Author: ந.குணபாலன்
•5:36 AM

 பின்னை பேந்து சந்திப்பமே?

கொச்சையான பேச்சு என்றும் பிழையானது என்றும் எண்ணி எம்மில்  பலரும் தங்களுடைய பேச்சுவழக்கைப் பொதுவில் பதிவதில்லை. இன்று இணையத்தினூடாகப் பல்வேறு அகராதிகளையும் கண்டு நாம் நாளாந்தம் பாவிக்கும் பேச்சுவழக்குச் சொற்கள் பலவும் தூய தமிழ்ச் சொற்களே என்று காண்கின்றோம். இருந்தாலும் வழுவுடன் ஒலிக்கும் சொற்களும் எங்களிடம் உள்ளனதான்.


சீலை, பிடவை, சாவல், கிடாய், பொக்குள், வெள்ளாப்பு/வெள்ளெண<வெள்ளென, பகிடி<பகடி  இந்தச் சொற்களை எல்லாமே தூயதமிழ், அவற்றில் சில கொஞ்சம் திரிபடைந்தவை   என தெரியாத மயக்கம் எமக்கு. தமிழக நூல்களில் வரும் சொற்களே எடுப்பானவை, சரியானவை என ஈழத்திலே பண்டிதர் தொட்டு எல்லோருமே ஏற்றுக்கொண்டோம். மேற்குறித்த சொற்களை முறையே

சேலை, புடவை ,சேவல்,கடா,கொப்பூழ், விடிகாலை, கேலி என்று எழுதப் பழக்கப்பழகினோம். குறிப்பிட்ட சில எழுத்தாளர்கள் எழுதுவதே சரியான தமிழ்ச்சொற்கள் என்ற மயக்கத்தில் இருந்தோம்.

«இல்ல நீ கதைக்கின்ற கதையிலையே கனக்க நல்ல தமிழ்ச்சொல்லு இருக்கு» 

என்று இணையம் இன்று காட்டுகின்றது.மேற்கூறிய நம் பேச்சுவழக்கு சொல்களை இணையத்தில் தமிழில் எழுதித்தேட அவை தூயதமிழ்ச்சொற்களே என்பதை அறியலாம்.


இருபத்தோராம் நூற்றாண்டின் ஆரம்பத்தின் பின்னேதான் எனக்கு «கலாய்த்தல்» என்ற சொல்லு  அறிமுகமானது. ஏற்கெனவே   சென்னைத்தமிழில் இருந்தது, திரைப்படங்கள் வழியாக வந்து உள்ளிட்டது. அது பலநூற்றாண்டுகளின் முன்னே பேசப்பட்டது என்று இன்று அறியக் கூடியதாக இணையம் வழி காட்டுகின்றது.


சரி சொல்லவந்த சங்கதியைச் சொல்கின்றேன். 


இன்னுமொரு வலைத்தளத்தில் வந்த என் இடுகை இது. எனது கேள்விக்கு உரிய மறுமொழியைத் தேடி இங்கும் இதை இடுகின்றேன்.


«பின்னை பேந்து வாறன்!”


«பின்னை பேந்து என்ன புதினம் உங்ஙினை?»

«பின்னை பேந்து ஆராம் மாப்பிள்ளை?»

«பின்னை பேந்து எண்டிற கதையெல்லாம் பறையாதை!»

«பின்னை பேந்து எப்ப நீ வாங்கினதைத் திருப்பித் தருவாய்?»

«பின்னை பேந்து தீவாளிக்கு ஊருக்கு வருவன்.»


«பின்னை பேந்து»இது யாழ்ப்பாணத்தமிழில் அடிக்கடி கேட்கக்கூடிய சொற்றொடர். பின்னை என்பது பின்னே என விளங்கிக் கொண்டாலும் இந்தப் பேந்து என்ற சொல்லு நம்மில் பலரையும் பேந்தப் பேந்த முழிக்க விட்டிருக்கும். 


இருந்தாற்போல ஒருக்கால் அப்பர் தேவாரம் ஒன்றின் வரிகள் எட்டி என் மனதைத் தொட்டன.


«பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்

பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்»


இவ்வரிகள் «ஓ அப்படியோ? அப்படியும் இருக்குமோ?» என என் சிந்தையைக் கிளறின. 


பெயர்ந்து>>பேர்ந்து>>பேந்து??? 

எண்பதுகளின் பின்னை பேந்து,

வீடுவிட்டு, ஊர்விட்டு, நாடுவிட்டுப் புலம்பெயர்ந்த எம் நாளாந்தப் பேச்சில்

இடம்பேர்ந்து போனகதை கனக்க வரும்.

இடம் பெயர்ந்து என்றும் சொல்வதுண்டு. 

இடம் பெயர்ந்து என்பதைக் கெதியாகச்(கதியாக, விரைவாக) சொல்லும்போது இடம்பேர்ந்து என்று வரும். 


«உங்கடை பெயரென்ன?» 

என்று கேட்பதை விட 

«உங்கடை பேரென்ன?»

என்று கேட்பதுதான் ஈழத்தமிழில் கூடுதல் வழக்கம்.

இடம் பேர்தல் என்ற பதத்தை விளங்கிக் கொண்டு புழங்குகின்றோம்.

காலம் பேர்தலைப் பேந்து என விளக்கமறியாமல் புழங்குகின்றோம்.


இந்தப் பெயர்ந்து என்பதே பேர்ந்து எனத் திரிந்து ,(பின்னை பேந்து)பேந்து எனவுந் திரிபடைந்திருக்கும் என்று உணர்ந்து கொள்ள முடிகின்றது.

அப்ப பின்னை பேந்து இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்?


ந.குணபாலன்

Author: ந.குணபாலன்
•5:50 AM

 பூருதல்!


இந்தச்சொல் புகுதல் என்று திருத்தமாக சொல்லாது ஈழத்தவர் கொச்சையாக சொல்கின்றோம் என எண்ணியிருந்தேன். 

«வீடு குடிபூருதல்/குடிபூரல்»

«ஆளில்லா வீட்டிலை ஆரோ பூர்ந்து களவெடுத்திட்டான்»

«ஆடு வேலிப்பொட்டுக்குள்ளலை பூர்ந்து மேயுது»

«கறையான் புத்துக்குள்ளை பாம்பு பூர்ந்திட்டுது»

«ஐயோ, ஊருக்குள்ளை ஆமி பூர்ந்திட்டான்»

« வீடு பூர்ந்து அடிப்பன் வடுவா»

இப்படியெல்லாம் நாளாந்தம் கதைபேச்சில் சொல்வோம்.


திரு. இராம கியின் வளவு என்னும் தளத்துக்குள்ளே பூர்ந்து உலாத்தியதில்;

இல்லை அந்தச்சொல் திருத்தமானதுதான் என்று நினைத்தேன். பெரிய புளுகமாய்(புளகமாய், மகிழ்ச்சியாய்) இருக்கின்றது.


புதன்கிழமை ஓகத்து 8ந்திகதி 2007 இல் 

வேங்கடத்து நெடியோன்- 1 என்று தலைப்பிட்ட இடுகையில் பின்னூட்டமாக ஓரிடத்தில் இப்படி விளக்கம் தருகின்றார். நன்றி இராம கி ஐயா!.


« சிவனை உடம்பு விரும்பும் வழிமுறை என்பது மூச்சுப் பயிற்சியாகும். [இந்த மூச்சுப் பயிற்சியின் தமிழ்வழி விளக்கத்தை இங்கு சொல்ல வேண்டும். உய் என்னும் மொழியற்ற வாயொலியின் பயனாய் (ஊய்தல் வினைச் சொல் வழியே) உயிர் என்னும் சொல் பிறந்தது போல், புர் என்னும் மொழியற்ற வாயொலியின் பயனாய் பூருதல் என்ற வினைச்சொல் ஊதுதல் என்ற பொருளை உள்நிறுத்தும். இது கொஞ்சம் திரிந்து, பூரித்தல் என்ற வினைச்சொல் தொனித்தல் என்ற பொருளிலும், மூச்சை உள்ளிழுத்தல் என்ற பொருளிலும் எழும். பூரி என்ற பெயர்ச்சொல் ஊது கருவியை அடையாளம் காட்டும். பூரிகை என்பதும் ஊதுகுழல் ஆகும். பூரகம் என்பது மூச்சை உள்ளிழுத்தல் என்ற பொருளைக் கொடுக்கும். பூருதல் என்ற வினைச்சொல் தமிழில் அவ்வளவு பயனாகாமல், வடமொழிக்குப் போய், பூரணித்து என்று திரிந்து பின் ப்ராணிக்கும் போது உயிர்மூச்சு இழுப்பதைக் குறிக்கும். ப்ராணன், ப்ராணி என்ற சொற்களெல்லாம் எழும். பூரணனைக் கட்டுப் படுத்தும் பயிற்சியை, வடமொழியில் "ப்ராணாயாமம்" என்றே சொல்லுகிறார்கள். பூரணன் என்பது உடலெங்கும் நிறைந்திருக்கும் உயிர். யாமம் என்பது கட்டுதல். (யாப்பு என்பதும் கட்டுதலே.) பூரணக் கட்டு என்பது மூச்சுப் பயிற்சியே.]»


இங்கே பூருதல் என்ற சொல்லிலிருந்து திரிபடைந்த பூரித்தல்,பூரகம் என்ற இரு சொற்களும் மூச்சை உள்ளிழுத்தல் எனச்சொல்லப்படுகின்றது. பூருதல் என்ற வினைச்சொல்லும் உள்ளிழுத்தல் என்ற சொல்லுடன் நெருங்கியுள்ளது. 

பூருதல் என்ற பேச்சுவழக்குச்சொல் உள்நுழைதல்,உள்ளிடுதல்,புகுதல் என்ற கருத்துக்களில் சொல்லப்படுகின்றது.

இப்படியாக நான் விளங்கிக்கொண்டேன்.


«பூராயம் பிடித்தல்»

இதற்கு பூர்ந்து ஆராய்தல் என்ற கருத்து. உள்நுழைந்து ஒருவரின் இரகசியங்களை அறிதல், ஒருவர் தனக்கு தேவையற்ற விதயங்களில் மூக்கை நுழைத்தல் என இது எரிச்சலை வெளிப்படுத்தும் கூற்றாகும்.


பூறுதல் என்று எழுதித்தேட இணையம் இந்தப்பக்கத்தை காட்டியது. இதிலிருந்து படியெடுத்து வெட்டி ஒட்டினேன்.tamilvu.org என்ற இணையத்தளத்தின் முகவரியின் தொடசலையும்(link)பதிந்தேன். ஆனால் அம்முகவரிக்குள் பூரமுடியாமல் இருக்கின்றது. 


http://www.tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=194&pno=70


புள்-புழு-புகு-புகுது-புகுரு-பூர். பூர்தல் = உட்புகுதல்.


பூர்-பூரான் = மண்ணிற்குள் புகும் நச்சுப்பூச்சி. பூர் - பூறு. பூறுதல் = உருவத்துளைத்தல். மூக்குப்பூறி-மூக்குப்பீறி. பூறு- பீறு.



ந.குணபாலன்

Author: ந.குணபாலன்
•11:24 PM

  

ஈழத்தவரே நுந்தமிழ் அறிவீர்!


விகுதி - அறிமுகம் - தமிழ் இணையக் கல்விக்கழகம் - முனைவர் மு.முத்துவேல்

என்ற தலைப்பில் திரு. இங்கர்சோல் நார்வே என்ற தமிழன்பரின் முகநூலில் விகுதி பற்றிய இலக்கணக்கட்டுரையை வாசித்தேன். அங்கே என் கவனத்தை ஈர்த்த ஒரு பகுதி. அதை மட்டும் இங்கே தருகின்றேன்.


தமிழிலக்கணம் ஒழுங்காக படித்து, அறிந்ததில்லை. இங்கே சில இலக்கண விதிகளை அறிந்த போது «ஓ அப்படியோ?» என்று அக்களிப்பாக இருக்கின்றது. ஈழத்தமிழ்ப்பேச்சுவழக்கில் காணப்படும் கீழே உள்ள எடுத்துக்காட்டுக்கள் இலக்கணத்தில் இருந்து சற்று விலகியுள்ளன என இதுவரை எண்ணியிருந்தேன். 


இன்று இங்கே படித்த இலக்கண விளக்கத்தை படித்தபோது சில வினைமுற்றுக்கள்

சிறுமாறுதல்களுடனேயே வருவதையும், சில மாறுதல் இல்லாது அப்படியே வருவதையும் காண்கின்றேன். 


பேச்சுவழக்கின்படி   இலக்கணத்தின்படி              


நான் வந்தனான்           யான் வந்தனென்.

நான் நடப்பன்              யான் நடப்பன்

நாங்கள் நடப்பம்.        யாம் நடப்பம்

நீ நடந்தனீ                   நீ நடந்தனை.

நீர் நடந்தனீர்                நீர் நடந்தனிர்

நீர் நடந்தீர்                    நீர் நடந்தீர்

தம்பி நடக்கும்              அவன் நடக்கும்


இறுதியில் காண்கின்ற வினைமுற்றான நடக்கும் என்பதைப்போல 

வரும், போகும் போன்ற வினைமுற்றுக்களை உயர்திணைக்கும் பாவிப்பது ஈழத்தமிழில் உண்டு. இதுவரை 

«அதென்ன பழக்கம்? 

அப்பா வரும்

அம்மா அடிக்கும்

அண்ணை பேசும்  என்று சொல்வது? 

ஆடோ?மாடோ? வரும் போகும் என்று சொல்வதற்கு?» என்று பழிப்போருக்கு மறுமொழி சொல்லமுடியாமல் நின்றதுண்டு. ஆனால் அது மரியாதையான பேச்சு என்பதை உள்மனசு சொல்லும். இப்போது

«இல்லை மக்காள் தமிழிலக்கணத்துக்கு அது ஏற்புடையது தான்» என்று புளுகத்தோடு (புளகத்தோடு) க‌த்‌த வேண்டும் போலிருக்கின்றது.


அண்டைக்கு…..



«அண்டைக்கு கொண்டல்மரத்தடியிலை மூண்டு பண்டி நிண்டது.»

மேற்சொன்ன பேச்சுவழக்கு வாக்கியத்தை திருத்தமாகச் சொல்வதென்றால்

«அன்றைக்கு கொன்றைமரத்தடியிலே பன்றி மூன்று நின்றது.»

இதுநாள்வரை ஈழத்தவரின் பேச்சுவழக்கில் ன்ற, ன்றி, ன்று என்று பலுக்க வேண்டிய சொற்களெல்லாம் கொச்சையாக ண்ட, ண்டி, ண்டு என்றே பலுக்கப்படுகின்றன என நினைத்திருந்தேன்.

ஒண்டு                                ஒன்று

மூண்டு                                மூன்று  

அண்டைக்கு                       அன்றைக்கு

இண்டைக்கு                       இன்றைக்கு

நாளையிண்டைக்கு            நாளையின்றைக்கு

தொண்டுதொட்டு                தொன்றுதொட்டு

கண்டு                                 கன்று

கொண்டு திண்டது             கொன்று தின்றது

வெண்டான்                         வென்றான்

நிண்டவள்                           நின்றவள்

பண்டி                                  பன்றி

கொண்டல்மரம்                   கொன்றைமரம்


பின்வருங்கூற்று என்னை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது.


«முதலில் ஒன்று என்ற சொல்லை பார்ப்போம். 

இதைத் தமிழகப் பேச்சு வழக்கிலும், மலையாளத்திலும் ஒண்ணு என்றும் 

ஈழத்துப் பேச்சு வழக்கில் ஒண்டு என்றும், 

கன்னடத்தில் ஒந்து என்றும் சொல்லப் படுகிறது. 

தமிழில் றகரமும், னகரமும் முந்து ஒலிகள் அல்ல. 

எழுத்து வரிசை ஏற்பட்டு வெகுநாட்கள் கழித்தே 

எழுத்து வரிசையின் இறுதியில் றகர, னகரங்கள் சேர்க்கப் பட்டன. 

விலங்காண்டி காலத்தில் தோன்றிய இயல் மொழி தமிழ் என்றால், 

றகரமும், னகரமும் சேர்ந்து வரும் அடிப்படைச்சொற்கள் 

முதலில் வேறு இணை எழுத்துக்களைப் பெற்றிருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. எழுத்துத் தமிழில் ன்று என்று முடியும் ஈறு பெரும்பாலும், 

பேச்சுத் தமிழின் மீ திருத்தமாகவே காட்சியளிக்கிறது. 

இந்தக் கோணத்தில் பார்த்தால், ஒன்று என்ற சொல்லின் முந்து வடிவம் 

ஒண்டு/ஒந்து என்பதாகத்தான் இருந்திருக்க வேண்டும். 

ஒண்ணு என்பதும் ஒண்டு என்பதின் மெல்லினத் திரிபே. 

தமிழில் இருக்கும் வலிவுச் சொற்கள், மலையாளத்தில் திரிந்து மெலிவுச் சொற்களாக மாறுவது போன்றே இதைக் கொள்ள வேண்டும். (வந்து>வந்நு).»

                                                                                திரு. இராம.கி.


இன்னும் முழு விளக்கத்துடன் வாசிப்பதற்கு திரு.இரம.கி.யின் வளவு எனும் இணையத்தளத்தினுள், கீழ்வருஞ்சுட்டியை தொட்டு உள்ளிடுங்கள்.


https://valavu.blogspot.com/search?q=%E0%AE%92%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81


நன்றியுடன்

ந.குணபாலன்

🙏🏾❤️


Author: ந.குணபாலன்
•12:26 PM

  மட்டக்களப்புச் சைவர்களின் மரணச்சடங்குகள்!

அண்மையில் மறைந்த பாடகர் அமரர் திரு பாலசுப்பிரமணியம் அவர்களின் பூதவுடல் தகனம் செய்யப்படாமல் மண்ணில் தாழ்க்கப்பட்டது பலரும் அறிந்தது. பலரை வியப்புக்கும் உள்ளாக்கியது. ஓ இப்பிடியுமோ? இந்துக்கள் தகனம் செய்வது தானே முறை? என்ற கேள்விகள் எழுந்தன. எங்களில் பலரும் சிலபல விளக்கம் இல்லாமல் கிணற்றுத்தவளைகளாகவே வாழப்பழகி விட்டோம்.

இந்துக்கள் இலங்கையில் வாழுஞ் சைவர்களிடமே இடத்துக்கிடம் வேறுபடும் மரணச் சடங்குகள் உள்ளன. யாழ்ப்பாணப் பிரதேசத்தைச் சேர்ந்த எனக்கும் ஒரு மட்டக்களப்புப் பிரதேச நண்பரின் ஊடாக இந்த விவரங்கள் தெரியவந்த போது மிகவும் ஆச்சரியப்பட்டேன். அதுவரை நான் அறிந்தது, சைவமுறைப்படி 12 வயசுக்கு உட்பட்ட பிள்ளைகள் இறந்தபின் மண்ணில் தாழ்க்கப்படுவதே. ஆனால் சாமியார்களை மண்ணிலே கிடங்கு வெட்டி இருந்தவாக்கில் வைத்து விளைவு கர்ப்பூரம் விபூதி நிரப்பி தாழ்த்து சமாதியிருக்க வைப்பதாக எங்கேயோ எப்போதோ அறிந்திருக்கிறேன். இதனைக் “காரையிருத்தல்” என்றும் சொல்வதாம். இணுவிலுடன் இந்தக் காரைக்கால் என்ற சொல்லைத் தொடர்புபடுத்தி ஏதோ ஒரு முறை வாசித்ததாக ஒரு ஞாவகம். இணுவில்காரர் இன்னும் கூடுதல் விளக்கம் அறிந்திருப்பார்கள்.

வீரகேசரியின் வாரமலரில் எனது 30 வரிய காலத்துக்கு முந்திய சீவியத்தில் வாசித்த சிறுகதை ஒன்று மலையகச் சைவத்தமிழரும் இறந்தவர்களைத் தாழ்ப்பதாக ஒரு கருத்தை எனக்குள் ஏற்றிவிட்டது. அதுபற்றிய சரிபிழை இதுவரை நான் ஆராயவில்லை.

இங்கே மட்டக்களப்புப் பிரதேசத்தில் பின்பற்றப்படும் மரணச்சடங்குகள் பற்றி நான் கேட்டறிந்ததை தருகின்றேன்.

ஒருவரின் மரணத்தறுவாயில் போகும் சீவன் புண்ணியத்துடன் போகவேண்டும் என்று “வைகுந்த அம்மானை” என்ற பொத்தகம் படிக்கப்படும். மாபாரத நாயகர்களான பஞ்சபாண்டவரும், திரௌபதையும் விண்ணுலகு மேவியதைப் பற்றிய ஒரு பொத்தகம் இது.

ஒருவர் இறந்ததும் சவத்தை உடனே குளிப்பாட்டி, உடுப்பாட்டி விடுவார்கள். 

இறந்தவரின் குடிக்குரிய கட்டாடி(வண்ணார்), பரியாரி(நாவிதர்), மற்றும் பிற ஊர்களில் உள்ள உறவினர்களுக்கு விசளம்வியளம் சொல்ல ஆள் அனுப்புவார்கள்.

சவத்தை வீட்டின் மண்டபத்தில் சாமூலை எனப்படும் தெற்குத்திக்காக ஒரு மூலைப் 

பாடாகத் தலையிருக்க வளர்த்துவார்கள்தலைமாட்டிலும் கால்மாட்டிலும் 

குத்துவிளக்குகள் கொளுத்தி வைக்கப்படும்.

 






சவம் எடுக்கும் நாளன்று கூரைமுடி எனப்படும் நிறைகுடங்கள் ஒற்றைத்தானத்தில் 

மண்டபவாசலின் கூரைவிளிம்பில் வைத்து நேரே கீழே வாசலின் இருபுறமும் நெல்லைக்கொட்டி தண்ணீர் அள்ளும் பெரியகுடங்களில் கும்பம் வைக்கப்படும்.


பறைமுழங்குபவர்களை மகிழுந்தில் கூட்டிவந்து அவர்களுக்கு கோடிவேட்டியும்

பறைக்குச் சுற்றிக்கட்ட வெள்ளைநிற கோடித்துணியும் கொடுக்கப்படும் பறைக்

குழுவிலே ஒரு பெரியபறை(யாழ்ப்பாணத்துப் பறையைவிடச் சிறியதாம்), ஒரு 

கொட்டுப்பறைஒரு குழல் இருக்கும். செத்தவீட்டிலே குழலுடன் பறை முழங்கும். 


இறந்தவரின் பாதங்களுக்கு அவரைவிட வயசில் இளைய பெண் உறவினர்கள் 

மஞ்சள்நீர் தெளித்துப் பூவைத்து வணங்குவார்கள்சவம் வீடுவிட்டு வெளிக்கிட்டதும் 

கூரைமுடி அகற்றப்படும்


கடமை செய்யும் மகன் தலைக்கோடு (நீருள்ள மண்குடம்தலையில் தாங்கி ஒரு 

கொள்ளி விறகுத் துண்டுடன் காவிச்செல்ல சவம் போகும்அப்போது நாற்சந்திகளில் 

பறைக்குழுவினர் பறையடித்து குழலூதி ஆடுவார்கள்நிலபாவாடை விரிப்பதும் உண்டு

சவக்காலையில் ஏற்கெனவே மடு தோண்டியிருக்கும்பறைமேளக்காரரிடம் அந்த

மடுவுக்குரிய நிலத்துண்டை வாங்கும் பாவனையில் ஏலம் போட்டு ஒரு தொகை 

பறைமேளக்காரருக்கு கொடுக்கப்படும்


மடுவில் பிரேதம் இறக்கப்பட முன்னம் வாய்க்கரிசி போடுவார்கள்வாய்க்கரிசி வீட்டில்

போடுவதில்லைபெட்டியை மூடி மடுவில் இறக்கி உரிமைக்காரர் மண்போட்டு மடுவை 

மூடி நிரவுவர்பின்கடமை செய்யும் மகன் மடுவை மும்முறை இடப்பக்கமாக சுற்றிவரக் 

குடத்தில் துளையிட்டு மூன்றாம்சுற்றுமுடிவில் தோளின் பின்புறமாக குடத்தை விழுத்தி உடைத்துக் கொள்ளியையும் கீழே போட்ட பின் திரும்பிப் பாராமல் இடுகாட்டை 

விட்டு வெளியேறுவார்.


வீடு வந்தவுடன் வீட்டு வாசலில் ஒரு கும்பம் வைத்து கர்ப்பூரம் கொளுத்திய பின் 

தோய்ந்து குளித்து மாற்றுடை உடுத்தி உணவு அருந்துவர்மடு தோண்டப் பயன்

படுத்திய மண்வெட்டிகத்தி முதலியவை கழுவப்பட்டு மண்டபத்தின் உள்ளே வைக்கப்

பட்டிருக்கும் குத்துவிளக்கின் அருகே வைக்கப்படும்செக்கலானதும் குத்துவிளக்கினருகே வைகுந்த அம்மானை படிக்கப்படும்எட்டுக்கல்லை (எட்டுச்சிலவு)வரை இதைப்

படிப்பார்கள்


வைகுந்த அம்மானை படிக்கும்போது முற்றத்திலே ஒரு பக்கமாக ஒரு பெரிய 

கட்டையைக் கொளுத்தி தீநா (தீ+நாவளர்ப்பார்கள்இந்தத் தீநா எட்டுவரை 

எரிக்கப்படும்சவம் தாழ்த்த பின் மூன்றாம்நாள் அவ்விடம் சென்று பால் தெளிப்பார்கள்

அன்றைக்கு வீட்டு முற்றத்திலே வெள்ளை வேட்டியால் மறைப்பு கட்டிப் புக்கை 

பொங்கி படைக்கப்படும்இதனை வயசானவர்களே செய்வர். அதை முக்கியமாக  சின்னப்பிள்ளைகள் பார்க்கக்கூடாது. அந்த புக்கையை அந்தவீட்டு வளவை விட்டு 

வெளியே கொண்டு போவதில்லை


எட்டுக்கல்லைப் படைப்பு செக்கல்நேரம் செய்யப்படும்

31ம் நாள் சடங்கு  31அமுது எனப்படும்.

அதற்கு முதல்நாளான 30ம்நாள் செக்கலிலும் கல்லைப் படையல் இடம்பெறும்.

அது முடிய இரவோடிரவாக கழுவி மெழுகி மைக்காநாள் 31அமுதிற்கு மரக்கறி உணவு மட்டும் படைக்கப்படும்


அதற்குரிய வழிபாடு செய்ய ஐயன் எனப்படுபவர் வருவார்பிராமணரில்லை

பூணூலிட்டவர் இல்லைகோயில் பூசகருமில்லைஇவர் ஒரு சங்கும் சேமக்கலமும் 

கொண்டு வந்து அவைகளை இசைத்து தமிழில் வழிபாட்டுப்பாடல்கள் பாடி வழிபாடு 

செய்வார்வழிபாடு  முடிந்து அவர் தன்வீடு சென்றதும் அவர் பின்னாலே அவருக்குரிய 

பச்சைத்தானம் எனப்படும் சமைக்காத பச்சைக்காய்கறி அரிசி என்பனவும் சமைத்த 

உணவும் தனித்தனி ஓலைப்பெட்டிகளில்  வைத்துவெள்ளைத்துணியால் கட்டி அவர் 

வீட்டிற்குக் கொண்டுபோய்க் கொடுக்கப்படும்.


இவ்வண்ணமே பரியாரிகட்டாடிமார் வீட்டிற்கும் இருவகைத் தானங்கள் கொண்டுபோய்க் கொடுக்கப்படும்அவர்கள் 31அமுது நாளுக்கு வருவதில்லை. 31அமுது நாளிலே செக்கலில் வைகுந்த அம்மானையில் வாழி (வாழிப்படலம்) படிக்கப்படும்.

ஆண்டுத் திவசத்தை ஆண்டமுது என்பர். அநேகர் புரட்டாசி மாச மாளய காலத்தில் மாளயப் படையல் வழிபாடு செய்வர். அந்த வழிபாட்டையும்  ஐயனே வந்து நடத்துவார்.


தகவலும் படமும் : ராசா பஞ்சாட்சரம்

இலங்கையில் பிறந்து வளர்ந்த இடங்கள் : மண்டூர், குருமண்வெளி






Author: வர்மா
•10:02 PM
கூடை மேல கூடை வைச்சு கூடலூரு போறவளே, உன் கூடக்கொஞ்சம் நானும் வாரன் கூட்டிக்கிட்டு போனால் என்ன’ வரிகளை கேட்டவுடன் ஆஹா என்ன அருமை பாடல் என்று சொல்லத்தோன்றும்.

நாயகி இடுப்பில் கூடையுடன் செல்கையில் இந்த பாடல் தொடங்கும், பாடல் தொடர்ந்து செல்கையில் கூடை என்ற சொல் வந்தாலும் நாயகியின் இடுப்பில் கூடை இருக்காது. இயக்குநர் கூடையை மறந்துவிட்டார்.

அவ்வாறு தான் எங்கள் ஊரிலும் கூடைகள் மறந்து கூடைக்காரிகளும் இல்லாமல் போய்விட்டனர்.


யாழ்ப்பாணத்தின் ஊர்களில் கூடைக்கார(காரி) வியாபாரிகள் கடந்த காலங்களில், குறிப்பாக சொல்ல போனால் இறுதி யுத்தம் முடிவடைவதற்கு முந்திய காலத்தில் வியாபார ரீதியில் கொடிகட்டி பறந்தவர்களாக காணப்பட்டனர்.

மீன்கள், பழங்கள், சிறிய அழகுசாதன பொருட்கள் சில வேளைகளில் புடவைகள் கூட கூடைக்காரிகளால் விற்பனை செய்யப்பட்டன.

கூடைக்காரிகளுக்கு தனிச்சிறப்பு இருந்தது. நம்பிக்கை, நாணயம் என்ற வியாபார அடையாளங்கள் யாரிடம் இருக்கின்றதோ தெரியவில்லை, இந்த கூடைக்காரிகளிடம் இருந்ததை காணமுடிந்தது. ஊரிலுள்ள குடும்பங்களுடன் நெருக்கமான உறவு முறையை பேணி ஒவ்வொரு வீட்டின் விடயங்கள், அந்தரங்கங்களை அறிந்தவர்களாக இந்த கூடைக்காரிகள் இருந்தனர்  

45 அல்லது 50 வயதுக்கு மேற்பட்ட பெண்மணியொருவர் தலையில் கூடைக்குள் 10 கிலோ எடையுள்ள பொருட்களை வைத்து ஊர் ஊராக சென்று விற்பனையில் ஈடுபடுவார். தலையில் கனம் குறையும் போது, அவரது இடுப்பிலுள்ள பையில் கனம் அதிகரிக்கும்.

தொடக்கத்தில் ‘மீன் வேணுமோ மீன்…. என்று தொடங்குபவர் நாட்கள் செல்ல, தங்கச்சி கமலா மீன் கொண்டு வந்திருக்கன் வாணய், அங்கால போகனும்’ என்ற அளவுக்கு வீடுகளில் உள்ளவர்களுடன் உறவுகள் அதிகரிக்கும்.

அவர்கள் கொண்டு வரும் மீன்கள் நல்ல மீன்களாக தான் இருக்கும். மீனின் செவியை இழுத்து பார்த்தால், மீனின் ப+, சமந்தா உதட்டுக்கு லிப்ஸ்ரிக் அடிச்சது போல் சிவந்து போய் இருக்கும். தரமான மீன். வேறு பேச்சுக்கே இடமில்லை. விலையும் கட்டுப்படியானதாக தான் கொடுப்பார்கள். 100 ரூபாயுக்கு மீனை மீனவரிடம் வாங்கிவரும் கூடைக்காரி 120ரூ பாவுக்கும் கொடுத்துவிட்டு செல்வார். ஆனால் வெளியில் அதே மீன், 150, 200ரூ பாய் கொடுத்துத்தான் வாங்க வேண்டும்.

இவர்களிடம் வாங்கினால் சிக்கனம். பணம் இல்லையென்று வீட்டுக்காரி வீட்டில் சமைக்காமல் இருக்க தேவையில்லை. கூடைக்காரி கடனுக்கும் மீன் தருவார். புதிதாக திருமணம் ஆன பொண்கள் எங்கேயாவது வீட்டில் இருந்தால், மீன் சமைத்து எப்படி கணவனை மடக்குவது என்பதையும் கூடைக்காரி சொல்லி கொடுப்பார்.


‘இஞ்சி, உள்ளிக்க போட்டு, ஊற வைச்சு, அதை தேசிக்காய் புளியில லேசா தடவிட்டு குழம்பு வை, பேந்து பாரனம்மா’ என்று கூடைக்காரி சொல்ல புது மணப்பெ

ண்களும் சமையல் கற்றுக்கொள்வார்கள்.

அது வியாபார தந்திரம், நல்லா சமைத்து கணவனுக்கு போட காலப்போக்கில் வீட்டில் ஆட்கள் கூடும், மீனும் கூட வாங்குவார்கள்… ‘நீண்டகால வியாபார திட்டமிடல்’ அது. பல்தேசிய கம்பனிகள் தான் அப்படி திட்டமிட முடியும் என்றும் இல்லைத்தானே.

கூடைக்காரியின் சமையல் குறிப்பால் சமையல் கற்றுக்கொண்டு, நல்ல சமையல்காரிகள் ஆகின பெண்கள் நிறை இருக்கிறார்கள்.

கூடைக்காரி மீனின் ரகங்கள், சுவைகள் சொல்ல எல்லாவற்றையும் சாப்பிட வேண்டும் போல் வாய் ஊறும். அப்படி வாயில் வெற்றிலையை போட்டு ரசிச்சு ருசிச்சு மீன்கள் பற்றி கூறுவார்கள்.

இதேபோல் தான் பழங்கள் விற்கின்றவர்களும். கூடுதலாக தென்மராட்சி பக்கம் இருந்து நிறை கூடைக்காரிகள் மாம்பழத்தோடு ஊருக்குள் திரிவார்கள். கறுத்தக்கொழும்பான் மாம்பழம், சுவை அதிகம். அதுவும் அவர்கள் சொல்லும் ‘கறுத்தக்கொழும்பான்’ என்ற வார்த்தையில் சுவை அதிகம்.

மருந்து மாத்திரை என்ற பேச்சுக்கே இடமில்லை. மரத்திலிருந்து லாவகமாக பிடுங்கி, வைக்கோல் போர்வைக்குள் பதுக்கி வைத்து பழுக்க வைத்த பழங்கள். கூடைக்குள் இருக்கும் பழங்களில் பழத்தின் பாலுடன் சேர்த்து வைக்கோல் ஒட்டியிருக்கும்.

பழம் தலைப்பக்கம் மெல்லிய மஞ்சளாக இருக்கும். கீழ் கொஞ்சம் பச்சையாக தான் இருக்கும். வைக்கோலில் பழுக்க வைக்கிற பழங்கள் முழுவதும் மஞ்சள் ஆவது கிடையாது. இப்படி 2 நிறத்தில் இருக்கும். மருந்தடித்தால் தான், ‘ஈமா வாற்சன்’ போல மஞ்சள் கலரில் இருக்கும்.


‘பழம் எல்லாம் செம மலிவு’ என்று கூடைக்காரி சொல்வாள். கிழமைக்கு 20 பழம் ஒவ்வொரு வீட்டிலும் விற்பனையாகும். நல்ல வியாபாரம். சீசனுக்கு மட்டும் வியாபாரம். சீசன் வியாபாரம் முடிய, வேறு விற்பனை. அழகு சாதனம், வேறு பழங்கள் உள்ளிட்ட விற்பனை என அவர்கள் வாழ்க்கை வியாபாரம், உறவுகள், சந்தோசம், பணம் என்று ஜாலியாக சென்றது.

யார் கண் வைத்தார்களோ தெரியவில்லை. கூடை தூக்கி வியாபாரம் செய்வதற்கு புதிய கூடைக்காரிகள் முன்வரவில்லை. இருந்த கூடைக்காரிகளும் வயது போய் இயலாத நிலைமை, அதிகரித்த விலைவாசியில் குறைந்த விலையில் மீன்களை பெற்று, ஊர்களில் விற்பனை செய்ய முடியவில்லை. சந்தையில் அதிக விலைக்கு மீன்களை வாங்க வேண்டிய நிலை. சந்தையில் கேள்வி அதிகம். கூடவே கொழும்பு கம்பனிக்கும் மீன் ஏற்றுகின்றோம் என சிலர் மீன்களை விலையேற்றிவிட்டனர்.

அவர்களுடன் போட்டிபோட்டு மீனவர்களிடம் இருந்து மீன்களை குறைந்த விலையில் கொள்வனவு செய்ய முடியவில்லை. அதிக விலைக்கு கொள்வனவு செய்தால் ஊரில் குறைந்த விலையில் வாங்கி பழக்கப்பட்டவர்கள் அறாவிலை கேட்கின்றனர்.

வியாபாரம் கைநழுவிவிட்டது. மீன்கள் கூடைக்காரிகளின் கூடைகளின் ஏற மறுக்க, கூடைகளை வீட்டு தவாரத்தில் கூடைக்காரிகள் தூக்கி போட்டுவிட்டனர்.

வீட்டு கதவுகள் இறுகப்பூட்டப்பட்டு கூடைக்காரிகளை வரவேற்க தயாராகவில்லை. ஏமாற்று வழிகள் வீடுகளுக்குள் நுழைவதால் வீட்டுக்காரர்கள் இவ்வாறான முடிவுகளை எடுத்தனர். இதனால் நல்லவர்களான கூடைக்காரிகள் இல்லாமல் போனார்கள்.

மாம்பழ மரங்களையே பழங்களின் மொத்த வியாபாரிகள் வாங்கிவிடுகின்றனர். 50 ரூபாயுக்கு குறைவாக கறுத்தக்கொழும்பான் யாழ்ப்பாணத்தில் கொள்முதல் செய்ய முடியாது. மாம்பழ வியாபாரிகளும் பின்வாங்கிவிட்டனர்.

பாரிய வியாபார நிலையங்கள், நிறுவனங்கள் வளர கூடைக்காரிகளின் தேவைகள் மக்களுக்கு இல்லாமல் போனது.

கூடைக்காரிகள் இல்லாமல் போனதால், புதுசா கலியாணம் செய்த பெண்களில் பலர் சமைக்க கஸ்ரப்படுகின்றனர். வீட்டில் சண்டை. சாப்பாடு சரியில்லையென. மாமியார் நாடகம் பார்க்க, சொல்லிக் கொடுக்க யாரும் இல்லை. பாவம் பெண்கள் சமையல் குறிப்பை இன்டர்நெட்டில் டவுன்லோட் செய்து பிறிண்ட் எடுத்து, சமையல் அறையில் மேல் றாக்கையில் செருகி வைத்து பார்த்து பார்த்து சமையல் செய்யும் நிலை.

கூடைக்காரிகள் மொத்தமாக இல்லாமல் போனது என்றில்லை. ஊருக்குள் ஒன்றிரண்டு கூடைக்காரிகள், ஏதோ ஒரு நம்பிக்கையிலும், பெறுமானத்தின் அடிப்படையிலும் தங்கள் தொழில்களை செய்கின்றனர்.

அப்படியொரு கூடைக்காரியை சந்தித்து பின்னரே இதனை எழுதவேண்டும் என்று தோன்றியது.

மக்களை அணுகிய வியாபார முறைகள் என சந்தைப்படுத்தல் கற்கைநெறிகளில் கத்தி கத்தி சொல்லி கொடுக்கின்றனர். ஆனால் மக்களை அணுகிய விற்பனை முறையை எப்போதிருந்தோ எமது கூடைக்காரிகள் மேற்;கொண்டுவிட்டனர் என்பதை உலகம் ஏற்றுத்தான் ஆகவேண்டும்.
குணசேகரன் சுரேன்