Author: கரவைக்குரல்
•9:42 AM


ஆவணி மாதம் பிறந்துவிட்டால் தொண்டைமானாறு செல்வச்சந்நிதியானுக்கு திருவிழா என்று பொதுவாக வடமராட்சி எங்கும் எல்லோரும் கொண்டாட தயாராகிவிடுவார்கள்,நல்லூரானைத் தொடர்ந்து சந்நிதியானுக்குத்தான் திருவிழா பதினைந்து நாள்கள்,அன்னதானக்கந்தன் என்று உலகம் புகழ்பாடும் சந்நிதி முருகனை நோக்கி எல்லோரும் படையெடுப்பர்,சில அடியார்கள் பொதுவாக அங்கேயே இருந்துவிடுவதுண்டு,அங்கேயே இருந்து முருகன் புகழைப்பாடியபடியும் வேண்டிய வரங்களை பிரார்த்தித்தபடியும் கூடியிருப்பர் சந்நிதியின் சந்நிதானத்தில்,
தூக்குக்கவடிகள் பறவைக்காவடிகள் கரகங்கள் இழுவைக்காவடிகள் என்று காவடிகளுக்கும் குறைவில்லை.

குறைவில்லை என்று சொன்னால் அங்கு சென்றவர்களுக்கு தெரியும் ஒன்றுக்கு பின் ஒன்றாக தூக்கு காவடிகள் மற்றும் பறவைக்காவடிகள் வரிசைவரிசையாக வரும்,அவற்றைப்பார்க்கும்போது மயிர்கூர்ச்செறியும்,பக்திரசம் மேலிடும்,



கதிர்காமக்கந்தனுக்கும் செல்வச்சந்நிதிக்கும் நிறையவே தொடர்புகள் இருப்பதால் இதை சின்னக்கதிர்காமம் அல்லது பால கதிர்காமம் என்று கூட இதை அழைப்பார்கள்,இதை விட அண்மையில் நிர்மாணிக்கப்பட்ட கதிர்காமம் போன்ற தோற்றப்பாடுடன் கூடிய முகப்புத்தோற்றம் அழகுடன் அமைந்திருக்க முருகப்பெருமானுக்கு இந்தமுறைதிருவிழா சிறப்புடனே நடந்தேறியிருக்கிறது.





இந்த ஆலயத்தில் காணப்படும் விருட்சம் பூவரசு,

மிகவும் பழமை வாய்ந்ததாக காணப்படும் இந்த விருட்சமும் வணக்கத்துக்குரியதாகும்,எப்போதும் அடியவர்கள் அதனடியில் இருந்தவாறே முருகன் புகழைப்பாடியபடியே பிரார்த்திப்பர்.

அதைவிட பக்திரசச்சொற்பொழிவுகள்,மற்றும் முருகன் புகழ் பாடும் கீர்த்தனங்களின் இசை நிகழ்வுகள், என்று இன்னோரன்ன நிகழ்வுகள் முருகன் வீதிகளை அலங்கரித்துக்கொண்டிருக்கும்.குறிப்பாக தொண்டைமானாறு ச ந் நிதியான் ஆச்சிரமப்பேரவை இதில் முக்கிய பங்கை வகிப்பதுண்டு.ஆச்சிரமத்தில் ஒவ்வொரு நாளும் முருகப்பெருமானின் வீதிவலத்திற்குப்பின் ஏதாவது ஒரு நிகழ்வை ஒழுங்கு செய்திருக்கும்,அதில் முருகன் புகழ் பாடி அதனைத்தொடர்ந்து அன்னதானம் கொடுப்பர்,அவர்கள் பரம்பரை பரம்பரையாக தந்தை வழியில் இப்போது முருக பக்தன் மோகன் அவர்களால் இது பரிபாலிக்கப்பட்டு வருகிறது.இதை விட முருகன் சந்நிதானத்திலும் அடியார்களின் முருகன் இசைப்படலம் இசைக்கபட்டுக்கொண்டேயிருக்கும்.
இப்படியாக முழுவதும் பக்திமயமாக தொண்டைமானாறு முருகன் வீதியெங்கும் விளங்கும்,

இதைவிட இந்த ஆலயத்தின் பின் புறமாக உள்ள தொண்டைமானாறில் எல்லோரும் நீராடுவதுமுண்டு,
சிறுவர்களும் பெரியவர்களும் நீராடி முருகனின் இறையருளை பெற்றிட வேண்டுவர்.சற்று ஆற்றில் கும்மாளங்க்களுக்கும் குதூகலங்களுக்கும் குறைவில்லை.
அதைவிடசில பாடசாலைகள் சந்நிதியானின் தேர் மற்றும் தீர்த்ததிருவிழாக்கு விடுமுறை கூட அளித்துவிடும்,சிறியவர்கள் இதில் பெரிய மகிழ்ச்சி,
இப்படியாக சந்நிதியானுக்கு திருவிழா என்றால் பெரியவர்கள் சிறியவர்கள் என்று எல்லோருக்கு ஒரே மகிழ்ச்சியும் கொண்டாட்டமும்தான்,பக்தி பரவசங்களுடன் மகிழ்ச்சிகொண்டாட்டங்களுக்கும் குறைவேயில்லாமல் நிகழும் சந்நிதியான் தீர்த்தமாடி உலகெங்கும் வாழும் எம் தமிழ் மக்களுக்கு அருள்பாலிப்பாராக


பிற்குறிப்பு: இந்த சந்நிதியானின் புகைப்படங்களை எனக்கு அளித்த நண்பர் உமாசங்கார் அவர்களுக்கு நன்றி
Author: Unknown
•12:20 PM
யாழ்ப்பாணத்தின் அடையாளங்களில் ஒன்றாகவே மாறிப்போய் விட்டிருப்பது இந்த மினி வான். அதுவும் நெல்லியடி-யாழ்ப்பாணம் பயணங்கள் ஒவ்வொன்றும் ஒரு அனுபவம். அதுவும் இந்த ஏ/எல் படிக்கிற காலத்தில ரியூசன் எண்டு சொல்லிப்போட்டு கொப்பிய மடிச்சு ஜீன்ஸ்சுக்குள்ள சொருகிக்கொண்டு ராஜா டாக்கீஸ்சிலயும் மனோகராவிலயும் புதுப்படம் பாக்க நாங்கள் கூட்டமாக் கிளம்பிப் போறது இருக்கே, அது ஒரு சுகம் பாருங்கோ.

என்ன பிரச்சினை எண்டால் நெல்லியடியிலையும் சரி, பருத்தித் துறையிலையும் சரி ரீல்ஸ் தியேட்டர் இல்லை. நாங்கள் படம் பாக்கிறது ப்ரொஜெக்டர் வச்சு வி. எச். எஸ். டெக்கில போடுற படங்களைத் தான். அதால நல்ல படம் ஏதாவது வந்தா கள்ளமா யாழ்ப்பாணம் போய்த்தான் படம் பார்ப்பம். இதில நெல்லியடியில ராஜலக்‌ஷ்மி என்றொரு தியேட்டரைப் பற்றிச் சொல்லோணும். அங்க பல்கணில ஒரு நாள் நாங்கள் ஏழு பேர் மட்டும் இருந்து படம் பாக்கேக்க கீழ இருந்த ஆக்களோட ஒரு கொழுவல். மேலையிருந்து பச்சைத் தூசணமா எல்லாம் பேச அவங்கள் எங்கட தூசணத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் பேசாம இருந்துட்டாங்கள். படம் முடிஞ்சு கீழ வர, கீழ இருந்த ஆக்களில ஒராள் எங்களுக்குப் படிப்பிக்கிற வாத்தியார். ‘ஆ, நடக்கட்டும் நடக்கட்டும்' எண்டுட்டு மனுசன் போக எங்களுக்கு ஒரே மானக்கேடாப் போச்சு.

அதேமாதிரி அதே பல்கணியில ஒரு நாள் வேற படம் பாக்கேக்க என்ர ஜீன்ஸ் பொக்கட்டில இருந்த சைக்கிள் திறப்பு கீழ விழுந்து போட்டுது. இருட்டுக்குள்ள கீழ கைய விட்டுத் தடவினா ஏதோ தொள தொள தண்ணிமாதிரி இருக்க பயந்து போனன். உடன தியேட்டரில வேலை செய்யிற ஒரு பொடியனக் கூட்டிவந்து லைட் பிடிச்சுப் பாத்தா ஆரோ ஒரு புண்ணியவான் வெத்திலையச் சப்பி இருக்கிற சீட்டுக்குப் பக்கத்திலயே துப்பி வச்சுட்டுப் போயிருந்தார். அண்டையோட ராஜலக்‌ஷ்மித் தியேட்டரை விட்டாச்சு. அதே நெல்லியடியில இருந்த பழம் பெரும் மகாத்மா தியேட்டரில் பல்கணி இல்லாதபடியால் பெரிசாப் போறது இல்லை. ஏனெண்டால் பல்கணியில இருக்கிறபோது வர்ற ஒரு மிதப்பு கீழ இருந்து பார்க்கிறபோது வர்றதில்லை.

ரீல்ஸ் படம் பார்க்க யாழ்ப்பாணம் போறது ஒரு நல்ல அனுபவம். எப்ப போறது எண்டு முதலே பிளான் போட்டு அந்த நேரத்துக்கு ரியூசன் இருக்கிறதா ஒரு கிழமைக்கு முன்னமே வீட்டில பில்ட்-அப் குடுத்து, ரியூசன் போறமாதிரி கொப்பி புத்தகம் எல்லாம் கொண்டுதான் வெளிக்கிடுவம். (என்ர அப்பர் அந்த நாளில் யாழ்ப்பாணம் போகக்கூடாது என்பது எனக்கான கூடுதலான பிரார்த்தனை). ஒரு வழியாக மூத்தவிநாயகர் கோவில் அல்லது கண்ணன் வீடு எண்டு இரண்டில் ஒரு இடத்தில சைக்கிளை விட்டுட்டு மினிபஸ் ஏறுவம். ஏற்கனவே மினிபஸ் ஃபுட் போட்டில ஆக்கள் நிறம்பி வழிய வந்தாலும் அதில போகாட்டா எங்கட சுதா யாழ்ப்பாணம் வரமாட்டான். எண்டபடியால் அதில ஏறி யாழ்ப்பாணத்தில போய் இறங்கும் வரை கபி குஷி கபி கம் தான். (பெண்கள் மன்னிப்பார்களாக)

யாழ்ப்பாணம் பஸ் ஸ்டாண்டில இறங்கி தியேட்டருக்கு விறுவிறுவெண்டு நடந்து போவம். அனேகமா எங்கட நித்து அட்வான்ஸ் புக்கிங் செய்திருப்பதால டிக்கட்டுக்கு அடிபடுறதில்லை. அப்பிடி அடிபட வேண்டி வந்தாலும் போற அத்தினை பேரும் ஒருத்தர் கையை ஒருத்தர் இறுக்கமாப் பிடிச்சபடி ஒற்றுமையா முன்னுக்குப் போயிடுவம். மனோகாரா தியேட்டரில மட்டும் ஜெயன் ஒராளைச் சினேகம் பிடிச்சு இருந்ததால எங்களுக்கு ராஜ மரியாதை இருக்கும். இதில பெரிய பகிடி என்னெண்டால் அங்க ஒரு காலத்தில விஜய்க்கு அபிசேகம் எல்லாம் செய்தவங்கள். அதில கடுப்பாகிப்போய் விஜயிண்ட செண்டிமெண்ட் சீனுக்கு நாங்கள் ‘ஹஹ்ஹஹ்ஹா' எண்டு ராஜலக்‌ஷ்மி தியேட்டர் ஞாபகத்தில சிரிக்க 'எவண்டா அவன் (கீறிட்ட இடம்)' எண்டு கீழையிருந்து வந்த குரலில் அடங்கிப் போவம்.

பிறகு படம் பாத்த களைப்பில அங்க இருக்கிற பல ஐஸ்கிரீம் கடைகளில ஏதாவது ஒண்டிலையோ, ரொலெக்ஸ் சாப்பாட்டுக் கடையிலையோ சாப்பிட்டுட்டுத் தான் வருவம். (தியேட்டரில் குடிக்கிற சோடா வேற கணக்கு). ஒரு முறை உப்பிடித்தான் தியேட்டரில வாங்கின சோடா மிஞ்சிப்போக அதை நானும் நிதியும் குடிச்சுத் தள்ளினம். தியேட்டரில இருந்து பஸ் ஸ்டாண்ட் வரக்கு முன்னம் முட்டீட்டுது. பிறகு ஒரு பாருக்குள்ள போய் அன்-லோட் பண்ண வேண்டி வந்தது. நல்லகாலம், ஆராவது கண்டிருந்தால் எங்கட நல்ல பேர் கெட்டுப்போயிருக்குமல்லோ. வீட்ட திரும்பிவரக்கு முன்னம் எனக்கு திரும்ப முட்டி, வீட்ட வந்தவுடன 10 நிமிஷமா அன்-லோட் பண்ணினது வேற கதை.

என்ன தியேட்டர் போகேக்கையும் சரி, வரேக்கையும் சரி ஒரே கூத்தும் கும்மாளமுமா இருப்பம். அனேகமா ஏதாவது நல்ல நாள் பெருநாளிலையும் இப்பிடி படம் பாக்கப் போறதால எங்கள மாதிரி ஆகக் குறஞ்சது அஞ்சு செட்டாவது ஒரு மினி வானில வரும். அண்டைக்கு பஸ்சில வாற பெரிசுகள் எல்லாத்துக்கும் திண்டாட்டம்தான். ட்ரைவர் கொஞ்சம் வயது போனவர் எண்டால் அவருக்கும் திண்டாட்டம்தான். 'அண்ண, உந்தப் பாட்டுப் பெட்டியப் போடு' எண்டு தொடங்கி ஒரே தொல்லை பண்ணுவாங்கள். இதெல்லாத்தையும் சமாளிச்சு பஸ் ஓடுறதுதான் அவர்களின் கெட்டித்தனம்.

பி.கு: அந்தப் பண்டிகைக் கால சினிமா பார்க்கும் அனுபவமும், சந்தோஷமும், மனநிறைவும் இங்கே ஏ.ஸி தியேட்டர்களில், டி.ரி.எஸ் சவுண்டில் எந்த நெருக்கடியும் இல்லாமல் பார்க்கும் படங்களில் எல்லாம் இல்லை.
Author: தமிழன்-கறுப்பி...
•1:50 AM
எந்த மொழியாயிருந்தாலும் அதனை அந்தஊர் பெண்கள் பேசிக்கேட்கும் பொழுதில் ஒரு தனி இன்பம் இருக்கிறது அதுவும் வயதுப்பெண்களிடமிருந்து கேட்கும் பொழுதில் அந்த மொழிக்கு ஒரு தனித்தன்மை வந்து விடுகிறது. உதட்டசைவுகளும், உடல் மொழியும் அவளவளுக்கே உரிய தனி இயல்புகளோடும் பேசக்கேட்கையில் அது ஒரு தனி பரவசம் தருகிற நிகழ்வு. இப்படி நான் கேட்க விரும்பியிருக்கிற மொழிகள் தற்போதைக்கு அரேபியப்பெண்களின் ஹபீபிக்கள், கேரளத்துப்பெண்களின் திறக்கப்டாத உதடுகளினுடு வருகிற வார்ததைகள், கறுப்பு நிற தேவதைகளிடமிருந்து தமிழ், பதின்மங்களில் இருக்கிற குரல்களினூடு சிங்களம் சாதாரணமாய் பேசும் பொழுதே பெண்கள் மொழியை இயல்பாக அழகுசெய்கிறார்கள்.இப்படி இருக்க நெருக்கம் நிறைந்த பெண்மையின் அழைப்புகள் எப்படி இருக்கும்?! அப்படி ஒரு பரவசம் மிகுகிற வார்த்தைதான் இஞ்சையப்பா இந்த இஞ்சையப்பா(அல்லது இதனுடைய பொருள் தருகிற மற்றய வார்த்தைகள்) என்கிற வார்த்தையை கேட்காத யாழ்ப்பாணத்து ஆண்கள் யாராவது இருந்தால் இவர்களுடைய வாழ்க்கை இளம்பெண்களால் சபிக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.

அவள் என்னை எப்பொழுது அப்படி அழைக்கத்தொடங்கினாள் என்பது தெரியாது ஆனால் அது அவள் என் மீது வைத்திருந்த பிரியங்களின் நம்பிக்கையின் அளவீடாக எனக்கு தோன்றியது அவளோடு ஊரில் இருக்கும் வரையும இந்த வார்த்தைகளை நான் கவனித்ததே இல்லை. கடல் கடந்து வந்த பிறகு ஒரு அடைமழை நாளின் பின்னேரமொன்றில் அவள் என்னை அப்படி அழைத்த பொழுது சிலிர்த்துப்போயிருந்தேன் அதற்கு பிறகு அவள் என்னை அழைக்கும் பொழுதில் அவளோடு முழுவதுமாய் வாழ்ந்ததுபோலவும் அந்த நெருக்கத்தை புதுப்பிப்பது போலவும் உணரத்தொடங்கினேன்.. பிரிவறிவித்த பொழுதுகளில் கூட அவளால் இந்த வார்ததைகளை உச்சரிக்காமல் பேச முடியவில்லை அந்தளவுக்கு ஜீவ நெருக்கம் நிறைந்த உறவாக அவளெனக்கு இருந்தாள்.

எனக்கும் அவளுக்கும் இடையில் அவள் என்னை அப்பா என்ற விழிப்புகளோடு எப்பொழுது அழைக்கத்தொடங்கினாள் என்பது தீர்மானமாக தெரியவில்லை அனால் அவள் அப்படி அதிகம் விழிப்பது தொலைபேசியில் அவளோடு பேசும் பொழுதுகளிலென்றுதான் நினைக்கிறேன் அதற்கு நானும் அவளும் தொலைபேசியில்தான் அதிகம் பேசியிருப்பது ஒரு காரணமாயிருக்கலாம்.மற்றும்படி நேரில் சந்திக்கிற பொழுதுகளில் பெரும்பாலும் பேசுவதில்லை என்பது வேறுகதை.சுருக்கமாக சொல்லப்போனல் பேசிக்கொண்டடிருக்கும் பொழுதில் அது தெரியாவிட்டாலும் இஞ்சையப்பா என்று ஒரு தேவதை அழைக்கிற தருணங்கள் அந்த அழைப்புக்குரியவன் வாழ்கிற பொழுதுகள். நினைவுகளை அசைபோடுகிற தனிமைகளில் தெரியும் அந்த நெருக்கம் நிறைந்த வார்ர்ததைகளின் சுகம்! அது அனுபவித்தவர்களுக்கு தெரியும்.

காதலர்களுக்கிடையில் கூட பெண்கள் இயல்பாகவே இப்படி அழைக்கத்தொடங்கி விடுவார்கள் அது அவர்களுக்கிடையில் இருக்கிற நம்பிக்கை மற்றும் நெருக்கத்தை குறித்து வெளிப்படும் என்பது என்னுடைய எண்ணம் மற்றும்படி அனேகம் காதலர்களுக்கிடையில் இது இருக்கும் ஆகக்குறைந்து அவர்கள் இரண்டு பேருக்குமான பொழுதுகளிலாவது கட்டாயமாய் இருக்கும். இது யாழ்ப்பாணத்தில் கணவனை அழைக்கும் வழக்கமாக அன்று தொட்டு இருந்த வருவதில் இருக்கிற அனிச்சையான இயல்பு என்று நினைக்கிறேன்.இந்த இஞ்சையப்பா என்கிற வார்ததை கொடுக்கிற பொருள் அழைக்கிற தொனியிலும் சத்தத்தின் அளவிலும் கூடவே அந்த நேரத்திற்கும் உடல் மொழிக்கும் உரியதாக அமையும் அதை சரியாக கண்டு கொள்வது ஆண்களின் பொறுப்பு.

'இஞ்சருங்கோ' என்பது தற்பொழுது வழக்கத்திலிருந்த குறைந்து விட்டதென்பது நான் அந்த அழைப்புகளை கேட்டது குறைவென்பதிலிருந்து கண்டு கொண்டது. அதன் மருவு வழக்குகளாக இஞ்சையப்பா இஞ்சையுங்கோ போன்றவை இருக்கிறது. இஞ்சருங்கோ என்று பாவிக்கிறவர்கள் முந்தைய தலை முறையினர்தான், உதாரணமாய அப்துல்ஹமீத் யாழ்ப்பாணம் பார்த்தபொழுதில்(தெனாலி) இருந்த யாழ்ப்பாணத்து தலை முறையினர்தான் இப்பொழுது கணவனை இப்படி அழைக்கிறவர்களுக்கு குறைந்தது நாற்பது வயதிருக்கலாம் இது என்னுடைய கருத்து மட்டுமே! மற்றபடி நீங்கள் அப்படி அழைக்கக்கூடாதென்றெல்லாம் நான் சொல்லவில்லை அது உங்களிருவரையும் பொறுத்தது. எனக்கெல்லாம் அவள் சிணுங்கலாய் இஞ்சையங்கோ (இஞ்சையப்பா)என்கையில் செத்துவிடலாம் போலிருக்கும்.


இப்பொழுதிலிருக்கிற தலைமுறை என்னங்கோ அல்லது அப்பா அல்லது இஞ்சையப்பா என்றுதான் அதிகம் பயன் படுத்துவதாய் என்னளவிலான அனுபவம் இருக்கிறது அந்தந்த ஊர் வழக்கத்தின் படிதான் இந்த வார்த்தைகளின் தொனி இருக்கும்.யார் பயன் படுத்துகிறார்களோ இல்லையோ எனக்கந்த மொழி நிறையப்பிடிக்கிறது.பெயர் சொல்லி அழைக்கிற தருணங்கள் போலவே நம்பிக்கைகளோடு நெருக்கத்தின் உறுதியல் தானாக வெளிப்படுகிற இந்த வார்த்தைகள் குடும்ப வாழ்க்கையில் அதற்கதற்குரிய வேளையில் அதற்கதற்குரிய தொனிகளில் பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.

மிக விருப்பமாக பல நாட்களாக எழுத வேண்டுமென நினைத்திருந்த ஒரு விசயம் இப்பொழுதெல்லாம் என்னை எந்த தேவதையும் அப்படி அழைப்பதில்லை என்கிற உணர்வுகள் குறுக்கிடுவதில் மழுமையில்லாமல் வந்திருக்கிறது,பார்க்கலாம் இந்த பதிவையே இன்னொரு பொழுதில் என்னால் வேறுமாதிரியாக எழுத முடியும் எனறு நம்புகிறேன்.இப்போதைக்கு மிகுதியை பின்னூட்டங்களில் பார்த்துக்கொள்ளலாம்.


நன்றி!