Author: ஃபஹீமாஜஹான்
•8:32 AM








எங்கள் ஊருக்கு மிகச் சமீபமாக “வீரபாகுகல” என்ற ஒரு சிறு குன்று உள்ளது.இவ்விடத்தில் வீரபாகு மன்னன் தனது மாளிகையை அமைத்திருந்ததாகப் பெரியவர்களின் வாய்மொழிக் கதைகளினூடாகக் கேட்டறிந்துள்ளோம்.



அரசனது கோட்டையின் வாயிற்காப்பாளனாக எங்கள் ஊரைச் சேர்ந்த ‘குஞ்சுடையார்’ என்ற முஸ்லிம் ஒருவர்தான் கடமை புரிந்துள்ளார.; அரசனால் அவருக்குக் கொடுத்திருந்த தோள் பட்டி, உடைவாள், அரசனால் கையளிக்கப்பட்ட ‘சன்னச’ என்பன சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அவருடைய குடும்பத்தாரிடையே இருந்துள்ளன. அதனை அவர்கள் பழம்பொருள் சேகரிப்போரிடம் சில்லறைக் காசுக்கு விற்றுவிட்ட படியால் தடயங்கள் கூட இல்லாமற் போயின.




முற்காலத்தில் “மாவீ” எனப்படும் நெல் விதைக்கப்பட்டு வயல்கள் மிகச் செழிப்பாக வளர்ந்திருந்த வேளையில் அரசன் குதிரை மீதமர்ந்தவாறு ஊர் சுற்றிப் பார்த்த பொழுது அழகாகக் காணப்பட்ட நெல்வயல் வெளியைக் கண்டு இது தான் “மாவீவெல” எனப் பெயரிட்டானாம். காலப் போக்கில் இந்தப் பெயர் மருவி தற்காலத்தில் “மாய்வெல” எனப் பெயர் பெற்றுள்ளது.


மாய்வெல ஊரின் இட அமைவு:

மாய்வெலக் கிராமம் குருநாகல் மாவட்டத்தில் ‘இஹலஓதொட்ட கோரளை’ என்ற கோரளைப் பிரிவில் அமைந்துள்ளது. அத்துடன் மாய்வெல ஊரானது இப்பாகமுவ பிரதேசச் செயலாளர் பிரிவிலும் ஹிரியால தேர்தல் தொகுதியிலும் அமையப் பெற்றுள்ளது.


மெல்சிரிபுர நகரம்:


எங்கள் ஊருக்கான தபாலகம் அமையப் பெற்றிருக்கும் மெல்சிரிபுர நகரமானது முற்காலத்தில் ‘வெடகெய்யாபொ(த்)த’ என்றே அழைக்கப் பட்டு வந்தது.

இந்த ஊர் எல்லையில் காணப்படும் விசாலமான தென்னந்தோப்புகள் யாவும் எச்.எல்.டி.மெல் எனும் இங்கிலாந்து நாட்டவருக்குச் சொந்தமானதாக இருந்தன. தற்போது மெல்சிரிபுர நகரில் உள்ள கடைத் தொகுதிகள் அமையப் பெற்றிருக்கும் இடங்கள் யாவும் முன்னர் மெல் கம்பனிக்குச் சொந்தமான காணிகளாகவே இருந்தன. இவருடைய காலத்தில் கடைகள் கட்டப்பட்டதோடு நகரின் மத்தியில் மணிக்கூட்டுக் கோபுரம் ஒன்றும் கட்டப்பட்டது. சுற்றியுள்ள கிராமங்களில் வாழ்ந்தோருக்கெல்லாம் இந்தக் கோபுரத்தில் இருந்து ஒலிக்கும் மணிச்சத்தத்தைத் துல்லியமாகக் கேட்க்கக் கூடியதாகவிருந்தது. மற்றும் சந்தைக்கான கட்டத்தொகுதியும் வைத்தியசாலையும் அமைக்கப்பட்டது. மெல்சிரிபுர அழகான நகரமாக வடிவம் பெற இருந்த வேளையில் எச்.எல்.டி.மெல் அவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். அத்துடன் நகர எழுச்சியும் பல தசாப்பதங்கள் பின்னோக்கித் தள்ளப்பட்டது. இந்தப் பின்னணியிலேயே மெல்சிரிபுர என்ற பெயர் உருவானது.

1970 ம் ஆண்டுக்குப் பின்னர் மணிக்கூட்டுக் கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த பல்லாண்டுகள் பழமை வாய்ந்த மணிக்கூடு அரசியல்வாதியொருவரால் களவாடப்பட்டு எடுத்துச்செல்லப்பட்டது. வைத்தியசாலைக்கெனக் கட்டப்பட்ட கட்டிடத்தில் தற்போது மரக்கூட்டுத்தாபனம் அமைந்துள்ளது.


பெருமகனார் பரீத் ஹாஜியார் :

படித்தவர்கள் என்று குறிப்பிட ஒருவரும் இல்லாத வேளையில் படிப்பறிவில்லாத ஒருவர் தனது அன்பு மகனை ஊரில் குர்ஆன் ஓதக் கற்றிருந்த பெரியார் ஒருவரின் வீட்டுத் திண்ணையில் குர்ஆன் ஓத அனுப்பினார். பின்னர் பக்கத்துச் சிங்களப் பாடசாலையில் கல்வி பயில அனுப்பப் பட்டார்.பின்னர் இப்பாகமுவ மத்திய கல்லூரியில் கல்வி கற்றுப் பின்னர் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் தனது படிப்பை முடித்துக் கொண்டார். பல பெரியார்களை உருவாக்கிய ஸாஹிரா இவரையும் ஊருக்கொரு ஒளிவிளக்காக அனுப்பிவைத்தது.



பள்ளிவாயிலும் கிராம வளர்ச்சியும்:

ஆரம்ப காலத்தில் மிகச் சிரமங்களுக்கு மத்தியில் ஒரு சில குடும்பங்களே இவ்வூரில் வாழ்ந்து வந்தன. எல்லா வீடுகளும் ஓலை வேயப்பட்ட வரிச்சுச் சுவர் வீடுகளாகவே காணப்பட்டன. எனினும் அக்காலத்தில் நாட்டு ஓடு வேயப்பட்ட நிலையில் பள்ளிவாசலொன்று காணப்பட்டிருக்க வேண்டும் என்று நம்பப் பட்டது. இதற்கான தடயம் 1958ம் ஆண்டில் கிடைக்கப் பெற்றது. அவ்வேளையில் பள்ளித் தோட்டத்தின் தென்மேற்குத் திசையில் சிறிய மண் குவியல்கள் காணப்பட்டன. அவற்றை வெட்டிச் சமப்படுத்த முனைந்த பொழுது குவித்து வைக்கப் பட்டிருந்த ஓட்டுக் குவியல்கள் வெளிப்பட்டன.

அதன்பின்னர் தகரம் வேயப்பட்ட பள்ளிவாசலொன்று அமைக்கப் பட்டிருந்தது. அந்தப் பள்ளியில் உள் பள்ளி, புறப் பள்ளி என்ற இரு பகுதிகள் மாத்திரம் காணப்பட்டன. அப்போது தண்ணீர் வசதியோ , கழிப்பிட வசதியோ காணப்படவில்லை. தொழுகைக்கு வருபவர்கள் வுழூ செய்வதற்காக அருகிலுள்ள ஆற்றுக்கே செல்ல வேண்டும். இந்நிலையில் நலன்விரும்பியொருவரான கே.பீ.எம்.றசீத் என்பவரால் பள்ளியின் முன்வாயிலுக்குப் பக்கத்தில் சீமெத்துபூசப்பட்ட சிறு தொட்டியொன்று கட்டிக் கொடுக்கப்பட்டது. இந்தத் தொட்டிக்கு ஆற்றிலிருந்து நீர் கொண்டுவரப்பட்டு நிரப்பட்டது. பள்ளிக்குள் செல்பவர்கள் கால்களைக் கழுவிக் கொள்வதற்காக இத்தொட்டியில் உள்ள நீர் உதவிபுரிந்தது. பின்னர் 1952, 1953 காலப்பகுதியில் நலன்விரும்பிகள் இருவரினால் பள்ளிவாசலுக்கான கிணறு கட்டப்பட்டது.




(பழைய பள்ளிவாசலின் படம்(இமாமாகக் கடமையாற்றிய அப்துல் காதர் செய்யது இஸ்மாயில் அவரது மனைவியுடன்)


ஊரில் வாழ்ந்த பெருமகனார் 1955ம் ஆண்டு வாலிபர்களை ஒன்றுகூட்டி வாலிபர் சங்கமொன்றை ஏற்படுத்தினார். கட்டாயமாக ஐவேளைத் தொழுகையையும் இமாம் ஜமாஅத்துடன் நடத்த ஏற்பாடு செய்தார். அத்துடன் திங்கள் , வெள்ளி இரவுகளில் ராதீப் வைபவங்களும் தொடந்து நடாத்தப்பட்டு வந்தன.

இக்கால கட்டத்தில் சிறு பிள்ளைகளுக்குக் குர்ஆனைக் கற்றுக் கொடுப்பதற்கான முறையான வசதிகள் எதுவும் காணப்படவில்லை. ஓதத் தேவை என்ற நினைவுவரும் போது அப்துல் காதர் அப்பா( இவரை குருக்கள் அப்பா என்றும் அழைப்பர்) வீட்டுத் திண்ணையில் போய் அமர்ந்து ஓதக் கற்றுக் கொள்வார்கள். இந்நிலைலேயே ஊர் மக்களை ஒன்று கூட்டி அவர்களின் ஒத்துழைப்புடன் பள்ளிவாசல் புறப்பள்ளியில் அப்துல் காதிர் அப்பாவிடம் சிறு பிள்ளைகளுக்குக் குர்ஆன் ஓதவும் வழியமைத்துக் கொடுத்தார். இவரைத் தொடர்ந்து தெவுட்டலங்கை என்ற ஊரைச் சேர்ந்த அப்துல் ஜப்பார் என்பவரும் வலிகாமத்ததைச் சேர்ந்த ஒருவரும் குர்ஆன் ஓதிக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டனர். 1956ம் ஆண்டளவில் பள்ளிவாசலுக்கு அருகே வரிச்சுச்சுவரினாலான கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு சிறு பிள்ளைகள் குர்ஆன் ஓதும் மத்ரசாவாக அமைக்கப் பட்டது.

அக்கால கட்டத்தில் பள்ளிவாசலருகே கழிப்பிட வசதிகள் இருக்கவில்லை. இந்நிலையில் வாலிபர் சங்கத்தினரை ஒன்றிணைத்து சிறுநீர் கழிப்பதற்கான 5-6 அறைகள் கொண்ட ஓலைக் கொட்டில்களை உருவாக்கி ஒழுங்குகளைச் செய்தார்.

அப்பொழுது வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆ தொழுகைக்கு நாற்பது பேர் கூடுவதற்குப் பெரும் பிரயத்தனமெடுக்க வேண்டிய நிலையிருந்தது. குறிப்பிட்ட சிலரைத் தவிர மற்றவர்கள் பள்ளிவாசலுக்குப் போவதில்லை. இந்நிலையில் தொழுகை முடிந்து வெளியேறும் போது வருகை தந்தவர்களைப் பதிவு செய்ய கணக்குப்பிள்ளை என்பவர் நியமிக்கப்பட்டார். வருகை தராதவர்களிடமிருந்து ஐந்து சதம் அபராதம் அறவிடப்பட்டது. இதனால் கட்டாயமாக வெள்ளிக்கிழமை பள்ளிக்குப் போகவேண்டிய நிலைமை ஏற்பட்டது. அப்படிப் போகின்றவர்களில் ஒருசிலர் புறப்பள்ளியில் அமர்ந்து சத்தமிட்டுக் கதைத்துக் கொண்டிருப்பார்கள். தொழுகை முடியும் தருவாயில் தொழாத நிலையிலும் தமது பெயரைப் பதிவுசெய்து கொண்டு ஐந்து சதத்துக்கான அபராதத்திலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு திரும்புவார்கள். வராமலேயே வீட்டில் கிடந்தவர்கள் அல்லது மீன்பிடிக்கச் சென்றவர்கள் தங்களது சிறு பெண்பிள்ளைகளைப் பள்ளிவாசலுக்கு அனுப்பி பொய்ச் சான்றுகளைச் சொல்லி அபறாதத்திலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள முயன்றனர். இச்சம்பவமே அக்கால மக்களின் ஆன்மிக மற்றும் அறிவு நிலையை மதிப்பிட்டுக் கொள்வதற்குப் போதுமானதாகும்.

வெளியூர்ப் பாடசாலையொன்றில் கற்பித்தல்; தொழில் புரிந்த ஒருவரும் இவ்வுரில் வாழ்ந்து வந்தார். அவர் வாத்தியார் என்ற பெயரில் அழைக்கப்பட்டார். எனினும் இவ்வூர்ப் பிள்ளைகளுக்குக் கல்விகற்றுக் கொடுக்கும் பணிகள் எதனிலும் அவர் ஈடுபட்டாதாகத் தகவல்கள் இல்லை.



இந்நிலையில் 1956,1957 காலப்பகுதியில் வாலிபர்களுக்கும் வளர்ந்தோருக்கும் எழுத்தறிவையூட்டும் பணியில் பரீத்லெவ்வை ஈடுபட்டார். தனது சொந்தச் செலவிலேயே கரும்பலகை, மேசை, கதிரைகளைச் செய்து தனது வீட்டுக் கட்டிடம் ஒன்றிலேயே இரவு நேரங்களில் கற்பித்துக் கொடுத்தார். எந்த ஊதியமும் பெறாமலேயே இப்பணியை இவர் மேற்கொண்டார்.


1957ம் ஆண்டு கலாவௌயைச் சேர்ந்த ஹகீம் சாஹிப் என்பவர் எம்மூருக்கு வருகை தந்தார்.இவர் முஸ்லிம் கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள பள்ளிவாயில்களில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்திசெய்வதற்கான ஆலோசனைகளை வழங்கி வந்தார். அந்த வகையில் அவரது ஆலோசனையின் பயனாக வுழூ செய்வதற்கான (நீர்த்தடாகம்) ஹவுல் கட்டப்பட்டு கிணற்றில் இருந்து நீர்நிரப்பப் பட்டது. ஹகீம் சாஹிப் அவர்கள் வேலை முடியும் வரை பள்ளிவாசலிலேயே தங்கியிருந்தார்.



T.S.M.ஹனீபா ஆலிம் அவர்களின் வருகையும் ஊரின் மறுமலர்ச்சியும்:

1957ம் ஆண்டு மாவனல்லை கிருங்கதெனியவைச் சேர்ந்த T.S.M. ஹனீபா ஆலிம் அவர்கள் குர்ஆன் ஓதிக் கொடுக்க வந்து சேர்ந்தார். அவரது வருகை எமதூரின் புதிய அத்தியாயமொன்றைத் தொடக்கி வைத்தது. நல்ல கல்விச் சூழலில் பிறந்து வளர்ந்து இங்கே வந்து சேர்ந்த அவரினால் ஊர் மறுமலர்ச்சியடைந்தது. ஒரு கை தட்டி ஓசையெழாத போது பரீத்லெவ்வை அவர்களுக்கு இணைந்த மறு கையாக ஆலிம் வந்தடைந்தார்.

ஆலிம் அவர்கள் அல்குர்ஆன் ஓதிக்கொடுக்க ஆரம்பித்த ஓரிரு வாரங்களுக்குள்ளேயே பிள்ளைகளுக்குப் படித்துக் கொடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். “நான் காலையில் படித்துக் கொடுப்பேன். மாலையில் ஓதிக் கொடுப்பேன். அதற்கான ஒழுங்குகளைச் செய்து தாருங்கள்” என்றார்;.

அந்தச் சந்தர்ப்பத்தில் பிள்ளைகள் நிலத்தில் பாய்விரித்து அமர்ந்தே குர் ஆன் ஓதிவந்தனர். பள்ளிக்கூடம் நடாத்துவதற்குத் தளபாடங்கள் தேவைப்பட்டன. இந்நிலையில் வளர்ந்தோருக்கு வகுப்பு நடாத்த தயாரிக்கப் பட்டிருந்த தளபாடங்கள், கரும்பலகை என்பன பரீத்லெவ்வை அவர்களிடம் இருந்தன. உடனே பரீத்லெவ்வை அவர்கள் செயற்பட்டு எந்தவிதத் தாமதமுமின்றி தளபாடங்களை எடுத்துவந்தார். ஓலைவேயப்பட்ட சின்னஞ்சிறு ஓதல் கூடத்தில் பிள்ளைகளுக்கான பள்ளிக்கூடமும் ஆரம்பமாகியது.

1958ம் ஆண்டில் முதலாம் வகுப்புப் புத்தகத்தைப் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுத்தார். 1959ம் ஆண்டு இரண்டாம் வகுப்புப் புத்தகங்களைக் கொண்டு வந்து கற்பித்தார்.முஸ்லிம் பாலர் வாசகம், கணிதம், பூமி சாஸ்திரம், சிங்களம் இவைகள் தான் அன்றைய புத்தகங்களாக இருந்தன. பிள்ளைகளிடம் ஊசி , நூல், துணித்துண்டுகளைக் கொண்டு வருமாறு கூறி தையலையும் கற்றுக் கொடுத்தார். சிங்களம் கற்பிக்கவென சிங்களவரொருவர் ஒரு வாரம் வருகை தந்தார். பின்னர் லேனவ என்ற பக்கத்து ஊரில் இருந்து ‘பென்ச்சி’(Penchi) என்ற பெயருடைய ஒரு சிங்கள ஆசிரியை தொண்டராக வந்து சிங்களம் கற்பித்தார். அவர் பிள்ளைகளுக்குத் தையலையும் சொல்லிக் கொடுத்தார்.


பாடசாலைக்கான கட்டிட நிர்மாணம்:

இந்தப் பள்ளிக் கூடம் இவ்வாறு நடந்து கொண்டிருக்கையில் பிள்ளைகளுக்குப் பாடசாலைக்கான கட்டிடமொன்றை உருவாக்கவும் திட்டமிட்டனர். பாடசாலைக் கட்டிடத்தை நிர்மாணிக்கும் ஆரம்ப கட்டப் பணியைப் பிள்ளைகளின் கரங்களே தொடக்கி வைத்தன. தற்போது பாடசாலை அமைந்துள்ள நிலத்தில் புதிய கட்டிடத்துக்கான அமைவிடம் தீர்மானிக்கப்பட்டு அதில் காணப்பட்ட பற்றைக் காடுகள் பிள்ளைகளின் கரங்களாலேயே பிடுங்கப்பட்டன. பின்னர் ஊர்மக்களின் உதவியினால் 60ஒ 20 சதுர அடியைக் கொண்ட கட்டிடம் அமைக்கப் பட்டது. தூண்கள் செங்கல்லினாலும் வரிச்சுச் சுவரைக் கொண்டும் இக்கட்டிடம் அமைக்கப்பட்டதோடு கூரைக்கு ஒலைவேயப்பட்டது. துரித கதியில் கட்டிடம் அமைக்கப் பட்டு 1959ம் ஆண்டு இறுதிப் பகுதியில் கட்டிட வேலைகள் பூத்தியடைந்தது.

பின்னர் கட்டிடத்தை அரசாங்கத்திற்கு ஒப்படைக்க பரீத்லெவ்வை அவர்களின் தலைமையில் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்காகத் தனது சொந்த வேலைகளையெல்லாம் ஒதுக்கி விட்டுப் பல முயற்சிகளை மேற்கொண்டு இறுதியில் வெற்றியும் கண்டார். அரசாங்கத்தின் மேலிடத்திலிருந்து, உடனடியாகப் பாடசாலையைப் பொறுப்பேற்றுக் கொண்டதற்கான உத்தரவு தந்திமுலம் கிடைக்கப் பெற்றது.

இந்தக் காலகட்டத்தில் ஆலிம் அவர்கள் ஊரில் இருக்கவில்லை.



(1959 ம் ஆண்டு கட்டப்பட்ட ஆரம்பக் கட்டிடமும் அப்பொழுதிருந்த மாணவர்களும்)

பாடசாலை ஆரம்பமும் வளர்ச்சியும் :

1959ம் ஆண்டு நவம்பர் மாதம் 16ம் திகதி புதன்கிழமை குரு- தல்கஸ்பிட்டியவைச் சேர்ந்த M.A. கபூர் ஆசிரியர் அவர்கள் முதல் ஆசிரியராக வந்து கடமையை ஏற்றுக் கொண்டார். முதல் மாணவனாக Y.L.M. சத்தார் என்பவர் பதியப்பட்டார். இரண்டாம் மாணவனாக ஏ.அப்துல் வாஹித் என்பவர் பதியப் பட்டார்.

1960ம் ஆண்டு பங்கொல்லாமட என்ற ஊரைச் சேர்ந்த ஏ.எம்.சலீம் என்ற உதவியாசிரியர் வந்து சேர்ந்தார். எனினும் அவர் குறுகிய காலத்திலேயே இடமாற்றம் பெற்றுச் சென்றுவிட்டார்.அவருக்கான பிரியாவிடை வைபவத்தை ஊர்மக்கள் மிகவும் விமரிசையாக ஏற்பாடு செய்திருந்தனர். அத்துடன் ஊர்மக்களனைவரும் அவருடன் நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து கண்டி வத்தேகமவைச் சேர்ந்த வை.தாஜுதீன் என்ற ஆசிரியர் தனது குடும்பத்தினரோடு இவ்வூருக்கு வருகை தந்து பாடசாலையில் பணி புரிந்தார். அத்துடன் D.E.ரணசிங்க என்ற சிங்களப் பெண் ஆசிரியை ஒருவரும் சிங்களம் கற்றுக் கொடுக்க வந்து சேர்ந்தார்.

1961ம் ஆண்டு, 1962ம் ஆண்டுகளில் மாணவர்கள் நான்கு இல்லங்களாகப் பிரிக்கப் பட்டு இல்ல விளையாட்டுப் போட்டிகள் மிகவும் விமரிசையாக நடாத்தப் பட்டன.

1959ம் ஆண்டில் முதலாம் வகுப்பில் கற்ற திறமையான மாணவர்கள் 1960ம் ஆண்டு; மூன்றாம் வகுப்புக்கும் 1961ம் ஆண்டு ஐந்தாம் வகுப்புக்கும்; வகுப்பேற்றப்பட்டனர்.

1962ம் ஆண்டில் காலியைச் சேர்ந்த M.A.M. ஹமீத் என்பவர் தலைமையாசிரியராக வந்துசேர்ந்தார். அதனைத் தொடர்ந்து மல்வானை, திப்பிட்டிய போன்ற இடங்களில் இருந்து பயிற்றப் பட்ட ஆசிரியர்கள் வந்து சேர்ந்தனர்.இன்னுமொரு மலே இனத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஆசிரியையொருவரும் சிங்களம் கற்பிக்க வந்து சேர்ந்தார்.

1963ம் ஆண்டு பாடசாலையில் விடுமுறை வழங்கப்பட்டு தளபாடங்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்த வேளையில் நிகழ்ந்த ஒரு மினி சூறாவளியினால் பாடசாலை கட்டிடம் உடைந்து விழுந்தது. அடுக்கிவைக்கப் பட்டிருந்த தளபாடங்களும் சேதமடைந்தன. அஸர் தொழுகையை நிறைவேற்றுவதற்காக ஹமீத் அதிபர் அவர்கள் பாடசாலைக்கு அருகால் போய்க் கொண்டிருந்த வேளையிலேயே இச்சம்பவமும் நடந்து முடிந்தது. அதிபர் நிலைதடுமாறிப் போனார். “நான் என்ன செய்வேன் ? மீதமுள்ள பொருட்களை எப்படிப் பாதுகாப்பேன்?” எனத் துயரத்துடன் சோர்ந்து நின்றார். அந்தச் சந்தர்ப்பத்தில் பாடசாலை அலமாரிகளையும் ஆவணங்களையும் மர்ஹ{ம் அப்பாஸ் அவர்கள் பாதுகாத்துத் தருவதாகக் கூறி அவரது வீட்டில் ஒரு அறையை ஒதுக்கிக் கொடுத்தார். மூன்று அலமாரிகளும் மேலும் சில பொருட்களும் அங்கு பாதுகாக்கப் பட்டன.

விடுமுறை முடிந்த பின்னர் பள்ளிக் கூடத்தை எவ்வாறு நடாத்துவது? எங்கே நடாத்துவது? என்ற கேள்வி எல்லோரிடமும் எழுந்தது. இக்காலகட்டத்தில் பரீத்லெவ்வை அவர்கள் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக மக்கா சென்றிருந்தார்: அவரது பொறுப்பாளராக குடும்ப உறவினரான அப்பாஸ் அவர்கள் செயற்பட்டார். பரீத்லெவ்வை அவர்களின் வீட்டு முற்றத்தில் அமைக்கப் பட்டிருந்த நெல் களஞ்சியப் படுத்தும் கட்டிடத்தில் பாடசாலையை நடாத்துவதென அப்பாஸ் அவர்கள் தீர்மானித்தார். ஜனாபா பரீத் அவர்களின் அனுமதியுடன் அக்கட்டிடத்தை அதிபரிம் கையளித்தார்.





(மர்ஹூம் அப்பாஸ் அவர்கள்)



1965ம் ஆண்டு மீண்டும்(தற்போதிருக்கும்) நிலையான கட்டிடத்துக்கு வரும் வரை பரீத்லெவ்வை அவர்களின் வீட்டு வளவிலேயே பாடசாலை நடாத்தப்பட்டு வந்தது. இடநெருக்கடியின் காரணமாக ஒரு ஓலைக்கொட்டிலும் அமைக்கப்பட்டு அதிலும் வகுப்புகள் நடாத்தப் பட்டன. 1964ம் ஆண்டு பட்டப்பகலில் அந்தக் கொட்டில் தீக்கிரையானது. இந்த இழிசெயலை எவர் செய்தார் என்பது தெரியவில்லை. இந்தச் சந்தர்ப்பத்திலும் தளபாடங்கள் சேதமடைந்தன. புதிய கட்டிடத்தில் பாடசாலை ஆரம்பித்தபொழுது ஒருசில தளபாடங்களும் கரும்பலகையொன்றும் பக்கத்திலுள்ள மெதமுல்ல பாடசாலையில் இருந்தே இரவல் பெறப்பட்டன. காலம் கடந்தே அரசாங்கம் தளபாடங்களை வழங்கியது.

1960ம் ஆண்டு புதிய கட்டிடத் திறப்புவிழா மிகவும் சிறப்பாக நடாத்தப் பட்டது. சிறப்பு அதிதிகளைத் தேசிய கீதம் பாடி உள்ளே அழைத்து வந்து பின்னர் வரவேற்புப் பாடல் பாடப்பட்டது. அந்தப் பாடலின் சில வரிகள் பின்வருமாறு இருந்தன

வந்தனம் தந்தனமே
வரவேற்று நாம் நின்றனமே
வந்தனம் தந்தனமே
வரவேற்று நாம் நின்றனமே

பச்சிளம் பாலகர் நாம்
பல காலமாய்ப் பட்ட க~;டம்
பண்புடைப் பெரியோரே
பகுத்தறிவாளர்களே
பாங்குடன் சீராய் நாம்
பல கலைகள் கற்றிடவே
பகவான் அருள்புரிந்தான்
இன்று நாம் பாவால் வரவேற்றோம்

வந்தனம் தந்தனமே
வரவேற்று நாம் நின்றனமே
வந்தனம் தந்தனமே
வரவேற்று நாம் நின்றனமே


1966ம் ஆண்டில் மெல் கம்பனிக்குச் சொந்தமானதாக இருந்த மூன்று ஏக்கர் வயல் காணி வாங்கப்;பட்டது. பரீத் லெவ்வை, தலைமையாசிரியர் ஹமீத் ஆகியோரது இணைந்த முயற்சியினால் இது சாத்தியமாயிற்று. மெல் கம்பனி பரிபாளகர் D.E.நெத்தசிங்க என்பவர் பரீத் லெவ்வையவர்களின் நெருங்கிய நண்பராவார். இதன் மூலமாக இக்காணியைப் பெற்றுக் கொள்ளும் பணி இலகுவாயிற்று.

பாடசாலை படிப்படியாக முன்னேறிச் செல்லவே க.பொ.த. சாதாரண தரவகுப்பு நடாத்தத் தேவைப் பட்டது.இதற்கான அரசின் அனுமதியைப் பெறுவது மிகவும் சிரமமாக இருந்தது.இந் நிலையில் எட்டாம் வகுப்பில் சித்தியடைந்த சம்சுதீன் என்ற மாணவன் இப்பாகமுவ பக்மீகொள்ள அல்-மினா பாடசாலைக்குச் சென்று கல்வி கற்றான். இம் மாணவன் எண் கணிதம் விN~ட சித்தியுடன் எட்டுப் பாடங்களிலும் சித்தியடைந்தான்.

பரீத் லெவ்வையவர்களின் அயராத முயற்சியினால் ஹிரியாலத் தொகுதி அரசியல்வாதி ஹேரத் அவர்களின் உதவியுடன் சாதாரண தரம் வகுப்பு நடாத்துவதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றது. முதன் முறையாக 1969ம் ஆண்டு ஒரு மாணவனும் ஒரு மாணவியும் பரீட்சைக்குத் தோற்றினர்.



(இடமிருந்து வலமாக மர்ஹூம்களான அல்ஹாஜ் பரீத் லெவ்வை,அதிபர் M.A.M. ஹமீத், முதலாவது ஆசிரியர் M.A.கபூர்)




இரண்டாவது கட்டிடம்:

1978 ம் ஆண்டு இக்கட்டிடத்தின் ஆரம்பக் கட்டிடம் கட்டப்பட்டது. அதன் சுவர்கள் செங்கல்லினாலும் கூரை ஓலைவேயப்பட்டும் கட்டப் பட்டிருந்ததோடு மண் தரையே காணப்பட்டது. இக்கட்டிடத்தைத் திறப்பதற்கு முன்னரே இக்கட்டிடமும் இடிந்துவீழ்ந்தது. பின்னர் 1980 ம் ஆண்டு தற்போதிருக்கும் இரண்டாவது கட்டிடம் கட்டிமுடிக்கப் பட்டு அதன் திறப்பு விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.



பின்னிணைப்பு-1:

எங்கள் அயல்கிராமமான பண்டிபொல கிராமத்தில் இருந்து அன்றும் இன்றும் எங்கள் பாடசாலைக்கு முஸ்லிம் பிள்ளைகள் வருகை தருகின்றனர். ஆரம்ப காலத்தில் பண்டிபொல கிராமத்துக்கு அருகேயுள்ள புலத்வெல்யாய பகுதியில் இருந்து தமிழ்ப் பிள்ளைகளும் இப் பாடசாலைக்கு வந்தார்கள். அவர்கள் எல்லோரும் கால் நடையாகவே வருவார்கள். அவர்கள் வரும் பாதையில் பாதைக்குக் குறுக்கே ஒரு நீரோடை செல்கிறது. அந்த நீரோடையில் இறங்கிக் கரையேறியே மாணவர்கள் வரவேண்டியிருந்தது. மழை காலத்தில் நீரோடை நிரம்பி ஓடும். இதனால் மழைக்காலம் என்றால் மாணவர் வருகை தடைப்படும். இந்தப் பிரச்சினை குறித்து பண்டிபொல ஊர்மக்களும் மாய்வெல ஊர்மக்களும் ஆசிரியர்களும் கலந்தாலோசித்து ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதன் படி தென்னை மரங்கள் இரண்டை வெட்டி தற்காலிகப் பாலம் (ஏதண்ட) ஒன்றை அமைத்தார்கள். பாதுகாப்புக் குறைந்த இப்பாலத்தினாலும் இடைக்கிடையே பிள்ளைகள் சிரமத்துக்குள்ளானார்கள். நிரந்தரமான பாலம் அமைக்கப் பட்டதன் பின்னர் பிரச்சினை தீர்ந்துள்ளது.



பின்னிணைப்பு-2:


1955ம் ஆண்டு மாய்வெல ஊர்வாசிகளுள் 7 பேருக்கு அயல் கிராமமான ‘நாபெட’ கிராமத்தில் ‘ஹேன்யாய’ என்ற பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் வீதம் அரசாங்கம் காணிகளை வழங்கியது.அங்கே காடுவெட்டி , நிலம் திருத்தி வீடுகளை அமைத்துக் கொஞ்ச காலம் குடியிருந்தனர். அங்கு சிங்கள மக்களே கூடுதலாக வாழ்ந்து வந்தனர். இதனால் தமது கலாசாரப் பாரம்பரியங்களும் பள்ளிவாசலுடனான தொடர்பும் துண்டிக்கப் பட்டுவிடும் என்ற அச்சத்தினால் காணிகளைச் சிங்கள மக்களுக்கே விற்றுவிட்டு மாய்வெல ஊருக்கு வந்துவிட்டனர். இதன்பின்னர் 1990ம் ஆண்டளவில் சுவர்ணபூமித்திட்டத்தின் கீழும் நாபெட பகுதியில் எமது கிரமத்தைச் சேர்ந்த சில குடும்பங்களுக்குக் காணிகள் வழங்கப்பட்டன. அவர்களும் வீடுகளைக்கட்டிச் சிலகாலம் இருந்து விட்டு பின்னர் முன்னோர்கள் செய்த படியே காணிகளைவிற்றுவிட்டு வந்துவிட்டனர்.



பின்னிணைப்பு-3:

ஆரம்பத்தில் மாய்வெல பள்ளிவாசல் இமாமாக(லெப்பை) அருகேயுள்ள கொஸ்முல்ல கிராமத்தில் வசித்து வந்த அப்துல் காதர் என்பவர் கடமைபுரிந்தார். அவர் 1940 களின் ஆரம்பப் பகுதிவரை (1943 ம் ஆண்டு வரையென நம்பப் படுகிறது) இப்பணியில் ஈடுபட்டார். அவர் காலமாகி 40 வது நாளன்று அவருடைய மகனான செய்யது இஸ்மாயில் என்பவர் இப்பணியை ஏற்றுக் கொண்டார். இவர் 1983ம் ஆண்டு வரையும் இப் பணியில் ஈடுபட்டார். சுமார் 40 வருடங்கள் இமாமாகக் கடமையாற்றிய இவர் 1984ம் ஆண்டு காலமடைந்தார். அவ்வாறே முஅத்தீன் பணியில் 1960 களின் ஆரம்பத்திலிருந்து 1980 களின் ஆரம்பம் வரை சம்சுதீன் என்பவர் ஈடுபட்டுவந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

பின்னிணைப்பு -5:

கொஸ்முல்லை அப்துல் காதிர் அவர்களின் முத்த மகளான றஹ்யானத்து உம்மாவின் ஒரே புதல்வனே பரீத் லெவ்வை ஆவார்.



பின்னிணைப்பு -6:
பாடசாலை ஆரம்பிக்கப் பட்ட வேளையில் இருந்த ஊர்மக்கள்; விபரம்:
1. மெல்சிரிபுர ‘மினர்வா’ ஹோட்டல் றசீத் வீடு:பெற்றோர் , பிள்ளைகள் -5.மொத்தம் -7
2. மெல்சிரிபுர வடிவேலு வீடு: பெற்றேர் , பிள்ளைகள்-3. மொத்தம்-5
3. தெமடகொள்ள யூசுப் வீடு : பெற்றோர் ,பிள்ளை-1. மொத்தம்-3
4. தெமடகொள்ள ஹனீபா வீடு : வாப்பும்மா , பெற்றோர், பிள்ளைகள்-6. மொத்தம்-9
5. தெமடகொள்ள அ~;ரப் வீடு: உம்மும்மா , பெற்றோர், பிள்ளைகள்-3. மொத்தம்-6
6. தெமடகொள்ள பாத்துமாநூர், பிள்ளைகள்-3. மொத்தம்-4
7. கபூர்வீடு: சகோதரன் , சகோதரி . மொத்தம்-2
8. செய்யது இஸ்மாயில்(லெப்பை) வீடு: பெற்றோர், பிள்ளை-1. மொத்தம்-3
9. ஹ{ஸைன் வீடு: பெற்றார், பிள்ளைகள்-6. மொத்தம்-8
10. ஜெபர்தீன் வீடு: பெற்றார், பிள்ளைகள்-2. மொத்தம்-4
11. செய்னுள் ஆப்தீன் வீடு: பெற்றார் , பிள்ளைகள்-2. மொத்தம்-4
12. செல்லையா வீடு: பாட்டன், பெற்றோர், பிள்ளைகள்-3. மொத்தம்-6
13. அப்பாஸ் வீடு : பெற்றோர், பிள்ளை-1. மொத்தம்-3
14. சஹாப்தீன் வீடு: கணவன், மனைவி. மொத்தம்-2
15. செய்யத் (வட நாநா) வீடு: பெற்றோர், பிள்ளைகள்-2. மொத்தம்-4
16. அப்துல்காதர்வீடு: பெற்றோர், பிள்ளைகள்-6. மொத்தம்-8
17. அகமது மீராலெவ்வை வீடு: ஒருவர். மொத்தம்-1
18. யூசுப் வீடு: ஆச்சி,பேரன்-1, மகன்,மருமகள், பிள்ளைகள்-3 மொத்தம்-7
19. பல்கீஸ் வீடு: தாய், பிள்ளைகள்-3. மொத்தம்-4
20. இஸ்மாயில் வீடு: பெற்றோர், பிள்ளை-1. மொத்தம்-3
21. பரீத்லெவ்வை வீடு: பெற்றோர், பிள்ளைகள்-3. மொத்தம்-5
22. அர்கிஸ் வீடு: பெற்றோர், பிள்ளைகள்-2. மொத்தம்-4
23. உதுமாலெவ்வை வீடு: பெற்றோர், பிள்ளைகள்-4. மொத்தம்-6
24. வாத்தியார் வீடு: கணவன் ,மனைவி. மொத்தம்-2
25. அப்துல் ஹமீத் வீடு: பெற்றோர், பிள்ளைகள்-4. மொத்தம்-6
26. அப்துல் ஹமீத் வீடு: பெற்றோர், பிள்ளை-1. மொத்தம்-3
27. செல்லா ஆச்சி, மஹ்மூத். மொத்தம்-2
28. கரீம் நானாவீடு: பெற்றோர்,மகன்-1 மொத்தம்-3
29. சேதா வீடு: கணவன், மனைவி. மொத்தம்-2
30. (சுருட்டு) சஹாப்தீன் வீடு: பெற்றோர், பிள்ளைகள்-2. மொத்தம்-4
31. சம்சுதீன் வீடு: பெற்றோர், பிள்ளை-1. மொத்தம்-3
32. அப்துல் அஸீஸ் வீடு: பெற்றோர், பிள்ளைகள்-3. மொத்தம்-5
33. ஜவாத் வீடு: பெற்றோர், பிள்ளைகள்-3. தங்கை உம்முநோநா. மொத்தம்-6
34. ஐதுரூஸ்(சிங்கப்பூர்) வீடு: பெற்றோர், பிள்ளை-1. மொத்தம்-3
35. தாஹிர் வீடு: கணவன், மனைவி. மொத்தம்-2
36. முத்தலிப் வீடு: தாய் , மகன்- மருமகள், மொத்தம்-3
37. மஜீத் உம்மா வீடு: தாய். மொத்தம்-1
38. மம்மது அப்பா வீடு: பெற்றோர், மகன்-1, மகள்-1. மொத்தம்-4
39. கொஸ்முல்ல இஸ்மாயில் லெவ்வை வீடு: பெற்றோர், பிள்ளைகள்-7. மொத்தம்-9
40. மாணிக்கம் வீடு: பெற்றோர், பிள்ளைகள்-2. மொத்தம்-4
41. வெலிப்பிட்டி றசீத் நாநா கடை: ஒருவர். மொத்தம்-1
42. வடவன குலாம் வீடு: பெற்றோர், பிள்ளைகள்-3. மொத்தம்-5
43. அப்துல்லா அப்பா வீடு: பெற்றோர், மகள்-1. மொத்தம்-3
44. தெமடகொள்ள கடை ஹமீத்: ஒருவர். மொத்தம்-1


நன்றி: கு.மாய்வெல முஸ்லிம் வித்தியாலய- "பொன்விழா மலர்-2009"
(கட்டுரையை எழுதியவர் பாடசாலையின் பழைய மாணவியான எனது தாயார்)



பி.கு:அப்பாடா! பிரபாவிடமிருந்து ஒருமாதிரியாக தப்பிச்சாச்சு.
ஃபஹீமாஜஹான்
|
This entry was posted on 8:32 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

8 comments:

On December 29, 2010 at 1:22 AM , கானா பிரபா said...

அருமை அருமை அருமை

இதுக்குத் தான் நான் உங்களை வற்புறுத்தி எழுத வைப்பது. எங்கள் நாட்டின் இன்னொரு தெரியாத பக்கங்களைக் காட்டியமைக்கு நன்றி சகோதரி

 
On December 29, 2010 at 10:32 AM , சஞ்சயன் said...

வாழ்த்துக்கள். மிகவும் அருமையான பதிவு. எஸ். ரா தனது யாமம் என்னும் புத்தகத்தின் முன்னுரையில் ”எல்லா நகரங்களும் ஏதோ சில கதைகளைச் சுமந்து கொண்டிருக்கின்றன” என்கிறார்.

அது உண்மை என்பதை உங்களின் பதிவு காட்டுகிறது. எல்லா ஊர்களின்
கதைகளையும் எழுதி வைத்தால் எப்படியிருக்கும்? அந்த நினைவே என் மனதை காற்றில் தூக்கிப் போகிறது.

என் வாழ்க்கை என்னை ஒரு ஊரில் வைத்திருக்கவில்லை.அங்கு வாழ்ந்திருந்த 20 வருடங்களில் இலங்கைக்குள்ளேயே 7 - 8 இடங்களில் என்னை இருத்தி எழுப்பி அடுத்த ஊருக்கு திரத்தியது. வெளி நாடும் அப்படியே செய்கிறது. ஒரே ஊரில் தொடர்ந்து வாழ்வதும் விலைமதிக்க முடியாத ஒரு சொத்துத் தான்.

நேர்வேயில்நான் வாழ்ந்திருந்த கிராமத்தில் அக் கிராமத்தின் சுயசரிதம் பல விதங்களில் பாதுகாக்கப்பட்டிருந்தது. முக்கிமாக 4 - 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ”கிராமப் புத்தகம்” என்னும் ஒரு புத்தகம் எழுதப்படும். அதில் கிராமத்தின் மக்கள் அனைவரினதும் பெயரும் அவர்களின் தாய் தந்தையர், சகோதரர்கள் யார் என்றும் அதில் கூறப்பட்டிருக்கும். ”கிராமத்தின் புத்தகம்” மாதிரியே ”வெளியேறியோர் புத்தகம்” என்றும் ஒன்று வெளிவரும். அதில் யார் யார் வெளியேறினார்கள், அவர்கள் இடம் பெயர்ந்த இடம் என பல தகவல்கள் இருக்கும். எங்கள் கிராமத்தின் இரண்டு புத்தகங்களிலும் எனது பெயர், இவன் இந்த ஊரிலும் சாசுவதமாக தங்கவில்லை என்பதை அறிவித்துக்கொண்டிருக்கிறது.

இங்கும், வேறு இடங்களிலும் உங்களின் பதிவுகள் பார்த்திருக்கிறேன். மனதைக் கவருபவை அவை. தொடர்ந்தும் எழுத்துடன் நட்பாயிருங்கள். நன்றி.

பி.கு: தம்பி பிரபாவை திருத்த முடியாது... திருத்த முயலவும் கூடாது.

 
On December 30, 2010 at 12:00 PM , yarl said...

ஒவ்வொருவரும் ஒரு வரி கூட விடாமல் படித்து பாதுகாக்கவேண்டிய ஒரு சொத்து இந்த பதிவு. கருப்பு வெள்ளை புகைப்படங்களுடன் அருமை. சகோதரி ஃபஹீமாஜஹான், அவரது தாயார் மற்றும் "ஈழத்து முற்றத்தை" கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வரும் பிரபா குழுமத்துக்கும் எனது வாழ்த்துகளும் நன்றிகளும். தொடரட்டும் உங்கள் பணி. எல்லோருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 
On December 31, 2010 at 6:24 AM , Anonymous said...

என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள்!!

 
On January 11, 2011 at 2:43 AM , ஃபஹீமாஜஹான் said...

வாருங்கள் கானா பிரபா,
"இதுக்குத் தான் நான் உங்களை வற்புறுத்தி எழுத வைப்பது"

ஆஹா என்ன அன்பு!! என்ன அன்பு !!!

 
On January 11, 2011 at 3:30 AM , ஃபஹீமாஜஹான் said...

வாருங்கள் விசரன்,

”எல்லா நகரங்களும் ஏதோ சில கதைகளைச் சுமந்து கொண்டிருக்கின்றன”

ஆமாம். நகரங்கள் மட்டுமல்ல - எல்லா ஊர்களும் தான்.

"ஒரே ஊரில் தொடர்ந்து வாழ்வதும் விலைமதிக்க முடியாத ஒரு சொத்துத் தான்"
ஊரைவிட்டுப் போனவர்களுக்கு தான் அவ்வூருக்கு மீளத் திரும்புதலின் ஆனந்தம் தெரியும்.

"எங்கள் கிராமத்தின் இரண்டு புத்தகங்களிலும் எனது பெயர், இவன் இந்த ஊரிலும் சாசுவதமாக தங்கவில்லை என்பதை அறிவித்துக்கொண்டிருக்கிறது"

ம்.அந்தப் புத்தகத்திலாவது உங்கள் பெயர் இருக்கிறது.ஆனால்,இங்கு ???

இன்று வடக்கிலும் கிழக்கிலும் பல நூறு கிராமங்கள் யார் யார் வாழ்ந்தார்கள் என்ற சுவடே இல்லாமல் சிதைந்து கிடக்கின்றன.
அவை பற்றிய பதிவுகள் கட்டாயமாக இடம்பெற வேண்டும்.

"தொடர்ந்தும் எழுத்துடன் நட்பாயிருங்கள்" முடியாத காரியம் தான்.எனினும் முயற்சி செய்கிறேன்.

உங்கள் வருகைக்கும் கருத்துக்களும் நன்றி.

 
On January 11, 2011 at 3:32 AM , ஃபஹீமாஜஹான் said...

வாருங்கள் சிவகுமார்,
"என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள்!!"

உங்களுக்கும் எனது வாழத்துக்கள்.

 
On January 22, 2011 at 9:41 AM , ஃபஹீமாஜஹான் said...

வாருங்கள் yarl,
("ஈழத்து முற்றத்தை" கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வரும் பிரபா குழுமத்துக்கும் எனது வாழ்த்துகளும் நன்றிகளும்.)

பிரபா குழுமம் என்பதை விடவும் "கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வரும் பிரபா" என்பது தான் பொருத்தமானது என்று நினைக்கிறேன்.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.