ஈழத்தவரே நுந்தமிழ் அறிவீர்!
விகுதி - அறிமுகம் - தமிழ் இணையக் கல்விக்கழகம் - முனைவர் மு.முத்துவேல்
என்ற தலைப்பில் திரு. இங்கர்சோல் நார்வே என்ற தமிழன்பரின் முகநூலில் விகுதி பற்றிய இலக்கணக்கட்டுரையை வாசித்தேன். அங்கே என் கவனத்தை ஈர்த்த ஒரு பகுதி. அதை மட்டும் இங்கே தருகின்றேன்.
தமிழிலக்கணம் ஒழுங்காக படித்து, அறிந்ததில்லை. இங்கே சில இலக்கண விதிகளை அறிந்த போது «ஓ அப்படியோ?» என்று அக்களிப்பாக இருக்கின்றது. ஈழத்தமிழ்ப்பேச்சுவழக்கில் காணப்படும் கீழே உள்ள எடுத்துக்காட்டுக்கள் இலக்கணத்தில் இருந்து சற்று விலகியுள்ளன என இதுவரை எண்ணியிருந்தேன்.
இன்று இங்கே படித்த இலக்கண விளக்கத்தை படித்தபோது சில வினைமுற்றுக்கள்
சிறுமாறுதல்களுடனேயே வருவதையும், சில மாறுதல் இல்லாது அப்படியே வருவதையும் காண்கின்றேன்.
பேச்சுவழக்கின்படி இலக்கணத்தின்படி
நான் வந்தனான் யான் வந்தனென்.
நான் நடப்பன் யான் நடப்பன்
நாங்கள் நடப்பம். யாம் நடப்பம்
நீ நடந்தனீ நீ நடந்தனை.
நீர் நடந்தனீர் நீர் நடந்தனிர்
நீர் நடந்தீர் நீர் நடந்தீர்
தம்பி நடக்கும் அவன் நடக்கும்
இறுதியில் காண்கின்ற வினைமுற்றான நடக்கும் என்பதைப்போல
வரும், போகும் போன்ற வினைமுற்றுக்களை உயர்திணைக்கும் பாவிப்பது ஈழத்தமிழில் உண்டு. இதுவரை
«அதென்ன பழக்கம்?
அப்பா வரும்
அம்மா அடிக்கும்
அண்ணை பேசும் என்று சொல்வது?
ஆடோ?மாடோ? வரும் போகும் என்று சொல்வதற்கு?» என்று பழிப்போருக்கு மறுமொழி சொல்லமுடியாமல் நின்றதுண்டு. ஆனால் அது மரியாதையான பேச்சு என்பதை உள்மனசு சொல்லும். இப்போது
«இல்லை மக்காள் தமிழிலக்கணத்துக்கு அது ஏற்புடையது தான்» என்று புளுகத்தோடு (புளகத்தோடு) கத்த வேண்டும் போலிருக்கின்றது.
அண்டைக்கு…..
«அண்டைக்கு கொண்டல்மரத்தடியிலை மூண்டு பண்டி நிண்டது.»
மேற்சொன்ன பேச்சுவழக்கு வாக்கியத்தை திருத்தமாகச் சொல்வதென்றால்
«அன்றைக்கு கொன்றைமரத்தடியிலே பன்றி மூன்று நின்றது.»
இதுநாள்வரை ஈழத்தவரின் பேச்சுவழக்கில் ன்ற, ன்றி, ன்று என்று பலுக்க வேண்டிய சொற்களெல்லாம் கொச்சையாக ண்ட, ண்டி, ண்டு என்றே பலுக்கப்படுகின்றன என நினைத்திருந்தேன்.
ஒண்டு ஒன்று
மூண்டு மூன்று
அண்டைக்கு அன்றைக்கு
இண்டைக்கு இன்றைக்கு
நாளையிண்டைக்கு நாளையின்றைக்கு
தொண்டுதொட்டு தொன்றுதொட்டு
கண்டு கன்று
கொண்டு திண்டது கொன்று தின்றது
வெண்டான் வென்றான்
நிண்டவள் நின்றவள்
பண்டி பன்றி
கொண்டல்மரம் கொன்றைமரம்
பின்வருங்கூற்று என்னை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது.
«முதலில் ஒன்று என்ற சொல்லை பார்ப்போம்.
இதைத் தமிழகப் பேச்சு வழக்கிலும், மலையாளத்திலும் ஒண்ணு என்றும்
ஈழத்துப் பேச்சு வழக்கில் ஒண்டு என்றும்,
கன்னடத்தில் ஒந்து என்றும் சொல்லப் படுகிறது.
தமிழில் றகரமும், னகரமும் முந்து ஒலிகள் அல்ல.
எழுத்து வரிசை ஏற்பட்டு வெகுநாட்கள் கழித்தே
எழுத்து வரிசையின் இறுதியில் றகர, னகரங்கள் சேர்க்கப் பட்டன.
விலங்காண்டி காலத்தில் தோன்றிய இயல் மொழி தமிழ் என்றால்,
றகரமும், னகரமும் சேர்ந்து வரும் அடிப்படைச்சொற்கள்
முதலில் வேறு இணை எழுத்துக்களைப் பெற்றிருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. எழுத்துத் தமிழில் ன்று என்று முடியும் ஈறு பெரும்பாலும்,
பேச்சுத் தமிழின் மீ திருத்தமாகவே காட்சியளிக்கிறது.
இந்தக் கோணத்தில் பார்த்தால், ஒன்று என்ற சொல்லின் முந்து வடிவம்
ஒண்டு/ஒந்து என்பதாகத்தான் இருந்திருக்க வேண்டும்.
ஒண்ணு என்பதும் ஒண்டு என்பதின் மெல்லினத் திரிபே.
தமிழில் இருக்கும் வலிவுச் சொற்கள், மலையாளத்தில் திரிந்து மெலிவுச் சொற்களாக மாறுவது போன்றே இதைக் கொள்ள வேண்டும். (வந்து>வந்நு).»
திரு. இராம.கி.
இன்னும் முழு விளக்கத்துடன் வாசிப்பதற்கு திரு.இரம.கி.யின் வளவு எனும் இணையத்தளத்தினுள், கீழ்வருஞ்சுட்டியை தொட்டு உள்ளிடுங்கள்.
https://valavu.blogspot.com/search?q=%E0%AE%92%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
நன்றியுடன்
ந.குணபாலன்
🙏🏾❤️
0 comments: