Author: தமிழ் மதுரம்
•5:36 AM
பழசுகளும் பகிடிகளும்/ பகிடியளும்!
கதை நிகழும் இடம் ரசாத்தி அக்காவின் நல்ல தண்ணிக் கிணத்தடி!இக் கதையில் இடம் பெறும் பாத்திரங்கள்: ராசாத்தி, செல்லாச்சி, பாக்கியம் ஆச்சி
இனி......பாக்கியம்: ’’என்னடி பிள்ளை’ ராசாத்தி ’அறக்கப் பறக்க ஓடியாறாய்? என்ன விசேசம்’? ஏதும் அவசரமே பிள்ளை?

ராசாத்தி: இல்லையணை பாக்கியமாச்சி.. உவன் ’மூத்தவன்’ சாப்பிட்டுக் கொண்டிருந்தவன். ரியூசனுக்குப் போக வேணும் எண்டு. அவசர அவசரமா விழுங்கிக் கொண்டிருந்தவன். அது தான் தொண்டைக்கை ’பொறுத்துப் போச்சு’. குடத்துக்கை அவசரத்துக் குடுக்க குடிக்க தண்ணியும் இல்லை. அது தான் கொஞ்சம் நல்ல தண்ணி ‘அள்ளிக் கொண்டு’ போவம் எண்டு ஓடியந்தனான் ஆச்சி. சரியணை ஆச்சி.. நான் தண்ணியைக் கொண்டு போய்க் குடுத்துப் போட்டுப் ‘பேந்து வாறனணை ஆச்சி.


ராசாத்தி: தண்ணிக் குடத்தை வைத்து விட்டு பாக்கியம் ஆச்சியின் கிணத்தடிக்கு ஓடி வருகிறா. அவவைத் தொடர்ந்து செல்லாச்சியும் வருகிறா.


பாக்கியம்: எடி பிள்ளை... செல்லாச்சி.. சுகமாய் இருக்கிறியேடி. என்ன உன்னை இந்தப் பக்கம் காணவில்லை. ’கண்டு கன காலம்’.

செல்லாச்சி: அதணை ஆச்சி உவன் என்ரை ’இளையவன் இருக்கிறான் எல்லே. அவன் போன கிழமை ’வெளியிலை’ இருந்து வந்து நிண்டவன். உனக்குத் தெரியுமெல்லே. அது தான் அவனோடை ’கோயில் குளமெண்டு திரிஞ்சு உங்கடை ’வட்ட மேசையடிக்கு’ வர ஏலாமல் போட்டுது.
அது சரியடி பிள்ளை... ராசாத்தி.. என்ன உன்ரை றோசுக் குடத்தைக் காணேல்லை. பச்சைக் கலரிலை குடம் வாங்கியிருக்கிறாய். என்ன ’மோனும், மருமோளும்’ காசு அனுப்பீனமோ? உனக்கென்ன? வெளி நாட்டுக் காசு. ’ஹலோ எண்டால் கிலோவிலை வரும்’. ம்.. உம்... நடக்கட்டும் நடக்கட்டும்.


ராசாத்தி:
எணேய் ஆச்சி.... உனக்கு வயசு போனாலும் இந்த நக்கல், நையாண்டி குறையவேயில்லை. கேட்டியேடி செல்லாச்சி.. பாக்கியமாச்சியின்ரை கதையை. நான் குடத்தை மாத்திப் போட்டனாம். மனுசி நல்லா ‘வரையறைவு பாக்குது’. ஆச்சி நீ ’வரையறைவு பாக்கிறதிலை’ சரியான ஆள் தான்..
அதணை ஆச்சி... என்ரை றோசுக் குடத்திலை சின்னதா ’பீத்தல் விழுந்து போட்டுது’. அதாலை தண்ணி ’சிந்துது’. அது தான்.. குடத்தை மாத்திப் போட்டன். அதுக்குப் பாரன் செல்லாச்சி..இந்தக் கிழவியின்ரை நக்கலை.

பாக்கியம்: அடியே பிள்ளை எங்கடை ஆட்கள் இப்ப வெளி நாடுகளுக்கு கப்பலிலையும் எல்லோ வெளிக்கிடுறாங்களாம். பாவம் பொடியங்கள். சரியாக் கஸ்ரப்படுதுகள். கடலிலை கப்பலிலை போறதெண்டு வெளிக்கிட்டு நீந்தத் தெரியாமல் ’தாண்டுமெல்லே’ போகுதுகள். பின்னை பாரணடி பிள்ளை. என்ரை பேரனும் ஒருத்தன் கப்பலிலை எங்கையோ அஸ்ரேலியாவாம்...எண்டு ஒரு நாட்டுக்குப் போனவன். அவன் போன கப்பலும் ’தாழத் தொடங்கி அதுகள் ஒண்டிரண்டு தானாம் நீந்திக் கரை சேர்ந்ததுகள். பாவம் எங்கடையள் என்ன?

செல்லாச்சி: உனக்குத் தெரியுமோடி.. ’நாய்க்கு நடுக்கடலிலை போனாலும் நக்குத் தண்ணி தானாம்’. அது போலத் தான் எங்கடையளுக்கு எங்கை போனாலும் விடிவே இல்லை. பாவம் இளம் பொடியள். கஸ்ரப் பட்டுப் போய் நடுக்கடலிலை ’அந்தரிக்குதுகள். என்ரை சந்நிதியானே.. நீ தானடா உதுகளை காப்பாத்த வேணும்/


ராசாத்தி: பின்னை என்ன காணும் நீங்கள் ரெண்டு பேரும் லூசுக் கதை கதைக்கிறியள். உவங்கள் வெள்ளைக்காரர் அகதிகள் என்று உண்மையான பிரச்சினை உள்ள ஆட்களை விசாரிச்சு விசாக் குடுக்க இப்ப பிரச்சினை இல்லாததுகளும் எல்லோ பட்டியா வெளிக்கிட்டுப் போய் விசாக் கேட்குதுகள். எங்கடையள் எப்பவுமே திருந்தாதணை ஆச்சி. ‘இருக்க இடம் குடுத்தால் உதுகள் படுக்கவும் பாயெல்லே கேட்குதுகள்.

பாக்கியம்:
எங்கடையளோ திருந்தாதுகள். ’அவிட்டு விட்ட பட்டியள் மாதிரி ஒன்றுக்குப் பின்னாலை ஒண்டா இப்ப வெளிக்கிட்டு உவங்கள் வெள்ளைக்காரருக்கெல்லே தலையிடியைக் குடுக்குதுகள். உதைத் தான் சொல்லுறது பிள்ளையள் ’இடம் குடுத்தால் மடமும் கட்டுவாங்கள்’ என்று. ’பொழுது படப் போகுது’ பிள்ளையள். உங்களோடை கதைச்சுக் கதைச்சு முதுகு ’ஊத்தை பிரட்ட’ மறந்து போட்டன். ’கதை எண்டால் கயிலாயம் போகலாம் எண்டுறது இதைத் தான் பாருங்கோ. சரி.. சரி...’ஊத்தை பிரட்டிப் போட்டு நாலு வாளி வாத்துப் போட்டு வாறன் இருங்கோடி...


சரி ஆச்சி.. நீ வடிவாக் குளி... நாங்கள் வெளிக்கிடப் போறமணை...போயிட்டு வாறம் ஆச்சி..

பாக்கியம்: என்னடி பிள்ளையள் போறீங்களே.. சரி சரி..பிறகு சந்திப்பம் என்ன.

பாக்கியம்: அடியே பிள்ளை செல்லாச்சி... என்ன உன்ரை பேத்தி அடிக்கடி ஓங்காளிக்கிறாளாம்? என்ன விசயம்? சொல்லிப் போட்டுப் போவனடி.

செல்லாச்சி: அதணை ஆச்சி.. எனக்கொரு.... .. போறான்.....

மேலே உள்ள இச் சிறு உரையாடலில் வரும் பெரும்பாலான சொற்பதங்கள் எமது ஈழத்தின் பல பிராந்தியங்களிலும் பாவனையில் உள்ளவையே. ஒரு சிலருக்கு இச் சொற்பதங்கள் புதிதாகவும் இருக்கலாம். ஆகவே இச் சொற்பதங்களுக்குரிய/ சொற்களுக்குரிய விளங்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதே சாலச் சிறந்தது.


*’அறக்கப் பறக்க ஓடியாறாய்: அவசரமாக வியர்க்க விறுவிறுக்க.. அவசரமாக/ வேகமாக ஓடிவருவதை குறிக்கும்.

*’மூத்தவன்’: வீட்டிலை உள்ள முதலாவது பையன்/ வீட்டிற்கு மூத்த பையன்.

*என்ன விசேசம்’: என்ன புதினம்? என்ன சங்கதி.. இப்படியான பல பொருள்களில் வரும்.

*தொண்டைக்கை ’பொறுத்துப் போச்சு’: தொண்டையிற்குள் சிக்கிச் போச்சு/ தொண்டையிற்குள் உணவு தடக்கிப் போட்டுது/ இறுக்கிப் போட்டுது.(மென்று விழுங்கிய உணவு தொண்டையிற்குள் பொறுத்து நிற்பதை குறிக்கும்- சமிபாட்டுத் தொகுதிக்குச் செல்லும் நரம்புத் துவாரத்தினுள் உணவு சிக்குவதை குறிக்கும்/

*தண்ணி ‘அள்ளிக் கொண்டு’ : தண்ணி கிள்ளுதல்/ தண்ணி எடுத்துக் கொண்டு போவதைக் குறிக்கும்.

*‘பேந்து வாறனணை ஆச்சி: கொஞ்ச நேரத்தாலை வருகிறேன். பிறகு வருகிறேன்.

*’கண்டு கன காலம்’: பார்த்து பல நாட்கள்/ நீண்ட நாட்களின் பின்னர் சந்திப்பவரைக் குறித்தல்.

*இளையவன்: குடும்பத்தின் கடைசிப் பிள்ளை/ வீட்டின் கடைக் குட்டி

*’வெளியிலை’ இருந்து வந்து நிண்டவன்: வெளி நாட்டிலை இருந்து வந்து நின்றவன்./ தூர தேசத்தில் இருந்து வந்து நிற்றல்.

*’கோயில் குளமெண்டு திரிஞ்சு: கோயிலைச் சுற்றி வலம் வந்து./ கோயிலுக்குப் போய்.

*’வட்ட மேசையடிக்கு’: பழசுகளின் மாநாட்டு இடம்/ பழசுகள் கூடிக் கதைக்குமிடம்/ ஊரிலுள்ளவர்கள் சேர்ந்து அரட்டையடிக்கும் பகுதி

*ஏலாமல் போட்டுது: இயலாமல் போட்டுது/ முடியாமல் போட்டுது.

*’மோனும், மருமோளும்’ : மகனும் மகனின் மனைவியும் எனும் பொருளில் இவ் இடத்தில் நோக்கலாம். மருமகள்: தனது சகோதரனின் மகளையும் மாமி/ மாமா முறை உள்ளவர்களால் மருமகள் எனும் பொருள் பட அழைப்பார்கள்.

*’ஹலோ எண்டால் கிலோவிலை வரும்’: வெளி நாட்டிலை உள்ளவர்களிடம் உரையாடிய பின்னர் அவர்கள் அனுப்பும் பணத்தினைக் குறிக்கும். வெளி நாட்டுக் காசு உள்ளூரிற்கு வரும் போது பெரிய தொகையாக இருப்பதால்/ சுளையாக வருவதால் அப் பணத்தினை விளிக்கப் பயன்படுத்துவார்கள்.

*‘வரையறைவு பாக்குது’/ விடுப்புப் பார்த்தல்: நன்றாக உற்றுப் பார்த்தல். மற்றவர்களின் விடயங்களை வேவு பார்த்தல்/ உளவு பார்த்தல். அல்லது உய்த்தறிதல்.

*’பீத்தல் விழுந்து போட்டுது’: ஓட்டை விழுந்து போட்டுது/ குடத்திலை துவாரம் விழுந்து விட்டுது.

*’சிந்துது’: ஒழுகுது/ துவாரத்தின் வழியே நீர் வெளியேறுவதைக் குறிக்கும்.

*’தாழத் தொடங்கி: கப்பல் கப்பல் மூழ்கத் தொடங்குதல்/ கடலில் மூழ்கத் தொடங்குதல்.

*அந்தரிக்குதுகள்: தத்தளித்தல்/ உத்தரித்தல். அநாதரவாக இருத்தல்/ உதவியற்று நிர்க்கதியாக இருத்தல்.

*பட்டியா வெளிக்கிட்டுப் போதல்: கூட்டமாகப் புறப்படுதல்/ அலையாகத் திரளுதலை அஃறிணையில் விளித்துக் கூறுவார்கள்.

*’இடம் குடுத்தால் மடமும் கட்டுவாங்கள்’/ ‘இருக்க இடம் குடுத்தால் உதுகள் படுக்கவும் பாயெல்லே கேட்குதுகள்: இச் சொல் ஒரு சில உதவிகள் செய்தால் எல்லாவற்றையும் அவர்களிடம் வேண்டிக் கையேந்துவதை நகைச்சுவையாக சொல்ல இப் பழமொழியினைப் பயன்படுத்துவார்கள்.

*’ஊத்தை பிரட்ட’ : முதுகில் உள்ள அழுக்கினை அகற்றிக் குளிப்பதைக் குறிக்கும்.*ஓங்காளிக்கிறாளாம்?: இச் சொல்லுக்குரிய விளக்கத்தினை வாசகர்களாகிய நீங்கள் தெரிந்தால் சொல்லலாம். விடை என்ன? விரைவில் சொல்லுங்கள்.
|
This entry was posted on 5:36 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

3 comments:

On August 2, 2010 at 7:27 AM , Unknown said...

ஓங்காளிக்கிறாளாம் - வாந்தியெடுக்கிறாளாம்?

 
On August 2, 2010 at 8:39 AM , sathishsangkavi.blogspot.com said...

ஒவ்வொரு வார்த்தைக்கும் அழகான விளக்கங்கள்..

 
On August 4, 2010 at 1:45 AM , ஹேமா said...

ஓங்காளிக்கிறதுக்கு சத்தி எடுக்கமுன்னம் வயிறு பிரட்டி சத்தி வராம ....எச்சில் ஊறி வாய் மட்டும் ஆ..ஆ எண்டு திறந்து அவதிப்படுவமே ...அதுதான் எண்டு நினைக்கிறன் !