Author: ந.குணபாலன்
•12:25 PM

கொண்டல்மரமே! 

கொண்டல்மரமே! கொண்டல்மரமே! சுகந்தானே? 
நாங்கள் கும்பிட்டுக் கொண்டாடுந் தெய்வமே!
கொண்டல்மரத்தாச்சீ !  நீயும் சுகந்தானே?
மீண்டும் வந்துன்னை நேரில்
கண் நிறையக் கண்டு , மனம் ;
வேண்டிக் கும்பிட எனக்கும் வேளை 
எண்டைக்கு வருமோ?
சண்டி! சாமுண்டி! சண்டிகா பரமேசுவரி !

உடைஞ்ச ஊரும் ,
இடிஞ்ச வீடுகளும், 
புறிஞ்ச உறவுகளுமாக 
குடியழிஞ்ச நாடுமாச்சே!  
தேடித் திரிஞ்சு அலைஞ்சாலும்,
கூடிச்சீவிச்ச சாதிசனத்திலை பாதிசனம்;  
ஓடிப்போன இடம்   ஆர் கண்டது?
கூடி வாழ எங்களை எல்லாம் ஊருக்குக்   
கூட்டி வருவியே?
கொண்டல்மரத்தாச்சி!
சண்டி! சாமுண்டி! சண்டிகா பரமேசுவரி !



ஆரார் எங்கினை இருக்கினம்?
பூவும், பிஞ்சும், காயும் கனியும்;
கொப்பும், கிளையுமாய் ;
வேரோடும்,வேரடி மண்ணோடும்;
பாறிப் பிரண்டு போன 
பூமரம் எது?, மாமரம் எது?
ஆரார் மோசம் போவிட்டினம்?
அள்ளி எடுக்கவும்,
கொள்ளி வைக்கவும்,
ஆளில்லாமல் அனாதையாய்
ஆரார் போக்கறப் போச்சினமோ?
அறுந்துபோன காலம் போட்டு உலைக்க,
ஆரார் ஆய்க்கினை படுகினமோ ?
ஏதிலியாய் எல்லாமே கைபறிஞ்சு
ஆரார் ஏமாந்து சாகினமோ?
அதிட்டம் எண்டு நினைச்சு
அடுத்தவன் நாடு போய்
அல்லல் படுகினமோ? இல்லை
நல்லாயிருக்கினமோ? 
பழைய நடப்பெல்லாமே
மறந்து நடப்படிக்கினமோ?
மறக்கேலாமல் மறுகிச்சாகினமோ?
இல்லை போறபோற வழிவழிய
கடலுக்கும், கண்டந்தாண்டி ,
பனி மலைக்கும்
பனி மழைக்கும்
பசளையாய்ப் போச்சினமோ?
பரமேசுவரி உனக்கென்ன?
பாத்துக்கொண்டு ஒண்டுமே
பறையாமல் இருக்கிறாய்!
சண்டி! சாமுண்டி! சண்டிகா பரமேசுவரி!


இம்மளவு ஆய்க்கினை, அவத்தைக்கையும்
அம்மாளாச்சி வாசலுக்கு ஒரு
எட்டு எட்டி வந்து கற்பூரக்
கட்டி ஒண்டு கொளுத்தி மனசாறிக்
கும்பிடேலாமல் கிடக்கே எண்டு 
நாங்கள் தான் ஏங்கி நிண்டம்.
கோயில் மணி உடைஞ்சு போச்சே!
தேரும்,  சூரனும் நொருங்கிப் போச்சே! எண்டு
பிசத்தினதும், பினாத்தினதும் நாங்கள்தான்.
கிட்டக் கிழலைக்கும்,
அண்டாமல், அடுக்காமல்,
எட்ட எங்களை நிக்க வைச்சாய். உனக்கும்
வீட்டுக்காவல் வைச்சாய்!


செய்வினை வைச்சது ஆரெண்டு 
சாமியாடுகிற கோயிலுக்குச்
சாத்திரம் கேட்டுப் போனால்;
சாமி வந்து சன்னதமாடி,
“எல்லாமே என்ரை குஞ்சுதான்!”
எண்டு கூத்தாடும்.
அப்பிடித்தான் ஆச்சி நீயும் 
"கோழியும் எங்கடை, 
புழுங்கலும் எங்கடை"
எண்டு இருக்கிறியே?
அழுந்தி எங்கடை சனம் வதைபட
ஆய்க்கினை வைச்சதெல்லாம், 
உன்ரை சதியோ? தலைவிதியோ?
முன்னை நாங்கள் செய்த கறும வினையோ?
எங்கடை சனம் முண்டி விழுங்கின 
சங்கையீனமும், வேதினையும், வருத்தமும்,
கொஞ்சமோ? நஞ்சமோ?
கொண்டல்மரத்தாச்சீ!


ஆதரிச்சுக் கும்பிட்ட தெய்வம் எண்டு
ஆய்க்கினைப்பட்டு அந்தரிச்ச நேரத்திலைகூட
ஆருமே ஆச்சி உன்னைக் கூப்பிடேல்லையே?
செருக்குப் பிடிச்ச கூட்டமெண்டு எங்களை
சீர் குலைச்சுப் பாக்கிறியே?போன பிறவியிலை 
கறுமவினை செய்த கூட்டமெண்டு எங்களை
கந்தறுந்து போகக் கைவிட்டிட்டியே?
குட்டைபிடிச்சு கறுமப்படும் தெரு
நாய் படாப் பாடுபட
நமக்கு விதிச்சு வைச்சாய்!
நரகத்துமுள்ளு விதைச்சு வைச்சாய்! 


ஆரின்ரை கண்பட்டுது?
ஆர் வைச்ச வினையிது? மனம்
பரிதவிக்க, சதிரம் பதைபதைக்க 
உறவையும், உறுப்பையும், உடமையையும்;
பறி குடுத்த நேரத்திலை,
பலி குடுத்த நேரத்திலை;
ஆர் வந்தவை ஆதரிக்க?
சொந்தமெண்டு நினைச்ச தெய்வமெல்லாம்
சோதினைகள் செய்ததெல்லே?
கையெடுத்த சாமியெல்லாம்,
கல்லாகி நிண்டதெல்லே?
கண்டியே! நமக்கெண்டு வந்த
வெள்ளிடியை? வாழ்மானத்தை?
கண்மூடி நிண்டியே நீயுந்தான்!
சண்டி! சாமுண்டி! சண்டிகா பரமேசுவரி!


ஒண்டு மட்டும் பறைவம் கேள்!
"மலையான மலை போச்சாம்
மண்ணாங்கட்டி போனாலென்ன?" 
எண்டு மட்டும் கிடப்பமே?
ஏலாத காரியம் அதெல்லே? எங்களுக்காய்
மாண்டு போன மாணிக்கங்கள் போக;
மசானவெளி தாண்டித் தப்பி 
மீண்டு மிதந்து வந்த எங்கடை
சனமும், இளஞ் சந்ததியும்;
வேண்டி விரும்பி உன்வாசல் வந்து ,
கொண்டாடும் காலம் 
ஒண்டு வரும்! ஏழு கடலும் 
தாண்டி இருக்கிற எங்கடை சனம் 
எல்லாம் வரும்! எதிர்காலமும்
நல்லாய் வரும்!
கொண்டல்மரமே! கொண்டல்மரமே!
நிண்டு நிலைச்சு நீயும் வாழி!
கொண்டல்மரத்திலை குடிகொண்டவளே!
என்னதான் உன்னை நாங்கள்
ஏலாத் தன்மையாலை ஒருநேரம் 
இல்லை நீ சாமி எண்டு ஏசிப் பேசினாலும் 
எண்டைக்கும் எங்கடை மனங்களிலை,
கொண்டகோலம் குலையாமல்
குடிகொண்டவளே! கொண்டல்மரத்தாச்சீ!
சண்டி! சாமுண்டி! சண்டிகா பரமேசுவரி!
நிண்டு நிலைச்சு நீடூழி நீயும் வாழி! 

    



சொல்விளக்கம்


எங்கினை-எங்கே
எண்டைக்கு -என்றைக்கு

புறிஞ்ச-பிரிந்த
வருவியே?-வருவாயோ?
பாறி- விழுந்து
பிரண்டு-புரண்டுமோசம் போவிட்டினம்?-மோட்சம் போய் விட்டனர்?(மரியாதைச்சொல்) -இறந்து விட்டனர்?
போக்கறப் போச்சினம்?-போக்கு அறப் போனார்கள்?(ஆற்றாமையுடன் சொல்லுதல்)  -திரும்பி வராமலே போனார்கள்?
படுகினமோ?-படுகிறார்களோ?
கை பறிஞ்சு-கை பறிந்து, இழந்து
சாகினம்?- சாகின்றார்கள்?
அறுந்து போன காலம்-கேடுகாலம்,கெட்டகாலம்
போட்டு உலைக்க-பிடித்து ஆட்ட
பழைய நடப்பு -பழைய நினைவு
நடப்படிக்கினமோ? - மற்றவர்களை விட தான் உயர்ந்தவர் என்று நினைக்கிறார்களோ? 
மறுகிச் சாகினமோ?-மனம் குழம்பிச் சாகின்றார்களோ?
போறபோற வழிவழிய-போகின்ற வழிகளிலே
பசளையாய்-பசளையாகி,
மண்ணுக்கு உரமாகி
ஒண்டுமே பறையாமல்-ஒன்றுமே சொல்லாமல்
இம்மளவு-இந்தளவு
ஆய்க்கினை,அவத்தை-துன்ப துயரம்
அம்மாளாச்சி-அம்மாள்+ஆச்சி
ஒரு எட்டு எட்டி வந்து-ஒரு தரம்  நடந்து வந்து
பிசத்தினதும்-பிதற்றியதும்பினாத்தினதும்-அலட்டினதும்
கிட்டக் கிழலைககும்- அருகிலே
அண்டாமல்,அடுக்காமல்-சேர்க்காமல்

எட்ட நிக்க-தூர நிற்க
"கோழியும் எங்கடை புழுங்கலும் எங்கடை"  - கோழியும் எங்களுடையது (காயப் போட்டிருக்கிற) புழுங்கல் அரிசியும்
    எங்களுடையது" (தின்றால் தின்று விட்டுப் போகட்டும்)

கறுமவினை- கொடிய துன்ப வினை
சங்கையீனம்-அவமானம்
வருத்தம்- நோய்
ஆதரிச்சு கும்பிட்ட-விரும்பி வணங்கிய
கந்தறுந்து-கந்து(பற்றுக்கோடு-வாழ்வாதாரம்)+அறுந்து
கறுமப்படும்- துன்பப்படும்
சதிரம்-சரீரம்,உடல்
கையெடுத்த சாமி- கும்பிட்ட சாமி
கண்டியே?-கண்டாயோ?

வெள்ளிடி- இடி போலுந்துன்பம் 
வாழ்மானம்- மானம் கெட்ட வாழ்வு
மசானவெளி- மயானவெளி 



 
 
Author: வர்மா
•8:31 AM

""அம்மா பள்ளிக்கூடத்துக்கு நேரமாச்சு. என்ன சாப்பாடு?''

""காலைப் பலகாரம்ஒன்றும் தேடவில்லை. மாமணல் ஒன்டும் இல்ல. பாண்வாங்கி வச்சிருக்கிறன் . இரவுக்கு இடியப்பம் அவிச்சுத் தாற‌ன்.''

""இடியப்பத்துக்கு என்ன அனுமானம்.?''
""சொதி வைச்சுத்தாறன்.''

வடமாராச்சியில் அதிகமாக நடை பெறும் சம்பாசனை இது.. காலையில் அல்லது இரவில் சாப்பிடும் தோசை, இடியப்பம், பிட்டு போன்றவற்றை பொதுவாகப் பலகாரம் என்பார்கள். அவற்றுடன் சேர்த்துச் சாப்பிடும் சம்பல், சொதி, சாம்பார் போன்றவற்றை அனுமானம் என்பார்கள்.

திருமணவைபவத்துக்கு இரண்டு நாட்கள் முன்பு பலகாரம் சுடுவதற்கு வீட்டிற்கு வரும்படி உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அழைப்பு விடுப்பார்கள். கொழும்பில் உள்ள உறவினர்களுக்கும் வெளிநாட்டில் உள்ள உறவினர்களுக்கும் பலகாரம் அனுப்புவார்க்ள.

திருமண வைபவத்தில் பரிமாறப்படும் அரியதரம், முறுக்கு, லட்டு போன்றவற்றையும் பொதுவாக பலகாரம் என்பார்கள்.

உறவினர்களின், நண்பர்களின் வீட்டுக்குப்போகும் போது கடையில் பலகாரம் வேண்டுவோம் என்பார்கள். வடை, சுசியம், வாய்ப்பன் போன்றவற்றையும் பலகாரம் என்பார்கள். கடையில் வாங்கும் தோசை, இடியப்பம், இட்டலி என்பவற்றை கடையப்பம் என்றும் கூறுவார்கள்.

படஉதவி எம்.எஸ்.சலீம்
Author: வர்மா
•2:20 AM
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் வடமராச்சிக்கு மாற்றலாகிச் சென்றார். அரசாங்க உயரதிகாரியான அவர் அனைவரிடமும் சகஜமாக பழகுவார். அவருடைய சகோதரி இலண்டனில் வசிக்கிறார். லண்டனில் வசிக்கும் தனது சகோதரிக்கு உணவுப்பொருட்களை அடிக்கடி அனுப்புவார்.
“லண்டனில் தங்கச்சி இருக்கிறா லண்டனுக்கு அனுப்புறதுக்கு இங்கை நல்ல சாப்பாட்டு சாமான் என்ன கிடைக்கும்” என்று வடமராச்சி அலுவலகத்திலுள்ள நண்பரிடம் கேட்டார்.
“புண்ணாக்கு” என்று வடமராச்சியைச் சேர்ந்த நபர் பக்கெ பதில் கூறினார். யாழ்ப்பாண அதிகாரி திகைத்தவிட்டார். அவருடைய திகைப்பைப் பொருட்படுத்தாத வடமராச்சி நண்பர் தொடர்ந்தார்.
“புண்ணாக்கு உடம்புக்கு நல்லது. பொலிகண்டி, வல்வெட்டித்துறையில் சொன்னால் கையால இடிச்சுத் தருவார்கள் நாங்களும் புண்ணாக்கைத்தான் அனுப்புகிறோம்” என்றார்.
யாழ்ப்பாண அதிகாரியின் திகைப்பை கொஞ்சநேரம் ரசித்த வடமராச்சி நண்பர். “எள்ளுப்பாகை நாங்கள் எள்ளு புண்ணாக்கு என்போம் சிலவேளை புண்ணாக்கு என்றும் சொல்வோம்” என்றார். கையால் இடித்த புண்ணாக்கு கடையில் வாங்குவதை விட சுவையாக இருக்கும். நீங்கள் வடமராச்சிக்கு போனால் புண்ணாக்கு வாங்க மறந்து போகாதையுங்கோ.

சகஜம்---------------------------------ஏற்றதாழ்வு இன்றிப் பழகுவது
பக்கெனபதில்--------------------உடனடியாக பதில்
கையால் இடிச்ச-------------உரலில் போட்டு உலக்கையால் இடிப்பது
Author: கானா பிரபா
•3:33 AM
நந்தனாவின் குடும்பம் மிகவும் கட்டுப்பாடானது. அவளின் தகப்பனார் பண்டிதர் பரமசிவம் வெள்ளை வேட்டி, அதற்குத் தோதாற்போல முழுக்கைச் சட்டை அதுவும் நாஷனல் என்று அழைக்கப்படும் வெண் நிறத்தது. கூடவே சால்வை என்று கோலம் கொண்டிருப்பார். பரமசிவத்தாரின் மனைவி காமாட்சியும் கணவனுக்குத் தோதான துணைவியாக இருப்பவர்.

திடீரென்று ஒரு நாள் நந்தனா வழக்கத்துக்கு மாறாக அதீத நவநாகரீகம் கொண்ட உடுப்பை அணிந்து தன் தாய் காமாட்சிக்கு முன் வந்து நின்றாள்.
"ஐயோ பண்டிதர் பரமசிவத்தாற்றை மேள் இப்படி அரைகுறையா வருகுதே எண்டு சனம் நாக்கு வழைக்கப் போகுது " என்று காமாட்சி பதறினார்.

மேலே சொன்ன கற்பனைச் சம்பவத்தில் மேற்கோள் இடப்பட்ட "நாக்கு வழைத்தல்" என்பது ஈழத்துப் பேச்சு வழக்கில் இன்னொரு சொல்லாகப் புழங்குகின்றது.

ஒருவரைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாக இன்னொருவர் பேசுவதைப் புறணி பேசுதல் என்போம். ஆனால் இங்கே நாக்கு வழைத்தல் என்பது புறணி பேசுவது என்பதற்கு சற்று வேறுபாடாக நக்கல் பண்ணுவார்கள் என்பதற்கு மிக நெருங்கிய அர்த்தத்தில் பயன்படுத்தப்படுவது.

எனவே நாக்கு வழைத்தல் என்பது ஒருவரது குணாம்சம், நடை உடை பாவனையில் ஏதேனும் குறையைக் கண்டு பிடித்து இன்னொருவர் அல்லது ஊரார் எள்ளி நகையாடுவது என அமைந்திருக்கும்.

"நாக்கு வழைத்தல்" என்பதை உங்கள் ஊரில் எப்படியெல்லாம் பயன்படுத்துவார்கள் என அறிய ஆவல்.
Author: கானா பிரபா
•3:01 AM

ஒருவர் குறித்த காரியத்துக்காக வெளியே செல்லும் போது அவரிடம் போய் "எங்கே போகிறாய்" என்று கேட்டால் குறித்த காரியம் தடைப்படும் என்ற நம்பிக்கை எங்களூர் வாழ்வியல் வழக்கில் இருக்கின்றது.

"எங்கை போறாய்" என்று ஒருவரிடம் கேட்டால் அவருக்குக் கெட்ட கோபம் வரும்.
"ஏனப்பா பிறத்தாலை கூப்பிடுறாய்" என்று அவர் சினந்து கொள்வார். இங்கே பிறத்தாலை என்று சொல்வது ஒருவருக்குப் பின்னால் போய்க் கூப்பிடுவது என்று அர்த்தம் கொள்ளும் வகையில் இருக்கும். அதாவது பிறத்தாலை = பின்னால் என்றவாறு அமைந்திருக்கும்.
ஏடாகூடமாக இப்படி யாரையாவது கேட்டால் போதும், அவர் ஒரு சில நிமிடங்கள் அந்த இடத்தில் நின்று தாமதித்தே குறித்த காரியத்துக்காகச் சொல்வார்.

இப்படியான சந்தர்ப்பங்களில் அதை இன்னொரு விதமாகக் கேட்கும் மரபு இருக்கின்றது. அதுதான் "துலைக்கே போறாய்". இங்கே துலை என்பது தொலைவு, தூரம் என்று அர்த்தப்படும். அதாவது "எங்கே தொலைதூரமா செல்கின்றாய்" என்று கேட்பது போல அமைந்திருக்கும். துலைக்கிடுதல் என்பது தூரப்படுதல் என்று அகராதியில் வழங்கும். எனவே தான் எங்களூர் வழக்கில் "துலைக்கே போறாய்" என்பது சரளமாகப் பயன்படுத்தப்படும் பேச்சு வழக்காக அமைந்திருக்கின்றது.
அது ஏனோ தெரியவில்லை "துலைக்கே போறாய்" என்று கேட்டால் மட்டும் குறித்த காரியம் தடங்கலின்றி நடக்குமா என்ன, இதெல்லாம் மரபுவழியாக வந்ததால் இதுகுறித்த ஆராய்ச்சியில் யாருமே இறங்காமல் இருக்கின்றார்கள்.

அப்ப நான் வரட்டே...
Author: கானா பிரபா
•4:08 AM
அண்மையில் ஒரு நண்பரோடு தொலைபேசிக் கொண்டிருக்கும் போது மூத்த ஈழத்துக் கலைஞர் ஒருவர் பற்றிப் பேச்சு வந்தது. அப்போது எதேச்சையாக நான் "அவர் முந்தி இருந்த இருப்புக்கு இப்ப நல்லா வயக்கெட்டுப் போனார்" என்று சொன்னேன். நீண்ட காலத்துக்குப் பிறகு என் வாயில் தவழ்ந்த "வயக்கெட்டு" என்ற வார்த்தையைக் கேட்ட நண்பர், "இந்த வயக்கெட்டு என்ற வார்த்தையை இப்ப புலம்பெயர்ந்தாப் பிறகு பேச்சு வழக்கில் ஏறக்குறைய மறந்து விட்டோம் இல்லையா" என்றார்.

"வயக்கெட்டு" என்பது ஒரு சுகதேகியாக இருந்த மனிதர் உடல் ஆரோக்கியம் குன்றிப் போதல் அல்லது உடல் நலிவடைதல் என்பதைக் குறிக்க ஈழத்து மொழி வழக்கில் பாவிக்கப்படும் வார்த்தைப் பிரயோகம் ஆகும். சிலர் "வசக்கெட்டு" என்றும் பாவிப்பர். வசக் கெட்டு என்பதில் இருந்து திரிபாகி அமைந்ததே வயக்கெட்டு என்று நினைக்கத் தோன்றுகிறது.

வயக்கெட்டு என்பதற்கு ஒத்த அர்த்தம் கொண்ட சொற்கள் ஏதாவது இருக்கின்றதா என்று ஈழத்துத் தமிழகராதி ஒன்றில் தேடினேன். அங்கே கிட்டியது "வசப்பிழை" என்னும் சொல் , வசப்பிழை என்றால் - பெலகீனம் என்று அர்த்தம் போடப்பட்டிருந்தது. பெலகீலம் என்பதும் ஈழத்துப் பேச்சு வழக்கில் "பலகீனம்" என்ற சொல்லின் பொருள்படப் பாவிப்பது வழக்கம். அந்தச் சொல்லைப் பிரித்து அர்த்தம் கொண்டால் பலம் + ஈனம் அதாவது பலம் கெடல் என்று அமைகின்றது.

வசம் என்றால் கீழ்ப்படிதல், ஒன்றின் கீழ் அடங்கிப் போதல் என்ற சம அர்த்தம் கொள்ளலாக அமைவதால் வசக்கெட்டு என்பது வசம் என்பதற்கு எதிரிடையாக அதாவது ஒருவனுடைய உடல் மற்றும் தேகாரோக்கியம் கெட்டுப் போதல் என்று அர்த்தம் கொள்ளலாம்.

கொழும்பு போன்ற நகர்ப்பகுதிகளில் நீண்டகாலம் தங்கி விட்டு கிராமத்துக்குப் போனால் எதிர்ப்படும் ஊர்க்கார முதியவர் ஒருவரோ அல்லது மூதாட்டி ஒருவரோ
"என்ன தம்பி நல்லா வயக்கெட்டுப் போனாய்" என்று தான் சம்பிரதாயபூர்வமாகப் பேச்சுக் கொடுப்பது பரவலாக இருக்கும் விடயம்.
Author: கானா பிரபா
•5:52 AM
ஈழத்தில் புழங்கும் பயன்பாட்டுச் சொற்கள் வரிசையில் சில தின்பண்டங்கள் குறித்துப் பயன்படுத்தும் சொற்களை இங்கே தருகின்றேன். இங்கே பலகாரங்கள் அல்லாத தீனிப்பண்டங்கள் சிலவற்றின் பயன்பாட்டுச் சொற்களைத் தருகின்றேன்.

தமிழக வழக்கில் "சாக்லேட்" (chocolate) என்று பரவலாகப் பயன்படுத்தும் சொல்லை ஈழத்து மொழி வழக்கில் சொக்கிளேற் என்று பயன்படுத்துவர்.
Milk chocolate என்று ஆங்கிலத்தில் புழங்கும் இனிப்புப் பதார்த்ததை ஈழத்தில் பொதுவாக கண்டோஸ் என்று அழைப்பார்கள். அதற்குக் காரணம் Kandos என்ற பெயரில் பிரபல நிறுவனமே இந்த இனிப்புப் பதார்த்தங்களை அங்கே தயாரித்து விற்பனைக்காகச் சந்தைப்படுத்துகின்றது. பின்னாளில் 80 களிலே Edna என்ற நிறுவனம் போட்டியாக இந்தத் தொழிலில் இறங்கியிருந்தாலும் Edna வின் உற்பத்திகளையும் கண்டோஸ் என்று பொதுவழக்கில் சிலர் பயன்படுத்துவது இங்கே கவனிக்க வேண்டிய விஷயம்.

தமிழக வழக்கில் பிஸ்கெட் (biscuit) என்று அழைப்பதை ஈழத்து மொழி வழக்கில் பிஸ்க்ற் என்றும் கிராமப்புறங்களில் விசுக்கோத்து என்றும் அழைப்பார்கள். (சிலரை கேலி பண்ண விசுக்கோத்து என்று அழைப்பது வேறு கதை ;-))

தமிழக சஞ்சிகைகளில் ரொட்டி என்று பழங்கும் சொல் கூடவே பிரெட் (bread) என்றும் பயன்படுத்தும் பண்டம் ஈழ வழக்கில் பாண் என்று மட்டுமே அழைக்கப்படும்.
பாண் என்ற இந்த உணவுப்பொருள் வழக்கமான வடிவில் கிடைக்கும் அதே வேளை, சப்பையாக இருக்கும் ஒரு வடிவிலும் இருப்பது என் அறிவுக்கு எட்டியவரை ஈழத்தில் மட்டுமே கிடைக்கின்றது இதை றோஸ் பாண் அல்லது சப்பட்டைப் பாண் என்றும் அழைப்பார்கள்.

ஈழத்தவர் ஒருவர் சென்னையில் இருந்த வேளை ஒரு மளிகைக்கடைக்குப் போய் "பாண் இருக்கா" என்று கேட்க மளிகைக்கடைக்காரர் பேந்தப் பேந்த முழித்தாராம். பிறகு அவர் கடையினுள் நோட்டம் விட்டு கண்ணாடிப்பெட்டியில் இருந்த அந்தப் பாணைக் கண்டு "இது தான் இதைத்தான் கேட்டேன்" என்று சொல்லவும், மளிகைக்கடைகாரர் "அட, பிரெட்ன்னு தமிழ்ழ சொல்ல வேண்டியது தானே" என்றாராம் என்று வேடிக்கையாகச் சொல்லும் கதை உண்டு.

தமிழக வழக்கில் பன் (bun)என்று பயன்படுத்தும் சொல், ஈழவழக்கில் பணிஸ் என்று அழைக்கப்படும். இனிப்பான, அல்லது இனிப்பு சேர்க்கப்படாத இந்தத் தின்பண்டம் பல வடிவில் கிடைக்கும். உருண்ட வடிவில் இருப்பது பொதுவாக பணிஸ் என்றும், நீள் கொம்பு வடிவாக இருப்பது கொம்பு பணிஸ் என்றும் அழைக்கப்படும்.

பாண், பணிஸ் பற்றி வந்தியத் தேவன் ஈழத்து முற்றத்தில் முன்பு எழுதிய சுவையான பதிவு இதோ காலையும் நீயே மாலையும் நீயே

தமிழக வழக்கில் மிட்டாய் (toffee) வழங்கும் பதார்த்தத்தினை ஈழத்துப் பேச்சு வழக்கில் ரொபி என்றே குறிப்பிடுவார்கள். கூடவே இனிப்புத் துண்டங்களாப் பொதி (pack)செய்யாமல் இருக்கும் பதார்த்தை "இனிப்பு" என்ற பொதுவான குறீயீட்டுப் பெயராக அழைக்கும் பண்பும் உண்டு. குறிப்பாக போத்தல்களில் நிரப்பியிருக்கும் தோடம்பழச் சுவை கொண்ட இனிப்புக்களை "தோடம்பழ இனிப்பு" என்று அழைப்பதோடு இவை விலையிலும் மலிவு என்பதால் குழந்தைகளின் விருப்புக்குரிய தேர்வாக இருக்கும்.

மில்க் ரொபி, புளுட்டோ ரொபி (ஞாபகப்படுத்திய பகீ இற்கு நன்றி) போன்றவை பெரும்பாலும் உள்ளூர் உற்பத்திகளாகச் செய்யப்பட்டுச் சந்தைப்படுத்தப்படும்.

மேலே படத்தில் இருப்பது பஞ்சு மிட்டாய் /பஞ்சு முட்டாஸ் படம் நன்றி: பதிவர் மீனாக்ஸ் வலைப்பதிவு

மேலே படத்தில் இருப்பது தும்பு முட்டாஸ் , நன்றி துஷ்யந்தினி கனகசபாதிப்பிள்ளை

பஞ்சு மிட்டாய் அல்லது பஞ்சு முட்டா என்ற இனிப்புப் பதார்த்தத்தை கோயில் திருவிழாக்காலத்தில் அதிகம் காணலாம். பொதுவாக மிட்டாய் என்ற சொற்பிரயோகத்துக்கு மாற்றீடாக ஈழமொழி வழக்கில் முட்டாஸ் என்ற சொல்லே பயன்பாட்டில் இருக்கின்றது. பஞ்சு முட்டாஸ் என்ற இனிப்புப் பதார்த்தை விட எங்கள் ஊர்க் கோயில்திருவிழாக்களில் தும்பு முட்டாஸ் எனப்படும் இனிப்புப் பண்டம் பெரும் கிராக்கியில் இருப்பதைச் சொல்லி வைக்க வேண்டும். காரணம் அதைக் கைக்கு அடக்கமான தாளில் சுற்றியே கொடுத்து விடுவார்கள். எடுத்துத் தின்பதும் இலகுவாக இருக்கும்.

அப்பளம் (ஞாபகப்படுத்திய சினேகிதிக்கு நன்றி) என்ற பெயரில் பல்வேறு நிறத்தில் தட்டையாகச் செய்யப்பட்ட பெரிய அப்பள வடிவில் இருக்கும் இனிப்புப் பதார்த்தமும் இருக்கின்றது, இது தமிழகத்தில் இருக்கின்றதா தெரியவில்லை. அதற்கான பதிலீட்டுச் சொல்லும் நான் அறியவில்லை.

விடுபட்ட சொற்கள் தொடரும்.
Author: வர்மா
•5:57 AM
சிவராத்திரி எண்டால் எங்களுக்கு உசார்வந்துவிடும். விடியவிடிய கன இடங்களீலை கூத்துநடக்கும்.அந்த இரவு மறக்கமுடியாத இரவாக இருக்கும்.கூத்துப்பாக்க எண்டு வீட்டிலை சொல்லிப்போட்டு வெளீக்கிட்டா கன சோலியளை செய்வம்.
அண்ணாச்சாமி வாத்தியாரின்ரை சீன் கன இடங்களூக்குப்போகும்.சீன்,லைற் எஞ்ஜின். ஸ்பீக்கர், மேக்கப் எண்டு எல்லாத்தையும் அண்ணாசாமிவாத்தியார் பொறுப்பெடுப்பார். முல்லைத்தீவு,மீசாலை,அல்வாய்,சமரபாகு,கொடிகாமம் எண்டு அஞ்சு இடத்திலை அவற்றை ஆக்கள்தான் சீன் கட்டுவினம்.
நாங்கள் கூத்துப்பாக்கஎண்டுசொல்லிப்போட்டு வேறை அலுவல்தான் பாப்பம்.இளனி களவெடுக்கிறது, மரவள்ளிக்கிழங்குபிடுகிங்கி அவிக்கிறது,படலையை களட்டி அவற்ரைகோவக்காரரின்ரை வீட்டிலை கட்டுறது,வாளைக்குலை வெட்டுறது எண்டுஎங்கடை வேலை விடியவிடியநடக்கும். சிவராத்திரிக்கு மூண்டாவது ஷோ எண்டாலும்கட்டாயம் பாப்பம்.
நடிகமணீ வி.வி. வைரமுத்துவின் மயானகாண்டம் எங்கையாவது நடக்கும் கட்டாயம் மயானகாண்டம் பாத்துப்போட்டுத்தான் படம் பாப்பம்.வைரமுத்துக்கு சோடியாக அரியாலை ரத்தினம் ஸ்திரிபாட் .சந்திரமதியாகரத்தினம் அழுதா சனமும் அழும். அச்சுவேலி மார்ககண்டுதான் யமனாக வருவார். அவருக்கு பேரேயமன் மார்க்கண்டுதான்.
மயானகாண்டம் நடக்கமுதல் பவூன் சின்னதுரையும் சீனா பானாவும் சனத்தசிரிக்கபண்ணுவினம்.ஒரு இடவெளி பாத்து பருத்துறைக்குப்போய் தோசை அப்பம் சாப்பிடுவம்.
கூத்துப்பாக்ககனசனம் வரும் கொஞ்சப்பேர்தான் விரதகாறர். மிச்சப்பேர் பம்பலுக்கு வாறவை.அது அந்தககாலம். இனிஅது போலைவராது.

கூத்து.........................நாடகம்
கும்மாளம்/குஷி......சத்தோசம்
உசார்..............உற்சாகம்
சீன்............நாடகதிரைச்சீலை
அலுவல் .......வேலை
படலை........வீட்டுக்குவெளீயே உள்ளகதவு
பம்பல்.......பொழுதுபோக்கு
ஸ்திரிபாட்......பெண் வேடமிடும் ஆண்
பவூன்..........நகைச்சுவை நடிகர்