Author: சினேகிதி
•12:54 PM
***முன்குறிப்பு - படங்கள் இணைக்கப்பட்டிருக்கு***

குதியம் குத்துதல் பற்றி யோசிச்சனா நான் முந்தி எழுதின ஒரு பதிவு ஞாபகம் வந்திச்சு *** எச்சரிக்கை*** மீள்பதிவு :)

மலைநாடான் பாலைப்பழத்தைப் பற்றி எழுதினாரா நான் அதைப்போய் வாசிச்சனா இப்ப எனக்கும் நான் ரசிச்சு ருசிச்சு சண்டைபிடிச்சு பிச்சுப் பிடுங்கி சாப்பிட்ட பழம் காய் பற்றியெல்லாம் எழுதவேணும் போல இருந்திச்சா அதான் எழுதினா என்ன குறைஞ்சிடுவன் என்று எழுத வெளிக்கிட்டிட்டன்.

பாலர் வகுப்புப் படிச்ச காலத்தில இருந்தே பள்ளிக்கூடம் போற வழியில ரியூசன் போற வழியில இப்பிடி எப்பெல்லாம் நண்பர்களோட சேர்ந்து வீட்டை விட்டுப் போறனோ அப்பெல்லாம் ஆற்றயும் வீட்டுக்காணியிலோ அல்லது தோட்டத்துக்காணியிலோ கைவைக்காமல் வீடு திரும்பினதா ஞாபகம் இல்லை.



என்ன சத்தம் நறநற என்று? இதைப்படிக்கிற யாரோ ஒரு ஆணுடைய பல்லுத்தான் நறநறக்குது.இதுகள் பண்ணின வால்தனத்துக்கெல்லாம் ஊர்க்காரர் எங்களைத்தானே அடிச்சிருக்குதுகள் என்றுதானே மனசுக்குள்ள திட்டுறீங்கள்.சரி சரி மறந்துபோங்கோ மன்னிச்சுடுங்கோ பால்ய சினேகிதிகளை.

இலந்தப்பழம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. பாலர் வகுப்புப் படிக்கும்போது ரியூசனுக்குப் போனது தேவா ரீச்சரிட்ட பிறகு அவான்ர தங்கை சாந்தாக்காட்ட.அவேன்ர வீட்டுக்குப் போற வழியில ஒரு இலந்தப்பழ மரம் நிக்குது.மரமோ சரியான உயரம்.நான் என்ர நண்பர்கள் சுஜித்தா சுபாசினி டொம்மா இன்னும் கொஞ்சப்பேர் பாலர் வகுப்பில எவ்வளவு உயரம் இருந்திருப்பம் என்று சொல்லவும் வேணுமா? இலந்தப்பழ மரத்துக்குப் பக்கத்தில கிழங்குக்கு தாக்குறதுக்கா ஊமல்கொட்டை பறிச்சு விட்டிருப்பினம் காணிச்சொந்தக்காரர்.எங்களுக்கு கல்லில கொஞ்சம் பாசம் பாருங்கோ அதால கல்லை விட்டிட்டு ஊமல்கொட்டையை எடுத்து போட்டிக்கு மரத்துக்கு எறிவம்.மரத்தில இருக்கிற கொஞ்ச நஞ்ச பழம் அப்பத்தான் பழுக்கத்தொடங்கியிருக்கிற செம்பழம் எல்லாம் விழும் பாய்ஞ்சு பாய்ஞ்சு பொறுக்கிறது.கொஞ்ச நேரம் மரத்துக்குக் கீழ நிண்டா காணிக்காரர் வந்து “யாரடா அது இலந்தைக்குக் கீழ” என்று சத்தம்போடுவாரெல்லோ.ஒரு விசயம் பாருங்கோ ஒரு நாள் கூட “யாரடி அது மரத்துக்குக் கீழ” அவர் கேட்டதே இல்லை :-) எங்கட குட்டிச்சைக்கிளை மெல்லமா உருட்டிக்கொண்டு ரியூசனுக்குப்போவம்.ம் ம் அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பர்களே...

பிறகு கொஞ்சம் வளர்ந்தாப்போல ஸ்கொலர்சிப் ஸ்பெஸல் கிளாஸ் போற வழியிலதான் அணிஞ்சில்பழ மரம் இருக்கு.என்னத்துக்கு அணிஞ்சில் என்று பெயர் வந்திருக்கும் என்று தெரியேல்ல..அணில் சாப்பிடுற பழமாயிருக்குமோ?? எனக்கென்றா அந்த மரத்தில அணிலைப்பார்த்ததா ஞாபகம் இல்லை.அணிஞ்சில் பழமும் ஒரு வித்தியாசமான ரேஸ்ற்தான்.கிட்டத்த றம்புட்டான் பழத்தின்ர உள்ளான் மாதிரி சின்னனா இருக்கும் என்று நினைக்கிறன்.பழத்தை சாப்பிட்ட அணிஞ்சில்பழக் கொட்டையை நிலத்தில தேய்ச்சு ஒரு சிறிய துவாரத்தை உண்டாக்கினா அதில ஒரு விதமான ஓசை வரும் அதை வைச்சு விசிலடிக்கலாம் :-)


(படம் உபயம் : வசந்தனண்ணா:) )

இன்னொரு வீட்டில ஜம்புக்காய் இருக்கு.றோஸ் நிற ஜம்புக்காயை விட பச்சை நிற ஜம்புக்காயைத்தான் எனக்குப் பிடிக்கும்.நாங்கள் களவெடுக்காம சாப்பிட்டதெண்டா ஜம்புக்காய்தான்.அந்த வீட்டுக்கார அம்மம்மான்ர பிள்ளைகள் எல்லாரும் கொழும்பில அதால அவாக்கு நாங்கள்தான் பேரப்பிள்ளைகள் மாதிரி ஜம்புக்காய் சீசனில மறக்காம ஒரு பெரிய பாக்ல கொண்டுவந்து தருவா வீட்ட.அத விட நாங்களும் விருப்பமான நேரத்தில போய்ச் சொல்லிட்டு ஆய்ஞ்சு சாப்பிடலாம். எங்கட காணிக்குள்ள காரைக்காயும் சூரைக்காயும் இருக்கு.எங்களுக்குத் தனியா அங்க போறதுக்கு அனுமதியில்லை இருந்தாலும் நிறைய நாள் அப்பப்பாவுக்குத் தெரியாம காணிக்குள்ள நுழைஞ்சிருக்கிறம் சூரைக்காய் பிடுங்க.ஒரு நாள் நாங்கள் காணிக்குள்ள நிக்கிறநேரம் பார்த்து யாரோ வாற சத்தம் கேட்டு பதட்டத்தோட ஓடுபட்டு விழுந்தெழும்பி கைகாலெல்லாம் சிராய்ப்புகளோட ஓடித்தப்பியிருக்கிறம்.


(கொய்யாக்காய்)



(நெல்லிக்காய்)

வீட்டில நிக்கிற கொய்யாக்காய் மாதுழம்பழம் நெல்லிக்காய்களையும் விட்டு வைக்கிறதில்லை. நெல்லிக்காயைத் தாத்தா ஏதோ மருந்துக்குப் பாவிக்கிறவர் என்று அம்மாக்கு நாங்கள் சும்மா புடுங்கி எறிஞ்சு விளையாடுறது விருப்பமில்லை அதால அம்மா வீட்டில இல்லாத நேரமாப் பார்த்து நாங்கள் நெல்லிமரத்தில ஏறிடுவம்.அப்பிடித்தான் ஒருநாள் நான் நெல்லிமரத்தில கீழ என்ர நண்பிகள் கொஞ்சப் பேர் ஏந்துறதுக்கு ரெடியா சட்டையைப் பிடிச்சுக்கொண்டு நிக்கினம் நான் ஆய்ஞ்சு போடுற காய்களைப் பிடிப்பதற்கு.நெல்லிமரம் நிற்பது மதில் கரையோட.எங்கட வீடு தெருவோரத்தில கடைசி வீடு.அங்கால எல்லாம் தோட்டங்கள்.தோட்ட வேலை முடிஞ்சு தியாகண்ணை வந்துகொண்டிருந்தவர் டக்கெண்டு கேற்றைத்திறந்துகொண்டு வீட்டுக்குள்ள வந்ததும் மட்டுமில்லை கேற்றில ஏறி என்னை வலுக்கட்டாயமாத் தூக்கிக்கொண்டு இறங்கிட்டார்.நான் பிலத்த சத்தமா அவரோட வாய்காட்டுறன் “இப்ப என்னத்துக்கு என்னைத்தூக்கினீங்கள் நான் என்ன உங்கட வீட்டு மரத்திலயோ ஏறி நின்டனான்” அது இது என்று ஒரே சத்தம். அவர் ஒன்றும் சொல்லாம நான் நின்ற கொப்பைக் காட்டினார்.நான் நின்ற இடத்துக்குக் கொஞ்சம் தள்ளி ஒரு கோடாலிப்பாம்பு நிக்குது.ஐயோ என்று கத்திக்கொண்டு ஒரே ஓட்டம்.அதுக்குப்பிறகு தியாகண்ணையை எங்க கண்டாலும் அவர் நான் கத்தின மாதிரிக் கதைச்சுக் காட்டுவார் எனக்கு ஐயொ மானம்போகுதே என்று கத்தோணும் போல இருக்கும்.

யாராவாது எக்ஸோறாப்பழம் சாப்பிட்டு இருக்கிறீங்கிளா? ஓருதரும் சிரிக்க வேண்டாம் ஓகே.நான் மட்டுமில்லை என்ர பிரண்ட்ஸ்ம் சாப்பிட்டு இருக்கினம்.அந்தப்பழம் சிவப்பாகிக் கறுப்பாகும் ஆனால் அது கறுப்பாக முதலே நாங்கள் சாப்பிட்டுடுவமே :-)


(நாவல்பழம்)

கனடாவில் ஒரு பாகிஸ்தான் கடையில் இலந்தப்பழம் நாவல் பழம் எல்லாம் வாங்கிச் சாப்பிட்டு இருக்கிறன் இப்ப அந்தக் கடையைத்தான் போய்த் தேடவேணும்.

பிறகு எனக்குப் பதின்மூன்று வயதிருக்கும்போது மாத்தளைக்கு போயிட்டம்.அங்க இந்த இலந்தப்பழம் எல்லாம் இல்லை.அங்க ரியூசனுக்குப் போன ரீச்சர் வீட்ட வெரலிக்காய் மரம் இருக்கு. வெரலிக்காய் ஒரு கசப்பு உவர்ப்பு எல்லாம் மிக்ஸ் பண்ணின மாதிரி ஒரு ரேஸ்ற் பச்சை நிறத்தில இருக்கும். உப்புத்தண்ணில ஊறப்போட்டு தூள் தடவி விற்பார்கள் கடைகளில் பேருந்துகளில்.நினைக்கவே வாயூறுது.பழமும் சாப்பிடலாம் எனக்குக் காய்தான் விருப்பம்.

(ஆம்பரலங்காய்)

மற்றது ஆம்பரலங்காய்.ரீச்சற்ற மாமிக்கு எங்களைக் கண்டாலே பிடிக்காது ஏனென்றால் ரீச்சர் எங்களை ஆய்ஞ்சு சாப்பிடுங்கோ என்று விட்டிடுவா நாங்களும் உப்பு தூளெல்லாம் கொண்டுபோய் ரீச்சற்ற மாமிக்கு காட்டிக் காட்டி சாப்பிடுவம்.பிறகு கேள்விப்பட்டம் ரீச்சற்ற மாமி சுங்கான் குடிக்கிறதுக்காக ஆம்பரலங்காய் பக்கத்து வீட்டு ஆக்களுக்கு விக்கிறவாவாம் அதில நாங்கள் ஆப்பு வைச்சதாலதான் எங்களை அவாக்குப் பிடிக்காதென்று.

இன்னும் பழங்கள் காய்களைப் பற்றிச் சொல்ல நிறைய இருக்கு.நீங்களும் உங்களுக்குப் பிடித்த பழம் காய்களைப் பற்றிச் சொல்லுங்கோ.

பின்னோட்டங்களில் உரையாடிய பழங்களின் படங்கள்:

1)அன்னாமுண்ணா



2) முழுநெல்லி - கச்சல் நெல்லிக்காய்


3)நான் எழுத மறந்த மசுக்குட்டிப்பழம்


4) Passion Fruit


5)புளியம்பழம் ( ஆ..வாயூறுது)


6)விளாம்பழம்

Author: geevanathy
•7:48 AM

களத்து மேட்டிலும் தேன் காட்டிலும் பொலிவை நாடும் புதுவார்த்தைகள்


திருகோணமலையில் உள்ள தம்பலகாமப் பகுதி தமிழ் முன்னோர்கள், உயிர்காக்கும் நெல்லைச் சேமிக்கும் களத்து மேட்டிலும், பூலோக அமிர்தம் என்று போற்றப்படும் தேன் எடுக்கும் பொதுக்காட்டிலும் பேசுவதற்கெனத் தங்கள் தாய் மொழியான தமிழில் இருந்து பாஷைகளைத் தோற்று வித்துப் பேசிவந்துள்ளனர். இந்த விசித்திர மொழிகள் இன்று பேச்சு வழக்கற்று மறைந்து கொண்டிருக்கின்றன. கால மாற்றத்தின் காரணமாக களத்து மேட்டில் விவசாயிகள் பேசிவந்த பாஷை தேவையற்றதாகவும் ஆகியுள்ளது.


தமிழ் மொழியில் இருந்து தோற்றிவிக்கப்பட்டவைகளாயினும் இம் மொழிகளின் வார்த்தைகள் தமிழ் மொழியின் நின்று வேறு வேறு அர்த்தமுடையவையாகவும் காணப்படுகின்றன.நெல் வயல் அறுவடை ஆனதும் வயல்களின் மத்தியிலுள்ள களத்து மேட்டில் வட்ட அணியாக சூடு வைக்கப்பட்டிருக்கும். பொங்கி விட்டு இறைவழிபாடாற்றி சூடுமிதிப்பு தொடங்கியதும் சூடுமிதிப்பாளர்களிடையே ஒரு விநோதமான மொழி பேசப்படும். களத்து மேட்டில் பேசப்படும் இப்புதிய மொழியின் வார்த்தைகள் அதிக நெல்லைப் பெறும் ஆவல் உடையதாகவே அமைந்துள்ளன.



உதாரணமாக களத்தில் பேசப்படும் வார்த்தைகளில் சில பின்வருமாறு: நெற்கதிர்கள் சூடு என்று குறிப்பிடுவது வழமை. ஆனால் களப்பாஷையில் சூட்டை - போலன் என்று சொல்வார்கள். சூடுமிதிப்புக்கு ஈடுபடுத்தும் எருமைக் கடாக்களை வாரிக்காலன் என்று அழைப்பார்கள். வாரிக்காலன் என்றால் அதிகமாக நெல்லைத்தரும் கால்களை உடையவை என்பது பொருள். வைக்கோலை விட்டு உதிர்த்த நெல்குவியலை பொலி என்று குறிப்பிடுவார்கள். பொலிஎன்றால் பொலிந்து அதிகப்படுவது என்பது பொருள். களத்தில் சூடு மிதிப்பில் ஈடுபடுவோரின் வாய்களில் பொலி,பொலி என்ற சொல் தாராளமாகவே புழங்கும். இதே போல் நெற்கதிருக்கு வயலில் வளைந்து வளைந்து மிதித்து நெல் மணிகளை உதிர்க்கும் எருமைக்கடாக்கள் போடும் சாணியைப் போல் என்றும் வைக்கோலை மிதிஞ்சான் என்றும், நெல்லில் உள்ள பதரைக் கள்ளன் என்றும், சாப்பிடுவதை அல்லது குடிப்பதைப் பெருகுவதென்றும், தண்ணீரைக் கலங்கள் என்றும், தண்ணீர் குடிப்பதைக் கலங்கள் பெருகுவதென்றும், இப்படி களத்திலுள்ள தேவைகளுக்காகப் பேசப்படும் வார்த்தைகள் எல்லாம் தமிழுக்கு வேறான ஒரு புதிய மொழியாகவே தோன்றும்.



தேன் காட்டுக் காரர்கள் பேசும் மொழி


பூலோக அமிர்தம் எனப்போற்றப்படுகின்ற தேன் பெறுவதற்காகக் காட்டுக்குச் செல்லும் தேன்காட்டுக்காரர்கள் தேனை ஒரு தெய்வீகப் பொருளாக மதிப்பதால் அவர்கள் காட்டில் பேசுவதற்கென ஒரு புதிய மொழியை உருவாக்கிப் பேசிவந்துள்ளனர். வனவேட்டையில் தேன் காடு போவது தான் மிகவும் அபாயகரமானது என்பது வேட்டைக்காரர்களின் கருத்தாகும். பத்து அல்லது பதினைந்து பேர்கள் ஒருங்கு சேர்ந்து தேன் காட்டுக்குச் சென்றாலும் காட்டில் முப்பது யார், நாற்பது யார் தூரத்துக்கு ஒருவராக காடெல்லாம் பரந்து தனித்தனியாகவே தேன் தேடிச்செல்வார்கள்.



தேன் காட்டுக்காரர்களின் முழுக்கவனமும் மரங்களில் தேனீக்கள் மேல் நோக்கிப் பார்ப்பதிலே நிலைத்திருப்பதால் கீழே காடுகளில் பதுங்கி இருக்கும் மிருகங்களைக் கவனிக்கத்தவறி விடுவார்கள். ஆகவே புதர்களில் மறைந்திருக்கும் புலிகளினாலோ, கரடிகளினாலோ தேன் காட்டுக் காரர்கள் தாக்கப்படுவது மிகச் சர்வசாதாரண விஷயம். இந்த அபாயகரமான தொழிலைச் செய்பவர்கள் தேன் காட்டில் பேசிக் கொள்ளும் மொழியும் தமிழ் அல்லாத ஒரு புதிய மொழியாகவே தோன்றுகின்றுது.


முப்பது நாற்பது யார்களுக்கு ஒருவராக காட்டில் வரிசையாகத் தேன் பார்த்து வருபவர்களில் ஒருவர் ஒரு மரக்கொம்பில் தேனைக் கண்டு விட்டாரானால் தன் சகாக்களுக்கு அதை தெரியப்படுத்த கோ என்று குரல் கொடுப்பார். அவர் குரலைக் கேட்ட சகா ஒருவர் அவர் என்ன சொல்கிறார் என்பதை அறிந்து கொள்வதற்காக கோ என்று ஒற்றைக் குரல் கொடுப்பார். அப்பதில் குரல் கேட்டதும் தேன் கண்டவர் கோ, கோ என்று இரட்டையாகச் சமிக்ஞையைவெளிப்படுத்துவார். இதை இரட்டிப்பதென்று தேன் வேட்டைக்காரர் குறிப்பிடுவார். தேன் கண்டவர் முதல் கோ என்றது நண்பர்களே! என்று காட்டில் தேன் பார்த்து வரும் தன் சகாக்களுக்கு ஒரு செய்தியைச் சொல்ல முயல்வதாகும். அதற்கு அடுத்து வந்தவர் கோ என்றது என்ன என்று கேட்பதைப் போன்று அர்த்தமுடையதாகும். அதற்கு தேன் கண்டவர் கோ கோ என்று இரட்டித்தது தேன் இங்கே இருக்கிறது எல்லோரும் இங்கே வாருங்கள் என்று கொடுக்கும் காட்டுச் சமிக்ஞை ஆகும். இந்த சமிக்ஞையைக் கேட்டதும் காடெல்லாம் வலையிட்டதைப் போல் பரவி வந்த தேன் காட்டுக்காரர்கள் தேன் இருக்கும் மரத்துக்கு வந்து கூடித் தேன் கூடுகளை வெட்டி வதைகளை எடுத்து பரப்பப்பட்ட இலைகளில் குவிப்பார்கள். எல்லோரும் அமர்ந்திருந்து தேன் வதைகளை உண்பார்கள்.



தேன் வதைகளை எடுத்துப் புசிக்குமாறு ஒருவருக்கொருவர் சொல்ல விரும்பினால் இன்றுள்ளவர்கள் ஆங்கிலத்தையும் தமிழையும் இடைக்கிடை கலந்து பேசுவதைப் போல் எடுத்துக் கொட்டாப்பி என்று சொல்லுவர். எடுத்து என்பதை தமிழ்ச் சொல்லாகவும் கொட்டாப்பி என்பது புரியாத காட்டுப் பாஷையாகவும் தோன்றும். கொட்டாப்பி என்பதற்குச் சாப்பிடு என்பது பொருள். கொட்டாப்பி, கொட்டாப்பி என்று ஒருவர் இன்னொருவரை கட்டாயப்படுத்தினால் எனக்கு வேண்டாம் அல்லது என்னால் முடியாது என்று கூறுவது தேன் காட்டுமரபாகாது. ஆகவே முன்னதான் என்று கூற வேண்டும். முன்னதான் என்றால் எனக்கு வேண்டாம் அல்லது என்னால் முடியாது என்பது பொருள். தேன் காட்டிலும் தண்ணீருக்குக் கலங்கள் என்றும் பருகுவதற்கு பெருகுவதென்றும் குறிப்பிடுவார்கள்.



தம்பலகாமம்.க.வேலாயுதம்

Author: வசந்தன்(Vasanthan)
•11:01 PM
எல்லாருக்கும் இந்தச் சொல் தெரியுமோ தெரியாது. எங்கட இடத்தில குறிப்பிட்ட இளமட்டத்தில இந்தச்சொல் பயன்பாட்டில இருந்திச்சு. இன்னொருத்தனைத் திட்டவோ மட்டந்தட்டி நக்கலடிக்கவோ இந்தச் சொல்லைப் பாவிப்பம்.

ஒருத்தன் விளங்காத்தனமாக அல்லது சிறுபிள்ளைத்தனமாக ஏதாவது செய்தால் அல்லது தொடர்ச்சியாக ஒரேதவறைச் செய்தால், எப்படி முயன்றும் ஒருத்தனைத் திருத்த முடியாதென்று எரிச்சல் தோன்றும்போது இச்சொல்லைப் பாவித்துத் திட்டுவதுண்டு.'அவனொரு அப்பக்கோப்பை. ஒரு இழவும் விளங்காது' எண்டு ஒருத்தனத் திட்டுவோம். அதேபோல் திட்டும் வாங்குவோம்.

இதன் சரியான தோற்றம், காரணகாரியங்கள் எதுவுமறியாமலேயே, ஆனால் சரியான சந்தர்ப்பங்களில் இச்சொல்லைப் பாவிப்போம். எந்த இடங்களில் இச்சொல்லைப் பாவிப்பதென எல்லாருக்கும் தெரிந்திருந்தது.

சரி இந்தச் சொல்லின் சரியான அர்த்தத்துக்கு வருவோம். அப்பக்கோப்பை என்றால் அப்பம் சுடும் தாச்சியைக் குறிக்கும். அப்பத்தாச்சி என்ன செய்யும்? எதையும் தன்னிடம் வைத்துக்கொள்ளாது. அதில் ஊற்றும் மாவை அப்படியே அப்பமாக்கி சிறுதுண்டுகூட தாச்சியில் ஒட்டாதபடிக்கு அழகாக அப்படியே திருப்பிக்கொடுத்துவிடும்.

தோசைக்கல்லிற்கூட மாவு ஒட்டும், இட்லிச்சட்டியில் மாவு ஒட்டும். ஆனால் அப்பத்தாச்சியில் எப்போதாவது மாவு ஒட்டிப்பார்த்திருக்கிறீர்களா? அதுதான் அந்தச் சட்டியின் சிறப்பு.

இங்கே இச்சொல்லை அப்பக்கோப்பை என்று மாற்றி ஒருவனுக்கு அல்லது ஒருத்திக்கு (இதுகளப் போடாட்டி பிறகு சண்டைக்கு வருவியள்) திட்டுவதற்குப் பாவிக்கிறோம். இதன் அர்த்தம் என்னவென்றால் எப்படி அப்பச்சட்டி தனக்கென எதையும் வைத்துக்கொள்ளாமல் தனக்குள் ஊற்றப்படும் சகலதையும் திருப்பிக்கொடுத்துவிடுகிறதோ அதேபோல் இவர்களும் எதையும் உள்வாங்கிக்கொள்வதில்லை. அனைத்தையும் திறந்துவிடுவார்கள். இவர்களுக்கு எப்படிச் சொல்லிக்கொடுத்தாலும் திருந்தப்போவதில்லை என்ற கருத்தில் இச்சொல் பாவிக்கப்படுகிறது.

இன்றும் ஏராளமானவர்கள் இச்சொல்லின் விளக்கத்தை அறியாமல் பாவித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு விளக்கும் முகமாகவே இப்பதிவு போட்டேன்.

திடீரென்று ஏனிந்தச் சொல் பற்றி யோசினை வந்ததெண்டா, இப்ப தான் கொஞ்சத்துக்கு முதல் ஒருத்தரை நேர திட்டிப்போட்டன். அவருக்கு இந்தச்சொல் புதுசு. அதுக்கு அவர் விளக்கம் கேட்டார். அவருக்கு விளங்கப்டுத்தின கையோட அதையே ஒரு பதிவாப்போடுறன்.

அப்பக்கோப்பையள் ஆராவது என்ர வலைப்பதிவப் பாக்க வருவினந்தானே. அவையளுக்கு ஒரு விளக்கமா இருக்கட்டுமெண்டு போட்டு வைக்கிறன்.

'பன்னாடை' எண்டு திட்டுறதுக்கும் இதுக்கும் கிட்டத்தட்ட ஒரே பொருளாத்தான் இருக்கு. பன்னாடை தேவையற்றதை மட்டும் வைத்துக்கொண்டு மற்றதை விட்டுவிடும். அப்பக்கோப்பை எல்லாவற்றையும் விட்டுவிடும்.
ஆனா பன்னாடை எண்டு திட்டினா கடுமையாக் கோவம் வரும். மாறாக அப்பக்கோப்பையெண்டது அதே கருத்தைத்தாற ஆனா ஏச்சு வாங்கிறவன்(ள்) சிரிச்சுக்கொண்டே கேட்டுக்கொண்டு போற மாதியொரு சொல்லு.

நீங்களும் ஏன் திட்டுவதற்கோ ஏசுவதற்கோ இந்தச்சொல்லைப் பயன்படுத்தக்கூடாது?
முயன்றுபாருங்கள்.

=========================================
இதுவும் ஒரு மீள்பதிவே.
பின்னூட்டங்களுடன் கூடிய மூலப்பதிவுக்கான சுட்டி:
வசந்தன் பக்கம்: 'அப்பக்கோப்பை' பற்றிய ஓர் ஆராய்ச்சி.
Author: வசந்தன்(Vasanthan)
•10:44 PM
முசுப்பாத்தி...
இது எம்மிடையே(ஈழத்தில்) பேச்சு வழக்கில் பரவலான பயன்பாட்டிலிருக்கும் சொல். பம்பல் என்பதன் ஒத்த கருத்தாகப் பாவிக்கிறோம். பம்பல் என்பதும் புரியாதவர்களுக்கு:
நகைச்சுவையாகப் பேசுதல் அல்லது நகைச்சுவை எனும் பொருளில் பாவிக்கப்படுகிறது.
'இது நல்ல முசுப்பாத்தி' என்றால் 'நல்ல நகைச்சுவை' என்று கருத்து. 'முசுப்பாத்தியான ஆள்' என்றால் 'நகைச்சுவையான மனிதன்'.
'முசுப்பாத்தியாகப் பேசக்கூடியவர்' என்றால் 'நகைச்சுவையாகப் பேசக்கூடியவர்'.

இச்சொல்லை நானும் இன்னும் ஈழத்தைச் சேந்த சிலரும் வலைப்பதிவிற் பயன்படுத்தியுள்ளோம். இந்தச் சொல் எப்படி வந்தது என்று சிந்தித்ததுண்டு. அனேகமாய் ஏதாவது ஐரோப்பிய மொழியிலிருந்து தான் வந்திருக்கும் என்று நினைத்திருந்தேன். இன்றுதான்  இச்சொல் பற்றி அறியும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது.

பண்டிதர் வீ. பரந்தாமன் எழுதியுள்ள ஒரு புத்தகத்தில் (வேர் - அடி வழித் தமிழ்ச் சொற்பிறப்பியற் சிற்றகர முதலி. – பெயரைப் பார்த்துப் பயப்பட வேண்டாம்) இச்சொல் பற்றி எழுதியுள்ளார். ஆச்சரியமாயிருக்கிறது, இது தமிழ்ச்சொல் என்பது. இதை முனைவர் கு. அரசேந்திரனும் வியந்துள்ளார். இனி பண்டிதர் பரந்தாமனின் எழுத்து அப்படியே.

==============================================================

முசுப்பாத்தி: முசி – (முசிப்பு + ஆற்றி) – முசிப்பாற்றி – முசிப்பாத்தி = இளைப்பாறுகை, இளைப்பாற்றுகைப் பொருட்டுப் பேசும் வேடிக்கைப் பேச்சு, நகையாட்டு.

முசிதல் = 1.அறுதல்.
2.கசங்குதல்.
3.களைத்தல்.
4.ஊக்கங் குன்றுதல்.
5.மெலிதல் “அற்பமனம் முசியாள்” (அரிச்சந்திர மயான காண்டம். 115) 6.அழிதல்.

முசித்தல் = 1.களைத்தல்.
2.வருந்துதல்.
3.மெலிதல்.
4.அழிதல்.
5.கசங்குதல்.

முசிப்பு < முசி = 1.மெலிவு. 2.களைப்பு. 3.அழிவு. முசிப்பாற்றி = இளைப்பாற்றுகை. (Winslow's Tamil English Dictionary)
முசிப்பாறுதல் = இளைப்பாறுதல். (Winslow's Tamil English Dictionary)

முசிப்பாற்றி – முசிப்பாத்தி - முசுப்பாத்தி.
சிலர் அறியாமையினால் இச்சொல்லை பிறமொழிச் சொல்லெனக் கூறுகின்றனர். அதற்கு இச்சொல் பிழையாக, ‘முஸ்பாத்தி’ என்று உச்சரிக்கப்படுவதும் ஒரு காரணமாகும். இவ்வாறே பல தமிழ்ச் சொற்களைப் பிறமொழி ஒலிகளில் உச்சரித்து வேற்று மொழிச் சொற்களாகக் காட்டுகின்றனர். பண்டிதரேயானாலும் சொல்லியல் மொழிநூற்புலமையிலாராயின் பொருடெரியிற் சொல்வதேயன்றி, அச்சொல் இன்ன மொழிச் சொல்லென்று துணிந்து கூறுதலை ஒழித்தல் வேண்டும்.


===========================================================
இது உண்மையில் இன்று எழுதப்பட்ட இடுகையன்று. நான்கு வருடங்களுக்கு முன்பு (May 16, 2005)என் வலைப்பதிவில் எழுதப்பட்டது. இவ்வலைப்பதிவின் முதலிடுகையாக இது மீள்பதிவாக்கப்படுகிறது.
பின்னூட்டங்களுடன் கூடிய மூலப்பதிவுக்கான சுட்டி:
வசந்தன் பக்கம்: முசுப்பாத்தி பற்றி முசுப்பாத்தியாக...

* இப்போதைக்கு என்னால் முடிந்தது மீள்பதிவு தான் ;-)