Author: ந.குணபாலன்
•3:52 PM
ஐயே!

அப்பா! என்னைப் பெத்தவன்! அவனை நினைக்கின்ற தருணங்கள் ஒவ்வொண்டும் இன்பமும் துன்பமும் கலந்தே என்னை ஆட்டுவிக்கும். அவனது அன்பை நினைச்சுச்  சந்தோசமும், அவனது பிரிவை நினைச்சால் துக்கமுந்தான். ஆள் என்ன கொஞ்சம் கொதியன் தான். சரியான சுடுதண்ணி. ஆனால் அந்தக் கொதிக்குணத்துக்குப் பின்னாலை இருந்தது அவ்வளவும் சரியான பட்சம். பிள்ளைகள் எண்டு என்னிலையும் என்ரை சகோதரங்களிலையும் இனிமேல் இல்லை எண்ட வாரப்பாடு.

எங்களுக்கு ஒரு சின்னக் காயம் வந்திடக் கூடாது. ஒரு தலையிடி காய்ச்சல் சுகயீனம் எண்டு பிள்ளைகள் நாங்கள் முகஞ்சிணுங்கிடக் கூடாது. அவனாலை தாங்க ஏலாது. ஆயிரத்தெட்டுத் தரம் "காளியம்மாளே! காளியம்மாளே!" எண்டு சொல்லி அடிக்கடி ஏமஞ்சாமம் பார்க்காமல்  நித்திரைப்பாயிலையும் வந்து தொட்டுத் தடவிப் பார்ப்பான். காய்ச்சல் விட்டுக் குணப்பட்ட உடனை  முதல் வேலையாய் காளியம்மாள் கோயிலுக்கு கற்பூரக் கட்டி வாங்கிக் கொண்டு போய்  கொளுத்திக் கும்பிட வைப்பான். ஒருக்கால் எங்கடை வளவுக்குள்ளை ஆருடையதோ தெரியயேல்லை தெருவாலை மேயப் போற ஆடொண்டு உள்ளிட்டு தென்னம்பிள்ளையைக் கடிச்சுப் போட்டுது. கலைச்சுத் துரத்திக் கொண்டு போய் எட்டிப் பின்னங்காலைப் பிடிச்சிட்டன். ஆனால் என்ன ஒண்டு!, நான் வளவுக்குள்ளே, ஆடு தெருவிலே, இடையிலே முள்ளுக்கம்பி வேலி! ஆடு பின்னங்காலை ஒரு உதறு உதற   என்ரை  கையை முள்ளுக்கம்பி பதம் பார்த்தது. எனக்குப் பீச்சல் பயமாகிப் போச்சுது. அதொண்டும் அந்தக் கறள் கம்பி குத்தின காயத்தை நினைச்சு இல்லை. எக்கணம் அப்பாவின்ரை கண்ணிலே பட்டாலும் எண்ட பயந்தான். அந்தக் காயத்தில் நல்லாக வாயை வைச்சு அரத்தத்தை உறிஞ்சி எடுத்துத் துப்பினன். பத்தும் பத்தாததுக்கு அம்மா வந்து நோகநோகக் காயத்தைப் பிதுக்கி அரத்தத்தைத் துடைச்சார். பேந்து எதோ ஒரு மருந்தை வைச்சு கட்டிவிட்டார். அம்மாவும் கறள் கம்பி எண்ட  அளவிலே இடாக்குத்தரிடம் போய் ஏர்ப்புவலி வராமல் இருக்க ஊசி போடவேணும் எண்டு சொன்னவர்.
" அப்பா வந்து கண்டானெண்டால் சத்தம் போடப்போறான். நீ ஏனடா முள்ளுக்கம்பிக்குள்ளை கையை விட்டாய்?"
 அப்பா அடிக்கப் போகிற கூத்தை நினைச்சு அடிக்கொருதரம் கவலைப் பட்டார். அம்மாவும் நல்ல அன்பானவர் தான். ஆனால் அப்பாவைப் போலை உருகிவழியிறதில்லை.

"அப்பா வேலையால் களைச்சு விழுந்து வருவான். அவன்ரை கண்ணில் படுமாப்போலை முன்னடிக்கு  வந்து நில்லாதே! வந்த மனிசன் சாப்பிட்டுக் களையாறின பிறகு விசயத்தைச் சொல்லி இடாக்குத்தரிட்டை போகலாம்." எண்டு அம்மா படிச்சுப் படிச்சுச் சொல்லியிருந்தார். நானும் மண்டிக் கொண்டு அடுப்படிக்குள்ளையும், சாமியறைக்குள்ளையும் பின்வளவுக்குள்ளையும் மாறிச்சாறி மறைப்பிலை  இருந்தன்.   பின்னேரப்பாட்டுக்கு அப்பா வேலையாலை வந்தான். அந்த நேரம் பார்த்து மாமியும்  வந்திருந்தார்.
" இவன் நடராசன் வந்து எக்கணம் ஆத்தையரே! தாயாரே! எண்டு கத்தப் போறானே! இண்டைக்குத் திருவிழாத்தான் " எண்டு தன்ரை  பங்குக்குப் பயமுறுத்தினார். கிணற்றடிக்குப் போய் கால்மேல் கழுவி சாமியறைக்குப் போய் விபூதி சாற்றிக் கொண்டு வந்த அப்பா என்னமோ நினைச்சுக் கொண்டு  
"தம்பி மோனை பாலய்யா!" எண்டு என்னை கூப்பிட்டான். நெஞ்சு பக்குப்பக்கென்று அடிக்க முன்னுக்கு வந்தன். அடக் கடவுளே! உந்தக் கந்தறுந்த காயம் அவன் கண்ணில் பட்டுவிட்டுது.

" ஐயோ! எடேய் மோனை என்னடா  நடந்தது? இஞ்சருங்கோ மச்சாள், தம்பிக்கு என்னெண்டு காயம் வந்தது?" எண்டு குரையைவைச்சான்.
"கொஞ்சம் கத்தாமல் இருக்க மாட்டியே? ஏனடா இப்பிடிக் குரையை வைச்சு ஊருக்கெல்லாம் விளம்பரம் வைக்கிறாய்?" எண்டு அம்மா அதட்டினார்.
"அது முள்ளுக்கம்பி குத்திப் போட்டுது. இடாக்குத்தரிடம் போய் ஏர்ப்பூசி போடத்தான் வேண்டும். ஆனால் முதலிலை பறையாமல் சோற்றைச் சாப்பிட்டுவிட்டுக் கூட்டிக் கொண்டு போ" எண்டு அம்மா சொன்னார்.
"சோறும் , மண்ணாங்கட்டியும். சும்மா இருங்கோ மச்சாள்! முதலிலே இடாக்குத்தரிடம் பிள்ளையைக் கூட்டிக் கொண்டு போய் ஊசி போடுவிக்க வேணும்." என்று அந்தரப்பட்டான்.
"இவன் ஒருத்தனோடை  இருக்க, நிற்க வழியில்லை. தான் பிடிச்ச முயலுக்கு மூண்டு கால்தான் எண்டு  அடம் பிடிப்பான்." அம்மா அலுத்துக் கொண்டார்.
"அவன் அங்கை வெளிக்கிடட்டும். அதற்கிடையிலே சோற்றை குழைச்சுக் கவளமாகத் தாறன், சாப்பிடடா!" அம்மா கெஞ்சிக் கேட்டார்.
"இல்லையுங்கோ மச்சாள் என்னைத் தெண்டிக்காதையுங்கோ. எனக்கு மனசில்லை!" எண்டு அப்பா மறுத்தான்.

எங்கடை மாமியாருக்கு, அப்பான்ரை தங்கச்சியாருக்கு அப்பாவின் நடப்புக்களைப் பார்த்து எரிச்சல் கிளம்பினது.
" இவன் ஒருத்தன் மட்டும்தான் கண்டறியாத பிள்ளைகளைப் பெத்து வளர்க்கிறான். ஏன் ஊருலகத்திலே வேறே ஒருத்தரும் பிள்ளைகளைப் பெத்து வளர்க்கவில்லையாமே? பிள்ளைகள் எண்டால் சும்மா என்ன பாவைப்பிள்ளைகளே, பிடிச்சு வைச்ச பிள்ளையார் போலே இருக்கிறதுக்கு? ஓடி, ஆடி விளையாடேக்கை காயம்,கீயம் வருந்தானே? சத்தம் போடாமல் போய் மருந்தைக் கட்டுவிச்சுக் கொண்டு வாவனடா!"எண்டு புறுபுறுத்தார்.

இடாக்குத்தரிட்டை போறவழியிலை
"நல்லா நோகுதோ மோனை?" எண்டு மயிலிறகாலை தடவுமாப் போலை அன்பா இதமாய் கேட்டான்.
"இல்லை அப்பா" எண்டன்.
"ஊசி போட வேணும். பயமாய்க் கிடக்கோ?"
"இல்லையடா! நீ தானடா சரியாப் பயப்பிட்டுக் குழறிப் போட்டாய்!"
"என்ன செய்யிறது மோனை? உங்களுக்கு ஒண்டெண்டால் என்னாலை தாங்கேலாமல் கிடக்கு."ஐயே! இதுக்கு மிஞ்சி என்னாலை இந்தப் பாணியிலை எழுத ஏலாது!
ஈழத்தமிழ் உறவுகளே! உங்கள் சிந்தனைக்குச் சில:

ஏன் இந்தியக் எழுத்தாளர்களைப் பின்பற்றி;
தாயை, மற்றும் வயது மூத்த பெண் உறவினரைக் குறிப்பிடும் போது
"அம்மா கடிதம் எழுதினாள்.
அக்கா பாடம் சொல்லிக் கொடுத்தாள்.
பாட்டி கதை சொன்னாள். "
என்று பெண்பால் வினைமுற்றுச்சொல் வைத்து மரியாதையீனமாக எழுத என்று வரும்போது குறிப்பிடுகிறீர்கள்?
உங்கள் பேச்சு வழக்கில்
"அம்மா கடிதம் எழுதினா/எழுதினாவு
அக்கா பாடம் சொல்லிக் குடுத்தா/குடுத்தாவு .
பாட்டி கதை சொன்னா/சொன்னாவு. "என்றுதானே மரியாதையாகக் கதைக்கின்றீர்கள்?
ஒன்று மட்டும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
"எவுடி அவ?" என்ற திரைப்பட வசனத்தைக் கேட்ட பின் அவ என்று குறிப்பிடுவது  அவமரியாதையான சொல் என்று ஆகிவிடாது. அவள் என்பது தான் எங்கள் இயல்பான பண்புக்கு ஏற்காதது.
வயதில் இளைய பிறத்திப் பிள்ளைகளை, அறிமுகம் அதிகமில்லாத பிள்ளைகளை நீங்கள் போட்டுப் பலர்பால் வினைமுற்றுச்சொல் வைத்து மரியாதை கொடுத்துக் கதைப்பது எங்களில் பலரது பழக்கம். அதே போல
" பிள்ளை! கொப்பா வீட்டிலை நிற்குதோ?"
"அக்கா சட்டை தைச்சிட்டுது"
"அண்ணா தோட்டத்தாலை வந்தது, இப்ப கடைக்குப் போட்டுது" என மரியாதையான வடிவத்தில் தான் அங்கே ஒன்றன்பால் வினைமுற்றுச்சொல் பாவிக்கப் படுகிறது. இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது? பேச்சுவழக்கில் புழங்கும் மரியாதைச் சொற்களை உங்கள் எழுத்துக்கும் கொண்டு வாருங்கள்.
" அம்மா தேநீர் போட்டு தந்தாள் "என்பதை விட,
" அம்மா தேநீர் போட்டுத் தந்தா" என்பதும்
" அம்மா தேத்தண்ணி போட்டுத் தந்திச்சுது "என்பதும் எனக்கு இயல்பானதாகப் படுகின்றது.

பலநாட்களாக என் மனத்தில் இடறியபடி இருந்த கருத்தை உங்கள் முன் வைக்கின்றேன்.

அன்புடன்
ந. குணபாலன்|
This entry was posted on 3:52 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 comments:

On January 27, 2014 at 2:13 AM , மணிமேகலா said...

வணக்கம் குணபாலன். நலமா?

மகிழ்ச்சி உங்களை மீண்டும் கண்டதில்.

ஈழத்தில் ’ன்’,மற்றும் ’ள்’ விகுதியை வயது மூத்தவர்களை விழிக்கும் போது பாவிப்பதில்லை என்றே நம்புகிறேன்.

ஆனால் ன், ள் விகுதிகளைப் பாவிக்காத நாம் அஃறிணையைச் சுட்டப் பயன் படுத்தும் அது,இது,உது போன்ற விழிச் சொற்களையும் வந்தது,இருக்குது,போயிட்டுது போன்ற வினை முற்றுக்களையும் உயர்திணைக்கு பாவிப்பது வேடிக்கையானது.

என் வேலைத்தலத்தில் ஒரு கேரள இளைஞன் வேலை பார்க்கிறார். அவருக்கு தமிழ் அதிகம் வராது. என்றாலும் என்னைக் காணும் போது மிக வயது குறைந்த அந்த இளைஞன் ,’நல்லா இருக்கியா?’ என்பார்.. ‘நல்லா இருக்கேன்பா’ என்பேன் நான்.

அதில் தொனிக்கிற ஓர் அக்கறையையும் பாசத்தையும் நான் மரியாதை விழிச் சொற்களில் உணர்வதில்லை.

வயதில் குறைந்த குழந்தைகளை நாம் அம்மா என அழைப்பது போல தான் இதுவும் என நம்புகிறேன்.

 
On January 27, 2014 at 10:33 AM , ந.குணபாலன் said...

இதை நான் எழுதிய நேரம் ஒரு விடயம் நினைவுக்கு வரவில்லை. அதை இங்கே குறிப்பிடுகின்றேன். சில இந்தியத் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பற்றும் சின்னப்பிள்ளைகள் கூட நல்ல வடிவாக"எங்கம்மா செஞ்சு கொடுத்தாங்க, எங்க பாட்டி சொல்லிக் கொடுத்தாங்க" என்று சொல்வார்கள். கேட்கக் கேட்க நல்ல ஆசையாய் இருக்கும். அப்பாவுக்கு உள்ள மரியாதை அம்மாவுக்கும் தரவேண்டும் என்பது என் கருத்து. எங்கள் வீடுகளில் அப்பாவை "அப்பா நீங்கள் என்றும்! அம்மாவை " எணேய் அம்மா நீ!" என்றும் சொல்வதுண்டு தான். ஆயினும், "எடியே தங்கச்சி!" என்பது போல் " எடியே அம்மா! என்று தாயை அழைப்பதில்லை தானே?