Author: கானா பிரபா
•8:17 PM
யாழ்ப்பாண இராசதானியின் தலைநகராக விளங்கிய நல்லூரைக் கைப்பற்றிய போர்த்துக்கேயர் இங்கிருந்த கோட்டையையும், ஆலயங்களையும் இடித்துத் தரைமட்டமாக்கியிருப்பதாகச் சொல்லப்படுகின்றது. ஆ.முத்துத் தம்பிப் பிள்ளை தமது யாழ்ப்பாணச் சரித்திரம் என்னும் நூலில் நல்லூர் இராசதானிக்குரிய கற்சாசனங்களும், கற்றூண்களும் யாழ்ப்பாணக் கோட்டையில் வைத்துக் கட்டியிருப்பதாகச் சொல்கின்றார். கோட்டையின் மேற்குப் பாகத்தில் வெளிப்புறங்களில் வைத்துக் கட்டப்பட்டுள்ள கற்றூண்கள் பல நல்லூர் இராசதானிக்குரியவை என்பதை அடையாளம் காட்டுக்கின்றன. இவற்றில் ஒரு தூணில் உள்ள நேர்த்தியான தாமரைச் சிற்பம் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.

இதற்கு ஆதாரமாக வரும் யாழ்ப்பாண வைபவ மாலையில் வரும் கூற்று மேலும் ஆதாரமாக அமைகின்றது.

"பறங்கிகள் ஆட்சியினை ஒப்புக்கொண்டு
நல்லூரிற்குள்ளே குடியிருந்து கொண்டு
தங்கள் கருமங்களை நடத்திப் புறக்
கோட்டை மதில்களை இடிப்பித்து அக்
கற்களைக் கொண்டு போய்க் கடல்
ஓரத்திலே சங்கிலியரசன் இடிப்பித்துப்
பரவிவிட்ட தங்கள் கோட்டையை மறுபடி
கோட்டையாகக் கட்டி அதன் கீழ்ப்
புறத்திலே வீடுகளையும் அரசாட்சி
மண்டபங்களையும் கட்டுவித்துக் குடிக:
சமீபத்தில் வீடுகட்டி வந்திருக்கும் படி
வசதி பண்ணினார்கள்".

தற்போதய நல்லூர்ப் பிராந்தியத்தில் யாழ்ப்பாண மன்னர் காலக் கட்டடங்கள் எவையும் முழுமையாக இல்லாவிட்டாலும், அங்குள்ள மந்திரி மனை, சங்கிலியன் தோப்பு, இராசாவின் தோட்டம், பண்டார மாளிகை, பண்டாரக் குளம் போன்ற பெயர்களும், இவ்விடங்களில் அழிந்த நிலையில் உள்ள கட்டிடச் சிதைவுகளும் அக்கால நல்லூர் இராசதானியை நினைவுபடுத்துவனவாக உள்ளன.

விரிவான வரலாறு அம்சங்களைத் தொடந்து வரும் பதிவுகளில் நோக்குவோம்

மூலக்குறிப்புக்கள் உதவி: "யாழ்ப்பாண இராச்சியம்", தை 1992 - பதிப்பாசிரியர் கலாநிதி சி.க.சிற்றம்பலம் புகைப்படம்: 2005 ஆம் ஆண்டு யாழ் சென்றிருந்த போது என்னால் எடுக்கப்பட்டது.
This entry was posted on 8:17 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

1 comments:

On July 31, 2009 at 4:14 AM , யசோதா.பத்மநாதன் said...

தொடர்ந்து எழுதுங்கள் பிரபா.

நமது வேர்கள்; நாம் அறிய வேண்டியவை;ஆவணப் படுத்தப்பட வேண்டியவை.

அறிய ஆவல்.