Author: Unknown
•6:52 AM
பனையயும் எங்கட வாழ்வையும் பற்றி ஏற்கனவே நான் எழுதின கொஞ்சம் நீள....மான பதிவுக்கு பின்னூட்டம் போட்ட கனபேர் கனக்க புதுப் புது விஷயங்கள் சொல்லியிருக்கினம். அடையெல்லாம் பதிவில சேர்க்காம, ஆரெல்லாம் என்ன சொன்னவை எண்டு ஒரு பதிவையே போட்டால் வாசிக்கிறவைக்கு சுகமாய் இருக்கும் என்டு நினைக்கிறன். இருக்கிற வேலையளுக்க பின்னூட்டம் எல்லாம் வாசிக்க கனக்கப் பேருக்கு நேரம் இருக்கிறதில்லைதானே.. அதுதான் இப்பிடிச் செய்யிறன்.

எங்கட வசந்தன் அண்ணை சொன்னார் பாருங்கோ நான் ஊமலைப் பற்றிக் கதைக்கேக்கை பூரானைப் பற்றிக் கதைக்காம விட்டுட்டன் எண்டு. உண்மைதான். பூரான் எண்ட உடன இது கடிக்கிற பூரான் எண்டு நினைக்கக் கூடாது. இது ஊமலுக்குள்ள இருக்கிற ஒரு விஷயம். முக்கியமா பானங்கிழங்கு கிண்டேக்க கிடைக்கிற ஊமலுக்குள்ள தேடித் தேடி வெட்டிச் சாப்பிடலாம். பூரான் இருக்கிற ஊமல் கொஞ்சம் பாரமாயிருக்கும். வெள்ளைக் கலரில கொஞ்சம் இனிப்பும் துவர்ப்பும் (சரியான சுவைதான் சொல்லுறனோ எண்டு உறுதிப்படுத்துங்கோ, இனிப்பு கொஞ்சம் கூடவாய் இருக்கும்), நல்ல மென்மையா, வாய்க்குள்ள போட்டா கரைஞ்சு போறளவுக்கு மென்மையா இருக்கிறதுக்குப் பேர்தான் பூரான்.

சந்திரன் அண்ணை என்ன சொன்னவரெண்டால், 'ஊமல் பனம் பழத்திண்ட கடைசி பரிமாண வடிவம் எண்டது சரி. ஆனால் ஊமலை போட்டு பாத்தி கட்டுறேல்லை. ஊமலுக்கு முன் உள்ள நிலையை பனம்கொட்டை எண்டு மாடு சூப்பி, இல்லாடி வெயிலிலை காய்ஞ்சு போய், இல்லாட்டி பினாட்டு பினைஞ்சு வாறது. அதை போட்டு பாத்திகாட்டி பனம் கிழங்கு எடுக்கிறது. பனங்கிழங்கு பத்திலை இருந்து எடுக்கிறது தான் ஊமல், அதாவது பனம் கொட்டையில் இருந்து தும்புகள் எல்லாம் இழந்த நிலை'. ஆளும் பனை பற்றி ஒரு பதிவு போட்டிருக்கிறார். ஆள் வலு விசயகாரன் பாருங்கோ. ஊமல் பற்றி கலையும் இதே கருத்தைத் தான் தெரிவித்திருக்கிறார். வசந்தன் அண்ணை ‘பனங் கொட்டு' பற்றியும் கேட்டார். அதுக்கு வந்தி அண்ணையும், சந்திரன் அண்ணையும் சொன்ன விளக்கங்களை கீழ போடுறன்.

'பனைமரத்தின் வெளிப்புறம் வன்மையானது, அது தான் வளை, சிலாகை, தீரந்தி என பலதும் செய்ய பயன்படும். அதின் மையபகுதி மென்மையானது அதை சோத்தி எண்டு சொல்லிறது. தறிச்ச பனைமரம், அல்லது தான விழுந்த பனைமரத்தை கொஞ்ச நாளைக்கு உக்க விட்ட அதின் சோத்தி பகுதி மரவண்டு/ கொறவணன் புழு, மற்றும் நுண்ணங்கிகளாலை இலகுவில் உக்கி, அழிஞ்சு போகும், ஆனா வெளிப்பகுதி அப்பிடியே இருக்கும். உக்கின உள் பகுதியை கோதி எடுத்து விட்டா ஒரு குழாய் மாதிரி இருக்கும். இந்த பனம் கொட்டு தான் இரண்டு வயல்களுக்கிடையே தண்ணி பாய (வயலுக்கை தண்ணி கூடி வரம்பை உடைக்காது பாதுக்காக்க) பாவிக்கிறது. அதை விட ஒட்டு மாங்கண்டுகளை பிரட்டி சந்தைக்கு கொண்டு போறதுக்கும் மாங்கண்டை பனம் கொட்டுக்கை நட்டு தான் கொண்டு போறது'- இது பனங்கொட்டு பற்றி சந்திரன் அண்ணா சொன்னது.

தறிபட்ட பனையின் அடிப்புறத்தையும் கொட்டு என்பார்கள். சிலாகை கொஞ்சம் தடிப்பு குறைஞ்ச மெல்லியது. பெரியதை வளை என்பார்கள். யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான வீடுகளின் வளைகள் பனை வளைதான்.- இது வந்தியண்ணா சொன்னது.

அதோட இந்த அம்மன் கோயில் வழிய கஞ்சி ஊத்திறதுக்கும், கள்ளுக் கடையளிலயும் ஒரு ஏதணம் போல பாவிக்கிற பிளா பற்றியும் என்ர பதிவிலை கதைக்க மறந்து போனன். அது பற்றியும் கதைச்சிருக்கிறம் பின்னூட்டங்களில. பனையோலையில செய்யிற ஏதனம் மாதிரியான அந்த அமைப்பைத்தான் பிளா எண்டு சொல்லுவினம். அதே போல குருத்தோலையைப் பற்றிக் கதைச்ச நான் காவோலை பற்றிக் கதைக்கேல்லை. காவோலை வீடுகளில அடுப்பெரிக்கப் பயன்படும். ஞாபகப் படுத்திய வந்தி அண்ணாவுக்கு நன்றி, அந்தக் காவோலை விழக் குருத்தோலை சிரிக்கும் பழமொழிக்கும் சேர்த்து.

அதைவிட கொக்காரை, கங்குமட்டை, குருமபை போன்ற சொற்களையும் வசந்தன் அண்ணாவும், வர்மா அண்ணாவும் ஞாபகப் படுத்தி இருந்தார்கள். பனங்கட்டியின் நோய் நிவாரணக் குணங்கள் பற்றியும் இங்கே சொல்லியாக வேண்டும். எனக்குத் தெரிந்து மூல நோய் இருக்கிறாக்களுக்கு சித்த வைத்தியம் செய்யிற ஆக்கள் அடிக்கடி பரிந்துரைக்கிற ஒண்டு. வேற என்ன நோய்க்கெல்லாம் பரிந்துரைக்கினம் எண்டு எனக்குத் தெரியேல்லை.

பனையைப் பற்றி இதைச் சொல்லாட்டா பிழையாகீடும். கனக்க பழசுகளுக்கு பனங்காணீக்க போகாடா, போகாது தெரியுமோ? நைசா போய் குந்தீட்டு, பனை ஓலையால துடைச்சிட்டு நேர கிணத்தடியில போய் குளிக்கிற கனபேரக் கண்டிருக்கிறன். பனங்காணியளுக்க போகேக்க கீழ மேல பாத்து அவதானமாப் போ எண்டு வீடுவழிய சொல்லுறது இவயளிண்ட தொல்லையாலதான்.

பி.கு: பனை அபிவிருத்திச்சபையின் முன்னாள்தலைவரான மு.பாக்கியநாதன் எழுதிய 'பனையியல்' என்னும் புத்தகத்தில் பனையைப்பற்றி பலதகவல்கள் உள்ளன என்று மேற்படி புத்தகத்தை வர்மா அண்ணை (அண்ணையா, அப்புவா எண்டு சரியாத் தெரியேல்லை), பரிந்துரை செய்திருக்கிறார். அவருக்கும், பின்னூட்டம் மூலம் மேற்படி தகவல்கள் சொன்ன, வசந்தன், கலை, வி.ஜெ. சந்திரன், வந்தியண்ணா, கலை, ஷங்கர் மற்றும் பின்னூட்டம் போட்ட தமிழன்- கறுப்பி, சினேகிதி, கானா பிரபா அண்ணை எல்லோருக்கும் நன்றி.
Author: Unknown
•11:32 AM
கடலும் கடல் சார்ந்த வாழ்வும், மலையும் மலை சார்ந்த வாழ்வும் மாதிரி எங்கட வாழ்வு பனையும் பனைசார்ந்த வாழ்வு எண்டு சொன்னால் மிகையில்லை பாருங்கோ. எங்கட வீட்டுக்கு தெற்கால சொன்னா நம்பமாட்டியள் ஒரு பன்ரண்டு பரப்பு வடலிக்காணிதான். அம்மாவின்ர சீதனவீட்டுக்கு வடக்கால கூட ஒரு ஆறேழு பரப்பில பனைதான் நிண்டது. இந்தப் பனை எந்தளவுக்கு எங்கடை வாழ்வில் முக்கியமான ஒரு விசயமா இருந்தது எண்டது பற்றின ஒரு நினைவு மீட்டல்தான் இது.

இந்தப் பனைமரத்தின்ர தண்டுப் பகுதி இருக்கெல்லோ, அது எத்தினை எத்தினை விசயத்தில பயன்படும் தெரியுமே. இதிலையிருந்துதான் பாருங்கோ பனம் சிலாகை இணக்குவினம். இந்தச் சிலாகையள் வீட்டுக் கூரை மேயிறது தொடக்கம், மாட்டுக் கொட்டிலுக்கு கூரை போடுறது, சும்மா கொட்டிலுகளுக்கு தூண் மாதிரி நிக்கிறது எண்டெல்லாம் எத்தினையோ விசயத்துக்கு பயன்படும். சிலாகை எண்டுறது கொஞ்சம் மெல்லீசா இணக்கிற பனைமரத் தண்டுப் பகுதி. சில இடங்களில பனங்குத்தியும் கொட்டில் போடப் பயன்படும். அது இணக்கபாடாத பாகம். இரண்டுக்கும் இடைப்பட்ட சைசில இருக்கிறத சாதாரணமா மரம் எண்டுதான் சொல்லுவினம். இந்தப் பெரிய பெரிய பனங்குத்தியள் எங்களுக்கு இன்னொரு உதவியும் செய்தது தெரியுமோ? இந்தப் பனங்குத்தியளை அடுக்கி, அதுக்கு மேல மண்மூட்டை அடுக்கித்தான் வீடு வாசலில நாங்கள் பங்கர் எல்லாம் வெட்டினனாங்கள் எண்டதையும் மறக்கக் கூடாது பாருங்கோ. சிலாகை இணகினாப்பிறகு மிஞ்சிற சிராம்பு வீட்டில அடுப்பெரிக்க எத்தனையோ தரம் பயன்பட்டிருக்கு. இனி கொஞ்சம் மேலை போவம்.

பனைமர உச்சியிலை முதல்ல நாங்கள் பாக்கப் போறது கருக்குமட்டையோட சேர்ந்த ஓலை. ஓலை எத்தனை விதத்தில பயன்படும் தெரியுமே. பட்டை ஓலை மாடு வளக்கிறாக்களுக்கு நல்ல லாபம் தரும். ஏனெண்டால் அதை சத்தகம் வச்சு நார் நாராக் கிளிச்சு மாட்டுக்குப் போட்டா மாடு நல்லா சாப்பிட்டு நல்லா சாணி போடும். அந்த சாணி என்னென்னத்துக்கெல்லாம் பயன்படும் எண்டு பெரிய பதிவே போடலாம். ஓலை கிழிச்ச பிறகு மிஞ்சிற கருக்கு மட்டேலை வேலி அடைக்கலாம், பட்டத்துக்கு சிலாகை இணக்கலாம், அந்த நாரை உரிச்சு ஏதாவது கட்டுறதுக்கோ, பொடியளுக்கு அடிக்கிறதுக்கோ பாவிக்கலாம். இல்லையெண்டால் விறகாக் கூடப் பாவிக்கலாம். அப்பருக்கு வேலை கொஞ்சம் மட்டாய் இருந்த காலத்தில இப்பிடி மிஞ்சின கருக்கை வித்துக்கூட காசு சேத்திருக்கிறம் நாங்கள் ஒரு காலத்தில.

இதே ஓலைய நல்லா மிதிச்சு பாடம் போட்டு காயவிட்டு, வேலி அடைக்கலாம். மேலே சொன்னமாதிரி கருக்கால அடைக்க நிறையக் கருக்கு தேவை. ஆனால் ஓலையோடு சேர்ந்த கருக்கால அடைக்க நிறைய ஓலை தேவைப்படாது. ஆகக் குறைஞ்சது ஒரு ரண்டு வரிசமாவது தாங்கும் பாருங்கோ இந்த வேலி. எங்கட பெரியம்மா வீடு எங்கட பொறுப்பில இருந்ததால அடிக்கடி இந்த வேலியடைப்பு நடக்கும். அதேபோல இந்த கருக்கோடு சேர்ந்த ஓலையாலதான் வீட்டில மாட்டுக் கொட்டில், ஆட்டுக் கொட்டில் எல்லாம் மேய்வம். சிலபேரிண்ட வீட்டுக் கூரைகூட கருக்கோட சேர்ந்த ஓலையாலதான் மேயிறது. அந்த வீட்டுக்க இருந்த குழுமை இருக்கே, அப்பப்பா... அது ஒரு அனுபவம் பாருங்கோ. அதே காய்ஞ்ச ஓலையில கடகம், சுளகு, நீத்துப்பெட்டி, குட்டான், பெட்டி, பாய் எண்டு எத்தினையோ செய்யலாம். ஏன் தலைக்குப் போடுற தொப்பி, கைவினைப் பொருட்கள் எண்டு கனக்க செய்யிறவை தெரியுமே.

அடுத்தது நொங்கு. நொங்கு சீவி நாங்கள் மாட்டுக்குப் போடுறனாங்கள். ஆசை மாமிதான் நொங்கு வெட்டிறவ. புழு இல்லாத நொங்காப் பாத்து அவ வெட்டித்தர அதை நாங்கள் நோண்டிக் குடிக்க, அது ஒரு காலம். நொங்கிண்ட வெளிப்பக்கத்தை அரிமனையிலை வச்சு வெட்டி மாட்டுக்குப் போடுவினம். இதே நொங்கு பழுத்து பனம்பழமாய் வந்தாப்பிறகும் மாடுகள் பனம்பழம் சூப்பும். தலைய ஆரும் ஒழுங்கா எண்ணை வச்சு இழுக்காம பள்ளிக்குடம் போனால் ‘மாடு சூப்பின பனங்காய்' மாதிரி இருக்கெண்டு வாத்தியவை சொல்லுறவை. அதே பனம்பழத்தை நல்லா பிழிஞ்சு, பனங்களி எடுத்து பனங்காய்க்காய் எண்டு ஒரு பலகாரம் செய்வினம். சுடச்சுட அதைச் சாப்பிட்டாப் போதும், வயிறு காலாகாலத்துக்கும் சுத்தமா இருக்கும். அதே பனங்களியில இருந்து செய்யிற பினாட்டும் ஒரு அருமையான சாமான். பினாட்டுக்குப் பாணிகாய்ச்சி போத்தலில் அடைத்து விற்ற காலத்திலும் பனைதான் எங்கட சோத்துக்கு ஆதாரமாய் இருந்தது. அதைவிட யாழ்ப்பாணத்தில ஒரு கொஞ்சக்காலம் உடுப்புக்குப் போடுற சோப்பு கிடைக்கேல்லை. அப்ப நல்லா பங்ம்பழத்தை உடுப்பில போட்டுத் தேய் தேய் எண்டு தேய்ச்சு, நல்லா தண்ணீக்க அலம்பி காயப்போட்டா, நல்ல வடிவா தோய்பட்டிருக்கும். (கொஞ்சம் மஞ்சளடிக்கும், ஆனால் ஒரு காலத்தில் பனை எங்களுக்கு சோப்பும் தந்தது).

இந்தப் பனம்பழத்திண்ட கடைசி பரிணாம வடிவம்தான் ஊமல். ஊமலும் அடுப்பெரிக்கப் பயன்படும். நல்ல ஊமல் அல்லது ஏறத்தாள ஊமலான பனம்பழம் எடுத்து பெரிசாப் பாத்திவெட்டி தண்ணி கொஞ்சம் ஊத்தி கொஞ்சக் காலம் சரியா பராமரிச்சா வாறது பனம் கிழங்கு. நாங்கள் ஆகக் குறைந்தது ரண்டு பனம்பாத்தியாவது போடுவம். ஏராளமா பனங்கிழங்கு வெட்டி எடுப்பம். பனங்கிழங்கை அவிச்சு உப்புத் தூள் கலவையோட சாப்பிடலாம். அவிக்காமக் காயவிட்டால் ஒடியல். ஒடியல் மாவில ஒடியல் புட்டு, ஒடியல் கூழ் செய்யலாம். அவிச்ச பனங்கிழங்கை காயவிட்டால் புழுக்கொடியல். புழுக்கொடியலை வெங்காயம், தேங்காய்ச்சொட்டு போன்றவற்றோட சாப்பிடலாம். புழுக்கொடியல் மாவில சீனி போட்டு, தண்ணிவிட்டு குழைச்சு உருண்டையாக்கி சாப்பிடலாம். அவிச்ச பனங்கிழங்கை வட்டமா வெட்டி, காய வச்சு சீவு புழுக்கொடியல் செய்யலாம். சீவு புழுக்கொடியலுக்க கொஞ்சக் கச்சான் சேத்து சீனிப்பாணி காச்சி ஊத்திப் பிரட்டி ஒரு இனிப்பே தயாரிக்கலாம் தெரியுமோ. ஊமலை இந்தப் பள்ளிக்கூடம் வழிய பட்டத்தாள் சுத்தி பழம்பொறுக்கல் நிகழ்ச்சிக்கு பயன்படுத்தின ஆக்களும் உண்டு.

அடுத்தது அந்தப் பனம்பாளயள் எங்களுக்குத் தாற கருப்பணியும் கள்ளும். கருப்பணி இனிக்கும். அந்த இனிப்பு இருக்கிறதுக்காக முட்டியள்ள சுண்ணாம்பு பூசி பாளையள்ள கட்டுவினம். கருப்பணியை காசு குடுத்து வாங்கி என்னவோ எல்லாம் செய்து ஒரு பென்னாம்பெரிய இரும்புச் சட்டியில காச்சி பனங்கட்டி செய்யிறனாங்கள். அதுவும் அதுக்கெண்டு ஒவ்வொரு சைசில குட்டான் வாங்கி அதுக்க கொதிக்கிற அந்தப் பாணிய ஊத்தி இறுகவிட்டு அதையும் வித்திருக்கிறம். அதே போல எங்கட ஊரில இந்தக் கள்ளுக்கு அலையிற சனம் எத்தினை இருக்கு தெரியுமே. அது உடம்புக்கு நல்லது எண்டு சொல்லி வாங்கி வாங்கிக் குடிப்பினம். இதே பனையில இருக்கிற பன்னாடைய வச்சுத்தான் கள்ளை வடிகட்டுவினம். ஒரு முறை சுவிஸில இருந்து வந்த ஒரு தண்ணிச்சாமி என்னட்ட ரகசியமா காசு தந்து குடிக்க வாங்கிவா எண்டுது. நான் என்ன பிராண்ட் அண்ணை எண்ட அந்தாள் என்னை ஒரு மாதிரியாப் பாத்துட்டுச் சொல்லீச்சுது, கள்ளில என்னடா பிராண்டும் மண்ணாங்கட்டியும் எண்டு. நான் இந்தாள் வெளிநாட்டில இருந்து வந்தது தானே ஆகக் குறஞ்சது பியராவது கேட்கும் எண்டு நினைக்க அந்தாள் கேட்டது இத. அந்தளவுக்கு புகழ் கள்ளுக்கு.

இதே போல பனையில இருக்கிற பன்னாடை, கொக்காரை, பாளை எல்லாம் கூட எங்கட வாழ்வோட ஒன்றிப் போனவைதான். 87 பிற்பகுதி தொடக்கம், 93 இடைப்பகுதி வரை நிரந்தர வருமானம் இல்லாமல் தடுமாறின காலத்தில எங்கட குடும்பத்துக்கு ஒருவகையில இன்னொரு குடும்பத் தலைவனா பனைதான் இருந்தது. இரவில நிலா வெளிச்சத்தில பேசிச் சிரிச்சபடி குடும்பமாய் இருந்து ஓலை கிழிப்பம். நான் பெரியாக்களுக்கு சின்னச் சின்ன உதவி செய்வன். அதுதான் எங்கட நிலாக்காலம். அதே போல் கருக்கு மட்டைகளைப் பேரம் பேசி விக்கிற போதோ, பனங்குற்றி விற்கிற போதோ ஏதோ பெரிய மனிசன் மாதிரி வாங்கிற ஆக்களையும் விக்கிற ஆக்களையும் மேற்பார்வை செய்தது ஞாபகம் இருக்கிறது. வேலையில்லாமலா பனைக்கு கற்பகத்தரு எண்டு பேர் வைத்தார்கள்? கற்பக மரம் இருக்கிற இடம் தேவலோகம் எண்டால், எங்கட ஊர்களும் தேவலோகம்தானே!

வடலிக்காணி: பனைகள் கூடியுள்ள காணியை வடலிக் காணி என்று சொல்வார்கள் எங்களூரில். மாட்டின் இளையது கன்று, காகத்தின் இளையது குஞ்சு என்பது போல, பனையின் இளையது வடலி.
சிலாகை: சலாகைகள். பனங்குற்றியில் இருந்து மெருகூட்டித் தயாரிக்கப்படும் நீளமான மரங்கள். இது சம்பந்தப்பட்டு கைமரம் என்ற சொல்லும் விளங்கி வருகிறது. சனிக்கிழமை அப்பாவுடன் பேசும்போது கேட்டுச் சொல்கிறேன்.
இணக்குவினம்: சீவி மெருகூட்டுவார்கள்
கொட்டிலுக்கு: கொட்டகைகள், தற்காலிக தங்குமிடங்கள், வீடுப் பிராணிகளுக்கான பாதுகாப்பான தங்குமிடங்கள்
பங்கர்: பதுங்கு குழிகள்
சிராம்பு: மெருகூட்டப் படும் பனங்குற்றிகளின் எச்சங்கள். இவை கால்களில் குற்றி ஆட்களைப் படாத பாடு படுத்துவதும் உண்டு.
கருக்குமட்டை: ஓலையைப் பனையோடு சேர்த்துத் தாங்கும், கூரான கரைகளை உடைய பகுதி. கருக்கு ஆட்களின் உடலை இலகுவில் கிழித்துவிடும்.
சத்தகம்: கேள்விக்குறி போன்ற, இரும்பாலான கத்தி. இதற்கு பெரும்பாலும் கைபிடியும் இரும்பாலேயே செய்யப்பட்டு, கைபிடியின் அடிப்பாகம் கூர்மையாக இருக்கும். ஓலை கிழிக்க அடிக்கடி பயன்படும். பூப்புனித நீராட்டு விழாக்களில் ஒரு கௌரவமான இடம் பெறுவது.
மிதிச்சு: மிதித்தல். இங்கே பனை ஓலையை அழகாக அடுக்கி படிய வைத்தல் என்ற பொருளில் பயன்படுகிறது.
பாடம்: பனையோலையை ஒழுங்காக அடுக்கி படிய வைத்தல் வரிசமாவது: வருடமாவது
பொறுப்பில: பொறுப்பில். அதாவது, வீட்டுக்காரர் வேறு இடத்தில் இருக்கும் போது, அந்த வீட்டைப் பராமரிக்கும், வாடகைக்கு விடும் கடமைகளும் உரிமைகளும்.
மேய்வம்: வேய்தல். கூரையை அடைத்தல்.
கடகம்: ஓலையால் செய்யப்பட்ட ஒரு வகை வீட்டு உபகரணம். பல அளவுகளில் பல தேவைகளுக்காக, பல்வேறுபட்ட உரத் தன்மையோடு செய்யப்படும்
சுளகு: ஓலையால் செய்யப்பட்ட ஒரு வகை வீட்டு உபகரணம். அரிசி புடைக்கவும், நெல் தூற்றவும் அடிக்கடி பயன்பட்டது எங்கள் வீட்டில்.
நீத்துப்பெட்டி: ஓலையால் செய்யப்பட்ட ஒரு வகை வீட்டு உபகரணம். அநேகமாக பிட்டு அவிக்கவும், மா, அரிசி போன்றவற்றை அளக்கவும் (ஒரு நீத்துப்பெட்டி அரிசி இண்டைக்குக் கூடச் சமையும்) பயன்பட்டது
குட்டான்: இது பெரும்பாலும் பனங்கட்டி போட்டு வைக்கப் பயன்பட்ட ஓலையாலான உபகரணம்.
நொங்கு: நுங்கு
அரிமனை: அரிவாள் மணை
பனங்காய்க்காய்: பனங்களியால் செய்யப்படும் பலகாரம். இதைப் பனங்காய்ப் பனியாரம் என்றும் அழைப்பார்கள்.
பினாட்டு: பனாட்டு. பனங்களியைப் பனை ஓலையில் பின்னப்பட்ட பாயில் தடவி வெயிலில் காயவைத்து செய்வது
ஊமல்: பனம் பழத்தின் கடைசி வடிவம்
பட்டத்தாள்: நிறம் பூசப்பட்ட கடதாசி. மென்மையானது. பட்டம் ஒட்டுவதற்கு பெரும்பாலான சிறுவயதினரால் பயன்படுத்தப் படுவதால் பட்டத்தாள் என்ற பெயரால் புகழ் பெற்றது.
பழம்பொறுக்கல்: ஆரம்பப் பாடசாலைகளில் விளையாடும் ஒரு விளையாட்டு. இல்ல மெய்வல்லுனர்ப் போட்டிகளிலும் இடம்பெறுவதுண்டு.
பனம்பாளயள்: பனம் பாளை.
முட்டி: கள்ளும், கருப்பணியும் சேகரிக்கப் பயன்படும் மண்ணாலான பாத்திரம்.
தண்ணிச்சாமி: அதிகப்படியாகக் குடிப்பவர்.