Author: வந்தியத்தேவன்
•10:42 PM
எமது நாட்டிலுள்ள பல ஆலயங்கள் ஆகமவிதிப்படி பூசை தொடங்கியதற்க்கு முன்னர் வேள்வி என்ற பலியிடும் வணக்கமுறையை கடைபிடித்தே வந்தன. காலமாற்றங்களால் பலியிடுதல் நிறுத்தப்பட்டாலும் இன்றும் ஆலயங்களுக்கு நேர்த்திக்காக ஆடு, கோழி வழங்குதல் நிறுத்தப்படவில்லை.



சில இடங்களில் வேள்வி பொங்கல், திருக்குளிர்த்தி, மடை என்ற பெயர்களில் பொங்கல் பொங்கி வழிபடும் முறையாக மாறியது.



அந்த நாட்களில் திருவிழாக்களை விட வேள்வியே பிரதானமாகவும் பல இடத்துமக்கள் வந்து செல்லும் விழாக்களாகவும் மாறியது. பெரும்பாலும் அம்மன் ஆலயங்களிலும் வைரவர் ஆலயங்களிலும் இந்த வேள்வி நடைபெற்றன. இன்றைக்கும் வடமராட்சி தும்பளை நெல்லண்டையில் அமைந்துள்ள பத்ரகாளி அம்மன் ஆலயத்தில் வேள்வி நடைபெறுகின்றது. முன்னைய காலம்போல் ஆடு, கோழிகளைப் பழியிடாமல் அவற்றை கோயிலுக்கு நேர்த்தி என்ற பெயரில் அன்பளிப்புச் செய்கின்றார்கள் கோயில் நிர்வாகம் பின்னர் அந்த ஆடு, கோழிகளை ஏலத்தில் விட்டு வருமானம் ஈட்டுகின்றது.

வேள்வியை நிறுத்திய பல கோயில்களில் அந்த நாளில் பொங்கல் வைத்து இறைவனைக் குளிர்விக்கின்றார்கள். எனக்கு தெரிந்து வடமராட்சியில் நெல்லண்டை அம்மன், அத்துளு அம்மன், அல்வாய் முத்துமாரி அம்மன் போன்ற கோயில்களிலும் தென்மராட்சி மட்டுவில் ப‌ண்டித்தலைச்சி கண்ணகை அம்மன், திருகோணமலை சல்லி அம்மன், உடப்பு திரௌபதி அம்மன் போன்றன பிரபல திருக்குளிர்த்தி நடக்கும் கோயில்களாகும்.



கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயத்திலும் முன்னர் பலியிடுதல் நடந்ததாக அறியமுடிந்தது.

தற்போது இந்த நிகழ்வில் பொதுமக்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை பொங்கலிட்டு மோதகம், வடை, போன்ற பண்டங்களுடன் இறைவனுக்கு படைத்து வழிபாடாற்றுகின்றார்கள்.



அன்றைய நாட்களில் வேள்விகளில் இரவில் கூத்து, சின்னமேளம் போன்றவை விடியவிடிய நடக்கும் நிகழ்ச்சிகளாகும்.



இலங்கையில் பிரபலமான ஒரு கலைவடிவம் கூத்து இதனைப் பற்றி நன்கு விபரம் தெரிந்தவர்கள் தனிப்பதிவாக இடவும். வசந்தனும் அகிலனும் எழுதிய பதிவுகள் இணையத்தில் இருக்கின்றது.

கூத்துப் பார்க்கப் போன கூத்து


கூத்தழிவு

பலியிடுதல் பற்றி கானாப்பிரபாவும் ஒரு பதிவு இட்டிருக்கின்றார்.

ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களை....

இந்த வருடம் நெல்லண்டை பத்ரகாளி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற வேள்வியில் எடுத்த படங்கள் இணைத்திருக்கின்றேன். படங்களைத் தந்துதவிய‌ மூஞ்சிப்புத்தக(Facebook) நண்பனுக்கும் நன்றிகள்.
This entry was posted on 10:42 PM and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

18 comments:

On July 8, 2009 at 1:55 AM , சுபானு said...

நான் இதுவரைக்கும் இப்படியான நிகழ்வுகளைப் பார்த்தில்லை.. ஆனால் நிறையக் கேள்விப்பட்டிருக்கின்றேன்.

மிருகங்களைப் பலியிட்டு விட்டு அதன் இரத்ததை எடுத்து பொங்கல் பொங்குவார்களாம். என்ன ஒரு குடூரத்தனம்.

நிட்சயமாகப் பதியப்படவேண்டிய பதிவு. கோவில்களின் பெயர்களோடு பதிந்திருப்பது மேலும் முக்கியத்துவத்தைக் கொடுக்கின்றது.


காலமாற்றங்களால் பலியிடுதல் நிறுத்தப்பட்டது மிக்கநல்லதே..

 
On July 8, 2009 at 3:06 AM , கானா பிரபா said...

இந்த நம்பிக்கை மீண்டும் துளிர்த்திருப்பது வேதனையான ஒரு விஷயம்.

நிறைய விஷயங்களோடு நிறைக்கிறது பதிவு

 
On July 8, 2009 at 5:12 AM , சினேகிதி said...

\\எனக்கு தெரிந்து வடமராட்சியில் நெல்லண்டை அம்மன், அத்துளு அம்மன், அல்வாய் முத்துமாரி அம்மன் போன்ற \\

எனக்குத் தெரிஞ்சு அல்வாய் முத்துமாரி அம்மன் கோயிலில் இப்பிடி எந்த வேள்வியும் நடக்கவில்லை. அம்மாவும் சொல்றா நாச்சிமார் கோயில்லதான் மடை நடக்கிறதாம் ஆனால் அங்கும் இரத்த வேள்வி நடக்கிறேல்லயாம். வடைமாலை சாத்தி அன்னதானம் குடுக்கிறதாம்.

வசந்தனண்ணாவும் கூத்து பற்றி எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறன்.

விறுமர் கோயில்லதான் இரத்தவேள்வி நடக்கிறதாம்.

 
On July 8, 2009 at 6:00 AM , வி. ஜெ. சந்திரன் said...

//திருக்குளிர்த்தி //

என்பது பொங்கலோ மடையோ, வெள்வியோ அல்ல என நினைக்கிறேன். ஆனால் எல்லாம் ஒன்றாக குறிப்பிட்ட ஒரு நாளில் நடைபெறலாம்.

திருகுளிர்த்தி என்றால் தீ மிதிப்பு என நினைக்கிறேன். வேறு யாராவது சரியாக தெரிந்தவர்கள் சொல்ல வேண்டும்

 
On July 8, 2009 at 6:25 AM , வாசுகி said...

அந்த ஆட்டை பார்க்க பாவமாக இருக்கிறது.பலியை நிறுத்தி பொங்கல் செய்வது நல்ல விடயம்.
அது சரி, திருக்குளிர்த்தி என்றால் என்ன?

தேவையான ப‌திவு. விபரத்துடன் தந்துள்ளீர்கள்.


@ சினேகிதி
எங்கட ஊரிலயும் ஒரு விறுமர் கோயில், ஊருக்கு ஒதுக்கு புறமாக இருந்தது.இது வரை நான் சென்றதில்லை. கோயில் எப்படி இருக்கும் என்றே தெரியாது.
பெண்களை அந்த பக்கமே போக விடுவதில்லை.6 மணிக்கு பிறகு விறுமர் கோயிலை விட்டு வெளிக்கிடுவார் என்று கதை உள்ளதால் அந்த பக்கம் போகக்கூடாது என்று எமது அம்மம்மா எம்மை வெருட்டி வைத்திருந்தார்.
(எப்படியெல்லாம் வெருட்டுறாங்க‌)

 
On July 8, 2009 at 7:39 AM , வந்தியத்தேவன் said...

//சுபானு said...

மிருகங்களைப் பலியிட்டு விட்டு அதன் இரத்ததை எடுத்து பொங்கல் பொங்குவார்களாம். என்ன ஒரு குடூரத்தனம். //

சுபானு இரத்தத்தை ஊற்றிப் பொங்கல் பொங்குவதில்லை என்றே நினைக்கின்றேன். இரத்தத்தால் அபிசேகம் செய்வது எனக் கூறுவார்கள். ஒரு நாளும் நான் இந்த நிகழ்வைப் பார்த்ததில்லை காரணம் எங்கள் காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த நிகழ்வுகள் இவை.

 
On July 8, 2009 at 7:43 AM , வந்தியத்தேவன் said...

//கானா பிரபா said...
இந்த நம்பிக்கை மீண்டும் துளிர்த்திருப்பது வேதனையான ஒரு விஷயம்.//

ஆமாம் பிரபா அண்மையில் மீண்டும் எங்கள் பிரதேசங்கள் 70களில் இருந்த நிலைக்கு திரும்பியதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. சில கலாச்சாரக்கேடுகள் கூட அரங்கேறுகின்றன என்ற செய்திகள் மனதை நெருடுகின்றது.

//நிறைய விஷயங்களோடு நிறைக்கிறது பதிவு//

பதிவில் தீமிதிப்பு, உரு அல்லது கலை (வேறு சில பெயர்கள் கூட இருக்கின்றன) போன்ற நிகழ்வுகள், காவடி, அலகு குத்துதல் போன்றவற்றை எழுதவில்லை. இன்னொரு பதிவில் அந்த நிகழ்வுகளை பதிவு செய்யலாம் என நினைத்திருந்தேன். ஆகவே முழுமையான பதிவாக இதனை சொல்லமுடியாது.

 
On July 8, 2009 at 7:46 AM , வந்தியத்தேவன் said...

//சினேகிதி said...

எனக்குத் தெரிஞ்சு அல்வாய் முத்துமாரி அம்மன் கோயிலில் இப்பிடி எந்த வேள்வியும் நடக்கவில்லை. அம்மாவும் சொல்றா நாச்சிமார் கோயில்லதான் மடை நடக்கிறதாம் ஆனால் அங்கும் இரத்த வேள்வி நடக்கிறேல்லயாம். வடைமாலை சாத்தி அன்னதானம் குடுக்கிறதாம். //

சினேகிதி அங்கே கடாவோ(கிடாய்) கோழியோ வெட்டியதாக நானும் அறியவில்லை ஆனால் நேர்த்திக்கென கொண்டுவந்த ஆடுகள் கோழிகளை அங்கே 90களில்கூட கண்டிருக்கின்றேன். அம்மன் கோவிலுக்கு முன்னாள் உள்ள காளியோ பைரவரோ தெரியவில்லை அந்தச் சன்னிதானத்தில் இவை கட்டப்பட்டிருக்கும்.

விறுமர் கோவில் கேள்விப்பட்டிருக்கின்றேன். அங்கே ஒருவர் குறி சொல்வதாகவும் அறிந்தேன்.

 
On July 8, 2009 at 7:48 AM , வந்தியத்தேவன் said...

//வி. ஜெ. சந்திரன் said...

என்பது பொங்கலோ மடையோ, வெள்வியோ அல்ல என நினைக்கிறேன். ஆனால் எல்லாம் ஒன்றாக குறிப்பிட்ட ஒரு நாளில் நடைபெறலாம்.

திருகுளிர்த்தி என்றால் தீ மிதிப்பு என நினைக்கிறேன். வேறு யாராவது சரியாக தெரிந்தவர்கள் சொல்ல வேண்டும்//
திருக்குளிர்த்தி என்றால் அபிசேகத்துடன் பொங்கல், தீமிதிப்பு, காவடி என அனைத்தும் கலந்த நிகழ்வுகள்.

 
On July 8, 2009 at 7:49 AM , வந்தியத்தேவன் said...

மறந்துபோன இன்னொரு விடயம் அந்த நாளில் வேள்விக்கு நேர்ந்துவிட்ட ஆட்டையோ கோழியையோ வீடுகளுக்குள் நுழைந்து ஏதாவது செடியைத் தின்றால் சுமம சூய் சூய் எனத் துரத்துவார்களே ஒழிய கல்லால் எல்லாம் அடிக்கமாட்டார்கள், சாமிக்குற்றம் என்பார்கள்.

 
On July 8, 2009 at 5:18 PM , யசோதா.பத்மநாதன் said...

:(

பலியிடுதல் மனிதக் குரூரத்தின் ஒரு பக்கம்.நம்மவர்கள் அதனை கடவுளின் பெயரால் செய்தார்கள் என்பது தான் இன்னும் கொடுமை.

ரிஷான் ஷெரிப் தன் வலைப் பக்கத்தில் உலக வழக்குச் சார்ந்து'சிந்திக்கச் சில படங்கள்' என்ற தலைப்பில் சிலவற்றைப் படங்களோடு பதிவிட்டிருக்கிறார்.

நாமெல்லாம் மனிதர்கள் தானா என்று சிந்திக்கத் தூண்டும் அவை.:(

 
On July 9, 2009 at 4:29 AM , ஹேமா said...

ஒரு பக்கத்தில மனிதப்பலி.அந்த மனிதனைக் காக்க மறுபக்கத்தில மிருகங்களைப் பலி கொடுக்கும் வேள்வி.நம்பிக்கைகளில நம்பிக்கை வைத்தே எங்கட தர்மங்கள் நகர்கின்றன.

இன்றுதான் "ஈழத்து முற்றம்"பக்கம் வந்திருக்கிறன்.பதிவுகள் எல்லாமே நல்லாயிருக்கு.எங்கட ஆக்களின்ர நம்பிக்கைகள் மூடநம்பிக்கைகள்,
பழக்கவழக்கங்கள்,பேச்சுவழக்குகள் என்று அசத்தலாயிருக்கு.வாழ்த்துக்கள்.

 
On July 9, 2009 at 6:31 AM , ரவி said...

உங்க பதிவை பார்த்ததும் கறிசோறு வாசனை வீசுதுங்க. பசிக்குது நான் கிளம்பறேன்......

 
On July 9, 2009 at 6:54 AM , வர்மா said...

வேள்வி ஒருகாலத்தில்கட்டாயமாக இருந்தது. காலப்போக்கில் அதன் கொடூரத்தை உணர்ந்தவர்கள் அதனை நிறுத்தினார்கள். எங்களுடைய ஆலயத்திலும் ஒருகாலத்தில் பலியிட்டார்களம் எனது பாட்டனார் சூரன் தனது தலையைவெட்டுமாறு கூறி பலியை நிறுத்தினாராம். அவரது கொள்கையால் கவரப்பட்டவர்கள் அசைவத்தைத்துறந்தார்கள். நம்மைநாமேதிருத்தினால் பெரியார் தேவையில்லை.
அன்புடன்
வர்மா

 
On July 9, 2009 at 11:08 AM , வந்தியத்தேவன் said...

//மணிமேகலா said...
:(

பலியிடுதல் மனிதக் குரூரத்தின் ஒரு பக்கம்.நம்மவர்கள் அதனை கடவுளின் பெயரால் செய்தார்கள் என்பது தான் இன்னும் கொடுமை.

ரிஷான் ஷெரிப் தன் வலைப் பக்கத்தில் உலக வழக்குச் சார்ந்து'சிந்திக்கச் சில படங்கள்' என்ற தலைப்பில் சிலவற்றைப் படங்களோடு பதிவிட்டிருக்கிறார்.//

பலியிடுதல் குரூரம் தான் அதனையே இறை நம்பிக்கை என்ற பெயரோடு செய்யும் போது அது மூட நம்பிக்கையாக மாறுகின்றது. எந்தக் கடவுள் இறைச்சி கேட்டார்? இதெல்லாம் அந்த நாட்களில் நிலவிய மூடநம்பிக்கைகள் இன்றும் சிலரிடம் இருக்கு என நினைக்கும் போது ஆத்திரம் வருகின்றது.

இன்றைக்கும் மாலைக்கே சுடலையடியால் போனால் முனி பிடிக்கும், என்பவர்களும் விறுமர் பைரவர் கோவில்கள் பக்கதால் போனால் இரவில் நித்திரையில் குழறுவோம் என்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ரிஷானின் படங்கள் பார்த்தேன். என்ன சொல்வது சிந்திக்கவேண்டியவர்கள் சிந்தித்தால் சரி.

 
On July 9, 2009 at 11:11 AM , வந்தியத்தேவன் said...

//ஹேமா said...
ஒரு பக்கத்தில மனிதப்பலி.அந்த மனிதனைக் காக்க மறுபக்கத்தில மிருகங்களைப் பலி கொடுக்கும் வேள்வி.நம்பிக்கைகளில நம்பிக்கை வைத்தே எங்கட தர்மங்கள் நகர்கின்றன.//

சில இடங்களில் நரபலி கூடக்கொடுக்கின்றார்கள். எங்கட நாட்டிலை நாங்க போதுமென்றளவுக்கு நரபலிகள் கொடுத்தபடியால் அந்தக் கொடுமை இல்லை. ஆனால் சில நாடுகளில் இன்றைக்கும் சிறுவர்களையும் குழந்தைகளையும் குமரிகளையும் பலியிடுதல் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. மனிதன் என்றைக்கு மனிதனாக இருக்கின்றானோ அன்றைக்குதான் உலகம் அமைதியடையும்.

உங்கள் முதல் வருகைக்கு நன்றிகள் ஹேமா.

 
On July 9, 2009 at 11:12 AM , வந்தியத்தேவன் said...

//செந்தழல் ரவி said...
உங்க பதிவை பார்த்ததும் கறிசோறு வாசனை வீசுதுங்க. பசிக்குது நான் கிளம்பறேன்......//

இந்தப்பக்கம் எட்டிப்பார்த்ததற்கு நன்றிகள் செந்தழல் ரவி.

 
On July 9, 2009 at 11:14 AM , வந்தியத்தேவன் said...

//வர்மா said...
வேள்வி ஒருகாலத்தில்கட்டாயமாக இருந்தது. காலப்போக்கில் அதன் கொடூரத்தை உணர்ந்தவர்கள் அதனை நிறுத்தினார்கள். எங்களுடைய ஆலயத்திலும் ஒருகாலத்தில் பலியிட்டார்களம் எனது பாட்டனார் சூரன் தனது தலையைவெட்டுமாறு கூறி பலியை நிறுத்தினாராம். அவரது கொள்கையால் கவரப்பட்டவர்கள் அசைவத்தைத்துறந்தார்கள். நம்மைநாமேதிருத்தினால் பெரியார் தேவையில்லை.//

வர்மா அவர்களே இந்த வரலாற்றை நானும் கேள்விப்பட்டிருக்கின்றேன். பேராசிரியர் சிவத்தம்பியின் சில கட்டுரைகள் புத்தகங்களிலும், ராஜ ஸ்ரீகாந்தன் அவர்கள் எழுதிய சூரன் சுயசரிதை என்ற நூலிலும் வாசித்தும் இருக்கின்றேன். இவை அனைத்தும் நூலகம் இணையத்தில் மின்நூலாக இருக்கின்றது.