Author: வந்தியத்தேவன்
•5:17 AM
பாடசாலை நினைவுகள் எவ்வளவு பசுமையானதோ அதேபோல் ரியூசன் நினைவுகளும் அதே அளவு பசுமையானது. சினேகிதி எழுதிய "ரியூசன் பம்பல்கள்....ஏதோ ஏதோ ஞாபகங்கள் " ஒரு 8 ஆம் அல்லது 9 ஆம் வகுப்புடன் நின்றுவிட்டதுபோல் தெரிகிறது. ஆகவே உயர்தரத்தில் நாங்கள் செய்த குழப்பங்களும் பசுமையான நினைவுகளும் கொட்டில் காலத்து நினைவுகளாக, கொட்டில் என்றவுடன் கள்ளுக்கொட்டிலை நினைக்கவேண்டாம்.

உயர்தரம் படிக்கப்போகின்றோம் என்றவுடன் முதலில் எல்லோரும் கேட்கும் விடயம் எங்கையப்பு ரியூசன் போகப்போறாய்? மட்ஸ் என்றால் வெக்டரிடம் போ அவர் தான் சரியான ஆள் இது ஒருவர், இன்னொருவரோ "இல்லை இல்லை ஆரம்பத்தில் வெக்டரிடம் பார்க்க நல்லையா மாஸ்டரிடம் போ, அவர் தான் அடிப்படையில் இருந்து திறமாகச் சொல்லித் தருவார்" என வகுப்புகள் தொடங்கமுன்னரே குளப்பத் தொடங்கிவிடுவினம்.

ஆனால் அந்தக் காலத்தில் நாம் ஆற்றை பேச்சைக் கேட்டோம். அதனால் கூட்டாளிப் பொடியள் போற ரியூசன் தான் எனக்கும். சாதாரண தரம் வரை இன்னொரு ரியூசனில் படித்துவிட்டு வதிரியிலுள்ள "பீகொன்" என்ற தியேட்டருக்கு எங்கள் வானரப் படை இறங்கியது.

அங்கே ஆரம்பத்தில் புதிய ஆசிரியர்கள் புதிய இடம் என்பதால் கொஞ்சம் அமைதியாகவே இருந்தோம். என்னுடைய பாடசாலை நண்பர்கள், ஏனைய பாடசாலையில் படித்து முன்னைய ரியூசன் நண்பர்கள், அத்துடன் பல புதிய முகங்கள், பருத்தித்துறை, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை என பல இடங்களில் இருந்தும் வந்தவர்கள் தான் பலர்.

பெண்வரிசையில் பெண்கள் அவர்களுக்குப் பின்னால் ஆண்கள் என முதல் சில நாட்கள் அனைவரும் இருந்தோம். நாம் செய்த அட்டகாசங்களில் எங்களை முன்னுக்கு விட்டுவிட்டு பெண்களை பின்னால் இருத்திவிட்டார்கள். இந்தக் கொடுமை உயர்தரம் முடியும்வரை தொடர்ந்தது.

பெளதிகவியல் ஆசிரியர் திரு.வர்ணம் அவர்கள், சந்தேகம் எதுவும் இருந்தால் எழும்பிக்கேட்க வெட்கப்பட்டால் துண்டில் எழுதிக்கொடுங்கோ என்றார். இதுதான் சாட்டு என நம்மடை வாரணப் படை ஒருமுறை விஜய் படமான பூவே உனக்காகப் பாடலான "ஆனந்தம் ஆனந்தம் பாடும்" பாடலில் வரும் வரியான "காதலோடு வேதங்கள் 5 என்னுங்கள்" என்ற வரி சரியா நாங்கள் படிக்கின்ற காலத்தில் வேதங்கள் என்றால் 4 எனத் தான் படித்தோம் என எழுதிக்கொடுத்தால், மனிசன் யார் எழுதியது என்பதை அந்த துண்டை வந்தவழியே அனுப்பி கண்டுபிடித்து ஒரு கிழிதான். பெரும்பாலும் மாணவர்களை அவர் ஏசுவதில்லை.

இரசாயனவியல் ஆசிரியர் அன்பாக தில்லை என அழைக்கப்படும் திரு. தில்லைநாதன் ஆசிரியர், இவர் வல்லைவெளி தாண்டி வருபவர் என்பதால் எப்படியும் கொஞ்சம் லேட்டாகத் தான் வருவார். இதனால் இவர் பாடம் வரும்வரை எங்கள் சில்மிசங்களும் கொழுவல்களும் நடக்கும். எங்கடை வகுப்பில் சில பெண் பிள்ளைகள் தில்லை சேரின் பாடத்திற்க்கு இருப்பதில்லை அவர்கள் இன்னொரு ஆசிரியரிடம் இரசாயனவியல் படிக்கச் செல்பவர்கள். ஒருநாள் தில்லை சேர் வழக்குத்துக்கு மாறாக நேரத்துக்கு வந்துவிட்டார். முதல் பாடம் முடிய இவர்கள் கொட்டிலை விட்டு வெளியே செல்ல நாங்கள் சும்மா இருக்காமல் அவர்களின் பட்டப் பெயர்களைச் சொல்லிக் கத்த அதிலை ஒருத்தி எங்களுக்கு அடிப்பன் என கைகாட்டியதும் அதனைத் தில்லை சேர் பார்த்ததையும் நாங்கள் பார்க்கவில்லை.

அண்டைக்கு முழுநேரமும் எங்களுக்கு இரசாயனவியலுக்குப் பதிலாக எச்சும் பெண்களுடன் எப்படி நடக்கவேண்டும் என தில்லை சேர் பாடம் எடுத்தார். அப்படி ஒரு பேச்சு ஒருநாளும் நாங்கள் எந்த ஆசிரியரிடமும் கேட்கவில்லை. இதில் எனன் விசேடம் என்றால் அண்டைக்கு சகல பெண்களையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு ஆண்களை மட்டும் வைத்துக்கொண்டுதான் அர்ச்சனை நடந்தது.

பிறகு பேப்பர் கிளாஸ் காலங்களில் எங்கடை சங்கரலிங்கம்(ஆறரை அடி உயர மனிதர்) அண்ணையின் ரியூசனில் பின்னேரம் 6 மணிக்குத் தொடங்கி இரவு 7.30 மணிக்குத் தான் வகுப்பு முடியும். ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் இருந்து வகுப்புக்கு வருகின்ற பெண்களை நாங்கள் தான் மெய்ப்பாதுகாப்பாளர்கள் போல் அவர்களின் வீடுவரை கொண்டு சென்று விடுவது. இத்தனைக்கும் அதுகள் எங்களுடன் கதையாதுகள், முன்னால் செல்வார்கள் நாங்கள் பின்னால் செல்லவேண்டும், ஏதாவது கதை கேட்டால் யாரும் பார்த்தால் பிரச்சனை என மெதுவாகச் சொல்வார்கள். ஒருக்கால் இருட்டிற்க்குள் இரும்பு மதவடி தோட்டத்திற்க்கை விழுந்து, நாய் திரத்தி என பல அனுபவங்கள் இருக்கின்றன. இப்போ அந்த நண்பிகள் குடும்பமாக வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் இருக்கின்றார்கள்.

பிறகு நெல்லியடி மொடேர்னில் பெளதிகவியல் பேப்பர் கிளாஸ் கணேசன் ஆசிரியரிடமும் வெக்டர் ஆசிரியரிடமும் எங்களுக்கு முன்னைய பட்சுடன் போனோம். கணேசன் சேர் வகுப்பிலை யாரும் நித்திரை கொண்டால் உடனே அவரைத் தட்டிக்கேட்பார் "யார் கனவிலை வந்தது என", ஆண்கள் என்றால் மீனாவோ ரம்பாவோ எனக்கேட்பார், பெண்கள் என்றால் "ரஜனியோ, கமலோ" எனக் கேட்பார், ஒருக்கால் இப்படித்தான் ஒரு பெடியனைக் கேட்க அவன் "மீனாவும் ரம்பாவும் அல்ல, பக்கத்து லொஜிக் வகுப்பில் இருக்கும் சியாமளாதான் கனவில் வந்தாள்" என்றான் வகுப்பே சிரிப்புத் தான்(சேர் உட்பட).

உப்பிடி நிறையக் கதைகள் இருக்கின்றது, உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள். ஏனைய கதைகள் மீண்டும் வரும்.
This entry was posted on 5:17 AM and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

17 comments:

On September 23, 2009 at 5:21 AM , சினேகிதி said...

மீனாவைக் கனவு கண்டவை எல்லாம் மீனாவைக் கிழவி என்டு சொல்ற காலம்....எல்லாம் நேரம்.

 
On September 23, 2009 at 5:48 AM , வேந்தன் said...

//மீனாவைக் கனவு கண்டவை எல்லாம் மீனாவைக் கிழவி என்டு சொல்ற காலம்....எல்லாம் நேரம்.//
வழிமொழிகின்றேன்.

 
On September 23, 2009 at 6:25 AM , கிழட்டுப்பூசாரி said...

இனப்பிரச்சினை காரணமாக எமது பிரதேசங்களில் ஏற்பட்ட பொருளாதார தடை காரணமாக கொட்டிலின் கீழும், மண்ணெய் விளக்கின் கீழ் படித்துத்தான் நாங்கள் முன்னேறினோம் என்பதை நினைக்கும் போது சிறு வருத்தமும், கொட்டில் வகுப்புக்களின் போது நாம் அனுபவித்தவற்றை நினைக்கும் போது மனகிற்கு குளிர்மையாகவும் இருக்கின்றது.

 
On September 23, 2009 at 7:25 AM , Unknown said...

வந்தியண்ணா..
சங்கரலிங்கம் அல்லது லோங்குலிங்கம் பற்றி நான் கனக்க எழுதலாம்.. ஆள் எங்கட வீட்டுக்குப் பக்கத்திலதான் இருந்தவர்.. இப்ப ஆள் ஜனசக்தியோ எங்கையோ வேலை செய்யிறார். 2005ல கடைசியா கண்ட போது தொடர்ந்து 3 வருடங்களாக அதிகளவு காப்புறுதிகளைப் பெற்ற முகவர் என்று (முழு இலங்கையிலும்) அவரை இலவச ஐரோப்பா பயணத்துக்கு அனுப்பியிருந்தார்கள் ஜனசக்தி நிறுவனம்... அதுக்குரிய shopping செய்து கொண்டு நிண்டவரை வெள்ளவத்தையில கண்டேன்.... ஆள் உண்மையிலையே ஒரு characterதான்

 
On September 23, 2009 at 10:12 AM , கரவைக்குரல் said...

அண்ணை நீங்க கனக்க சொல்லாமல் விட்டுட்டீங்க போல கிடக்கு,
அல்லது நீங்க நல்ல பிள்ளை மாதிரி படிச்சதாலை குழப்படி குறைவோ தெரியாது,
எண்டாலும் நாலு வேதக்கதை நல்லாத்தான் இருக்கு,ஆனால் பீக்கொன் இல் கதைச்சாங்களே நீங்க தான் அது எழுதிக்கொடுத்தது எண்டு,
உண்மையா அது?

 
On September 25, 2009 at 7:11 PM , யசோதா.பத்மநாதன் said...

பிள்ள வந்தி,

சுகமா இருக்கிறியே ராசா?

நீ அப்பவும் நல்ல பிள்ளயாத் தான் இருந்திருக்கிறாய் மோன!

 
On September 26, 2009 at 7:26 AM , கானா பிரபா said...

சினேகிதி said...

மீனாவைக் கனவு கண்டவை எல்லாம் மீனாவைக் கிழவி என்டு சொல்ற காலம்....எல்லாம் நேரம்.//

கன்னாபின்னாவென்று வழிமொழிகிறேன் ;)

 
On September 26, 2009 at 7:31 AM , கானா பிரபா said...

கொட்டில் காலத்து ஞாபகங்கள் மனதை நிறைத்தன வந்தி, நான் வர்த்தகப்பிரிவில் படித்தேன் என்றாலும் சத்தீஸ் மாஸ்டரில் இருந்து நீங்கள் சொன்ன எல்லோருமே அத்துப்படி அதுக்குப் பின்னால் ஒரு வருஷம் 16 கதையே இருக்கு ;-)

 
On September 26, 2009 at 10:04 AM , வந்தியத்தேவன் said...

///சினேகிதி said...
மீனாவைக் கனவு கண்டவை எல்லாம் மீனாவைக் கிழவி என்டு சொல்ற காலம்....எல்லாம் நேரம்.//

அது அறியாப்பருவம் சினேகிதி. மீனாவுக்கு என்னைவிட எப்படியும் ஒரு பத்து அல்லது பன்னிரண்டு வயது கூட இருந்தாலும் தில்லானா தில்லான என ஆடி எம்மை அந்த நாளில் கவர்ந்தவர் அவர். இப்போதான் நாங்கள் யூத்தாச்சே அதனால் எங்கள் வயசுக்கு ஒரு சுனைனாவோ இல்லை சோப்பிக்கண்ணோ பொருத்தமாக இருக்கின்றார்கள்.

 
On September 26, 2009 at 10:05 AM , வந்தியத்தேவன் said...

//வேந்தன் said...
வழிமொழிகின்றேன்.//

ஏனப்பு இந்த வம்பு.

 
On September 26, 2009 at 10:08 AM , வந்தியத்தேவன் said...

// கிழட்டுப்பூசாரி said...
இனப்பிரச்சினை காரணமாக எமது பிரதேசங்களில் ஏற்பட்ட பொருளாதார தடை காரணமாக கொட்டிலின் கீழும், மண்ணெய் விளக்கின் கீழ் படித்துத்தான் நாங்கள் முன்னேறினோம் என்பதை நினைக்கும் போது சிறு வருத்தமும், கொட்டில் வகுப்புக்களின் போது நாம் அனுபவித்தவற்றை நினைக்கும் போது மனகிற்கு குளிர்மையாகவும் இருக்கின்றது.//

ஐயா பூசாரியாரே என்ன தான் பின்னர் ஏசி வகுப்புகளில் படித்தாலும் கொட்டிலில் கிடைத்த குளுமையும் இனிமையும் வேறு எங்கையும் கிடைக்கவில்லை. மண்ணெணெய் விளக்கு, சிக்கன விளக்கு எனப் பல விளக்குகளில் படித்தவர்கள் நாம்.

 
On September 26, 2009 at 10:13 AM , வந்தியத்தேவன் said...

//Kiruthikan Kumarasamy said...
வந்தியண்ணா..
சங்கரலிங்கம் அல்லது லோங்குலிங்கம் பற்றி நான் கனக்க எழுதலாம்.. ஆள் எங்கட வீட்டுக்குப் பக்கத்திலதான் இருந்தவர்..//

நாங்கள் அவரை நெட்டைலிங்கம் என்றுதான் அழைப்பது (நண்பர்களே தப்பாக நினைக்கவேண்டாம் அவரது உயரம் அப்படி)

//இப்ப ஆள் ஜனசக்தியோ எங்கையோ வேலை செய்யிறார். 2005ல கடைசியா கண்ட போது தொடர்ந்து 3 வருடங்களாக அதிகளவு காப்புறுதிகளைப் பெற்ற முகவர் என்று (முழு இலங்கையிலும்) அவரை இலவச ஐரோப்பா பயணத்துக்கு அனுப்பியிருந்தார்கள் ஜனசக்தி நிறுவனம்... அதுக்குரிய shopping செய்து கொண்டு நிண்டவரை வெள்ளவத்தையில கண்டேன்.... ஆள் உண்மையிலையே ஒரு characterதான்//

ஆமாம் இப்போ அவர் ஒரு காப்புறுதி முகவரும் தான் நானும் அவரை வெள்ளவத்தையில் கண்டேன் நீங்கள் சொன்னது போல் அவரும் ஒரு சுவாரசியமான characterதான் நல்ல மனிசன். எப்படிதான் நாங்கள் கத்திச் சத்தம் போட்டாலும் ஒன்றுமே சொல்லமாட்டார்.

 
On September 26, 2009 at 10:15 AM , வந்தியத்தேவன் said...

//கரவைக்குரல் said...
அண்ணை நீங்க கனக்க சொல்லாமல் விட்டுட்டீங்க போல கிடக்கு,
அல்லது நீங்க நல்ல பிள்ளை மாதிரி படிச்சதாலை குழப்படி குறைவோ தெரியாது,//

உண்மைதான் நிறையச் சொல்லவில்லை காரணம் பதிவு நீளமாகிவிடும் என்று. அதிலும் ஒரு வர்த்தகம் ஆசிரியரிடம் வாங்கிய பேச்சு மறக்கவே முடியாது. இதையெல்லாம் அடுத்த பாகத்தில் சொல்கின்றேன்.

//எண்டாலும் நாலு வேதக்கதை நல்லாத்தான் இருக்கு,ஆனால் பீக்கொன் இல் கதைச்சாங்களே நீங்க தான் அது எழுதிக்கொடுத்தது எண்டு,
உண்மையா அது?//

சில உண்மைகளை பொது இடங்களில் சொல்லக்கூடாது.

 
On September 26, 2009 at 10:17 AM , வந்தியத்தேவன் said...

//மணிமேகலா said...
பிள்ள வந்தி,

சுகமா இருக்கிறியே ராசா?//

ஓமனை ஆச்சி நான் சுகம் நீங்கள் எங்கயணை போனனீங்கள், உங்களைக் காணாமல் சினேகிதிப் பிள்ளைக்கு நாக்கு வறண்டுபோச்சாம்.

//நீ அப்பவும் நல்ல பிள்ளயாத் தான் இருந்திருக்கிறாய் மோன!//
ஐயோ ஆச்சி அப்படியில்லை அந்த அந்த வயதில் செய்கின்ற குழப்படிகள் கொஞ்சமாவது செய்திருக்கின்றேன். என்ன நல்லபொடி என பெயர் எடுத்தபடியால் சில குழப்படிகள் நான் செய்திருந்தாலும் ஒருதரும் நம்பமாட்டார்கள்.

 
On September 26, 2009 at 10:19 AM , வந்தியத்தேவன் said...

//கானா பிரபா said...

கன்னாபின்னாவென்று வழிமொழிகிறேன் ;)//

உந்த பெரிசுகளின்டை தொல்லை தாங்கமுடியல்லை, மீனா ஆண்டியை ஆண்டி எனச் சொல்லாமல் தங்கச்சி என்றா அழைப்பது.

 
On September 26, 2009 at 10:21 AM , வந்தியத்தேவன் said...

//கானா பிரபா said...
கொட்டில் காலத்து ஞாபகங்கள் மனதை நிறைத்தன வந்தி, நான் வர்த்தகப்பிரிவில் படித்தேன் என்றாலும் சத்தீஸ் மாஸ்டரில் இருந்து நீங்கள் சொன்ன எல்லோருமே அத்துப்படி அதுக்குப் பின்னால் ஒரு வருஷம் 16 கதையே இருக்கு ;‍)//

அந்த கதைகளை எழுதுங்கோ. நாங்கள் தாவரவியல் குணசீலன் சேரின் நிறைய சுவாரசியங்களைப் பார்த்தவர்கள். அதையும் அடுத்த தொடரில் எழுதுகின்றேன்.

 
On November 10, 2009 at 10:35 AM , Anonymous said...

//என்ன தான் பின்னர் ஏசி வகுப்புகளில் படித்தாலும் கொட்டிலில் கிடைத்த குளுமையும் இனிமையும் வேறு எங்கையும் கிடைக்கவில்லை. மண்ணெணெய் விளக்கு, சிக்கன விளக்கு எனப் பல விளக்குகளில் படித்தவர்கள் நாம்//
பலே.... Vanthi anna / maama,
ரசித்து சிரித்தேன்.. எனக்கும் இள வயது சித்தி மாமாமார் இருந்ததால், உந்த புதினங்கள் எல்லாத்தையும் சொல்லுவாங்கள்... காவாலி என்று ஏசுவதற்குப் பதிலாக இன்சுலேட்டர் + அரவு என்டு தான் வர்ணம் வாத்தி ஏசுமாம். போனில் சித்திக்கு வாசிச்சுக் காட்டினேன். சிரித்தார். உங்களுக்கு தன் பாராட்டையும் தெரிவித்தவா.