Author: சஞ்சயன்
•12:32 AM
எனது அப்பா ஒருபோலீஸ் அதிகாரி. மிகவும் கண்டிப்பானவர் என்றால் அது தவறு. அவர் மிக மிக கண்டிப்பானவர். அவரின் அப்பாவை விட மிகக் கண்டிப்பாக இருந்தார்.

நான் உருப்படுவதற்கு அது தான் ஒரே வழி என்று எங்கோயே கற்றுக்கொண்டார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. கற்றதை என்னில் பிரம்பின் மூலம் பரீட்சித்துப் பார்த்து  அடிக்கடி தன் அறிவு சரியானதா என்று தோன்றும் சந்தேகத்தை அவர் தீர்த்துக்கொள்வார். நானும் அவரின் அறிவுப்பசிக்காக அடிக்கடி அடிவாங்குவதும், அம்மாவும், எங்களை வளர்த்த எம்மியும் அப்பாவின் அறிவுப்பசி தீர்ந்ததும் ஆள் மாறி ஆள் எண்ணை பூசிவிடுவதும் அந்தக் காலத்தில் வழக்கமாயிருந்தது. அவரின் இந்த அறிவுப்பசி எனக்கு 14 - 15 வயதாகும் வரை தொடர்ந்தது.

தான் கற்று, பரிசோதித்தவை பிழைத்துப்போனதாலோ? அல்லது கட்டெறும்பு ஊர்ந்து கல்லுத் தேயுமா என்று நினாத்தாரோ என்னவோ அதன் பின் ஏனோ திடீர் என அடிப்பதை நிறுத்திவிட்டார். நானும் ஏன் என்று கேட்கவில்லை. இதனால் மூன்று விதமான நன்மைகள் இருந்தன.
முதலாவது, அவருக்கு இரத்த அழுத்தமும், கோபம் வருவதும் குறைந்து
இரண்டாவது, எனக்கு அவர் ” டேய் இங்க வாடா” என்று கத்தும் போது எனக்கு திசையறி கருவி தேவைப்படாமல் போனது
மூன்றாவது, அம்மாவுக்கும் எம்மிக்கும் ஒரு வேலை குறைந்தது மட்டுமல்ல, தேங்காய் எண்ணையும் மிச்சமாகியது.

அப்பா, சற்று கணகணப்பில் இருக்கும் போது ”பைலா” பாட்டு பாடுவார். தம்பி அவரின் செல்லப்பிள்ளை. வீட்டில் இருக்கும் ”லக்ஸ்பிறே”, சஸ்டஜின் டன்களை எடுத்து வர ஏவுவார். நானும் அவரது  கட்டளையை சிரமேற்கொண்டு நிறைவேற்றப் பழக்கப்பட்டிருந்தேன். அவரின் ”பைலா” உச்சஸ்தாயியை அடையும் போது அம்மா ”நல்ல கூத்து, போய் படுங்கோ” என்பார். ”சரிதான் போடி” என்பது போல் அம்மாவை கவனிக்காமல் பாடி, ஓய்ந்து பாயில் ஒரு மலை போல் சரிந்து, தாங்க முடியாத ஒலியில் குறட்டையுடன் தூங்கிப் போவார். எனது வாழ்வு மிக மகிழ்ச்சியாய் இருக்கும் அவர் ”தெளிந்து”, தலையிடி இன்றி, வாயில் கனகலிங்கம் சுருட்டுடன் எழுந்து நடமாடும் வரை.

அப்பாவிற்கு இரு நண்பர்கள் இருந்தனர். ஒருவர் அப்பாவுடன் யாழ்ப்பாணத்தில் படித்தவர். அவரால் மட்டுமே அப்பாவை ”டேய்” என்று ஓருமையில் கூப்பிட முடிந்தது. மற்றவர் எறாவூரில் இருந்தார். இந்த மூவரில் இருவருக்கு ”தண்ணியில்” கண்டம் இருந்தது எனக்கு பிற்காலத்தில் தெரிவரும் என்பது எனக்கு அப்போ தெரியவில்லை. எனது அப்பாவும், அவரின் பால்ய நண்பரும் குடியும் குடித்தனமுமாய் இருந்ததனால் குறைந்த வயதிலேயே போய்ச் சேர்ந்தார்கள். குடியைப் பற்றி ஒன்றாய் படித்தார்களோ என்னவோ?

அப்பா யாழ்ப்பாணம் வருத்திற்கு ஒரு முறை போய் வருவார். நாமும் அவருடன் போவோம். அந் நாட்களில் இலங்கையில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நெல், அரிசி எடுத்துச் செல்வது எனின் போலீஸ் ”பாஸ்” எடுக்க வேண்டும். எனது அப்பாவுக்கு அனுமதி எடுப்பது பெரிய வேலை இல்லை. ‌நாம் வெளிக்கிடும் நாள் காலை வரை ”பாஸ்” எடுக்கமாட்டார். பஸ் வர முதல் அவசராமாக போலீசுக்கு போவார். அனுமதியுடன் திரும்புவார். அவருக்கு அவ்வளவு மரியாதை என்று நீங்கள் நினைக்கக் கூடாது. அவர் போலீசில் தான் வேலை செய்தார். இந்த ”பாஸ்”களில் அவரின் கையெழுத்து தான் இருந்திருக்குமோ என நான் இப்போது சந்தேகிக்கிறேன்.

வரும் வழியெங்கும் அரிசி மூட்டையை விட்டு விலகமாட்டார். அவரோ துக்கி இறக்குவார். சுண்ணாகம் ஸ்டேசனில் அப்பையாவின் ”சோமசெட்” கார் நிற்கும். அதில் முன்னால் அப்பா ஏற பின்னால் அம்மா, தம்பி, தங்கை,எம்மி, நான் ஏறிக் கொள்ள, அப்பையா வாகனத்தின் முன்னால் போய் ஒரு கம்பியை என்ஜினுக்குள் விட்டு மூன்று முறை கோயிலை சுற்றுவது போல சுற்ற, கார் புக் புக் என்று ஸ்டாட் பண்ணும். அது ஸ்டாட் பண்ணாமல் இருந்து அப்பையா அதை சுற்றிச் சுற்றி அவருக்கு தலைசுற்றி நாங்கள் வேறு காரில் போன நாட்களும் உண்டு. போகும் வழியில் அப்பா கையை கதவுக்கு வெளியே தொங்க விட்டபடியே வருவார். அப்பையாவின் கார் உடுவில் ”லவ்” லேன் புளியடியை அடைந்ததும் அப்பாவின் விடுமுறை ஆரம்பிக்கும். எங்களுக்கும் தான்.

அப்பா வந்திருப்பதை அவரின் பால்ய நண்பர் எப்படித்தான் மணந்து பிடிப்பாரோ தெரியாது மானிப்பாயில் இருந்து அன்று மதியம் 2 - 3 மூன்று மணிபோல் சைக்கிலில் ஒரு கலன் ஒன்றறை கட்டியபடி, கலனில் பெரியவர்கள் குடிக்கும் பாலுடன் வருவார். எப்பிடியடா இருக்கிறாய்? என்று ஆரம்பிப்பார்கள். குசினிக்குள் அப்பாவின் அக்கா ” அறுவான் வந்திட்டான், இவன கெடுக்கிறது உவன் தான்” என்பார். அவரின் தங்கைகள் ”ஓம் அக்கா” என்பார்கள். பாட்டி பேசாதிருப்பார். அம்மா கண்டும் காணாதிருப்பார். மாலை ஆறு மணிக்கு நான் விளையாடி அலுத்து வரும் போது பால்குடித்த அசதியில் அப்பாவின் நண்பர் சைக்கிலை உருட்ட முடியாமல் உருட்டிக்‌கொண்டு போவார். அப்பா விறாந்தையில் களைத்து குறட்டையுடன் உறங்கியிருப்பார். பால் குடித்திருந்தாலும் மாமா நிதானமாய் ”பெற்றோல்மக்ஸ்” க்கு காற்றடித்துக்கொண்டிருப்பார்.  அப்பாவும், நண்பரும், மாமாவும் பால்குடிப்பதன் ரகசியம் எனக்கு புரிந்த போது 11 - 12 வயதிருக்கும். அதன் பின் அப்பாவின் பால்ய நண்பர் வந்து போகும் போது அவரின் சைக்கிலுக்கு அடிக்கடி காற்றுப் போகத்தொடங்கியிருந்தது. தள்ளிக்கொண்டு போகும் சைக்கிலுக்கு காற்று தேவையா என்ன?

இதே மாதிரி ஏறாவூரிலும் பால் குடிக்க வந்த நண்பரின் சைக்கிலுக்கு வைத்தியம் பார்த்திருக்கிறேன். அவர் ஊரறிந்த பெருங்குடிமகன். நிதானம் தவறுவதை அவர் மிக நிதானமாகச் செய்வார். அவரின் அகராதியிலேயே நிதானம் என்னும் சொல் இருக்கவில்லை. இன்றும் அவரின் ”சொல் வங்கியில்” நிதானம் பதியப்படவில்லை. இனியும் அது பதியப்படும் என்ற நம்பிக்கை நிதானத்துக்கும் இல்லை, எனக்கும் இல்லை. அவர் இன்றும்  (2011) உயிருடன் இருப்பது உலக அதிசயங்களில் ஒன்று. சில வருடங்களுக்கு முன் அவரைச் சந்திக்கக் கிடைத்தது. ‌உன்ட அப்பா இல்லாதது ஒரு கையுடைந்தது போலிருக்கிறது என்றார். எனக்கு அது ”ஒரு கிளாஸ் இல்லாதது” என்று கேட்டமாதிரி இருந்தது. ”நண்பேண்டா” என்பது இதைத் தானோ?

அப்பா 14 - 15 வயதில் எனக்கு அடிப்பதை குறைத்துக் கொண்டாலும் எம்மால் பழையதை மறந்து சமாதானமடைய முடிவில்லை. அதற்கு எனது ஹோர்மோன்களும் ஒரு காரணம் என்று பிற்காலத்தில் அறிந்து கொண்டேன். அப்பா வீட்டுக்கு பின்னால் தோட்டம் செய்தார். வாழை, மிளகாய், கத்தரி, தக்காளி என இருந்தது அது. அது ஒரு மிக மிகச் சிறிய தோட்டம். ஆனால் அப்பாவோ அது பெரிதொரு  ஏக்கர் கணக்கிலான தோட்டம் என்பது போல காலையில் கனகலிங்கம் சுடுட்டுடன் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டேயிருப்பார். அவர் தோட்டத்துக்குள் நிற்பது கத்தரிவெருளிக்கு பதிலாக ஒரு போலீஸ்காரன் நிற்பது போலிருக்கும் எனக்கு. மெதுவாய் எனக்குள் சிரித்துக் கொள்வேன்.

அப்போ நாம் ஏறாவூரில் இருக்க, அப்பா பொலன்நறுவையில் வேலை செய்யவேண்டி வந்தது. காரணம் அப்பா புட்டி புட்டியாய் குடித்த பால் தான். பால் குடித்த சந்தோசத்தில் உள்ளூர் பாராளுமன்ற உறுப்பினரை இவர் ”மிக மிக அன்பாய்” அழைத்ததால், அவர் சற்று சூடாகி அப்பாவை தண்ணியில்லா காட்டுக்கு அனுப்புவதாக நினைத்து, ‌பொலன்நறுவைக்கு அனுப்பியிருந்தார். அப்போ எனக்கு 15 வயதிருக்கும். அப்பாவுக்கு  எமன் பரலோகத்துகு இன்விடேஷன் எழுதிக்கொண்டிருந்ததை அவரோ, நாமோ அறிந்திராத காலமது.

ஒரு நாள் காலை நல்ல தூக்கத்தில் இருக்கிறேன் அம்மா ”டேய், எழும்பி கம்பராமாயணத்தை படி, அடுத்த மாதம் ஓ.எல் டெஸ்ட் எல்லோ” என்றதும் கம்பனிலும், அம்மாவிலும் பயங்கர கோவம் வர, ”ம், ம்”   என்றுவிட்டு மீண்டும் சுறுண்டு கொண்டேன். ”தேத்தண்ணி வைச்சிருக்கு” எழும்பு என்ற போதும் நான் எழும்பவில்லை. முதுகில் ஒரு அடி விழ, நிதானமில்லாத அந்த வயதில் தலை வெடிக்கும் கோவத்துடன் குசினிக்குள் ஓடி, தேங்காய் உடைக்கும் பெரிய பிடி போட்ட கத்தியை எடுத்தேன். கதாயுதத்தை எடுத்த பீமன் போல் அதை தூக்கினேன். அம்மா விறைத்து விளி பிதுங்கி தள்ளியே நின்றார். அப்பாவின் தோட்டத்துக்குள் புகுந்து வாழை மரங்களை ”கம்பனின் தலை” என்று நினைத்துக் கொண்டு வெட்டினேன். அவையும் எதிர்ப்பின்றி சாய, எனக்கு வெறி இன்னும் ஏற, முழுத் தோட்டத்தையும் வெட்டிச் சரித்த போது தான் ” அட,  இது செல்வமாணிக்கத்தாரின் தோட்டமாச்சே, அவர் இன்று பின்னேரம் ரயிலில் வருவாரே” என்பது புரிந்தது.

இன்று எனக்கு ராகு உச்சத்தில் தான், தனது தோட்டத்தை கூட்டுக்கொலை செய்த என்னை  ”மனிசன்” தொலைத்து விடுவார் என்பது சர்வ நிட்சயமாய் புரிந்தது. வீட்டுக்குள் இடமில்லை என்பதால் வெளியில் வைத்துத் தான் தனது விளையாட்டைக் காட்டுவார். அருகில் இருந்த வீட்டில் என் வயதில் இரு பெண்பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களுக்கு தெரிந்தால் மானம் கப்பலேறிவிடுமே என்ற பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் முழுசிக்கொண்டிருந்தேன்.

மாலை ரயில் நிலையத்து போய் அழைத்து வந்து வீட்டில் இறக்கிவிட்டதும், எடுத்தேன் சைக்கிலை. இரவு 12 மணிபோல் வீடு திரும்புகிறேன். மனிதர் வீட்டில் இல்லை. அவசர அழைப்பு வந்து வேலைக்கு புறப்பட்டதாக அம்மா சொன்னார்.

பின்பு அம்மா, காலையில் தான் ஏன் அடித்தார் என்று விளக்கமும் தந்தார். அதில் நியாயம் இருப்பது புரிந்ததால் நான் தோட்டத்தை சூரசம்ஹாரம் செய்ததும் பிழை என்றேன். அப்பாவுக்கு தெரியுமா என்ற போது ”ஓம்”, ஆனால் அப்பா சிரித்தார் என்றார். அம்மா. தொடர்ந்து, அவரைப் போலவே உனக்கும் கோவம் வருகுதாம் என்றும்  சொன்னாராம், அத்துடன் ”அவன் வளர்ந்திட்டான் அவனை கதைத்துத் தான் திருத்தலாம்” என்றும் அம்மாவுக்கு அறிவுரை சொன்னாராம் என்றார் அம்மா.

அப்பாவிடமும் அழகிய பக்கம் ஒன்று இருப்பது புரிந்து, தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்றவரின் தோழமையை அனுபவிக்க ஆரம்பிக்க முதலே, இரண்டு மாதங்களின் பின் அப்பா இறந்துபோனார். அவரின் போதனைகளும், கோவங்களும் இன்னும் எனக்குள் இருக்கிறது. அப்பா இறந்த போது அவருக்கு 51 வயது. எனக்கு அந்த வயது வரும் போது கோவம் வராதிருந்தால் அப்பா மகிழ்ச்சியடைவார் என்று நம்புகிறேன். இன்றும் 5 வருடங்களுக்குள் எனக்கு பெரும் பொறுப்பு சுமத்தப்பட்டிருக்கிறது.
Author: ஹேமா
•4:12 AM
மூண்டு நாளா ஒரே அடை மழை.இது நாலாம் நாள்.ஈரலித்த காற்றோடு பொழுது விடிகிறது.ஆனால் வானம் வெளித்தாலும் மழையின் அறிகுறியும் கலந்தே.சூரிய வெளிச்சம் வந்தும் சூடாயில்லை பூமி.வளவு முழுக்க மரங்கள் முறிந்த கொப்பும் கிளையும் பழுத்தலும் பச்சையுமாய் ஒரே குப்பை.வேலிகள்கூட பாறி விழுந்துகிடக்கு.வீடு கட்டும் வேலை வேற நடந்துகொண்டிருக்கு.அதனால குழியும் குண்டுமாய்க் கிடக்கு.ஒரு பக்கம் மணலும்,சல்லிக் கல்லும் குவிச்சபடி.இன்னும் சொட்டுச் சொட்டாய் சொட்டும் நீர்த்துளிகள் சொட்டிக் கோடு கிழித்து ஓடி அந்தப் பள்ளங்களை நிரவிக்கொண்டிருந்தது.

தெருவில் 2-3 நாளைக்குப் பிறகு மனிதத் தலைகள் தெரிகின்றன்.திரும்பவும் மழை வரலாம் என்பதால் வேலுப்பிள்ளை அண்ணை கடை வாசலில சனம்.பறவைகளும் உடல் சிலுப்பிச் சந்தோஷச் சத்தம் போட்டபடி குஞ்சுகளுக்கு இரை ஊட்டிக்கொண்டிருந்தது.

பிரிந்து கிடந்த மேகங்கள் ஒன்று சேர்ந்துகொண்டிருந்தாலும் வானின் ஒரு மூலையின் அடுத்த அடை மழைக்கான ஆயத்தங்கள் நடந்துகொண்டிருந்தன.அவகாசங்களை அத்தனை உயிரினங்களும் பயன்படுத்திக்கொண்டிருந்தன.அப்படி ஒரு அடை மழை மழை தந்த ஆர்ப்பாட்டத்தை அந்தரத்துச் சூரியன் ரசித்தபடியே சின்னதாய்ச் சிரித்துக்கொண்டிருந்தான்.

ராகுல் வாசலில் ஈரலிப்பாய் இருக்க,நிலம் படாமல் குந்தியபடி வளவை நோட்டமிட்டுக்கொண்டிருந்தான்.

"ச்ச....இப்பிடியொரு மழை.வந்தா மனுசரை இப்பிடி நாறடிக்கும்.இல்லாட்டிக் காயவைக்கும்.உலகத்தில் ஒண்டும் ஒழுங்கில்ல.இந்த மழைக்குள்ள எப்பிடி மேசனும் மரவேலை செய்றவையளும் வருவினம்.போக வரக்கூட முடியாம மரங்கள் வேற முறிஞ்சுகிடக்கு.நான்தான் கொஞ்சம் ஒதுக்கிவிடவேணும்."

இது அம்மான்ர நாச்சாரம் வீடு.அம்மா எனக்குத்தான் தந்தவ.அண்ணா அம்மான்ர சொல்லுக் கேக்காம தன்ர எண்ணத்துக்குக் கல்யாணம் செய்துகொண்டு போய்ட்டான்.அப்பா நாங்கள் சின்னனாய் இருக்கேக்கையே மாரடைப்பு வந்து எங்களை விட்டுப் போய்ட்டார்.அம்மாதான் கஸ்டப்பட்டு எங்களை வளர்த்தவ.

அம்மான்ர சீதன வீடு இது.தாத்தாதானாம் சின்னச் சின்னதா சேமிச்சு அம்மம்மான்ர ஆசைப்படி நிறையக் கஸ்டத்தோட கட்டின வீடாம்.அம்மா அடிக்கடி "இது வீடில்லை ராசா.தாத்தா அம்மம்மான்ர கோயில்" எண்டு சொல்லுவா.அவையளும் இந்த வீட்ல இருந்துதான் செத்துப்போனவை.

"அம்மாவுக்குக் கொஞ்சமும் பிடிக்கேல்ல வீட்டை இடிச்சு இப்பத்தைய நாகரீகத்தோட கட்டுறது."

"ஏனப்பு இப்பிடியே வச்சுக்கொண்டு முன்னுக்கு நீ விரும்புற மாதிரிக் கட்டன்.நானும் இதுக்குள்ள கிடந்துதான் சாகவேணும்."

இஞ்சாலப் பக்கம் ஜானுவோ "என்னப்பா மழை வந்தா நாலு அறையும் நனைஞ்சு போகுது.பிள்ளைகளை எந்த நேரமும் கவனிச்சுக்கொண்டு இருக்கேலாது.நான் குசினிக்குள்ள இருக்க அவங்கள் மழைக்குள்ள கூத்தடிக்கிறாங்கள்."

முதல் அம்மா சொன்னபடி முன் பக்கத்திலிருந்து இணைச்சு அழகாக்க நினைச்ச ராகுல்,பிறகு ஏனோ மனம் மாறி இடித்துக் கட்டவே முடிவெடுத்துவிட்டான்.அம்மாவைச் சமாதானப்படுத்தியும் விட்டான்.பாவம் சீதாம்மா.வேறு வழி என்ன அவவுக்கு ?

ஜானு அடுப்பங்கரையில் அலுவலாய் இருந்தாள்.பிள்ளைகள் கணணியில் ஏதோ விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.அவர்களுக்கு ஒரு மாத பாடசாலை விடுமுறை.அதனால் நானும் இரண்டு மாத விடுமுறை எடுத்துக்கொண்டு துபாயிலிருந்து வந்திருக்கிறேன்.மழை படுத்துற பாட்டைப் பார்த்தால் வீட்டு வேலையை முடிச்சிட்டுப் போகேலாது போல இருக்கு.

ஜானுவுக்கு காஸ் அடுப்பு வாங்கிக் குடுக்காட்டி என்னத் திண்டு கை கழுவியிருப்பாள். கறண்டும் மழையால நிண்டு நிண்டு வருது.ரெண்டு பிள்ளைகள்,எப்பவும் முனகினபடியே படுத்திருக்கிற அம்மா இதுக்குள்ள பெரிய வளவு வீடு எல்லாத்தையும் எப்பிடித்தான் அவள் கவனிப்பாள்.தொலைபேசியில சொல்லேக்கை நானும் திட்டுவன்.

"பிள்ளைகள் வளர்ந்திட்டினம்.அவையளின்ர வேலைகளை அவையளே செய்யினம்.அம்மாவும் தன் வேலைகளைப் பார்த்துக்கொள்றா.நீ என்ன வெட்டி விழுத்துறாய்" எண்டு.இங்கயிருந்து பார்க்கத் தெரியுது.கொஞ்சம் கஸ்டம்தான்.பாவம்தான் ஜானு.

"அம்மா பசிக்குது" என்று மகனின் குரல் கேக்குது.

"அப்பா எங்கயடா"

"அவர் கேற்றடியில குப்பை அள்ளிக்கொண்டு நிக்கிறார்."

அம்மாவின் குரலும் "பிள்ளை...தம்பி" எண்டு கூப்பிட்டுக் கேக்குது.

ஒற்றை அறையை இப்போதைக்கு வச்சுக்கொண்டு நான் ஜானு பிள்ளைகள் அதுக்குள்ளதான் சமாளிக்கிறம்.அம்மாவை மாட்டுக் கொட்டிலுக்குள்ளதான் கட்டில் போட்டுக் கொடுத்திருக்கு.வீட்டு வேலை முடியிற வரைக்கும்தானே.அம்மா அழ அழ பசுமாட்டையும் ஆட்டுக்குட்டியையும் வித்திட்டன்.நல்ல வேளை இந்த மழைக்குள்ள அதுகளும் நிண்டிருந்தா ஜானுபாடு எவ்வளவு கஸ்டம்.சீதாம்மா கனவில் அந்தப் பசுவும்,அவவின் ஐயாவும் அடிக்கடி வந்து போயினமாம்.அம்மா என்னைக் காணேக்கையெல்லாம் புலம்புறா.

"உங்களுக்கும் ஏலாமப் போச்சு.எப்பிடியம்மா இனி மாடும் ஆடும்..."சமாதானம் சொல்லி முடித்தான் ராகுல்.

பக்கத்து வீட்டு அம்மாச்சி அம்மாவை விசாரிக்கிறா.
"எப்பிடித் தம்பி அம்மா இருக்கிறா.இந்தச் சனியன் பிடிச்ச மழையால வந்து பாக்கவும் முடியேல்ல.பக்குவமாப் பாத்துக்கொள் தம்பி.பாவமது.கொப்பரும் செத்துப்போக உங்களோடயே அதின்ர காலமும் போய்ட்டுது.இனியாலும் அது சந்தோஷமாச் சாகவேணும்.என்னட்ட எல்லாம் சொல்லும்.சொல்லு வாறனாம் எண்டு" என்றபடி ஏதோ சொல்லியபடியே போய்க்கொண்டிருந்தா.

"அப்பா.....அம்மா சாப்பிட வரட்டாம்"

"சரி சரி வாறன்.போடச்சொல்லு இப்ப வந்திடுறன்."என்றபடி கை கால் அலம்பிக்கொண்டு சாப்பிட உடகார்ந்தான் ராகுல்.

"என்னப்பா நான் ஒரு விஷயம் சொன்னனான் யோசிச்சீங்களோ" எண்டபடி ஜானு சாப்பாடு போட்டுக்கொண்டிருந்தாள்.

"ஓமப்பா யோச்சிருக்கிறன்.திடீரென்று ...பாப்பம் செய்யலாம்.இப்ப சாப்பாடு தாரும்."என்று வாங்கிச் சாப்பிடத் தொடங்கினான்.

"உங்க...உவரைப் பாருங்கோ.நாங்களே இருக்க இடமில்லாம சமைக்கிறது எங்க சாப்பிடுறது எங்க படுக்கிறது எண்டு தெரியாமல் திண்டாடுறம்.இவரும் வீட்டுக்குள்ள படுக்க வேணுமாம்.அடி...வெளில போ பிறகு சாப்பாடு வைக்கிறன்.அம்மான்ர கட்டிலுக்குக் கீழ ஒரு சாக்குப் போட்டிருக்கிறன்.அது குளிருதாமெல்லோ மாப்பிள்ளைக்கு"

என்று திட்டிக்கொண்டே நாயை வெளியில் துரத்த அது பின் பக்கமாய் ஓடின ஓட்டத்திலே பலமாகக் குரைக்கத்தொடங்கியது.

"ஏனப்பா அடிச்சனியே.பாவம் ஏன் இப்பிடிக் குரைக்குது" என்றபடி பின் பக்கம் போன ராகுல்

"அம்மா....அம்மா ஏனம்மா இங்க வந்தனீங்கள்.எங்களைக் கூப்பிட வேணாமே" சேற்றில் விழுந்துவிட்ட சீதாம்மா எழும்ப முயற்சித்துகொண்டிருந்தா.

"இல்லையப்பு கூப்பிட்டனான்.உங்களுக்குக் கேக்கேல்லையோ என்னவோ.சரி நானே வருவமெண்டுதான் வந்தன்.அந்தச் சருகுக்குள்ள தடி தண்டுகள் கிடந்து தடக்குப் பட்டு விழுந்திட்டன்.எழும்புவமெண்டா வழுக்கி விழுறன்."

"எங்கையெண்டாலும் அடிபட்டுப்போச்சோ"

"இல்லை இல்லை எனக்கு ஒண்டும் ஆகேல்ல.நோகேல்ல.என்னை ஒருக்கா பிடிச்சுக்கொண்டுபோய் விடு.என்ர உடுப்புகளை மட்டும் எடுத்துத் தந்துபோட்டுப் போ."

"சரி உடுப்புகளை மாத்துங்கோ.சாப்பாடு எடுத்துக்கொண்டு வாறன்" என்றபடி பிடித்துக்கொண்டு வந்து விட்டு கொடியில் கிடந்த உடுப்புகளை எடுத்துக் கொடுத்துப் போனான் ராகுல்.

பொழுது நகர்ந்துகொண்டிருந்தது.மழையும் பெய்துகொண்டிருந்தது.இரவாக மின்சாரம் தடைப்பட....

"எங்க நெருப்புப் பெட்டி"

"அண்ணா இங்க இரடா பயமாக்கிடக்கு."

"பிள்ளை எனக்கும் மெழுகுதிரி கொண்டு வா பிள்ளை.அப்பிடியே நுளம்புத் திரி இருந்தாலும் கொண்டு வா.நுளம்புக் கடி தாங்கேலாமக் கிடக்கு" எண்டு சீதாம்மாவின் குரலும்.

இருட்டுக்குள் கைத்தொலைபேசியும் அலற ராகுல் பேசத்தொடங்க மேசன் தான் சொன்னார்."எப்பிடியும் 10 நாட்களாவது வேலை செய்யமுடியாதாம்.ஓடர் பண்ணின சீமெந்து வரேல்லையாம்."

ராகுலுக்கு எரிச்சல் எரிச்சலாய் வந்தது மழைக்கு மேல.
குளிரும் காற்றும் நுளம்பும் பூச்சிகளுமாய் இருள் விடியத் தொடங்கியது.

ராகுலுக்கு ஜானு சொன்ன யோசனை நல்லதாகவே பட்டது.

"இஞ்சப்பா மழை கொஞ்சம் விட்டிருக்கு.இந்த இடைக்குள்ள பிள்ளைகள் ரெண்டு பேரையும் கூட்டிக்கொண்டுபோய் தலை மயிரையும் வெட்டிக்கொண்டு,வரேக்க மீனும் மரக்கறிகளும் வாங்கிக் கொண்டு வாறியளே.நாளைக்கு மழை கொஞ்சம் குறையேக்க நிறைய வேலைகள் கிடக்கு.மேசன் வராட்டிலும் நாங்க செய்ய வேண்டியதுகளைச் செய்து வைக்கலாம்."

"சரி நான் கூட்டிக்கொண்டு போய்ட்டு வாறன்.அம்மாவையும் கூட்டிப்போகவேணும்.ராஜன் ஆட்டோ கூப்பிட்டால் உடன வருமோ?"

"ஓம் ஓம் வருவார்.நான் சொல்லி வைக்கிறன்...ஒரு மூன்று மணி போல வரச்சொல்லி."

"சரி...சரி கறிவேப்பிலை கொப்பும் முறிஞ்சுகிடக்கு.அம்மாவுக்குப் பிடிச்ச நல்ல துவையலும்,தக்காளிப்பழச் சொதியும்,சின்னமீனும் பொரிச்சுவிடும் போதும் இண்டைக்கு. நான் வாறன்" என்றபடி பிள்ளைகளோடு வெளியே போனான் ராகுல்.

சீதாம்மாவிடமும் போய்ச் சொன்னான்
"அம்மா வெளிக்கிட்டு நில்லுங்கோ.நான் வந்தவுடன சாப்பிட்டிட்டு டொக்டரிட்ட போய்ட்டு வருவம்."

"ஏனப்பு எனக்கென்ன.நல்லாத்தானே இருக்கிறன்.வேலை வெட்டி செய்யேலாது. விழுந்தெழும்புறன் எண்டா அது எனக்கு வயசு போய்ட்டுது.
இதுக்கு டொக்டரிட்ட போய்க்காட்டி ஒண்டும் செய்யேலாது."

"இல்லையம்மா நேற்றும் விழுந்து போனியள்.சாப்பிட்டிட்டு போய்ட்டு வருவம்." ஒன்றும் சொல்லாமல் பேசாமல் இருந்தாள் சீதாம்மா.

ராகுல் வர,எல்லோருமாகச் சாப்பிட்டும் முடிய ஆட்டோவும் வந்தது.ராகுலும் சீதாம்மாவும் புறப்பட சீதாம்மாவின் நாய் சீதாம்மாவை தடவிச் சுற்றிப் போனது.

போகும் வழியில் "ஏனப்பு...எங்கட டொக்டரிட்ட போகாம எங்க போற ?"

"இது வேற டொக்டரம்மா.ஜானு இங்க கதைச்சு வச்சிருக்கிறாள்.காசும் கட்டியிருக்கு.எனக்கும் இங்க நல்லதெண்டு படுது அதுதான்" என்றான்.

கதைத்துக்கொண்டிருக்க ஓடிக்கொண்டிருந்த ஆட்டோவை ஆட்டோ ராஜனிடம் "இதிலதான் அண்ணை நிப்பாட்டுங்கோ.நிண்டுகொள்ளுங்கோ நான் வந்திடுவன்."

"இதிலையோ அண்ணை !"எண்டு கேள்விக்குறியோடு பார்த்த ராஜன் நிப்பாட்டினார்.

இறங்கி நடந்தனர் சீதாம்மாவும் ராகுலும்.இவர்களைக் கண்டதுமே முதலே அறிவித்தல் கொடுத்ததுபோல ஒரு தாதி வந்து மிகவும் அன்போடு அணைத்துக் கூட்டிப்போனார்.

தாதியோடு வரவேற்பறையில் இருந்திவிட்டு டாக்டருடன் கதைத்து வருவதாகப் போனான் ராகுல்.சீதாம்மா சுற்றும்முற்றுமாய் பார்த்துக்கொண்டிருந்தார்.அழகாகப் பூமரங்களும் புற்தரைகளுமாய் அழகாக இருந்தது சுற்றாடல்.சில வயதானவர்கள் அங்குள்ள கதிரைகளில் காற்றாட இருந்தார்கள்.

ராகுலும் டாக்டரும் வந்தார்கள்."அம்மா இப்போதைக்கு நீங்கள் இங்கதானாம் இருக்க வேணும்.அங்க வீட்லயும் குளிரும் நுளம்புமாய் அவஸ்தைதானே.வீடும் கட்டி முடிய நீங்களும் வரலாம்."சீதாம்மாவின் வாயில் எதுவும் வரவில்லை.மனம் மட்டும் ஏதோ உளறிக் கொண்டிருந்தது.சொன்னாலும் இப்போ கேட்கும் மனநிலையிலும் ராகுல் இல்லை.

சீதாம்மாவைக் கூட்டிப்போனார்கள் நான்கு பேர் இருக்கும் ஒரு அறையொன்றைக் காட்டி."இனி இதுதான் அம்மா உங்கட இருப்பிடம்.உங்கட வயசை ஒத்தவையளும் இருக்கினம்.பொழுதும் போகும்.நாங்களும் அடிக்கடி வந்து பாத்திட்டுப் போவம்தானே.என்ன ஒரு மாசம்தானே."என்றபடி ராகுல் நாளை வருவதாகச் சொல்லி டாக்டருடன் கதைத்தபடியே போய்க்கொண்டிருந்தான்.

மழை திரும்பவும் அடித்துக் கொட்டத் தொடங்கியது.சீதாம்மாவின் மனமும் இடியும் மின்னலும் புயலுமாய் நனைந்துகொண்டிருந்தது.

அடுத்த நாள் உடுப்புகளோடும் ஜானு பிள்ளைகளோடும் வந்து பார்த்துப் போனார்கள்.இரண்டு மூன்று நாளுக்கொருமுறை வந்து போனார்கள்.ஒரு வாரத்தின் பின் தான் சீதாம்மாவுக்குச் சரியாக உணர முடிந்தது அது ஒரு வயோதிபர் மடம் என்று.

இரண்டு நாள்... மூன்று நாள் ...என்று ஒரு வாரமென்று...இப்போ குறைந்தே விட்டது.

இரு வாரத்தின் பின் எல்லோரும் வந்தார்கள்.சீதாம்மா
அழத்தொடங்கிவிட்டா. தான் வரப்போகிறேன் வீட்டுக்கு என்று.பிள்ளைகள் கூட்டிப்போகலாம் என்றார்கள்.இல்லை வீடு சரியாகத் திருத்தப்படட்டும் என்று தவிர்த்துப் போனார்கள்.

பின்னொருநாள் வீடு மழை காரணமாகத் திருத்தப்படவில்லையென்றும் சீதாம்மாவை இங்கேயே இருக்கும்படியும் அடுத்தமுறை தான் வந்து கூட்டிப்போவதாகவும் ஒரு தொலைபேசியில் செய்தி சொல்லிவிட்டு அணைத்துவிட்டான் அன்னை உறவை ராகுல்.

சீதாம்மா இன்னும் நம்பிக்கையோடு காத்திருக்கிறா அந்த வயோதிபர் மட வாசலில் குந்தியபடி.யாரும் வருடம் கழிந்தும் வந்தபாடில்லை.ஆனால் சாப்பாடும்,படுக்கைக்கும் பணம் வந்துகொண்டிருப்பதாகச் சொல்லி அவரைக் கவனித்துக்கொண்டிருந்தார்கள்.

எப்போவாவது ஜானு குழந்தைகள் வந்து பார்த்துப் போனார்கள்.ராகுலும்
3 - 4 மாதத்திற்கொருமுறை தொலைபேசியில் கடமைபோலப் பேசுவான் ஏதாவது.

ஆனால் நாச்சாரம் வீடு பற்றி மட்டும் ஒன்றுமே சொல்லமாட்டான்.
சீதாம்மாவின் மனமோ நாச்சாரம் வீட்டுக்குள்ளேயே அலைந்தது.வீடு முழுதுமாய் இடிக்கப்பட்டதும்,கராஜ் கட்டுவதற்காகத் தாத்தா வைத்த தென்னை மரம்கூட உயிர் விட்டதும் சீதாம்மாவுக்குத் தெரியாமலே போனது.

அதே அடை மழை இன்றும் இன்னும் பெய்துகொண்டிருக்க்கிறது.
சீதாம்மாவின் மனதிலும் கண்களிலும்.
Author: வடலியூரான்
•9:57 PM
மூத்தவன் சுகமா முகாமிலையிருந்து வந்தால் முதலிப் பேத்தியம்மாளே அவனை உனக்கு காவடி எடுக்க வைக்கிறன், இடையிலை நிக்கிற இளையவன் ஒரு பிரச்சினையுமில்லாமல் இத்தாலிக்குப் போய்ச் சேர்ந்தால் இத்திமரத்தாளே எனரை இரண்டாவது பெட்டையினரை மூத்த பெடியன் காவடியெடுக்க, நான் பாற் செம்பு எடுப்பன்,எட்டிலை செவ்வாயிருக்கிற என்ரை கடைசிப் பெட்டைக்கு இந்தச் சம்பந்தமாவது முற்றாகி வந்தால் முள்ளு மிதி போட்டு நான் பாற்செம்பு எடுக்கிறன்,என்றை புருசன் ஆசுப்பத்திரியாலை சுகமா வந்து சேர்ந்தால் எனரை அம்மாளாச்சியே என்றை இரண்டாவது பெடியனை உனக்கு காவடியெடுக்க வைச்சு, அஞ்சு கொத்துப் பானையிலை பொங்கி,ஒரு பெரிய பிலாப்பழமும் வெட்டிப் படைக்கிறன் என்பது போன்ற நேர்த்திகள்( கடவுளை நோக்கி வைக்கப்படும் விண்ணப்பம்) சாதாரண, சராசரியான ஈழத்து தாய்மார்களினால் அவர்களின் இஸ்ட தெய்வங்களிடம் வைக்கப்படுவனவாகும்.



நேர்த்தி வைக்கப்பட்ட கோவில்களுக்கு,நேர்த்தி செலுத்த வேண்டிய தினங்களில், காவடியிலோ,பாற்செம்பிலோ, கரகத்திலோ தங்களை வருத்திப் பாலை சுமந்து சென்று அந்தந்தக் கோவில்களின் சுவாமிகளுக்கு அபிசேகத்திற்கு கையளிப்பதால், த்மது பாவங்கள் களையப்பட்டு, நேர்த்திகள் நிறைவேறுகின்றன அல்லது நிறைவேற்றப் படுகின்றன என்பது அவர்களின் நம்பிக்கையாகும்.



பாற்காவடி, பறவைக் காவடி, தூக்குக் காவடி,துலாக் காவடி, செடில் காவடி, ஆனந்தக் காவடி, ஆட்டக் காவடி எனப் பல காவடிகள் உள்ளன.இதிலே ஆனந்தக் காவடி, பால் காவடி என்பன செடில் குத்த இயலாதவர்களாலும் பறவைக் காவடி,தூக்குக்காவடி போன்றவை கடும் நேர்த்திக் காரர்களாலும் எடுக்கப்படுபவையாகும்.



செடில் காவடி தான் பெரும்பாலானவர்களால் எடுக்கப்படும், பம்பலான, பார்ப்பதற்கு ரசிக்கக்கூடிய, கண்டு களிக்கக்கூடியதாகவிருக்கும்.அவன் எடுக்கிறான், நான் எடுத்தாலென்ன என திடுதிப்பென ,திடீரென முடிவெடுத்து கோஸ்டியாகக் களமிறங்கக்கூடியதாக இருக்கும்.



கடுமையான நேர்த்திகாரர், காவடி எடுக்கிற கோயிலை விளக்கு வைச்ச தினத்திலையிருந்து, மச்சம்,மாமிசம் சாப்பிடாமல் இருந்து, காவடியோ,பாற்செம்போ எடுக்கிற நாளிலை சாப்பிடாமல் விரதமிருந்து காவடி எடுத்துக் கொண்டு போய், கோயிலை இறக்கினாப் போலை தான் சாப்பிடுவினம்.




காவடி எடுக்கிறதெண்டால் செடில் குத்தினாத்தான் மரியாதை."ஆ.. அவன் ஆயிரதெட்டுச் செடில் குத்தினானாம், கையிலை,நெஞ்சிலை எல்லாம் அலகு குத்தினானான்ம், இத்தினை செடிலை அறுத்தானாம் எண்டதிலை தான் அவன்ரை வீரம்??? தங்கியிருக்குது.செடில் எப்பவும் வந்து வைரவருக்கு முன்னலை வைச்சுத் தான் குத்தப்படும். பறை எல்லாம் சுத்தி நின்று அடித்துக் கொண்டிருக்க அந்த அடியிலேயும், கூடி நிக்கிற சனத்தின்ரை அரோகராக் கோசத்திலேயும் வலி பெரிசாகத் தெரியாது.



வைரவருக்கு ஒரு தேங்காயை அடிக்கச்ச சொல்லிப்போட்டு, முதல் வாய்க்குத் தான் அலகு குத்தப்படும்.எண்டால்த்தான், முதுகிலை குத்தேக்கை வலிச்சாலும் ஆளாலை கத்தேலாமல்ப் போடும் கண்டியளோ.பிறகு செடில் எல்லாம் குத்தினாப் போலை அப்பிடியே காவடியைத் தோளிலை ஏத்தாமல் ஒருக்கால் கோவிலை சுத்திவந்திட்டு, பிறகு ஐயர் காவடியை,பாற்செம்பைத் தூக்கி ஏத்திவிட்டாப் பிறகு, அப்பிடியே ஆடிக் கொண்டு வெளிக்கிடவேண்டியத் தானே.ஒவ்வொரு சந்திகள், கோயில்கள் எல்லா இடமும் நிண்டு, ஆடி, கோயிலுக்குப் போய்ச்சேர எப்பிடியும், சாமம் ஆகிப் போடும்.



சின்னனிலையெல்லாம் எப்பாடா கோவிலிலை "காவடி நாள்" வரும் எண்டு காத்துக் கிடக்கிறது. காவடி பார்க்கவென்ற பொதுவான காரணத்தை தாண்டி, இன்னுமொரு கொஞ்சம் ஸ்பெசலான காரணமும் உண்டு.ஆண்டு இரண்டு,மூன்று களில் படிக்கின்ற காலங்களிலெல்லாம் படிக்கிற புத்தகத்துக்கை வைக்கிறதுக்கு மயிலிறகுகளை இந்தக் காவடிகளிலை ஆட்டையைப் போடலாம் எண்டு தான் உந்தக் காத்திருப்பெல்லாம்.




புத்தகதுக்கை மயிலிறகை வைத்துப் பவுடர் போட்டால் அது குட்டி போடும் எண்டு முந்தி யாரோ இழக்கின கதைய நம்பி பவுடர் எல்லாம் போட்டிருந்திருக்கிறோம்.அதுமட்டுமில்லாமல் அந்த மயிலிறகு உள்ள புத்தகத்தை திறக்கும் போது வானத்தின் கண்ணில் அது பட்டுவிட்டால் குட்டி போடாது எண்டிறது அடுத்த புழுகு.ஆனால் அது குட்டியும் போடயில்லை ஒரு சுட்டியும் போட்வில்லை.





ஆனாலும் வானம் பாத்திடும் எண்டதுக்காகவேண்டி, பக்கத்திலை இருக்கிற நண்பனட்டை என்னட்டையும் மயிலிறகு இருக்குது எண்டதை காட்டாம்ல் இருக்க எப்பிடி முடியும்? மனம் விடாதே.அவனுக்குக் காட்டிறதுக்காக மேசைக்குக் கீழை போய் புத்தகத்தை மேல் பக்கமாய் படக்கென்று திறந்து,நண்பனுக்குக் காட்டி, வானத்துக்குக் காட்டாத கெட்டிக் காரர் நாங்கள் .




நண்பனுக்குத் தான் குடுக்க் மாட்ட்ம்.ஆனால் இந்த மயிலிறகை நண்பிகள் கேட்டால் மட்டும் பல்லையிளித்துக் கொண்டு எடுத்துக் கொடுத்து,செட்டையடித்து பேட்டுக் கோழியை கரக்ற் பண்ண வெளிக்கிடும் சேவலின் புத்தியும் எங்களுக்கு இருந்ததுவும் மயிலிறகின் மெல் ஈர்ப்பு வருவதற்கு அல்லது மயிலிறகை ஆட்டையைப் போட வேண்டியதொரு தேவையை எங்களுக்கு ஏற்படுத்திய இன்னுமொரு காரணம்.




ஆனால் மயிலையோ,மயிலிறகையோ காண ஏலாத எங்கள் ஊரில் மயிலிறகை எடுப்பதற்குரிய ஒரே வழி இந்தக் காவடிக்ளின் போது எடுப்பது தான்.ஆனால் காவ்டியில் உள்ள மயிலிறகு முறிந்து விழுந்து,முறிந்த இடத்தில் நான் நின்று, அந்த இடத்தில் என்னைப் போல மயிலிறகு பொறுக்குவதற்கு காத்துக் கொண்டு நிற்கும் என் சகபாடிகளோடு போட்டி போட்டு, அதுக்குள்ளாலையும் எனக்கு மயிலிறகு கிடைக்கிறது என்பது லேசுப் பட்ட காரியமில்லை.



ஒரே வழி காவடியிலியிருந்து ஆட்டையைப் போடுறது தான்.அதற்கு பொருத்தமான நேரம், காவடிகள், ஆடுபவர்களின் தோளில் ஏற்றுவதற்கு முதல் ஆலய மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கும் போது எடுப்பது தான்.ஆனாலும் அது ஒண்டும் இழுத்தெடுக்க வராது..வழி? பிளேட்டோடை களத்திலை இறங்கி, சத்தம் போடாமல் மண்டி,மண்டி காவடிக்குப் பக்கத்திலை போய் நிண்டு கொண்டு, அறுக்கிறது மாதிரி வேறை யாருக்கும் தெரியாமல் அறுத்தெடுத்துக் கொண்டு போறது தான் வழி.அப்பிடித் தான் ஒருக்கால் செய்ய வெளிக்கிட்டு, அந்தக் காவடிக்காரர் திரத்த வெளிக்கிட , குண்டியிலை குதிக்கால் அடிபட ஓடினதெல்லாம் பழங்கதை.





காவடியென்றால் பறை வேண்டும்.பறை இல்லையென்றால் அந்தக் காவடியில் வேலையே இல்லை.பாப்பவர்களுக்கும் உப்புச் சப்பில்லாதது போல இருக்கும்.ஆடுபவருக்கும் நன்றாக இழுத்து ஆட முடியாது.பண்டைத் தமிழனின் வாத்தியக் கருவியான பறையின் பவர் அத்துணை வாய்ந்தது.பறையில் கட்டப் பட்டிருக்கும் தோலில் ஆழமாக விழும் அடியில் ஏற்படும் அதிர்விலே வரும் சுருதி நரம்புக்குள் புகுந்து, காவடிய ஆடுபவரை துள்ளி ஆடச் செய்யும். எம்மையும் அந்த சுருதிக்கு ஆட அழைக்கும்.அற்லீஸ்ற்(Atleast) கால்களையாவது நம்மையறியாமல் ஆட்டுவிக்கும்.அத்தனை சக்தியுள்ளது.






அது மட்டுமில்லாமல் முதுகிலே ஆழமாக குத்தப் படும் செடிலினால் ஏற்படும் வலியையும் கூட மறங்கடிக்கச் செய்யும்.செடில் அறுத்து, குருதி கொட்டினாலும் துடி துடித்துவிடாமல் தடுத்துவிடக் கூடியது. "டிண்டு டட்டு டட்டு டட்டு டிண்டு டட்டு டட்டு டட்டு டிண்டு டட்டு டட்டு டட்டு " என்று அடிக்கும் அடிக்கு ஆடுபவன், செடில் பிடிப்பவன், காவடிக்கு முன் பைலா ஆடுபவன்,காவடி பார்க்க வந்தவன் எனப் பலரையும் ஆட வைக்கும்.அந்தமாதிரியான ஒரு இசைக் கருவி.



(உங்களுக்காக அவ்வளவு தெளிவாக இல்லாவிட்டாலும் என்னிடமிருந்த ஒரு காணொளி.)



காவடி போற ரோட்டாலை சனம் வாளிகளிலை தண்ணியள்ளிவைச்சிருக்குங்கள்.அந்தத் தண்ணியை காவடி ஆடுறவனுக்கு ஊத்திறாங்களோ இல்லையோ செடில் பிடிக்கிறவனுக்கும், பைலா ஆடுறபவனுக்கும், சேட்டுக் கழட்டாமல் மாப்பிளை போல வந்து பெண்டுகளுக்கு நல்லபிள்ளை போல நடிக்கிறவனுங்களுக்கும் ஊத்துவாங்கள்.அவங்களைச் சீண்டுவதும் அவங்களுக்கு தண்ணியை ஊத்திப் போட்டு அதைப் பார்த்த சரக்குகள் ஏதாவது ரியாக்சன் குடுக்குதுகளோ எண்டும் ஒரு லுக் விடுவாங்கள்.




காவடியாடுறவங்கள் நேர்த்தி எண்டு சொல்லி எடுத்தாலும், ஆனால் மற்றப் பெடியளுக்கெல்லாம் அது பம்பலாய்ப் போடும்.சரக்குகள் பார்க்குது எண்டால் காவடி ஆடிறவங்கள் நல்லா உன்னி இழுத்து, செடில் அறுக்க வெளிக்கிடுவாங்கள்.சிலவேளையிலை தௌவல் ஒண்டு தான் காவடி எடுத்துது எண்டால், அது பெரிசா இழுத்து ஆட்டாது.ஆனால் செடில் பிடிக்கிறவன் விடமாட்டான்.தான் இழுத்து அறுத்துப்போடுவான்.






இண்டைக்கும் எங்களுக்கெல்லாம் ஏதாவது பாட்டியளுக்குப் போனாலும் அந்தக் காவடிக்கு ஆடிற மாதிரி ஆட்டம் ஒருக்காலெண்டாலும் ஆடாட்டில் ஏதோ பாட்டியிலை ஆடினமாதிரி ஒரு பீலிங் வராதாம் கண்டியளோ.

எஙக்டை ஊரிலையும் பண்டாரி அம்மன்கோவிலிலை ஒவ்வொரு சித்திரை வருச்ப் பிறப்பண்டைக்கு பின்னேரம் தான் காவடியும், அடுத்தநாள் வேள்வியும் நடக்கும்.இந்தமுறையும் அதுக்குத்தான் போறதுக்காண்டி நாளைக்கு வெளிக்கிடிறன். போனால்த் தானே செடிலுகள் பிடிச்சு,கூத்துகள் அடிச்சு, முசுப்பாத்தியா இருக்கும்.அதுதான் அவசரமா ,திருப்பியும் பாக்காமல் எழுதிப் போட்டிட்டிப் போறன்.ஆச்சியும் பிறகு கோவிச்சுப் போடுவா, எல்லாரும் கலியாண வீட்டோடை தன்னைத் தனிய விட்டுட்டுப் போட்டாங்களெண்டு. அது தான் எதோ படக்கெண்டு எழுதிக் கிடக்குது.ஏதாவது பிழையள் கிடந்தால் சொல்லுங்கோ.

உன்னி - கொஞ்சம் ஊண்டி இழுத்தல் எண்டு சொல்லலாம்
தௌவல் - நோஞ்சான்/ஏலாவாளி மாதிரியான ஆக்கள்
செடில் - முதுகிலே அல்கால் குத்த்ப்படுவது
Author: HK Arun
•10:30 AM
குஞ்சு என்றால் "சிறிய" அல்லது "சிறியது" என்பதற்கு இணையான சொல்லாகும். பறவைகளின் குழந்தைப் பருவத்தை "குஞ்சு" என்பதன் பொருளும் சிறியது அல்லது சிறிய பருவத்தைக் கொண்டது என்பதே ஆகும்.

"குஞ்சு குருமன்கள்" என்பதும் "சின்னஞ் சிறிசுகள்" அல்லது "சின்னஞ் சிறியவர்கள்" எனப் பொருள் படுவதனையும் பார்க்கலாம்.

யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில்

யாழ்ப்பாணத்தில் பேச்சு வழக்கில் "என்ட செல்லம்", "என்ட குஞ்சு" என பெரியர்வர்கள் சிறியக் குழந்தைகளை அன்பாகவும் செல்லமாகவும் அழைப்பதனைக் காணலாம். அத்துடன் இச்சொல் உறவுமுறைச்சொற்களாகவும் பயன்படுகின்றது.

உறவுமுறைச் சொற்கள்

யாழ்ப்பாணத் தமிழரிடையே "குஞ்சு" என்றச்சொல் பல்வேறு உறவுமுறைச் சொற்களாகப் பயன்படுகின்றது. தகப்பனை ஐயா என்று அழைப்பதனைப் போன்றே, தகப்பனின் தம்பியை "குஞ்சையா", "குஞ்சியப்பு", "குஞ்சையர்" போன்ற சொற்களால் அழைக்கும் வழக்கு அன்மைகாலம் வரை இருந்தது.

சிறிய தகப்பன் = குஞ்சையா, குஞ்சியப்பு, குஞ்சையர்

தாயின் தங்கையை, அதாவது சிறிய தாயை; "குஞ்சம்மா", "குஞ்சாச்சி" என்றும் அழைக்கும் வழக்கு அன்மை காலம் வரை இருந்தது.

சிறிய தாய் = குஞ்சம்மா, குஞ்சியாச்சி

சகோதரிடையே இளையவரை, அதாவது வயதில் சிறிய தம்பியை; "குஞ்சித்தம்பி", "சின்னக்குஞ்சு" என அழைக்கும் வழக்கும் உள்ளது.

சிறிய தம்பி = குஞ்சித்தம்பி, சின்னக்குஞ்சு

மேலே சொல்லப்பட்ட யாழ்ப்பாணத் தமிழரிடையே பயன்படும் உறவுமுறை குறித்த சொற்களிலும் "குஞ்சு" எனும் சொற்பதம் "சிறிய" எனும் பொருளையே தருவதனைக் காணலாம்.

ஆண் உறுப்பு

தமிழரிடையே ஆணுறுப்பிற்கு "குஞ்சு" எனும் வழக்கும் உள்ளது. இருப்பினும் இச்சொல், சிறிய ஆண் குழந்தைகளை அழைக்கும் (சிறியவன் எனும் பொருள்பட) "குஞ்சு" என அழைக்கப்பட்ட சொல்லே பின்னர் இவ்வாறு வழக்கில் தோன்றக் காரணமாக இருந்திருக்கலாம்.

விக்கிப்பீடியாவில் நான் எழுதியது.
Author: யசோதா.பத்மநாதன்
•4:18 AM


என்ன எல்லாரும் களைச்சுப் போனீங்களோ? ஒருதற்ற சிலமனையும் காணேயில்ல.நான் தான் ஏலாதனான். நாரீக்க பிடிச்சுக் கொண்டுது எண்டா உங்களெல்லாருக்கும் என்ன நடந்தது? கலியாண வீடு நடத்தின களையாக்கும்.சரி சரி வாருங்கோ.கலியாணவீட்டுச் சாப்பாடும் கறியளும் அப்பிடியே கிடக்கு.வாற எண்டு சொன்ன கன பேர் வராமல் போட்டினம்.எதிர் பாராமல் கொஞ்சப் பேர் வந்து கலக்கிச்சினம்.

சரி,எல்லாரும் ஆளுக்கொரு பூவரசு இலையள அல்லாட்டில் கட்டி வச்ச அந்த வாழை இலயள் அங்கனேக்க இருக்கும் அதில கொஞ்ச இலத் துண்டுளக் கிழிச்சுக் கொண்டு வாருங்கோ.குழையல் ஒண்டு போட்டா சாப்பிட்டதுமாகுது;இயத்துகளையும் மினுக்கப் போட்டிடலாம்.இல்லாட்டில் உந்தக் கிடாரங்கள் பெரிய இடத்தையும் பிடிச்சுக் கொண்டு அது ஒரு பெரிய ஆக்கினை.

வந்தி, கிட்ட வந்து இதப் பிடியடா மோன. எங்க மசிஞ்சு கொண்டு நிக்கிறாய்? இந்தா ரண்டு மிளகாய் பொரியலையும் எடு. எல்லாரும் இப்பிடி கூடி இருந்து சாப்பிடுற நாள் இனி எப்ப வருமோ? வரேக்க நான் இருப்பனோ என்னவோ!ஹேமா எங்க போட்டாள்? சினேகிதிய இனிக் கண்ணாலயும் காணக் கிடைக்காது.உந்தப் புதுசா வந்த பிள்ளயளயும் ஒருக்கா பிடிச்சுக் கொண்டு வாருங்கோ.பிரவா,பலகையப் போட்டிட்டு இரு மோன.இந்தா இன்னும் எப்பன் பிடி.வெளிநாடெண்டு போனது தான் மிச்சம்.பலகையில இருக்கிறதே பெரும் பாடாப் போச்சுது.பூச்சுக் கொட்டுண்ட இந்த நாற்சார வீடு மாதிரி எங்கட வாழ்க்கையும் போய் முடிஞ்சா இனி ஆர் வரப்போயினம்.குழையல் சோறெண்டாலே என்னெண்டு தெரியாமல் வளருதுகள் இப்பத்தய பிள்ளயள்.ஏதோ இருக்கிற காலம் கொஞ்சம், இருக்கேக்க சந்தோசமா இருக்க வேணும் அவ்வளவுதான்.

மெய்யே மோன!கலியாண விட்ட திறமா நடத்தி முடிச்சிட்டாய்.சந்தோசம்.இனி நீங்கள் எல்லாரும் நாளைக்கோ நாளையண்டைக்கோ பயணப் பட்டிடுவியள்.வீடும் வெறிச்சோடிப் போகப் போகுது. அடிக்கடி இந்த முற்றத்துக்கு வந்து ஒண்டிரண்டு பதிவையாவது போட்டிட்டு போங்கோ என்ன? ராசா, இன்னும் கொஞ்சம் பிடியன்.நன்னிக் கொண்டிருக்காமல் வடிவாச் சாப்பிடுங்கோ.ஹேமா, இந்தா இன்னுமொரு கவளம் பிடி.

சரி வரத்தான் முடியாட்டிலும் ஒரு பின்னூட்டமாவது போடக் கூடாதே? உதென்ன கண்டறியாத பழக்கம் பழகி வச்சிருக்கிறியள்? உது எங்கத்தய பழக்கம்? உது தானோ வெளி நாடு உங்களுக்குச் சொல்லித் தந்தது? அட, இந்த நாட்டுப் பிள்ளயளுமெல்லே இப்ப அதப் பழகி வச்சிருக்குதுகள்.இந்த வடலிப் பிள்ள இங்கனேக்க ஓடித் திரிஞ்சு கொண்டிருந்தான். இப்ப அவனையும் காணக் கிடைக்குதில்ல.எங்கட ஊர் பிள்ளயள் எல்லே நீங்கள்! நாங்கள் ஒரு குடும்பம்.அத மறந்து போகப் படாது.இப்ப புதுச் சொந்தம் சேந்திருக்கு அவையையும் உங்களோட சேத்துக் கொள்ளுங்கோ.சரி, முடிஞ்சுது. இது தான் கடசி உருண்டை. ஆருக்கு வேணும்?

சரி,கையளயும் வாயையும் கழுவிக் கொண்டு வாருங்கோ உதில இருப்பம்.பாயளயும் தலகாணியளயும் உந்தக் கரையில விரிச்சு விட்டா சின்னனுகள் படுத்திடுங்கள்.பிள்ள அதுகள ஒருக்கா பார் மோன.உந்த குஞ்சன் குருமனுகள் எல்லாம் உது வழிய ஓடித் திரிஞ்சதுகள் வடிவாச் சாப்பிட்டவையோ தெரியாது. பாத்து சாப்பிடாத ஆக்களுக்கு அங்க குசினிக்க காச்சின பால் இருக்குது அதில கொஞ்சம் ஆத்திக் குடுத்து விட்டா நல்லது.பிள்ள, கையோட அதயும் ஒருக்கா பாத்திட்டு வந்திட்டியெண்டா நல்லது.

உந்தக் கோடிக்க எரியிற லைட்டுகளயும் ஒருக்கா கையோட நூத்துப் போட்டு வா பிள்ள. சும்மா வீணா எரிஞ்சு கொண்டு கிடக்குது.கதவுகளையும் பூட்டி விடு.இருட்டுப் பட்ட நேரம்.

சரி வா,வா. இதில வந்து இரு மோன.எல்லாரும் கலியாண விட்டோட நல்லா களைச்சுப் போனியள்.எண்டாலும் சும்மா சொல்லப் படாது.எல்லாத்தையும் வலு கலாதியா நடத்தி முடிச்சுப் போட்டியள். அதில எனக்கு வலு சந்தோசம். வராத ஆக்களுமெல்லே வந்து கலியாணத்தச் சிறப்பிச்சுப் போட்டினம்.

எனக்கு மோன ஒரு கவல.அதச் சொல்லாட்டில் எனக்கு மனம் பறியாது.முந்தின காலத்தில கலியாண வீடு முடிஞ்சா முடிஞ்சு போற கையோட வந்தாக்களுக்கு ஒரு வெத்திலப் பை குடுத்து விடுறவை. அந்த வெத்திலப் பை எப்பிடி இருக்கும் சொல்லுங்கோ பாப்பம்? சும்மா பேப்பர் பைதான். ஆனா அதில நிறைகுடம் குத்துவிளக்குப் படம், கலியாணத் தம்பதியளின்ர பேர், கலியாணம் நடந்த திகதி எல்லாம் போட்டிருக்கும்.அதுக்க வெத்தில,பாக்குச் சீவல் எல்லாம் போட்டிருக்கும்.பலகாரப் பை அது பிறிம்பு.அப்பிடியும் ஒரு காலம் இருந்துது.சரி அதவிடு, நான் என்ர கவலையச் சொல்ல வந்திட்டு என்னவோ சொல்லிக் கொண்டிருக்கிறன்.

எனக்கு என்ன கவலை எண்டா, வீடியோ படம் ஒருத்தரும் காட்டயில்ல.இந்தப் புதுப் பிள்ளயள் எல்லாம் வந்து கலாதியா நகைச்சுவை, கவிதை, கதை, அனுபவம்,ஆக்கள், பூக்கள்,அது இது எண்டு எல்லாம் நல்லாத் தான் இருந்தது.ஆனா,கலியாண வீட்டில ஒரு படம் கிடம் ஒண்டும் வரக் காணேயில்ல.பாத்தியே அத நாங்கள் துப்பரவா மறந்தெல்லே போயிட்டம்.உந்த வெளிநாடெண்டு போன பிள்ளயள் என்ன திறமா அதுகளப் படம் எடுத்திருக்குதுகள்.இஞ்ச பாரன்.

எப்பிடி எல்லாம் வாழ்ந்திருக்க வேண்டிய பிள்ளயள்!ஏதோ ஒரு கண் காணாத தேசத்தில போயிருந்து கொண்டு ஊர மறக்காமல் எப்பிடி இதை எல்லாம் செய்திருக்குதுகள் எண்டு கேட்டுப் பாருங்கோ.அதில வாற படங்கள் ஊர அப்பிடியே கொண்டு வந்து முன்னால நிப்பாட்டுது பாருங்கோ.

வெளிநாட்டுக்குப் போன எங்கன்ர பிள்ளையளின்ர மன ஏக்கம் இது. இதுகள நாங்கள் குறைவா மதிப்பிட்டிடக் கூடாது.

இத ஒருக்கா கேட்டுப் பாத்திட்டு உங்கட குற நிறையளயும் அபிப்பிராயத்தையும் சொல்லுங்கோ.

பாட்டப் பற்றி மட்டும் சொல்லிப் போட்டுப் போகப் படாது. உரிமையோட அடிக்கடி வந்து பதிவுகளும் போட்டு அசத்த வேணும்.





Author: கானா பிரபா
•4:15 AM

பதிவர் சகோதரி மணிமேகலா சொன்னது போல ஒரு பெரிய கலியாண வீட்டைச் செய்த திருப்தியோடு தமிழ்மண நட்சத்திர வாரத்தை நிறைவு செய்கிறது எமது ஈழத்து முற்றம். கடந்த வாரம் முழுவதுமே எமது குழும அங்கத்தவர்களது பதிவுகளாக மொத்தம் 18 பதிவுகளை நட்சத்திர வாரப்பதிவுகளாகக் கொடுத்திருந்தோம். தனிப் பதிவராக நான் உட்பட இந்த நட்சத்திர வாரத்தில் பங்கேற்ற சக பதிவர்கள் ஒருசிலரும் நட்சத்திர வார அனுபவங்களைப் பெற்றிருந்தாலும், முழுமையான ஒரு குழுமப்பதிவில் ஒவ்வொருவருடைய சிந்தனைகளும் பரந்து பட்ட அனுபவங்களுமாகத் திரட்டிய இந்த அனுபவம் எங்கள் எல்லோருக்குமே புதியது. அதற்காக எம்மை நட்சத்திர வாரத்தில் பங்கேற்கச் செய்த தமிழ்மணம் குழுவுக்கும், இந்த நட்சத்திர வாரத்தில் பங்களித்த சக உறவுகளுக்க்கும், பின்னூட்ட மட்டுறத்தலோடு அவ்வப்போது ஆலோசனைகளைத் தந்துதவிய சக மட்டறுத்துனர் வந்தியத்தேவன் மற்றும் சினேகிதி, ஈழத்து முற்றத்துக்கான இலச்சினை வடிவமைப்புக்கு உதவிய மயூநாதன், எம்மை ஊக்கப்படுத்திப் பதிவுகளை வாசித்தோர், பின்னூட்டியோர் எல்லோருக்கும் இனிய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்புடன்
கானா பிரபா
(ஈழத்து முற்றம் குழும வலைப்பதிவர்கள் சார்பில்)

ஈழத்து முற்றம் தமிழ்மண நட்சத்திர வாரப்பதிவுகள்


நட்சத்திர வாரத்தில் ஈழத்து முற்றம்

அல்வாயில் ஒரு மழைக்காலம் - சினேகிதி

என் ஜன்னலின் சினேகிதி - ரிஷான் ஷெரீப்

மட்டக்களப்புச் சொற்கள் - விசரன்

கணவன்/கணணி/வீடு. - ஹேமா

பொங்கல்/ வளந்து வைத்தல், உரு ஆட்டம் - வி.ஜெ.சந்திரன்

கொழும்பிலிருந்து வன்னியூடாக யாழ்ப்பாணம் - மணிமேகலா

கப்பலேறிப்போனோம் கசங்கிப்போய் வந்தோம் - வடலியூரான்

கொண்டல்மரமே! - ந.குணபாலன்

எங்கடை ஊர் உலகக்கோப்பை - வந்தியதேவன்

ஊரும் பெயரும் - வர்மா

ஈழத்து நகைச்சுவை இரட்டையர்கள் டிங்கிரி சிவகுரு - மாயா

எக்சியூஸ் மீ உதவ முடியுமா? - சின்னக்குட்டி

ஈழத்துச் சதன் - சுபாங்கன்

பண்டிதர் க.சச்சிதானந்தன். - தமிழன் - கறுப்பி


நிர்ப்பந்திக்கப்பட்டவைகள்.
- ஹேமா

புனிதப் பூமி ரட்சிக்கப்பட்ட பாவி - விசரன்

சைக்கிள் ஓடப் பழகின கதை - வடலியூரான்

படலைகள்: - சங்கடப் படலை - மணிமேகலா
Author: யசோதா.பத்மநாதன்
•4:48 PM
படலை திறந்து தான் இருக்கிறது; உள்ளே வாருங்கள்.:)


வீட்டின் முகம் இது. வீட்டில் வசிக்கும் மனிதர்களின் மன,குண இயல்பை மூன்றாம் நபருக்குக் காட்டும் முதல் இடம் இது தான்.

முதன் முதலாக தெரியாத ஒரு வீட்டுக்கு வருகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.முதலில் நீங்கள் எங்கெல்லாமோ தேடி இடத்தைக் கண்டுபிடித்து முதலில் வந்து நிற்கும் இடம் இது. அந்த வீட்டில் உள்ளவர்களைப் பற்றி உங்கள் மனம் முதலில் ஒரு அபிப்பிராயத்தை இதை வைத்துத் தான் எடுத்துக் கொள்ளும்.

அது தான் படலை.

படலைகள் பலவகை.வீதியில் இருந்து வீட்டு வளவுக்கு வரும் வாசலை கட்டுப் பாட்டில் வைத்திருப்பது இதன் தொழில்.படலை கர்ம வீரனைப் போல வீட்டை; வீட்டில் உள்ளவர்களைக் காக்கிறது.

படலை என்பது யாழ்ப்பாணத்துச் சொல் வழக்கு. கேற் என்பதும் இது தான்.இவற்றில் பலவிதங்கள் உண்டு. மரப்படலை,இரும்புப் படலை,ஒற்றைப்படலை, இரட்டைப் படலை,தகரப் படலை,கடவுப் படலை,செத்தைப் படலை,மூங்கில் கழிகளால் கொழுவி அமைக்கப் படும் படலைகளும் உண்டு.படலைகளே அற்ற ஏழைகளின் வீடுகளும் இருக்கின்றன. இப்படிப் பலவகைப்படும் அவை.

சமயங்களுக்கும் இந்தப் படலைகளுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்று கேட்டால் அப்படி ஒரு சம்பந்தமும் இல்லை. இருந்த போதும் இஸ்லாமிய சகோதரர்களின் வீடுகளின் படலைகள் இன்னொரு விதமாக தனித்துவம் கொண்டதாக இருக்கும் என்பதையும் சொல்ல வேண்டும். அது ஒரு விதமான மூடிய தோற்றத்தைக் கொண்டிருக்கும்.உயரத்தில் ஒரு சிறு ஜன்னல் அதில் காணப்படும். வெளிப்புற சுவர் ஓரம் அழைப்பழுத்தி ஒன்றிருக்கும். (இதனை நான் கொழும்பில் தான் பார்த்தேன்.ஏனையவர்களின் வீட்டுப் படலைகளும் அப்படி இருக்கிறதா என்று தெரியவில்லை.)அதனை அழுத்தினால் ஒரு முகம் மட்டும் அந்த ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்கும். விடயத்தைச் சொன்ன பின் அனுமதி கிட்டும்.

சிங்கள மக்களது படலைகள் நல்ல கலை வேலைப்பாடுகள் கொண்டதாக இருக்கும். மரமோ, இரும்போ எதுவாக இருந்தாலும் கடைச்சல் வேலைகளுக்கு அவர்கள் மிகப் பிரசித்தம் ஆனவர்கள்.வேல் போன்ற முனைகள் ஒரு வித சீரோடு அதில் அமைந்திருக்கும்.பதிவாக ஆரம்பித்து உட்புறம் வர வர உயர்ந்து காணப்படும் சில. வேறு சில அதற்கு எதிர்புறமாக உயர்ந்தவாறு செல்லும்.கறுப்பும் மண்ணிறமும் கலந்த வர்ண வேலைப்பாடுகள் அதில் அமைந்திருக்கும்.இந்தப் படலையில் அவர்கள் ஏனோ தனிக்கவனம் செலுத்துவதுண்டு.

பொதுவாகச் சில படலைகள் அதன் கம்பி வேலைப் பாட்டிலேயே இரு அன்னங்கள் நீந்துவது போல ;உதயசூரியன் உதிப்பதைப் போல; மலர்ந்த தாமரையைப் போல என்றெல்லாம் கலை பேசும். வேறு சில வீட்டுத் தலைவரின் பெயரைத் தாங்கி நிற்கும். மேலும் சில வீட்டின் பெயரைக் கொண்டிருக்கும்.வர்ணப் பூச்சுக்களால் அதனை வேறுபடுத்தியும் காட்டி இருப்பார்கள் சிலதை.மேலும் சில வீட்டு ஜன்னலின் கம்பி வேலைப் பாட்டை போன்ற வேலைப் பாட்டையும் கொண்டிருக்கும்.பெரும்பாலானவை நல்ல காத்திரமான படலைகளாகவும் இருக்கும். வீட்டினுடய வர்ணத்தை ஒத்த நிறத்தைப் பெரும்பாலும் அவை கொண்டிருக்கும்.

இவை எல்லாம் எத்தகைய கலை வேலைப்பாடு வண்ணங்களைக் கொண்டிருந்தாலும் இவை அமைந்திருப்பதற்கான நோக்கம் பாதுகாப்பு என்ற ஒன்றே!

அதன் சூட்சுமம் படலைகளின் ஓரத்திலோ நடுப்பகுதியிலோ தான் காணப் படும். அவை தான் கொழுவிகள். கூக்குகள்,திறாங்குகள் போன்ற பூட்டும் சாதனங்கள்.சில உட்புறமாக மட்டும் திறக்கக் கூடிய தன்மையை கொண்டனவாகவும் விளங்கும். சில சங்கிலி கொண்ட பூட்டுக்களால் எப்போதும் பூட்டப் பட்டிருக்கும். இரவு வேளைகளில் படலைகளைப் பூட்டி வைப்பாரும் உளர். அது கள்வர் பயத்துக்காக.தோற்றம் எவ்வாறு இருந்தாலும் பூட்டுகள் சரியாக இல்லாவிட்டால் படலைகள் இருந்தும் அவற்றினால் ஒரு பயனும் இல்லாது போய் விடும்.சில வீடுகளில் ’நாய் கடிக்கும் கவனம்’ என்ற எச்சரிக்கைப் பலகையும் வைக்கப் பட்டிருக்கும்.சில படலைகள் ‘கண்ணைப் பார்;சிரி’ என்றும் சொல்லும்.


சில படலைகளை 45 கலன் கொள்கலனை வெட்டி அழுத்தி நீளமாக்கி அதைக் கொண்டும் படலைகளைச் செய்திருப்பார்கள்.அதன் ஓரத்தைப் பிடித்து தூக்கி கரைக்கு இழுத்துவரவேண்டும்.அது ஏழைகளின் படலை.சிக்கனமான படலை.சிறு காய்கறித் தோட்டங்களுக்கும் அப்படியான படலைகள் இருப்பதுண்டு.

பணக்கார வீட்டுப் படலைகள் கார் போக வசதியாக இரண்டு கதவுகளைக் கொண்டதாக ஒன்றும் அருகாக ஒற்றையாய் ஒரு படலை நடந்து வருபவர்களுக்காகவும் இருக்கும். (படலைகளும் வர்க்க வித்தியாசம் பார்க்கும் போலும்.)

முக்கியமான ஒரு யாழ்ப்பாணப் படலையைப் பற்றிச் சொல்லத் தான் இத்தனை ஆலாபனையும். அப்படலைக்குப் பெயர் ‘சங்கடப் படலை”.சங்கடத்தை (அசெளகரிகத்தை) தீர்க்கும் படலை என்று அதற்குப் பொருள் கொள்ளலாம்.இரண்டு நாளாக இந்தப் படலையின் படத்தைத் தேடியும் அது கிட்டவில்லை.அதனால் இப்படலையை நிச்சயமாக எங்கள் தேட்டங்களில் ஒன்றாக - பண்பாட்டுச் சின்னத்தில் ஒன்றாக கொள்ளலாம்.

அது எப்படி இருக்கும் என்றால் படலைக்கும் ஒரு வீடு இருக்கும். அதாவது இரட்டைப் படலை என்றால் அந்தப் படலைக்கு மேலே சிறு கூரையோடு கூடிய கிடுகினாலோ பனக்கார வீடென்றால் ஓட்டினாலோ வேய்ந்த கூரைப் பகுதி இடுக்கும்.அவை மழையில் இருந்தும் வெய்யிலில் இருந்தும் படலையை மட்டுமல்ல வழிப்போக்கரையும் காப்பாற்றும்.

முற்காலங்களில் அதன் அருகே குடி தண்ணீர் பானையில் வைக்கப் பட்டிருக்கும். மேலும் சில சுமை தாங்கிகளைக் கொண்டிருக்கும். அவை நடந்து போகும் வழிப் போக்கருக்கு நிழலையும் இளைப்பாறலையும் அளிக்கும்.

கூடவே தமிழரின் பண்பாட்டினையும் அது சொல்லி நிற்கும்.

அவை எல்லாம் இன்று அழிந்து வரலாற்று ஆவணங்களாகத் தன்னும் பார்க்க முடியாத நிலையில் போயிற்று.யாழ்ப்பாணத்து படலைகளின் அழகை தன்மையைக் கூறும் படங்கள் எதனையும் வலையிலும் காண முடியவில்லை.



(சங்கடப் படலை என்பது கிட்டத் தட்ட இது போல இருக்கும்.)இனி எவரேனும் தமிழ் பகுதிகளுக்குப் போனால் படலைகளையும் படம் எடுத்து வாருங்கள்.

அது பல கதைகள் பேசும் வரலாற்றுச் சின்னம்.