Author: geevanathy
•5:46 AM
நா.தம்பிராசா


திருகோணமலையின் வரலாறு அடங்கிய கல்வெட்டுக்களைத் தேடியலைந்து அவற்றைப்பற்றிய தகவல்களை உரியவர்களிடம் ஒப்படைத்து அக்கல்வெட்டுக்களிலுள்ள விபரங்களை மற்றவர்களும் அறியும் வண்ணம் பிரபலப்படுத்த பேருதவியாக இருந்தவர் திருகோணமலையின் வரலாற்று நாயகனாகிய எமது பெருமதிப்பிற்குரிய திரு.நா.தம்பிராசா அவர்களேயாகும்.



வரலாற்றை ஆராய்ந்த பல பேராசிரியர்களுக்கு இவர் பெரும் உதவியாக இருந்தார். 1970 ஆம் ஆண்டு தொடக்கம் தனது தாயாருடன் இணைந்து தமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை ஆவணப்படுத்தும் பெருங்கைங்கரியத்தில் ஈடுபட்டார். வரலாற்று ஆய்வை தனது மூச்சாகக் கருதியவர் திரு.நா.தம்பிராசா அவர்கள்.



கந்தளாய்க்கல்வெட்டு, பெரியகுளம் கல்வெட்டு, மாங்கனாய்க்கல்வெட்டு ,புல்மோட்டைக்கல்வெட்டு, பத்திரகாளியம்மன் கல்வெட்டு ,நிலாவெளிப்பிள்ளையார் கோயில் கல்வெட்டு, கங்குவேலிக்கல்வெட்டு ,தம்பலகாமம் ஐயனார்திடல் கல்வெட்டு, வில்லூண்டிக்கந்தசாமி கோயில் கல்வெட்டு ஆகியவை இவரது பெருமுயற்சி காரணமாக வரலாற்றுத்துறை நிபுணர்களான கலாநிதி.செ.குணசிங்கம் ,பேராசிரியர்.சி.பத்மநாதன் ,பேராசிரியர்.கா.இந்திரபாலா ஆகியோர்களால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு அரிய பல வரலாற்றுத் தடயங்களை உலகுக்கு அறிமுகம் செய்தன.



பத்தாம் நூற்றாண்டுக்குரியதாகக் கருதப்படும் நிலாவெளிக்கல்வெட்டிலேயே ‘திருகோணமலை’ என்ற சொல் முதன் முதலாக அறியப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. கலாநிதி திரு.கா.சரவணபவன் அவர்கள் ‘வரலாற்றுத் திருகோணமலை’ தொடர்பான ஆய்வுகளைச் செய்தபோது திரு.நா.தம்பிராசா அவர்களின் உதவி பெரிதும் பயன்பட்டதாகக் கூறப்படுகிறது.



வரலாற்றுத்துறை மட்டுமில்லாது தனது மனைவி மகேஸ்வரியுடன் இணைந்து திருகோணமலை ஆத்திமோட்டைத் தமிழ் வித்தியாலயத்தை ஆரம்பித்து வைத்த பெருமையும் இவரைச் சார்ந்தது. திருகோணமலையின் வரலாறு பற்றிய அவரது தேடல் இலங்கையில் மட்டுமல்ல வெளிநாட்டவர்களாலும் போற்றிப் பேசப்பட்ட ஒரு விடயமாகும்.



தான் பிறந்த மண்ணை தன் உயிரிலும் மேலாக நேசித்த அந்தப் பெருமகன் கடந்த 17.01.2013 இல் இயற்கை எய்தினார். அவரது மறைவு தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு மாபெரும் இழப்பாகும்.


வே.தங்கராசா.






Author: geevanathy
•7:10 PM
திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூன்று பற்றுக்களில் மத்திய பற்றான தம்பலகாமத்திலிருந்து கிழக்கே எட்டு மைல் தூரத்திலுள்ளது ஆலங்கேணி என்னும் அருமையான கிராமம். ஒரு மணல் பிரதேசமாக இந்த ஊர் காணப்படுகிறது.  “ஆலங்கேணி மணல்” என்பது இப்பிரதேசத்தில் மிகவும் பிரசித்தமான ஒரு விடயமாகும்.


தொழில் செய்ய முடியாத நிலப்பகுதி என்று கூடக் கூறலாம். ஆனால் பாட்டாளிகளான இவ்வூர் மக்கள் தங்களுக்கென ஒரு தொழிலை சிருஸ்டித்து ஓயாமல் உழைத்துத் தங்கள் வாழ்வை வளமாக்கிக் கொண்டது குறிப்பிடத் தக்கதாகும். இந்தக் கிராமத்தில் ஒரு பெரிய ஆலமரமும் அதனருகே தாமரைக்கேணியும் இருப்பதால் காரணப் பெயராக “ஆலங்கேணி” என்று பெயர் அமைந்ததாகக் கருதப்படுகிறது.

Alenkerny


இங்கு ஏறக்குறைய எண்ணூறு குடும்பங்கள் வரை வாழ்கின்றனர்.  இவர்கள் அனைவரும் தமிழர்கள். வடக்கே உள்ள கிண்ணியாவிலிருந்து வீதிகளில் கல்பரப்பி ஆலங்கேணி மணலை அடக்கி வடக்குத் தெற்காக வீதிகள் செப்பனிடப்பட்டுள்ளன. ஆலங்கேணியின் முகப்பில் ஒரு விநாயகர் ஆலயம் வழிபாட்டுத் தலமாக உள்ளது.


ஆலங்கேணி , தாமரைக்கேணி, ஈச்சந்தீவு என மூன்று பிரிவாக இந்தக் கிராமம் அமைந்துள்ளது. ஆலங்கேணியின் பிரதான வீதியில்  விநாயகர் அரசினர் தமிழ் மகா வித்தியாலயமும்  ஈச்சந்தீவில்  விபுலானந்தர் வித்தியாலயமும் அமைந்துள்ளன.மற்றும் உப அஞ்சல் நிலையம், கூட்டுறவுச் சங்கம், சனசமூகநிலையம் போன்ற பல அமைப்புகள் இருக்கின்றன.


ஆலங்கேணியைச் சுற்றிச் சூழ முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் ஊர்களே காணப்படுகின்றன. ஆலங்கேணிக்கு வடக்கே பெருந்தொகையாக முஸ்லிம் மக்கள் வாழும் கிண்ணியாப் பட்டினமும் கிழக்கே உப்பாறு தென்மேற்குத்திசையில் பூவரசந்தீவு, நெடுந்தீவு ,சமாவைத்த தீவு மேற்கே முனையிற்சேனை ,கச்சைகொடித்தீவு ,காக்காமுனை ,சூரங்கல் போன்ற இடங்கள் காணப்படுகின்றன.


ஆலங்கேணிக்கு தென்மேற்கே ஏழு மைல் தூரத்தில் தமிழ்ச் சைவர்கள் அடர்த்தியாக வாழ்ந்த திருநகரில் ''பாண்டியனூற்றுச் சிவாலயம்'' அதற்கண்மையில் “பாவநாசத் தீர்த்தம்” போன்றவைகள் இன்று அழிந்த நிலையில் காணப்படுகின்றன. பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்புடைய மாரி வயல்களை தன்னகத்தே கொண்ட இந்தத் திருநகர் இன்று திரிபடைந்து “தீனேரி” என அழைக்கப்படுகிறது அந்த திருநகர் அழிந்தபோது அங்கு வாழ்ந்தவர்களில் ஒரு சிறு தொகையினரே ஆலங்கேணியில் குடியேறி வாழ்ந்து வருவதாக ஐதிகம்.



ஆலங்கேணியில் வாழும் ஆண்கள் ஆஜானுபாகுவாக நல்ல திடகாத்திரமான தேக அமைப்பு உடையவர்களாகவும் காணப்படகின்றனர். பெண்கள் மெல்லியராயினும் சுறு சுறுப்புடையவர்கள்.தங்கள் வாழ்விடம் கடல் நீரால் சூழப்பட்டு பயிரிட்டுத் தொழில் செய்ய வாய்ப்பற்றதாக இருக்கிறதே என்று இம்மக்கள் சோம்பியிராமல் “முயற்சி திருவினையாக்கும்”என்ற வள்ளுவப் பெருந்தகையின் பொய்யாமொழியைக் கருத்தில் கொண்டு ஆலங்கேணி மக்கள் தமக்கென ஒரு தொழிலை சிருஷ்டித்துக் கொண்டனர். அந்தத் தொழில் அபாயம் நிறைந்த கஷ்டமான தொழிலாயினும் அவர்கள் தயங்கவில்லை. தொடர்ந்து செய்து தங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொண்டனர்.



தெற்கே ‘கொய்யாம்புளி’ என்ற கடலாற்றைத் தோணியில் கடந்து ‘கண்டக்காடு’என்ற மாரி வயல் வெளிகளையும் கடந்து ‘சாந்தப்பணிக்கன்’ என்னும் கானக நுழை வாயிலூடாக வானைத்தொட்டு நிற்கும் மராமரங்கள் அடர்ந்த காட்டில் எட்டுமைல் தூரம் நடந்து மகாவலிகங்கைக் கருகில் ‘வாளைமடு’’வண்ணாத்திபாலம்” போன்ற காட்டுப்பிரதேசங்களைக் கடந்து கங்கையோரம் உள்ள ‘பொன்னாங்கேணி’ப் பிரதேசத்தில் எருமை பசு மந்தைகளை வைத்துப் பாதுகாக்கும் வருவாய் மிக்க தொழிலை உருவாக்கிக் கொண்டனர்.


புத்திசாலிகளான இவர்கள் திருகோணமலைக்கு கொண்டுபோய் பால் விநியோகம் செய்யும் வியாபாரத்தை தொடங்கியதும் இத்தொழில் பெரும் இலாபகரமாக மாறியது.‘காவு’தடிகளில் பாற்குடங்களை வைத்துச் சுமந்து நடந்து கிண்ணியாவுக்கூடாக ‘நீரோட்டுமுனை’ என்னும் கடலாற்றைக் கடந்து ‘வெள்ளைமணல்’சீனன்வாடிக்கூடாக திருகோணமலை நகருக்குச் சென்று அங்குள்ள கடைகளுக்கு பால் தயிர் நெய் போன்ற பொருட்களை விற்றுவந்தனர்.


இந்தக் கடினதொழில் தினமும் தவறாமல் நடந்தது. இன்று வாகனங்கள் மூலமாக இலாபகரமாக நடக்கும் பால் வியாபாரத்தை திருகோணமலை மாவட்டத்திற்கு அறிமுகப்படுத்தியவர்கள் ஆலங்கேணி மக்களேயாவர். இந்தக் கடினதொழில் மூலம் ஆலங்கேணியில் வாழும் சிலர் மாட்டு மந்தைகளின் சொந்தக்காரம்களாகவும் செல்வந்தர்களாகவும் விளங்கி வந்தனர். காலப் பொக்கில் கங்கையோரக் காடுகளை அழித்து நெல் வயல்களாகவும் கத்தரி ,மிளகாய் பயிரிடும் காணிகளாகவும் பயன்படத்தினர். இயந்திரங்களால் நீர் இறைத்து தோட்டப்பயிர்களும் நெல்லும் அமோகமாக விளையச் செய்தனர்.


ஆலங்கேணியில் பாடசாலைகள் குறைவாக இருந்த போதிலும் இம்மக்கள் கற்றலிலும் அரிய சாதனைகளைப் புரிந்துள்ளனர். அரச திணைக்களங்களில் இம்மக்களில் கணிசமான தொகையினர் பொறுப்பான பதவிகளை வகித்து வருகின்றனர். கலை கலாச்சார நிகழ்ச்சிகளிலும் ஈடுபாடு உடையவர்களாகவும் காணப்படுகின்றனர். புகழ் பெற்ற காவியமாகிய இராமாயணத்தை ‘இராமநாடகம்’ என்ற பெயரில் பழக்கி நாட்டுக் கூத்தாக மேடையேற்றியுள்ளனர். ‘அல்லி அர்ச்சுனா' போன்ற நாடகங்களும் அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளன,


குமாரவேல் போன்ற பிரசித்த ஆயுள்வேத வைத்தியர்களும் சோதிட சாஸ்திர வல்லுனர்களும் தேர்ந்த அண்ணாவிமார்களும் ,கவிஞர்களும் ஆலங்கேணியில் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. தாமரைத்தீவான், கேணிப்பித்தன் ,கௌரிதாசன் ,தங்கராசா ,தவராசா, யோகேஸ்வரன், சுந்தரம் போன்றோர் இவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள்.


‘ஆலையூரான்’என்ற புனைப்பெயரில் எழுதிய அமரர் திரு.க.தங்கராசா அவர்கள் திருகோணமலை வலயக் கல்விப்பணிப்பாளராக் கடமையாற்றியவர். நாடறிந்த நல்ல எழுத்தாளர்.இதே போல ‘கேணிப்பித்தன்’ என்ற புனைப்பெயரில் எழுதும் திரு.எஸ்.அருளானந்தம் அவர்கள் வடக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் உதவிக்கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றியவர். சிறுவர் இலக்கிய முன்னோடியாகத் திகழ்பவர். இதுவரை எழுபது நூல்களுக்கு மேல் வெளியீடு செய்துள்ளார்.



திருபத்தினியர், திரு.தாமோதரம்பிள்ளை போன்ற அண்ணாவிமார்கள் இங்கே நாடகங்களைப் பழக்கி மேடையேற்றி மக்களின் அமோக ஆதரவைப் பெற்றனர். தம்பலகாமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மாபெருங் கலைஞரான திரு.க.கணபதிப்பிள்ளை அண்ணாவியார் இங்கு வந்து நாடகங்களை நெறிப்படுத்தி மேடையேற்றி பெரும் புகழ் பெற்றதை இங்குள்ள பெரியார்கள் நினைவுபடுத்திக் கூறுகின்றனர்.


சீனடி விளையாட்டு என்னும் தற்காப்புக் கலையை பயின்றவர்களும் இங்கு அதிகமாக உள்ளனர். தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரப் பெருமானிடம் நீங்காத பத்திகொண்ட ஆலங்கேணிமக்கள் ஆலயத்தில் கொடியேற்றவிழா தொடங்கிய நாளிலிருந்து பெரும்பாலோர் புலால் உணவை நீக்கி விரதம் இருந்து ஒவ்வொரு விழாவுக்கும் வண்டிச் சவாரியாக மனைவி மக்களுடன் சென்று திரும்புவார்கள். பதினாலாம் நாள் கதிர்காம ஸ்வாமி எழுந்தருளும் விழாவன்று மேள தாளசீர்களுடன் எட்டு மைல்களையும் கால் நடையாக நடந்து நேர்கடன் செலுத்துவது ஆலங்கேணி மக்களின் பக்திச் சிறப்புக்குச் சான்றாகவுள்ளது.



இப்படி ஆலங்கேணி மக்கள் எல்லாத்துறைகளிலும் முன்னெறிக் கொண்டிருந்த வேளையில் ‘வெண்ணை திரளும்போது தாழி உடைந்தது போல’ 1990 ஆம் ஆண்டுகாலப் பகுதிகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட கலகங்களின் உச்சநிலையால் உயிரிழப்பு பொருள் இழப்பு என்று எல்லா நலன்களும் அழிந்து இழந்து அகதிகளாகி ஐந்தாண்டுகாலம் வரை ‘கிளப்பன் வேக்’என்ற அகதிமுகாமில் தங்கியிருந்து, உடைந்து தகர்ந்து கிடந்த தங்கள் ஊரான ஆலங்கேணியில் மீளக்குடியேறினர்.



தம்பலகாமம் க.வேலாயுதம்.
(1997)




தொடர்புடைய பதிவுகள் 


1. ச.அருளானந்தம் / கேணிப்பித்தன்
2. தாமரைத்தீவான்



Author: ஜேகே
•7:44 PM


“சும்மா போ அன …இனி வெறுங்கல்லு .. என்னால தோண்ட ஏலாது”
“என்ற அச்சா குஞ்சல்லோ, இன்னும் ரெண்டு அடி தான் .. தோண்டினா .. குத்தி போட்டு மண்மூடை அடுக்கலாம்”
“அப்ப பின்னேரம் லலித்தொட கிரிக்கட் விளையாட விடுவியா?”
“சரி என்னத்தையும் போய் விளையாடு .. இப்ப இத கிண்டு”

அம்மா கிரிக்கட் விளையாட பெர்மிஷன் தந்த சந்தோசத்தில் போட்ட பிக்கான் கொஞ்சம் ஆழமாகவே விழ, யாழ்ப்பாணத்து கல்லு “நங்” என்று சத்தம் போட்டது. கொஞ்சம் கையால் மண்ணை கிளறி, கல்லை க்ளீன் பண்ணிவிட்டு, மீண்டும் சரியான கொட்டு பார்த்து பிக்கான் போட்டேன். சர்க்கென்று பிக்கான் இறங்க, நான் பிடியை ஒரு எம்பு எம்ப சர்ர்க்க்க்க் என்று இன்னொரு சத்தம்.

பிக்கான் மரப்பிடி முறிந்துவிட்டது!


என்னடா இது சிறுகதை போலே ஆரம்பிக்கிறேன் என்று நினைக்கவேண்டாம். ஈழத்தில் பிக்கான் போட்டு கைப்பிடி முறிச்ச அனுபவம் உங்களுக்கு இருக்கலாம். வாழை அடிக்கிழங்கு எல்லாம் கிளறி கிளீன் பண்ணும்போது, முறிஞ்சு போன அனுபவம் இருக்கா? பிடி என்னதான் ஸ்ட்ராங்கா இருந்தாலும், விஷயம் தெரியாமல் தெண்டிவிட்டீர்கள் என்றால் கதை சரி. .. ஆ அப்பு.. இந்த மரப்பிடி எப்பிடி செய்யிறது என்றதும் சொல்லவேண்டும். கொடாரிப்பிடியை எல்லாம் கொல்லைப்புறத்து காதலியா தனியா எழுத முடியாது. பிறகு என்னையும் கொடாறிக்காம்பு என்று சொன்னாலும் சொல்லிடுவாங்கள் இல்லையா!

கோடாலி, பிக்கான், மண்வெட்டி போன்றவற்றுக்கு மரப்பிடி செய்வது பூவரசு மரத்தில் இருந்து தான். இடியப்ப உரல், நல்ல மாட்டுவண்டில் அச்சு எல்லாம் பூவரசு மரத்தில் இருந்து செய்யப்படுவதே. மரம் பார்த்தால் நோஞ்சான் மாதிரி இருக்கும். ஆனால் ஊரில கதியால்(வேலி) அடைக்கும்போது முக்கிய பாயிண்டுகளில் எல்லாம் பூவரசு தடி தான் நடுவார்கள். அதுவும் அடைக்க தெரியாமல் அடைத்தால், மரம் சரிஞ்சு வளர்ந்து மற்றவன் காணிக்குள் தலை எட்டிப்பார்த்து, யாழ்ப்பாணத்தில் பல வேலிச்சண்டைகளை ஊதிபெருப்பித்த பெருமை இந்த பூவரசுக்கு உண்டு. காய வச்சு அடுப்பெரிச்சா கொஞ்சம் புகைச்சலாக எரியும்! இலையை சுருட்டி பீப்பீ ஊதலாம். கொஞ்சம் பெரிய இலை புடுங்கினால், வைரவர் கோவிலில் பிரசாதம் கொடுக்கலாம். ஊர்க்கோவில்களில் வெற்றிலை கட்டுப்படியாகாத காலத்தில் வீபூதி சந்தனம் சுருட்டிக்கொடுப்பதும் இதில் தான். பூவரசுக்கு அப்படி ஒரு ஹிஸ்டரி இருக்கு! அந்த மரத்தில் இருந்து தான் நல்ல பழுத்த கொப்பாக பார்த்து வெட்டி, நெருப்பு தணலில் முதல்ல போட்டு சுடுவார்கள். ஒரு பொன் நிறத்தில் எரிந்து வரும்போது, தோலை கீறி, மரவேலை செய்யும் தொழிலாளர்களிடம் கொடுத்து சீவி எடுத்து, மண்வெட்டி, பிக்கான் கோடாலிக்கு பிடி போட்டால், சிங்கன் அசையாமல் இருப்பார்!

இப்பிடி கனகசபை தாத்தா ஊரில் இருந்து செய்துகொண்டு வந்த பிடி தான் அன்றைக்கு முறிஞ்சு போய்விட்டது. அம்மாவை பாவமாய் பார்த்தேன். அம்மா நெருப்பு எடுக்க போகிறார் என்று பயம். ஆனால், அவ சோட்டியை கொஞ்சம் உயர்த்தி செருகிக்கொண்டே, “சும்மா படிச்சு படிச்சு உடம்பு பூளை பத்திப்போய் கிடக்கு, ஒழுங்கா குனிஞ்சு நிமிர்ந்து ஒரு வேலை செய்ய தெரியாது” என்று திட்டியவாறே, அங்கே இங்கே கிடந்த சின்ன சின்ன விறகு காம்புகளை எடுத்து பிக்கான் ஓட்டையில் சக்கை வைத்து, மீண்டும் பிடியை, பிடரிப்பக்கமாக சுவரில் நாளு அடி நன்றாக அடித்து இறுக்கி தந்தார். இப்போது கூட நான் இதை எழுதிக்கொண்டு இருக்கும்போது ஒரு ப்ளேன்டீ போட்டுக்கொண்டு வந்து தந்துவிட்டு, நேற்றைக்கு “Yarl IT Hub”, இன்றைக்கு “கொல்லைப்புறத்து காதலியா” என்று சொல்லிக்கொண்டே அதே மாதிரி மனசுக்குள் திட்டியிருக்கவேண்டும். கேட்கவில்லை அம்மா!

எங்கள் வீட்டு சாமியறை. பிள்ளையார், முருகன், லட்சுமி, சரஸ்வதி, நயினை நாகபூஷணி அம்மன், குட்டி சிவலிங்கம், மன்னார் அன்ரி தந்த மடு மாதா சிலை, வீட்டு குடிபூரலுக்கு யாரோ உபயம் செய்த ஓம் சரவணபவ எழுத்து போட்ட மிகப்பெரிய முருகன் படம், பிருந்தாவனத்து கிருஷ்ணன், சின்ன இயேசு படம், சிவனே என்று உட்கார்ந்து இருக்கும் புத்தர் சிலை என்று ஒரு தட்டு பூரா கடவுள்கள். ஸ்பெஷலாக லட்சுமி, முருகன், பிள்ளையார் படங்களுக்கு மட்டும் வண்ண வண்ண பல்புகள் மேலே எரியும். எங்கள் வீடு என்று இல்லை, யாழ்ப்பாணத்தில் எந்த வீட்டிலும் இப்படி தான் கடவுள்கள். பல்ப் வாங்கிக்கொண்டு இருந்தார்கள்! மேல் தட்டில் சாமிகள் இருக்க, கீழே மிக நீளமான ஒரு நிலக்கீழ் சீமந்து கிடங்கு அந்த அறையில் இருந்தது. சாமான்கள் வைப்பதற்காக அது அமைக்கப்பட்டிருக்கவேண்டும். 85, 86 களில் எல்லாம் சண்டைகள் நடக்கும் நேரம் நாங்கள் எல்லாம் அந்த கிடங்குக்குள் போய் பதுங்கிக்கொள்ளுவோம். முதல் காதலி போல் முதல் பங்கர் அது. பயந்து பதுங்கிய காலம் இன்னமும் ஞாபகம் இருக்கிறது! மேலே கடவுள்களை தாண்டி குண்டு விழாது என்று கொழும்பர் மாமிக்கும் பெரும் நம்பிக்கை. வீட்டுக்கு பங்கர் தேவையில்லை. அது போதும் எண்டு சொல்லிவிட்டார்.

இந்தியன் ஆர்மி டவுன் பக்கம் மூவ் பண்ணிக்கொண்டு இருக்கு. எங்கள் சாமியறை கிடங்கு இந்தியாவின் அடிக்கு தாக்குப்பிடிக்காது என்று இயக்கத்தில இருந்த சொந்தக்கார அண்ணா ஒருவர் சொல்லிவிட, இப்போதெல்லாம் குண்டடிக்க நாங்கள் ஓடுவது பாத்ரூமுக்கு தான். எங்கள் வீட்டு பாத்ரூமுக்கு மேலே பெரிய தண்ணீர் தாங்கி இருக்கிறது. கொங்கிரீட். ஷெல் விழுந்தாலும் துளைத்துக்கொண்டு வராது. பாதுகாப்பு. தூக்கம் வந்தால் கொஞ்சம் சாய்ந்தும் தூங்கலாம். சாமியறை கிடங்கு போதாது. பாத்ரூம் .. பயத்தில மணம் எல்லாம் பெரிசா இருக்காது.

அப்பாவின் நண்பர் ஒருவர். அவர் டீச்சர். சுதுமலையில் வசித்தவர். ஒருநாள் குண்டு அடித்துக்கொண்டு இருக்கும் போது அவர் வீட்டு பாத்ரூமில் பதுங்கியிருக்க, குண்டு வீட்டின் மேல விழுந்துவிட்டது. ஸ்பாட்டில் ஆள் க்ளோஸ். நிலநடுக்கம் வந்தால் வீட்டை விட்டு வெளியே ஓட வேண்டுமாம். இல்லாவிடில் நேரிசல்களுக்குள் சிக்கி செத்துவிடுவோமாம். அந்த அங்கிளும் அப்பிடி தான் நெரிசலில் இறக்க, அடுத்தவாரமே எங்கள் வீட்டு முன் வளவில் பங்கர் வெட்ட முடிவானது!


எங்கள் வீட்டுக்கு வந்து இருக்கிறீங்களா? வீட்டுக்கு முன்னாலே ஒரு பரப்பு காணி. பூங்கன்று தான் முழுக்க இருக்கும். நந்தியாவட்டை, நாகமணி, செவ்வரத்தை, ரோசா, தியத்தலாவ என்ற மலைக்கிராமத்தில் இருந்து அம்மா கொண்டு வந்து வைத்த பார்பட்டன்ஸ் என்று விதம் விதமாக பூத்து தொங்கும். கிணற்றடியில் ஒரு செவ்வரத்தை, மொத்தமா எட்டு ஒட்டு அம்மா ஒட்டியிருப்பார். எட்டு கலர்ல பூ பூத்திருக்க சுற்று வட்டாரத்தில இருந்தவங்க எல்லாம் வந்து பார்த்துவிட்டு போவார்கள். கம்பஸ் பக்கத்தில பூக்கன்று வீடு என்று சந்திக்கடையில கேட்டால் சேவயர்(surveyor) வீட்டை உடனே காட்டுவார்கள். பேபி ஸ்டூடியோ அங்கிள் கொடாக் பிலிம்ல போட்டோ எல்லாம் எடுத்து தன் கடையில் மாட்டி வைத்தார். சுரேஷ் அண்ணா உதயனுக்கும் அறிவிப்போம், வந்து படம் பிடிப்பார்கள் என்றார். ஆனா அடுத்த மாசம் தானே இந்தியன் ஆர்மி இறங்கீட்டுது அங்க!

பங்கர் வெட்டுவதற்கு தோதான இடம் பார்க்கவேண்டும். தொலைவிலையும் இருக்க கூடாது. கக்கூசுக்கு கிட்டவும் இருக்கக்கூடாது. கீழால பைப் லைன் இருந்தாலும் கவனிக்கோணும். கிணத்தடி கடைசியா தெரிந்தெடுக்கப்பட்டது. செவ்வரத்தைக்கு பக்கத்தால பங்கர். அது பெரிய மரம், பக்கத்தில ஒரு எலுமிச்சையும் நின்றது. மேலால பொம்மரில இருந்து பார்த்தா கண்டு பிடிக்கேலாது. முதல் பங்கர் வெட்டியாச்சு. வெட்டினது ஞாபகம் இல்லை. ஆனா ஒருக்கா ரெண்டு தரம் பங்கருக்க இருந்தது ஞாபகம் இருக்கு. கொஞ்ச நாள் தான். இந்தியன் ஆர்மி யாழ்ப்பாணத்தை பிடிச்சிட்டான். எங்கட முன் வீட்டில இந்தியன் ஆர்மி காம்ப் வந்தது. பங்கர் இருக்கிறது தெரிஞ்சா சிக்கல் எண்டு அப்பா குப்பையை போட்டு மூடிப்போட்டார்.

மூண்டு வருஷங்கள் பங்கர் இல்லாத வீடு. இந்தியன் ஆர்மியை இப்போது ஒரு வழியா கப்பலில் அனுப்பியாயிற்று. கொஞ்ச நாள் யாழ்தேவி ட்ரெயின் எல்லாம் இலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கும் ஓட ஆரம்பித்துவிட்டிருந்தது! கரண்ட் கூட அவ்வப்போது லக்ஸபானாவில் இருந்து விசிட் பண்ணும். திடீரென்று ஒரு நாள் அறுவாங்கள் சண்டையை தொடங்கிவிட, இப்போதெல்லாம் அடிக்கடி பொம்பர் விசிட் பண்ண ஆரம்பித்தது. கையோடு கோட்டை பிரச்சனை ஆரம்பிக்க, இளம் ஆட்கள் எல்லொரும் இயக்கப்பாட்டு பாடிக்கொண்டே முற்றவெளி ஏரியாவில் பங்கர் வெட்ட போயிட்டு வருவார்கள். சிலநேரங்களில் திரும்பி வராமலேயே இருந்துவிடுவார்கள். சில நேரம் பிரேதம் மட்டும் வரும்.

இப்ப இயக்கம் யாழ்ப்பாணத்தை வைத்திருக்கிறது. அப்போது நிதர்சனம் என்று இயக்கத்தின் தொலைகாட்சி இருந்தது. அதன் அலுவலகம் எங்கள் வீட்டுக்கு முன்னால். முன் வீடு ஒரு புரோக்டர் வீடு. அவர் குடும்பம் எப்பவோ ஆஸ்திரேலியாவுக்கு எஸ்கேப். அதனால் தான் முதலில் இந்தியன் ஆர்மி அந்த வீட்டில் காம்ப் போட்டது. அவர்கள் போக நிதர்சனம் காம்ப் வந்துவிட்டது. முன்னுக்கு நிதர்சனம் காம்ப் என்பதால் பொம்மர் குண்டு போடும்போது காம்பில் விழாமல் சுற்றுவட்டாரத்தில் தானே விழும்! அத்தனை வீடுகளும் பங்கர் வெட்ட ஆரம்பிக்க, அது ஒரு முஸ்பாத்தி என்றால் முஸ்பாத்தி தான் போங்கள்.

பங்கர் வெட்டுவது என்பது கிட்டத்தட்ட நவராத்திரிக்கு கொலு வைப்பது போல. வீட்டுக்கு வீடு அப்போது பங்கர் வெட்டுவார்கள். ஒரு “ட” எழுத்து வடிவில் அநேகமான பங்கர்கள் இருக்கும். சில பெரிய பங்கர்கள் “ப” வடிவில் இருக்கும். சும்மா ஒன்றுமே இல்லாமல் டப்பா “I” வடிவ பங்கர்களும் சிலர் வெட்டுவதுண்டு. யார் வீட்டில் ஆழமான பங்கர் என்பதில் தான் போட்டியே. எங்கள் ஊர் திருநெல்வேலி, கொஞ்சம் தோண்டினா கல்லு வர தொடங்கிவிடும். இரண்டு அடிக்கு பிறகு பிக்கான் போட வேண்டும். நான்கடியில் ஆப்பு வைத்து வெட்டவேண்டும். அதனால் போட்டியில் எங்கள் வீடு எப்போதுமே பின் தங்கி விடும். அன்ரி ஒருவரின் வீட்டு பங்கரில் ஆள் ஒருவர் குனியாமல் நிற்கலாம்.

நிதர்சனம் காம்ப் முன்னுக்கு வந்தது என்று சொன்னேன் இல்லையா. இப்போது கிணற்றடியில் பங்கர் வெட்டுவது பொம்மர் காரனுக்கு அல்வா எடுத்து வாயில் வைப்பது போல. போட்டான் என்றால் அடுத்த நிமிஷம் அடுத்த பிறவியில், யாரேனக்கு அப்பனோ, அவன் குழைந்தையை எடுத்து கொஞ்சிக்கொண்டு “ஜேக் சுள்ளி” என்று பெயர் வைத்திருப்பான். நல்ல காலம் நாங்கள் வீட்டுக்கு பின்னால் பங்கர் வெட்ட முடிவு செய்ததால் இன்னமும் ஜேக் ஜெகேயாகவே இருக்கிறான்!


எங்கள் வீட்டுக்கு பின்னால் ஒரு விலாட்டு மாமரம். அதற்கு அடியில் தான் பங்கர் வெட்ட ஆரம்பித்தோம். பங்கர் வெட்ட ஆட்கள் பிடிப்பது கஷ்டம். கூலியும் ப்ளேன் டீயும் குடுத்து மாளாது. நாங்களே வெட்டினோம். பக்கத்துவீட்டுக்காரரும் உதவி செய்தார்கள். எங்கள் சுற்று வட்டாரத்தில் உள்ள நான்கைந்து குடும்பங்களுக்கு ஒரு பங்குக்காணியும் கிணறும் இருந்தது. அந்தக்காணியில் மூன்று உயர்ந்த தென்னை மரங்கள். மரங்களில் காய்க்கும் தேங்காய் கூட எல்லோருக்கும் பங்கு தான். ஆனால் இரவிலே எத்தனையாவது சாமத்தில் இருந்தாலும், அந்த மரங்களில் இருந்து தேங்காய் விழுந்தால், தொப் என்று சத்தம் கேட்கும். எல்லா வீட்டுக்காராரும் அலறிப்பதைத்துக்கொண்டு இரவோடி இரவாக ஓடுவார்கள், தேங்காய் பொறுக்க. தேங்காய்க்கு பங்கில்லாதவன் முதல் ஓடுவான்! அப்படி ஒரு ஒற்றுமையான பங்கு காணி அது. இப்போது பங்கருக்கு மேலே போட்டு மூட தென்னங்குற்றி வேண்டும் என்பதால் எல்லா குடும்பங்களும் ஒத்துக்கொண்டு அந்த தென்னைகளை வெட்ட முடிவு செய்தோம். குற்றிகளை பங்கு பிரிப்பதில் கூட போட்டி தான். அடிக்குற்றி கொஞ்சம் ஸ்ட்ராங் இல்லையா. அதுக்காக சண்டை பிடிப்பார்கள். இதெல்லாம் என்னுடைய அடுத்த கதையில் சொல்கிறேன். இப்போது மாட்டருக்கு வருவோம்.

பங்கர் வெட்டி, குற்றி அடுக்கி, அதற்கு மேல் உரப்பை (போரை பாக்) யில் குரு மணல் நிரப்பியாச்சு. குருமணல் என்று சொல்வது கடற்கரை மணல். ஷெல் விழுந்தால் சரக்கென்று இறங்கி சிக்கிப்போய் நிற்கும். வெடிக்காது. சும்மா களிமண் போட்டு நிரப்பினா, கட்டி பட்டுப்போய், ஷெல் மூடையில் விழுந்த உடனேயே வெடித்துவிடும். இதெல்லாம் யாழ்ப்பாணத்து விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள். விஞ்ஞானி என்றால் அப்துல்கலாம் மாதிரி அணுகுண்டு எப்படி செய்யவேண்டும் என்று கண்டுபிடிக்க தேவையில்லை. அணுகுண்டு போட்டால் எப்படி தப்புவது என்று கண்டுபிடிப்பவனும் விஞ்ஞானி தான். ஏனோ தெரியாது அவர்களை உலகம் கொண்டாடுவதில்லை!

பங்கர் ரெடி. இப்போது இண்டீரியர் டிசைன் செய்யவேண்டும். சும்மா போய் பதுங்கி இருக்கும் பங்கர் தான்.ஆனால் அதற்குள் நிறைய விஷயம் இருக்கு. பங்கர் சுவரில் கிழக்கே பார்க்கும் வண்ணம் சதுரவடிவ அரை அடிக்கு அரை அடி, குட்டி பொந்து ஒன்று போட வேண்டும். அங்கே ஓரு பிள்ளையார் சிலை, உங்கள் ஊர் கோயில் கடவுள் படம். மடு மாதா, நல்லூர் கந்தன் படம் என் ஒரு மினி சுவாமி வைப்போம். அம்மா காலையில் சாமிக்கு பூ ஆய்ந்து வைக்கும்போது, பாவம் பங்கருக்குள்ளும் இறங்கி இரண்டு பூக்கள் வைத்து கும்பிடுவார். கோயிலில் இருக்கும் கடவுள்களை விட பங்கருக்குள் இருக்கும் கடவுள்களை தனியாக கவனிக்கவேண்டும். இல்லாவிடில் பாவம் நாங்கள், கடவுள்கள் கைவிட்டு விடுவார்கள்.

பங்கரில் அதேபோல இன்னொரு பொந்து வைத்து, அங்கே மெழுகுதிரி, நெருப்புப்பெட்டி(தீப்பெட்டி) வைக்கவேண்டும். ஹெலிகாப்டர் மேலே சுற்றினால், பங்கரின் வாசலை ஓலையால், அல்லது ஒரு தகரத்தால் உள்ளே இருந்து மூடவேண்டும். இல்லாவிட்டால் கண்டுபிடித்து சுட தொடங்கிவிடுவான். மூடிவிட்டால் உள்ளே கும்மிருட்டு, வெளிச்சம் வேண்டும். அதுக்கு தான் இந்த மெழுகுதிரி. ஆத்திர அவசரத்துக்கு பங்கருக்கு ஓடும்போது எவனாவது தீப்பெட்டி எடுத்துக்கொண்டு ஒடுவானா? அதுக்கு தான் இந்த முன் ஜாக்கிரதை. காமடி என்னவென்றால் எங்கள் முன்வீட்டுக்காரர்கள் தங்கள் பங்கருக்குள் கரண்ட் கனெக்ஷன் குடுத்து மின்விசிறி, லைட் எல்லாம் பொருத்தி இருந்தார்கள். உள்ளே இருந்த சாமிப்படத்துக்கு LED ஒளிவட்டம் வேறு. நாங்கள் எல்லாம் கண்காட்சி பார்க்க போவது போல அவர்கள் பங்கரை பார்க்க போவோம். சூப்பராக இருக்கும். ஆனால் குண்டு போடும்போது அனேகமாக கரண்ட் இருக்காது. அப்படியே இருந்தாலும் பக்கத்தில் விழுந்தால், அதிர்ச்சியில் பல்ப் வெடிச்சு கரண்ட் லீக்காகி சாகவேண்டியது தான். ஷோ காட்டுறதுல எங்கட யாழ்ப்பாணத்து ஆட்கள் போல உலகத்தில வேற எங்கேயும் ஆட்கள் பார்க்கமாட்டீர்கள். கனடாவில் அகதி அந்தஸ்து கிடைத்ததுக்கே மண்டபம் எடுத்து பார்ட்டி வைத்த ஒருத்தரை கூட எனக்கு தெரியும்! அம்மா இப்படியா கூத்துக்களை “புறக்கோலம்” காட்டுறாங்கள் என்று சொல்லுவா. யாழ்ப்பாண தமிழ் என்று நினைக்கிறேன்.

அந்த நாட்களில் சண்டை தொடங்கிவிட்டால் பள்ளிக்கூடம் இருக்காது. ஜாலி தான். என்ன ஒன்று, குண்டு அடிக்கடி பக்கத்தில விழும். அம்மா எங்களை எல்லாம் பங்கருக்குள்ளே போயிருந்து விளையாடுங்க என்று சொல்லுவா! உள்ளே ஒரு பாயை விரித்து அனேகமாக விளையாடும் விளையாட்டு தாயம் தான். யாருக்காவது தாயம் ஞாபகம் இருக்கிறதா? 32 பேட்டி, நான்கு சிப்பி சோகி, சதுரங்க ஆட்டம். யாராவது ஒருத்தன் அலாப்பிகொண்டு சண்டை பிடிக்கும் மட்டும் போட்டி தொடரும். சில நேரங்களில் மாபிள் போளை கூட விளையாடி இருக்கிறோம். பரீட்சை நேரம், படிக்கும் போது அடிக்கடி பங்கருக்குள் போனால் படிப்பு குழம்பும் என்பதால் பங்கருக்குள்ளேயே டேரா போட்டு படிப்பதுண்டு. அது ஒரு அழகிய கனாக்காலம் தான்!


குண்டு போடும்போது யாரு முதலில் பங்கருக்குள் போவது என்பதில் கொஞ்சம் பயம். பாம்பு பூரான், புலிநக சிலந்தி எல்லாம் உள்ளே இருக்கலாம். போனவருக்கு கடி நிச்சயம். அந்த சண்டையில், பத்து போடவோ, புக்கை கட்டவோ குருநகருக்கு உங்களை தூக்கிக்கொண்டு ஓட முடியாது பாருங்கள். இதிலும் அம்மா தான் சண்டிக்கட்டு கட்டிக்கொண்டு உள்ளே நுழைந்து கிளியர் பண்ணுவா! அதுக்கப்புறம் அடிச்சு பிடிச்சுக்கொண்டு உள்ளே ஓடுவோம். ஆனால் இந்த இளந்தாரி ஆண்கள் உள்ளே வர பிகு பண்ணுவார்கள். அதென்ன பொம்பிள பிள்ளை மாதிரி ஓடி பதுங்கிறது என்று சொல்லிக்கொண்டே வெளிய வாசலில் நின்று பொம்மர் பார்த்து, அது எங்கட ஏரியாவுக்கு குண்டு போடபோகுதென்றால் மாத்திரமே உள்ளே வருவார்கள். ஆனா பின்னாடிக்கு சுப்பர் சொனிக், கபீர் விமானங்கள் போன்ற ஒலியை விட வேகமாக பறக்கும் விமானங்கள் வந்த பிறகு, இவர்கள் வீரத்தை கொஞ்சம் குறைத்து, பங்கர் படிக்கட்டில் நின்று செடில் காட்டுவார்கள்!

93, 94ம் ஆண்டு காலப்பகுதியில் பொம்மர் விமானிகள் FM ட்ரான்ஸ்மிஷன் மூலம் தான் தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள். அப்பா அவர்களின் frequency ஐ tap பண்ணி, குறுக்கே கேட்பார். சிங்களத்தில் பேசினாலும் இவருக்கு கொஞ்சம் புரியும்.
“மே நண்டா காம்பேக்க டான்டோன்ன”
“தவ ரவுண்டேன் கீல, பள்ளேன்ன யன்ன .. மங் கவர் ….”
“என்னப்பா சொல்லுறாங்கள்”
“நண்டா காம்ப் அடிக்க போறாங்கடா”
“எதெப்பா நண்டா காம்ப்?”
“நந்தா என்றால் மாமி என்று அர்த்தம்.. மாமின்ட காம்ப்”
“மாமிக்கு எங்கயப்பா காம்ப் இருக்கு?”
அப்பாவும் இப்போது நாசியை தடவி யோசித்தார்.
டேய் மாமி எண்டுறது கிட்டிண்ட மாமிடா, பக்கத்து ரோட்ல தானே கிட்டு மாமி வீடு இருக்கு. ஓடுடா ஓடு பங்கருக்க..
கிட்டு அண்ணா போலவே கிட்டு அண்ணாவின் மாமி எங்கள் ஊரில் மிகப்பிரபலம். அதனால் அவர் வீட்டில் தான் குண்டு போடா போகிறார்கள் என்று பயந்து, நாங்கள் எல்லாம் ஓடி உள்ளே ஒளிந்திருக்க, குண்டுகளை எங்கேயோ தூரத்தில் போட்டுவிட்டு விமானங்கள் ஓடிவிட்டன. கொஞ்ச நேரம் கழிந்து தான் தெரிந்தது, குண்டு போட்டது கொக்குவிலில் இருந்த “நந்தாவில் அம்மன் கோவிலடி” காம்படியில் என்று. வழமை போலவே குண்டு காம்பில் விழாமல் பக்கத்துவீட்டில் விழ ஆறேழு பேர் செத்துப்போனார்கள். எண்ணிக்கை மறந்துவிட்டது. செத்தவர்களும் தான்.

என்னடா இது பங்கர் வெட்டி கனகாலம் ஆயிட்டுதே? எப்ப தான் எங்கள் முன் காம்புக்கு குண்டு போடுவாங்கள்? நாங்களும் கஷ்டப்பட்டு பங்கர் வெட்டினதுக்கு பலனை அனுபவிக்கலாம் என்று கவலைப்பட்டுக்கொண்டு இருந்தபோது தான் அந்த நாளும் வந்தது. அது ஒரு மாசி மாசத்து காலை. 1991 என்று நினைகிறேன்.

அன்றைக்கு காலையே ஏழு மணிபோல இரண்டு பொம்மர்கள் வந்து ஐந்தாறு தடவை ரவுண்ட் அடித்துவிட்டு போனது. பொம்மர் சுற்றும் போக்கை பார்த்தே அம்மா சொல்லிவிட்டார் இது நோட்டம் பார்க்க வந்திருக்கு. குண்டு போடாது என்று. நாங்களும் எங்கள் வேலைகளை பார்த்துகொண்டிருக்க தான், நாச்சிமார் கோயிலடியில் வசிக்கும் அப்பாவின் நண்பர் செல்வராஜா, அந்தக்காலத்தில் சிலோன் ஏர்போர்சில் வேலை செய்தவர் ஓடிவந்தார். அவர் வரும்போதே ஒரு அவசரம்.
“என்ன அவசரமாய் விடிய வெள்ளன இங்கால பக்கம்”
“சந்திரா, இப்ப FM கேட்டனான், பொம்மர் காரங்கள் இங்கால தான் குண்டு போட போறாங்கள்”
ஏன் அப்படி சொல்ற?
“கம்பசுக்க போட்டிடாத, அந்த காம்ப் பக்கத்து வீட்டில தாமரைக்குளம் இருக்கும், பார்த்து வை” எண்டு கதைச்சவங்கள்
தாமரைக்குளமா அது எங்க இருக்கு?
எங்கட பாங்கர் நடராசா, வீட்டு முற்றத்தில கண்டறியாத தாமரை குளம் வச்சிருக்கிறான் இல்ல? குண்டு போட்டா அங்கேயும் விழாது, காம்பிலேயும் விழாது, பின் வீடு, உன்ர வீட்ட தான் விழும்
சும்மா விசர்க்கதை கதைக்காத, அந்த சின்ன குளம் மேல இருந்து தெரியுமே, நீ சும்மா எதையோ கேட்டிட்டு.
சொல்றத சொல்லிப்போட்டன், சும்மா நடப்பு காட்டாம, இண்டைக்கு மட்டும் கொக்குவில் பக்கம் போய் இருங்க
எங்களிட்ட நல்ல பங்கர் இருக்கு, பார்ப்பம்
செல்வராஜா அங்கிள் போய்விட்டார். அப்பா டென்சன் ஆகவில்லை. ரேடியோவை எடுத்து பக்கத்தில் வைத்துக்கொண்டார். அம்மா உடனேயே அக்கம் பக்கம் விஷயத்தை சொல்லிவிட்டார். நியூஸ் தீயாய் பரவியது. அம்மா அவசர அவசரமாக சமைக்க தொடங்கினார். வீட்டுக்கதவுகளை இப்பவே பூட்டு போட்டு மூடுவிட்டு முன் வாசல் மட்டும் திறந்து வைத்திருந்தார். தாலிக்கொடி, நகை பாக் ரெடி. அவசரத்துக்கு ஓட எல்லாமே ஆயத்தம். தூரத்தே பொம்மர் சத்தம் கேட்டது!


பொம்மர் வருது என்றவுடனேயே, எங்கள் பக்கத்துவீட்டு அன்னலட்சுமி கிழவி ஓடிவந்துவிட்டது. நாங்கள் போக முன்னமேயே அது பங்கருக்குள் போய் விட, நாங்கள் எல்லாம் உள்ளே போக தயங்கினோம். அந்த கிழவி சரியாக குளிக்காது. பக்கத்தில் போனாலே “தாழம்பூவே வாசம் வீசு” தான். ஆனா “அம்மா விறகு கட்டை எடுக்கட்டா?” என்று மிரட்ட, மூக்கை பொத்திக்கொண்டு ஒவ்வொருவராய் உள்ளே போனோம். பொம்மர் இப்போது ஒரு ரவுண்ட் வந்துவிட, அம்மா கேட்டை பூட்டிக்கொண்டு(பங்கருக்குள் இருக்கும்போது தான் கள்ளர் வருவாங்கள்), பங்கருக்குள் வந்தார். அப்பா இன்னமும் வெளியே தான்! கையில் FM ரேடியோவில் பொம்மர் காரனின் லைவ் கமெண்ட்ரி கேட்டுக்கொண்டு!

இரண்டாவது ரவுண்ட். எங்கள் ஏரியாவை அடிக்க போறான் என்பது தெரிந்துவிட்டது. நாங்கள் எல்லோரும், அப்பாவை வா வா என்று கத்த, அவர் இன்னமும் நடப்புக் காட்டிக்கொண்டு நின்றார்! சரியான frequency ஐ இன்னமும் ரேடியோவில் பிடிக்க முடியவில்லை. பங்கருக்குள்ளே இன்னொரு காட்சி ஓடிக்கொண்டு இருந்தது! எட்டடி நீள பங்கரில் ஆறுபேர் இருக்கிறோம். கிழவிக்கு பக்கத்தில் யாரும் போகவில்லை. கிழவி ஒரு உருத்திராட்ச மாலையை கையில் வைத்துக்கொண்டு “அப்பனே, முருகா, பிள்ளையாரப்பா” என்று எல்லா கடவுளுக்கும் பங்கருக்குள் வரும்படி இன்விடேஷன் கொடுத்துக்கொண்டு இருக்க, எமக்கோ நாற்றம் தாங்க முடியவில்லை. மேலே வேறு அவன் குண்டு போட்ட பாடில்லை. பாவிகளா ஏண்டா இந்த சுத்து சுத்திறீங்க? வந்தமா போட்டமா என்று போகவேண்டாம்?

மூன்றாவது ரவுண்ட், பதிகிறான். மாமரத்துக்கு மேலால் கிரீச்சிக்கொண்டு சத்தம், அரை வினாடி தான், “டம்டமாங்” என்ற பெருத்த சத்தத்துடன் குண்டு விழுந்து வெடிக்கிறது. பங்கர் வாசல் அப்பாவுக்காக திறந்து இருந்ததால் படீர் என்று காற்றும் புழுதியும் உள்ளே அடிக்க, எல்லோரும் ஏக நேரத்தில் அப்பாஆஆஆஆஆஆ என்று கத்தினோம். அண்ணா உடனேயே வெளியே போய் அப்பாவை பார்க்க எத்தனிக்க அம்மா அவனை உள்ளே இழுத்தார். குண்டு இன்னமுமே சிதறிகொண்டு இருந்தது. ஒரு சில சன்னங்கள் பங்கர் வாசல் மட்டும் வந்து விழுந்தன. தென்னங்குற்றிகளுக்கிடையே இருந்து மணல் அதிர்ச்சியில் சிந்திக்கொண்டு இருந்தது. தலை எல்லாம் மண். அப்பா என்ன ஆனார்?அம்மாவும் நாங்களும் கதறுகிறோம். இரண்டு செக்கன் இருக்கும், அண்ணன் சொல்வழி கேட்காமல் எழுந்து ஓடுகிறான். எங்களுக்கு டிக் டிக் என்று இருக்கிறது. கடவாய் எல்லாம் தன்னாலே அடித்துக்கொள்கிறது. நடுக்கம். விமானம் அடுத்த ரவுண்ட் வருகிறது. கொஞ்ச நேரத்தில் அண்ணா திரும்பி ஓடி பங்கருக்குள் நுழைகிறான். அவனுக்கு பின்னால் அப்பா பட படவென உள்ளே நுழைந்ததை பார்த்த பிறகு தான், எங்களுக்கெல்லாம் நெஞ்சுக்குள் தண்ணி வந்தது, அம்மாவை திரும்பி பார்த்தேன்.

அம்மா இன்னமுமே வீறிட்டு அழுதுகொண்டு இருந்தார். அப்போது பிறந்த குழந்தை போல!
The secret of the greatest fruitfulness and the greatest enjoyment of existence is: to live dangerously!
--Friedrich Nietzsche, The Joyful Wisdom

பின் குறிப்பு:
அது தான் இந்த பதிவின் கிளைமாக்ஸ். நாங்கள் பங்கருக்குள் இருக்கும் போது மேலும் மூன்று குண்டுகள் எங்கள் வீட்டில் விழுந்ததும், நல்ல காலம் அப்பா அந்த இடத்திலேயே விழுந்து படுத்ததால் உயிர் தப்பியதும், பின்னாலே நடந்த பல நூற்றுக்கணக்கான குண்டுவெடிப்புகளும், நான் பதுங்கிய பங்கர்களும், பல சுவாரசிய விஷயங்கள் என்று இந்த பதிவு தொடரலாம் தான். ஆனால் நீண்டுவிட்டது.
சென்ற வருடம், நான் யாழ்ப்பாணம் போயிருந்த போது, அந்த மாமரத்தடிக்கு போயிருந்தேன். பங்கர் இருந்த இடம் குப்பை போட்டு மூடியிருந்தது. அதற்குள் இருந்த கடவுள்களும், விளையாட்டுகளும், பயங்களும் … எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறோம்.

Author: வடலியூரான்
•3:00 AM
இதென்னடா இது அவனவன் சந்திரனுக்கும், செவ்வாய்க்கும் ரொக்கட் அனுப்பிற காலத்திலை வந்து நிண்டு கொண்டு கறண்டைக் கண்டு பிடிச்சாலும் பரவாயில்லை, கறண்ட் ஊருக்கை வந்ததையே ஒரு கதையெண்டு கதைக்க வந்திட்டானென்று நினைக்காதையுங்கோ.நாங்களாவது பரவாயில்லை உதையெண்டாலும் கதைக்கிறம்.இண்டைக்கும் கறண்டைக் காணாமல் குப்பி விளக்கிலை படிச்சுக் கொண்டிருக்கிற எங்கடை தம்பி,தங்கச்சிமார் எத்தினை பேர் இருக்கிறார்கள்.கறண்ட் வேண்டாம்.ஆண்டாண்டு காலமாய் ஆண்டு ஆண்டு வந்த எங்கன்றை சந்ததை அஞ்சுக்கும் பத்துக்கும் கையேந்தி,கஞ்சிக்கும் காத்திருக்கிற நிலைமைக்கு மாற்றிவிட்டார்கள்.அந்த தம்பியோ,தங்கச்சியோ நாளைக்கு இதைவிடப் புதுமியாய் கதை சொல்லும் போது நாங்களும் கேட்டு நிற்போம்.



எண்பதுகளில் இனப்பிரச்சினை முனைப்புப் பெறமுன்னர்,எமது ஊர்களிலெல்லாம் இலக்சபானாவில் இருந்து இருபத்து மணித்தியாலக் கறண்ட் இருந்ததாம்.எங்கள் தோட்டங்களுக்கெல்லாம் இரவிலே லைற்(light) வெளிச்சதிலை மோட்டர் பூட்டித் தான் தண்ணி மாறுகின்றனாங்கள் என்று எங்களின் மாமாமார்,ஊரின் அண்ணாமார் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறோம்.அதன்பிறகு இனப்பிரச்சினை முனைப்புப் பெற்றதன் பின்னர் கற்ண்ட் எங்களெல்லாருக்கும் 'கட்' பண்ணப்பட்டது.



அதனால் வீதிகளில் சும்மா நின்ற ரயின் தண்டவாளத்தைப் போன்ற இரும்பாலான கறண்ட் கம்பங்களை எல்லாரும் ஆளுக்காள் பிரட்டி,தேவையான அளவுகளில் வெட்டி வேலிகளூக்கு பொறுப்பான தூணாகவும்,ஆடு மாடு கட்ட கம்பியாகவும் என்று பல வேறு வழிகளில் பயன்படுத்தினார்கள்.வேலியின் மேலும் கீழும் கறண்ட் கம்பியை இழுத்துக்கட்டிய பின் மூரியை(பனம் மட்டை)அதிலே வரிந்தார்கள்.


கறண்ட் போஸ்ற்(post) இலிருந்த கப்பியைக் கழட்டி கிணத்திலே தண்ணி அள்ளப் பாவித்தார்கள்.ஏற்க்னவே கிணத்திலே கப்பி இருந்தவர்களூம்,துலா வைத்திருந்தவர்கள் கூட ஏன் ஓசியிலை கிடக்கிறதை சும்மா ஆரும் அள்ளிக் கொண்டு போகவிடுவானெனென்று மிஞ்சின கொஞ்ச நஞ்ச கப்பிகளையும் கொண்டு போய் வெங்காயக் கொட்டிலின் மூலைக் கைமரங்களிலே பவுத்திரமாகத் தூக்கி வைத்தார்கள்.இப்பிடி கறண்ட் ச்ப்ளை(supply) நிண்ட கையோடையே எங்கடை சனம் ஊரில நேற்று வரை கறண்ட் இருந்ததெண்டதுக்கு ஒரு சாட்சியமும் விடாமல் வழிச்சுத் துடைச்சு எல்லாத்தையும் கலட்டி,புடுங்கி எடுத்துக் கொண்டுத்துகள்.




நாங்களெல்லாம் பிறந்து 13, 14 வருசமாக கறண்டைக் கண்ணாலை கண்டது கூட இல்லை.கறண்ட் எப்பிடியிருக்கும், என்ன செய்யும் எண்டு கூடத் தெரியாத நாங்கள் கறண்டுடன் கற்பனையில் விளையாடினோம்.எங்கண்ரை வீட்டின் வெளி விறாந்தையோடிருந்த சுவிட்சை மேசைக்கு மேலை ஏறி மேல்நோக்கியோ, கீழ் நோக்கியோ போடுறது சரியென்று கூடத் தெரியாமல் ஏதாவது ஒரு பக்கம் தட்டிப் போட்டு "ஆ .... கறண்ட் .. வந்திட்டுதாம்..." எண்டு ஊரிலை எங்களைமாதிரி இருந்த எங்கடை வயசையொத்த குஞ்சு குருமனெல்லாம் விளையாடுவோம்.



வீட்டை கனகாலம் கறண்ட் இல்லாமல் இருந்ததால் பாவிக்காமல் பழுதாய்ப் போன ஒரு ரேடியோவும் இந்தியன் ஆமி தூக்கி எறிந்ததால உடைந்து போயிருந்த ஒரு பெரிய "பொக்ஸ்" ரேடியோவையும் தூக்கி வைத்துக் கொண்டு,எங்கன்றை தலைகளை ரேடியோக்களுக்குப் பின்னால் ஒளித்துக் கொண்டு, நாங்களே பாட்டுப் படிச்சு,நாங்களே மகிழவேண்டிய சூழல் எங்களுக்கு.table fan ஐ எடுத்து அதன் முன் கவரைக் கழட்டி விட்டு நாங்களே கையாலை சுத்தி காத்து வாங்கி விளையாடினோம்.


சீலிங் fan இன் தகடுகள் எங்கள் தோட்டங்களின் வாய்க்கால்கள் உடைப்பெடுக்காமல் இருக்க மடைக்கு அணையாக வைக்கப் பயன்பட்டுது. இப்பிடி ஊரிலுள்ள அனைவரினதும் முந்திப் பாவித்த மின்சார சாதனங்கள் எல்லாம் அவற்றின் சம்சாரமான மின்சாரமில்லாமல் போனதால் தூக்கியெறியவேணடிய நிலைக்குப் பழுதாகிப் போயிருந்தாலும் எல்லாரும் கறண்ட் வந்தால் போட்டுப் பார்த்துட்ட்டுச் செய்வம் எண்டிட்டு வைச்சிருந்தார்கள்.இப்பிடியிருந்த எங்கடை ஊருக்கு கறண்ட் வந்தால் எப்ப்டியிருக்கும்.



யாழ்ப்பாணம் இராணுவத்திடம் வீழ்ந்து 1,2 வருடங்களின் பின்னர் எல்லா இடங்களூக்கெல்லாம் கறண்ட் வழங்கும் வேலைகள் முடுக்கி விடப்பட்டன.அந்த வேலைகள் தொடங்கப்பட்டு 1, 1 1/2 வருடங்களின் பின்னர் திடீரென்று ஒருநாள் இலங்கை மின்சார சபையின் கன்ரரிலே கொங்கீரீற்றாலை அரியப்பட்ட லைற் போஸ்ற்களை கொண்டு வந்து கிறேனாலை இறக்கினார்கள்.ஊரிலை உள்ள எல்லாருக்கும் மின்சாரம் பாய்ஞ்சது போல இருந்தது.



கொண்டு வந்து இறக்கிய மின்சார சபையின் ஊழியர்கள் எல்லாருக்கும் நல்ல மரியாதை.அவர்களுக்கு தேத்தண்ணீ, வடை,விசுக்கோத்து,கல்பணிஸ்,வாழைப்பழம் எண்டு எல்லாம் கொடுத்து உபசரித்தார்கள் ஊரவர்கள்.கவனிப்போ கவனிப்பு அப்படியொரு கவனிப்பு.அவர்கள் அவர்கள் வாழ்க்கையில் அதற்கு முன்னர் அப்படியொரு கவனிப்பை கண்டிருக்க மாட்டடார்கள்.சரி போஸ்றைப் போட்டு விட்டுப் போய்விட்டார்கள். போஸ்ற்றுகள் போட்ட போட்ட படியே போட்ட போட்ட இடத்திலே போட்ட போட்ட படியே மாதக்க் கணக்கிலே இழுபட்டன.



பிறகொருநாள் கொஞ்சப் பேர் வந்து போஸ்ற்றுகளை நடுவதற்கு கிடங்கு கிண்டினார்கள்.மீண்டும் பிரமாதமான் உபசரிப்பு அவர்களூக்கு.மறுபடியும் போய் விட்டார்கள்.மழை வந்து வெள்ளத்தால் நிரவுப் பட்டன கிடங்குகளெல்லாம்.மீண்டும் இடைவெளி.மீண்டும் காலம் கடந்து வந்து அந்தப் போஸ்ற்றுகளை நட்டு விட்டுவிட்டுப் போனார்கள்.நாட்கள் உருண்டன.


கறண்ட் கம்பியிழுக்க காலம் கனியவில்லையெண்டு எங்கள் காத்திருப்பை நீட்டி மேலும் பார்த்திருக்கச் செய்தார்கள்.ஒரு மாதிரி கறண்ட் கம்பி இழுக்கப் பட்டாலும் பிரதான வீதியிளுள்ளவர்களுக்கே முதலில் இணைப்பு வழங்கப்பட்டதால் துணை வீதியொன்றிலிருந்த எங்களுக்கு கைக்கெட்டிய கறண்ட் வாய்க்கெட்டாமல் போனது பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.


இந்தக் கறண்ட் கூட ஒன்றும் இருபத்துமணித்தியாலமும் தொடர்ச்சியாக வருகின்ற கறண்ட் இல்லை.எங்களூருக்கும் எங்கள் அயலூர்கள் சில்வற்றுக்கும் சேர்த்து ஒரு ஜெனெரேற்றரை எங்களூரிலே பொருத்தி அதிலிருந்து எல்லா ஊர்களுக்கும் மின்சாரத்தை ஒன்றைவிட்ட ஒரு நாள் இரவு ஆறு மணியிலிருந்து பத்து மணி வரையும் காலை நாலரை மணியிலிருந்து ஆறு மணிவரையும் ஏதோ கறண்ட் என்ற பெயரில் காண்பித்தார்கள்.


பிரதான வீதியோடிருந்த சிவா அண்ணை என்பவரின் வீட்டிலிருந்து அவரின் வீட்டில் உள்ள ஒரு கோல்டரில்(holder) ஒரு அடப்ரரைக்(adapator) கொளுவி அதன் மற்ற முனையில் இன்னுமொரு அடப்ரரைக் கொளுவி எங்கள் வீட்டுக் ஹோல்டரிலே கொண்டு வந்து சொருகினோம்.எங்கள் வீட்டிலே லைற் எரிந்த அந்த அருமையான நேரம் இன்றும் என் கண் முன்னே நிற்கின்றது. நாங்க்ள் போட்ட கூச்சல்களூம்,துள்ளல்களூம் கும்மாளங்களும் பக்கத்து வீட்டுக் காரர்களுக்கெல்லாம் சொல்லாமலே காட்டிக் கொடுத்தது எங்கள் வீட்டிலே கறண்ட் வந்த சேதியை.


அடுத்த நாள் பள்ளிக் கூடத்திலும் ரியூசனிலும் காணூமிடமெங்கும் நண்பர்களிடமெல்லாரிடமும் எங்களுக்கு கறண்ட் வந்த சேதியை சொல்லி மகிழ்ந்ததையெ்ல்லாம் நினைக்க இன்று சிரிப்பாக இருக்கினறது.பின்னர் சிறிது காலத்தின் பின்னர் எங்களுக்கும் நேரடி இணைப்புக் கிடைத்தது.இணைப்புப் பெறாமல் பலர் சட்டவிரோதமாக கறண்ட் கம்பியிலேயே ஒரு கொக்கைத்தடியாலை பக்குவமாகக் வயரைக் கொழுவி direct ஆக கறண்ட் எடுக்கத் தொடங்கினதாலை இரவிலையெல்லாம பல்ப்(bulb) இன் இழை தணல் மாதிரி சிவப்பாத் தான் எரியும்.ஆகக் கூடின பவர் அதுக்கு அவ்வளவு தான்.வெளிச்சமே இருக்காது.ஏனாடா இதுக்கு கறண்டை தருவதை விட தராமலே இருந்திருக்கலாமே ஏன்று கூட யோசிக்கத் தோன்றும்.



ஒன்று இரண்டு வருடங்களின் பின்னர் 24 மணித்தியாலக் க்றண்டும் வந்தது.24 மணித்தியாலக் கறண்ட் வந்த செய்தி கேட்டு ரியூசனாலே சைக்கிளில் கூவிச் சென்று சுவிட்சைப் போட்டுப் பார்த்ததெல்லாம் பசுமரத்தாணி மாதிரி மனசிலை பதிஞ்சிருக்குது.ஆனாலும் இன்றுவரைக்கும் 24 மணித்தியாலம் என்று சொன்னாலும் கூட இரவிலே மின்னி மின்னி எரியும் அல்லது இரவிலே 'கட்' ப்ண்ணுப்படும்.


ஆனால் ஐஞ்சு நிமிசம் கறண்ட் போனாலே அஸ்ஸு, புஸ்ஸூ, ஐயோ என்று என்று a/c க்காகவும் serial பாக்கிற பொம்பிளையள் கத்திறதியும் பார்க்கேக்கை அவையெளெல்லாரையும் எங்கடை சன பட்ட, படுகிற கஸ்ரங்களையெல்லாம் கொண்டு போய்க் காட்ட வேணும் மாதிரிக் கிடக்குது.எங்கன்ரை எல்லாச்சனமும் எப்பதான் கறண்ட் மாதிரி எல்லா வசதியும் கிடைச்சு சுயமா சுதந்திரமா நிம்மதியா வாழுறது எண்டு தெரியாமல் கிடக்குது
Author: யசோதா.பத்மநாதன்
•6:29 PM
என் பள்ளிப் பருவங்களை - கிட்டத் தட்ட 10, 12 வருடங்களை வன்னிக் கிராமமொன்றில் களி(ழி)த்திருக்கிறேன்.

இப்போது கிட்டத் தட்ட 15 வருடங்களின் பின் நினைத்துப் பார்க்கும் போது வன்னிப் பகுதி சிறுவர்கள் கூடுதலாக இயற்கையோடு அன்னியோன்யமாய் வாழ்ந்திருந்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.குடிசை வீடுகளும் லாந்தர் விளக்குகளும் ரொட்டி சுடும் வாசமும் பறவைகளின் பலவிதமான ஒலிகளும் நிறைந்தது அவர்களின் மாலை நேரம்.

சிறுமிகள் குண்டுமணி மரத்தைச் சுற்றிக் குண்டுமணி பொறுக்குவார்கள்.மருதோன்றி இலைகள் பறித்து அம்மியில் அரைத்து தேசிச் சாறு விட்டு நகம் சிவக்கும் அழகைக் காட்டி அதே மாதிரி வெகு சிரத்தையாகத் தம் தோழி மாருக்கும் போட்டு விடுவார்கள். சிறுவர்கள் காடுகளில் தன்னிச்சையாக வளர்ந்திருக்கும் பாலை மரம், வீர மரம், விளா மரங்களைச் சூழ்ந்திருப்பார்கள்.அது தான் அவர்களின் உச்ச பட்ச இயற்கையுடனான நட்பு.பள்ளிக்குப் போகாத மழை நாட்களில் குளத்தோர மரங்களில் ஏறி குளத்துக்குள் குதிப்பதும் அவிழ்ந்து விழும் அரைக் கால் சட்டைகளை ஒரு கையால் பிடித்தபடி ஒற்றைத் தடியில் ரின் மூடியைப் பொருத்தி அதைத் தள்ளிய படி வீதியால் ஓடுவதும் தான் அவர்களின் பெரும்பாலான பொழுது போக்கு.

ஒவ்வொரு பறவைகளின் குரல் ஒலிக்கும் போதும் அதற்குத் தமிழில் அர்த்தம் கற்பித்துக் கொள்வதில் இரு பாலாரும் வல்லவர்கள்.இரவு ஆளரவம் எல்லாம் அடங்கிய பிற்பாடு துல்லியமாய் கேட்கும் ஒரு பறவையின் தனித்துவமான குரல்.'வாடா பாப்பம்; கொட்டப் பாக்கு'என்பதாக இருக்கும் என்று பெருமைப்பட்டுக் கொள்வார்கள்.அது என்ன பறவை என்று இது வரை தெரியவில்லை.குயிலோடு தாமும் சேர்ந்து கூவுவார்கள். அது திருப்பிக் கூவினால் அது தான் அன்றய நாளுக்குரிய சிறுவர்களின் மகிழ்ச்சி.கரிக்குருவிகள்,புலுணிகள்,கிளிகள் போல வேறு பல பறவைகளும் அங்கிருந்தன.ஆனால் சிறுவர்கள் யாருமே அவற்றைப் பிடித்துக் கூட்டிலடைத்து வைத்ததில்லை. காணிகள் உழுகின்ற போது எங்கிருந்தோ வந்து சேரும் பலவகையான பெயர் தெரியாத பறவைகள்.

மயில்கள் வந்து வீட்டில் வளர்க்கும் கோழிகளோடு வந்து தானியம் கொறிக்கும்.காலை நேரம் அவைகளின் பெரிய 'மாயோ மாயோ' என்ற குரல் பல வீடுகளுக்குத் துல்லியமாகக் கேட்கும். மிகவும் செழித்து வளர்ந்த ஆண்மயில்கள் பட்ட மரக் கிளைகளில் தம் தோகையைக் கீழே தொங்கப் போட்ட வாறு தன் நீலப் பட்டுக் கழுத்தைக் கம்பீரமாக நிமிர்த்தி தன் மஞ்சள் நிற அலகால் மாயோ என்று கத்துவதைப் பார்ப்பது கண்கொளாக் காட்சி. அதிலும் காலை நேரச் சூரியன் அதன் கழுத்தில் பட்டுத் தெறிக்கும் போது கிடைக்கும் வண்ண ஜாலங்கள் இன்னும் அழகு.



வன்னிப் பகுதியில் செம்பகம் என்று ஒரு பறவை அடிக்கடி வரும்.மண்ணிறமும் கறுப்பும் கலந்த நிறம் அதற்கு.அவை எங்கு வசிப்பன என்று தெரிவதில்லை.ஆனால் வீதியோர வேலிகள் மற்றும் அடர்ந்த சிறு மரக்கிளைகளில் வந்து அமர்ந்திருக்கும்.கூச்ச சுபாவம் கொண்டவை.சிறு பிள்ளைகள் அதனை எங்கேனும் கண்டால் உடனே "செம்பகமே செம்பகமே மாமி வாறா ஒழிச்சிரு" என்று பாட ஆரம்பித்து விடுவார்கள்.(நானும் இப்படி சிறுவயதில் இப்படிப் பாடி இருக்கிறேன்.) அவை கால்களை மெல்ல மெல்ல அரக்கி மர இலைகளுக்குள் ஒழிந்து கொள்ளும்.ஆனால் பறந்து போய் விடாது.அது ஒழிவதைப் பார்ப்பதில் சிறுவர்களுக்கு பெரும் குதூகலம்.இது வன்னிச் சிறுவர்களிடம் காணப்பட்ட ஒரு தனித்துவ வழக்கென்றே நம்புகிறேன்.

காணிகள் எல்லாம் பெரிய பெரிய வளவுகளாக இருப்பதாலும் எல்லைகள் காட்டுப் புறங்களாக இருப்பதாலும் மான்களும் ஒன்றிரண்டு வந்து போகும்.யானைகள் வந்து தென்னைகளை முறித்துக் குருத்துக்களைச் சாப்பிட்டுப் போகும்.அதனால் தோட்டக் காரர்கள் மரங்களில் பரண் அமைத்துக் காவலிருப்பார்கள்.சில சிறுவர்களும் அடம் பிடித்து அவர்களோடு சேர்ந்து கொள்வார்கள்.பன்றி, மான் என்று வேட்டைகளுக்கும் செல்வார்கள்.


ஒரு முறை எங்கள் வீட்டு வளவுக்குள் - அது - வவுனியாவில் இருந்து 10 மைல் யாழ்ப்பாணம் நோக்கிய பாதையில் இருந்தது. தென்னம் பிள்ளைகள் பல நட்டிருந்தோம்.அவற்றை யானைகள் வந்து சாப்பிட்டுச் சென்று விடுவது வழக்கு.அந்த நேரம் வவுனியா நகர் புறத்தில் பிரச்சினை காரணமாக என் சித்தி குடும்பத்தினர் நம்மோடு வந்து தங்கியிருந்தார்கள்.அவர்கள் நகர் புறத்தவர்கள்.இரவு எல்லோரும் படுத்து விட்டோம். நேரம் பருமட்டாக ஒரு 1 மணி 2மணியாக இருக்கலாம்.வீட்டின் பின் புறம் யானைகள் வந்து தென்னைகளை முறிக்கும் சத்தம் கேட்டது.அவற்றை விரட்டுவதற்கு கிராமத்தவர்கள் ஒரு உத்தி வைத்திருந்தார்கள். அது தென்னோலையில் செய்யப்பட்ட பந்தத்தால் தீப்பந்தத்தைக் காட்டியபடி கூ... என்று கூவிக்கொண்டு ஓடினால் அவை ஓடி விடும் என்பது தான் அது.

எனவே நாமும் எல்லோரும் எழும்பி (வவுனியாவில் இருந்து வந்த தம்பி, தங்கை உட்பட.எல்லோருக்கும் அப்போது பதின்ம வயது)தயாராகக் கட்டி வைத்திருந்த தீப்பந்தத்தை எரித்த படி நாம் எல்லோரும் கூ... என்ற படி ஓடி அவற்றை விரட்டி விட்டோம். பிறகு படுக்கைக்குப் போகும் போது என் தங்கை முறையான வவுனியாப் பட்டணக்காறி மகிழ்ச்சியும் சிரிப்பும் உற்சாகமுமாகச் சொன்னாள்.


"அக்கா, இது நல்ல முசுப்பாத்தியான உலகமா இருக்கு.":)

அப்படி இருந்தது வன்னிக் கிராமம் ஒன்றின் அன்றய சிறுவர்களின் வாழ்வியல்.

(படங்கள்:நன்றி - இணையம்)
Author: வந்தியத்தேவன்
•4:38 PM
வழக்கம் போல பிள்ளையார் கோயில் ஆலமரத்தடி இளந்தாரிப் பொடியளினால் களைகட்டியது. ஒரு பக்கம் ஆடு புலி ஆட்டம் விளையாடும் பொடியள் இன்னொரு பக்கம் தாயம் எறியும் கூட்டம், இன்னொரு பக்கம் 304 கடதாசிக் கூட்டம் விளையாடும் கோஷ்டி என அமளிதுமளிப்பட்டது.



வழக்கமாக 12 பேர் விளையாடுகின்ற 304 இண்டைக்கு சில வழமையான கையள் வராதபடியால் 8 பேருடன் தொடங்கியது.

"கேள்வி" என அழகன் தொடங்க பிரபா "உதவி" என்றான் அழகனும் உதவிக்கு மேலே என தன்ரை பக்க மாறனை கேட்கச் சொன்னான். மாறன் ஒரு தொன்னூறு என இழுக்க எதிர்க்கோஷ்டியினர் அனைவரும் மேலே என மாறனுக்கே விட்டுவிட்டார்கள்.

"உவன் உப்பிடித்தான் தாள் இல்லாமல் சும்மா கேட்பான் " என அழகன் மாறனைப் பேசியபடியே "சரி சரி துரும்பைக் கவிழ்" என்றான்.

"டேய் அழகா நீதானே இறக்கம் நல்ல தாளாப் பார்த்து இறக்கு" மாறன்.

"நல்ல தாளோ, சரி இந்தா டயமண்ட் வீறு" என அழகன் டயமண்ட் ஜக்கை இறக்கினான்,

"நல்ல காலம் நானும் உந்த கோதாரி டயமண்ட்டில் தான் கேட்டனான் தப்பிட்டேன்" என்ற படி பிரபா டயமண்ட் மணலை இறக்கினான்.

"அடப்பாவி மணலை மட்டும் வைத்துக்கொண்டே கேட்டிருக்கின்றாய் தப்பிவிட்டாய்"

"உவன் ரவி நல்லா அடுக்குவான் ஆனால் ஒருநாளும் வெல்ல அடுக்குவதில்லை எதாவது ஒரு தாளை மாத்தி அடிக்கி குழப்பிபோடுவான்" என ரவியின் அடுக்கை குறை சொன்னான் சீலன்.

முதல் ஆட்டம் முடிந்தது, அழகன் கார்ட்சை புறிக்கத் தொடக்கினான். கடைசிக் கை போட்டதுதான் "மடக்கு" என்றான் பிரபா.

"ஆடத்தன் அவங்களைக்கு அணைஞ்சுபோச்சு, எங்கடை பக்கம் கலாவரை ஆனாலும் ஒருதனும் கேட்கவில்லை" சலிப்புடன் அடுக்கல் மன்னன் ரவி.

ரவி சொன்னது போல பிரபாவும் ஆடத்தன் வீறை மேசையில் ஓங்கி அடித்தான். அவனுக்கு பக்கத்தில் இருந்த மாறன் ஆடத்தன் ஆசை இறக்கவும் பிரபா "கோட்"
என ஏனைய தாள்களை கோட்டடித்தான்.

இந்த முறை நீங்கள் மடக்கினாலும் அடுத்த முறை நான் கம்மாறீஸ் அடிக்கின்றேன் இது சீலன்.

டேய் நீ இனத்துக்கு இனம் போடுகின்ற சின்னபெடியன் கம்மாறிஸ் அடிக்கபோறீயோ என அவனை மாறன் நக்கலடித்தான்.

இப்படியே ஒருத்தரை ஒருதர் நக்கலடித்தபடி பெரிதாக அலாப்பல்கள் இல்லாமல் நிறைவடைந்தது.

சொல் விளக்கம் :

கடதாசிக் கூட்டம் :

கார்ட்ஸ் விளையாடுபவர்களை எங்கடை ஊரில் கடதாசிக் கூட்டம் என்பார்கள்.

கையள் :

கார்ட்ஸ் விளையாட்டில் பங்குகொள்ளும் நபரை கை என அழைப்பார்கள். உதாரணமாக "மச்சான் ஒரு கை குறையுது நீயும் வா" என்றால் ஒராள் குறைவாக உள்ளது என்பதாகும்.

கேள்வி :

விளையாட்டுத் தொடங்கும்போது கார்ட்சினை பங்கிட்டவருக்கு பக்கத்தில் இருப்பவர் பெரும்பாலும் இந்தக் கேள்வியுடன் தான் ஆரம்பிப்ப்பார். புள்ளிகள் அடிப்படையில் இது 50 (சாதாரண 50) ஆகும். இதன் ஆங்கிலப் பிரயோகம் தெரியவில்லை.

உதவி ;

கேள்வி கேட்டவரின் எதிரணி உறுப்பினர் (பெரும்பாலும் கேள்வி கேட்டவருக்கு அருகில் இருப்பவர்) கேட்பது இதன் பெறுமதி சாதாரண 60 புள்ளிகள் ஆகும்,

மேலே :
ஒருவர் தன்னால் எந்தக் கேள்வியும் கேட்கமுடியாமல் தன் அணியைச் சேர்ந்த ஏனையவர்களிடம் விட்டுவிடுவது,

தாள் :

சீட்டு ஒன்றை தாள் என்பார்கள். உதாரணமாக நல்ல தாள் வாய்க்கவில்லை.

துரும்பு :

Trump பே துரும்பு எனப்படுகின்றது. துருப்புச் சீட்டின் மருவிய வடிவம் இந்த துரும்பாகும்.

வீறு : ஜாக்(Jacks).

மணல் : ஒன்பது (Nine)

ஆசு : Ace

ஆஸ் (Ace) என்பதன் மருவிய பதம்

அடுக்குதல் :

அடுக்குதல் என்பது சீட்டினை ஒருவிதமான வரிசைப்படுத்தலில் அடுக்குதல். ஏதாவது ஒரு அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள தாள்கள் செல்லும், சிலவேளைகளில் அடுக்கு பிழைத்தால் தோல்வி தான்.

புறித்தல் :
சீட்டினை அனைத்து விளையாடும் உறுப்பினர்களிற்க்கும் பங்கிடுதல்.

மடக்கு :

ஒருவர் தன்னுடைய கையில் இருக்கும் தாள்கள் அனைத்தும் எதிரணி உறுப்பினர்களால் வெட்டமுடியாமல் விளையாடுவது.

கோட்(Coat) :

மடக்கியவர் கடைசியாக கோட் எனச் சொல்லி தன்னுடைய தாளை அல்லது தாள்களை இறக்கவேண்டும்.

ஆடத்தன் : Hearts

உவீத்தன் : Diamonds

கலாவரை : Clubs

ஸ்பேட் (Spades) அதே பெயரில் தான் அழைக்கப்படுகின்றது.

கம்மாறிஸ் : Caps

ஒரு அணியினருக்கு சகல தாள்களும் கிடைத்தால் கடைசியாக அடிப்பது கம்மாறீஸாகும்.

சில சொற்களின் ஆங்கிலச் சொற்கள் தெரியவில்லை. மேலதிக தகவல்களை கார்ட்ஸில் வித்துவம் கூடிய நண்பர்கள் சொல்லவும். இந்த 304 விட ரம்மி, 31 (முப்பத்தியொன்று), கழுதை, பிரிஜ்(Bridge) போன்ற ஏனைய கார்ஸ்ட் விளையாட்டுகளும் பிரபலம் வாய்ந்தவை.
Author: Pragash
•11:48 AM
தம்பி பொழுது இருளுது. மண்ணெண்ணெய் விளக்கை எடுத்து எண்ணையை விட்டு ஆயத்தப்படுத்தியாச்சோ? படிக்கவேணுமெல்லோ? அம்மாவின் குரல் குசினிக்குள் இருந்து கேட்டது. வீட்டில் இருந்த அரிக்கன் லாம்பு, ஜாம் போத்தல் விளக்கு மண்ணெண்ணெய், ஒரு சிறிய துணி இவற்றுடன் முற்றத்து வாசல் படியில் வந்து அமர்ந்து கொண்டு, முதல் நாள் இரவின் கரிபுகை மண்டிப்போய் இருந்த அரிக்கன் லாம்பின் சிமினியை மெதுவாக கழற்றி அதில் படிந்திருந்த புகையை துடைக்க துவங்கினேன். எனது பள்ளிக்கால பதின்ம வயதுகளில், இருள் சூழும் மம்மல் பொழுதுகளில் சிமினி துடைக்கிறதும், மண்ணெண்ணெய் விட்டு விளக்கு திரியை சரிபார்ப்பதும், திரி கட்டையாகிப்போனால் துணியை கிழித்து புது திரி சுற்றி போடுவதும் எனது அன்றாட கடமைகளில் ஒன்றாகி போனது. 

பொருளாதார தடையின் இன்னொரு பகுதியான மின்சார வெளிச்சம் இல்லாத அன்றைய நாட்களில் வீடுகளிற்கு வெளிச்சம் தந்து கொண்டிருந்தவை அரிக்கன் லாம்புகளும், சிமினி விளக்குகளும், ஜாம் போத்தல் விளக்குகளும், மெழுகுதிரிகளும் சில குப்பி விளக்குகளும் தான் ஒவ்வொரு வீடுகளிலும் சிமிட்டி சிமிட்டி இருளை விரட்டிக்கொண்டிருந்தன. இந்த விளக்குகளிற்கு எல்லாம் ஆதார சுருதி இந்த மண்ணெண்ணெய். அன்று இருந்த பொருளாதார நிலைமையில் நிவாரணத்திற்கு சங்கங்களில் வழங்கப்படும் பொருட்களில் ஒன்றாக இந்த மண்ணெண்ணையும் இருந்தபடியாலோ என்னவோ கடைகளில் கூட தட்டுப்பாடில்லாமல் கிடைத்துக்கொண்டிருந்தது. 

எங்கள் வீட்டில் இருந்த அரிக்கன் லாம்பு ஒன்றும், பித்தளையில் செய்த திரி விளக்கு ஒன்றும், ஜாம் போத்தல் விளக்கொன்றுடனும் தான் பொழுது இருட்டியதில் இருந்து படுக்கைக்கு போகும் வரையான சகல கடமைகளும் இந்த மூன்று விளக்குகளுடனுமே நடந்தேறும். இதில் ஜாம் போத்தல் விளக்கு மட்டும் எங்களுடன் விடியும் வரைக்கும் துணையிருக்கும். அது தான் எங்களுக்கு விடிவிளக்கு. மறுநாள் பள்ளிக்கூடத்தில் கூட எமது பாடப்புத்தகங்களை புரட்டும் போது அதில் கூட மண்ணெண்ணெய் மணம் வீசும் அளவிற்கு மண்ணெண்ணெய் எமது வாழ்வுடன் ஒன்றிப்போனது. 


பின்னூட்டங்களை பார்த்த பின்பு ஒரு பின்குறிப்பு: ஜாம் போத்தல் விளக்கு என்றால் என்ன என்பது பற்றி கேட்கப்போகும் தலைமுறைக்காக கீழே உள்ள படம். 



ஜாம் போத்தல் விளக்கு என பெயர் வந்த காரணம், முன்னர் தக்காளி ஜாம், விளாம்பழ ஜாம் அடைத்து வரும் போத்தல்களிலேயே இது தயாரிக்கப்பட்டது. மண்ணெண்ணெய் தட்டுப்பாடு நிலவும் நேரங்களில் கை கொடுக்கும் சிக்கன விளக்காக பயன்பட்டது. கீழே அனா பின்னூட்டத்திலேயே ஜாம் போத்தல் விளக்கை கண் முன்னே கொண்டுவந்துள்ளார். இந்த பதிவிலும்  இதை பற்றி தரப்பட்டுள்ளது.
Author: M.Rishan Shareef
•6:18 PM
காலச்சுவடு பதிப்பகம் மற்றும் தமிழியல் இணைந்து நடத்தும் எட்டு ஈழத்து நூல்களின் வெளியீட்டுவிழா எதிர்வரும் சனிக்கிழமை (ஜூலை 03, 2010) மாலை ஆறு மணிக்கு, இந்தியா, சென்னை, எழும்பூர், இக்சா மையத்தில் நிகழவிருக்கிறது.


இது சம்பந்தமாக காலச்சுவடு பதிப்பக உரிமையாளர் திரு.கண்ணன் சுந்தரம், அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளர் திரு.கானா பிரபாவுக்கு வழங்கிய அறிமுகம் கீழே...






Author: Subankan
•7:04 AM

“என்ன அன்டி, கையில பாக்கையும் காவிக்கொண்டு வந்திருக்கிறியள்? என்ன விசயம்?”
“ஒண்டுமில்லை, சண்முகமண்ணேன்ட கடையில நல்ல வெள்ளைச் சீனி வந்திருக்கு. கொழும்பு விலையைவிட கிலோ இருவது ரூவாதான் கூடவாம். அதுதான் வேணுமெண்டா வாங்கிவையுங்கோவெண்டு சொல்லிட்டுப் போக வந்தனான்”

எந்த ஒரு பொருளுக்கும் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விற்பனை விலைதான் இந்தக் கொழும்புவிலை. என்னதான் அதிகபட்ச விலை என்றாலும், தரைவழிப்போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, பல கட்டுப்பாடுகளுக்கும் தடைகளுக்கும் இடையில் நடந்துகொண்டிருந்த கடல்வழிப் போக்குவரத்தாலும் இந்த விலை எங்களுக்கு எப்படியும் குறைந்தபட்ச விலையிலும் குறைவாகத்தான் இருக்கும்.



ஊர்க்கடைகளில் விற்கப்படும் பொருட்களின் விலை சமயங்களில் கொழும்பு விலையின் இரண்டு, மூன்று மடங்கைவிட அதிகமாக இருக்கும் சந்தர்ப்பங்களும் இங்கே சகஜம். இந்த விலை அதிகரிப்பை பொருளின் தேவை, கடல்மார்க்கத்தில் எடுத்துவர ஆகும் செலவு, யுத்த சூழ்நிலை முதற்கொண்டு கடையில் இருக்கும் பதுக்கல் வரை தீர்மானிக்கும்.

இந்தக் கொழும்புவிலை என்பது பல ஆண்டுகாலப் பாவனையால் நம்மவர்கள் இரத்தத்தில் ஊறிவிட்டது. எந்தப் பொருளையும் அதன் கொழும்புவிலையுடன் ஒப்பிடுவதும், அதுகுறித்து அடுத்தவருடன் பேசிக்கொள்வதும், அதேபோல கொழும்புக்கு வருபவர்கள் குறைந்தவிலையால் தேவைக்கு அதிகமாக வாங்க விரும்புவதும் எம்மவரிடையே இயல்பான ஒன்று.

இந்த விலைவித்தியாசத்தால், கொழும்பிலிருந்து ஊருக்குப் பயணப்படும் ஒவ்வொருவரும் தமது சக்திக்கும் அப்பாற்பட்ட பொருட்களை தம்முடன் எடுத்துச்செல்வார்கள். மாரளவு தண்ணீரில், தலையில் பொருட்களைச் சுமந்துசென்றும், படகிலும், பின் முன்னாலும் பின்னாலும் பலகை அடித்த மண்ணெய் மோட்டார்சைக்கிளிலும் கொம்படி ஊரியான் பாதையில் பயணித்து, வீடு வந்து சேர்கையில் பொருட்கள் தமது உண்மையான தன்மையையே பல நேரங்களில் இழந்துவிட்டிருந்தாலும், கொழும்பிலிருந்து வந்தால் இப்படியாக பொருட்கள் காவிவருவதும், அதை உறவினர், அயலவருடன் பகிர்வதும் ஏறத்தாள எழுதப்படாத சட்டம்போன்றது.

பல ஆண்டுகளாக நம் பாவனையில் இருந்து இந்தக் கொழும்புவிலை நம் வட்டாரச் சொற்களில் ஒன்றாகவே மாறிவிட்டது. தரைவழிப் போக்குவரத்துகள் சீர்செய்யப்பட்டு, விலை வித்தியாசங்கள் இல்லாமல் போய்விட்ட இன்றும்கூட,
“மச்சான் பைக் ஒண்டு பாத்திருக்கன், இங்கை 1.60 சொல்லுறாங்கள். அங்க எவ்வளவு போகுதெண்டு ஒருக்காப் பாத்துச் சொல்லுறியா”
 என்ற நண்பனின் அழைப்பிலும், ஆப்பிள்களை பைக்குள் அடைந்துகொண்டு யாழ் செல்லும் ஆச்சிகளிலும், “கொழும்பு விலையில்…” என்று ஆரம்பிக்கும் யாழ்ப்பாணத்துப் பத்திரிகை விளம்பரங்களிலும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது இந்தக் கொழும்பு விலை.

Author: Pragash
•9:31 AM
இடுப்பில் இருந்து நழுவிக்கொண்டு இருக்கும், பொத்தான் அறுந்த அரைக்கால் சட்டையை இறுக இழுத்து பிடித்துக்கொண்டு, அரிவி வெட்டுக்கு ஆயத்தமாய், மஞ்சள் நிற நெல்மணிகளின் பாரம் தாங்காமல் கதிர் தலைசாய்த்து படுத்திருந்த வயல் வரப்புகளின் வேகமாய் ஓடிக் கொண்டிருக்க, சுருக் .காலில் ஏதோ குத்த வேகம் தடைப்பட்டது. ஆ வென லேசாக முனகிக் கொண்டு ஒற்றை காலில் கெந்தியபடி, பாதத்தை தூக்கி பார்த்தால். அதில் எதுவும் இல்லை. அப்படி எண்டால் குத்தினது நெருஞ்சி தான். வரப்பில் இருந்த நெருஞ்சி செடியை பார்த்ததும் முள்ளு குத்தின வலி மறந்து போக, மெல்ல குனிந்து அதன் சின்னஞ்சிறு இலைகளை மெதுவாக விரல்களால் வருட, இலைகள் மெதுவாக ஒடுங்கி சுருங்கும் வடிவை பார்த்தபடி மனம் அதில் லயித்தது.
என்ன ராசா தொட்டா சிணுங்கி காலில குத்திப்போட்டுதோ? தொட்டாசிணுங்கி மேலிருந்த கவனம் கலைய நிமிர்ந்து பார்த்தேன்.கசங்கிய நைந்த நூல்புடவையும் தலையில் இறுக கட்டிய முண்டாசுத்துணி, கையில் அரிவிச்சத்தகத்துடன் ஒரு மூதாட்டி புன்முறுவலுடன் கேட்டபடி வரப்புகளில் போய்க்கொண்டிருந்தார். பின்னால் ஆண்களும் பெண்களுமாக நாலைந்து பேர் கையில் சத்தகங்களுடன் வரிசையாக போய்க்கொண்டிருந்தனர். எங்கேயோ அரிவி வெட்டுக்கு போய்க்கொண்டிருக்கினம் போல. ஏற்கெனவே ஆங்காங்கு வெட்டு நடந்துகொண்டு இருந்ததை பார்க்க முடிந்தது. சிலவயல்களில் வெட்டு முடிந்து நெல் போர் (சில இடங்களில் சூட்டுப்போர் என சொல்கிறார்கள்) குவித்து வைத்திருந்தார்கள். மாரிமழையில் வெள்ளம ததும்பி, தளம்பி நின்ற பச்சைப்பசேல் என கண்ணுக்கு குளிர்ச்சியான வயல்வெளிகள் மாறி, வெள்ளம் வற்றி மஞ்சள் கதிர் காற்றிலாடிய காட்சிகளை காண இனி அடுத்த வருடம் வரைக்கும் காத்திருக்க வேணும்.பெரும்பாலும் யாழ்ப்பாணத்துக்காணிகளில் மாசி நடுப்பகுதியில் அரிவி வெட்டு துவங்கி விடும். 

ஈழத்து விவசாயப்பிரதேசங்களில் நெற்செய்கை இரண்டு போகங்களில் செய்யப்படுவதுண்டு. ஒன்று பெரும்போகம், பருவமழையை அண்டியகாலங்களில் செய்யப்படுகிறது. யாழ்ப்பாணத்துகாணிகளில் பெரும்பாலானவை பெரும்போக காணிகள். மற்றது சிறு போகம், ஆறு குளங்களை அண்டிய பிரதேசங்களில் செய்யப்படுவது. வன்னி பிரதேசங்களில் இரண்டு போகமும் செய்யப்படுகிறது. யாழ்ப்பாணத்தில ஆறு குளம் ஏதும் இருக்கோ? நான் அறிஞ்ச வரைக்கும் வழுக்கையாறு ஒன்று தான் யாழ்ப்பாணத்தில இருக்குது என நினைக்கிறேன். ( வீட்டுக்கிணத்தில வளர்க்கிறதுக்கு, வழுக்கையாத்தில போய் கெளுத்தி மீன் பிடிச்சுக்கொண்டு வந்து வீட்டு கிணத்தில விட்ட அனுபவம் ஒன்றிருக்கு.). இப்ப பெரும்போக அறுவடை தான் நடந்து கொண்டிருந்தது. பக்கத்தில அரிவி வெட்டிக்கொண்டிருந்த ஒரு வயல் பக்கமாய் போய் வரப்பில் அமர்ந்து கொண்டேன். வெட்டுபவர்கள் குனிந்த நிலையிலேயே வெட்டும் லாவகமும், ஒரு கை கதிர்களை அடியோடு சேர்த்து கொத்தாக பிடிக்க மறுகையில் இருந்த அரிவி சத்தகம் சரக் சரக் எனும் சத்தத்தோடு கதிர்களை அறுக்கும் வேகமும் பார்க்கும் போது வியப்பாக இருக்கும். 

என்னடா தம்பி பார்க்கிறாய்? நீயும் வெட்டிப்பாக்கிறியா? வயலில் வெட்டிக்கொண்டிருந்த பெரியவர் அழைக்கவும், நானும் வலு சந்தோசமா ஓடிப்போய் அவரின் கையில் இருந்த சத்தகத்தை வாங்கிக்கொண்டேன். பார்த்து வெட்டு கையை கிய்யை அறுத்துப்போடாதை சொல்லிக்கொண்டே சத்தகத்தை தந்தார். பார்க்கும்போது இலகுவாய் ப்பூ இவ்வளவுதானா என தெரியும் அவ்வேலை எவ்வளவு கடினமானது என சத்தகத்தை கையில் வாங்கிய சிலநிமிடங்களில் விளங்கியது. ஓரடி வெட்டுவதற்குள் முதுகு விண் விண்ணென்று வலித்தது. இவர்கள் வயல் வேலையிலேயே தொடர்ந்து ஈடுபடுவதால் இவர்களுக்கு இது பழக்கமாகி விட்டிருக்கும். நானும் மெல்ல முதுகை நிமிர்த்தவும் பெரியவர் சிரித்தார். சத்தகத்தை அவர் கையில் கொடுத்து விட்டு மெல்ல நழுவினேன். உச்சிவேளை நெருங்கும் சமயத்தில் கிட்டத்தட்ட அரைவாசி வயலுக்கு மேல் வெட்டி முடித்திருந்தார்கள். வெட்டிய நெல்கதிர் கற்றைகள் அழகாக அடுக்கி வைத்திருந்தனர். இனி மத்தியான சாப்பாட்டிற்கு பிறகு போரடிப்பு நடக்கும் இதுமுதல்அடிப்பு.ஆண்கள் அதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். 

வயலின் ஒரு மூலையில் பெரிய சாக்குப்படங்கு ஒன்று விரிக்கப்பட்டிருக்க, அதன் மேல் ஒருவர் கயிற்று துண்டொன்றுடன் ஆயத்தமாக நின்றிருந்தார். பெண்கள் ஆங்காங்கு வெட்டி வைக்கப்பட்டிருந்த கதிர்களை (நெற்போர்) பெரிய கத்தையாக ஒன்று சேர்த்து தலையில் சுமந்து கொண்டு வந்து படங்கின் மேல் நின்று கொண்டிருந்தவரிடம் கொடுக்க, அவர் அதை கையில் வைத்திருந்த கயிற்றால் ஒரு சுற்று பிடித்து வாங்கி படங்கின் மீது ஓங்கி நாலைந்து தரம் அடித்தபின் அந்த கத்தையை படங்கிற்கு வெளியில் ஆயத்தமாக நிற்கும் இருவரிடமும் எறிய, அவர்கள் லாவகமாக பிடித்து வைக்கோல் போர் அடுக்குவது போல் வட்டமாக கூம்பு வடிவில் அடுக்கி (சூடுவைப்பு) கொண்டிருந்தனர். அதில் இன்னும் கதிர்கள் உதிராமல் இருந்தன. படங்கில் நிற்பவர் கதிர்கத்தையை அடித்த இடத்தில் நெல்மணிகள் குவிந்து கொண்டிருந்தன. 

வேலை சுறுசுறுப்பாகவும் கலகலப்பாகவும் நடந்து கொண்டிருந்தது. ஒரு வழியாக மாலை நான்கு மணியளவில் கதிரடிப்பு நிறைவு பெற்றதும், இன்னொருவர் கொண்டுவந்திருந்த சுளகில் நெல்லை அள்ளி தலைக்கு மேல் தூக்கி பிடித்து காற்று வீசும் திசையில் சிறிது சிறிதாக கொட்டிக்கொண்டிருந்தார். அதற்கு பெயர் நெல் தூற்றுதல். "காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" எண்டொரு பழமொழி கேள்விப்பட்டிருப்பியள். சந்தர்ப்பம் கிடைக்கும் போதே காரியத்தை முடித்துக்கொள் என பொருள் வரும்படியான பழமொழி அது. அந்த பழமொழிக்கு அடிப்படையாக இருக்கும் ஒரு செயல் இது தான். கொட்டும்போது நெல்மணிகள் நேராக கீழே விழ அதில் இருந்த வைக்கோல் தூசிகள் அகன்று வீசும் காற்றின் திசையில் பறந்து போய்க்கொண்டிருந்தன. 


எல்லாம் முடிந்தாயிற்று. வயல் சொந்தக்காரர் தயாராக கொண்டு வந்திருந்த சாக்குப்பைகளில் குவிந்திருந்த நெல்லை போட்டு கட்டி, மாட்டுவண்டியில் ஏற்றிவிட மாடுகள் மெல்ல வீடு நோக்கி நகரவாரம்பித்தன. காலையில் கதிர்கள் தலைசாய்த்து படுத்திருந்த வயலில் இப்போது பத்து பன்னிரண்டு அடி உயரத்தில் பிளாஸ்டிக் படங்கால் மூடிக்கட்டப்பட்ட சூட்டுப்போர் ஒன்று தலை நிமிர்ந்து நின்றிருந்தது. அறுவடையான வயலில் இப்போது வெண்கொக்குகளும், புறாக்களும் காகங்களும் மேய்ந்து கொண்டிருந்தன. யாழ்ப்பாணத்து காணிகள் எல்லாம் பரப்புக்கணக்கில் தான் அளவிடப்படுகின்றன. வேறு அளவீடுகள் ஏதும் இருந்தால் சொல்லுங்கோ. ஏக்கர் கணக்கு காணிகளை பாக்கிறதென்டால் வன்னிக்கு தான் போகவேணும். 


அரிவி வெட்டு = அறுவடை, அரிவிச்சத்தகம்= அறுவடைக்கு பாவிக்கிற அரிவாள் இது இடத்துக்கிடம் பெயர் மாறுபடலாம். வேறு பெயர்கள் தெரிந்தால் சொல்லுங்கோ. படங்கு= இது சாக்குகளை இணைத்து செய்வது. சிலபேர் போரடிப்புக்கு என பிரத்தியேகமாய் செய்த பாய் பாவிப்பினம். அதை கதிர்ப்பாய் என்று சொல்லுவினம். போரடிப்பு= வெட்டினவுடன் வயலிலேயே கதிர்களை அடித்து நெல்லை சேகரிப்பது. ஆனாலும் எல்லா நெல்லும் இதில் உதிர்ந்து விழாது. அடுக்கி சூடு வச்சு நன்றாக காய்ந்த பின்னர் ஓரிரு மாதத்திற்கு பிறகு மாடுகளை வைத்து மிதித்து நெல்மணிகளை உதிரவைப்பது சூடடிப்பு. இதை பற்றி பிறகு நான் எழுதுகிறேன். ஈழத்தில் பெரும்பாலும் ஆங்கில நாள்காட்டி முறை பயன்படுத்தினாலும் விவசாய செய்கைகளுக்கு தமிழ் நாள்காட்டி முறையே பயன்படுத்தபடுவது வழக்கம்.          

Author: Pragash
•8:42 AM
இந்த வசனத்தொடர் ஈழத்து பேச்சு வழக்கில் மாசி மாதங்களில் இடம்பெறும் ஒரு வசனம். வருடத்தின் புரட்டாசி மாசத்தில் ஆரம்பிக்கும் மழை, புதிய வருடம் தை மாசத்தில் ஓரளவிற்கு முடிவிற்கு வந்திடும். அதுக்கு பிறகு பங்குனி வெய்யில துவங்க முன்னம் மாசி மாதத்தின் இரவுகளில் பனி கொட்ட துவங்கி விடும். இரவில் படுக்கைக்கு போகேக்குள்ள தலையணையும், போர்வையும் தலைமாட்டில தான் இருக்கும். பிறகு நேரம் போக போக தலையணை ஒரு பக்கம், போர்வை ஒரு பக்கம், பாய் ஒரு பக்கம், நான் ஒரு பக்கம் கிடப்பன். பின்னிரவு தாண்டி நிலம் குளிரும்போது தான் தெரியும், நான் அறை முழுக்க பிரதட்டை அடிச்சுக்கொண்டு இருக்கிறன் எண்டது.

அதுக்கு பிறகுதான் தலையணை, போர்வை, பாய் எங்கெங்க கிடக்குதெண்டு இருட்டுக்குள்ள கையை காலை போட்டு துழாவி கண்டு பிடிச்சிடுவன். அதுக்குள்ளை அம்மாவிட்டை ஒரு குட்டும், தம்பியிட்டை ஒரு எத்தும் வாங்கியிருப்பன். மெல்ல மெல்ல விடியத்துவங்கும். விடியக்காலம்பிறை நாலரை அஞ்சு மணிக்கெல்லாம் எழும்பி படிக்கவேணுமெண்டு அம்மாவின்ரை ஓடர். மீற முடியாது. அந்த பனிக்குளிருக்குள்ளை எழும்ப மனம் வருமே?. அந்த குளிருக்குள்ளை போர்வையின்ரை ஒரு பக்கத்தை நல்ல இறுக்கமா இழுத்து காலுக்குள்ளை வைச்சுக்கொண்டு, இன்னொரு பக்கத்தை இழுத்து தலைமாட்டுக்குள்ளை செருகி, ஒரு கூடாரம் மாதிரி ஆக்கி, குறண்டிக்கொண்டு குறட்டை விடுகிறது ஒரு தனி சுகம் தான். ஆனாலும் அம்மா விடமாட்டா. டேய் எழும்படா எழும்பி படி எண்டு அதட்டிக்கொண்டே இருப்பா. எழும்பாட்டி சிலவேளை நாயே பேயே எண்டு திட்டெல்லாம் கூட விழும்.   

திட்டு விழ விழ தான் அந்த பனிக்குளிர் படுக்கை இன்னும் சுகமாய், இன்னும் கொஞ்சநேரம் படுத்திருக்க சொல்லும். அம்மாவின்ரை ஒவ்வொரு அர்ச்சனைக்கும் அங்கை புரண்டு இங்கை புரண்டு சோம்பல் முறிக்கையுக்குள்ளை, சரியா அஞ்சுமணிக்கு வயல்வெளி நடுவுல இருக்கிற ஐயனார் கோவில் மணி அடிக்கவும், வீட்டுச்சாவல் இன்னொருக்கா கூவவும் சரியாயிருக்கும். இனி இதுக்கு மேல படுக்க முடியாது, எழும்பித்தான் ஆகோணும். இல்லையெண்டால் வீட்டில குடிக்க வச்சிருக்கிற ஒரு குடம் தண்ணியால படுக்கையில வச்சே அம்மா குளிப்பாட்டி போடுவா. இருக்கிற குளிருக்கை இந்த வம்பு வேண்டாமே.  விடியக்காலமை இருட்டுக்குள்ளை கிணத்தடிக்கு போக முடியாததால, முதல் நாளிரவே ஒரு பெரிய வாளியில தண்ணி எடுத்து கொண்டு வந்து முன்வாசல் படிக்கு பக்கத்தில வச்சிடுவா. பனியோடை பனியாய் அதுவும் சில்லிட்டு போய் இருக்கும்.   

வெட வெடக்கிற குளிருக்குள்ளேயே எழும்பி, போட்டிருந்த முழுக்கைச்சுவெட்டரை, கைகள் இரண்டையும் முழங்கை வரைக்கும் இழுத்துப்போட்டு, வாசல் படியில இருந்த தண்ணியில வேகமா வாயை கொப்புளிச்சுக்கொண்டு, இரண்டு மூண்டு தரம் சளார், சளாரெண்டு முகத்தில தண்ணி அடிச்சு கழுவிப்போட்டு, துண்டால துடைச்சுக்கொண்டு உள்ளை போக அம்மா சுடச்சுட ஆட்டுப்பால் தேத்தண்ணி போட்டுத்தர, பனிக்குளிருக்கு சூடான தேத்தண்ணி இதமாய் தானிருக்கும். பிறகென்ன மண்ணெண்ணெய் விளக்கை கொளுத்தி வச்சிட்டு, படிக்க துவங்குவன். என்னதான் அந்த பணிக்குளிருக்குள்ளை எழும்ப பஞ்சிப்பட்டாலும், எழும்பினதுக்கு பிறகு கோயில் மணிச்சத்தத்தையும், விடியக்காலை குருவிகள், பறவைகளின்ரை கீச்சுக்குரல் சத்தங்கள், வீட்டுக்கூரையில இருந்து சேவல் செட்டையை பட படவெண்டு அடிச்சு கூவும் ஒலிகள, எங்கேயோ தூரத்து கோவிலில் கேக்கும் சுப்ரபாதத்தையும் கேட்டுக்கொண்டு அந்த விடிகாலை நேரத்தை அனுபவிக்கிறதில எனக்கு ஒருக்காலும் அலுக்காது.

ம்ம் இனி விடிஞ்சுட்டுது, ஆறரை ஆச்சுது போல. இனி குளிக்கவேணும். எட்டுமணிக்கு பள்ளிக்கூடத்துக்கு வெளிக்கிடவேணும்.   கையில அண்ணா பல்பொடியையும், துவாய், கைவாளியையும் எடுத்துக்கொண்டு மூலை வளவு கிணத்தடிக்கு போக ஆயத்தமாக, பின்னால அப்பாச்சி " டேய் தம்பி தலையில ஏதாவது துண்டை கட்டிக்கொண்டு போ அப்பு, வெளியில ஒரே பனிப்புகார் மூட்டமாய் இருக்கு. மாசிப்பனி மூசிப்பெய்யுது. குளிர் காதுக்குள்ளை போனால் தடிமன் பிடிச்சிடும்."  அப்பாச்சி சொன்ன படி துண்டை கட்டிக்கொண்டு கிணத்தடிக்கு போறன். சுருட்டு குடிக்கிறவையால மட்டும் தான் ஸ்ரைலா சுருள் விட முடியுமே?. எங்களாலயும் முடியும். எப்பிடி எண்டு கேக்கிறீங்களோ? மாசிப்பனியில நல்லா மூச்சை இழுத்து வாயால விட்டுப்பாருங்கோ. உங்கடை வாயில இருந்தும் புகை சுருள் சுருளாய் வெளிக்கிடும். பனிக்காலத்தில எனக்கு பிடிச்ச விளையாட்டுக்களில இதுவும் ஒண்டு. கிணத்தடியில நிண்டு பார்த்தால் முன்னாலை புகார் மூட்டத்தோடை அரிவிவெட்டுக்கு ஆயத்தமாய் மஞ்சள் நிற நெல்கதிர்மணி பாரம் தாங்காமல் தலைசாய்த்து வயல்வெளி பரந்து விரிகிறது. கிழக்கு திக்கில் அடிவானத்தில் சூரியன் சிவப்புக்கோளமாய், பெரிசாய் மெல்ல மெல்ல பனி புகாருக்குள்ளாலை எட்டிப்பார்க்கிறான். அண்ணா பல்பொடியை வச்சு பல் தேச்சுக்கொண்டே சூரிய உதயத்தையும் வடிவாய் பார்த்துக்கொண்டு எவ்வளவு நேரம் தான் நிற்கிறது. 

அண்ணா பல்பொடி, பல்லு தீட்டிநானோ இல்லையோ அரைவாசி வயித்துக்குள்ளை போயிட்டுது. அவ்வளவு இனிப்பு.  இனியும் லேட் பண்ண ஏலாது. அம்மா பூவரசங்கம்போடை வந்தாலும் வந்திடுவா. தண்ணியை அள்ளி தலையில ஊத்தவா, விடவா?. உடம்பெல்லாம் வெடவெடக்குது. டக்கெண்டு ஒரு வாளி தண்ணியை உடம்பிலை ஊத்தினால் எல்லாம் சரியாய் போய் விடும். பனிக்குளிரில கிணத்து தண்ணி சூடும். எப்பிடியோ குளிச்சு முடிச்சு வீட்டுக்கு வந்து, ஆறிப்போன தேத்தண்ணியை மடக்குமடக்கெண்டு குடிச்சிட்டு, பாணும் சம்பலும் சாப்பிட்டது போக மிச்சத்தை கட்டிக்கொண்டு, புத்தக பையையும் தூக்கி சைக்கிள் கரியரில வச்சு கொண்டு, இரண்டு பக்கமும் வயல் நடுவால போற ரோட்டில பள்ளிக்கூடத்துக்கு வேகமாக சைக்கிளை மிதிக்கிறன்.  காலமை நேர பனிக்காத்து இரண்டு காதுகளிலும் மெல்ல இரைகிறது. பனிப்புகார் இன்னும் கலையவில்லை. இண்டைக்கு பனி கடுமையாய் இருக்கு. வெய்யிலும் நல்ல காட்டு காட்டுமோ?. இண்டைக்கு நாடு விட்டு நாடு வந்தாலும், பனி விழுகின்ற நாடுகளில வாழ்ந்தாலும், சொந்த ஊரில வெடவெடக்கிற பனிக்குளிரில, வயல் வரம்புகளில் நடக்கையுக்குள்ள, புல்லில இருந்து சொட்டிக்கொண்டிருக்கிற பனித்தண்ணியில கால் படேக்கை கிடைக்குமே ஒரு சில்லிட்ட உணர்வு. அது சொந்த நாட்டை தவிர வேறெந்த நாட்டிலையும் கிடைக்காத சொர்க்கம்.
Author: Pragash
•5:54 AM
என்ன மூர்த்தியர் இண்டைக்கு வேலியடைப்போ? ஒழுங்கையால போன சுந்தரம் மாமா கேட்டுக் கொண்டே சைக்கிளை விட்டிறங்கி அருகில் வந்தார். ஒமண்ணை நல்ல நேரத்தில தான் நீங்களும் வந்திருக்கிறியள். வந்து ஒருகை குடுங்கோவன், அதுக்கென்னப்பா நானும் வாறன். இண்டைக்கு ஞாயிற்றுக்கிழமை தானே நானும் வீட்டில சும்மா தான் இருந்தனான். சொல்லிக் கொண்டே சுந்தரம் மாமாவும் அப்பாவும் நானும் கதியால் வேலியில கிடந்த பழைய உக்கிப் போன கிடுகுகளை அறுத்து கொட்டி சுத்தப்படுத்திய பின்னர் வீட்டுக்கு பின்பக்க தாழ்வாரத்தில் அடுக்கி இருந்த கிடுகுகளை எடுத்து கொண்டு வந்து வேலி நீளத்துக்கும் அடுக்கி கொண்டிருக்கிறம்.

யாழ்ப்பாணத்தில் வசதியான ஆக்கள் எண்டால் வீட்டை சுத்தி மதில் எழுப்பியிருப்பினம். சில பேர் எண்ணை பீப்பாய் தகரத்தில வேலி அடைச்சிருப்பினம். நடுத்தர வர்க்க சாதாரண குடும்ப வீடுகளில் சுத்தி கிடுகுவேலியோ பனை ஓலை வேலியோ தான் இருக்கும். என்னதான் வீட்டை சுத்தி மதில் எழுப்பினாலும் அது இயற்கைக்கு மாறான சூழல் தான். கிடுகு,பனை ஓலை வேலி எண்டால் அந்த வீட்டுக்கும் வளவுக்கும் ஒரு தனி களையே வந்த மாதிரி இருக்கும். பனை ஓலையும் தென்னோலையும் யாழ்ப்பாணத்தில இலகுவாய் கிடைக்க கூடிய பொருட்கள் தான். பெரும்பாலும் கிராமப்புறங்களில் ஒவ்வொருத்தர் வீட்டு வளவிலும் ஒரு அஞ்சு பத்து தென்னை மரமோ, பனை மரமோ கட்டாயம் இருக்கும். எங்கடை வீட்டிலையும் ஒரு ஏழு தென்னை மரம் இருந்ததாய் நினைப்பு. ஒவ்வொரு நாளும் மரத்தில இருந்து விழும் காய்ஞ்ச தென்னோலையை அம்மா இழுத்து கொண்டு போய் கிணத்தடியில போட்டு விடுவா. 

குடும்பத்தில எல்லாரினதும் குளிப்பு முழுக்கெல்லாம் அதுக்கு மேல நிண்டுதான் நடக்கும் . அப்பத்தான் ஓலை நல்லா நனையும். காஞ்ச ஓலையில கிடுகு பின்ன முடியாது, நல்லா ஊறவேணும். ஒரு அறுபது எழுபது மட்டை சேர்ந்தாப்போல ஏதாவது ஒரு ஞாயிற்று கிழமை கிடுகு பின்ன முற்றத்தில இறங்கிடுவம். கிடுகு பின்னிறதே ஒரு தனிக்கலை தான். அம்மா பின்னும் போது நானும் முதுகுக்கு பின்னால நிண்டு கொண்டு எனக்கும் கிடுகு பின்ன பழக்கி விடும்படி நச்சரிப்பதுண்டு. நச்சரிப்பு தாளாமல் அவவும் சொல்லி குடுக்க ஏழு வயசிலேயே நானும் நல்லா கிடுகு பின்ன பழகீட்டன். கிணத்தடியில இருந்து நனைஞ்ச தென்னோலையை முற்றத்து மண்ணில இழுத்து கொண்டு வந்து பலகை கட்டையை போட்டு குந்தி இருந்து பின்னும் போது, முற்றத்து புழுதி மண்ணும் நனைஞ்ச ஓலை மணமும் சேர்ந்து கலவையாய் ஒரு அலாதியான வாசம் வரும் பாருங்கோ, அதெல்லாம் அனுபவிக்க குடுத்து வச்சிருக்கோணும்.   

பின்னி முடிச்ச கிடுகுகளை பத்திரமா ஓரிடத்தில் பாதுகாப்பா அடுக்கி வச்சு, குறிப்பிட்ட எண்ணிக்கையில் கிடுகுகள் சேர்ந்தவுடன் வசந்த கால ஆரம்ப நாளொன்றில் வேலியடைப்பு துவங்கும். வேலியடைப்பு எண்டு சாதாரணமா சொன்னாலும் அதுவும் ஒரு குடும்ப நிகழ்வு மாதிரித்தான். காலைமை இரண்டு பேர் மூன்று பேராக துவங்கும் வேலியடைப்பு நேரம் போக போக, தெரிந்த அயலட்டை சனங்களும், நண்பர்களும் கேட்காமலே உதவிக்கு வந்து சேர, ஒரு கலகலப்பான குட்டி கொண்டாட்டமாகவே மாறி விடும். இரண்டு பேர், வேலிக்கு உள்பக்கம் ஒராள், வெளிப்பக்கம் ஒராள், முதல் வரிசை கிடுகை வைத்து கட்டி கொண்டு போக, அடுத்த இரண்டு பேர் இரண்டாவது வரிசை கிடுகை வைத்து கட்டி கொண்டு பின்னால் வருவர். இதுக்குள் என் வயதொத்த சிறுசுகளின் வேலை கிடுகு எடுத்து குடுக்கிறதும், கிடுகை கதியாலுடன் சேர்த்து கட்டும் வரைக்கும் கதியாலோடை சேர்த்து பிடிக்கிறதும், குத்தூசியில கயிறு மாட்டி விடுறதும் எங்கடை வேலை.

வேலியடைப்புக்கு பாவிக்கிற குத்தூசி இரண்டு விதம் இருக்கும். சில பேர் மரத்தில செய்து வச்சிருப்பினம். சில பேர் அரை இஞ்சி கம்பியில செய்து வச்சிருப்பினம். கூர்மையாக இருக்கும் பக்கத்தில கட்டுக்கயிறு கோத்து விடக்கூடிய அளவில் சின்னதா ஒரு துவாரம் இருக்கும். வேலிக்கு வெளிப்பக்கம் இருந்து ஒருத்தர் குத்தூசியில கயிற்றை கோத்து வேலிக்கு உள்பக்கம் நிற்கும் எங்களிடம் "ஆ இந்தா" என குரல் கொடுத்தபடி அனுப்ப நாங்கள் கயிற்றை எடுத்து வைத்து கொண்டு குரல் கொடுக்க, அவர் குத்தூசியை எடுத்து கதியாலின் மறுபுறம் குத்த நாமும் கயிற்றை இழுத்து கோத்து விட்ட பிறகு "ஆ சரி" என குரல் குடுக்க மளமளவெண்டு வேலையும் நடந்து கொண்டிருக்கும். ஒரு புறம வேலியடைப்பு நடந்து கொண்டிருக்க, மறு புறம அயலில் யார் வீட்டில் மாடு கன்று போட்டது, ஆடு குட்டி போட்டதிலிருந்து அன்றைய அரசியல் வரைக்கும் அலசல் நடந்து கொண்டேயிருக்கும். 

இடையில் பதினோரு மணியளவில் அம்மா பெரிய பாத்திரத்தில் எலுமிச்சம்பழ தண்ணீருடன் வந்து பரிமாறவும் நேரம் சரியாயிருக்கும். அன்றைக்கு வேலியடைப்புக்கு உதவிக்கு வந்த எல்லோருக்கும் மதிய சாப்பாடும் எங்கள் வீட்டில் தான்.     இனிமையான பொழுதுகள் மீண்டும் வரப்போவதில்லையே.
Author: geevanathy
•12:03 PM
கந்தளாய், திருகோணமலையில் இருந்து கண்டி செல்லும் பாதையில் நாற்பது கிலோமீற்றரில் அமைந்திருக்கும் ஊர். இலங்கையின் மிகப்பெரிய விவசாய நிலங்களைக் கொண்ட பிரதேசங்களில் ஒன்றாகக் கந்தளாயும் கருதப்படுகிறது. பண்டைய நாட்களில் கந்தளாயில் 'சதுர்வேதி மங்கலம்' என்றழைக்கப்பட்ட பிரதேசம் இருந்தது. இங்கு நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த அந்தணர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இவர்களுக்கு இப்பிரதேசம் வரியில்லாமல் வழங்கப்பட்டிருக்கிறது. இங்கிருந்த குடியேற்றம் அளவில் பெரிதானதாகவும், அதிகாரம் கொண்டதாகவும் அமைந்திருந்தது என அறியமுடிகிறது.




கி.பி 10 ஆம் நூற்றாண்டில் சோழரது நேரடி ஆட்சி இலங்கையில் ஏற்பட்டபோது நாகநாட்டில் இருந்த( தற்போதைய வடகிழக்கு மாகாணம்) தமிழ் அரசும் அவர்களது ஆதிக்கத்துக்கு உட்பட்டது என வரலாற்றாதாரங்கள் மூலம் அறிய முடிகிறது. சோழப்பேரரசின் படையெடுப்பின் மூலம் இப்பிரதேசம் இராஜராஜனின்(கி.பி 985 - கி.பி 1014) ஆதிக்கத்தின்கீழ் வந்தபின் 'இராஜராஜ சதுர்வேதி மங்கலம்' என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. (சோழர் ஆட்சியின் கீழ் தமிழ்ப் பௌத்தர்களால் நிர்வகிக்கப்பட்ட விகாரை இராசராசப் பெரும் பள்ளியெனப் பெயர்மாற்றம் செய்யப்படதுபோல்) அதன் பின்னர் அவரது மகன் இராஜேந்திரன் (கி.பி 1012 - கி.பி 1044) காலப்பகுதியில் திருகோணமலை நகரம், இராஜ ராஜ சதுர்வேதி மங்கலம்(கந்தளாய்) என்பவற்றை உள்ளடக்கிய பிரதேசம் 'இராஜேந்திர சோழவழநாடு' என அழைக்கப்பட்டிருக்கிறது.



கி.பி 1010 ஆம் ஆண்டி ல் இங்கு இராசேந்திர சோழனால் சிவன் கோவில் கட்டப்பட்டது. அப்புராதானக் கோயிலின் சிதைந்த பாகங்களைக்கொண்ட சிவன் பார்வதி சிலை, தூண் சிதைவுகள் , ஆவுடையார் போன்றவை இன்றும் அக்கோயிலின் வரலாற்றுத் தொன்மைதனை பறைசாற்றி நிற்கிறது.




வரலாற்றுத் தகவல்களின் அடிப்படையில் இங்கிருந்த ஆலயம் பிரசித்தமானதாகவும், பலர் ஒன்றுகூடி அமர்ந்து கலந்துரையாடக்கூடிய மண்டபங்களைக்கொண்ட பிரமாண்டமானதாகவும் இருந்திருக்கவேண்டுமென அறியமுடிகிறது. கந்தளாயிலுள்ள பேராறு எனுமிடத்தில் அமைந்திருக்கும் இவ்வாலச் சிதைவுகள் 1950ம் ஆண்டு காலப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் அவ்விடத்தில் அமைக்கப்பட்ட சிவனாலயத்தையே மேலுள்ள படத்தில் காண்கிறீர்கள்.


இவ்வாலச் சூழலில் கண்டெடுக்கப்பட்ட பல சாசனங்களில் இருந்து இவ்வாலயத்தின் சிறப்பையும் இங்குவாழ்ந்த மக்களது சமய, பண்பாட்டு நடமுறைகளையும், இப்பிரதேசத்தில் நிலவிய அரசாட்சி பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது.

அங்கு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் சொல்லும் செய்திகளின் சுருக்கம்.

01. இராஜராஜ சதுர்வேதி மங்கலத்தின் ஊராட்சி அமைப்பான பெருங்குறி(மகாசபை) பெருமக்கள் ஒரு இரவு ஒன்றுகூடி விக்கிரம சோழ வாய்க்கால் தொடர்பாக எடுத்த தீர்மானத்தின் பதிவுகளையே ஒரு கல்வெட்டு சொல்கிறது.இதனை ஆராய்ந்த கலாநிதி.கா.இந்திரபாலாவின் கருத்துப்படி கி.பி 1033 மாசி 13ம் திகதி/ கி.பி 1047 மாசி 10 ம் திகதி இம் மகாசபைக்கூட்டம் நிகழ்ந்திருக்கவேண்டுமெனக் கருதுகிறார்.

02. இங்குள்ள இன்னுமொரு சாசனம் முதலாம் விஜயபாகு தேவரின் 42 ம் ஆட்சியாண்டிலே எழுதப்பட்டது.(கி.பி 1097) நங்கைசானி என்னும் பிராமணப்பெண் தனது கணவனின் நினைவாக சதுர்வேத மங்கலத்து விஜயராஜ ஈஸ்வரம் என்னும் ஆலயத்தில் ஏற்படுத்திய அறக்கட்டளை பற்றிய விவரங்களை அது வர்ணிக்கிறது.

03.கி.பி 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதாவது கி.பி 1103 ஆண்டுக்குரியதான கல்வெட்டில் கந்தளாய் என்றே அக்காலத்தில் இப்பிரதேசம் அழைக்கப்படதாக அறிய முடிகிறது. அத்துடன் பொலநறுவையை ஆட்சி புரிந்த விஜயபாகு தனது 37ம் ஆட்சியாண்டில் தானமளித்தான் என்பதையும் அறியமுடிகிறது. இதுவரை இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் இதில்தான் முதன் முறையாக திருப்பள்ளியெழுச்சி, திருப்போனகம் என்னும் சொற்பதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பேராசிரியர் பத்மநாதன் அவர்கள் குறிப்பிடுகிறார்.


இவை தவிர சோழ இலங்கேஸ்வரன், சோழர்களின் ஆட்சிமுறை, என்பனவற்றோடு தமிழர்களின் தொன்மையையும் ஆதாரப்படுத்தி நிற்கும் இச்சாசனங்கள் அரிய பொக்கிசங்களாகும்.

உசாத்தணை

வரலாற்றுத் திருகோணமலை - கனகசபாபதி சரவணபவன்

திருக்கோணமலை மாவட்ட திருத்தலங்கள் - பண்டிதர் இ.வடிவேல்

கட்டுரை- 'இலங்கையில் கிடைத்த தமிழ் சாசனத்தில் முதன்முதலாக திருப்பள்ளியெழுச்சியென்ற சொல்' - பேராசிரியர் சி. பத்மநாதன்

கட்டுரை - 'கிழக்கிலங்கையில் சீரழிந்துகொண்டிருக்கும் தமிழரின் தொன்மைச் சான்றுகள்' - கலாநிதி.ப.புஷ்பரெட்ணம்

தகவல் திரட்டுவதில் உதவியவர்கள் - கந்தளாய் சிவன்ஆலயக்குருக்கள், திரு.க.ரவிராஜன் (திருப்பணிச்சபை சிவன் ஆலயம்)
Share/Save/Bookmark