Author: கானா பிரபா
•12:54 AM

ஈழத்து முற்றம் குழும வலைப்பதிவு : இரண்டு ஆண்டுகள், 41 பதிவர்கள், 301 பதிவுகளோடு

ஈழத்து முற்றம் என்ற இந்தக் குழும வலைப்பதிவு , ஈழத்தின் பல்வேறு பிரதேசங்களில் வாழும் தமிழ்பேசும் பதிவர்களைத் திரட்டி ஜூன் 5, 2009 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதாகும். இன்றுடன் 301 பதிவுகளைத் தொடும் ஈழத்து முற்றம் ஈழத்தின் பிரதேசவழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள், ஆளுமைகள் என்று பல்வேறுவிதமான தலைப்புக்களில் இடுகைகளைப் பகிர்ந்திருக்கின்றோம். இன்னும் பல பதிவுகளோடு இந்தத் தளம் தொடர்ந்தும் இயங்கும் என்று உறுதிபடக்கூறுகின்றோம்.

இன்று 41 பதிவர்களின் பங்களிப்போடு கூட்டுவலைப்பதிவாக இயங்குகின்றது ஈழத்து முற்றம்.

இந்தத் தளம் என்பது தமிழால் ஒன்றுபட்ட ஈழத்துப் பதிவர்கள் தத்தமது பிரதேசத்தின் அடையாளங்களைப் பகிர்வதன் மூலம் தமிழ் உலகின் மற்றய பாகங்களில் வாழும் தமிழ் உறவுகளின் மொழி, பழக்க வழக்கக் கூறுகளோடு ஒப்பு நோக்கவும் ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. அத்தோடு ஜோசபின் என்ற தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரி ஜோசபின் தனது ஆய்வுப்பணிக்காக ஈழத்து முற்றம் குழுமப்பதிவைத் தேர்ந்தெடுத்து ஆய்வைச் சிறப்புற முடித்ததையும் இவ்வேளை மகிழ்வோடு பகிர்கின்றோம்.

இந்தக் குழுமம் மூலம் இன்னும் செழுமையான ஈழத்துப் பதிவர்கள் இணைந்து தம் பகிர்வுகளை அளிக்கவேண்டும் என்பதும் எமது அவாவில் ஒன்றாக இருக்கின்றது. இந்தக் குழுமத்தில் இணைந்து பங்கேற்க விரும்பும் உறவுகள் பின்னூட்டம் வாயிலாக அறியத் தரலாம், ஈழத்து முற்றம் குழுவின் மட்டுறுத்துனர்கள் மூலம் பரிசீலிக்கப்ட்டு, ஆக்கபூர்வமான பதிவர்கள் உள்வாங்கப்படுவர். இதுவரை பங்களித்தவர்களுக்கும் தொடர்ந்து பங்களிப்போருக்கும் எமது நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக.

ஈழத்து முற்றம் குழுமப் பதிவர்கள் சார்பில்
Author: கானா பிரபா
•9:29 PM
தற்போது 60 க்கு மேற்பட்ட இலங்கை வலைப்பதிவர்கள் இணைந்து கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் வலைப்பதிவர் சந்திப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த நிகழ்வின் நேரடி ஒளிபரப்பை இங்கே சென்று பார்க்கலாம்.

http://www.livestream.com/srilankatamilbloggers
Author: கானா பிரபா
•3:56 AM
இந்த ஆண்டு யூன் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பித்தது ஈழத்து முற்றம் என்ற இந்தக் குழும வலைப்பதிவு. இன்னும் இரண்டு நாட்களோடு இரண்டு மாதங்களை எட்டிப்பிடிக்கும் இந்தக் குழுமத்தில் புதிய இடுகைகள், பதிவர்களின் சொந்த வலைத்தளங்களில் இருந்து மீள் இடுகையாகப் பகிர்ந்த பதிவுகள் உட்பட இதுவரை 76 இடுகைகளைக் கண்டிருக்கின்றோம்.

இந்தக் குழுமத்தை ஆரம்பித்தபோது சொன்னது போல ஈழத்தின் பிரதேச வழக்குகள், பண்பாட்டுக் கோலங்களின் அணிவகுப்பாக, ஈழத்தின் பல்வேறு திசைகளில் வாழும், வாழ்ந்த பதிவர்களை ஒன்றிணைத்து இந்த ஈழத்து முற்றம் குழும வலைப்பதிவை இயங்க வைத்திருக்கின்றோம். இன்னும் பல ஈழ நண்பர்களை இந்தக் குழுமத்தில் இணைந்து செயற்படவும் அன்புடன் அழைக்கின்றோம். தனிமடல் மூலம் kanapraba@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் விருப்பைத் தெரியப்படுத்தவும்.

இன்று ஐம்பது பதிவர்களைக் கொண்டியங்கும் இந்தக் குழும வலைப்பதிவில் இதுவரை ஒரு சில பதிவர்கள் தமது படைப்புக்களை வழங்காவிடினும் காலவோட்டத்தில் அவர்களின் நேரச் சிக்கல் களையப்பட்டுத் தம் பங்களிப்புக்களை வழங்க வேண்டும் என்றும் அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.

"அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு" என்பார்கள். எமக்கிடையே இருந்த சிறு சிறு பேதங்கள் இன்று எம்மினத்தின் எதிர்கால அடையாளத்தைக் கேள்விக்குறியாக்கி விட்டிருக்கும் இந்த நிலையில் எம்மால் முடிந்தளவு எம் தாய் தேசத்தின் தனித்துவமான அடையாளங்களை இப்படியான வலையாவணமாகத் திரட்டுவோம்.

இந்த வேளை இன்னொரு நல்ல செய்தி ஒன்றையும் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம். இந்த ஈழத்து முற்றம் குழும வலைப்பதிவில் இடம்பெறும் ஆக்கங்களில், எழுத்தாளரின் சுய தேடலில்/சிந்தையில் உருவான கட்டுரைகள் , சொந்த முயற்சியில் விளைந்த ஆராய்ச்சிப் பகிர்வுகள் (உசாத்துணை விபரங்கள் குறிப்பிடப்பட வேண்டும்) போன்றவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான ஆக்கங்கள் இந்த ஆண்டு முடிவடைவதற்குள் தொகுக்கப்பட்டு , தைத்திருநாள் தமிழ்ப்புத்தாண்டு நாளில் வடலி வெளியீட வெளிவர இருக்கின்றது என்பதையும் மகிழ்வோடு சொல்லி வைக்கின்றோம்.

அன்புடன்
ஈழத்து முற்றம் குழும நண்பர்கள்

படம் உதவி: http://www.imagesofasia.com