Author: கானா பிரபா
•2:18 AM




இன்றைய திருவிழாப் பதிவில், சிவயோக சுவாமிகள் அருளிச் செய்த "நல்லூரான் திருவடியை என்ற பாடலை" இன்னிசை வேந்தர் பொன்.சுந்தரலிங்கம் அவர்கள் பாடக் கேட்கலாம். தொடர்ந்து பெயர் குறிப்பிட விரும்பாத சிட்னி அன்பர் எழுதித் தந்த "சும்மா இரு" என்ற ஆக்கமும் இடம் பெறுகின்றது. இப்பதிவில் இடம்பெறும் புகைப்படங்கள் இந்த ஆண்டு இடம்பெற்ற திருக்கார்த்திகைத் திருவிழாவில் யாழில் இருக்கும் நண்பரால் அனுப்பி வைக்கப்பட்டதாகும்.



யாழ்ப்பாணத்தில் வெள்ளைக்கார சுவாமிகள் ஒருவர் பல வருடங்களுக்கு முன்னர் இருந்தார். அவருடைய கையிலே "சும்மா இரு" என்ற தமிழ் வாசகம் பச்சை குத்தியிருந்தது. பலரும் அதைப்பற்றி வியப்பாகப் பேசினார்கள். "சும்மா இரு " என்றால், ஒருவேலையுமே செய்யாமல் இருப்பதா என்ற சந்தேகம் எல்லாலோருக்குமே! அந்த சுவாமிகள் யோகர் சுவாமிகளின் சீடர்.

யோகர் சுவாமிகள் தன்னிடம் வருபவர்களைப் பார்த்து "சும்மா இரு" என்று சொல்வது வழக்கம். ஒவ்வொருவரும் ஏதோ ஒரு பிரச்சனையோடு அல்லது மனக்கவலையோடு தான் அவரிடம் வருவார்கள். "சும்மா இரு" என்று சுவாமிகள் சொல்வதை அவரவர் தமது மன நிலைக்கேற்ப ஏற்றுக் கொண்டு திருப்தியடைவார்கள் என்று சொல்வார்கள். "சும்மா இரு என்ற சொற்றொடர் அருணகிரி நாதரின் "கந்தர் அநுபூதியிலே" வருகின்றது.

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல் அற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றுமே அறிந்திலனே.

என்பது பாடல். "சொல் அற" என்பது தான் "சும்மா இரு" என்பதன் விளக்கம் என்று தெரிகிறது.

யோகர் சுவாமிகள் தனது குருவான சொல்லப்பா சுவாமிகளை நினைத்துப் பாடும் பாடல் ஒன்றிலே "எண்ணம் யாவும் இறந்திட வேண்டும், என் குருபர புங்கவ சிங்கனே" என்று பாடுகிறார்.

சுவாமிகள், மனதிலே பதியும் வண்ணம் சுருங்கிய சொற்களில் ஆழமான விரிந்த கருத்துக்களைக் கூற வல்லவர். "சொல் அற" என்றால் மனதிலே யோசனைகள் இல்லாமல் , மனதை வெறுமையாக வைத்திருக்கும் நிலை" - சும்மா இருத்தல் என்பது இதுதான் போலும்.

மனதை எப்படி வெறுமையாக வைத்திருப்பது?

சமயத் தலைவர்களும், தத்துவ ஞானிகளும், சிந்தனையாளர்களும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தக் கேள்விக்குத் தான் விடை தேடியபடி இருந்திருக்கின்றார்கள். இன்றும் மனம் பற்றிப் பலரும் எழுதியும், பேசியும் வருவதைப் பார்க்கலாம். சமீபத்திலே வாழ்ந்த தத்துவஞானி ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் "மனம்" பற்றி நிறையவே ஆராய்ச்சி செய்திருக்கின்றார்.

இராமகிருஷ்ண பரமஹம்சர் மனதைப் பற்றி சுவையான கருத்தொன்றைச் சொல்லி இருக்கின்றார். அவர் மனதை ஒரு ஸ்ப்ரிங் மெத்தைக்கு ஒப்பிடுகின்றார். ஸ்ப்ரிங் மெத்தையில் ஒருவர் உட்கார்ந்தால், தற்காலிகமாக ஸ்பிரிங் கீழே அமுங்கி விடும். அவர் மெத்தையிலிருந்து எழுந்தவுடன் ஸ்பிரிங் பழையபடி மேலே வந்துவிடும். எங்களுடைய மனமும் இப்படித் தான் என்கின்றார்.

பிரார்த்தனை செய்யும் போதோ அல்லது ஒரு சத் சங்கத்திலே அமர்ந்திருக்கும் போதோ நமது எண்ணங்கள் யாவும் அடங்கியிருக்கும் பின்னர் அலைபாயத் தொடங்கிவிடும். "சிவத்தியானம் என்னும் மருந்தைச் சாப்பிட்டுவா, மனக்குரங்கின் பிணி மாறும்" என்று யோகர் சுவாமிகள் வழி காட்டுகின்றார்.

சிவபுராணத்திலே மணிவாசகப் பெருமானும் "இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க" என்று அதே கருத்தைப் பாடுகின்றார். இவ்வேளையில் "மனமே கணமும் மறவாதே ஈசன் மலர்ப்பதத்தை" என்ற திரையிசைப்பாடல் நினைவுக்கு வருகின்றது.


எங்களைப் போன்ற சாதாரண மக்களுக்கு மனதை அலைய விடாமல் இருப்பது சுலபமல்ல. நாங்கள் ஆசாபாசங்களினால் கட்டுண்டு வாழ்கின்றோம். வயது ஏற ஏறக் கவலைகள் அதிகரிக்கின்றனவே அன்றிக் குறைவதாக இல்லை. எத்தனை நூல்களை வாசிக்கின்றோம்! எத்தனை பக்திப் பாடல்களைப் பாடுகின்றோம்! கேட்கிறோம்! எத்தனை பெரியோர்களின் பேச்சுக்களைக் கேட்டு மகிழ்கின்றோம்! ஆனால் மனமோ ஸ்ப்ரிங் மெத்தை போலத்தான் இருக்கின்றது!.

யோகர் சுவாமிகள் "சும்மா இரு" என்று சொல்லும் போது "கடமையைச் செய், உன்னுடைய வேலைகளைச் செய், ஆனால் செய்யும் போது பற்றில்லாமல் செய்" என்கிறார். பிரச்சனைகளைக் கண்டு பதற வேண்டாம். அமைதியாக இருக்கப் பழகு என்கிறார். தாமரை இலைத் தண்ணீர் போல் பற்றில்லாமல் வாழப்பழகு என்பது அவர் கருத்து. எங்களை அலைக்கழிக்கும் அகந்தை, அவா, கோபம், என்பனவற்றை நீக்கி வாழப் பழகு என்று வழிகாட்டுகின்றார். வள்ளுவரும்,
"பற்றுக பற்றற்றான் பற்றினை, அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு." என்கிறார்.

உகந்து மனங் குவிந்து ஒன்றுக்கும் அஞ்சாது
அகந்தை அவா வெகுளி அகற்றி - சகம் தனிலே
தாமரையிலை தண்ணீர் போல் சாராமல் சார்ந்து நற்
சேமமொடு வாழ்வாய் தெளிந்து.
(நற்சிந்தனை - சிவயோக சுவாமிகள்)

கடந்த 2007 ஆண்டு நாட்டுச் சூழ்நிலை காரணமாக நல்லை முருகன் தேரோட்டம் இடம்பெறவில்லை. 2008 ஆண்டு தேர்த்திருவிழாவிற்காகத் திருமுருகன் ரதத்தை வெள்ளோட்டம் விட்ட நிகழ்வு கடந்த செப்டெம்பர் 3 ஆம் திகதி, 2008 இல் நிகழ்ந்தது. அதன் படத்தையே மேலே காண்கின்றீர்கள்

நன்றி: "சும்மா இரு" என்ற ஆக்கத்தை எழுதியனுப்பிய சிட்னி வாழ் அன்பர்.
புகைப்படங்கள் உதவி: பெயர் குறிப்பிட விரும்பாத நண்பர்


இந்த ஆண்டின் நல்லைக்கந்தன் ஆலய 19 ஆம் பூஞ்சப்பறத் திருவிழாப்படங்களை அனுப்பிய கிழவித்தோட்டம் செந்தூரனுக்கு நன்றிகள்.

















Author: கானா பிரபா
•3:17 PM

இன்றைய திருவிழாப் பதிவில் சிவயோக சுவாமிகள் அருளிச்செய்த இரண்டு நற்சிந்தனைப் பாடல்கள் இடம்பெறுகின்றன. அத்தோடு இந்த ஆண்டு நல்லைக் கந்தனாலயத்தில் நிகழ்ந்த திருமஞ்சத் திருவிழாப் படங்களும் அலங்கரிக்கின்றன.

முதலில் "ஈசனே நல்லூர் வாசனே" என்ற பாடல் இசைவடிவிலும் மறைந்த திருமதி நாகேஸ்வரி பிரம்மானந்தா அவர்கள் பாடக் கேட்கலாம். பல வருடங்களுக்கு வெளிவந்த இப்பாடலைப் பாடிய திருமதி நாகேஸ்வரி பிரம்மானந்தா, அவர் காலத்தில் "ஈழத்தின் சுப்புலஷ்மி" என்று சிறப்பிக்கப்பட்டாராம்.

Get this widget | Share | Track details


ஈசனே நல்லூர் வாசனே
இனிய வேல் முருகா
உனை நம்பினேன் நான்
ஈசனே நல்லூர் வாசனே

பண்ணினேர் மொழியாய்
பாலசுப்ரமண்யா
என்னுடலம் எல்லாம்
நண்ணும் வண்ணம் வா வா

ஈசனே நல்லூர் வாசனே
இனிய வேல் முருகா
உனை நம்பினேன் வா வா

தாசனான யோகசுவாமி
சாற்றும் பாவை
கேட்டுக் கிருபை கூர்ந்து
வாட்டம் தீர்க்க வா வா

ஈசனே நல்லூர் வாசனே
இனிய வேல் முருகா
உனை நம்பினேன் நான்
ஈசனே நல்லூர் வாசனே



அடுத்து வருகின்றது "நில்லடா நிலையிலென்று சொல்லுது" என்னும் தலைப்பில் அமைந்த நற்சிந்தனைப் பாடல்.

ஓம்நாம் நாமென்று ஒலிக்குது
ஞாதுருஞானம் போயோடி ஒளிக்குது

நமக்கு நாமே துணையென்று விழிக்குது
நாதாந்த முடியிலேறிக் குளிக்குது

வேதாந்தசித்தாந்தஞ் சமமென்று களிக்குது
மாதாபிதாவை மறவாதிருக்க மதிக்குது

மூதாதைமார் சொல்நெஞ்சில் மதிக்குது
சூதான வார்த்தைதன்னைத் தொலைக்குது

நில்லடா நிலையிலென்று சொல்லுது
நீயேநான் என்று சொல்லி வெல்லுது

உல்லாச மாயெங்குஞ் செல்லுது
உண்மை முழுதுமென்று சொல்லுது

நல்லூரில் செல்லப்பன் என்னப்பன்
நானவரைக் கேட்கும் விண்ணப்பம்


நன்றி: சிவயோக சுவாமிகள் அருளிச் செய்த நற்சிந்தனைப் பாடல்கள்

நல்லைக் கந்தன் மஞ்சத் திருவிழாப் படங்கள்: பெயர் குறிப்பிட விரும்பாத யாழ்ப்பாணத்து அன்பர் ஒருவர்.


நல்லைக்கந்தன் ஆலய இன்றைய ஆண்டின் பதினெட்டாம் பத்தொன்பதாம் திருவிழாப் படங்களை அனுப்பிய கிழவித்தோட்டம் செந்தூரனுக்கு நன்றிகள்.

பதினெட்டாம் திருவிழாப் படங்கள்











பத்தொன்பதாம் திருவிழாப் படங்கள்


Author: Unknown
•9:43 AM
'சினேகிதி' போட்ட 'வெள்ளி பார்ப்பம் வாங்கோ' பதிவுதான் இந்தப் பதிவுக்குத் தூண்டி. அதனால சினேகிதிக்கு முதற்கண் நன்றி. இந்த வெள்ளி பார்த்தல் என்கிற சொல்லாடல் இன்னும் ஒரு கோணத்திலும் பயன்படுவதுண்டு அல்லவா? அது பற்றின பதிவுதான் இது.

இந்த ‘வெள்ளி பார்த்தல்' என்ற சொல்லை அடிக்கடி ஆசிரியர்களிடம்தான் நான் கேட்டிருக்கிறேன். சில சமயங்களில் வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தும்போது பாடத்தில் மனம் லயிக்காமல் வேறெங்காவது மனம் ஓடிவிடும். எப்படித்தான் கண்டுபிடிப்பார்களோ தெரியாது, சரியாகக் கண்டுபிடிப்பார்கள் ஆசிரியர்கள். ஏதாவது கேள்வியைக் கேட்க, நாங்கள் முழிக்க, ‘வகுப்பில பாடத்தைக் கவனிக்காமல் என்ன வெள்ளி பாத்தனியே' என்பது பல ஆசிரியர்கள் சர்வசாதாரணமாகப் பயன்டுத்தும் ஒரு திட்டு வசனம். அதிலும் எங்களுக்கு கணிதம் படிப்பித்த ஆசிரியர் ஒருவர் ‘எத்தினை வெள்ளியெண்டு எண்ணியாச்சே' என்று கேட்டு நக்கல் செய்வார்.

அதாவது இந்த சந்தர்ப்பங்களில் 'வெள்ளி பார்த்தல்' என்பது நிகழ்காலத்தில் நடப்பதை விடுத்து வேறேதாவதைப் பார்ப்பது என்கிற பொருளில் பயன்படுகிறது. கிட்டத்தட்ட இதே பொருளில் ஏமிலாந்துதல், வாய் பார்த்தல், பிராக்குப் பார்த்தல் (பராக்குப் பார்த்தல்) போன்ற சில சொற்களையும் பயன்படுத்துவார்கள். உதாரணத்துக்கு ஏதாவது ஒரு பாடத்தில் குறைந்த மதிப்பெண் பெற்ற பிள்ளை வீட்டில் அப்பா அல்லது அம்மாவிடம் ‘அது எங்களுக்கு படிப்பிக்கேல்லை' என்று காரணம் சொல்கிறது என்று வைத்துக் கொள்வோம். (அடிக்கடி நான் சொன்ன காரணங்களில் இது ஒன்று). அப்பா அல்லது அம்மாவிடமிருந்து இப்படியான பதில்களை எதிர்பார்க்கலாம்:

'உன்னை நம்பேலாது... நீ பாடம் படிப்பிக்கேக்கை எங்கையாவது வெள்ளி பாத்துக் கொண்டு இருந்திருப்பாய்'
அல்லது
‘நீ எங்கையாலும் ஏமிலாந்திக்கொண்டு இருந்திட்டு ஏன் படிப்பிக்கேல்லை எண்டு பொய் சொல்லுறாய்'
அல்லது
‘அவயள் படிப்பிச்சிருப்பினம். நீ வகுப்பில எங்கயாலும் வாய் பார்த்துக் கொண்டு இருந்திருப்பாய்'
அல்லது
'பாடம் நடக்கேக்கை எங்கையாலும் பராக்குப் பாத்துக்கொண்டு இருந்திட்டு, பொய்ச்சாட்டு சொல்லிறியோடா?'

மேற்படி சொற்களை வேறு வேறு சந்தர்ப்பங்களில் கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசமான அர்த்தங்களில் பயன்படுத்துவார்கள். பகல் கனவு காணுதல் என்பது கூட ‘வெள்ளி பார்த்தல்' என்பதற்கு கிட்டத்தட்ட நெருக்கமான ஒரு சொல்லாடல்தான். சினேகிதி சொன்னது போல வெள்ளி (நடசத்திரம்) பார்த்தல் என்பது அழகான பல நினைவுகளை மீட்டித்தரும் ஒரு அனுபவம். அதுவும் விஞ்ஞான பாடத்தில் இந்த நட்சத்திரக் கூட்டங்கள் பற்றிப் படித்த உடனே அந்த வயதில் இருக்கும் பிள்ளைகளுக்கு இது ஒரு இரவுப் பொழுதுபோக்காகிவிடும். அப்படி இரவில் பார்க்கவேண்டிய வெள்ளியை, பகலில் பார்க்கும், இல்லாத ஒன்றில் கவனத்தைச் சிதறவிடும் செய்கையைத்தான் வெள்ளி பார்த்தல் என்று சொல்லுவார்கள்.

வெள்ளி பார்த்தல் பற்றிய சுவாரஸ்யமான அனுபவங்கள்
ஒரு முறை எங்களின் விஞ்ஞான ஆசிரியர் திரவியநாதன் ஏனோ திடீரென்று மகாபரதத்தில் இருந்து ஏகலைவன் கதை சொல்லிக் கொண்டிருந்தார். ஏற்கனவே பலமுறை கேட்ட, வாசித்த கதை என்பதால் நான் வெள்ளி பார்க்க ஆரம்பித்து விட்டேன். அந்தக் கதையில் ஏகலைவன் ஒரு நாயின் வாயை அம்பு எய்து கட்டிப் போடுவது பற்றி அவர் சொல்வது காதில் விழுந்துகொண்டிருந்தது. நான் வேறு எதையோ சிந்தித்துக் கொண்டிருக்க, அதைக் கண்டுபிடித்துவிட்டார். பெயர் சொல்லி அழைத்து ‘நான் என்ன சொல்லிக் கொண்டிருந்தனான்' என்று (நல்ல விதமாகத்தான்) கேட்டார். நானும் ‘வெள்ளி பார்த்தல்' குழப்பப்பட்டதால் குழம்பிப் போய் ‘ஆரோ ஒருத்தன் நாய்க்கு (__________)' என்று கொஞ்சம் இரட்டை அர்த்தமாகச் சொல்ல அதற்கு வகுப்பு என்னைப் பார்த்துச் சிரித்த சிரிப்பும், வெள்ளி பார்த்தலை வைத்து திரவியநாதன் அறுத்த அறுவையும் மறக்காது.

இன்னொரு சம்பவம் கனடாவில் நடந்தது. இங்கே சனிக்கிழமைகளில் கிரிக்கெட் விளையாடுவதுண்டு. அப்படி ஒருநாள் விளையாடிக் கொண்டிருந்த போது நான் ஒரு சுலபமான பிடியை ‘வெள்ளி பார்த்த' காரணத்தால் விட்டுவிட்டேன். எங்களின் களத்தடுப்பு முடிந்த பின், 'அடுத்த கிழமை விளையாட வருவாய்தானே' என்று எங்கள் அணியில் கூட விளையாடும் மெல்வின் என்னைக் கேட்டான். அப்போது நான் வேலை செய்து கொண்டிருந்த இடத்தில் சனிக்கிழமை மேலதிக வேலைநேரம் கிடைக்குமா என்று வெள்ளிக் கிழமைதான் சொல்லுவார்கள். அதனால நான் ‘வெள்ளிதான் தெரியும்' என்றேன். ‘இப்பமட்டும் என்ன தெரியுது' என்றான் மெல்வின். சற்று நேரம் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டுச் சிரித்துக் கொண்டோம். அதாவது சனிக்கிழமை வேலை இருக்கிறதா இல்லையா என்பது வெள்ளிக் கிழமைதான் தெரியும் என்ற அர்த்தத்தில் நான் சொல்ல, நான் ‘வெள்ளி பார்த்து' விட்ட பிடியை நினைவூட்டி இப்ப மட்டும் என்ன தெரியுது என்று சாதாரண உரையாடலிலேயே சிலேடையில் விளையாடினான் மெல்வின்.

Author: வர்மா
•6:47 AM

அச்சமென்பதுமடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா,வேப்பமர உச்சியிலிருந்து பேயொன்று ஆடுதென்று போன்ற பாடல்களீன் மூலம் பயம் என்பது என்னவென்றேதெரியாது. சன்னதிகோயில் கொடியேறினால் 15 நாளும் சன்னதியில்தான்.சன்னதியானின்ரை சாப்பாட்டை தவறவிமாட்டம்.கோயிலிலை நிப்பம் திடீரென யாழ்ப்பாணம் போய் படம் பாப்பம். சிலவேளை அச்சுவேலி தியேட்டரிலை படம் பாப்பம்.பள்ளிக்கூடத்திலை படிக்கேக்கை தேர் தீத்தத்துக்கு ஸ்கவுட்சா ஒழுங்காகக்கடமை செய்தனாங்கள்.

ஒருநாள் இரவு நெல்லியடி தியேட்டரிலை இரவு 9.30 மணீக்கு நெஞ்சம்மறப்பதில்லை படம்பாத்துவிட்டு நடந்து சன்னதிக்குப்போனம்.மறுபிறவி பற்றிய கதை.புறாப்பொறுக்கிதாண்டி வல்லை வெளீக்குப்போனதும்தூரத்திலை ஏதோவெளீச்சம் தெரிஞ்சுது. அய்யோ பேய் எண்டு ஒருவன்கத்தின்னான் அவ்வளவுதான்.ஆளுக்கொருபக்கமா வயல் வெளீககை ஓடத்தொடங்கினம்.ஒவ்வொருத்தரா சன்னதிக்குப் போய்ச்சேந்தம்.

சிவராத்திரியிலண்டு பருத்தித்துறை தியேட்டரிலை கெளரவம் படம் பாக்கிறதுக்கு திட்டம் போட்டம். அல்வாய் சாமணந்தறை சுடலைக்கு கிட்டப்போனதும் பெரியப்பா சுகமாக இருக்கிறியளா எனக்கேட்டபடி ஒருவன் சைக்கிளை சுடலைக்குள்ளைவிட்டான். போனவாரம்தான் அவனுடைய பெரியப்பா செத்தவர்.அதைக்கண்டு உசாரான ஒன்னொருவன் செத்துப்போன தன்னுடைய மாமாவைக்கூப்பிட்டுக்கொண்டு சுடலைக்குள் ஓடினான்.மோகன் மட்டும் தோடுடையசெவியன் எனத்தேவாரம் பாடியபடி பின்னால் ஓடிவந்தான்.

தியேட்டருக்குப்போனதும் படம்முடிய அரை மனித்தியாலம் இருக்கு என்றார்கள். அந்தக்காலத்திலை படத்தின் வசனத்தையும் பாட்டுக்களையும் வெளீயே போடுவார்கள். வசந்தமாளீகையின்கதை வசனம் இப்பவும் மனப்பாடம். மறு நாள்காலையில் மோகனத்தேடிப்போனேன்.சுகமில்லாமல்மந்திகையில் சேத்திருக்கு எண்டு தகப்பன் கூறினார்விளையாட்டு விபரீதமானதை உணர்ந்தேன்.

பாடசாலை விடுமுறைக்கு வவுனியாவுக்குப்போனேன்.உறவினர்கள் கடை வைத்திருந்தார்கள்.பெரியம்மாவின் மகன் ஒருவர் வவுனியாவில் விவசாய அதிகாரியாகக்கடமையாற்றினார்.சிலவேளைகளீல்அவருடன் பண்ணைகளுக்குப்போவேன். ஆற்றில் குளத்தில் குளீப்பது, மீன்பிடிப்பதுஎல்லாம் வித்தியாசமானஅனுபவம்.
பண்ணையொன்றில் இரவு நான்படுப்பதற்கு ஆயத்தமானபோது தம்பி உதிலை படுக்காதையுங்கோ கொஞ்சம் தள்ளீப்படுங்கோ என்று ஒருவர்கூறினார். ஏன் என்று கேட்டேன். காரணம் சொல்லாமல் வேறிடத்தில் படுக்கும்படி கூறினார். அந்த இடத்தில்தான் படுப்பேன் என்று நான் உறுதியாகக்கூறினேன்.

அந்த இடத்தில் படுத்தால் அமுக்குப்பேய்பிடிக்கும் என்றார்கள்.பேயைப்பார்கக ஆசைப்பட்டதால் அந்த இடத்தில் படுத்தேன். பேயைப்பார்க்கிற ஆர்வத்தில் கனநேரம் நித்திரை வரவில்லை.என்னை அறியாமல் உறங்கிவிட்டேன்.யாரோ அமுக்குவதுபோலிருந்தது. எழும்பமுயற்சித்தேன்.முடியவில்லை.சத்தம்போட்டேன்.சத்தம்வெளியேவரவில்லைதிடீரென எழும்பி இருந்தேன்.பின்னர்படுத்துவிட்டேன்.விடிந்த்தும் யாரிடமும் இரவு நடந்ததைச் சொல்லவில்லை.

கல்மடு பண்ணயில் ஒரு நாள் இரவு தங்கினேன். தூரத்தில் ஒருவெளிச்சம் தெரிந்தது. அது என்னவென்று கேட்டேன்... தெரியாது.எப்பவாவது ஒருநாள்தான் தெரியும்.கிட்டப்போனால். மறைந்துவிடுமென்றார்கள். என்னால் நம்பமுடியவில்லை. பார்த்துவிடுவதென்று முடிவெடுத்தேன். வெளிச்சத்தை நோக்கிச்சென்றேன். கிட்டப்போகப்போக அதனுடையதூரம் குறையவில்லை. நான்வேகமாகச்சென்றேன். அதுவும் வேகமாகச்சென்றது.காட்டுக்குள் அதுமறைந்துவிட்டது. நான் திரும்பிவந்துவிட்டேன்.அந்தவெளிச்சத்தைப்பார்த்து யானையே பயந்ததாம்.

ஊரில் ஒரு வீட்டில் வீடியோ பார்த்தோம்.நள்ளிரவு தாண்டியபோது படத்திலே அனைவரும் ஒன்றிணைந்திருந்தபோது வெளியேபடுத்திருந்த நாய் பயங்கரமாகச்சத்தமிட்டுக்கொண்டு வீட்டுக்குள் ஓடியது. துணிவுள்ள சிலர் எனனவென்றுபார்க்க வெளியே ஓடினார்கள்.
அப்போது வீட்டில் இருந்த98 வயதான ஆச்சி பொடியள் வெளீயே போகாதேங்கோ என்றார்.
அவர் சொல்லிவாய்மூடவில்லை தூரத்தில் ஒப்பாரிச்சத்தம் கேட்டது.அந்தவீட்டிலே சுகமில்லாமல் இருந்த ஒருவர் இறந்துவிட்டார் என அறிந்தோம்.

சுமார் 25 வ்ருட‌ங்க‌ளூகு முன்ந‌ட‌ந்த‌ இச்ச‌ம்ப‌வ‌ங்க‌ளை நினைத்தால் இன்றைக்கும் அதிச‌ய‌மாக‌ உள்ள‌து.

ஒப்பாரி,,,,,,,,,,,,,,,,,, இற‌ந்த‌வரின் புகழையும் சிறப்பையும் கூறி அழுவ‌து.
Author: சினேகிதி
•3:11 AM




நகைச்சுவைக்கதம்பத்தில் "தேவதையைக் கண்டேன்" படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி.

"என்ன பாபு சைக்கிளுக்கெல்லாம் போர்வை போர்த்து விடுறாய்...ஆ கொசுவர்த்தி வேறயா..முத்தமா...வயித்தெரிச்சலைக் கிளப்பிறாங்களே.."

"பின்ன அது உமா வாங்கிக் கொடுத்த சைக்கிள்."

அடுத்த காட்சியில் தனுஸ்... நட்சத்திர யன்னலில் வானம் எட்டிப் பார்க்குதே பாடலைக் கேட்டுக்கொண்டிருப்பார். ஏனென்று கேட்டால், அந்தப் பாட்டில்தானே தேவயானியும் சரத்குமாரும் ஓகோ என்று பெரியாட்களானாவையாம்.

நேற்றைய நாள் எனக்கு அந்த நகைச்சுவைக்காட்சில தான் தொடங்கினது.விருந்தினர்கள் என்னறையில தங்கியிருந்ததால் நான் நேற்று தங்கச்சியின்ர அறையிலதான் தூங்க வேண்டியிருந்தது. கன காலத்துக்குப்பிறகு யன்னலோரமாய் நட்சத்திரங்களைப் பார்த்த வண்ணம் தூங்க முயற்சித்துக்கொண்டிருக்கிறன். பக்கத்தில அம்மாவேன்ரே அறையில இருந்து நட்சத்திர இரவு வானொலி நிகழ்ச்சி காற்றோடு கலந்து வந்தது.

இப்படி நேற்றைய பொழுதில் நட்சத்திரங்கள் பலமுறை வந்து போனதால் இரவுப்பொழுதிலும் நட்சத்திரங்களுடன் எனக்குண்டான உறவு பற்றிய ஞாபகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக உலா வரத் தொடங்கின.

நானே ஆச்சரியப்படும்படி மூன்று நான்கு வயதில் நடந்த சம்பவங்கள் எல்லாம் அண்மையில் நடந்த மாதிரி கண்ணெதிரே வந்து போயின.

அப்போது எனக்கு நான்கு வயதிருக்கும். பாலா அங்கிள் பரா அன்ரி சுந்தி மாமா சாந்தன் மாமா இன்னும் சிலர் இரவு கூடியிருந்து எனக்கு அப்ப விளங்காத பெரிய பெரிய கதையெல்லாம் கதைப்பினம். அம்மா பழங்களரிந்து தருவா. கொண்டே குடுத்திட்டு பரா அன்ரின்ர மடியில இருந்து, “அப்பிடியென்டாலென்ன.. ஏன் அப்பிடிச் சொன்னவை?” இப்பிடி வியாக்கியானம் பண்ணிக் கொண்டிருப்பன். என்ர வாயை மூட அவாவும் ஏதாவது சொல்லிச் சமாளிப்பா.

பரா அன்ரிதான் எனக்கு முதல் முதலாக நட்சத்திரங்களை அறிமுகம் செய்து வைத்தவா. “அங்க பாரு, அதில நல்ல வெளிச்சமா தெரியுது அதான் சுக்ரன்.. விடிஞ்சாப் பிறகும் அந்த நட்சத்திரம் இருக்கும்... அங்க பார் அதில ஒரு வேட்டைக்காரன் அம்பு விடுற மாதிரி இருக்கு. இங்க பார், விருச்சிகம்..” இப்பிடியெல்லாம் சொல்லுவா.

சின்னப்பிள்ளையளிட்ட ஒரு பிடிவாதக்குணம் இருக்கும். தாங்கள் நினச்சதைதான் செய்வினம்... சொல்லுவினம். ஒரு இரண்டு வயசுப் பிள்ளைக்கு ஒன்று இரண்டு சொல்லிக் கொடுத்திட்டு, அடுத்த நாள் “அச்சாக்குட்டியெல்லே... ஒன்று இரண்டு சொல்லிக் காட்டுங்கோ” என்று கேட்டுப்பாருங்கோ. “ஆ ஆ ஆ” என்று காது கேக்காத மாதிரி இருப்பினம்... வாற விசரில நீங்கள் திரும்ப ஒன்று இரண்டு சொல்லச் சொல்லிக் கேக்கமாட்டிங்கள்.. ஆனா தங்களுக்கு விருப்பமான நேரம் தங்கடபாட்டில சொல்லுப்படும்.. “ஒன்ரு ரன்று மூன்ரு..”

அதைப்போல நான் பரா அன்ரிக்கு மட்டும்தான் குட்நைற் சொல்லுவனாம். பரா அன்ரி கொஞ்ச வருசத்தில யாரோ சுட்டுச் செத்திட்டா. நான் நட்சத்திரங்களைப் பார்க்கும்போதெல்லாம் அவான்ர ஞாபகம்தான் வரும்.

எல்லாற்ற ஊரிலயும் ஒரு கோயில்... கோயிலுக்கு முன்னால ஏதோ ஒரு மரம் இருக்கும். அப்பிடித்தான் எங்கட ஊரிலயும் ஒரு பிள்ளையார் கோயில். முன்னால ஒரு பலாமரம். அங்கதான் ஊராக்கள் இரவு இருந்து விடுப்புக் கதைப்பினம். நான் அக்கா, சுபாசினி, சுஜி, சிந்து, கவி, யனா, நிமல், டொம்மா... இப்பிடி நிறையப் பேர்.

எங்கள எல்லாம் விளையாட விட்டுப்போட்டு அங்கால அம்மாக்களின்ர மகாநாடு நடக்கும். அப்ப பரா அன்ரி எனக்குக் காட்டின நட்சத்திர உருவங்கள் பற்றியெல்லாம் நான் என்ர குறூப்புக்கு சொல்லிக்கொண்டிருப்பன். பிறகு அக்கான்ர குறூப் ஒருபக்கம், சின்ன குறூப் ஒருபக்கம் பிரிஞ்சு விளையாடுவம். இதையெல்லாம் நினைச்சா அது ஒரு அழகிய நிலாக்காலம்தான்.

சண்டை நடக்கும்போதும் நாங்கள் ஒரு அஞ்சு குடும்பம் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய பங்கர் கிண்டினாங்கள். சண்டை நேரத்தில அந்த பங்கர்தான் எங்களுக்குப் பள்ளிக்கூடம். விளையாட்டுத்திடல் எல்லாம். திருவலகை, திரிபோசா மா, சீனி.. ஹி ஹி... அதான் சாப்பாடு. அங்க யாரும் செல் விழுந்து சாகேல... தப்பித் தவறி விழுந்திருந்தா எல்லாரும் சேர்ந்து செத்திருப்பம்.

வேப்ப மரத்துக்குக் கீழதான் பங்கர். பங்கருக்குப்போற வழி வீட்டில இருந்துதான் துவங்கும். வெளீல நிண்டு பார்த்தா பங்கர் இருக்கெண்டே தெரியாது. அப்பிடித்தான் ஒருநாள் பயங்கரச்சண்டை. புக்காரா சகடை எல்லாம் இரைஞ்சுகொண்டு போனது. செல் கூவிக்கொண்டு போனது.
அடுத்த நாள் ஒரே அமைதி. பார்த்தா நோட்டீஸ் விட்டிருக்கு. வடமராட்சி சனம் எல்லாம் தென்மராட்சிக்குப் போகவேணுமாம். ஊராக்களுக்குப் போற எண்ணமே கிடையாது. நாங்கள் ஒரு காலமும் வெளிக்கிட்டதில்லை.. இந்தியன் ஆமி வந்தநேரம்கூட நாங்கள் இங்கதானே இருந்தனாங்கள் என்று எல்லாரும் கதை. நாங்கள் எங்கட பாடு.

எங்களுக்கெல்லாம் அப்ப அது ஒரு பம்பல் மாதிரி. ஆக்கள் கூடியிருக்கிறதே ஒரு விளையாட்டு மாதிரி. ‘போறேல்ல’ என்று முடிவெடுத்த உடனே அம்மாக்கு கண்ணெல்லாம் கலங்கிட்டுது.

இந்தியன் ஆமி வந்தநேரம் அக்காக்கு கால்ல செல் பட்டதால அம்மாக்கு பயம். சரியெண்டு எல்லாரும் சாவகச்சேரிக்குப் போறதெண்டு முடிவாச்சு. இரவு ஒன்றரைக்கு மாமாவோட நானும் அக்காவும் அம்மாவும் அன்ரியும் ஒரு சைக்கிள்ல. இப்பிடி எல்லாரும் சேர்ந்து சைக்கிள்ல வெளிக்கிட்டம். எங்கயோ ஒரு இடத்தில கொஞ்ச நேரம் நின்றிட்டு திரும்பக் கொஞ்ச நேரம் சைக்கிள உருட்டிக்கொண்டு போனம். ஆமிக்காரன்ர பரா லைற் வெளிச்சம் மாறி மாறி வந்துகொண்டு இருந்திச்சு.

சில பேர் கதைச்சுக்கொண்டு வந்தினம். சில பேர் வீட்டில இருக்கிற ஆட்டுக்குட்டி கோழிக்குஞ்சையெல்லாம் நினைச்சுக்கொண்டாக்கும் மௌனமா நடந்தினம். நான் சைக்கிள்ல சொகுசா இருந்துகொண்டு நட்சத்திரங்களோட கதை.

“அம்மா, பரா அன்ரி சொன்ன அந்த வேட்டைக்காரனைக் காணேல்ல.”

“வாய மூடிக்கொண்டு வாடி.. சும்மா நொய் நொய் எண்டு கொண்டு.. நாளைக்கு உயிரோட இருப்பமோ தெரியேல்ல, இப்பத்தான் வேட்டைக்காரனைத் தேடுறா.”

நாங்கள் சாவகச்சேரிக்குப் போய் மாமாவீட்டதான் இருந்தனாங்கள். பக்கத்து வீட்டில தயா என்றொரு பெடியன். மனவளர்ச்சி குன்றியதால அவன் செய்யிற வேலையெல்லாம் சிரிப்பா இருக்கும். சாத்திரம் சொல்லுறன் என்று போட்டு திருநீறு எடுத்துகொண்டுவந்து எதிர்பார்க்காத நேரம் தலையில கொட்டிப்போடுவான். சில நேரம் வீட்ட நின்றிட்டு சொல்லாமல் கேற்றைத் திறந்துகொண்டு ஓடிடுவான். அங்க இருந்த ஒரு மாதமும் தயாதான் கூட்டு. நாங்கள் திரும்ப ஊhருக்கு வர தயாவையும் வேற எங்கேயோ போட்டினம்.
அங்க இருந்த நேரம் பலா மரத்தில ஏறி பலாப்பழம் புடுங்கியிருக்கிறன்" :-) எங்கட ஊரில எல்லாம் பலா மரம் இல்லை.

ஆறாம் வகுப்போ ஏழாம் வகுப்போ விஞ்ஞானப் புத்தகத்தில நட்சத்திரக்கூட்டங்கள் உருவங்கள் பற்றி ஒரு பாடம் இருக்கு. அப்ப புத்தகத்தில போட்டிருப்பினம், ஆசிரியர் மாணவர்கள் இரவுவேளையில் ஒன்று கூடி நட்சத்திரங்களைப் பற்றிப் படிக்கிறதென்டு... அக்கா வேற அப்பிடி ஒருநாள் இரவு போனவா. அதால நான் அந்த நாளை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருந்தனான். என்ர வயசு பிள்ளைகள் குடுத்து வைக்கேல்ல போல. ஊரில சண்டையும் ஊரடங்குச்சட்டமும் மாறி மாறி வாறதால இரவு போயிருந்து வான் வெளியில நட்சத்திரங்களையும் வால் நட்சத்திரத்தையும் பார்க்கிற நாள் எங்களுக்கு வரவே இல்லை.

இப்பிடி நட்சத்திரங்களுடனான என் உறவு வெளிநாடு என்று வெளிக்கிட்ட பிறகு நிலவறை வாழ்க்கையில் துண்டிக்கப்பட்டிருந்தது. நேற்று மீண்டும் நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டு தூங்கச்சென்றதால், நான் மேல சொன்ன ஞாபகங்கள் எல்லாம் வந்து போயின... அந்தக் கொஞ்சநேர சந்தோசம்கூடப் பொறுக்காமல் பனி கொஞ்சம் கொட்டத்தொடங்க நட்சத்திரங்கள் என்னோடு விடைபெறாமலே போய்விட்டன.

ஊருக்குப்போகும்போது... மால் என்று சொல்வார்களே... தோட்டத்துக்கு நடுவில காவலுக்கு இருப்பவர்கள் பாவிக்கிற திறந்த குடிசை. அங்கை போய் ஓருநாள் முழுக்க நட்சத்திரங்களோடை கதைக்க வேணும்.
ம்... கனக்கக் கதைக்க வேணும். அந்த நாள் எப்ப வருமோ? :)


பின்குறிப்பு : இதுவும் மீள்பதிவு தான் :(
Author: கானா பிரபா
•2:15 AM
என்னையெனக் கறிவித்தா னெங்கள்குரு நாதன்
இணையடியென் தலைவைத்தா னெங்கள்குரு நாதன்
அன்னை பிதாக் குருவானா னெங்கள்குரு நாதன்
அவனியெல்லா மாளவைத்தா னெங்கள்குரு நாதன்
முன்னை வினை நீக்கிவிட்டா னெங்கள்குரு நாதன்
மூவருக்கு மறியவொண்ணா னெங்கள்குரு நாதன்
நன்மை தீமை யறியாதா னெங்கள்குரு நாதன்
நாந்தானாய் விளங்குகின்றா னெங்கள்குரு நாதன். 1

தேகம்நீ யல்லவென்றா னெங்கள்குரு நாதன்
சித்ததிற் றிகழுகின்றா னெங்கள்குரு நாதன்
மோத்தை முனியென்றா னெங்கள்குரு நாதன்
முத்திக்கு வித்ததென்றா னெங்கள்குரு நாதன்
வேகத்தைக் கெடுத்தாண்டா னெங்கள்குரு நாதன்
விண்ணும் மண்ணு மாகிநின்றா னெங்கள்குரு நாதன்
தாகத்தை யாக்கிவிட்டா னெங்கள்குரு நாதன்
சத்தியத்தைக் காணவைத்தா னெங்கள்குரு நாதன். 2

என்று சிவயோக சுவாமிகள் தன் குருநாதன் செல்லப்பா சுவாமிகள் மேற் பாடுகின்றார்.


இன்று வியாழக்கிழமை குருவுக்குரிய நாளாகும், இந்த நன்னாள் நல்லைக்கந்தன் ஆலயத்தின் இருபதாந் திருவிழாவின் பதிவாக யாழ்ப்பாணத்து நல்லூத் தேரடியில் தோன்றிய குரு சீடமரபு குறித்த பதிவாக மலர்கின்றது. எனக்கு எப்போதும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் சிட்னி வாழ் அன்பர் தன் தொடரும் ஆக்கத்தை எழுதியும் பொருத்தமான புகைப்படங்களையும் தந்ததோடு தயவாகத் தன் பெயரைத் தவிர்த்துவிட்டார். இந்த ஆக்கம் கடந்த ஆண்டு சிவதொண்டன் இதழிலும் வெளிவந்திருந்தது.

"Pilgrim, pilgrimage and road was but myself toward myself
and your arrival, but myself at my own door."

யோகர் சுவாமிகளைப் பற்றி நினைக்கும் போது “நிலந்தன் மேல் வந்தருளி நீள் கழல்கள் காட்டி” என்ற சிவபுராண அடிகள் எனக்கு எப்பொழுதும் நினைவுக்கு வரும்.

கடந்த ஆண்டு நல்லூர்த் தேர்த்திருவிழா பற்றிய வர்ணனையை வானொலியினூடாகக் கேட்டபோது “எங்கள் செல்லப்ப சுவாமிகளும் யோகர் சுவாமிகளும் உலாவிய நல்லூர்த் தேரடியிலிருந்து பேசுகிறேன்” என்று அந்த அறிவிப்பாளர் தனது வர்ணனையை ஆரம்பித்தார்.

வீதியிலே வந்தொருக்கால் விழுந்து கும்பிட்டால்
வில்லங்கம் எல்லாம் இல்லாமல் போமே

என்று சுவாமிகள் பாடிய பாடலையும் பாடினார். எவ்வளவு அழகான வார்த்தைகள், அத்துடன் எத்தனை பொருத்தமான ஆரம்பம் என்று நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன்.

எனது மனம் ஊரை நோக்கி ஒடியது. ஒருபுறம் நல்லூர்க் கந்தன் - அந்த முருகக் கடவுள்;; மறுபுறம் அந்த நல்லூர் தந்த சிவனடியார்கள்;; அந்தப் பரம்பரம்பரையிலே வந்த எங்கள் இனம்;; எல்லாவற்றையும் நினைக்கப் பெருமையாக இருந்தது. நாங்கள் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

முகத்திலே குழைந்த புன்சிரிப்பு
நெற்றியிலே திருநீற்று வெண்மை
இடுப்பிலே சுற்றுக் கட்டாகக் கட்டிய வெள்ளை வேட்டி
மார்புவரை வந்து புரளும் தாடி
தலை எல்லாம் நரைத்து வெளுத்த முடி
அமைதியையும் உயர்ந்த எண்ணத்தையும்
வந்தவரிடம் நிலவச் செய்யும் சூழ்நிலை

என்று அன்பர் ஒருவர் சிவத்தொண்டனில் எழுதியது நினைவுக்கு வந்தது.

அத்துடன் கூடவே ஒரு எண்ணமும் தோன்றியது. எங்கள் இளைய தலைமுறையினரில் எத்தனைபேருக்கு சுவாமிகளைப் பற்றித் தெரியும்? இவர்களுக்கு சுவாமிகளைப் பற்றிக் கூறுவது எங்கள் கடமை. நீங்களும் நானும் ஒரே தலைமுறையைச் சேர்ந்தவர்கள். சுவாமிகள் வாழ்ந்தபோதே நாமும் வாழக் கொடுத்துவைத்தவர்கள். உங்களில் பலர் சுவாமிகளோடு நெருங்கிப் பழகிய பாக்கியசாலிகள். இந்த அநுபவங்களை எங்கள் பிள்ளைகளோடு பகிர்ந்துகொள்வது அவசியம்.

சுவாமிகள் கைப்பட எழுதியது (பெரிதாகப் பார்க்கப் படத்தை அழுத்தவும்)

யோகசுவாமிகளின் அன்பர் திரு.விநாசித்தம்பி அவர்களுக்குச் சுவாமிகள் கைப்பட எழுதியது (பெரிதாகப் பார்க்கப் படத்தை அழுத்தவும்)

சுவாமிகள் சாதாரண மனிதராக வாழ்ந்தவர். காவி உடை தரியாத சன்னியாசி. “சும்மா இரு” என்று இரண்டே இரண்டு சொற்களிலே ஒரு பெரிய தத்துவத்தைக் கூறியவர். இன்று நாங்கள் எப்பொழுதும், எதற்கெடுத்தாலும் பதட்டப்படுகிறோம். இளையவர்களும் சரி, மூத்தவர்களும் சரி எப்பொழுதும் பரபரப்பாகவும், பதட்டமாகவும் இருக்கிறோம். நானும் இதற்கு விதிவிலக்கல்ல. “Tension” என்ற சொல் இன்று எமது வாழ்வில் சாதாரணமாகி விட்டது. எங்கள் பிள்ளைகளின் முகங்களில் வெளிச்சம், ஒளி இன்று இல்லை என்று சுவாமிகளே சொல்லியிருக்கிறார். “உன்னுடைய வேலையைச் செய் பதட்டப்படாதே” என்றுதான் அவர் சொல்லுகிறார். அவர் சொல்லுவதைப் பாருங்கள்:

குரங்கு போல் மனம் கூத்தாடுகின்றதே. இந்தக் கூத்தை எப்படி அடக்குவதென்று தெரியவில்லையே. நன்று சொன்னாய். இதற்கு நல்லமருந்து உன்னிடமுண்டு. சிவத்தியானம் என்னும் மருந்தைத் தினந்தோறும் சாப்பிட்டுவா, மனக்குரங்கின் பிணி மாறும். அதைச் சாப்பிடும்போது அநுமானத்தைக் கூட்டிச் சாப்பிடு. அதுவும் உன்னிடம் உண்டு. அது என்னவென்றால் நாவடக்கம், இச்சை அடக்கம் என்னும் சரக்கோடு சேர்த்துச் சாப்பிடு. இதுவும் போதாது. பத்தியத்தில்தான் முற்றும் தங்கி இருக்கிறது. இது என்னவென்றால் மிதமான உணவு, மிதமான நித்திரை. மிதமான தேகப்பியாசம் என்பவையே. வெற்றி நிச்சயம்.

சாதாரண சொற்களிலே ஒரு ஆழமான கருத்தைச் சொல்லிவிட்டார். இப்படித்தான் சுவாமிகளின் பாடல்களும் இருக்கின்றன. மிகவும் எழிமையான தமிழிலே ஆழமான கருத்துகளைப் பாடி இருக்கிறார்.
இந்த இலுப்பை மரத்தின் கீழ் தான் சுவாமி பல வருடங்களாக இருந்தவர். இப்பொழுது இது ஷெல் விழுந்து அழிந்து விட்டது.

பாரத புண்ணிய பூமி என்றால் எங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால் எங்களுடைய நாட்டை “சிவ பூமி” என்று கூறுவது பலருக்குத் தெரியாது. அங்கேயும் ஒரு சித்தர் பரம்பரை இருந்திருக்கிறது. அந்தப் பரம்பரையைச் சேரந்தவர் எங்கள் சுவாமிகள் என்ற செய்தியை எங்கள் இளைய தலைமுறையினருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

நாங்கள் சிறுவயதிலே கருத்துத் தெரியாமல் பாடமாக்கிய தேவார திருவாசகம், முக்கியமாக சிவபுராணம் இன்றைக்கு எங்களுக்கு விளக்கமாக இருக்கிறது. உண்மையில் எங்கள் முதுமைக்கு இவை கைகொடுக்கின்றன. அதைப் போலவே சுவாமிகளின் பாடல்களையும் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேணும். சிறுவயதிலே படிப்பது மனதிலே பதியும்.

சுவாமிகள் தேவார, திருவாசகத்திலே ஊறித் திளைத்தவர். திருமந்திர தத்துவத்தை அறிந்தவர். அருணகிரிநாதர், பட்டினத்தடிகள், தாயுமானவர், குமரகுருபரர், வள்ளலார் என்று எல்லோருடைய பாடல்களையும் அறிந்திருந்தார். இந்தப் பாடல்களின் சாரத்தை - essence - அவர் எளிமையான, சாதாரண தமிழிலெ எங்களுக்குத் தந்திருக்கிறார்.

இங்கே சமயம் படிப்பிக்கும் ஆசிரியர்கள் இருக்கிறீர்கள். சங்கீத ஆசிரியர்களும் வந்திருக்கிறீர்கள். உங்கள் கைகளிலேதான் இந்தப் பொறுப்பு இருக்கிறது. இதை நீங்கள் ஒரு தொண்டாக நினைத்துச் செய்ய வேணும். சென்ற மாதம், பூசையிலே குழந்தைகள் சுவாமிகளின் பாடல்களைப் பாடினார்கள். இன்றும் குழந்தைகள் பாடுவதைப் பார்த்தேன். இது தொடர வேணும்.

சுவாமிகளோடு நெருக்கமாக இருந்த பலர் தமது அநுபவங்களை எழுதி இருக்கிறார்கள். இன்று ஓரு அன்பரின் கட்டுரையிலிருந்து சில பகுதிகளைத் தருகின்றேன். உங்களிலே பலர் இந்தக் கட்டுரையை ஏற்கனவே பார்த்திருப்பீர்கள். ஆனால், எத்தனை முறை படித்தாலும் சுவாமிகளைப் பற்றிய அநுபவங்கள் அலுக்காதவை.

அமரர் திரு வினாசித்தம்பி அவர்களின் மகள் யோகேஸ்வரி தனது தந்தையாரின் அநுபவங்களைக் கூறுகிறார். இந்தக் கட்டுரையை வாசித்தபோது, “ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே” என்ற சிவபுராண வரிகள் எனது நினைவுக்கு வந்தன. அந்தப் பெரியார் திரு வினாசித்தம்பி அவர்களை சுவாமிகள் தாமே வந்து ஆட்கொண்டார் என்று தெரிகிறது. அதற்கும் நாம் கொடுத்துவைக்க வேண்டும்.

அடுத்து, சிட்னி யோகசுவாமி மாதாந்தக் குருபூசை நிகழ்வின் ஒலிவடிவத்தைத் தருகின்றேன்.
Get this widget
Share
Track details

தொடர்ந்து, கடந்த ஆண்டு ஆடி மாதம் 8 ஆம் நாள் நான் எழுதியிருந்த ஆக்கத்தை மீள் பதிவிடுகின்றேன்.


தேரடியில் தேசிகனைக் கண்டேன்

சிறுவயதில் சைவ சமய பாடம் படிக்கும் போது வகுப்பில் எப்போதும் எனக்கு அதிக மதிப்பெண் கிடக்கும். இதுவே பின்னாளில் என் கல்விப் பொதுத்தராதர உயர் வகுப்பில் இந்து நாகரிகத்தை வர்த்தகத்துறையின் நான்காவது விருப்பத்தேர்வுப்பாடமாக எடுப்பதற்கும் அடிகோலியது.

எனோ தெரியவில்லை, இணுவில் மக்களுக்கும் சமயப் பற்றிற்கும் அவ்வளவு ஈடுபாடு. ஏ.எல் வகுப்பில் கணக்கியல் பாடமெடுத்ததார் சிறீ மாஸ்டர். என் சகபாடிகளோடு யாழ் நகர் வந்து அவரின் ரியூசனுக்குப் போகும் போது " வந்திட்டான்கள் இணுவிலான்கள், பொட்டுக் குறியோட" என்று நக்கலடிப்பார். ரவுண் பக்கம் இருந்து படிக்க வரும் பெடியன்கள் ஒருமாதிரி ஏளனச் சிரிப்பை அள்ளி விடுவர். இந்து மதம் மீதும் தேவாரப் பதிகம் மீதும் எனக்கு ஆழ்ந்த ஈடுபாடு இயல்பாகவே இருந்தது என்றாலும், என்னை மிகவும் கவர்ந்தது ஈழத்தில் தோன்றிய சித்தர்களின் குரு சீட மரபு. என் இந்த ஈடுபாடு தோன்றக் காரணம், இன்றுவரை நல்லூர்க்கந்தனையும், சிவதொண்டன் நிலையத்தையும் ஒவ்வொரு வெள்ளிதோறும் தரிசித்து வரும் என் தந்தை, என் சிறுவயதில் என்னை நல்லூர்க் கோயிலுக்கு சைக்கிளில் ஏற்றி அழைத்துப் போகும் காலத்தில் வழி நெடுக யோகர் சுவாமிகளின் பெருமைகளைச் சொல்லிக் கொண்டே வருவது தான். கோயிலை அண்மிக்கும் போது அவர் வாய், யோகர் சுவாமிகளின் " நல்லூரான் திருவடியை நான் நினைத்த மாத்திரத்தில் எல்லாம் மறப்பேனடி" என்ற பாடலை முணுமுணுக்கத் தொடங்கிவிடும். நல்லைக் கந்தனைத் தரிசித்துவிட்டு வெளியேறும் போது தேரடியோடு இருக்கும் செல்லப்பா சுவாமிகள் தியானமிருந்த மரத்தை மூன்று முறை சுற்றி "அப்பூ" என்று உளமுருகுவார், பின்னால் அவர் வேட்டியை பிடித்தபடி நான்.

பிறகு தானாகவே அவரின் சைக்கிள் சிவதொண்டன் நிலையத்துக்கு இட்டுச் செல்லும். சிவதொண்டன் நிலையத் தியான மண்டபம் நுளைந்துவிட்டாற் போதும் மயான அமைதி தவழும். அடியவர்கள் தம் காலை மடித்து நீண்டதொரு நிஷ்டையில் ஈடுபட்டிருப்பர்.

சைவசித்தாந்தம் தழைத்தோங்கிய காலத்தில் எப்படியொரு நீண்டதொரு குரு சீடமரபு இருந்ததோ, அவ்வளவுக்கவ்வளவு ஒரு நீண்டதொரு குருசீட மரபு ஈழத்தின் வடபுலத்திலும் இருந்தது.


சித்தானைக் குட்டிச்சுவாமியின் வழி கடையிற்சுவாமிகளும், கடையிற்சுவாமி வழி, செல்லப்பாச் சுவாமிகளும், செல்லப்பாச் சுவாமிகள் வழி யோகர் சுவாமிகளுமாகத் தோன்றியதே இந்தச் சித்தர்களின் குருசீடப்பரம்பரை.

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரும் யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் பற்றிய கவி ஒன்றை யாத்திருக்கின்றார். கடையிற்சுவாமிகள் யாழ்ப்பாண நகர் பெரிய கடை வீதி வழியே செல்லும் போது அக்கடைவீதி வாழ் வணிகர்கள் அவரைப் போற்றித் துதித்திருக்கின்றார்கள். "பெரியகடை நாதன், பித்தன் திருக்கோலம்" என்ற பாடலும் இவரையே குறித்து எழுதப்படிருக்கின்றது.

ஆத்மஜோதி என்ற ஈழத்து பக்தி சஞ்சிகையை முன்னர் நாவற்குழியிலுருந்து வெளியிட்டவர் ஆத்மஜோதி நா.முத்தையா அவர்கள். என் கல்லூரி நூலகத்தில் அதன் பிரதிகள் பலவற்றைப் படித்த அனுபவமும் உண்டு. இந்த ஆத்மஜோதி சஞ்சிகையில் "ஈழத்துச் சித்தர்கள்" என்ற கட்டுரையைத் தொடராக எழுதிப், பின்னர் நூலுருவில் வெளியிட்டவர் ஆத்மஜோதி முத்தையா. நான் என் சமய வகுப்பில் படித்ததும், இப்படியான கட்டுரைகள் மூலம் படித்ததுமாக என் ஞாபகக் கிடங்கில் வைத்த தகவல்களை வைத்தே இக்கட்டுரையை யாத்திருக்கின்றேன்.

சித்தன் போக்கு, சிவன் போக்கு என்பார்கள், இது செல்லப்பா சுவாமிகளுக்கு நிரம்பவே பொருந்தும். சாத எந்நேரமும் சிவ சிந்தையுடன் இருந்தாலும், தன்னை விடுப்புப் பார்க்கவரும் அன்பர்களைக் கண்டாற் போதும் கடும் கோபம் வந்துவிடும் இவருக்கு. தூஷணை வார்த்தைகளால் ஏசியவாறே துரத்துவார். இதனால் இவரின் அருமை அறியாத சாதாரணர்கள் இவரை "விசர் செல்லப்பா" என்ற அடைமொழியோடே அழைத்தனர். ஆனால் இந்தத் திட்டல்களையும் மீறி செல்லப்பனே பழி என்று கிடந்தால் ஞானோதய நன்மார்க்கம் கிட்டும். அதற்கு நல் உதாரணம் யோகர் சுவாமிகள்.

கிளிநொச்சி நீர்ப்பாசன இலாக்காவில் களஞ்சியக் காப்பாளராக இருந்த சதாசிவன் ஒருமுறை செல்லப்பாச் சுவாமிகளைக் கண்ணுறுகின்றார். செல்லப்பாவின் வழமையான அர்ச்சனைகள் அவருக்கும் கிடைக்கின்றன (யாரடா நீ, தேரடா உள்ளே ) ஆனால் அவரின் வாக்கியத்தில் பொதிந்திருந்த உன்னை நீ அறிந்து கொள் என்ற மகா உண்மையை உணர்ந்து அக்கணமே செல்லப்பாவின் சீடனாகினார். அவர் தான் பின்னாளில் சிவயோக சுவாமிகள் எனவும் யோகர் சுவாமிகள் எனவும் அழைக்கப்பட்டவர்.

நல்லூர் தேரடி (வரைவில்)

யோகர்சுவாமிகளின் மகா வாக்கியங்களாக "எப்பவோ முடிந்த காரியம்", "ஒரு பொல்லாப்புமில்லை", "யார் அறிவார்" போன்றவை போற்றப்படுகின்றன. யோகர் சுவாமிகளால் சிவதொண்டன் நிலையம் என்ற ஆன்மீக மையமும், சிவதொண்டன் என்ற மாத இதழும் தோற்றம் பெற்று இன்றும் நிலைத்து நிற்கின்றன. இவரின் மகா சிந்தனைகள்
"நற்சிந்தனை" ஆக நூலுருப் பெற்றது.
பழைய கொழும்புத்துறை ஆச்சிரமம்

புதுப்பிக்கப்பட கொழும்புத்துறை ஆச்சிரமம்

உலகெலாம் பரந்துவாழும் இவர் பக்தர்கள் ஆன்மீக நிலையங்கள் அமைத்துக் குரு பூசைகளையும், நற்பணிகளையும் ஆற்றி வருகின்றார்கள்.
மேலதிக தகவலுக்கு சகோதரர் கனக சிறீதரனின் வலைப்பூவையும் பார்க்க:
http://kanaga_sritharan.tripod.com/yogaswami.htm

சிவதொண்டன் நிலைய இணையத் தளம்
http://sivathondan.org/index.htm

கடந்த 2005 ஆம் வருடம் நான் யாழ் சென்றபோது, நல்லைக் கந்தன் ஆலயம் சென்று தரிசித்துவிட்டு வழக்கம் போல் தேரடி வீதியிலுள்ள மரத்தடி சென்று மூன்று முறை சுற்றுகிறேன். பின் குருமணலில் பொத்தெனப் பதியும் என் கால்கள் வெயிற் சூட்டைக் களஞ்சியப்படுத்திய குருமணலின் வெம்மைத் தகிப்பால் சூடுபட்டு வேகமெடுக்கின்றது என் நடை. அப்போது தான் பார்க்கிறேன். இதுவரை ஒருமுறைகூட என் கண்ணில் அகப்படாது போனதொன்று அது.


தேர் முட்டிக்கு எதிர்த்தொலைவில் இருந்த ஒரு குருமடம் தான் அது. தகிக்கமுடியாத ஆவலில் அம்மடத்தின் உள்ளே நுளைந்ததும் தானாகவே என் கரங்கள் கூப்பி நிற்கின்றன.

செல்லப்பாச் சுவாமிகளின் குருமடம் தான் அது.அமைதியும் தவழ, ஊதுபத்தி வாசனை நிறைக்க சிறியதோர் இடத்தில் இருக்கின்றது இந்த ஆன்மீக பீடம். தரிசனை முடிந்து புதியதொரு உத்வேகம் தழுவ வீடு நோக்கிப் புறப்பட்டு, என் அப்பாவிடம் இக்குருமடம் சென்ற சேதியைச் சொல்லுகின்றேன். அவரும் அகமகிழ்கின்றார்.
செல்லப்பா சுவாமிகள்

செல்லப்பாச் சுவாமிகளைக் கண்ட கணத்தை யோகர் இப்படிச் சொல்லுகின்றார்,
"தேரடியில் தேசிகனைக் கண்டேன், தீரெடா பற்றென்றான், சிரித்து".
இதை என் மனக்கண்ணில் நினைக்கும் போதும் எழுதும் போதும் மெய்சிலிர்க்கின்றது எனக்கு.


நன்றி:
ஆக்கத்தை அளித்த அன்பர் மற்றும் சிவதொண்டன் மாத இதழ்

புகைப்படங்கள் உதவி:
The Saint Yoga swami & Testament of truth, By: Mrs Ratna Chelliah Navaratnam (former Director of Education) - Birth centenary memorial edition (1892 - 1972)

http://www.himalayanacademy.com/satgurus/yogaswami/

கடையிற்சுவாமியின் படம்: http://www.xlweb.com/


செல்லப்பாச் சுவாமிகளின் படம்: kataragama.org/sages/chellappa.htm