Author: வந்தியத்தேவன்
•9:33 PM
திருமந்திரம் தந்த திருமூலரால் சிவபூமி என அழைக்கப்பட்ட நாடு இலங்கையாகும். வடக்கே மன்னாரில் திருக்கேதீச்ச‌ரம் தொடங்கி தெற்கே தேவந்திரமுனையில் அமைந்திருக்கும் சிவன் கோயில் வரை சிவாலயங்களே இலங்கையில் அதிகமாக அந்தக்காலத்தில் இருந்தது. கிழக்கில் திருகோணமலை கோணேஸ்வரரும் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரரும், ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வர‌ரும் ஆதிக்கம் செலுத்த மேற்கே சிலாபத்தில் முன்னேஸ்வரர் அருள் பாலிக்கின்றார்.


பஞ்ச ஈச்சரங்கள் என அழைக்கப்படுகின்ற திருக்கேதீச்சரம், திருக்கோணேச்ச‌ரம், முன்னேச்ச‌ரம், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்ச‌ரம் மற்றும் ஒட்டுசுட்டான் தான்தோன்றீச்ச‌ரம் போன்றவை பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவை. இவற்றில் கேதீச்சரமும் கோணேச்சரமும் திருஞான சம்பந்தராலும் சுந்தரராலும் பாடல் பாடப்பெற்றவை.



இவற்றைத் தவிர சோழப்பேரரசர்களால் பொலன்நறுவையில் அமைக்கப்பட்ட சிவன் ஆலயம் இன்று இடிந்து சிதிலமடைந்து காணப்படுகிறது.



ஈழத்தில் சிவ வழிபாடு முக்கியம் பெற முதன்மைக்காரணம் பெரும்பாலான ஈழத்தவர்கள் சைவர்களாக இருப்பதே ஆகும். இன்று கூட நாம் எம்மை இந்துக்கள் என்று அழைப்பதைவிட சைவர்கள் என்றழைப்பதையே விரும்புகின்றோம். சைவ சமயத்தின் முதன் முதல்க் கடவுளாக சிவன் இருக்கிறார். சிந்து வெளி நாகரீக காலத்தில் சிவவழிபாடே முக்கியம் வாய்ந்ததாக இருந்தது. பின்னாளில் ஆதிக்கம் செலுத்திய ஆரியர்களினால் சிவனுக்கு எதிராக விஷ்ணுவை கொண்டுவந்தார்கள். விஷ்ணுவின் ஆதிக்கம் ஈழத்தில் மிகவும் குறைவாகவே அல்லது இல்லையென்றே கூறவேண்டும். அத்துடன் நம் நாட்டில் வைஷ்ணவர்கள் என்ற சமூகம் இல்லை.

பொன்னாலையில் வரதராஜப் பெருமாளும் வடமராட்சி பருத்தித்துறையில் வல்லிபுர ஆழ்வாரும் ஆட்சி செலுத்தினாலும் அங்கே கோயில் நைமித்திய கடமைகளைச் செய்பவர்கள் சைவர் பரம்பரையில் வந்த பிராமணர்கலே ஒழிய வைதீகப் பிராமணர்கள் அல்ல. சில காலங்களுக்கு முன்னர் தென்னிலங்கையில் தெகிவளையிலும் மோதரையிலும் விஷ்ணுவுக்கு ஆலயங்கள் அமைத்தார்கள்.

மிகவும் சமீபத்தில் அஞ்சனேயர் வழிபாடு ஈழத்தில் பரவியது. சுன்னாகத்தில் ஒரு அஞ்சனேயரும் ,தெகிவளை களுபோவிலையில் இன்னொரு அஞ்சனேயரும் இருக்கிறார்கள். சின்மயா மிசனின் மேற்பார்வையில் நுவரெலியாவுக்கு போகும் வழியில் ரம்பொடையில் இன்னொரு உயரமான ஆஞ்சனேயர் இருக்கின்றார்.

சிவனுக்கு அடுத்தபடி ஈழத்தில் புகழ்பெற்றத்து தமிழ்க் கடவுளான முருகன் வழிபாடு. நல்லூர் கந்தசாமி முதல்க் கொண்டு இன்று சிங்கள இனமாக மாற்றப்பட்ட கதிர்காமம் கதிரகம தெய்யோ வரை பல முருகன் ஆலயங்கள் ஈழத்தில் சகல பாகங்களிலும் இருக்கின்றன.

மிகவும் சுருக்கமாக எழுதியிருக்கிறேன் பின்ணூட்டங்கள் மூலம் மேலதிக விபரங்களைத் தாருங்கள் பின்னாளில் உதவியாக இருக்கும்.

பட உதவி இணையம்.
This entry was posted on 9:33 PM and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

24 comments:

On July 27, 2009 at 10:22 PM , Anonymous said...

சிவ வழிபாடே ஈழத்தில் அதிகமாக இருந்தது உண்மையே. சற்றுக்காலங்களுக்கு முன்னர் வரை இந்து என்ற சொல் பழக்த்தில் இருக்கவில்லை. சைவமும் தமிழும் என்றிருந்தது. பின்னர் இந்துவை இழுத்து வந்து விட்டார்கள். சிவ வழிபாடாகிலும் முருக வழிபாடு ஆகிலும் இந்து என்பது எமக்கு ஏற்புடைய சொல் இல்லை. சைவமே எமக்கானது. ஆனால் மேட்டுக்குடிகள் தங்கள் தங்கள் சுயநலன்களுக்காக எல்லாவற்றையும் மாற்றுகின்றார்கள். இந்தியாவில் இந்துத்துவம் மிக பயங்கரமானது. எமது சைவம் அமைதியானது ஆனால் இந்துவை ஏன் எங்கட இடத்தை இழுத்து வருகின்றார்களோ தெரியவில்லை.

 
On July 28, 2009 at 1:28 AM , வந்தியத்தேவன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் அனானி.
உங்கள் கருத்துக்கள் மிகவும் சரியானவை. நாம் சைவர்களாக இருந்தபடியால் தான் இலங்கையில் பெரிதாக எந்த மதச் சண்டைகளும் வரவில்லை. யுத்தத்தினால் சில சண்டைகள் அரசியல்வாதிகளால் ஏற்படுத்தப்பட்டாலும் எந்த மதத்தையும் அரவணைத்துப்போனவர்களாக இலங்கையர்கள் இருக்கிறார்கள். தமிழ் மொழி பேசுபவர்கள் சைவர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களாக இருக்கிறார்கள் இவர்கள் என்றைக்கும் தம்மிடையே சண்டைபோட்டதில்லை. மதத்தை வைத்து அரசியல் செய்வது யார் என்பது உலகத்திற்க்கே தெரியும்.

சைவர்களாக இருக்கும் எம்மை இந்துக்களாக மாற்ற சில இந்தியச் சதிகாரர்களுடன் எம்மவர்களின் கழகங்களும் முன்னிற்க்கின்றன. அவற்றின் முதல்படிகளாகத்தான் ஆஞ்சனேயர் கோவில்களின் தோற்றத்தையும் கர்னாடக இசைக்கச்சேரி என்ற பெயரில் தெலுங்கு கீர்த்தனைகளை பாடும் கூட்டத்தினரின் செயல்பாடுகளும் இருக்கின்றன. தமிழிசையை இவர்கள் மறந்துவிட்டார்கள். சங்கராச்சாரியின் வாரிசான இவர்களுக்கு தமிழ் நீச பாசையாக மாறிவிட்டது.

 
On July 28, 2009 at 3:08 AM , சிவத்தமிழோன் said...

இது எனது வலைப்பூ. இயன்றவரை இந்துத்துவாவில் சீரழியும் தமிழர் பண்பாட்டைப்பற்றி விளக்கியுள்ளேன். இலங்கையில் சிவத்திரு மன்றம் போன்ற ஒருசில சைவ மன்றங்கள் சைவம் என்ற அருகிவரும் சொல்லை மீண்டும் தமிழ்சாதிக்கு ஊட்டும் பணியை முன்னெடுத்து வருவது கண்கூடு. எங்கு சைவநெறி சார்ந்த எழுத்துகள் மலர்ந்தாலும் ஓடி வந்து வாசிப்பது அடியேன் வழக்கம். தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன். நன்றி

http://www.sivathamiloan.blogspot.com/

 
On July 28, 2009 at 4:13 AM , கானா பிரபா said...

வணக்கம் வந்தியத்தேவன், நீங்கள் அழகாக தொடக்கி வைக்க முன் வந்த நண்பர்கள் பின்னூட்டம் வாயிலாக நல்ல கருத்துக்களைப் பகிர்கின்றார்கள். ஈழத்தின் பண்பாட்டுக் கோலங்களில் தற்போது வழிபாட்டு முறைகள் பற்றி உங்களிடமிருந்து இன்னும் எதிர்பார்க்கின்றேன், நானும் எழுதுகின்றேன்.

 
On July 28, 2009 at 5:38 AM , யசோதா.பத்மநாதன் said...

ஈழத்தின் தெய்வீக வாசம் ஈழத்து முற்றத்தில்!

யாழ்ப்பாணத்தின் ஆண்மாவைத் தொட்டுச் செல்கிறது பதிவு.

பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.அறிய ஆவல்.

 
On July 28, 2009 at 6:03 AM , M.Thevesh said...

இந்தியா புண்ணிய பூமி என்ச்சிலர் கூறு
வதுண்டு சில வருடங்கட்கு முன்பு எனது பாட்டி சொல்வார் அது புண்ணிய
பூமி ஆனால் அங்கு பிறப்பவர்கள் இரா
ட்சதகணங்கள். இலங்கை இராட்சதபூமி
தான் ஆனால் இங்கே பிறப்பவர்கள் எல்
லோரும் தெய்வ கணங்கள் என்பார்.என்
எண்ணம் அவர் முளு இலங்கையும்
சொல்லியிருக்க மாட்டார் வடகிழக்கு
மட்டுமே அதற்குத்தகுதி உண்டு என்ப
தாகும்.

 
On July 28, 2009 at 6:08 AM , M.Thevesh said...

இந்தியா புண்ணிய பூமி எனச்சிலர் கூறு
வதுண்டு சில வருடங்கட்கு முன்பு எனது பாட்டி சொல்வார் அது புண்ணிய
பூமி ஆனால் அங்கு பிறப்பவர்கள் இரா
ட்சதகணங்கள். இலங்கை இராட்சதபூமி
தான் ஆனால் இங்கே பிறப்பவர்கள் எல்
லோரும் தெய்வ கணங்கள் என்பார்.என்
எண்ணம் அவர் முளு இலங்கையும்
சொல்லியிருக்க மாட்டார் வடகிழக்கு
மட்டுமே அதற்குத்தகுதி உண்டு என்ப
தாகும்.

 
On July 28, 2009 at 8:04 AM , வர்மா said...

வந்தியத்தேவரே கீரிமலை நகுலேஸ்வரரை விட்டுவிட்டீர்களே.கொழும்புக்கோயில்கள் சிலவற்றில் வணங்குவதற்கு மனம் வருகுதில்லை.சைவத்தை அழிப்பதற்காகவே சிலர் சங்கம் நடத்துகிறார்கள்.
அன்புடன்
வர்மா

 
On July 28, 2009 at 10:27 AM , வந்தியத்தேவன் said...

//சிவத்தமிழோன் said...
இது எனது வலைப்பூ. இயன்றவரை இந்துத்துவாவில் சீரழியும் தமிழர் பண்பாட்டைப்பற்றி விளக்கியுள்ளேன். இலங்கையில் சிவத்திரு மன்றம் போன்ற ஒருசில சைவ மன்றங்கள் சைவம் என்ற அருகிவரும் சொல்லை மீண்டும் தமிழ்சாதிக்கு ஊட்டும் பணியை முன்னெடுத்து வருவது கண்கூடு. எங்கு சைவநெறி சார்ந்த எழுத்துகள் மலர்ந்தாலும் ஓடி வந்து வாசிப்பது அடியேன் வழக்கம். தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன். நன்றி//

வணக்கம் சிவத்தமிழோன் அவர்களே பெயரே அழகாக இருக்கின்றது. ஈழத்துமுற்றத்தில் சைவசமயத்தைப் பற்றிமட்டுமல்ல ஏனைய சமய விடயங்களை மற்றவர்கள் எழுதவும் வேண்டும். இந்துத்துவாவினால் இந்தியா சீரழிவதுபோதாமல் இங்கேயும் சிலர் இந்துத்துவாவை பரப்பமுயல்கின்றார்கள். இந்தியாவில் சைவம் அருகிக்கொண்டே போகின்றது இல்லையென்றால் சிதம்பரத்தில் தேவாரம் பாடுவது குற்றம் என்பார்களா?

ஈழத்தில் சைவம் என்பது இயக்கர் நாகர் காலத்திலையே தொடங்கிவிட்டது. இதுபற்றி இன்னொரு பதிவில் பார்ப்போம். அத்துடன் ஈழத்தில் தான் பத்தினித் தெய்வவழிபாடும் முதன்முறை ஆரம்பித்ததாக வரலாறுகள் கூறுகின்றது. கண்ணகிக்கும் திரெளபதிக்கும் சீதைக்கும் கோயில்கள் இலங்கையில் உண்டு.

 
On July 28, 2009 at 10:34 AM , வந்தியத்தேவன் said...

// கானா பிரபா said...
வணக்கம் வந்தியத்தேவன், நீங்கள் அழகாக தொடக்கி வைக்க முன் வந்த நண்பர்கள் பின்னூட்டம் வாயிலாக நல்ல கருத்துக்களைப் பகிர்கின்றார்கள். ஈழத்தின் பண்பாட்டுக் கோலங்களில் தற்போது வழிபாட்டு முறைகள் பற்றி உங்களிடமிருந்து இன்னும் எதிர்பார்க்கின்றேன், நானும் எழுதுகின்றேன்.//

ஈழத்துமுற்றம் என்பது வெறுமே எங்கள் வட்டாரச் சொற்களுடன் மட்டுமல்லாது எம் பண்பாட்டுக்கோலங்களையும் கலாச்சார விழுமியங்களையும் வெளிப்படுத்துவதாக இருக்கவேண்டும். எனக்கும் உங்களுக்கும் சைவத்தைப் பற்றித் தெரிந்ததுபோல் சிலருக்கு கிறிஸ்தவத்தையும் இஸ்லாத்தையும் பற்றி நிறையத் தெரிந்திருக்கலாம் அவர்கள் அந்தக் கலாச்சார சமய அனுட்டானங்கள் பற்றி எழுதினால் ஈழத்துமுற்றம் முழுமையடையும்.

வழிபாட்டுமுறைகள் எனவரும்போது சிறுதெய்வ வழிபாடுகள் முக்கியம் பெறுகின்றன. வைரவர், வீரபத்திரர், அண்ணமார், காளி, இடும்பன் என பல சிறு தெய்வங்களை அன்றிலிருந்து இன்றுவரை நம்மவர்களால் வழிபடப்படுகின்றது. இவற்றைப் பற்றியும் எழுதவேண்டும்/ எழுதுங்கள்.

 
On July 28, 2009 at 10:36 AM , வந்தியத்தேவன் said...

//மணிமேகலா said...
ஈழத்தின் தெய்வீக வாசம் ஈழத்து முற்றத்தில்!

யாழ்ப்பாணத்தின் ஆண்மாவைத் தொட்டுச் செல்கிறது பதிவு.

பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.அறிய ஆவல்.//
ஏன் ஆச்சி நீங்கள் கோயிலுக்கு போறதில்லையோ நீங்களும் எழுதலாம் தானே. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அனுபவம் இருக்கும்.

 
On July 28, 2009 at 10:40 AM , வந்தியத்தேவன் said...

// Thevesh said...
இந்தியா புண்ணிய பூமி எனச்சிலர் கூறுவதுண்டு சில வருடங்கட்கு முன்பு எனது பாட்டி சொல்வார் அது புண்ணியபூமி ஆனால் அங்கு பிறப்பவர்கள் இராட்சதகணங்கள். இலங்கை இராட்சதபூமி தான் ஆனால் இங்கே பிறப்பவர்கள் எல்லோரும் தெய்வ கணங்கள் என்பார்.என் எண்ணம் அவர் முளு இலங்கையும் சொல்லியிருக்க மாட்டார் வடகிழக்கு மட்டுமே அதற்குத்தகுதி உண்டு என்பதாகும்.//

தவேஷ் உங்கள் கருத்துகள் இன்றைய காலத்துக்கு ஏற்றதாக இருக்கலாம். இந்தியா இராட்சத பூமியாக மாறக்காரணம் அரசியல்வாதிகளே தவிர மக்கள் அல்ல. அவர்கள் மக்களை நன்கு ஏமாற்றித் தங்கள் காரியங்களை முடிக்கிறார்கள். எமக்கும் இந்தியாவைப்போல் ஜாதி ஓட்டுக்களோ, மத ஓட்டுக்களோ இல்லை. இந்தியா வெளிப்பார்வைக்கு ஒற்றுமையாக இருந்தாலும் உள்ளே ஒற்றுமையில்லை பக்கத்துக்கு மாநிலத்துக்கு தண்ணீர் கொடுக்காத நாட்டில் எப்படி நல்லிணக்கம் இருக்கமுடியும். கிரிக்கெட்டில் மட்டும் இந்தியர்களாக இருப்பவர்கள் ஏனைய விடயங்களில் தமிழன், மலையாளி, தெலுங்கன், வடக்கத்தியான், கன்னடன் எனப் பிரிந்தே இருக்கிறார்கள்.

 
On July 28, 2009 at 10:44 AM , வந்தியத்தேவன் said...

// வர்மா said...
வந்தியத்தேவரே கீரிமலை நகுலேஸ்வரரை விட்டுவிட்டீர்களே. கொழும்புக்கோயில்கள் சிலவற்றில் வணங்குவதற்கு மனம் வருகுதில்லை. சைவத்தை அழிப்பதற்காகவே சிலர் சங்கம் நடத்துகிறார்கள். //

நகுலேஸ்வரரை மறக்க காரணம் கீரிமலையையே நாம் மறந்துபோனோம். எப்படி முதல்ப் பதிவில் பிரபா மாவிட்டபுரம் கந்தசாமியை மறந்ததாரோ அதேபோல் நானும் பக்கத்திலை இருக்கிற நகுலேஸ்வரரை மறந்துபோனேன். மாருதப்புரவீக வல்லியின் குதிரை முகம் நீங்கிய தலமல்லவா.

கொழும்புக்கோயில்கள் பற்றி எழுதினால் விசர் தான் வரும். அதுவும் விசேட நாட்களில் இவர்கள் செய்யும் அலும்புகள் தாங்கமுடியாது.

 
On July 28, 2009 at 1:31 PM , மலைநாடான் said...

//திருமந்திரம் தந்த சிவமூலரால் சிவபூமி//

வந்தி!
திருமந்திரம் தந்தவர் திருமூலர். அவரைச் சிவ மூலர் என அழைப்பினும் தவறில்லை. ஆனால் திருமூலர் திருமந்திரம் என்பதுதான் மிகப் பொருத்தமாக இருக்கும்.
மற்றும்படி நனனறாக எழுதுகின்றீர்கள் தொடர்ந்து எழுதுங்கள் படிக்க ஆவலாக இருக்கின்றோம்.
சைவத்தைப் பற்றி தல பிரபா சொன்னாச் சரியாத்தான் இருக்கும் :)

 
On July 28, 2009 at 2:03 PM , மலைநாடான் said...

தமிழீழ வழிபாட்டு மரபும், சக்திவழிபாடும்.

 
On July 28, 2009 at 3:44 PM , யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

யாழ் பெருமாள் கோவிலை மறந்துவிட்டீர்கள். அதன் சுற்றாடலில்
உள்ள பல நகை செய்வோர் நெற்றியில்
நாமத்துடன் கண்டுள்ளேன்.
எங்களுக்கு விஸ்ணு ,பெருமாள்
என்றால் ஞாபகம் வருவது இவரே!!
பொன்னாலையைத் அல்பிறட் துரையப்பாவுக்குப்
பின்பே தெரியும்.

 
On July 28, 2009 at 5:00 PM , யசோதா.பத்மநாதன் said...

//ஈழத்துமுற்றம் என்பது வெறுமே எங்கள் வட்டாரச் சொற்களுடன் மட்டுமல்லாது எம் பண்பாட்டுக்கோலங்களையும் கலாச்சார விழுமியங்களையும் வெளிப்படுத்துவதாக இருக்கவேண்டும். எனக்கும் உங்களுக்கும் சைவத்தைப் பற்றித் தெரிந்ததுபோல் சிலருக்கு கிறிஸ்தவத்தையும் இஸ்லாத்தையும் பற்றி நிறையத் தெரிந்திருக்கலாம் அவர்கள் அந்தக் கலாச்சார சமய அனுட்டானங்கள் பற்றி எழுதினால் ஈழத்துமுற்றம் முழுமையடையும்.//

உண்மை.மடு மாதா கோயிலும் கொழும்பில் இருக்கிற அந்தோனியார் கோயிலும்,பள்ளிவாசல் வழிபாடுகளும்,மக்கா பயணமும் கூட இவற்றுக்குச் சமனான பெறுமதி கொண்டவை.அருள் கடாட்சம் நிரம்பியவை. அவற்றின் மகிமைகளும் வெளிக்கொணரப் பட வேண்டியவை.

எனக்கு மதங்கள் கூறும் தத்துவங்களில் தான் ஈடுபாடு அதிகம் வந்தி.எனினும் வழிபாட்டிடங்கள் தரும் தெய்வீக சூழல் மனதை எப்போதும் வசீகரிக்கும்.

 
On July 28, 2009 at 6:37 PM , வந்தியத்தேவன் said...

// மலைநாடான் said...
//திருமந்திரம் தந்த சிவமூலரால் சிவபூமி//

வந்தி!
திருமந்திரம் தந்தவர் திருமூலர். அவரைச் சிவ மூலர் என அழைப்பினும் தவறில்லை. ஆனால் திருமூலர் திருமந்திரம் என்பதுதான் மிகப் பொருத்தமாக இருக்கும். //

மாற்றிவிட்டேன் மலைநாடன் நன்றிகள் சிலவேளைகளில் எழுதும்போது சில எழுத்துப்பிழைகள் வருவதுண்டு. உங்கள் சக்திவழிபாடு பதிவை இங்கே மீள் பதிவு செய்யவும்.

 
On July 28, 2009 at 6:40 PM , வந்தியத்தேவன் said...

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
யாழ் பெருமாள் கோவிலை மறந்துவிட்டீர்கள். அதன் சுற்றாடலில் உள்ள பல நகை செய்வோர் நெற்றியில் நாமத்துடன் கண்டுள்ளேன். எங்களுக்கு விஸ்ணு ,பெருமாள் என்றால் ஞாபகம் வருவது இவரே!! பொன்னாலையைத் அல்பிறட் துரையப்பாவுக்குப் பின்பே தெரியும்.//

யோகன் அண்ணே பெருமாள் கோவிலை மறந்துதான் போனேன். நகைசெய்பவர்களை பத்தர்கள் என்பார்கள் அவர்கள் வைஷ்ணவர்களா? பொன்னாலையை எனக்கும் அல்பிறட் துரையப்பாவிற்க்குப் பின்னரே தெரியும்.

 
On July 28, 2009 at 6:50 PM , வந்தியத்தேவன் said...

//மணிமேகலா said...
உண்மை.மடு மாதா கோயிலும் கொழும்பில் இருக்கிற அந்தோனியார் கோயிலும்,பள்ளிவாசல் வழிபாடுகளும்,மக்கா பயணமும் கூட இவற்றுக்குச் சமனான பெறுமதி கொண்டவை.அருள் கடாட்சம் நிரம்பியவை. அவற்றின் மகிமைகளும் வெளிக்கொணரப் பட வேண்டியவை.

எனக்கு மதங்கள் கூறும் தத்துவங்களில் தான் ஈடுபாடு அதிகம் வந்தி.எனினும் வழிபாட்டிடங்கள் தரும் தெய்வீக சூழல் மனதை எப்போதும் வசீகரிக்கும்.//

மணி ஆச்சி சகல மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன. இடையில் வந்த சில மதத்தலைவர்களும் அரசியல்வாதிகளும் தான் சண்டை ஏற்படுத்துகிறார்கள். ஆனால் மக்களிடையே புரிந்துணர்பு அதிகமாக இருப்பதால் பிரச்சனைகள் ஏற்படுவதில்லை. கொழும்பு கொச்சிக்கடை அந்தோணியார் கோவிலுக்கு அதிகமாக சைவர்களும் பெளத்தர்களும் செல்வார்கள். பக்கத்தில் கதிரேசன் வீதியில் அன்னை வேளாங்கன்னி கோயில் இருக்கிறது, சக்திவாய்ந்த கோயில் என்பார்கள். தமிழ்த் தைப்பொங்கலுக்கு அங்கே பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள்.

 
On July 31, 2009 at 2:14 AM , யசோதா.பத்மநாதன் said...

ஒரு வரலாற்றுத் தகவல்,

'ராஜராஜனின் இன்னொரு பெயரால் பதவியாவில் இருந்த கோயில் ஒன்று ரவிகுல மாணிக்க ஈஸ்வரம் எனப் பட்டது.அத்தாக்கட என்ற இடத்தில் உத்தமசோழ ஈஸ்வரம் என்ற கோயிலும், மதிரிகிரியாவில் பண்டித சோழ ஈஸ்வரமும் இருந்தன.சூடுதலான கோயில்கள் பொலநறுவையில் இருந்தன.அவற்றுள் முக்கியமானது ராஜேந்திய சோழனுடய தாயாரின் பெயரைப் பெற்றிருந்த வானவன் மாதேவி ஈஸ்வரம்.....'

ஆதாரம்;இலங்கையில் தமிழர், கா.இந்திரபாலா,குமரன் புத்தக இல்லம்,கொழும்பு,2006, பக்.272-273.

 
On July 31, 2009 at 2:44 AM , வந்தியத்தேவன் said...

//மணிமேகலா said...
அவற்றுள் முக்கியமானது ராஜேந்திய சோழனுடய தாயாரின் பெயரைப் பெற்றிருந்த வானவன் மாதேவி ஈஸ்வரம்.....'//

நன்றிகள் ஆச்சி. இந்த ஈஸ்வரத்தின் பெயரைத்தான் தேடிக்கொண்டு திரிந்தேன். ராஜராஜன் பற்றிய ஒரு சின்ன சர்ச்சை என்னுடைய வலையில் போய்க்கொண்டிருக்கின்றது. அதற்காக இந்தச் சிவன் கோவிலின் பெயர் தேவைப்பட்டது.

 
On July 31, 2009 at 3:09 AM , யசோதா.பத்மநாதன் said...

ரவிகுல மாணிக்க ஈஸ்வரம் பற்றிய மேலதிக தகவல்; அதே நூலில் இருந்து,

'இலங்கையில் சோழர் கட்டிடப் பாணியில் அமைக்கப் பட்ட கட்டிடங்களுள் மிகச் சிறந்தது வானவன் மாதேவி ஈஸ்வரமாகும்.அது இலங்கையில் வளர்ந்த தமிழரின் கட்டிடக் கலை வரலாற்றில் மட்டுமன்றி,பொதுப்படப் பொலநறுவையில் வளர்ந்த கட்டிடக் கலையின் வரலாற்றிலும் நிகரற்றதாக விளங்குகிறது.இதற்குக் காரணம் பொலநறுவையில் உள்ள கட்டிடங்கள் அனைத்திலும் இன்று முழுமையாய்க் கல்லினால் கட்டப் பட்டுக் காணப்படும் ஒரே ஒரு கட்டிடம் இதுவாக இருப்பதே.கருங்கல்லும் சுண்ணக் கல்லும் கலந்து கட்டப்பட்ட இக் கட்டிடம் தென்னிந்தியாவில் உள்ள சோழர்காலக் கட்டிடங்களின் சிறப்பியல்புகள் பலவற்றை உடையதாக விளங்குகிறது.இக்கோயிலுக்குரிய இன்னொரு தனிச் சிறப்பியல்பு என்னவெனில் இன்று இலங்கையிலுள்ள மிகப் பழைய, முழுவதுமாகப் பேணப்பட்டுள்ள சைவக் கோயிலாக இது விளங்குவதாகும்.இதனால்,சோழர் ஆட்சியின் போது கட்டப்பட்ட பல நிறுவனங்களுக்குள் இது மட்டுமே இன்று அழியாது எஞ்சியுள்ளது எனலாம்.'

பக்;273.

மகிழ்ச்சி வந்தி.

 
On July 31, 2009 at 4:05 AM , யசோதா.பத்மநாதன் said...

//ரவிகுல மாணிக்க ஈஸ்வரம் பற்றிய மேலதிக தகவல்; அதே நூலில் இருந்து,//

தவறுக்கு வருந்துகிறேன்.

ரவிகுல மாணிக்க ஈஸ்வரமல்ல,இது வானவன் மாதேவி ஈஸ்வரம்.