Author: வந்தியத்தேவன்
•8:32 PM
நாளை ஆடிமாதம் பிறக்கின்றது. ஆடிப்பிறப்பு என்பது தமிழ் இந்துக்கள் வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு தினமாகும். ஆடிப்பிறப்பு என்றவுடன் ஞாபகத்திற்க்கு வருவது ஆடிக்கூழும், நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் "ஆடிப்பிறப்பிற்க்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே" என்ற பாடலும் தான்.



ஆடிப்பிறப்பிற்க்கு வீடுகளில் இனிப்புக்கூழ் காய்ச்சுவார்கள். தூயாவின்ட குசினிக்கை இதன் செய்முறை இருக்கு. கொழுக்கட்டை அவிப்பார்கள். ஆடிகூழும் ஆடிக்கொழுக்கட்டையும் அவ்வளவு பேமஸ். தை மாதம் பிறப்பை தைப்பொங்கலாக கொண்டாடுகின்றோம், சித்திரை மாதப் பிறப்பை சித்திரைப் புத்தாண்டாக கொண்டாடுகின்றோம். ஆனால் ஆடிப்பிறப்பை ஏன் கொண்டாடுகின்றோம் என்ற கதை எனக்கு இன்னமும் தெரியாது. தெரிந்தவர்கள் சொல்லவும். ஏனெனில் இந்துக்களைப் பொறுத்தவரை ஆடிமாதத்தில் எந்த நல்லகாரியத்தையும் தொடங்கமாட்டார்கள். இந்தியாவில் இளம்ஜோடிகளை பிரித்துவைத்துவிடுவார்கள். எங்கட நாட்டிலை அந்தக் கொடுமையெல்லாம் இல்லை. ஆனால் திருமணம் போன்ற சுபகாரியங்கள் செய்யமாட்டார்கள்.



ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழியும் புழக்கத்தில் இருக்கு. இதன் அர்த்தம் ஆடியிலை விதை விதைத்தால் விளைச்சல் அதிகம் என்பதாகும். இப்படி ஆடி என்ற சொல் எம்மக்கள் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்திருந்தாலும் பின்னாளில் ஆடி என்றால் ஆடிக்கலவரமே முதலில் ஞாபகத்திற்க்கு வரும். ஆகவே தற்கால ஈழத்தமிழர்களின் வரலாற்று ரீதியாகவும் ஆடி முக்கியம் பெறுகின்றது.

இவற்றைவிட ஆடியில் நல்லூர், கதிர்காமம் உட்பட பல கோயில்களில் திருவிழா தொடங்கும்.

ஆடி அமாவாசை

ஒவ்வொருமாதமும் அமாவாசை வந்தாலும் ஆடிமாதத்தில் வருகின்ற அமாவாசைக்கு தனிச் சிறப்பு. பெரும்பாலான இந்துக்கள் தங்கள் முன்னோருக்கு பிதிர்க்கடன் செய்யும் நாள் ஆடி அமாவாசையாகும்.

எங்கள் முன்னோர்களான பிதிர்களை வழிபட்டால் தோசங்கள் நீங்கி நல் வாழ்வு பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. யாழ்ப்பாணத்தில் கீரிமலை நகுலேஸ்வரம், மட்டக்களப்பில் அமிர்தகழி மாமாங்கப் பிள்ளையார் கோயில், திருகோணமலையில் கோணேசர் கோயில் தீர்த்தம் என பல புண்ணிய தீர்த்தங்களில் தீர்த்தமாடி மக்கள் தங்கள் பிதிர்களுக்கு நன்றி செலுத்துவதுடன் பாவவிமோசனமும் அடைகின்றார்கள் என்பது ஐதீகம்.

நாளை(17.07.2009) ஆடிப் பிறப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(21.07.2009) ஆடி அமாவாசை.

படங்கள் உதவி இணையம்.
This entry was posted on 8:32 PM and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

20 comments:

On July 15, 2009 at 11:19 PM , சந்தனமுல்லை said...

சுவாரசியமான சுவையான இடுகை! கொழுக்கட்டை 'வடிவா' இருக்கு...(பாருங்க, உங்க ப்லாக் படிச்சு நானும் உங்களை மாதிரி பேச கத்துக்கிட்டேன்! ) :-)

 
On July 15, 2009 at 11:35 PM , சுபானு said...

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

மிகுதிப்பாடிலையும் பார்க்க இங்கே சொருகுங்கள்
ஆடிப் பிறப்புக்கு நாளை - நவாலியூர் சோமசுந்தரப்புலவர் (29 புரட்டாதி 1879 - 7 ஆடி, 1953) விடுதலை

 
On July 16, 2009 at 3:40 AM , கானா பிரபா said...

புலம்பெயர்ந்த பின்னர் ஆடிப்பிறப்பு வருவதும் தெரியாது போவது தெரியாது என்ற கணக்கில் ஓடிவிடும். இந்தப் பதிவிலாவது கூழைக் காட்டினீங்களே மிக்க நன்றி வந்தி இப்படியான சிறப்பு தினங்களைப் பகிர்வதும் நல்லதொரு விடயம்.

 
On July 16, 2009 at 6:24 AM , யசோதா.பத்மநாதன் said...

காலத்திற்கேற்ற பதிவு.கூழைப் பார்க்க நல்லாத்தான் இருக்கு.

ஆனா அதென்ன வந்தி கொழுக்கட்டை பேப்பிள் நிறத்தில, இவ்வளவு சின்னனா இருக்கு? அது நீங்க செய்ததா?:)

என்ன இருந்தாலும் அது இருக்கிற சுளகப் பாக்க தான் எனக்கு இன்னும் ஆசையா இருக்கு.இங்கு அது பாவனையில் இல்லை.பார்வைக்கும் இல்லை.

சுளகு - முறம்.

 
On July 16, 2009 at 7:43 AM , வர்மா said...

வந்தியத்தேவன் இப்படி வஞ்சகம் பண்ணலாமா? ஆடிப்பிறப்பைப்பற்றி ரோடுபோட்லாமென நினைக்கையில் மேம்பாலமே போட்டுவிட்டீரையா.ஆடிப்பிறப்புக்கு விடுதலை ஏன் என்பது வந்தியத்தேவனுக்கும் தெரியாதா? கல்கி எழுதிய பொன்னியின் செல்வனில் ஆடிப்பிறப்புக்கு காவிரி வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதை படிக்கவில்லையா? ஆடிப்பிறப்பன்று பொங்கிச்சாப்பிட்டுவிட்டு பெண்ணை பிறந்த வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்.அது கொடுமையல்ல பாதுகாப்பு.ஆடியிலே கூடினால் சித்திரையில் குழந்தை பிறக்கும் சித்திரைபுத்திரன் தகப்பனுடன் ஒத்துப்போகமாட்டான்.ஆடிக்கூழ் காமத்தை குறைக்கும் என்பார்கள்.
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை என்ற பாடலை முழுமையாகத்தந்த சுபானுவுக்கு நன்றி.
அன்புடன்
வர்மா

 
On July 16, 2009 at 5:10 PM , thoaranam said...

தமிழர்களின் முக்கிய நிகழ்வுகளில் பலவற்றை மாறி மாறி வந்த மதங்கள் தமது நிகழ்வுகளாக்கிக் கொண்டுள்ளதை சற்று அலசிப் பார்க்க வேண்டும். 1. இலங்கையில் இந்துக்கள் இருந்திருக்கிறார்களா? அப்படியாயின் உலகளாவிய இந்துக்களில் யாராவது ஆடிப்பிறப்பைக் கொண்டாடியிருக்கிறார்களா?
2. ஆடி மாத்தையே நீச மாதமாக்கிய இந்து மதம் எப்படி ஆடிப் பிறப்பைக் கொண்டாடி இருக்க முடியும்?

தமிழர் வாழ்வில் தைப் பொங்கலும், ஆடிப்பிறப்பும் மதம் கடந்த முக்கிய நிகழ்வுகள். இவை ஒரு போதிலும் கோயில்களில் நடைபெறுவதில்லை.

நன்றியுடன்
முகிலன்

 
On July 16, 2009 at 7:49 PM , ஐந்திணை said...

ஆடி-18ம் சிறப்பான நாள்தான்

 
On July 16, 2009 at 8:03 PM , வந்தியத்தேவன் said...

// சந்தனமுல்லை said...
சுவாரசியமான சுவையான இடுகை! கொழுக்கட்டை 'வடிவா' இருக்கு...(பாருங்க, உங்க ப்லாக் படிச்சு நானும் உங்களை மாதிரி பேச கத்துக்கிட்டேன்! ) :‍)//

நன்றிகள் சந்தனமுல்லை எங்கட முற்றத்திற்க்கு அடிக்கடி வந்தால் கொஞ்ச நாளில் நீங்கள் வடிவா கதைப்பியள்.

 
On July 16, 2009 at 8:04 PM , வந்தியத்தேவன் said...

சுபானு உங்கள் தொடுப்பிற்க்கு நன்றிகள். பல இடங்களில் இந்தப்பாடல் முழுமையாக இருப்பதால் நான் என் பதிவில் இடவில்லை.

 
On July 16, 2009 at 8:08 PM , வந்தியத்தேவன் said...

//கானா பிரபா said...
புலம்பெயர்ந்த பின்னர் ஆடிப்பிறப்பு வருவதும் தெரியாது போவது தெரியாது என்ற கணக்கில் ஓடிவிடும். இந்தப் பதிவிலாவது கூழைக் காட்டினீங்களே மிக்க நன்றி வந்தி இப்படியான சிறப்பு தினங்களைப் பகிர்வதும் நல்லதொரு விடயம்.//

உங்களிடம் நம்ம நாட்டு மெய்கண்டான் கலண்டர் இல்லையா? அதிலை சகல கோயில் குளம் விசேடங்கள் அனைத்தும் இருக்கும். ஒரு முறை யாழ் இணையத்தில் ஆடிப்பிறப்புக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள். எத்தனையோ விடயங்களை நாங்கள் புலம் பெயர்ந்து இடம் பெயர்ந்து இழந்துவிட்டோம். இப்போது வாழ்வது ஒருவிதமான எந்திரத்தனமான வாழ்க்கை. அந்த வாழ்க்கையில் இருந்து ஓரளவு விடுபட்டு பழைய கதைகளை நினைக்க இந்த வலை உதவுகின்றது.

 
On July 16, 2009 at 8:10 PM , வந்தியத்தேவன் said...

// மணிமேகலா said...
ஆனா அதென்ன வந்தி கொழுக்கட்டை பேப்பிள் நிறத்தில, இவ்வளவு சின்னனா இருக்கு? அது நீங்க செய்ததா?:)//

கொழுக்கட்டை நான் செய்யவில்லை எதோவொரு இணையத்தில் முன்னர் தரவிறக்கம் செய்தது. இப்போ கொழுக்கட்டையை கையால் பிடிக்காமல் பற்றீஸ் செய்யும் அச்சில் செய்கிறார்கள் அதுதான் சின்னனா இருக்கு.

 
On July 16, 2009 at 8:12 PM , வந்தியத்தேவன் said...

// வர்மா said...
வந்தியத்தேவன் இப்படி வஞ்சகம் பண்ணலாமா? ஆடிப்பிறப்பைப்பற்றி ரோடுபோட்லாமென நினைக்கையில் மேம்பாலமே போட்டுவிட்டீரையா.ஆடிப்பிறப்புக்கு விடுதலை ஏன் என்பது வந்தியத்தேவனுக்கும் தெரியாதா? கல்கி எழுதிய பொன்னியின் செல்வனில் ஆடிப்பிறப்புக்கு காவிரி வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதை படிக்கவில்லையா? ஆடிப்பிறப்பன்று பொங்கிச்சாப்பிட்டுவிட்டு பெண்ணை பிறந்த வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்.அது கொடுமையல்ல பாதுகாப்பு.ஆடியிலே கூடினால் சித்திரையில் குழந்தை பிறக்கும் சித்திரைபுத்திரன் தகப்பனுடன் ஒத்துப்போகமாட்டான்.ஆடிக்கூழ் காமத்தை குறைக்கும் என்பார்கள்.//

நன்றிகள் வர்மா அவர்களே பொன்னியின் செல்வனை மறந்துதான் போயிட்டேன். அப்போ சித்திரையில் பிறந்த குழந்தைகள் தகப்பனுடன் ஒத்துப்போகமாட்டார்களா? என்ன கொடுமை இது.

 
On July 16, 2009 at 8:21 PM , வந்தியத்தேவன் said...

// mukilan முகிலன் said...
தமிழர்களின் முக்கிய நிகழ்வுகளில் பலவற்றை மாறி மாறி வந்த மதங்கள் தமது நிகழ்வுகளாக்கிக் கொண்டுள்ளதை சற்று அலசிப் பார்க்க வேண்டும். 1. இலங்கையில் இந்துக்கள் இருந்திருக்கிறார்களா? அப்படியாயின் உலகளாவிய இந்துக்களில் யாராவது ஆடிப்பிறப்பைக் கொண்டாடியிருக்கிறார்களா?
2. ஆடி மாத்தையே நீச மாதமாக்கிய இந்து மதம் எப்படி ஆடிப் பிறப்பைக் கொண்டாடி இருக்க முடியும்? //

முகிலன் உங்கள் கேள்விகள் ஆராய்சிக்கு உரியவை.
1. இலங்கையின் ஆதிக்குடிகளான நாகர்கள் நாக வழிபாட்டில் ஈடுபட்டிருந்தார்கள் என சில வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன. பின்னர் நாகவழிபாடு நாகதம்பிரான் வழிபாடாக மாறியிருக்கலாம். வடமராட்சி கிழக்கில் உள்ள நாகதம்பிரான் ஆலயம் சரித்திரப்பிரசித்தி பெற்றது. பெரும்பாலான நாகதம்பிரான் ஆலயங்கள் காட்டுவழிகளில் இருக்கின்றது.

2. உங்கள் இரண்டாவது கேள்விக்கான பதில் யாராவது இந்துமத அறிஞர்கள் அல்லது தமிழறிஞர்களிடம் சொல்லவேண்டும்.

//தமிழர் வாழ்வில் தைப் பொங்கலும், ஆடிப்பிறப்பும் மதம் கடந்த முக்கிய நிகழ்வுகள். இவை ஒரு போதிலும் கோயில்களில் நடைபெறுவதில்லை.//

இவை தமிழர்கள் நிகழ்வுகள் தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை. தைப்பொங்கல் அன்று பொங்கல் கோயில்களிலும் பொங்கப்படும் சில தேவாலயங்களிலும்(சேர்ச்) பொங்குவார்கள். கொழும்பு கொச்சிக்கடை வியாகுலமாதா ஆலயத்தில் பொங்கல் தமிழர் திருநாளாக கொண்டாடப்படுகின்றது.

ஆடிப்பிறப்பு கோயில்களில் கொண்டாடுவது நான் அறியவில்லை.

இதனைப் பற்றிய ஏனைய நண்பர்களின் கருத்துக்களையும் அறிய விரும்புகின்றேன்.

 
On July 16, 2009 at 9:03 PM , RATHNESH said...

நல்ல பதிவு. நகரத்துத் தமிழர்களும் இந்தியாவின் பிற மாநிலங்களுக்குப் புலம் பெயர்ந்த தமிழர்களும் மறந்து வரும் நல்ல விஷயங்களை நினைவுபடுத்தி வருகிறீர்கள். அதற்கு முதலில் நன்றி.

//தமிழர் வாழ்வில் தைப் பொங்கலும், ஆடிப்பிறப்பும் மதம் கடந்த முக்கிய நிகழ்வுகள். இவை ஒரு போதிலும் கோயில்களில் நடைபெறுவதில்லை//

மதம் கடந்த நிகழ்வுகள் கோவில்களில் நடைபெறக் கூடாது என்று கட்டாயம் ஏதும் இல்லையே. இன்றைய தேதியில் ஆடி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் கோயில் பின்னணிகளால் தான் உயிர்ப்புடன் இருக்கின்றன என்பதையும் மறக்க இயலுமா?

 
On July 17, 2009 at 1:29 AM , வாசுகி said...

உறவினர் ஒருவர் ஆடிக்கூழ் காய்ச்சுவதாக காதில பட்டதால‌
இன்று அவர்களது வீட்டிற்கு சென்று கூழ் குடித்தேன்.
கொழுக்கட்டை தான் சாப்பிடமுடியவில்லை : (
கூழை நினைவு படுத்திய உங்களது பதிவு சிறப்பாக உள்ளது.


//ஆடிப்பிறப்பு கோயில்களில் கொண்டாடுவது நான் அறியவில்லை. //
இலங்கையில் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.
மாதப்பிறப்பு என்பதால் கோயிலில் மக்கள் கூட்டத்தை காணக்கூடியதாக தான் இருந்தது.


//வடமராட்சி கிழக்கில் உள்ள நாகதம்பிரான் ஆலயம் சரித்திரப்பிரசித்தி பெற்றது. பெரும்பாலான நாகதம்பிரான் ஆலயங்கள் காட்டுவழிகளில் இருக்கின்றது. //
இந்த கோயிலகளுக்கு போகக்கூடிய சூழ்நிலை இப்போது இருக்கிறதா?
மணல்காடு போன்ற இடங்களுக்கு போவதற்கு தடை என அறிந்தேன்.
முன்பு பாடசாலையால் சுற்றுலா என மணல்காடு கூட்டி போவார்கள்.
எனக்கு தான் போவதர்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

 
On July 17, 2009 at 3:55 AM , ஹேமா said...

நேற்று நானும் ஆடிகூழ் குடிச்சேன்.கோவிலில் பூசை நடந்தது.தோழி போய் வந்து எனக்கும் தந்தா.

ஆடிக்கூழுக்குத்தானே மிளகு எலாம் போட்டுச் செய்வினம்.ஆனால் கோயிலில் ஏனோ போடவில்லை.
நான் ஒரு நாள் வானொலியில் கேட்ட விஞ்ஞான விளக்கம்.இந்த மாதக்காலங்களில் கூடிய வெக்கையா இருக்கிறதால உடம்பைக் குளிர்மைப் படுத்தவாம் என்றார்கள்.

பதிவு அருமை.கூழையும் - சுளகில் கொளுக்கட்டையும் பாக்காவே ஆசையாயிருக்கு.(கொளுக்கட்டைக்கு அரிசிமா கூடிப்போச்சுப்போல.கலர் அடிக்குது.)

 
On July 17, 2009 at 11:46 AM , நிலாமுற்றம் said...

இலங்கை பதிவர்களுக்கு தனிக்களம் அமைக்கும் நோக்கோடு உருவாக்கப்பட்டு வரும் “நிலாமுற்றம்” சிறப்பு திரட்டியில் உங்கள் பதிவுகளும் இடம்பெறுகின்றன.

தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறோம்

“நிலாமுற்றம்”
http://www.nilamuttram.com/

 
On July 18, 2009 at 10:39 PM , வலசு - வேலணை said...

வாயூற வைச்சிட்டீங்க வந்தி.

 
On July 19, 2009 at 7:21 PM , வி. ஜெ. சந்திரன் said...

ஆடி பிறப்புக்கு இம்முறை வீட்டில் நிற்காததால், கூழ் பற்றி நினைத்தாலும் கூழ் காய்ச்ச முடியவில்லை.
சரி ஈழத்து முத்ததிலை காய்ச்சி எல்லாரும் குடிச்சிருக்கிறியள் போல :)

 
On July 25, 2009 at 8:52 AM , தமிழன்-கறுப்பி... said...

ஊர்ல நடந்த ஆடிப்பிறப்பு எனக்கு சிக்கலைக்குடுத்த நாளொண்டு அது வேற கதை..,
ஆடி அமாவாசை விரதம் எல்லோரும் பிடிக்கிறல்லைத்தானே அம்மாவோ அல்லது அப்பா இல்லாத ஆக்கள்தான் பிடிக்கிறதென்று கேள்விப்பட்டிருக்கிறன்.