Author: geevanathy
•5:46 AM
நா.தம்பிராசா


திருகோணமலையின் வரலாறு அடங்கிய கல்வெட்டுக்களைத் தேடியலைந்து அவற்றைப்பற்றிய தகவல்களை உரியவர்களிடம் ஒப்படைத்து அக்கல்வெட்டுக்களிலுள்ள விபரங்களை மற்றவர்களும் அறியும் வண்ணம் பிரபலப்படுத்த பேருதவியாக இருந்தவர் திருகோணமலையின் வரலாற்று நாயகனாகிய எமது பெருமதிப்பிற்குரிய திரு.நா.தம்பிராசா அவர்களேயாகும்.



வரலாற்றை ஆராய்ந்த பல பேராசிரியர்களுக்கு இவர் பெரும் உதவியாக இருந்தார். 1970 ஆம் ஆண்டு தொடக்கம் தனது தாயாருடன் இணைந்து தமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை ஆவணப்படுத்தும் பெருங்கைங்கரியத்தில் ஈடுபட்டார். வரலாற்று ஆய்வை தனது மூச்சாகக் கருதியவர் திரு.நா.தம்பிராசா அவர்கள்.



கந்தளாய்க்கல்வெட்டு, பெரியகுளம் கல்வெட்டு, மாங்கனாய்க்கல்வெட்டு ,புல்மோட்டைக்கல்வெட்டு, பத்திரகாளியம்மன் கல்வெட்டு ,நிலாவெளிப்பிள்ளையார் கோயில் கல்வெட்டு, கங்குவேலிக்கல்வெட்டு ,தம்பலகாமம் ஐயனார்திடல் கல்வெட்டு, வில்லூண்டிக்கந்தசாமி கோயில் கல்வெட்டு ஆகியவை இவரது பெருமுயற்சி காரணமாக வரலாற்றுத்துறை நிபுணர்களான கலாநிதி.செ.குணசிங்கம் ,பேராசிரியர்.சி.பத்மநாதன் ,பேராசிரியர்.கா.இந்திரபாலா ஆகியோர்களால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு அரிய பல வரலாற்றுத் தடயங்களை உலகுக்கு அறிமுகம் செய்தன.



பத்தாம் நூற்றாண்டுக்குரியதாகக் கருதப்படும் நிலாவெளிக்கல்வெட்டிலேயே ‘திருகோணமலை’ என்ற சொல் முதன் முதலாக அறியப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. கலாநிதி திரு.கா.சரவணபவன் அவர்கள் ‘வரலாற்றுத் திருகோணமலை’ தொடர்பான ஆய்வுகளைச் செய்தபோது திரு.நா.தம்பிராசா அவர்களின் உதவி பெரிதும் பயன்பட்டதாகக் கூறப்படுகிறது.



வரலாற்றுத்துறை மட்டுமில்லாது தனது மனைவி மகேஸ்வரியுடன் இணைந்து திருகோணமலை ஆத்திமோட்டைத் தமிழ் வித்தியாலயத்தை ஆரம்பித்து வைத்த பெருமையும் இவரைச் சார்ந்தது. திருகோணமலையின் வரலாறு பற்றிய அவரது தேடல் இலங்கையில் மட்டுமல்ல வெளிநாட்டவர்களாலும் போற்றிப் பேசப்பட்ட ஒரு விடயமாகும்.



தான் பிறந்த மண்ணை தன் உயிரிலும் மேலாக நேசித்த அந்தப் பெருமகன் கடந்த 17.01.2013 இல் இயற்கை எய்தினார். அவரது மறைவு தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு மாபெரும் இழப்பாகும்.


வே.தங்கராசா.






Author: கானா பிரபா
•5:28 PM

யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகர் நல்லூர் (நல்ல ஊர்) என்று அழைக்கப்பட்டமை குறிப்பிடற்பாலது. இது தமிழகத்திலுள்ள இடமொன்றின் பெயராகும். தமிழகத்திலே ஆதிச்ச நல்லூர், சக்கரவர்த்தி நல்லூர், வெண்ணை நல்லூர், சேய் நல்லூர், வீரா நல்லூர், சிறுத்தொண்டர் நல்லூர், கடைய நல்லூர், சிங்க நல்லூர் முதலிய பல இடங்களுண்டு. இத்தகைய இடமொன்றிலிருந்து இங்கு வந்தோர் தமது தாயகப் பெயரை இப்புதிய இடத்திற்குச் சூடியிருப்பர். யாழ்ப்பாணத்திற்கு தெற்கே பூநகிரி, திருகோணமலை முதலிய இடங்களிலும் நல்லூர் என்ற பெயர் தாங்கிய ஊர் உண்டு.நல்லூரிலே உள்ள பழைய பிரதான சிவாலயங்களிலொன்று சட்டநாதர் ஆலயமாகும். தமிழகத்திலே திருஞான சம்பந்தர், முத்துத் தாண்டவர் முதலியோர் பிறந்த சீர்காழியிலும் சட்டநாதர் ஆலயமுண்டு என்பதும் இங்கு ஒப்பிட்டு நோக்கற்பாலது.

இவ்வாறு பலதிறப்பட்ட மூலாதாரங்களைப் பயன்படுத்தியே யாழ்ப்பாண அரசு குறிப்பாக அதன் தலைநகர் நல்லூர் பற்றி ஓரளவாவது அறியக்கூடியதாகவுள்ளது. ஏற்கனவே முக்கியத்துவம் வாய்ந்த ஒருபகுதியாயிருந்து சோழப் பேரரசு தொடர்ந்து ஏற்பட்ட பாண்டியப் பேரரசு ஆட்சிக் காலங்களிலே முக்கியத்துவம் பெற்ற நல்லூர், கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் உதயம் பெற்ற தமிழரசின் தலைநகராகச் சுமார் நான்கு
நூற்றாண்டுகளாக விளங்கியுள்ளது. இவ்வரசு இலங்கையிலுள்ள வட பிராந்தியத்திலுள்ள அரசு போலக் காணப்படினும், இதிலிருந்து ஆட்சி புரிந்த அரசர்கள் முழு இலங்கையிலும் தமது ஆதிக்கத்தை ஏற்படுத்த முயன்று வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்விராசதானி அமைந்திருந்த உண்மையான இடத்தையோ அல்லது அதன் விஸ்தீரணத்தையோ பூரணமாக அறியக் கூடிய அளவிற்குத் தொல்லியற் சான்றுகள் கிடைக்கவில்லை. கிடைத்த சான்றுகளை வைத்துக் கொண்டு நோக்கும் போது இவ்விராசதானி தற்போதய நல்லூர்க் கந்தன் ஆலயத்துக்கு முன்னால் உள்ள மூன்று மைல் சுற்றுவட்டத்தினுள் இருந்திருக்கலாம் என்று ஊகிக்க முடிகின்றது. இதன் எல்லைக்குள் வரலாற்றுப் பழமை வாய்ந்த கொழும்புத் துறையும், பண்ணைத் துறையும் அடங்குகின்றன.
இதை யாழ்ப்பாண வைபவமாலையில் வரும் ஆதாரங்களும் போர்த்துக்கீச ஆசிரியர்களின் குறிப்புக்களும் உறுதிப்படுத்துகின்றன.

இவ்விராசதானியின் அமைப்புப் பற்றி யாழ்ப்பாண வைபவ மாலையில் வரும் வர்ணனை இப்படிச் சொல்கின்றது.

"நாலு மதிலும் எழுப்பி வாசலும் ஒழுங்கா விடு
வித்து மாடமாளிகையும் , கூட கோபுரங்களையும்,
பூங்காவையும் பூங்காவன நடுவிலே
ஸ்நான மண்டபமும், முப்படைக் கூபமும் உண்
டாக்கி அக்கூபத்தில் ஜமுனா நதித் தீர்த்தமும்
அழைப்பித்துக் கலந்து விட்டு நீதி மண்டபம்
யானைப் பந்தி , குதிரை லயம், சேனா வீரரிருப்பிடம்
முதலியன கட்டுவித்து - கீழ் திசை வெயிலுகந்த
பிள்ளையார் கோயிலையும் தென் திசைக்குக்
கயிலாய பிள்ளையார் கோயிலையும், வட திசைக்குச்
சட்ட நாதர் கோயில் தையல் நாயகி
அம்மன் கோயில் சாலை விநாயகர் கோயிலையும்
அமைப்பித்தனர்"

நல்லூர் இராசதானி குறித்த சுருக்கமான அறிமுகமாக இப்பதிவு விளங்குகின்றது. தொடர்ந்து வரும் பிந்திய பகுதிகள் ஆழ அகலமாக இது பற்றி நோக்கவிருக்கின்றன.

மூலக்குறிப்புக்கள் உதவி: "யாழ்ப்பாண இராச்சியம்", தை 1992 - பதிப்பாசிரியர் கலாநிதி சி.க.சிற்றம்பலம்
புகைப்படம்: 2005 ஆம் ஆண்டு யாழ் சென்றிருந்த போது என்னால் எடுக்கப்பட்டது.