Author: கானா பிரபா
•1:19 AM

நல்லை நகர் கந்தனுக்கு முதலில் கோயில் கட்டப்பட்டது கி.பி.948 ஆம் ஆண்டிலா அல்லது கி.பி 1248 ஆம் ஆண்டிலா என்பது முடிவு செய்யப்படவேண்டியதொன்றாகும். முதலாவது ஆலயம் கி.பி 948 ஆம் ஆண்டிலே கட்டப்பட்டதெனக் கொண்டால் அது இராசப் பிரதிநிதியாக விளங்கிய புவனேகபாகுவினால் பூநகரி நல்லூரிலே கட்டப்பட்டதாகும். அவ்வாறன்றி முதலாவது ஆலயம் கி.பி.1248 ஆம் ஆண்டு காலிங்க ஆரியச் சக்கரவர்த்தியின் மந்திரியாகவிருந்த புவனேகபாகுவினால் கட்டப்பட்டதாயின் யாழ்ப்பாண நல்லூரிலே அமைக்கப்பட்டிருக்கவேண்டும். இவ்விரு கருத்துக்களிலே பின்னதே சாத்தியமானதும் ஏற்றதுமாகவுள்ளது. இந்த ஆலயம் இருந்த இடத்திலேயே தற்போதுள்ள நல்லைக்கந்தன் ஆலயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர் குறிப்பிடுகின்றனர்.

நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை முதன்முதலாகக் கட்டிய புவனேகபாகு என்ற பெயர் கொண்டவர் யார்?
கல்வெட்டாதாரங்களும், செப்பேட்டாதாரங்களும் இவர் குறித்துக் கிடையாவிடினும், நூலாதாரங்களும் பதிவேட்டுக் குறிப்பாதாரங்களும் உள்ளன. அவை:

"சிங்கையாரியன் சந்தோஷத்திடனிசைந்து கலைவல்ல சிகாமணியாகிய புவனேகவாகு வென்னும் மந்திரியையும் காசி நகர்க் குலோத்துங்கனாகிய கெங்காதர ஐயரெனுங் குருவையும் அழைத்துக் கொண்டு, தனது பரிவாரங்களுடன் யாழ்ப்பாணம் வந்திறங்கினான்" என்று யாழ்ப்பாணச் சரித்திரம் என்ற நூலில் ஜோன் கூறுகிறார். (ஜோன் எஸ் 1882)
சிங்கையாரிய மகாராசன் இப்படியே அரசாட்சியைக் கைப்பற்றி நடாத்தி வருகையில் புறமதில் வேலையுங் கந்தசுவாமி கோயிலையும் சாலிவாகன சகாப்தம் 870 ஆம் வருஷத்தில் புவனேகவாகு என்னும் மந்திரி நிறைவேற்றினான்" என யாழ்ப்பாண வைபவமாலை என்ற நூல் கூறுகின்றது. (வைபவ மாலை 1949)

"சிறீமான் மஹாராஜாதிராஜ
அகண்ட பூமண்டலப்ர
தியதிகந்தர விச்றாந்த கீர்த்தி
சிறீ கஜவல்லி மகாவல்லி
சமேத சுப்பிரமண்ய
பாதார விந்த ஜநாதிருட சோடக
மகாதான சூர்யகுல
வம்சோத்பவ சிறீசங்க
போதி புவனேகவாகு"

நல்லூர்க் கோயிலைக் கட்டிய புவனேக பாகு கோயிற் கட்டியத்தில் இன்றும் இவ்வாறு போற்றப்படுகின்றார். இக்கட்டியத்தின் அர்த்தம் வருமாறு:
திருவருட் சக்திகளான வள்ளியம்மனும், தெய்வயானையம்மனும் ஒருங்கே பொருந்த வீற்றிருக்கும் சுப்பிரமணியப் பெருமானின் திருவடித் தாமரைகளை வணங்குபவனும், மன்னர்களுள் மன்னனும், செல்வங்களை உடையவனும், மிகப் பரந்த பூமியடங்கலுமுள்ள
திசைகள் எல்லாவற்றிலும் பரவிய புகழுடையவனும், மக்களுடைய தலைவனும், முதலாம் பெரிய தானங்களைச் செய்பவனும், சூரிய குலத்திலே தோன்றியவனும், சிறீ சங்கபோதி என்னும் விருதுப் பெயர் தரித்தவனுமாகிய புவனேகவாகு.

யாழ்ப்பாணக் கச்சேரியில் 1882 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட சைவசமயக் கோயில்கள் பதிவேட்டில் பின்வருமாறு காணப்படுகின்றது.

"கந்தசுவாமி கோயில், குருக்கள் வளவு என்ற காணியிற் கட்டப்பெற்றுள்ளது. இது தமிழ் அரசன் ஆரியச் சக்கரவர்த்தியின் பிரதம மந்திரி புவனேகவாகரால் 884 ஆம் ஆண்டளவிற் கட்டப்பெற்றது. (குலசபாநாதன் 1971) நல்லூர்க் கந்தசுவாமி கோயில் பிரதம குருக்களாகவிருந்த சுப்பையா என்பார் 1811 இல் ஆள்வோருக்கு அழுதிய முறைப்பாடு ஒன்றில், கோயிலைக் கட்டியவர் பெயர் புவனேகன்கோ (Pooveneageangoo) எனக் குறிப்பிட்டுள்ளார். (Jhonson Alexander - 1916/17)

தகவற் குறிப்புக்கள் ஆதாரம்:
"ஈழத்தவர் வரலாறு"
இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000
ஆக்கியோன்- கலாநிதி க.குணராசா
புகைப்பட உதவி:
Virutal tourist சுற்றுலாத் தளம்
This entry was posted on 1:19 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 comments:

On July 31, 2009 at 3:31 AM , யசோதா.பத்மநாதன் said...

நல்ல அழகாகக் கட்டப் பட்டுச் செல்கிறது மாலை.

நல்லூர் திருவிழா நூல் எடுத்து வரலாற்று முத்துக்கள் கோர்க்கப் படுகின்றன.

25ஆம் நாள் முடிவில் முருகனுக்குச் சூட்ட நல்லதொரு முத்துமாலை.

அலங்காரக் கந்தனல்லவா? அவருக்கு இது வேண்டியது தான்.

 
On July 31, 2009 at 7:47 PM , கானா பிரபா said...

மிக்க நன்றி