’யாழ்ப்பாணம்’ - இந்தச் சொல் பலருக்கும் பல விடயங்களை ஞாபகமூட்டும்.பிரயாசை, கடின உழைப்பு, செம்மண் பூமி,நல்லெண்ணை, சிறந்த கல்வி,கிடுகுவேலி,வரண்ட தறை, பனைமரம், வானில் பறக்கும் பட்டங்கள், தட்டிவான், மினி பஸ்,டியூட்டரி, சைக்கிள் பாவனை,....இப்படி நீளும் சில ஹய்லைட்டுகள்.
போருக்கு முந்திய காலமெனில் மெயில்ரெயின்,சீமேந்து ஆலையின் விசில் சத்தம், கீரிமலை,கோயில் திருவிழாக்கள், வாசிக சாலைகள், புகையிலைத் தோட்டங்கள், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்து தமிழ் சேவை இரண்டின் வானொலி நிகழ்ச்சிகள்,....இப்படியாகக் கொஞ்சம் நீளும்.
இவை எல்லாவற்றையும் சுவீகரித்துச் சென்று விட்டது போர். உள்ளூரில் எஞ்சி இருப்பது கொஞ்சம் விதவைப் பெண்களும் அனாதைகளாகிப் போன குழந்தைகளும், கால்கை இழந்த சில இளவயதினரும், தள்ளாத வயதில் துன்பங்களைச் சுமந்து நிற்கும் வயோதிபர்களும் தான். வெளிநாட்டுக்குத் தப்பியோடியோர் போக தெய்வாதீனமாய் தப்பிப் பிழைத்து கொஞ்சமாய் மக்களும் இல்லாமல் இல்லை.
நம் குழந்தைகள்: அகதிகள் ஆகிப் போன நம் குழந்தைகள்!
போர் தின்று துப்பிய எச்சங்களாய் இப்போது உலக நாடுகள் எங்கும் தமிழர்கள்! இவர்களிடம் இருக்கின்ற தாயகம் பற்றிய உணர்வு பூர்வமான பந்தம், அனுதாபம், குற்ற உணர்ச்சி, ஏதேனும் அவர்களுக்குச் செய்ய வேண்டும் என்ற உந்துதல்,என்பன போரின் பின் யாழ்ப்பாணத்தவரை சோம்பேறிகளாக்கி இருக்கின்றது என்று சொன்னால் மிகை இல்லை.
வாராந்தம் பிறநாடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் பல தாயக மக்களின் நன்மைக்கு பணம் திரட்டும் பாவனையில் நடைபெறுகிறது. தனித்தனியாகவும் பெரும்பாலானோர் பணமாயும் பொருளாயும் பாடுபட்டுப் இரவு பகலாய் உழைத்துப் பணம் சேர்த்து அனுப்புகிறார்கள்.
அந்த எண்ணம் நல்லது தான். உயர்வானவையும் கூடத் தான். ஆனாலும், இவை எல்லாம் நம் மக்களை உழைப்பின் அருமை தெரியாத ஒரு இளம் சந்ததியைத் தோற்றுவிக்கிறது என்ற உண்மையையும் நாம் உணரக் கடமைப் பட்டிருக்கிறோம். கல்வியில் நாட்டமின்மையும், குழந்தைகள் மீதான வன் முறையும், இளம் பெண்களின் கருத்தரிக்கும் வீதம் உயர்வதும், தற்கொலைகளின் வீத அதிகரிப்பும் ஆரோக்கியமானதாக இல்லை.
போருக்குப் பிந்தியதான புதிய வரவுகளும் திறந்து விடப்பட்டிருக்கின்ற புதிய பாதைகளும்,தொழில் நுட்பப் பாவனைகளும் எளிதாகக் கிடைக்கின்ற பணமும் மக்களை புதியதொரு பாதையின் பால் இலகுவாகத் திசைதிருப்பி விடப் போதுமானதாய் இருக்கிறது.
இந்த இடத்தில் நமக்கு - புலம் பெயர்ந்திருக்கிற நமக்கு ஒரு பெரும் கடப்பாடு இருக்கிறது என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். வெறுமனே நம் பணத்தை அனுப்பி நம் தவிப்புக்கு வடிகாலைத் தேடாமல் ஒரு சிறந்த மூலதனமாய் அதை மாற்றி தொழில்சாலைகளையும் நிறுவனங்களையும் அங்கு அமைத்து அவர்களின் வருவாய்க்கும் உழைப்புக்கும் உரிய வழிவகைகளை ஆற்றுவதே அக் கடப்பாடாகும். சீன மொழியில் உங்கள் எல்லோருக்கும் தெரிந்த ஒரு பழமொழி உண்டு.’பசித்திருப்பவனுக்கு மீனைக் கொடுக்காதே! ஒரு தூண்டிலைக் கொடு” என்பதுவே அப்பழமொழி ஆகும்.
நம்முடய பெரும் கடப்பாடும் அதுவேயாகும்.
நம்முடய பெரும் கடப்பாடும் அதுவேயாகும்.
சரி அங்கு - வளங்களற்ற அந்த வரண்ட பூமியில் என்னதான் செய்யலாம் என்று கேட்பவர்களுக்காக கீழ் வருவன.
இந்த வளங்களற்ற பூமியில் தான் காங்கேசந்துறை சீமேந்துத் தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளம், பரந்தன் இரசாயணத் தொழிற்சாலை, வாழைச்சேனை காகித ஆலை என்பன இயங்கின. ஜி,ஜி. பொன்னம்பலம் கைத்தொழில் விஞ்சான அமைச்சராய் இருந்த காலத்தில் இவை ஆரம்பிக்கப் பட்டன.
சீமேந்து ஆலை:
1952ம் ஆண்டு வலிகாமத்துத் துறைமுகப்பட்டினமாகிய காங்கேசந்துறையில் இவ்வாலை நிறுவப்பட்டது.கப்பல், புகையிரதம் ஆகியவற்றின் மூலமாக மூலப்பொருட்களும் முடிவுப் பொருட்களும் ஏற்றி இறக்கக் கூடிய வசதியான அமைவிடமாக காங்கேசன் துறை அமைந்த காரணத்தால் இவ்விடம் சீமேந்துக்குப் பொருத்தமான இடமாக அமைந்திருந்தது. சீமேந்து தயாரிக்கப் பயன் படும் ஒரு விதமான களிமண் மன்னார் முருங்கன் என்ற பிரதேசத்தில் இருந்து ரயில் மூலம் எடுத்து வரப்பட்டது. இதனால் இவ் ரெயிலை கிளே ரயில் என அழைக்கும் மரபும் வழக்கில் இருந்தது.
24 மணி நேரமும் இயங்கிய இவ்வாலை சுமார் 3000 பேருக்கு வேலை வாய்ப்பையும் சுமார் 1000 பேருக்கு மறைமுகமான வேலை வாய்ப்பையும் வழங்கி இருந்தது.அதனை விட 100 கணக்கான லொறிகள்,கட்டிடத் தொழிலாளரென இதன் வேலை வாய்ப்பினதும் வாழ்வாரத்தினதும் எல்லைகள் மிக நீளமானவை.
அக்காலத்தில் மாவிட்டபுரப் பிரதேசத்துக் கடைகள் பூட்டப்படுவதில்லை என்பர்.கதவில்லாக் கடைகள் என மக்கள் இதனை அழைத்தனர். இங்கு வேலை செய்யும் 1000 கணக்கான மக்களுக்கு இக்கடைகளே 24 மணி நேரத்துக்குமான உணவுகளை வழங்கின. சீமேந்துத் தொழிற்சாலையின் இயந்திரத்தில் இருந்து வெளிவரும் புகையைப் போக்கவென பெரும் புகை போக்கி ஒன்று இருந்தது. அதிலிருந்து நாளாந்தம் தவறாது புகை போனவண்ணம் இருந்தது. அதனை அக்காலமக்கள் பட்டாளத்துக்கு புட்டவிக்கும் புகை போகிறது என்று சொல்வார்களாம்.
வடபகுதியில் இருக்கும் சுண்ணாம்புக் கற்களும் இச் சீமேந்துத் தயாரிப்புக்குப் பெரிதும் உதவியதால் இச் சீமேந்து தரத்துக்கும் பெயர் போனதாக இருந்தது.
1990இல் உள்நாட்டு யுத்தத்தின் காரணமாய் இவ்வாலை மூடப்பட்டதோடு துறைமுகப்பட்டினமாய் உருவாகி இருந்த காங்கேசந்துறைத் துறமுகமும் தன் சோபையை இழந்து போனது. பலர் வருவாயையும் தம் ஜீவனோபாயத்தையும் இழந்து போயினர்.
மில்க்வைற் சவர்க்காரத் தொழிற்சாலை
யாழ்ப்பாணத்தின் நகர்புரப்பகுதியில் நாச்சிமார் கோயிலடியில் அமைந்திருந்த சவர்க்காரத் தொழிற்சாலை மில்க்வைற் சவர்க்காரத் தொழிற்சாலையாகும்.இந் நிறுவன அதிபர் அமரர் கனகராசா அவர்கள். அவர் ஒரு பரோபகாரியாகவும் சமூக ஆர்வலராகவும் இயங்கியவர். இன்றும் இத்தொழிற்சாலை இயங்கிக் கொண்டிருப்பதாக அறியக்கிட்டியது.இத் தொழிற்சாலையால் அக்காலத்தில் பலர் தொழில்வாய்ப்பைப் பெற்றனர்.
1970ல் இருந்து 1990 கள் வரை மில்க்வைற் செய்தி என்ற அறவழிச்செய்தி பத்திரிகை வெளிவந்தது. அவற்றில் சிலவற்றை நூலகம் இணையத்தளம் சேகரித்து வைத்திருக்கிறது. அவற்றைப் பார்க்கின்ற போது மில்க்வைற் நிறுவனம் ஆற்றிய சமூகப்பணிகளையும் அறியக் கூடியதாக இருக்கிறது.
குழந்தைகளுக்கு ஏடு தொடக்க அரிச்சுவடிகளையும் விறகுகளுக்காக மரம் வெட்டுவதைத் தடுத்து சவுக்கு மரக்கன்றுகளை இலவசமாக வழங்கியும் பல பாடசாலை கட்டிடங்களைக் கட்டிக் கொடுத்தும்..... இப்படியாகப் பெருகிச் செல்கிறது அவற்றின் அறப்பணி. நான் சிறு பிள்ளையாக இருந்த காலத்தில் பனம் விதைகளை லொறிகளில் ஏற்றிச் சென்று இலவசமாக வன்னிப் பிரதேசங்களில் வினியோகித்து பனைவளத்தை விருத்தி செய்ய அவர் எடுத்த முயற்சிகள் நன்கு நினைவிருக்கின்றன.
குழந்தைகளுக்கு ஏடு தொடக்க அரிச்சுவடிகளையும் விறகுகளுக்காக மரம் வெட்டுவதைத் தடுத்து சவுக்கு மரக்கன்றுகளை இலவசமாக வழங்கியும் பல பாடசாலை கட்டிடங்களைக் கட்டிக் கொடுத்தும்..... இப்படியாகப் பெருகிச் செல்கிறது அவற்றின் அறப்பணி. நான் சிறு பிள்ளையாக இருந்த காலத்தில் பனம் விதைகளை லொறிகளில் ஏற்றிச் சென்று இலவசமாக வன்னிப் பிரதேசங்களில் வினியோகித்து பனைவளத்தை விருத்தி செய்ய அவர் எடுத்த முயற்சிகள் நன்கு நினைவிருக்கின்றன.
அண்ணாக் கோப்பி - இணுவில்
எஸ்.வீ. நடராஜா அவர்களால் ஆரம்பிக்கப் பட்ட தொழிலகம் இது. ஆரம்பத்தில் அவர் உந்துருளியில் கடை கடையாகச் சென்று இவற்றை விற்றார் என்பர். கடின உழைப்பு, விடாமுயற்சி,பிரயாசை ஆகியவற்றுக்குப் பேர் போன ஓரிடத்தில் அண்ணாக் கோபி நிறுவனம் தன்னை நிலை நிறுத்திக் கொண்டதில் வியப்பில்லை. பின்னர் இது மிளகாய்தூள், குரக்கன் மா, ஒடியல் மா என உள்ளூரிலும் சர்வ தேச அளவிலும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டது.
சுதுமலையில் அண்ணாமலைப் பரியாரி என்று ஒரு பரியாரியார் இருந்தார். கைராசிக்காரர் எனப் பெயர் பெற்றிருந்த அவர் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவையை ஆற்றினார். தன்னிடம் பணம் இல்லாத போது தன் நில புலன்களை விற்றுக் கூட ஏழைமக்களுக்கு இலவசமாகச் சேவையாற்றினார் என்பர். அப் பரோபகாரியின் பெயரில் தான் அண்ணாக் கோப்பி என்ற இந் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
இவ்வாறான நிறுவனங்கள் இன்றும் இயங்கிக் கொண்டிருப்பது செய்த சேவையினாலும் அரப்பணிகளினாலும் தானோ என எண்ணத் தோன்றுகிறது.
நெல்லிரசம்:
நெல்லிரசம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றும் தோலகட்டி என்ற இடத்தில் மிகச் சிறப்போடு இயங்கி வந்ததும் நினைவில் இருக்கிறது.தரச் சிறப்பு வாய்ந்த அந் நெல்லிரசம் அழகிய பச்சை நிறம் கொண்டது. அக்காலத்தில் பலரும் அதை விரும்பி வாங்கிச் செல்வர். அதன் ருசியினால் கவரப்பட்டு கள்ளமாய் ஊற்றி ஊற்றிக் குடித்தது இன்னும் பசுமையாய் நினைவில் இருக்கிறது. முந்திரிகைச் பழச் செய்கை பிரபலமாயிருந்ததும் கூடவே நினைவில் இருக்கிறது.அவை தென் பகுதிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
இது போல காரைநகரில் உருவாக்கப் பட்ட சீநோர் தொழிற்சாலை பலருக்கு வேலைவாய்ப்பை வழங்கி இருந்தது. அதன் ஒரு கிளை குருநகரில் இயங்கி வந்தது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம். இது கண்ணாடி நார்களினாலான படகு, வலை என்பவற்றை தயாரித்து மீன்பிடித் தொழிலுக்கு உதவியது. இப்போது இது வேறொரு பெயரில் இயங்குவதாக அறிய முடிகிறது.
இது போல சோடாக் கொம்பனிகளும் இயங்கி வந்தன.சிறிமாவோ பண்டாரநாயக்கா ஆட்சியில் இருந்த காலத்தில் வெளிநாட்டு இறக்குமதிக்கு தடை போடப்பட்டிருந்ததால் யாழ்ப்பாணத்தில் விவசாயமும் படித்த இளஞர்களுக்கான விவசாய வேலைவாய்ப்புத் திட்டங்களும் புதிய ஒரு உத்வேகத்தை யாழ்ப்பாணத்துக்கும் வன்னிக்கும் வழங்கியிருந்தது. அதையொட்டி நாடகங்கள் கூட தயாரித்து மேடையேற்றப் பட்டன. ”வெளிக்கிடடி விசுவமடுவுக்கு” அக்காலத்தில் பிரபலமாயிருந்த ஒரு நாடகமாகும். நெல், உழுந்து, பயறு, சோயா, செத்தல் மிளகாய், வெங்காயம் என்பனவற்றால் விவசாயிகள் நல்ல இலாபமீட்டினர்.வன்னிப் பகுதியின் புதிய தறைகளும், ஊர் தோறும் அமைந்திருந்த குளங்களும் செல்வம் கொளிக்கும் கருவூலமாய் அக்கால இளைஞர்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்தன.
இந்தக் காலப்பகுதியில் உருவாகியவை தான் சோடாக் கொம்பனிகளும். சோடாக்கொம்பனிலேன் என்ற பெயரில் ஒழுங்கைகள் இன்றும் யாழ்பானத்தில் இருக்கின்றன.பேபிமார்க் சோடா, சீதா சோடா ஆகியன பிரபலமாயிருந்த சோடாக் கொம்பனிகள் ஆகும்.
ஆனால் இப்போது நுகர்வுப் பொருளாதாரமும் திறந்தவெளிப் பொருளாதாரமும் அமுலில் இருக்கும் போது கோக்குக்கும் கொக்கோகோலாவுக்கும் அது போன்ற பாணங்களுக்கும் ஈடாக நம் கைத்தொழில் சோடாக்கள் ஈடுகொடுத்து நிற்கமுடியுமோ என்பது சற்றே யோசிக்க வேண்டிய ஒரு விடயமும் தான்.
இதுபோல ஒருகாலத்தில் பனங்கட்டித் தொழிற்சாலைகள் இயங்கின. அவை அச்சுவெல்லம், பனங்கட்டிக் குட்டான்களில் வட்ட வடிவம் நீள்சதுரவடிவங்களில் விற்பனைக்கு வந்தன.கோயில் வாசல்கள், திருவிழாக்காலங்களில் ஆச்சிமார் கடலைச் சுருள்களோடு பனங்கட்டிக் குட்டான்களையும் விற்றதை என்றென்றைக்கும் மறக்க முடியாது.
தேங்காய் எண்ணை, நல்லெண்னை ஆலைகள் சிலவும் வெற்றிகரமாக இயங்கிவந்த சிறு நிறுவனங்களில் சில.
அதுபோல பீடித் தொழிற்சாலைகள், (RVG பீடி),சீயாக்காய் தொழிற்சாலைகள்,கருவாட்டு உற்பத்தி என்பன ஒருகாலத்தில் பிரபலமாயிருந்தவை. இவற்றோடு சேர்த்து ரொபித் தொழிற்சாலைகளையும் சொல்லியாக வேண்டும்.இத் ரொபித் தொழிற்சாலைகள் மானிப்பாய், நல்லூர்,முத்திரைச் சந்தி, அரியாலை, புங்கங்குளம் ஆகிய இடங்களில் இயங்கி வந்தன. மானிப்பாயில் இருந்து வந்த ரோஸ்பாண்ட், மற்றும் அரஸ்கோ ரொபி ஆகியன உங்களில் சிலருக்கு நினைவுக்கு வரலாம். அவை எல்லாம் இனி கால ஓட்டத்தோடு மறைந்து போபவையாகவும் ஆயிப் போயின. இனி யார் பீடியையும் சோடாவையும் ரொபியையும், சீயாக்காயையும் தேடப் போகிறார்கள்! இவை எல்லாம் கால மாற்றத்தோடு கரைந்து போபவையே!
இவை போல மாவிட்ட புரத்திலும் நீர்வேலியிலும் கண்ணாடித் தொழிற்சாலைகள் இயங்கின. யாழ் நகர் ஸ்டான்லி வீதியிலும் பெனின்சுலா என்னும் பெயரில் ஒரு கண்னாடித் தொழிற்சாலை இருந்தது. கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரிக்கு முன்பாக ரயரைப் புதுப்பித்துப் பூப்போடும் பணியைச் செய்யும் கொம்பனி ஒன்று இயங்கி வந்தது.
ஐஸ்கட்டித் தொழிற்சாலைகள் கரையோரக் கிராமங்கள் எங்கும் இயங்கி வந்தன. வடபகுதிக் கடற்கரையோரப் பகுதியாகையால் மொத்த மீன் உற்பத்தியில் கால்பங்கை யாழ்ப்பாணமே முழு இலங்கைக்கும் வழங்கி வந்தது. அதற்கு இந்த ஐஸ்கட்டிகள் பெருமளவு பயன் பட்டன.
இறால் பதனிடும் தொழிற்சாலை ஒன்று அன்றூஸ் என்ற பெயரில் நாவற்குழியில் 1977ன் பிற்பாடு ஆரம்பிக்கப்பட்டது. யுத்தம் கொண்டு போனவற்றோடு அதுவும் போய் விட்டது. இத் தொழிற்சாலை இறால்களைப் பதனிட்டு தென்பகுதிக்கும் வெளிநாட்டுக்கும் அவற்றை அனுப்பி வைத்தது. தென்பகுதிச் சிங்களவர் ஒருவரால் ஆரம்பிக்கப்பட்ட இத் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களை இந் நிறுவனத்து பஸ் தொழிலாளர்களின் வீட்டுக்குச் சென்று ஏற்றி மறுபடி அவர்களை அவர்கள் வீட்டு வாசலில் இறக்கிச் செல்லும் வழமையைக் கொண்டிருந்தமை நினைவு கூரத் தக்கது. பின் நாளில் யுத்தத்தின் வருகை இத்தொழிற்சாலையை இராணுவமுகாமாய் மாற்றி விட்டிருந்தது.
இது போல நுணாவிலில் இயங்க ஆரம்பித்த சில வருடங்களில் ஒரு ரயர் தொழில்சாலையும் காணாமல் போய் விட்டது.(1986 - 1990) அது போல நாவற்குழியில் ஆரம்பிக்கப்பட்ட சிக்மா என்ற நீரிறைக்கும் இயந்திரம் தயாரிக்கும் நிறுவனம் முற்றாக அழிந்து போனது. அதுபோல கொழும்புத்துறைப் பிரதேசத்தில் இயங்கிய தும்புத் தொழிற்சாலை, மாவிட்ட புரத்தில் இயங்கிய ‘டொலர்’அலுமீனியத் தொழிற்சாலை, அது போல எல்கே எம் என்ற பெயரில் தயாரித்து விநியோகிக்கப்பட்ட வாளி,அதன் தரச் சிறப்பு இன்னும் நினைவில் நிற்கிறது.அந்த வாளிகளுக்கு தென்பகுதியிலும் பெரும் கிராக்கி நிலவி இருந்தது.
ஊரெழுவில் இப்போதும் தப்பிப் பிழைத்து ஒரு அலுமினியப் பாத்திரங்கள் வார்க்கும் தொழிற்சாலை இயங்குவதாக அறிய முடிகிறது.இது போல அப்பள, ஊறுகாய் சிறுகைத்தொழில் முயற்சிகளும் ஆங்காங்கே சிறுகைத்தொழிலாக நடக்கின்றன. ஜாம் தயாரிக்கும் முயற்சிகளும் உள்ளன.
இவை எல்லாம் எதற்காக இங்கே பட்டியலிடப்படுகின்றன என்ற பெருங்கேள்வி உங்களுக்கு எழலாம். இவை இங்கே வெறும் நினைவு மீட்டலுக்காக அல்ல.
இப்போது நம்முன்னே ஒரு பெரும் பொறுப்பு உள்ளது. கால வெள்ளத்தில் கரைந்து காணாமல் போன அவை மீள உருவாக வேண்டும்.புலம்பெயர்ந்த நாடுகளில் தொழில் சார் விற்பன்னர்களாகவும் பொருளாதார வசதி மேவியவர்களாகவும் நம் மக்களுக்கு ஏதேனும் செய்யவேண்டும் என்ற எண்ணத்தோடும் வாழும் நம்மவர் இத்தகையதான தொழிற்சாலைகளை மீள அமைத்து ஒரு கைத்தொழில் யுகம் ஒன்று வடக்கில் மலர்ந்து நம்மவர் வாழ வழிவகை செய்யவேண்டும்.
பொருட்களை நுகர்ந்து பணத்தைச் செலவளிக்கும் மக்களாக அல்லாமல் உற்பத்தித் திறன்மிக்க; தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் தன்காலில் நிற்கும் திறமையும் படைத்தவர்களாக அவர்களை உருவாக்கி ஆளாக்கி வைக்கும் கடமை புலம் பெயர்ந்திருக்கிற நம் எல்லோரையும் சாரும்.
அது காலம் நெடுக நின்று வாழும். இந்தக் குழந்தைகளின் ஏக்கம் ஒரு நாள் தீரும்
.
ஒரு மீன் வலையைப் போல! மேலும் கொஞ்ச விதை நெல்லைப் போல! அவர்களை அது வாழ வைக்க, நீவீரும் வாழ்வீர்!!
.
ஒரு மீன் வலையைப் போல! மேலும் கொஞ்ச விதை நெல்லைப் போல! அவர்களை அது வாழ வைக்க, நீவீரும் வாழ்வீர்!!
நிச்சயமாக!!
(அண்மையில் யாழ்ப்பாண நினைவுகள் பற்றித் தொடர்ச்சியாக தேவநாயகம் தபேந்திரன் என்பார் ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில் எழுதி வரும் கட்டுரை ஒன்றினைத் தழுவி இவ்வாக்கம் எழுதப்படுகிறது. நன்றி: தினக்குரல் 2.9.12, மற்றும் 9.9.12)
1 comments:
தொடருங்கள்