியது. நிலத்தில் இருந்த இலைச்சருகு, குப்பை கூளங்கள் யாவும் காற்றில் சுழன்று சுழன்று மேலே எழுந்தன. மரங்கள் காற்றில் முறிந்து விழும் என்ற நிலைக்கு ஆடின. பெரிய மழைத்துளிகள் பூமியில் விழுந்தன. அப்போது ஒரு வாசனை மூக்கைத் துளைக்கும். அதுதான் மண்ணின் வாசனை. இந்த வாசனை எங்கள் நாட்டிற்கு(குடாநாடு)தான் சொந்தமென நினைக்கிறேன். அப்போது அங்கே நுகரும் வாசனை அற்புதமாய் இருக்கும். நாம் வேறு இடங்களிலும் வசித்திருக்கிறோம். அப்படி ஒரு வாசனையை நுகர்ந்ததில்லை. அப்படி வாசனை வரும் என்றால் அது சாக்கடை வாசனையாய் தான் இருக்கும். மழைத்துளிகள் விழுந்ததும் மண் சிலிர்க்கும். புழுதி அடங்கும். வாட்டத்தில் இருக்கும் மரங்கள் மழைநீரைக்கண்டதும் சிலிர்த்து மேலெழும்.

மழைவரப்போகிறது என்றால் எங்கோ இரைச்சல் கேட்கும். மழை வரப்போகிறது என்பது விளங்கும். இந்த மழை இங்கே வர எவ்வளவு நேரம் எடுக்கும் என ஒரு கணிப்பு இருக்கும். அதற்கு தகுந்தபடி பக்கத்தில்மழை நிலத்தில் விழமுதல் எவ்வளவு வேகத்தில் போக முடியுமோ அவ்வளவு வேகத்தில் ஓடிச்சென்று வீட்டில் புகமுடியும். இதுதான் எங்கள் மண்ணின் வாசனை. இங்கே இரைச்சல் இல்லை. மழை வரும் அறிகுறியும் தென்படாது. மழை இல்லை என்று வெளியே சென்றால் ஐந்து நிமிடத்தில் மழை பெய்யும். நல்ல மழை பெய்யும்போது முற்றத்தில் மழை நீர் வெள்ளமாய் ஓடும். அதிலே மழைத்துளி வழிந்து நீர்க்குமிழி போடும். அவை பார்ப்பதற்கு மனோரம்மியமாக இருக்கும். அதிலே பழைய கொப்பி பேப்பர் எல்லாம் கப்பல் செய்வதற்கு பயன்படும். முற்றத்தில் கப்பல் ஓடும். கரை சேரும் தாழ்வாரத்தில்.இதுவும் எங்கள் மண்ணிற்கே உரித்தான வாசனைதான்.முற்றமோ மண்ணோ இல்லாத இடத்தில் அதன் அழகையோ வாசனையையோ உணர முடியுமா? நீண்ட மழைக்காலம் நீடிக்கும்போது சிவப்பு கம்பளிபூச்சிகள் வழி எங்கும் செல்லும். அவை பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சிதான். வண்டுகள் ரீங்காரமிடும். மின்மினிகள் ஒளியூட்டும்.

மார்கழி தை மாதத்தில் பனிக்காலம் வரும். அக்காலத்தில் இரவு நல்ல குளிராக இருக்கும். அந்தக்குளிரில் போர்த்திக்கொண்டு படுத்திருக்கும்போது இருக்கும் சுகம் எங்கும் கண்டதில்லை. அந்த பனிக்குளிரின் குளிர்காற்று அலாதியானது. இதுவும் எங்கள் மண்ணிற்கே உரித்தான மண்வாசனைதான்.

தடுக்கி வழும் இடமெல்லாம் கோவில் உண்டு. மக்கள் பக்தியுடன் கோவில் தரிசனம் செய்வரர்கள். எந்த நேரமும் அங்கு செல்லலாம். எப்போதும் திறந்திருக்கும். அங்கே வியாபாரம் இல்லை பக்தி மட்டுமே உண்டு. அதுவும் எங்கள் மண்ணின் வாசனையே.

சிறு கூடுநாம் கடடி

கூட்டினுள் தாம் இருந்த வேளை

கூட்டினைக் கலைத்தான்

எங்கள் வீட்டினைச் சிதைத்தான்.

மண்ணின் வாசனை அந்நியமாயிற்று.

அந்நிய வாழ்க்கை வேதனையாயிற்று.

கிணற்று நீர் இம்மண்ணிற்கே உரித்தானது. சுண்ணாம்புப்பாறையால் வடிகட்டப்பட்டு கீழே செல்கிறது. அவ்வண்ணம் சென்ற நீரை வெட்டுக்கிணறு,குழாய்க்கிணறு என்பவற்றின் மூலம் மேலே எடுத்து குடிப்பதற்கு, குளிப்பதற்கு, பயிர்களுக்கெனப் பயன்படுத்துகிறார்கள்.இந்த நீரில் அசுத்தம் ஏதும் இல்லை. அந்நீர் களைப்புக்கு நல்ல மருந்தாகும். அதனைக் குடித்ததும் உற்சாகமாய் இருக்கும். இதுவும் எங்கள் மண்ணின் வாசனையே.

|
This entry was posted on 8:25 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

6 comments:

On September 19, 2009 at 1:47 AM , தமிழ் முல்லை said...

தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி..!


முல்லை பெரியாறும் .. துரோகத்தின் வரலாறும்...2

வாருங்கள் வந்து துரோகத்தை அறிந்து கொள்ளுங்கள் ...!!!

 
On September 21, 2009 at 12:16 AM , Anonymous said...

சொந்தக்காரர்கள் / சொந்தக்காரர். சொந்தக்காறர் is wrong.

 
On September 21, 2009 at 12:24 AM , கானா பிரபா said...

Triumph said...
சொந்தக்காரர்கள் / சொந்தக்காரர். சொந்தக்காறர் is wrong.
//

ஈழத்துப் பேச்சுவழக்கில் "ற" என்பதே பாவிக்கப்படும்.

 
On September 22, 2009 at 7:18 AM , கிழட்டுப்பூசாரி said...

இக்கட்டுரையை வாசித்தபோது யாழ்ப்பாணத்தில் நான் வசித்த காலத்தினை எண்ணிப்பார்க்கின்றேன். நீங்கள் கூறியது போல் மழைதுளி நிலத்தில் விழும் போது எழும் வாசனையை வாசித்தபோது என்னால் உணரக்கூடியதாக இருந்தது.

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே......

 
On September 22, 2009 at 6:36 PM , Nathanjagk said...

அருமையான மண்வாசம்!!!
//இந்த மழை இங்கே வர எவ்வளவு நேரம் எடுக்கும் என ஒரு கணிப்பு இருக்கும்//
இதுதான் கொஞ்சம் சிக்கல்.. நம் ​வானிலை அறிக்கைகள் கூட தடுமாறிவிடுகின்றன. இங்கு ​பெங்களூரில் - ​சொல்லவே ​வேண்டாம் - எப்ப நிக்கும் எப்பக் ​கொட்டும்னு புரியாத செப்டம்பர் சீஸன்!
முற்றமோ மண்ணோ இல்லாத இடத்தில் அதன் அழகையோ வாசனையையோ உணர முடியுமா?
நிச்சயம். ​தேர்ந்த வார்த்தைகள் சீராக ஒரு படிமத்தைச்​சொல்லும்போது, படிக்கும் மனசுக்குள் மழையாக இருக்கிறது.
வாழ்த்துக்கள் ஷங்கர்!

 
On September 24, 2009 at 11:07 PM , shangar said...

நன்றி... கிழட்டுப்பூசாரி, ஜெகநாதன்