Author: ஹேமா
•2:25 AM
தட்ஷணாமூர்த்தி
நினைவலையொன்று வீசியடிக்கிறது இன்று தொலைபேசியூடாக அம்மாவோடும் அப்பாவோடும்.

ஞாபகங்கள் ...இதுதான் எங்கட பலஹீனம்.எல்லாத்தையும் மனசுக்குள்ள பொக்கட் போல நிரப்பி வச்சுக்கொண்டு திரியிறம்.அது உடம்பு முழுக்க ஊர்ந்தபடி திரியுது.எதையும் பெரிசா நினைக்காமல் மறந்திட்டா நிறையப் பிரச்சனைகள் குறையும்.ஒதுக்கித் தள்ளி வச்சிட்டு இதுகள் இல்லாட்டி எங்களுக்கென்ன எண்டு இருக்க முடியாமல் இருக்கு.

லண்டனில இருந்து வாற தொலைக்காட்சியில ஒரு விளம்பரம்.அதில கோயில் திருவிழா. அங்க ஒரு மேளச்சமா.அதைப் பார்த்தால் ரசிச்சுச் தொலைச்சிட்டுப் போகவேண்டியதுதானே. ஏன் உடன் எங்கட உப்புமடச் சந்தியடிப் பிள்ளையார் கோயில் ஞாபகத்துக்கு வரவேணும்.அது துரத்தியடிக்குது ஊர் வரைக்கும்.தூரமாய்க் கேட்ட மேளச் சத்தம் இப்ப பக்கதில கேக்குது. அந்த மண்வாசனை செம்பாட்டுப் புழுதியும்,பனக்கூடலும்,பனம்பழ வாசமும்,பன்னாடை, காவோலை,கொக்கறை,ஙொய் என்று பறந்து பயமுறுத்தும் மாட்டிலையான் அதைத்தொடர்ந்து....

அப்புக்குட்டி அண்ணாட்ட ஏதோ ஒரு பனைமரம் குறிச்சு அந்தப் பனைக் கள்ளுத்தான் வேணுமெண்டு வாங்கிக் குடிச்சிட்டு சித்தியை அடிக்கிற சித்தப்பா,அவரோடு சேர்ந்து குடிச்ச வேலுப்பிள்ளை அண்ணை வடக்கு வீதியில மேளச்சத்தம் கேட்டு கண்ணையும் பூஞ்சிக்கொண்டு வாயையும் சப்பிப் புழுந்திக்கொண்டு "அடியுங்கோ நல்லா அடியுங்கோ" எண்டு தானும் தாளம் போட்டபடி அட்டகாசம் பண்றதையும் மறக்க முடியேல்ல.

நிலவில் நண்பர்கள் சூழ
கோயில் மணல் கும்பியில்
நான் தான் ராஜாவாய்.

அடுத்த நிமிடம்கூட
கேள்விக்குள் இல்லாத
விதை முளைத்து
வெளி வந்த வசந்த காலம்.

பூவரசம் தடியும்
கள்ளி முள்ளும்
காஞ்சூண்டி இலையும்
பிச்சு மறைச்சு
மூடியொரு பொறிக்கிடங்கு.

குண்டிக் கழுசானில்
தபால் போடலாம்.
மூக்கைச் சீறி
சட்டையில் துடைச்சபடி

நிலவு வெளிச்சத்தில்
ஒளிச்சிருச்சிருந்து பாக்க
பொறிக்கிடங்கில்
விழுந்து
அம்மா என்று அலறும்
யாரோ ஒருவர்
அடுத்த நொடி
அப்பா வாறார்.

மாயமாய் மறையும்
வித்தைக்காரன் நான் அப்போ!!!

சில நேரங்களில் இப்பிடி நினைவுகள் துரத்தி துரத்தி அடிக்கேக்க எங்கயாச்சும் ஒரு மூலையில குந்தியிருந்து அழவேணும் போலக் கிடக்கு.பக்கத்துக் கோயில்ல திருவிழா எண்டா முதல் நாளே லவுட்ஸ்பீக்கர்ல பக்திப் பாட்டுக்கள் கேக்கத் தொடங்கிடும். கிட்டத்தட்ட வீடும் கோயில்போல ஆயிடும்.விடியக்காலேல எழுப்பிவிட்ருவா அம்மா. துளசிமாடம் சுற்றிப் பெரிய முற்றம்.அதைப் புழுதி பறக்கக் கூட்டிப் பிறகு புழுதி தணிக்க சாணகம் கரைச்சுத் தெளிச்சு முற்றம் நிறையக் கோலம் போட்டு வீட்டு முற்றத்தில கட்டில் போல ஒரு பெரிய திண்ணையோடு ஒரு பகுதி.அதையும் அழகா பசுஞ்சாணியால மெழுகிவிடுறா அம்மா.

வீட்டில சொல் பேச்செல்லாம் அந்த நேரத்தில ஒழுங்காக் கேப்பம்.ஏனெண்டால் இரவில கண்ணன் கோஷ்டி,சின்னமணி அண்ணையின்ர வில்லுப் பாட்டு,சின்னமேளம் எண்டு நடக்கும்.பிறகு விட மாட்டினம்.எல்லாரும் தோய்ஞ்சு குளிச்சு சாமி கும்பிட்டு பிடிக்காவிட்டாலும் விரதம் இருந்தே ஆகவேணும்.பசியெண்டா கண்ணுக்குள்ள பசிக்கும்.

அம்மா சமைக்க அடுக்குப் பண்றா.அம்மாவுக்கு தேங்காய் துருவி வெங்காயம் உரிச்செல்லாம் குடுப்பன் வீட்ல நிண்டா.அப்பாவும் ஒரு சாதரண தவில் வித்வான்தான்.போய்ட்டார் வேற எங்கேயோ சேவுகமாம்.நான் பள்ளிகூடம் போகேல்ல.பிள்ளையார் எல்லாம் அருள் தருவார் எண்டு திருவிழா நேரத்தில 2-3-4 நாளைக்குப் போகமாட்டன்.

சமைச்சு வச்சிட்டு கோயிலுக்குப் போய் வந்துதான் சாப்பிடுவம்.கோயில்லயும் சாப்பிடலாம். அன்னதானம் தருவினம்.அம்மாவுக்கு வருத்தம்.பிந்தினால் மயங்கி விழுந்திடுவா.அம்மா பூசை முடிய அவசரமா வீட்டை வந்து சாப்பிடுவா.நான் வரமாட்டன்.அம்மாட்ட குழப்படி செய்யமாட்டன் எண்டு சத்தியம் பண்ணிட்டுத்தான் நிப்பன்.அதுவும் விரதமெண்டா சத்தியத்தைக் காப்பாத்தவேணும்.

பூசை தொடங்குது.சுத்துப்பலி சாமியைச் சுத்துவினம்.தொடங்கும் ஆரவாரம்.
ஆம்பிளைகள் பிரதட்டையும்,பொம்பிளைகள் அடியழிச்சும் வருவினம்.வடக்கு வீதிதான் அமர்க்களம்.சாமியும் அப்பிடியே நிக்கும்.அப்படி ஒரு நிகழ்வு அதிலதான்.


இணுவில் தட்ஷணாமூர்த்தி,இணுவில் சின்னராசா,கைதடிப் பழனி,நாசிமார் கோயிலடி கணேசு.சமா எண்டா அதுதான் மேளச்சமா.அதுதான் கேட்டது எனக்கு இப்ப கொஞ்சம் முன்னால.அவையளை அதில கன நேரம் நிக்க வைக்கவெண்டே பெரிசா மைக் கொண்டு வந்து வச்சிடுவினம்.

தட்ஷணாமூர்தியின்ர வடிவைப் பாக்கவெண்டே பெட்டையள் கூடி நிப்பினம்.அவர்தான் தொடங்குவார் தெரியுமோ.நெஞ்சில மொத்தமா ஒரு சங்கிலி மீன் வச்ச பதக்கத்தோட சிரிச்சபடி மனுஷன் தொடங்கி வைப்பார்.அவரின்ர தவில் மழைபோல கொட்டித் தீர்க்கும். கடல் போல கொந்தளிக்கும் விரல்களில அத்தனை லயம்.பிசகாத தாளம்.கோபமாய் முறைச்சு சிரிச்சு தானே தாளமும் போட்டுக் காட்டித் தன் கலையின் அத்தனை வித்தையையும் கலந்து குழைத்துத் தரும் கலைக் கடவுள் அவர்.

மேளத்தில் முத்துவிரல்கள் விளையாடி தாளலய ஞான தரிசனங்கள் காட்டிய நம் ஈழத் தவிலரசன் எழிலார் இசைக்கணித வேழமெனத் திகழ்ந்த வித்தகன் என்பார்கள் அவரை.

ஈழத்து மேதை கொடுத்த லயத்தை அப்பிடியே கேட்டு வாங்கிக் கொள்கிறார் இணுவில் சின்னராசா.தடியன் சின்னராசா.கருவல் சின்னராசா எண்டெல்லாம் பேர் வச்சிருக்கிறம் அவருக்கு.மலைபோல பெருத்த உடம்பு.தந்ததை நான் அழகாக இன்னும் அழகாய் மெருகுபடுத்தி வாசிப்பேன் என்பதுபோல தாளக்கட்டோட பிசகாமல் வேர்த்து ஒழுக ஒழுக வாசிக்கிறார்.பக்கத்தில அவரின்ர மகனும் நிக்கிறார் தாளம் போட்டபடி.தட்ஷணாமூர்த்தியை நேர பார்த்தபடி என்னாலயும் ஏலும் என்கிற மாதிரி சிரிச்சபடி வாசிக்கிறார்.நாங்கள் கொஞ்சப் பெடியள் சுத்தி நிண்டு வேடிக்கை பாக்கிறம்.ஆனாலும் ரசிக்கிறம்.சிரிக்கிறம்.தாளம் போட்டும் பாக்கிறம்.ஆனால் அவையள் போடுறது வேற மாதிரிக் கிடக்கு.

விரதம்.பட்டினி சனங்களுக்குப் பசி.எண்டாலும் வெயிலுக்க நிக்குதுகள் மேளச்சமா ரசிச்சபடி.இதை விட்டால் இனி அடுத்த வருசம்தானே.

N.K.பத்மநாதன்

சின்னராசாவைக் கவனிச்சபடி கட்டையான ஒருத்தர்.கருப்புத்தான்.கை துருதுருக்கக் காத்திருக்கிறார் கைதடிப் பழனி.ஞானம் முட்டின தாள லயிப்பு சின்னராசவின்ர வாசிப்பில.அவர் குடுக்க இவர் வாங்கிறதுபோல அப்பிடியே எட்டிப் பிடிச்சுக்கொள்றார் பழனி.வாங்கிய வேகத்தில் தன் திறமையைச் சொல்லாமல் பார்வையாலயே கர்வமாய்ப் பார்த்தபடி வெளுத்து வாங்குகிறார்.தாளம் ஏற ஏற அவரை விட தட்ஷணாமூர்த்தியும் சின்னராசாவும் வித்துவத்தில் திறமையாய் இருந்தாலும் தானும் சளைத்தவரில்லை என்பதைப் புன்னகைத்தபடி தவிலில் சொல்லிக் காட்டியபடி வாசிக்கிறார்.

இது ஒரு சோர்வில்லாத சமர்.தாளத்தை மெட்டுக்குள் அடக்கும் வித்தை.கைமாறும் தாளக்கட்டு தவிலுக்குள்.பசி பறந்திட்டுது.அம்மாகூட வீட்டை போகாம மயங்கியும் விழாமப் பாத்துக்கொண்டிருக்கிறா. பிள்ளையாரப்பா அழகா ரசிச்சபடி இருக்கிறார்.பசிக்கேல்ல அவருக்கும்.

நிலை கலையாமல் பார்த்துக்கொண்டிருந்த வேகத்திலயே மேளச்சமா நாச்சிமார் கோயிலடி கணேசு,வாக்கர் கணேசு எண்டு சொல்ற அவரிட்ட போய்ட்டுது.அவர் கால்களை அகல வச்சபடி தாளத்தைக் காலில போட்டுக்கொள்றார்.தாளக்காரருக்கு ஒரு முறைப்பு.தவில் ஒன்றுதான் என்றாலும் ஒவ்வொருவர் வாசிப்பிலும் ஒவ்வொரு வித்தியாசம் காணலாம் வாசிக்கும் தன்மையிலும் தவிலின் நாதத்திலும் கூட.கணேசு வாசிக்கும்போது உடம்பு அசையாது.வெத்திலை வாய் நிறைய எப்பவும் இருக்கும்.கோயில்ல வாசிக்கும்போது மட்டும் இருக்காது.நாசூக்கான வாசிப்பு எனலாம்.


கானமூர்த்தி பஞ்சமூர்த்தி

கண்கள் விரிய காது அடைக்க ஆனாலும் தூரமாய்ப் போகாமல் பக்கத்தில நிண்டு பார்ப்போம்.ஒருத்தை ஒருத்தர் போட்டிபோல யாரையாச்சும் தடக்கி விழுத்தவேணும் எண்டுதான் வாசிப்பினம்.யாருமே தாளம் பிசகாம லயம் குழம்பாம வாசிப்பினம்.ஒருத்தருக்கு ஒருத்தர் குறைஞ்சவை இல்லை.வீச்சுக் குறையாத கலைச் செல்வங்கள்.அந்த நாதம் எல்லாம் காற்றில் தொங்கி நிற்கிறது இப்போ.அவர்களும் இல்லை இப்போ. வாரிசுகள் அவர்கள் அளவுக்கு இல்லாமல் வாசித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்களின் தாளக்கட்டுக்கு தலையசைத்த வேலுப்பிள்ளை அண்ணையும் பனை மரமும் இப்போது அந்த இடங்களில் இல்லை.எதுவுமே இல்லாத அந்த இடத்தில் ஒரு புதைகுழியோ அல்லது புத்தர் சிலையோ !

இதில் குறிப்பிட்ட கலைஞர்களை விட இவர்கள் காலத்தில் வாழ்ந்த புகழ் பெற்ற எங்கள் ஈழத்துக் கலைஞர்கள்.

கோண்டாவில்(மூளாய்) பாலகிருஷ்ணன் சகோதரர்கள்
அளவெட்டி குமரகுரு
இணுவில் கோவிந்தசாமி
அளவெட்டி பாலகிருஷ்ணன்
சட்டநாதர் கோவிலடி N.முருகானந்தம் - தவில்
காரைதீவு கணேஸ் - நாதஸ்வரம்
சாவகச்சேரி பஞ்சாபிஷேகன் - நாதஸ்வரம்
அளவெட்டி S.S.சிதம்பரநாதன்
அளவெட்டி M.சிவமூர்த்தி - நாதஸ்வரம்
அளவெட்டி R.கேதீஸ்வரன்
யாழ்பாணம் K.நாகதீபன்.
இணுவில் சுந்தரமூர்த்தி புண்ணியமுர்த்தி சகோதரர்கள்

(இன்னும் அறிந்தவர்கள் பெயர்களிருந்தால் அறியத்தாருங்கள்.)

This entry was posted on 2:25 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

16 comments:

On August 6, 2010 at 4:20 AM , யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரபா!
தட்சணாமூர்த்தி காலத்தவர்கள்.. சாவகச்சேரி பஞ்சாபிஷேகன் - நாதஸ்வரம், கைதடி பழனி- தவில் (மலை போன்ற உருவம் - வாசிப்பும் தான்.
2 வது படத்திலுள்ளது போல் ஒரு கச்சேரி எப்போ? கேட்போம்.
ம்
இது தொலைந்த ஞாபகம் அல்ல. அப்பப்போ மீட்கும் ஞாபகம்.

 
On August 6, 2010 at 4:45 AM , கானா பிரபா said...

எங்கள் பிரதேசத்தின் வளங்களில் ஒன்று இந்த நாதஸ்வர மேள தாளங்கள். அருமையான படைப்பு, மிக்க நன்றி ஹேமா


யோகன் அண்ணா

பதிவுக்குச் சொந்தக்காறர் ஹேமா ;)

 
On August 6, 2010 at 4:58 AM , ஹேமா said...

மிக்க நன்றி யோகன் அண்ணா.
நீங்கள் தந்த பெயர்களை இணைத்துவிடுகிறேன்.

 
On August 6, 2010 at 5:01 AM , ஹேமா said...

பிரபா இது எப்போதோ நினைத்தது.நிறையப் பேரில் விபரங்கள்,போட்டோக்கள் எடுக்க முடியவில்லை.எல்லாரும் சிதறிப்போய்விட்டோம்.

போனவாரம் அப்பாவோட பேசுற நேரம் இப்படி ஒரு பேச்சுப் பேசிக்கொண்டோம்.அவர் சொன்னதைத்தான் எழுத்தாக்கினேன்

உண்மையில் எனக்கு ஊர் வழக்கு பற்றி பெரிதாகத் தெரியவில்லை.
அதனாலேயே பதிவுகள் போடாமல் இருக்கிறேன்.

உப்புமடச் சந்தியிலும் இனித்தான் இந்தப் பதிவைப் பதிவேன்.

எண்டாலும் ஒரு பயமுறுத்தல்தான் உங்கட மெயில் !

 
On August 6, 2010 at 11:19 AM , அம்பிகா said...

\\இது தொலைந்த ஞாபகம் அல்ல. அப்பப்போ மீட்கும் ஞாபகம்\\
நல்லதொரு நினைவுப் பகிர்வு ஹேமா.

 
On August 6, 2010 at 3:44 PM , yarl said...

ஹேமா,
இதோ இவர்களையும் இணைத்துக்கொள்ளுங்கள். தவில்- அளவெட்டி எஸ் எஸ் சிதம்பரநாதன், அளவெட்டி எம் சிவமூர்த்தி, நாதஸ்வரம் - அளவெட்டி ஆர் கேதீஸ்வரன், யாழ்பாணம் கே நகதீபன். இவர்களின் படங்கள் தான் என்னிடம் இல்லை. இவர்கள் எல்லாம் ஈழத்தாய் எமக்களித்த சொத்துகள். நாங்கள் தான் இவர்களை பக்குவமாக பாதுகாக்க வேணும். இவர்கள் வாழும் காலங்களிலேயே இவர்களை வாழ்த்தி நாம் கௌரவிக்கவேனும். லண்டன் கோயில்கள் இதை ஒவ்வொரு வருடமும் செய்து வருகினம். நல்ல பதிவு ஹேமா. வாழ்த்துக்கள். உங்கள் எழுத்தில் கானா பிரபாவின் எழுத்து வாசனை வீசுகிறது. ரெண்டு பேரும் ஒரே ஊர் தானா?
அன்புடன் மங்கை

 
On August 6, 2010 at 6:01 PM , யசோதா.பத்மநாதன் said...

'வீச்சுக் குறையாத ஈழத்துக் கலைச் செல்வங்கள்!'அழகான படங்களோடு அதனைக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறீர்கள் ஹேமா!

நன்றாக இருக்கிறது.

சிட்னி முருகன் கோயிலிலும் அந்தப் பாரம்பரியம் தொடர்கிறது.அதற்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் இங்கும் இருக்கிறது.

 
On August 6, 2010 at 7:53 PM , Sweatha Sanjana said...

I see !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

 
On August 7, 2010 at 12:17 AM , ஹேமா said...

நன்றி அம்பிகா.ஈழத்துமுற்றத்தின் என் பதிவுக்கும் உங்கள் பாராட்டுக்கள்.
மிகவும் சந்தோஷம் தோழி.

இவர்களை விட இன்னும் மூத்தவர்களும் இருக்கிறார்கள்.
படங்களும் பெயர்களும் எடுத்துக்கொள்ள சிரமமாய் இருக்கு.

 
On August 7, 2010 at 12:24 AM , ஹேமா said...

வணக்கம் மங்கை.நானும் பிரபாவும் பக்கத்து ஊர்.அதான் பேச்சு வழக்கிலும் வாசனையோ !அவர் இணுவில்.நான் கோண்டாவில்.

நீங்கள் அளவெட்டியா.அல்லது அளவெட்டிக் கலைஞர்கள்தான் அடிக்கடி இலண்டன் வருவதாகக் கேள்விப்படுவேன்.அவர்களின் பெயர்களைத் தந்திருக்கிறீர்கள் !
நன்றி மங்கை.

நானும் போட்டோக்கள் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.
கிடைப்பதாயில்லை.இவர்களுக்கு மூத்தவர்களாக இணுவிலில் வயலின் இராதாகிருஷ்ணன் அவர்களின் அப்பா ..பெயர் தெரியவில்லை.
கானமூர்த்தி அவர்களின் அப்பா கோதண்டபாணி...
இப்படியானவர்களைப்
பற்றி அறிய முடியவில்லை.

 
On August 7, 2010 at 12:27 AM , ஹேமா said...

நன்றி மணிமேகலா.சிட்னியில் சத்யமூர்த்தி அவர்களின் உறவுதான் நான்.அவரின் அப்பா மாசிலாமணி ஒரு நாடகக் கலைஞராம்.அவரை நான் காணவில்லை.அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன்.நன்றி தோழி.

 
On August 7, 2010 at 1:29 AM , வந்தியத்தேவன் said...

தவில் என்றால் தட்சாணாமூர்த்திதான், பின்னர் அவரின் பிள்ளைகள் உதயசங்கர் ஞானசங்கரும் தவிலில் கலக்கினார்கள். வடமராட்சியில் திரு.ஜெகனாதன் குழுவினர் முகவும் பிரசித்தம் அத்துடன் ஒரு பெண் நாதஸ்வரக் கலைஞர் இருந்தார் அவரின் பெயரை மறந்துவிட்டேன்.

ஹேமாவின் தோடல்களுக்கு பாராட்டுகள்.

 
On August 7, 2010 at 2:17 PM , ஹேமா said...

நன்றி வந்தியத்தேவன்.
தட்ஷணாமூர்த்தி அவர்களின் புதல்வர்களில் ஒருவர்
கனடாவிலும் ஒருவர் ஊரிலிலும் என்று நினைக்கிறேன்.

 
On August 7, 2010 at 2:45 PM , yarl said...

ஹேமா,

நான் உங்களுக்கு பக்கத்தில தான். உரும்பிராய். அப்பாவின் வேலை நிமித்தம் வெளி இடத்தில அதிகம் இருந்தனாங்கள். ஒவ்வொரு நல்லூர் திருவிழாவுக்கும் பெட்டிகளை கட்டிக்கொண்டு குடும்பத்தோட வந்து இறங்கி விடுவம். அம்மா விரதம். கடவுளே அதெல்லாம் ஒருகாலம். நீங்கள் சொன்ன மாதிரி குந்தி இருந்து கொண்டு அழவேணும் போல இருக்கு. 2005 இல போய் உரும்பிராய் இல் இறங்கினால் ஒருத்தரையும் தெரியாது. எல்லாம் இடம்பெயர்ந்த ஆட்கள். நல்லுரில ஓடிபோய் பார்த்தல் எல்லாமே மாறிப்போய் இருக்கு. அழுகையை அடக்கி நெஞ்செல்லாம் நோகத்தொடக்கிட்டுது. இன்னும் எழுத அழுகை வருது ஹேமா.
அன்புடன் மங்கை

 
On August 7, 2010 at 4:54 PM , Mahi_Granny said...

நிச்சயமாய் உங்களுக்கு தொலைந்து போகாத நல்ல ஞயாபக சக்தி தான் . இத்தனை விவரமாய் எழுதும் போது என் மனதையும் தொட்டு கடந்து போகிறீர்கள் . வாழ்த்துக்கள் ஹேமா

 
On August 9, 2010 at 7:46 PM , Unknown said...

இவர்களை வாழ்த்தி நாம் கௌரவிக்கவேனும்.