Author: சஞ்சயன்
•1:28 PM
1984 -85 ம் ஆண்டின் இறுதிக் காலங்கள், இழக்கப்போகும் பெறுமதிமிக்க  காலங்களைப் பற்றிய எதுவித அறிகுறிகளுமில்லாமல்  ஓடிக்கொண்டிருந்தது. ஊருக்குள் பிரச்சனைகள் மெதுவாய் தொடங்கியிருந்த காலம்.  19 - 20 வயதுக்கான எவ்வித முதிர்ச்சியும் இன்றி, எவ்வித கனவுகளும் இன்றி, பல்கலைக்கழக  அனுமதிக்கான பரீட்சை எழுதிவிட்டு, பெறுபேறுகளுக்காகக் காத்திருந்தேன்.


சிங்கள நண்பர்கள் பலர் ஊரைவிட்டு மெது மெதுவாய் இடம் பெயர, இஸ்லாமிய நட்புகளும் பிரச்சனைகளின்  காரணமாக தொலைந்து கொண்டிருந்தன. இருப்பினும் துணிந்தவர்கள் சிலரின் நட்புகள் மங்கலான மாலைப் பொழுதுகளில் தொடரத்தான் செய்தன.
ஒன்றாய் பழகிய மூவின நட்புகளும் தனித்தனியே தொடர்பில்லாது தம்வழியே சென்றுவிட்டாலும், நட்பு என்னும் சொல் மட்டும் தனது தன்மையை இழக்காதிருந்தது என்பது பல ஆண்டுகளின் பின் தான் எனக்குப் புரியும் என்பது எனக்கு அன்று தெரியாதிருந்தது.
ஒரு புறம் தமிழ் முஸ்லீம் கலவரங்கள், இராணுவத்தினரின் கெடுபிடிகள், இயக்கங்ளின் வீரப்பிரதாபங்கள் என எமது ஊரின் காற்றில் கூட விறுவிறுப்பு கலந்திருந்த காலமது. கைதுகளும், மரணங்களும் பழகிப்போயின. நண்பர்கள் தீடீர் என காணாமல் போய் முறுகிய உடம்புடன் இறுகிய பார்வையுடன் 4 -5 மாதங்களின் பின் பின்மாலைப் பொழுதுகளில் வந்து சந்தித்தனர். ஒரு சிலர் இடுப்பில் இருந்த சில ஆயுதங்களையும் காட்டினர். சிலர் கொள்கைப்பரப்புரைகளும் செய்தனர். 

சகோதர முறுகுநிலை தொடங்கியிருந்தது. நண்பர்களாய் இருந்தவர்களும் முறாய்த்துக்கொண்டனர். அல்லது முறாய்க்க கட்டளையிடப்பட்டனர்.

ஒரு நாள் மட்டக்களப்பு ரஷீடியாஸ் குளிர்பானக்கடையினுள் எமக்கும் ஒரு ”அண்ணர்” வகுப்பு எடுத்தார். தமிழீழ விடுதலை ராணுவம் என்றார். அரசியற்பிரிவு, ராணுவப்பிரிவு, முழுநேரப் போராளி, பகுதிநேரப் போராளி என்றார். நான் பகுதிநேரம் என்றேன். எனது பெயர் விபரம் எழுதிப் போனார். பின்பொருநாள் ஏறாவூர் ரயில்நிலையத்தருகில் ஒரு கைத்துப்பாக்கியையும் காட்டினார். அதன் பின்பு அவர் வரவும் இல்லை. அவர் வரவில்லை என்று நான் கவலைப்படவும் இல்லை.

ஒரு முறை ”ஹர்த்தால்” என்று சுவரொட்டி எழுதவேண்டியேற்பட்டது. அழகான கையெழுத்தை கொண்டிருந்த ஒரு நண்பனை காட்டுக்குள் அழைத்துப்போய் சுவரொட்டியை எழுதவைத்தோம். அதுவே அவன் தொழிலாகியது பின்னாலில். எல்லா இயக்கங்களுக்கும் அவனே சுவரொட்டி எழுதினான். அந்த சுவரொட்டியை ஒட்டுவதற்கிடையில் நான்கு தடவைகள் மூத்திரம் போயிருப்பேன்.

தினமும் ஒருவர் வீதிக் கம்பத்தில் தலை சரிந்து கிடந்தார். ஊராரும் சிவப்பு நிறத்தில் இருந்த நோட்டீஸ்களை நம்பத் தொடங்கயிருந்த காலம். வீதிக்கம்பத்தில் சரிந்திருந்தவர்கள் எல்லோரும் குற்றவாளியாக்கப்பட்டார்கள். அவர்களை சரித்தவர்களின் குற்றங்கள் பற்றி யாரும் பேசமுன்வரவில்லை. எவரும் கொல்லப்பட்டவர்களின் வலியை கண்டுகொள்ளவும் இல்லை.  கொலைசெய்யப்படுவதற்கு முன்னான வினாடியில் கூட தான் மன்னிக்கப்படலாம் என்று அவர்கள் எண்ணியிருக்கக்கூடும். துப்பாக்கியின் விசை அழுத்தப்படுதை காணும் போது அவர்கள் தமது குடும்பத்தை, குழந்தையை, காதலியை நினைத்திருக்கக்கூடும். சில வேளைகளில் ”நாசமாய்போவீர்கள்” என்றும் சபித்திருக்கவும் கூடும்.
ஒரு ‌முறை பெருங்கலவரம் மூண்டது தமிழர்களுக்கும், இஸ்லாமியர்க்கும் இடையில். எனது ஊர் எல்லையில் இருந்ததால், ஊரே இடம் பெயர்ந்தது. வந்தாறுமூலையில் உள்ள கிழக்குமாகாண பல்கலைக்கழகம் அகதிமுகாமனது. வீடு வீடாய் சென்று உணவு சேகரித்துவரக் கட்டளையிட்டார்கள் ”அண்ணா”க்கள். மாலையில் கத்தி, கோடாலி, அலவாங்கு, திருக்கைவால் போன்ற ஆயுதங்களுடன் செங்கலடிச்சந்ந்தியில் காவல் வேறு போட்டார்கள். நாங்கள் அருகே இருந்த ஒரு பேக்கரிக்குள் 304 விளையாடிக்கொண்டிருந்தோம்.
நண்பர்கள் சிலர் வெளிநாடு போயினர். சிலர் ”கப்பலுக்கு” போயினர். நாங்கள் சிலர் மட்டும் எங்கும் போகவில்லை. எங்கு போவது என்றும் எமக்குத் தெரிந்திருக்கவில்லை. நாம் குந்தியிருக்கும் சந்திக்கு ஆமி வரும்போது ஓடுவதும், அவர்கள் அங்கிருந்து அகன்றதும் நாம் திரும்பி வருவதும் வழமையாகியது.
இப்படியான நாட்களில் தான் ஊரில் இருந்தால் பிரச்சனை என்பதால் அம்மா என்னை இந்தியா அனுப்ப  யோசித்தார். இதை அறிந்த இரு நண்பர்களும் என்னுடன் இணைந்துகொள்ள இந்தியாப் பயணம் தொடங்கிற்று.
தெரிந்த பெரியவர் ஒருவருடன் நாம் கொழும்பு போய்,  அங்கிருந்து வீசா எடுத்து இந்தியா போவது போல் ஒப்பந்தமாகி நண்பர்களின் பெரும் பிரியாவிடையுடன் 1985ம் ஆண்டு கார்த்திகை  மாதத்தின் இறுதி நாட்களில் ஒரு நாள், காலைப் புகையிரதத்தில் கொழும்பு நோக்கிப் புறப்பட்டடோம். புகையிரதம் எமது Eravur United விளையாட்டுத்திடலைக் கடந்த போது, தரிசாய் கிடந்த நிலத்தை மூவின நண்பர்களும் சேர்ந்து செப்பனிட்டு விளையாடிக்களித்த நாட்கள் நினைவிலாடியது.

அன்றைய  அந்தப் பயணம் , ஒரு பெரும் பிரிவின் தொடக்கம் என்பதும், அதுவே என் வாழ்வினை நிர்னயிக்கப்போகிறது என்பதும் எனக்கு புரிந்திருக்கவில்லை அன்று. ஒரு சாதாரணப்பயணம் போலிருந்தது அது. பெரும் பயணங்கள் அனைத்தும் சாதாரணமாகவே தொடங்குகின்றனவோ என்னவோ?
வெய்யில் காய்ந்து, காற்றும் காய்திருந்திருந்த தென்னைமர தோட்டங்களினூடாகவும், வெட்ட வெளிகளினூடாகவும் புகையிரதத்தின் வேகத்தில் தலைமுடி காற்றிலாட, காலம் செய்யப் போகும் கோலத்தினை உணராமல் பயணித்துக்கொண்டிருந்தேன். புகையிரதம் எதையும் கவனிக்காமல் கட கட கடவென ஓடிக்கொண்டிருந்தது, வாழ்வைப்போல்.
இருபத்திஏழு ஆண்டுகளின் பின்பான இன்று இதை எழுதிக்கொண்டிருக்கும் போது ஊரின் வாசனையையும் காட்சிகளையும், நட்பின் ஈரத்தையும், காற்றின் வெம்மையையும் மனம் நுகர்ந்ததை உணர்கிறேன். ஏகாந்தமான அனுபவம், அது. என் குழந்தைகளின் வாசனையை நான், குழந்தைகளின் அருகாமையின்றியே அறிவது போன்றது அது.
காலமும், வாழ்வும் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறது. நினைவுகளைச் சுமந்தபடி அவற்றுடன் பயணித்துக்கொண்டிருக்கிறேன் நான். நீங்களும்தான்.
இன்றைய நாளும் நல்லதே!.

visaran.blogspot.com


|
This entry was posted on 1:28 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

4 comments:

On December 22, 2011 at 10:19 PM , அன்புடன் மலிக்கா said...

காலமும், வாழ்வும் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறது. நினைவுகளைச் சுமந்தபடி அவற்றுடன் பயணித்துக்கொண்டிருக்கிறேன் நான். நீங்களும்தான்.//

உண்மைதான் தோழி
வாழ்க்கை வலிகளோடும் வேதனைகளோடும்
காலம்
வாசத்தோடும் வாஞ்சையோடும் ஓடிக்கொண்டேதானிருக்கிறது..

 
On December 23, 2011 at 3:45 AM , தனிமரம் said...

மூவின மக்களுடன் பிரிந்த கால நினைவுகளைச் சித்திரங்களை அழகுறச் சொல்லிச் செல்கின்றீர்கள் மனதில் வலியும் வேதனையும் வாட்டுகின்றது சாய்த்தவர்களை கேள்வி கேட்காத நிலையும் நாசமாகப் போவீர் சாபமும் இன்றும் பலருக்கு வேதனைகளைத் தந்து கொண்டுதான் இருக்கின்றது.

 
On December 23, 2011 at 4:30 AM , அப்பாதுரை said...

படிப்பவரை இழுத்து உள்ளே தள்ளி ஆக்கிரமிக்கும் நடை. அருமையாக எழுதியிருக்கிறீர்கள். எனக்கும் வலித்தது. இன்றைய பொழுது நம் கையில் என்ற யதார்த்தமான பாங்கு உங்கள் வாழ்க்கையில் நிறைவைக் கொண்டு வருமென நம்புகிறேன். வாழ்த்துக்கள்.

 
On December 25, 2011 at 9:05 AM , அம்பாளடியாள் said...

அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி
சகோ .உங்களுக்கு எங்கள் கிறிஸ்மஸ்
வாழத்துக்கள் உரித்தாகட்டும் .