•7:12 PM
பாதுகாப்பான; அதே நேரம் செம்மையான / செட்டான / காத்திரமான / குறை எதுவும் சொல்லமுடியாத
/ மிகுந்த சிரத்தையும் மன ஈடுபாடும் கொண்டு இணக்கப்பட்ட / என்று பொருள் தரத்தக்கது.
மேலும் சொற்களால் கொண்டுவரமுடியாத ஒரு விதமான குண இயல்பும்
அந்தச் சொல்லுக்கு உண்டு. அதாவது இந்தச் சொல்லுக்குள் ஒரு விதமான குண இயல்பும் வாழ்வும்
ஒழிந்திருக்கிறது.
House என்பதற்கும் Home
என்பதற்கும் இருக்கிற வேறுபாடு மாதிரியானது அது.
அச்சறக்கையாகக் கட்டப்பட்டது என்கிற போது அதற்குள் இங்கு
கட்டப்பட்ட சுவர்களுக்கோ வேலிகளுக்கோ உள்ளே ஒரு பெறுமதியான விடயம் இருக்கிறது. மதிப்பு
வாய்ந்த விஷயம் ஒன்றுக்காக இது பார்த்துப் பார்த்து உருவாக்கப் பட்டிருக்கிறது என்பதும்
கூடவே தொக்கி நிற்கும். மிகப் பவித்திரமான ஒழுக்கம் அல்லது பண்பாட்டுப் பெறுமதி மிக்கது
அது என்ற தொனிப்பொருளைக் அது கொண்டிருக்கும்.
அண்மையில் வசுந்தரா.பகீரதன் என்ற சிட்னி கவிஞையின் கவிதை
ஒன்று பார்த்தேன். அதில் இந்த வார்த்தை இடம்பெற்றிருக்கிறது. புலம்பெயர்ந்த ஒருவரின்
தற்போதய மனநிலையைச் சித்திரிப்பதாகவும் அதே நேரம் வழக்கொழிந்து போகும் இந்த வார்த்தை சரியான இடத்தில் இடம்பெற்றிருப்பதாலும் பொருத்தப்பாடு கருதி அந்தக் கவிதையையும் கூடவே தருகிறேன்.
என் வீடு
வலிகாமம் வடக்கில்
ஐந்துபரப்புக் காணிக்குள்
அரண்மனைபோல் என் வீடு
நாலறையும் விறாந்தையும்
நட்ட நடுவே மண்டபமும்
அம்மாவின் சமையலறையும்
மூன்று தலைமுறைக்கும்
முந்திய வீடென்று
முன்னோர்கள் சொன்னதுண்டு.
அகன்ற முற்றத்தில்
அடுக்கடுக்காய் பூமரங்கள்
செம்பரத்தையும் றோசாவும்
நித்திய கல்யாணியும் மல்லிகையும்
பூக்களுக்கோ குறைவில்லை
பழமரங்கள் ஏராளம்
கப்பலும் கதலியும்
இதரையும் மொந்தனுமாய்
பலசாதி வாழைகளும் பலாவும்
தென்றல் வந்து விளையாடும்
தென்னைமரங்களும் தேமாவும்
வடகம் தந்திருந்த வேப்பமரங்களும்
சோலைவனமாய் காட்சி தந்த
அழகிய என் வீடு....
பூவரங் கதியால்கள்
நாலுபக்கம் அணிவகுக்கும்
நாய் கோழி நுழையாமல்
பனைமட்டை வரிச்சுக் கட்டி
குமர் பிள்ளை பலவென்று
கிடுகுவேலி மறைத்துக் கட்டி
அச்சறக்கையான குளியல் இடம்
கோழிக்கும் கூடுகள்; ஆட்டுக்கும்
மாட்டுக்கும் கொட்டில்கள்
ஐந்தறிவு சீவன்களும் எம்மோடு
அகம் மகிழ்ந்து வாழ்ந்த வீடு
மாமாக்கள் சித்திக்கள்
ஆக்காக்கள் அண்ணன்மார்
பலரது கல்யாணம் கண்ட வீடு
ஆறேழு சாமத்திய வீடுகளும்
அயலட்டைகளை அழைத்து
சாப்பாட்டுச் சபை நடத்தி
ஆனந்தமாய் களித்த வீடு
காலை விடிந்து விட்டால்
அடிவளவு மாமரத்தில்
அணில்கள் பல சேரும்; அதன்
கீச்சொலிகள் இசையாகும்
பழங்கோதிப் பசியாற
வந்து போகும் கிளிகளும்
போட்டிக்குக் கதை பேசும்.
மாலையாகிவிட்டால்
வேப்பமரக் கிளைகளில்
கூவிக்களித்திருக்க
குயில் கூட்டம் வந்து சேரும்
கிடுகுவேலி மேலிருந்து
அண்டன்காக்கைகளும்
செம்பகமும் அதை ரசித்துக்
கேட்டதுண்டு.......
இத்தனை சிறப்போடு அன்று
வீற்றிருந்த என் வீடு!
இன்று......
வேப்பமரங்கள் எதுவுமில்லை
கூவியிசைபாடக்
குயில்களும் அங்கில்லை
அடிவளவு மாமரமும்
இருந்த இடம் தெரியவில்லை
தாவும் அணில்களின்
கீச்சொலி கேட்கவில்லை
தென்னைமரம் வாழைமரம்
தேன்சுவை பலா என்ற
பேச்சுக்கே இடமில்லை
ஆடு இல்லை, மாடு இல்லை
கோழி இல்லை, குஞ்சும் இல்லை
ஆட்களைக் கண்டால்
நின்று குரைக்க நாயுமில்லை
குரைக்கின்ற நாயை அடக்க
ஆட்கள் என்றும் யாருமில்லை
ஷெல்லும் பொம்மரும்
கிபீரும் கொட்டித் தீர்த்த
குண்டுகளில் என்வீடு
சிதைந்து இன்று
சின்னாபின்னமாய்
சுடுகாடாய் கிடக்கிறது
சிதைந்து கிடப்பது
அழகிய என் வீடு மட்டுமா?
மனமும் தான்......!
கவிதைக்கு நன்றி: வசுந்தரா.பகீரதன்
10 comments:
மிகவும் ஆர்வமாக வாசித்தேன் மிக நன்றி. காரணம் அச்சறக்கையாக வளர்க்கப்பட்டவள் தானே நானும். நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com
மிக்க நன்றி வேதா உங்கள் கருத்துக்கு. இந்தச் சொல் உண்மையில் உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொருந்திப் போகக் கூடியது தான்.
‘பொம்பிளப்பிள்ளைய இப்படி அச்சறக்கையா வளத்துப் போட்டு முன் பின் தெரியாத இடத்தில எப்பிடிக் கட்டிக் குடுக்கிறது’ - இப்படிச் சொல்லுகின்ற போது அது உயர்திணையில் வரும்.
மென்மையாக அதனைச் சொல்லிச் சென்றீர்கள் வேதா. வரவுக்கும் பகிர்வுக்கும் நன்றி.
நானும் ஆர்வமாக வாசித்தேன் மிக நன்றி
"கோழிக்கும் கூடுகள்; ஆட்டுக்கும்
மாட்டுக்கும் கொட்டில்கள்
ஐந்தறிவு சீவன்களும் எம்மோடு
அகம் மகிழ்ந்து வாழ்ந்த வீடு
மாமாக்கள் சித்திக்கள்
ஆக்காக்கள் அண்ணன்மார்
பலரது கல்யாணம் கண்ட வீடு
ஆறேழு சாமத்திய வீடுகளும்
அயலட்டைகளை அழைத்து
சாப்பாட்டுச் சபை நடத்தி
ஆனந்தமாய் களித்த வீடு"
மிகவும் அருமையான வரிகள் மிக்க நன்றி
நன்றி மாலதி.
இது போல ’ஆய்க்கினை’ என்ற சொல்லும் இருக்கிறது. அது பற்றியும் எழுத வேண்டும் என்று ஆவல்.
உண்மை தான் விஜி. அந்தக் கவிதைக்குள் யாழ்ப்பாணத்து வாழ்வின் ஜீவனைக் கொண்டுவந்து விட்டார் வசுந்தரா இல்லையா?
அந்தக் கவிதையை வாசித்த பின்னர் தான் தோழி அந்த மறந்து போன அச்சறக்கை என்ற சொல்லைக் கண்டு பிடித்தேன்.
மகிழ்ச்சி உங்கள் வரவுக்கும் பகிர்வுக்கும்.
கவிதை அழகு
உண்மை. அக்கறையோடு வந்து உங்கள் கருத்தைத் தந்து சென்றமைக்கு மிக்க நன்றி நிலவன்பன்.
வேதா,மாலதி,விஜி இப்போது நிலவன்பன் எல்லாம் புது முகங்கள்!
மகிழ்ச்சியாய் இருக்கிறது. அடிக்கடி வாருங்கள்! தமிழால் இணைந்திருப்போம்.
கவிதையும் சொல் விளக்கமும் சிறப்பாக இருந்தன/ தமிழ்க் கவிதையின் பொதிய எல்லைகளைத் தொடுவதாய் நன்றி
மகிழ்ச்சி நந்தினி.