Author: வந்தியத்தேவன்
•1:44 AM
இண்டைக்கு காலமை ஒரு பள்ளிக்கூடப் பொடியன் நேரத்திற்க்கு பள்ளிக்கூடத்தால் வீடு திரும்பிக்கொண்டிருந்தான். ஏன் நேரத்திற்க்கு வீட்டுக்குபோகிறீர்கள் எனக்கேட்டால், சோதனை முடிச்சுபோச்சு அதுதான் வீட்டைபோறம் என்றார். எனக்கு உடனே என்னுடைய பாடசாலை சோதனைக்காலம் நினைவுக்கு வந்தது. நுளம்புத் திரியை ஒரு 13 ஆண்டுகளுக்கு முன்னர் சுத்துங்கள்.

உலகத்திலை உள்ள அனைவருக்கும் பிடித்த பருவம் மாணவப் பருவம் தான். எங்கட மாணவப் பருவத்திலை எத்தனையோ கஸ்டங்களுக்கு மத்தியில் படித்தவர்கள் தான் நாங்கள். மண்ணெண்னெய் விளக்கு, தேங்காய் எண்ணெயில் சிக்கன விளக்கு, மெழுகுதிரி, பள்ளிக்கு போகும் போது பொம்மர் அடிப்பான், நேவி சுடும், ஷெல் விழும் இத்தனைக்கும் மத்தியில் படித்து சாதனை செய்தவர்கள் நாங்கள்.

இந்தக் கஸ்டத்திலும் படிப்புடன் ஏனைய உப தொழில்கள் ஆன கிரிக்கெட் விளையாடுதல், கள்ள மாங்காய், விளங்காய் அடித்தல் போன்றவற்றுடன் எங்கள் பாடசாலை கடலுக்குப் பக்கத்திலை இருந்தபடியால் குளிக்கவும் பழகிக்கொண்டோம்.



பெரும்பாலும் முதல் தவணை விளையாட்டுப் போட்டியுடன் போவிடும் என்பதால் பெரிதாக குழப்படி செய்ய அப்ப வாய்ப்பில்லை. இரண்டும் மூன்றும் தான் எங்கள் ஆதர்ச காலம். இரண்டாம் தவணை விடுமுறை ஆகஸ்டில் வரும். அதனால் சோதனையை ஜூலையில் வைப்பார்கள். சோதனை முடிந்தவுடனை பள்ளிக்கூடம் விட்டுவிடும் வழமைபோல் இரண்டு மணிக்கெல்லாம் விடமாட்டார்கள். எப்படியும் 12 மணிக்கு முன்னம் பள்ளிக்கூடம் விட்டுவிடும். 2 மணிக்கு முன்னம் வீட்டைபோய் என்ன செய்வது, உடனடியாக பக்கத்திலை இருக்கின்ற கடலிலை கும்மாளம் இடுவதுதான் எங்கள் தலையாய கடமை.



நாங்கள் குளிக்கிற கடல் பருத்திதுறை துறைமுகக் கடல் ஜெட்டியடி என்பார்கள். எங்கடை பள்ளிக்கு பக்கத்திலை கடல். எங்கடை வகுப்பிலிருந்து பார்த்தால் கடல் தெரியும். சோதனை முடிஞ்ச உடனே ஜெட்டிக்கு படை எடுப்போம். அடுத்த நாள் சோதனைக்கு படிக்கிற நல்ல பொடியள் மட்டும் வரமாட்டார்கள். மற்றவர்கள் எல்லாம் போய்விடுவோம். சிலர் மாற்று காற்சட்டை கொண்டுவருவார்கள், ஏனையவர்கள் போட்டிருந்த காற்சட்டையுடன் தான் குளிப்பது. (காற்சட்டைக் காலம் ஆண்டு 9) ஏஎல்லுக்கு வந்தப்பின்னர் நாங்களும் மாற்று உடுப்புடன் வரப்பழகிக்கொண்டோம்.

நன்றாக நீந்தக்கூடிய பொடியள் கரையிலிருந்து கொஞ்சம் தூரம் செல்வார்கள். அந்தப் பகுதியில் கடல் மண் கடலாக இருப்பதாலும் கரையிலிருந்து ஒரு 15 மீற்றர் தூரத்தில் அவ்வளவு தாழம்(ஆழம்) குறைவாக இருப்பதாலும் (இடுப்பளவுக்கு தண்ணீர்) அப்படியும் கஸ்டப்பட்டு நீந்தி அந்த மணல் திட்டிக்குச் சென்றுவிடுவோம். பிறெகென்ன 2 மணி வரையும் கும்மாளம் தான். சிலவேளை கொஞ்சம் பிந்தினாலும் வீட்டிலை ஸ்பெசல் கிளாஸ் என்று கதைவிடுகிறது.

மணல் திட்டியில் நீந்துவதில் ஒரு நன்மை பக்கத்துப் பள்ளிக்கூட பெண்பிள்ளைகள் கடற்கரையால் செல்லும் போது யார் யார் குளிக்கின்றார்கள் எனப் பார்த்துவிட்டு வீட்டிலை போய் கோள்மூட்டிப்போடுவார்கள். அதனால் அவர்களுக்குப் பயந்து கொஞ்சம் தள்ளிப்போய் இல்லையென்டால் அவர்கள் அந்தப்பக்கதால் போகும்போது முகத்தை மூடி தப்பிப்பது வழக்கம்.

ஜெட்டியில் சாமான் இறக்க போட்டிருக்கும் மேடையிலிருந்து கடலுக்குள் குதிப்பது ஒரு திகில் அனுபவம். சிலவேளை யாராவது ஒருவர் குளிக்காமல் அதில் இருந்து வேடிக்கை பார்த்தால் அவனை அப்படியே கடலுக்குள் தள்ளிவிட்டுவிடுவார்கள். பாடசாலைச் சீருடையுடன் அவன் தத்தளிக்கவேண்டியதுதான். நீச்சல் தெரியாதவர்கள் கரையிலிருந்து தெப்பலடிப்பார்கள். கடலில் குளித்தால் கறுத்துப்போவோம் என்ற வதந்தி அந்த நாளில் அடிபட்டது. அதனால் சிவலைப்பொடியள் குளிக்கப் பஞ்சிப்படுவார்கள்.

டிசம்பர் விடுமுறை மழைக்காலம் என்பதால் கடல் கொந்தளிப்பான நிலையில் இருக்கும். ஆகவே அந்த நாட்களில் கடலில் குளிப்பது இல்லை. அப்போ எங்களுக்கு குளிக்கும் இடங்கள் கோயில் கேணிகளும் குளங்களும் தான்.

வியாபாரிமூலை வீரபத்திரர் கோயில் கேணி, மெதடிஸ் பெண்கள் பாடசாலைக்குப் பக்கதிலிருக்கின்ற அம்மன் கோயில் கேணி, வல்லிபுரக் கோயில் கேணி என சில கேணிகளும், வல்லிபுரக்கோவில் பக்கத்தில் இருக்கும் துன்னாலை குருக்கட்டு பிள்ளையார் கோயில் குளம், அத்துளுவில் உள்ள ஒரு குளம் போன்றவை நாம் குளிக்கும் குளம். துன்னாலையிலுள்ள தாமரைக்குளத்தடிக் குளத்தில் முதலை இருக்கிறது எனப் அந்த நாளில் பயப்படுத்தியபடியால் அங்கே போவதில்லை. ஆனால் தாமரைக்கொடி ஆளைச் சுற்றினால் எடுப்பது கஸ்டம் என்பார்கள்.



கேணியிலை குளிக்கிறதென்றால் குதித்து(டைவ்) எல்லாம் விளையாடலாம். மழை நாளில் நிறையத் தண்ணி நிற்கும். சிலவேளை குதிக்கும் போது படி இடிக்கும்.

எங்கடை பக்கம் ஆறில்லை இருப்பதோ இரண்டே இரண்டு ஆறு ஒன்று தொண்டைமானாறு, இன்னொன்று வழுக்கியாறு. தொண்டைமானாற்றில் கோடைகாலத்திலும் ஓரளவு தண்ணிர் இருக்கும். ஆனால் வழுக்கியாற்றில் மழை பெய்தால் தான் தண்ணீர்.

செல்வச் சந்நிதி திருவிழாக்காலங்களில் தொண்டைமானாற்றில் குளித்திருக்கின்றோம். மற்றும் படி ஆற்றில் குளிக்கப் பயம் ஆறு அடிச்சுக்கொண்டு போய்விடும் என்பார்கள்.

பின்னர் வாழ்க்கை தென்னிலங்கைக்கு மாறியபின்னர் மகாவலியிலும் மாணிக்க கங்கையிலும் குளித்திருக்கின்றோம். தண்ணி சும்மா ஜில்லென்று குளிராக இருக்கும். அதிலும் கதிர்காமம் போனால் விடியப்புறம் மாணிக்ககங்கையில் குளிப்பது என்பது சொர்க்கம் தான்.



இலங்கை ஒரு தீவாக இருப்பதால், கடற்கரைக் குளியல்கள் இங்கே பிரசித்தம். கிழக்கே திருகோணமலையில் புறாத்தீவுக் கடற்கரையும் மட்டக்களப்பில் அறுகம்குடாவும், வடக்கே காரைநகர் கசூரினா பீச், தெற்கே காலி உனவட்டுன கடற்கரை, மேற்கே காலிமுகத் திடலும் நீர்கொழும்புக் கடற்கரைகளும் உலகப் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்கள்.

காலமை ‍- காலை

கதைவிடுகிறது -புளுகுதல்(பொய்யாக புனை கதை சொல்லல்)

கோள் மூட்டுதல் - போட்டுக்கொடுத்தல் இல்லாத பொல்லாத கதைகளைச் சொல்லி ஒருவர் மீது வத்தி வைத்தல்

தெப்பலடிப்பது - கைகால்களை தண்ணியின் மேல் அடித்து நீந்துவது போல் பாவ்லா காட்டுவது.

பஞ்சி - சோம்பல் இண்டைக்கு புளொக் எழுத எனக்கு சரியான பஞ்சியாக் கிடக்கு

கேணி - தெப்பக்குளம் பெரும்பாலும் கோயில்களில் இறைவனை தீர்த்தமாட அழைத்துச் செல்லும் இடம்.
This entry was posted on 1:44 AM and is filed under , , , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

15 comments:

On July 31, 2009 at 3:58 AM , யசோதா.பத்மநாதன் said...

:)

இவை போல் வன்னியிலும் ஒரு ஆறு இருக்கிறது,அது பாலி ஆறு.
இது பற்றி வ.ஐ.ச. ஜெயபாலன் மனசு மறக்காத கவிதை ஒன்று எழுதியிருக்கிறார்.

அங்கு குளங்களும் பலவுண்டு.அனேகமான கிராமங்களின் பெயர்கள் குளம் என்ற பெயரோடு முடியும்.அனேகமாக ஒவ்வொரு கிராமமும் ஒவ்வொரு குளத்தைச் சுற்றி அமைந்திருக்கும்.

செழிப்பான விவசாயக் கிராமங்கள் அவை.நெல்லும் பாலும் நிரம்பியவை.

 
On July 31, 2009 at 4:25 AM , Anonymous said...

nallaayirukkungo...!niraiyamurai padiththirukkiren...karuththiduvathu ithuthaan muthalmurai...enenraal,hartley'l naangal seythathaiye neengal ezhuthiyiruppathaal...!

 
On July 31, 2009 at 5:08 AM , ஹேமா said...

நினைவலைகளில் நாங்களும் நீச்சலடிக்க ஒரு பதிவு.குளிர்ச்சி.

 
On July 31, 2009 at 7:51 AM , வந்தியத்தேவன் said...

//மணிமேகலா said...
இவை போல் வன்னியிலும் ஒரு ஆறு இருக்கிறது,அது பாலி ஆறு.
இது பற்றி வ.ஐ.ச. ஜெயபாலன் மனசு மறக்காத கவிதை ஒன்று எழுதியிருக்கிறார்.

அங்கு குளங்களும் பலவுண்டு.அனேகமான கிராமங்களின் பெயர்கள் குளம் என்ற பெயரோடு முடியும்.அனேகமாக ஒவ்வொரு கிராமமும் ஒவ்வொரு குளத்தைச் சுற்றி அமைந்திருக்கும்.

செழிப்பான விவசாயக் கிராமங்கள் அவை.நெல்லும் பாலும் நிரம்பியவை.//

மணி ஆச்சி வன்னியுள்ள குளங்கள் பற்றி எனக்கு அவ்வளவு தெரியாது. ஆனால் குளங்களின் பெயர்கள் யுத்தத்தின் மூலம் அறியக்கிடைத்தது. இரணைமடுக்குளம் மட்டும் சென்று பார்த்திருக்கின்றேன். வன்னி மண் விவசாய பூமி. குளங்கள் மூலம் அங்கே விவசாயம் செய்தார்கள் ஆனால் "யாழ்ப்பாணம் வானம் பார்த்த பூமி" எமக்கு மழை நீரும் கிணற்று நீரும் தான் இயற்கை தந்த வளம்.

 
On July 31, 2009 at 7:53 AM , வந்தியத்தேவன் said...

// Anonymous said...
nallaayirukkungo...!niraiyamurai padiththirukkiren...karuththiduvathu ithuthaan muthalmurai...enenraal,hartley'l naangal seythathaiye neengal ezhuthiyiruppathaal...!//

அனானி அண்ணா நீங்களும் ஹாட்லியின் மைந்தனா? எங்கள் முன்னோர்கள் காட்டிய வழியில் நாங்களும் சென்றோம்.

 
On July 31, 2009 at 7:54 AM , வந்தியத்தேவன் said...

//ஹேமா said...
நினைவலைகளில் நாங்களும் நீச்சலடிக்க ஒரு பதிவு.குளிர்ச்சி.//
நன்றிகள் ஹேமா.

 
On July 31, 2009 at 4:35 PM , கானா பிரபா said...

இன்னொரு உலகத்துக்கு கொண்டு போய் விட்டீர்கள், மிக்க நன்றி

 
On July 31, 2009 at 4:56 PM , Anonymous said...

தொண்டமானாறு ஒரு ஆறா? ஐயோ...முருகா

 
On July 31, 2009 at 7:25 PM , வந்தியத்தேவன் said...

//Anonymous said...
தொண்டமானாறு ஒரு ஆறா? ஐயோ...முருகா//
ஆமாம் அது ஆறுதான் ஆறு என்றால் ஓடிக்கொண்டிருக்கும் நீர் நிலை. தொண்டைமானாறு ஓடிக்கொண்டிருக்கும். அனானியாக முகமூடியிட்டு இதனைச் சொல்வதைவிட உங்கள் பெயரில் சொல்லியிருக்கலாமே.

 
On July 31, 2009 at 7:27 PM , வந்தியத்தேவன் said...

//கானா பிரபா said...
இன்னொரு உலகத்துக்கு கொண்டு போய் விட்டீர்கள், மிக்க நன்றி//

அடுத்த லீவிற்க்கு வாருங்கள் நேரடியாகவே அந்த உலகத்திற்க்குச் போவோம்.

 
On August 1, 2009 at 12:26 PM , சினேகிதி said...

இன்னொரு விசயம் நீந்தத்தெரியாமல் போய் எவ்வளவு பேர் செத்திருக்கினம். அத விட பட்டமேத்தப்போய் பின்னுக்குப்பாக்காமல் பின்பக்கமா நடந்துபோய் கிணத்துக்கு விழுந்து:(

 
On August 1, 2009 at 1:15 PM , வந்தியத்தேவன் said...

// சினேகிதி said...
இன்னொரு விசயம் நீந்தத்தெரியாமல் போய் எவ்வளவு பேர் செத்திருக்கினம். அத விட பட்டமேத்தப்போய் பின்னுக்குப்பாக்காமல் பின்பக்கமா நடந்துபோய் கிணத்துக்கு விழுந்து:(//

உண்மைதான். எங்கள் குறூப்பில் ஒருவருக்கு கேணிக்கை குதிச்சு தலையில் அடிபட்டு பிறகு மாறிப்போச்சு. எங்கள் பாடசாலை மாணவர்கள் சிலர் கடலில் இறந்திருக்கின்றார்கள்.

 
On August 2, 2009 at 8:46 AM , Vasanthan said...

தொண்டமானாறு ஆறு என்ற வகையில் வருவதாக நான் நினைக்கவில்லை. அது கடனீரேரி என்றுதான் நினைக்கிறேன்.

நீர் ஓடிக்கொண்டிருந்தால் அது ஆறு என்று சொல்லிவிட முடியாது. கடலோடு தொடர்புடைய நீர்ப்பரப்பில் இப்படி நீரோட்டங்களிருக்கும். வன்னியில் முல்லைத்தீவு - திருமலை கடற்கரைப்பாதையில் செம்மலை தாண்டியபின் நாயாற்றுப்பாலம் வரும் பெருங்கடலிலிருந்து அரைமைல் தூரம்கூட வராது. வருடத்தின் பெரும்பாலான நாட்கள் நாயாற்று நீர் கடலோடு தொடுக்கப்பட்டிருக்கும்.

பாலத்தின் கீழ் நீர் ஓடிக்கொண்டிருக்கும். அதுவும் இரண்டுபக்கமும் மாறிமாறி ஓடிக்கொண்டிருக்கும். பாலத்தைக் கடக்கும்போது கடற்பக்கமாக ஓடிக்கொண்டிருக்கும்; ஒருமணி நேரத்தின்பின் வந்தால் எதிர்ப்பக்கமாக பாய்ந்துகொண்டிருக்கும். மிகவும் சுவாரசியமாக இருக்கும்.

இந்த நீரோட்டம் பெருங்கடலின் 'பெருக்கு', 'வற்று' என்பவற்றால் தீர்மானிக்கப்படுகிறது. மற்றும்படி 'ஆறு' ஓடிக்கொண்டிருப்பதை இதோடு ஒப்பிட முடியாது.

அவ்வகையில் தொண்டமானாறின் ஓட்டமென்பது பெருங்கடலின் பெருக்கு, வற்று என்பவற்றின் காரணத்தால் தான் என நினைக்கிறேன். நீங்கள் சொல்லும் ஆற்றின் ஓட்டம் வருடம் முழுவதும் ஒரே திசையில்மட்டும்தான் இருக்கும் என்று சொல்லமுடியுமா? அப்படியிருந்தால் சிலவேளை அது 'ஆறு' என்ற வகைக்குள் வரலாம்.

** ஆனால் வழுக்கியாறு ஓர் 'ஆறு'தான். என்ன, தண்ணியக் காணிறதுதான் கஸ்டம்;-)

--------------------
மணிமேகலா, வன்னியில் ஓர் ஆறு மட்டுமில்லை, நிறையவே ஆறுகள் உள்ளன;-)
--------------------
தொண்டமானாறைக் கேள்விக்குட்படுத்திப் பின்னூட்டமிட்ட அனானி நானில்லை. ஆனால் ஏதோ ஒரு பெயர்போட்டு எழுதினால்தான் அக்கருத்துக்கு மரியாதை தருவோம், இல்லையென்றால் போடா விசரா (அல்லது விசரி) என்றுவிட்டு இருப்போமென்பது தவறான அணுகுமுறை என்பது என் கருத்து. என்ன கோதாரிக்கு பெயர் முக்கியத்துவப்படுகிறது (அதுவும் இங்கே எழுதிக்கிழிப்பவர்களில் முக்கால்வாசிப் பேர் பெற்றோர் வைத்த பெயரில் எழுதுபவர்களில்லை) என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

 
On December 9, 2009 at 5:05 PM , Vijay said...

நினைவுகளை மீட்டும் அருமையான பதிவு.
"...வியாபாரிமூலை வீரபத்திரர் கோயில் கேணி, மெதடிஸ் பெண்கள் பாடசாலைக்குப் பக்கதிலிருக்கின்ற அம்மன் கோயில் கேணி...." இதில் சிறு திருத்தம்.... வியாபாரிமூலை வீரபத்திரர் கோவிலில் கேணியில்லை. வியாபாரிமூலை பிள்ளையார் கோவில் கேணியே மாரிகால நீச்சலுக்குப் பேர்போனது. அவ்வாறே மெதடிஸ் பெண்கள் பாடசாலைக்குப் பக்கத்தில் இருப்பது ஆலடிப் பிள்ளையார் கோவில் (அம்மன் கோயில் அல்ல)

 
On December 11, 2012 at 12:12 AM , Unknown said...

வீரபத்திரர் ஆலயத்தில் குளம் இல்லை... நீங்கள் குறிப்பிட்டது இன்பர்சிட்டி பிள்ளையார் ஆலயமாக இருக்கலாம்.