Author: வடலியூரான்
•3:00 AM
இதென்னடா இது அவனவன் சந்திரனுக்கும், செவ்வாய்க்கும் ரொக்கட் அனுப்பிற காலத்திலை வந்து நிண்டு கொண்டு கறண்டைக் கண்டு பிடிச்சாலும் பரவாயில்லை, கறண்ட் ஊருக்கை வந்ததையே ஒரு கதையெண்டு கதைக்க வந்திட்டானென்று நினைக்காதையுங்கோ.நாங்களாவது பரவாயில்லை உதையெண்டாலும் கதைக்கிறம்.இண்டைக்கும் கறண்டைக் காணாமல் குப்பி விளக்கிலை படிச்சுக் கொண்டிருக்கிற எங்கடை தம்பி,தங்கச்சிமார் எத்தினை பேர் இருக்கிறார்கள்.கறண்ட் வேண்டாம்.ஆண்டாண்டு காலமாய் ஆண்டு ஆண்டு வந்த எங்கன்றை சந்ததை அஞ்சுக்கும் பத்துக்கும் கையேந்தி,கஞ்சிக்கும் காத்திருக்கிற நிலைமைக்கு மாற்றிவிட்டார்கள்.அந்த தம்பியோ,தங்கச்சியோ நாளைக்கு இதைவிடப் புதுமியாய் கதை சொல்லும் போது நாங்களும் கேட்டு நிற்போம்.எண்பதுகளில் இனப்பிரச்சினை முனைப்புப் பெறமுன்னர்,எமது ஊர்களிலெல்லாம் இலக்சபானாவில் இருந்து இருபத்து மணித்தியாலக் கறண்ட் இருந்ததாம்.எங்கள் தோட்டங்களுக்கெல்லாம் இரவிலே லைற்(light) வெளிச்சதிலை மோட்டர் பூட்டித் தான் தண்ணி மாறுகின்றனாங்கள் என்று எங்களின் மாமாமார்,ஊரின் அண்ணாமார் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறோம்.அதன்பிறகு இனப்பிரச்சினை முனைப்புப் பெற்றதன் பின்னர் கற்ண்ட் எங்களெல்லாருக்கும் 'கட்' பண்ணப்பட்டது.அதனால் வீதிகளில் சும்மா நின்ற ரயின் தண்டவாளத்தைப் போன்ற இரும்பாலான கறண்ட் கம்பங்களை எல்லாரும் ஆளுக்காள் பிரட்டி,தேவையான அளவுகளில் வெட்டி வேலிகளூக்கு பொறுப்பான தூணாகவும்,ஆடு மாடு கட்ட கம்பியாகவும் என்று பல வேறு வழிகளில் பயன்படுத்தினார்கள்.வேலியின் மேலும் கீழும் கறண்ட் கம்பியை இழுத்துக்கட்டிய பின் மூரியை(பனம் மட்டை)அதிலே வரிந்தார்கள்.


கறண்ட் போஸ்ற்(post) இலிருந்த கப்பியைக் கழட்டி கிணத்திலே தண்ணி அள்ளப் பாவித்தார்கள்.ஏற்க்னவே கிணத்திலே கப்பி இருந்தவர்களூம்,துலா வைத்திருந்தவர்கள் கூட ஏன் ஓசியிலை கிடக்கிறதை சும்மா ஆரும் அள்ளிக் கொண்டு போகவிடுவானெனென்று மிஞ்சின கொஞ்ச நஞ்ச கப்பிகளையும் கொண்டு போய் வெங்காயக் கொட்டிலின் மூலைக் கைமரங்களிலே பவுத்திரமாகத் தூக்கி வைத்தார்கள்.இப்பிடி கறண்ட் ச்ப்ளை(supply) நிண்ட கையோடையே எங்கடை சனம் ஊரில நேற்று வரை கறண்ட் இருந்ததெண்டதுக்கு ஒரு சாட்சியமும் விடாமல் வழிச்சுத் துடைச்சு எல்லாத்தையும் கலட்டி,புடுங்கி எடுத்துக் கொண்டுத்துகள்.
நாங்களெல்லாம் பிறந்து 13, 14 வருசமாக கறண்டைக் கண்ணாலை கண்டது கூட இல்லை.கறண்ட் எப்பிடியிருக்கும், என்ன செய்யும் எண்டு கூடத் தெரியாத நாங்கள் கறண்டுடன் கற்பனையில் விளையாடினோம்.எங்கண்ரை வீட்டின் வெளி விறாந்தையோடிருந்த சுவிட்சை மேசைக்கு மேலை ஏறி மேல்நோக்கியோ, கீழ் நோக்கியோ போடுறது சரியென்று கூடத் தெரியாமல் ஏதாவது ஒரு பக்கம் தட்டிப் போட்டு "ஆ .... கறண்ட் .. வந்திட்டுதாம்..." எண்டு ஊரிலை எங்களைமாதிரி இருந்த எங்கடை வயசையொத்த குஞ்சு குருமனெல்லாம் விளையாடுவோம்.வீட்டை கனகாலம் கறண்ட் இல்லாமல் இருந்ததால் பாவிக்காமல் பழுதாய்ப் போன ஒரு ரேடியோவும் இந்தியன் ஆமி தூக்கி எறிந்ததால உடைந்து போயிருந்த ஒரு பெரிய "பொக்ஸ்" ரேடியோவையும் தூக்கி வைத்துக் கொண்டு,எங்கன்றை தலைகளை ரேடியோக்களுக்குப் பின்னால் ஒளித்துக் கொண்டு, நாங்களே பாட்டுப் படிச்சு,நாங்களே மகிழவேண்டிய சூழல் எங்களுக்கு.table fan ஐ எடுத்து அதன் முன் கவரைக் கழட்டி விட்டு நாங்களே கையாலை சுத்தி காத்து வாங்கி விளையாடினோம்.


சீலிங் fan இன் தகடுகள் எங்கள் தோட்டங்களின் வாய்க்கால்கள் உடைப்பெடுக்காமல் இருக்க மடைக்கு அணையாக வைக்கப் பயன்பட்டுது. இப்பிடி ஊரிலுள்ள அனைவரினதும் முந்திப் பாவித்த மின்சார சாதனங்கள் எல்லாம் அவற்றின் சம்சாரமான மின்சாரமில்லாமல் போனதால் தூக்கியெறியவேணடிய நிலைக்குப் பழுதாகிப் போயிருந்தாலும் எல்லாரும் கறண்ட் வந்தால் போட்டுப் பார்த்துட்ட்டுச் செய்வம் எண்டிட்டு வைச்சிருந்தார்கள்.இப்பிடியிருந்த எங்கடை ஊருக்கு கறண்ட் வந்தால் எப்ப்டியிருக்கும்.யாழ்ப்பாணம் இராணுவத்திடம் வீழ்ந்து 1,2 வருடங்களின் பின்னர் எல்லா இடங்களூக்கெல்லாம் கறண்ட் வழங்கும் வேலைகள் முடுக்கி விடப்பட்டன.அந்த வேலைகள் தொடங்கப்பட்டு 1, 1 1/2 வருடங்களின் பின்னர் திடீரென்று ஒருநாள் இலங்கை மின்சார சபையின் கன்ரரிலே கொங்கீரீற்றாலை அரியப்பட்ட லைற் போஸ்ற்களை கொண்டு வந்து கிறேனாலை இறக்கினார்கள்.ஊரிலை உள்ள எல்லாருக்கும் மின்சாரம் பாய்ஞ்சது போல இருந்தது.கொண்டு வந்து இறக்கிய மின்சார சபையின் ஊழியர்கள் எல்லாருக்கும் நல்ல மரியாதை.அவர்களுக்கு தேத்தண்ணீ, வடை,விசுக்கோத்து,கல்பணிஸ்,வாழைப்பழம் எண்டு எல்லாம் கொடுத்து உபசரித்தார்கள் ஊரவர்கள்.கவனிப்போ கவனிப்பு அப்படியொரு கவனிப்பு.அவர்கள் அவர்கள் வாழ்க்கையில் அதற்கு முன்னர் அப்படியொரு கவனிப்பை கண்டிருக்க மாட்டடார்கள்.சரி போஸ்றைப் போட்டு விட்டுப் போய்விட்டார்கள். போஸ்ற்றுகள் போட்ட போட்ட படியே போட்ட போட்ட இடத்திலே போட்ட போட்ட படியே மாதக்க் கணக்கிலே இழுபட்டன.பிறகொருநாள் கொஞ்சப் பேர் வந்து போஸ்ற்றுகளை நடுவதற்கு கிடங்கு கிண்டினார்கள்.மீண்டும் பிரமாதமான் உபசரிப்பு அவர்களூக்கு.மறுபடியும் போய் விட்டார்கள்.மழை வந்து வெள்ளத்தால் நிரவுப் பட்டன கிடங்குகளெல்லாம்.மீண்டும் இடைவெளி.மீண்டும் காலம் கடந்து வந்து அந்தப் போஸ்ற்றுகளை நட்டு விட்டுவிட்டுப் போனார்கள்.நாட்கள் உருண்டன.


கறண்ட் கம்பியிழுக்க காலம் கனியவில்லையெண்டு எங்கள் காத்திருப்பை நீட்டி மேலும் பார்த்திருக்கச் செய்தார்கள்.ஒரு மாதிரி கறண்ட் கம்பி இழுக்கப் பட்டாலும் பிரதான வீதியிளுள்ளவர்களுக்கே முதலில் இணைப்பு வழங்கப்பட்டதால் துணை வீதியொன்றிலிருந்த எங்களுக்கு கைக்கெட்டிய கறண்ட் வாய்க்கெட்டாமல் போனது பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.


இந்தக் கறண்ட் கூட ஒன்றும் இருபத்துமணித்தியாலமும் தொடர்ச்சியாக வருகின்ற கறண்ட் இல்லை.எங்களூருக்கும் எங்கள் அயலூர்கள் சில்வற்றுக்கும் சேர்த்து ஒரு ஜெனெரேற்றரை எங்களூரிலே பொருத்தி அதிலிருந்து எல்லா ஊர்களுக்கும் மின்சாரத்தை ஒன்றைவிட்ட ஒரு நாள் இரவு ஆறு மணியிலிருந்து பத்து மணி வரையும் காலை நாலரை மணியிலிருந்து ஆறு மணிவரையும் ஏதோ கறண்ட் என்ற பெயரில் காண்பித்தார்கள்.


பிரதான வீதியோடிருந்த சிவா அண்ணை என்பவரின் வீட்டிலிருந்து அவரின் வீட்டில் உள்ள ஒரு கோல்டரில்(holder) ஒரு அடப்ரரைக்(adapator) கொளுவி அதன் மற்ற முனையில் இன்னுமொரு அடப்ரரைக் கொளுவி எங்கள் வீட்டுக் ஹோல்டரிலே கொண்டு வந்து சொருகினோம்.எங்கள் வீட்டிலே லைற் எரிந்த அந்த அருமையான நேரம் இன்றும் என் கண் முன்னே நிற்கின்றது. நாங்க்ள் போட்ட கூச்சல்களூம்,துள்ளல்களூம் கும்மாளங்களும் பக்கத்து வீட்டுக் காரர்களுக்கெல்லாம் சொல்லாமலே காட்டிக் கொடுத்தது எங்கள் வீட்டிலே கறண்ட் வந்த சேதியை.


அடுத்த நாள் பள்ளிக் கூடத்திலும் ரியூசனிலும் காணூமிடமெங்கும் நண்பர்களிடமெல்லாரிடமும் எங்களுக்கு கறண்ட் வந்த சேதியை சொல்லி மகிழ்ந்ததையெ்ல்லாம் நினைக்க இன்று சிரிப்பாக இருக்கினறது.பின்னர் சிறிது காலத்தின் பின்னர் எங்களுக்கும் நேரடி இணைப்புக் கிடைத்தது.இணைப்புப் பெறாமல் பலர் சட்டவிரோதமாக கறண்ட் கம்பியிலேயே ஒரு கொக்கைத்தடியாலை பக்குவமாகக் வயரைக் கொழுவி direct ஆக கறண்ட் எடுக்கத் தொடங்கினதாலை இரவிலையெல்லாம பல்ப்(bulb) இன் இழை தணல் மாதிரி சிவப்பாத் தான் எரியும்.ஆகக் கூடின பவர் அதுக்கு அவ்வளவு தான்.வெளிச்சமே இருக்காது.ஏனாடா இதுக்கு கறண்டை தருவதை விட தராமலே இருந்திருக்கலாமே ஏன்று கூட யோசிக்கத் தோன்றும்.ஒன்று இரண்டு வருடங்களின் பின்னர் 24 மணித்தியாலக் க்றண்டும் வந்தது.24 மணித்தியாலக் கறண்ட் வந்த செய்தி கேட்டு ரியூசனாலே சைக்கிளில் கூவிச் சென்று சுவிட்சைப் போட்டுப் பார்த்ததெல்லாம் பசுமரத்தாணி மாதிரி மனசிலை பதிஞ்சிருக்குது.ஆனாலும் இன்றுவரைக்கும் 24 மணித்தியாலம் என்று சொன்னாலும் கூட இரவிலே மின்னி மின்னி எரியும் அல்லது இரவிலே 'கட்' ப்ண்ணுப்படும்.


ஆனால் ஐஞ்சு நிமிசம் கறண்ட் போனாலே அஸ்ஸு, புஸ்ஸூ, ஐயோ என்று என்று a/c க்காகவும் serial பாக்கிற பொம்பிளையள் கத்திறதியும் பார்க்கேக்கை அவையெளெல்லாரையும் எங்கடை சன பட்ட, படுகிற கஸ்ரங்களையெல்லாம் கொண்டு போய்க் காட்ட வேணும் மாதிரிக் கிடக்குது.எங்கன்ரை எல்லாச்சனமும் எப்பதான் கறண்ட் மாதிரி எல்லா வசதியும் கிடைச்சு சுயமா சுதந்திரமா நிம்மதியா வாழுறது எண்டு தெரியாமல் கிடக்குது
This entry was posted on 3:00 AM and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

6 comments:

On August 8, 2010 at 4:04 AM , மணிமேகலா said...

சுவாரிஷமாகச் சொல்லியிருக்கிறீர்கள் வடலியூராரே!

1995ல் யாழ்ப்பாணமே பெருநிலப்பரப்பு நோக்கி நகர்ந்த நாளின் போது பட்ட பாடுகளும் பதிவாக வருமா?

சுவாரிஷம் கருதியல்ல; வரலாற்று நோக்கம் கருதி.

 
On August 8, 2010 at 4:48 AM , கானா பிரபா said...

மின்சாரத் தட்டுப்பாடு/தடை காலத்து நினைவுகள் சுவை

 
On August 8, 2010 at 5:02 AM , Unknown said...

///இணைப்புப் பெறாமல் பலர் சட்டவிரோதமாக கறண்ட் கம்பியிலேயே ஒரு கொக்கைத்தடியாலை பக்குவமாகக் வயரைக் கொழுவி direct ஆக கறண்ட் எடுக்கத் தொடங்கினதாலை இரவிலையெல்லாம பல்ப்(bulb) இன் இழை தணல் மாதிரி சிவப்பாத் தான் எரியும்///

இதே பக்குவம் எங்கள் ஆசான் ஒருவருக்கு கொஞ்சம் பிசகியதால் நடந்தது மனதுக்கு வந்து போகிறது.

மணியாச்சி...
///1995ல் யாழ்ப்பாணமே பெருநிலப்பரப்பு நோக்கி நகர்ந்த நாளின் போது பட்ட பாடுகளும் பதிவாக வருமா///
நாங்கள் பாடுபட்டதாகத் தெரியவில்லை. தென்மராட்சி பிடிச்சு வடமராட்சிக்கு ஆமி வந்த அன்றைக்கு நானும் வடலியூராரும் ஒன்றாகவே பாடசாலையைவிட்டு நேரத்தோட வீட்டுக்குப் போனதாக ஞாபகம்

 
On August 8, 2010 at 5:10 PM , மணிமேகலா said...

//தென்மராட்சி பிடிச்சு வடமராட்சிக்கு ஆமி வந்த அன்றைக்கு//

அப்ப நீங்க ரெண்டு பேரும் தென்மராட்சி போல!அப்ப அடைக்கலம் கொடுத்த நினைவுகள் இருக்குமே?

குழுக்கோசும் தண்ணீரும் பிஸ்கட்டுமாக வீதியோரம் தென்மராட்சி மக்கள், அந்த மழை பெய்து கழுவி விட்டிருந்த பட்டு வெள்ளை மணல் பரப்பில் எல்லோருக்கும் கொடுத்துக் கொண்டு நின்றிருந்த கோலம் மனதை விட்டு என்றும் நீங்காது.

ஓர் இரவையும் ,ஒரு முழுப்பகலையும் நின்றும் நடந்தும் நனைந்தும் பயந்தும் இழந்தும் வந்த மக்களுக்குக் கிடைத்த பெரிய இளைப்பாறல் அது!

அது மண்ணின் அழகா? மக்களின் அழகா? மனிதாபிமானமா?

(ஆச்சிய எழுதணை எண்டு கேட்டுப் போடாதைங்கோ பிள்ளையள்.உண்ணாணைத் தான் சொல்லுறன்.பிறகு அறளை பேந்து போச்சுதோணை உனக்கு எண்டு பேசுவியள்.)

 
On August 28, 2010 at 6:23 AM , வடலியூரான் said...

மணிமேகலா வருகைக்கும் பின்னிடுகைக்கும் நன்றி

 
On August 28, 2010 at 6:24 AM , வடலியூரான் said...

கானாபிரபா,கீத் வருகைக்கு நன்றிகள்.ஆமாம் மணிமேகலா, கீத் சொன்னது போல் நாங்கள் இரண்டு பேரும் நேரத்தொடை பள்ளிக்கூடத்தாலை வீட்டே போய்விட்டோம்