Author: Admin
•10:49 AM
தமிழர்களுக்கென்று சில கலை, கலாச்சார பாரம்பரியங்கள் இருக்கின்றன. அவை இன்று மறைந்து வருவதைக் காண முடிகின்றது. ஆனாலும் இவற்றைப் பற்றி எல்லாம் அறிவதிலே எனக்கு ஆர்வம் அதிகமே.

அன்று தமிழர்களிடையே பல சமயம் சார்ந்த சம்பிரதாய நிகழ்வுகள் இடம் பெற்று இருக்கின்றன. மந்திர, தந்திர, மாய வித்தைகள் ஒரு புறமிருக்க சமயம் சார்ந்த பல நிகழ்வுகள் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால் அதன் எச்சங்களைகூட இன்று காண முடியவில்லை.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை சமய சம்பிரதாயங்கலிலே அதிக நம்பிக்கை கொண்டவர்களே. நான் நான் பலரிடம் கேட்டு அறிந்து கொண்டவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.

நான் பிறந்து வளர்ந்தது ஒரு விவசாயக் கிராமம் எனது கிராமத்திலே அன்று நடை பெற்ற ஆனால் இன்று அதன் எச்சங்களே இல்லாத சில நிகழ்வுகளை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.

எனது ஊரிலே பிரசித்தி பெற்ற ஆலயம் ஒன்று இருக்கிறது. (மட்டக்களப்பு, களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயம்) கிராம மக்களின் வயற்காணிகள் நிறைந்திருக்கும் பகுதியிலே ஆலயம் அமைந்திருக்கின்றது. ஆலயத்துக்கும் வயற்காணிகளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.

வேளாண்மைக்கு பூச்சி புழுக்களின் தாக்கம் ஏற்படும்போது கோவில் மடைப்பள்ளி சாம்பலை எடுத்துவயலுக்கு தூவினர். அதற்குக் கட்டுப்படாதவிடத்து பிள்ளையாரை அபிசேகம் பண்ணிய நீரை எடுத்து தெளித்தனர்

சமய ஆசாரத்துடன் பட்டினியாக இருந்த போடியார் ஒருவர் ஒரு பிடி மிளகை வாயினுள் அடக்கி தீர்த்தக் குடத்தை தொழிலோ, தலையிலோ சுமக்க ஏனைய போடிமார் அவருக்கு வெள்ளை மேற்கட்டி பிடிக்க, மணி ஓசையுடன் ஐயர் சங்கு ஊத, பறைமேளம் ஒலிக்க, வடக்கிலிருந்து தெக்கு நோக்கி நீர் பாச்சும் ஒவ்வொரு வாய்க்காலிலும் மிளகு கொஞ்சத்தை சப்பித் துப்பி தீர்த்த நிறையும் கொஞ்சம் ஊற்றுவர். இதுவே தீர்த்தமெடுத்தல் என்பதாகும்.

வயல் அறுவடைக்குத் தயாரானபோது குருக்கள், ஐயர், காவலாளிகள் சகிதம் சென்று வயத் போடிமாருக்கு பொங்கத் பிரசாதம் வழங்குவதுசம்பிரதாயமாகும். சிறுபோக நெல் விளைவுற்ற பருவத்தில் பன்றிக் காவலுக்கு இரவில் தகரம் கொண்டு செல்வதும் கடமையில் தவறியோருக்கு தண்டனை வழங்குவதும் இறுக்கமான கட்டுப்பாடாக இருந்திருக்கின்றது.

அறுவடையின் பின் ஆண்டுதோறும் பிள்ளையார் கோவிலடியில் வட்டை அமுது என்ற மாபெரும் அன்னதானம் நடைபெறும். போடிமார் தமது வயல் பரப்புக்கேற்ற அரிசி, தேங்காய், தயிர், மரக்கறி வகைகள், காசு என்பவற்றை எல்லாம் சேர்ப்பர்.

கோவில் குருக்கள் குளக்கட்டில் உள்ள ஒரு இடத்தில் அமர்ந்திருப்பார். போடிமார் குடை, மேளதாளம், மணியோசை, சங்கொலி என்பவற்றுடன் சென்று கோவித்த பாவனையில் இருக்கும் குருக்களை சமாதானப் படுத்தி திருவமுதுக்கு எழுந்தருளப் பண்ணுவார். திருவிழா ஊர்வலம் போல் நடைபெறும் இவ விழாவில் பொதுமக்களும் பங்குபற்றி மகிழ்வர்.
மறைந்து வரும் தமிழர் நம் சம்பிரதாயங்கள் இன்னும் பல அவ்வப்போது உங்களை வந்து சேரும்.
Author: வந்தியத்தேவன்
•9:33 PM
திருமந்திரம் தந்த திருமூலரால் சிவபூமி என அழைக்கப்பட்ட நாடு இலங்கையாகும். வடக்கே மன்னாரில் திருக்கேதீச்ச‌ரம் தொடங்கி தெற்கே தேவந்திரமுனையில் அமைந்திருக்கும் சிவன் கோயில் வரை சிவாலயங்களே இலங்கையில் அதிகமாக அந்தக்காலத்தில் இருந்தது. கிழக்கில் திருகோணமலை கோணேஸ்வரரும் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரரும், ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வர‌ரும் ஆதிக்கம் செலுத்த மேற்கே சிலாபத்தில் முன்னேஸ்வரர் அருள் பாலிக்கின்றார்.


பஞ்ச ஈச்சரங்கள் என அழைக்கப்படுகின்ற திருக்கேதீச்சரம், திருக்கோணேச்ச‌ரம், முன்னேச்ச‌ரம், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்ச‌ரம் மற்றும் ஒட்டுசுட்டான் தான்தோன்றீச்ச‌ரம் போன்றவை பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவை. இவற்றில் கேதீச்சரமும் கோணேச்சரமும் திருஞான சம்பந்தராலும் சுந்தரராலும் பாடல் பாடப்பெற்றவை.



இவற்றைத் தவிர சோழப்பேரரசர்களால் பொலன்நறுவையில் அமைக்கப்பட்ட சிவன் ஆலயம் இன்று இடிந்து சிதிலமடைந்து காணப்படுகிறது.



ஈழத்தில் சிவ வழிபாடு முக்கியம் பெற முதன்மைக்காரணம் பெரும்பாலான ஈழத்தவர்கள் சைவர்களாக இருப்பதே ஆகும். இன்று கூட நாம் எம்மை இந்துக்கள் என்று அழைப்பதைவிட சைவர்கள் என்றழைப்பதையே விரும்புகின்றோம். சைவ சமயத்தின் முதன் முதல்க் கடவுளாக சிவன் இருக்கிறார். சிந்து வெளி நாகரீக காலத்தில் சிவவழிபாடே முக்கியம் வாய்ந்ததாக இருந்தது. பின்னாளில் ஆதிக்கம் செலுத்திய ஆரியர்களினால் சிவனுக்கு எதிராக விஷ்ணுவை கொண்டுவந்தார்கள். விஷ்ணுவின் ஆதிக்கம் ஈழத்தில் மிகவும் குறைவாகவே அல்லது இல்லையென்றே கூறவேண்டும். அத்துடன் நம் நாட்டில் வைஷ்ணவர்கள் என்ற சமூகம் இல்லை.

பொன்னாலையில் வரதராஜப் பெருமாளும் வடமராட்சி பருத்தித்துறையில் வல்லிபுர ஆழ்வாரும் ஆட்சி செலுத்தினாலும் அங்கே கோயில் நைமித்திய கடமைகளைச் செய்பவர்கள் சைவர் பரம்பரையில் வந்த பிராமணர்கலே ஒழிய வைதீகப் பிராமணர்கள் அல்ல. சில காலங்களுக்கு முன்னர் தென்னிலங்கையில் தெகிவளையிலும் மோதரையிலும் விஷ்ணுவுக்கு ஆலயங்கள் அமைத்தார்கள்.

மிகவும் சமீபத்தில் அஞ்சனேயர் வழிபாடு ஈழத்தில் பரவியது. சுன்னாகத்தில் ஒரு அஞ்சனேயரும் ,தெகிவளை களுபோவிலையில் இன்னொரு அஞ்சனேயரும் இருக்கிறார்கள். சின்மயா மிசனின் மேற்பார்வையில் நுவரெலியாவுக்கு போகும் வழியில் ரம்பொடையில் இன்னொரு உயரமான ஆஞ்சனேயர் இருக்கின்றார்.

சிவனுக்கு அடுத்தபடி ஈழத்தில் புகழ்பெற்றத்து தமிழ்க் கடவுளான முருகன் வழிபாடு. நல்லூர் கந்தசாமி முதல்க் கொண்டு இன்று சிங்கள இனமாக மாற்றப்பட்ட கதிர்காமம் கதிரகம தெய்யோ வரை பல முருகன் ஆலயங்கள் ஈழத்தில் சகல பாகங்களிலும் இருக்கின்றன.

மிகவும் சுருக்கமாக எழுதியிருக்கிறேன் பின்ணூட்டங்கள் மூலம் மேலதிக விபரங்களைத் தாருங்கள் பின்னாளில் உதவியாக இருக்கும்.

பட உதவி இணையம்.