Author: யசோதா.பத்மநாதன்
•4:48 PM
படலை திறந்து தான் இருக்கிறது; உள்ளே வாருங்கள்.:)


வீட்டின் முகம் இது. வீட்டில் வசிக்கும் மனிதர்களின் மன,குண இயல்பை மூன்றாம் நபருக்குக் காட்டும் முதல் இடம் இது தான்.

முதன் முதலாக தெரியாத ஒரு வீட்டுக்கு வருகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.முதலில் நீங்கள் எங்கெல்லாமோ தேடி இடத்தைக் கண்டுபிடித்து முதலில் வந்து நிற்கும் இடம் இது. அந்த வீட்டில் உள்ளவர்களைப் பற்றி உங்கள் மனம் முதலில் ஒரு அபிப்பிராயத்தை இதை வைத்துத் தான் எடுத்துக் கொள்ளும்.

அது தான் படலை.

படலைகள் பலவகை.வீதியில் இருந்து வீட்டு வளவுக்கு வரும் வாசலை கட்டுப் பாட்டில் வைத்திருப்பது இதன் தொழில்.படலை கர்ம வீரனைப் போல வீட்டை; வீட்டில் உள்ளவர்களைக் காக்கிறது.

படலை என்பது யாழ்ப்பாணத்துச் சொல் வழக்கு. கேற் என்பதும் இது தான்.இவற்றில் பலவிதங்கள் உண்டு. மரப்படலை,இரும்புப் படலை,ஒற்றைப்படலை, இரட்டைப் படலை,தகரப் படலை,கடவுப் படலை,செத்தைப் படலை,மூங்கில் கழிகளால் கொழுவி அமைக்கப் படும் படலைகளும் உண்டு.படலைகளே அற்ற ஏழைகளின் வீடுகளும் இருக்கின்றன. இப்படிப் பலவகைப்படும் அவை.

சமயங்களுக்கும் இந்தப் படலைகளுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்று கேட்டால் அப்படி ஒரு சம்பந்தமும் இல்லை. இருந்த போதும் இஸ்லாமிய சகோதரர்களின் வீடுகளின் படலைகள் இன்னொரு விதமாக தனித்துவம் கொண்டதாக இருக்கும் என்பதையும் சொல்ல வேண்டும். அது ஒரு விதமான மூடிய தோற்றத்தைக் கொண்டிருக்கும்.உயரத்தில் ஒரு சிறு ஜன்னல் அதில் காணப்படும். வெளிப்புற சுவர் ஓரம் அழைப்பழுத்தி ஒன்றிருக்கும். (இதனை நான் கொழும்பில் தான் பார்த்தேன்.ஏனையவர்களின் வீட்டுப் படலைகளும் அப்படி இருக்கிறதா என்று தெரியவில்லை.)அதனை அழுத்தினால் ஒரு முகம் மட்டும் அந்த ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்கும். விடயத்தைச் சொன்ன பின் அனுமதி கிட்டும்.

சிங்கள மக்களது படலைகள் நல்ல கலை வேலைப்பாடுகள் கொண்டதாக இருக்கும். மரமோ, இரும்போ எதுவாக இருந்தாலும் கடைச்சல் வேலைகளுக்கு அவர்கள் மிகப் பிரசித்தம் ஆனவர்கள்.வேல் போன்ற முனைகள் ஒரு வித சீரோடு அதில் அமைந்திருக்கும்.பதிவாக ஆரம்பித்து உட்புறம் வர வர உயர்ந்து காணப்படும் சில. வேறு சில அதற்கு எதிர்புறமாக உயர்ந்தவாறு செல்லும்.கறுப்பும் மண்ணிறமும் கலந்த வர்ண வேலைப்பாடுகள் அதில் அமைந்திருக்கும்.இந்தப் படலையில் அவர்கள் ஏனோ தனிக்கவனம் செலுத்துவதுண்டு.

பொதுவாகச் சில படலைகள் அதன் கம்பி வேலைப் பாட்டிலேயே இரு அன்னங்கள் நீந்துவது போல ;உதயசூரியன் உதிப்பதைப் போல; மலர்ந்த தாமரையைப் போல என்றெல்லாம் கலை பேசும். வேறு சில வீட்டுத் தலைவரின் பெயரைத் தாங்கி நிற்கும். மேலும் சில வீட்டின் பெயரைக் கொண்டிருக்கும்.வர்ணப் பூச்சுக்களால் அதனை வேறுபடுத்தியும் காட்டி இருப்பார்கள் சிலதை.மேலும் சில வீட்டு ஜன்னலின் கம்பி வேலைப் பாட்டை போன்ற வேலைப் பாட்டையும் கொண்டிருக்கும்.பெரும்பாலானவை நல்ல காத்திரமான படலைகளாகவும் இருக்கும். வீட்டினுடய வர்ணத்தை ஒத்த நிறத்தைப் பெரும்பாலும் அவை கொண்டிருக்கும்.

இவை எல்லாம் எத்தகைய கலை வேலைப்பாடு வண்ணங்களைக் கொண்டிருந்தாலும் இவை அமைந்திருப்பதற்கான நோக்கம் பாதுகாப்பு என்ற ஒன்றே!

அதன் சூட்சுமம் படலைகளின் ஓரத்திலோ நடுப்பகுதியிலோ தான் காணப் படும். அவை தான் கொழுவிகள். கூக்குகள்,திறாங்குகள் போன்ற பூட்டும் சாதனங்கள்.சில உட்புறமாக மட்டும் திறக்கக் கூடிய தன்மையை கொண்டனவாகவும் விளங்கும். சில சங்கிலி கொண்ட பூட்டுக்களால் எப்போதும் பூட்டப் பட்டிருக்கும். இரவு வேளைகளில் படலைகளைப் பூட்டி வைப்பாரும் உளர். அது கள்வர் பயத்துக்காக.தோற்றம் எவ்வாறு இருந்தாலும் பூட்டுகள் சரியாக இல்லாவிட்டால் படலைகள் இருந்தும் அவற்றினால் ஒரு பயனும் இல்லாது போய் விடும்.சில வீடுகளில் ’நாய் கடிக்கும் கவனம்’ என்ற எச்சரிக்கைப் பலகையும் வைக்கப் பட்டிருக்கும்.சில படலைகள் ‘கண்ணைப் பார்;சிரி’ என்றும் சொல்லும்.


சில படலைகளை 45 கலன் கொள்கலனை வெட்டி அழுத்தி நீளமாக்கி அதைக் கொண்டும் படலைகளைச் செய்திருப்பார்கள்.அதன் ஓரத்தைப் பிடித்து தூக்கி கரைக்கு இழுத்துவரவேண்டும்.அது ஏழைகளின் படலை.சிக்கனமான படலை.சிறு காய்கறித் தோட்டங்களுக்கும் அப்படியான படலைகள் இருப்பதுண்டு.

பணக்கார வீட்டுப் படலைகள் கார் போக வசதியாக இரண்டு கதவுகளைக் கொண்டதாக ஒன்றும் அருகாக ஒற்றையாய் ஒரு படலை நடந்து வருபவர்களுக்காகவும் இருக்கும். (படலைகளும் வர்க்க வித்தியாசம் பார்க்கும் போலும்.)

முக்கியமான ஒரு யாழ்ப்பாணப் படலையைப் பற்றிச் சொல்லத் தான் இத்தனை ஆலாபனையும். அப்படலைக்குப் பெயர் ‘சங்கடப் படலை”.சங்கடத்தை (அசெளகரிகத்தை) தீர்க்கும் படலை என்று அதற்குப் பொருள் கொள்ளலாம்.இரண்டு நாளாக இந்தப் படலையின் படத்தைத் தேடியும் அது கிட்டவில்லை.அதனால் இப்படலையை நிச்சயமாக எங்கள் தேட்டங்களில் ஒன்றாக - பண்பாட்டுச் சின்னத்தில் ஒன்றாக கொள்ளலாம்.

அது எப்படி இருக்கும் என்றால் படலைக்கும் ஒரு வீடு இருக்கும். அதாவது இரட்டைப் படலை என்றால் அந்தப் படலைக்கு மேலே சிறு கூரையோடு கூடிய கிடுகினாலோ பனக்கார வீடென்றால் ஓட்டினாலோ வேய்ந்த கூரைப் பகுதி இடுக்கும்.அவை மழையில் இருந்தும் வெய்யிலில் இருந்தும் படலையை மட்டுமல்ல வழிப்போக்கரையும் காப்பாற்றும்.

முற்காலங்களில் அதன் அருகே குடி தண்ணீர் பானையில் வைக்கப் பட்டிருக்கும். மேலும் சில சுமை தாங்கிகளைக் கொண்டிருக்கும். அவை நடந்து போகும் வழிப் போக்கருக்கு நிழலையும் இளைப்பாறலையும் அளிக்கும்.

கூடவே தமிழரின் பண்பாட்டினையும் அது சொல்லி நிற்கும்.

அவை எல்லாம் இன்று அழிந்து வரலாற்று ஆவணங்களாகத் தன்னும் பார்க்க முடியாத நிலையில் போயிற்று.யாழ்ப்பாணத்து படலைகளின் அழகை தன்மையைக் கூறும் படங்கள் எதனையும் வலையிலும் காண முடியவில்லை.



(சங்கடப் படலை என்பது கிட்டத் தட்ட இது போல இருக்கும்.)இனி எவரேனும் தமிழ் பகுதிகளுக்குப் போனால் படலைகளையும் படம் எடுத்து வாருங்கள்.

அது பல கதைகள் பேசும் வரலாற்றுச் சின்னம்.
Author: தமிழன்-கறுப்பி...
•9:06 AM
சாவில் தமிழ் படித்து சாகவேண்டும் - என்றன்
சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும்


பாரதிதாசன் முதல் பலரும் எடுத்தாண்டிருந்த இந்த அழியாத வரிகளை அறிந்த அளவுக்கு அந்த வரிகளுக்குரிய முகத்தை பலரும் அறிந்திருக்கவில்லை. புதிரும் எளிமையும் நிரம்பிய அந்த முகம் என்னுடைய தெருவில்தான் இருந்தது என்பதை நான் எவ்வளவு தாமதமாக கண்டுகொண்டேன் என்பது இன்னமும் என்னால் ஈடு செய்ய் முடியாத அறியாமைகளில் ஒன்று. நான் ஒரு பொறுப்பற்றவனாக இருந்திருக்கிறேன் என்பதுதான் உண்மை. இந்த முகத்துக்குரிய அந்த கற்றலை சுமந்தலைந்த உயிரை கண்டுகொண்டிருந்தும் அந்த அறிவை பயன்படுத்தவே இல்லை என்பது எனன்னுடைய ஈடு செய்யவொண்ணா இழப்பு.

அலட்சியமாக அணிந்திருக்கிற வேட்டியும் சட்டையும், கலைந்திருக்கிற முடியும் அந்த முகத்தாடே கூட வந்தது போன்ற கண்ணாடியும் அதனுள்ளே படித்துக்களைத்த அறிவு நிரம்பிய கண்களும் என எளிமையின் உருவமாய உலவிக்கொண்டிருந்த அந்த மனிதருக்கு பெயர் க.சச்சிதானந்தன். இவருக்கு பல பட்டங்களும் விருதுகளும் இருந்தாலும் எங்களுடைய வட்டத்தில் சச்சி என்றே பேசிக்கொள்வோம், தெரியாதவர்களிடம் சொல்கையில் பண்டிதர் சச்சி (Prof - Sachi).

எழுதியே கரைந்த எனக்குப்பிடித்த சில எழுத்தாளுமைகளைப்போல சச்சி கற்றுக்கரைந்த ஒரு ஆத்மா. படிக்கப்படிக்க வருகிற ஞானம் என்னவென்பதை சச்சியின் மிக எளிமையான வாழ்வை நேரில் கண்டவர்களுக்கு தெரிந்திருக்கலாம். சில சமயங்களில் குடையும் பல நேரங்களில் குடையில்லாமலும் தும்பளை ரோட்டில் நடந்து போகிற சச்சியை பார்த்தால் இவர்தான் கலாநிதி பட்டம் வாங்கின கற்றவர்களுக்கெல்லாம் கற்பிக்கிற பண்டிதர் க.சச்சிதானந்தன் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.அறிவு நிரம்பி வழிய நடக்கிற உருவம் அது.


சின்ன வயது தமிழ் புத்தகத்தில் பார்த்த பண்டிதர் சச்சியோடு நான் பேசவேண்டும் என நினைத்துக்கொண்டது ஆசிரியர் ரகுவரன் அவர்களின் ஊரும் வாழ்வும் புத்தகவெளியீட்டிற்கு பிறகுதான் அதுவரையும் ஒரு பெரிய பண்டிதரிடம் புதிர்மாதிரி உலவிக்கொண்டிருந்த அவரிடம் எப்படி அணுகுவதென்று தெரியாமல்தான் தடுமாறிக்கொண்டிருந்தேன். அந்த புத்தக வெளியீடு தும்பளை சிவப்பிரகாச மகா வித்தியாலயத்தில் நடந்தது. அங்கே வந்திருந்த மற்றவர்கள் எல்லாம் ஏதேதோ பேச தான் பிறந்த வளர்ந்த தும்பளை முன்னாளில் எப்படி இருந்தது என்பதை அந்த ஊரை அதன் வாழ்வை குறித்து பேசிய சச்சி; இயல்பான, அணுகக்கூடிய மனிதராக எனக்குத்தோன்றினார்.எழுத்துக்கும் வாழ்வுக்கும் நெருக்கமுள்ளவர்களாக ஒரு சிலரால் மட்டுமே முடிகிறது.அதில் சச்சியையும் சேர்த்துக் கொண்டேன்.


அதற்கு பிறகு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவரோடு சின்னச்சின்னதாய் பேசியிருக்கிறேன். கடைசி வரைக்கும் அவரோடு ஆறுதலாக இருந்து கேட்டறிவதற்கான சந்தர்ப்பத்தை அந்த நேரத்தில் என்னால் உருவாக்க முடியாதிருந்தது. அது என் வயதின் பலவீனமாய் இருக்கலாம். அவரோடு இருந்து கதைக்கவும் பழகவும் விரும்பிய நேரத்தில் அதனை செய்ய முடியாத தூரத்தில் நான் இருந்தேன். இவ்வளவு ஏன் அவர் மறைந்து போன விசயம் கூட இரண்டு மாதங்கள் தாமதமாகவே எனக்கு வந்து சேர்ந்தது.

அவர் கைப்பட எழுதிய சில பக்கங்கள் ஊரில் இருக்கிற என் புத்தக கட்டுகளுக்கிடையில் இருக்கிறதென நம்புகிறேன். ஈழத்து முற்றத்தில் அவரைக்குறித்து பகிர கிடைத்த சந்தர்பத்தை எனனால் சரியாக பயன்படுத்த முடியவில்லை என்பதுதான் உண்மை. ஏறக்குறைய ஈழத்து முற்றம் தளத்தை நான் மறந்து விட்டிருந்தேன்(குழுமம் மன்னிக்குமாக). கொஞ்சம் தாமதமாகவே குழுமத்தின் அறிவிப்பை வாசித்திருந்தேன். என் கைவசமிருந்த அவரது மறைவு குறித்த நினைவோடையாக வெளிவந்த ஆனந்தத் தேன் என்கிற குறிப்பு புத்தகத்தலிருந்து அவரது வாழ்க்கைக்குறிப்பை இந்த சந்தர்ப்பத்தில் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வுறுகிறேன்.

ஈழத்தின் தமிழ் வரலாற்றுக்கு ஒரு பெரும் இழப்பாகிப்போன மனிதர்களை நேசித்த அந்த அறிவு, அதன் கடைசி காலங்களில் மிகுந்த வேதனைக்குள்ளாகியிருந்ததற்கு எமது நாடு பழிசுமந்தே ஆகவேண்டும்.


வாழ்க்கைக் குறிப்பு.

பிறப்பு : 19.10.1921

தந்தை : தும்பளை, கணபதிப்பிள்ளை.

தாய் : மாவிட்டபுரம், தெய்வானைப்பிள்ளை

ஆரம்பக்கல்வி : காங்கேசன் துறை நடேஸ்வராக்கல்லுரி.

தந்தையாரிடம் வானியலும் சொதிடமும் சிவப்பிரகாச தேசிகரிடமும் சுப்பிரமணிய சாஸ்திரிகளிடமும் பாலசுந்தரக்குரக்களிடமம் சமஸ்கிருதக்கல்வியும் பயின்றார்.

இடை நிலைக்கல்வி : பருத்தித்துறை சித்திவிநாயகர் வித்தியாலயம் மற்றும் ஹாட்லிக்கல்லூரி. ( 1936-37)

உயர் கல்வி : பரமேஸ்வராக் கல்லூரி (1938-1940)

மதுரைப்பண்ணடிதர் பட்டம் - இலங்கை,இந்தியா இரு நாடுகளிலும் முதன்மைச்சித்தி
(1941.09.30)

1946 - 1945: சுவாமி விபுலானந்தருக்கு ஆராய்ச்சித்துணைவர்

1946 : நீர் கொழும்பு St Mary's College இல் கணித ஆசிரியர்.

1947 – 1959: உடுவில் மகளிர் கல்லூரியில் கணித ஆசிரியர், தமிழ் சிறப்புப் பட்டம்

26.08.1949 : திருமணம்

1960 : பரமேஸ்வராக்கல்லூரியில் கணித ஆசிரியர்.

1961 : யாழ் இந்துக்கல்லுரியில் தமிழாசிரியர்

1962- 1965 : யாழ்,மத்திய கல்லூரி கணித ஆசிரியர்

1965 - 1967 அரசினர் பாடநூற்சபை எழுத்தாளர்.

1967 - 1981 : பலாலி ஆசிரியர் கலாசாலை உளவியற் பேராசிரியர்

1978 : M Phil in Psychology (London)

2001 : கலாநிதிப்பட்டம் (யாழ் பல்கலைக்கழகம்)

21.03.2008: மறைவு.

எழுதிய நூல்கள் மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரைகள்.

1. ஆனந்தத்தேன் (கவிதை) 1955
2. தியாக மாமலை வரலாறு (1959)
3. யாழ்ப்பாணக்காவியம் (1998)
4. தமிழர் யாழியல் - ஆராய்ச்சி (1967)
5. மஞ்சு காசினியம் : இயங்கு தமிழியல் (2001)
6. Fundamentals of Tamil Prosody (2002)
7. இலங்கைக்காவியம் : பருவப் பாலியர் படும்பாடு (2002)
8. மஞ்சு மலர்க்கொத்து (சிறுவர் பாட்டு) (2003)
9. எடுத்த மலர்களும் கொடுத்த மாலையும் - கவிதை (2004)
10. S.J.V. Chelvanayaham ( In Print)


கட்டுரைகள் கவிதைகள்
#
தமிழன் (மதுரை) சக்தி ஈழகேசரியில் இருபதுக்கு மேற்பட்ட சிறுகதைகள்இ ஈழகேசரியில் தொடராக வெளிவந்த அன்னபூரணி என்ற முழு நாவல் - (1942) Ceylon Daily News இல் உளவியற் கட்டுரை.
#யாழ் பல்கலைக்கழக வெள்ளி விழாவின்போது சமர்ப்பித்த வானியல் (ஆராய்ச்சி)
#
ஆரிய திராவிட பாஷாபிவிருத்தி சங்கத்தில் படிக்கப்பட்ட தமிழ் ஒலி மூலங்கள். (1989)
#
கலாநிதி கு.சிவப்பிரகாசம் நினைவாக வாசிக்கப்பட்ட உளவியல் அடிப்படையில் உவம இயல். (1990)
#
யாழ் பல்கலைக்கழகத்தில் வாசிக்கப்பட்ட இடைச்சொல் பற்றிய மூன்று எடுகோள்கள் (1991)
முதலிய எண்ணிறைந்தவை

பெற்ற விருதுகள்.

1. சாகித்தியரத்ன - இலங்கையில் இலக்கியத்துக்க வழங்கப்படும் அதியுயர் விருது (199)

2. சம்பந்தன் விருது (2001)

3. வட - கீழ் மாகாண ஆளுநர் விருது (2003)

4. தந்தை செல்வா நினைவு விருது (2004)

5. இலங்கை இலக்கியப்பேரவை விருது (2004)

5. கலாகீர்த்தி தேசிய விருது (2005)

6. இவைதவிர கவிதைக்காக தேசிய மட்டத்திலும் மகாண மட்டத்திலும் பலமுறை பரிசு பெற்றவர்.

_____________________________________________


பண்டிதர் க.சச்சிதானந்தன் குறித்த தகவல்கள் இணையத்தில் வெகு குறைவாகவே இருக்கிறதைப்போல உணர்கிறேன். அதற்காகவே அவருடைய பெயரையே தலைப்பாக வைத்திருக்கிறேன். ஊரில் சொல்லியிருக்கிறேன் மேலும் கிடைக்கிற தகவல்களை முடிந்தவரையில் திருத்தமாக பகிர்வேன்.


நன்றி.

ஆனந்தத்தேன்
மதுரைப்பண்டிதர் க.சச்சிதானந்தன்
B.A( Hons) Lond.M.Phil (lond) Ph.D (Jaffna)
நினைவோடை. (04.05.2008)
Author: யசோதா.பத்மநாதன்
•6:49 PM


Mexican Creeper



Rangoon Creeper

ஈழத்தை விட்டு வந்து இரண்டாவது தசாப்தத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது புலம் பெயர்ந்த பெரும்பாலாருக்கான பாதை.இதற்கிடையே நிறைய மாற்றங்கள் இரண்டு புறத்திலும்.புலம் பெயர்ந்தாலும் சரி, அங்கேயே வசித்தாலும் சரி, சிறு வயது நினைவுகள் மனதில் இருந்து என்றும் அகலாதவை தானே.

என் மனதில் நினைவுகளில் பூத்திருக்கின்ற இரண்டு கொடிப்பூ வகைகள் பற்றிய பதிவு இது.
ஒரு முறை எங்கள் சக பதிவர் சினேகிதி பூக்களைப் பற்றிய பிரபல பதிவொன்றை ஈழத்து முற்றத்தில் இட்டிருந்தார். அதில் விடு பட்டதும் என் மனதில் நிலைத்து நிற்பதுமான இந்த இரண்டு கொடிப் பூக்களை இங்கு அறிமுகப் படுத்துவதில் மகிழ்வடைகிறேன்.

நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றிருக்கின்ற ஈழத்து முற்றம் பூக்களாலும் நிறையட்டுமே!

முதல் பூ நாம் ’ஸ்டேசன் பத்தை’ என்று செல்லமாக அழைப்பது. அதன் உண்மையான பெயர் அண்மைக் காலம் வரைத் தெரிந்திருக்கவில்லை.முத்து முத்தாக கேட்பார் இல்லாமல் ரயில் நிலையங்களை அண்டிய வேலியோரங்களிலும் ரயில் பாதை ஓரங்களிலும் அழகான றோசா நிறத்தில் பூத்துக் கிடக்கும்.மழைத் தண்ணீரை அருந்தி பொது மண்ணில் பூத்திருக்கும் செழிச்ச கொடி.அதற்கு அப்படி ஒரு சுபாவம்!நறுமணமோ தேனோ அதிலிருந்ததாக நினைவில் இல்லை.ஏழைப்பட்ட பூப் போல! யாரும் அதைக் கிட்ட நின்று ரசித்தும் நான் கண்டதில்லை.

என் சிறு வயதில் முதலாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு படித்த பொழுதுகளில் என் பாடசாலை விட்டதும் ரயில் பாதை ஓரமாக நடந்து வரவேண்டி இருக்கும்.சிவகாமி என்றொரு இனிய தாய்மை நிறைந்த ஒரு கன்னிப் பெண் எங்களோடு அப்போது இருந்தார்.நல்ல வெண்ணை நிறம். மாசு மறு எதுவுமற்ற முகம்.அடர்த்தியான கூந்தலை எண்ணை வைத்து படியவாரி பின்னிக் கட்டி இருப்பார்.நெற்றி எப்போதும் திருநீற்றைக் கொண்டிருக்கும்.அரைப் பாவாடை சட்டை அணிந்திருப்பார்.தெய்வீகக் களை பொருந்திய கருணையான முகம் அவருக்கு.அவர் என்னை அழைத்துச் செல்ல வருவார். வரும் போது இப்பாதை வழியாக வருவோம்.



வரும் போது மறக்காமல் இப்பூக்களில் சிலவற்றை அவதானமாக பறித்துத் சிற்றெறும்புகள், பிள்ளையார் எறும்புகள் ஏதேனும் இருக்கிறதா என்றெல்லாம் கவனித்து விட்டு எனக்குத் தருவார். நானும் மிக ஆர்வத்தோடு அதைக் கொண்டு வருவேன்.

2004ம் ஆண்டு அங்கு நான் போயிருந்த போது ரயில் நிலையங்களோ ரயில் பாதைகளோ அங்கிருக்கவில்லை.இப்பூக்களும் அவைகளோடு அழிந்திருக்குமோ? அண்மையில் தான் இதன் பெயர் மெக்ஸிக்கன் கொடிப் பூக்கள் (Mexican Creeper)என்ற அதன் உண்மைப் பெயரை கண்டு பிடித்தேன்.

.

மற்றய மலரை நாம் ’குடிகாரன் பூ’ என்று அழைப்போம்.கொடி மலர்.வெள்ளையில் இருந்து றோசா வர்ணம் வரை வந்து சிவப்பு நிறத்தில் அது முடிவடையும். கீழ் நோக்கிக் கொத்துக் கொத்தாகப் பூக்கும்.அதனால் அதற்குக் குடிகாரன் பூ என்று பெயர்.

எங்கள் அம்மம்மா வீட்டுப் போர்டிக்கோவில் அது செழிப்பாக வளர்ந்திருந்தது.தண்ணீர் அதற்கதிகம் தேவைப் பட்டதில்லை. அதற்குத் தண்ணீர் ஊற்றியதாகவும் ஞாபகம் இல்லை. இதற்கும் வாசம் இருந்ததில்லை.தேன் இருந்ததா தேனீக்கள் வந்ததா என்றும் நினைவில் இல்லை.

ஆனால் இவை மிக அழகான பூக்கள்.கேட்பார் இல்லாமலேயே பூத்துக் கிடப்பவை.அநேக காலம் இதன் உண்மையான பெயர் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். ஈழத்தவர்களைக் காணுகின்ற போதெல்லாம் மலர்களைப் பற்றிய பேச்சு வந்தால் இம் மலரின் பெயர் பற்றிக் கேட்க மறக்க மாட்டேன்.



எல்லோருக்கும் மலர் மட்டும் ஞாபகத்தில் இருந்தது.உண்மைப் பெயர் நினைவிருக்கவில்லை. தற்சமயமாக கூகுள் இமேஜில் தேடிக் கொண்டு போன போது அதன் படங்கள் அகப்பட்டன.இவை அவற்றில் சில.



இவையும் இப்போது ஈழத்தில் இருக்கின்றனவா என்பது தெரியவில்லை.அவை ரங்கூன் கொடிப் பூக்கள் (Rankoon creeper) என்று அழைக்கப் படுகின்றன என்பதையும் அண்மைக் காலத்தில் தான் கண்டு பிடித்தேன்.

பூக்கள் எப்போதும் அழகானவைகள் தான்.சில தேன் உள்ளவை; சில நறு மணம் கொண்டவை; சில அழகானவை;ஒற்றையாகவும் கொத்தாகவும் கொள்ளையாகவும் பூக்கும் சில.அபூர்வமாகப் பூப்பனவும் உண்டு.மேலும் சில வரண்ட பூமியிலும் பூப்பவை.தொட்டவுடன் உதிர்ந்து விடும் பவளமல்லிகையில் இருந்து மாதக்கணக்காக வாடாதிருக்கும் அந்தூரியம் வரை அவைகளில் தான் எத்தனை எத்தனை குணநலன்கள்!

எவ்வாறு இருப்பினும் அவை தத்தம் இயல்பினால் மனதுக்கு ரம்மியத்தை உண்டு பண்ணுபவை.

கேட்பாரில்லாமலேயே ஈழத்தில் பூத்துக் கிடந்து காலத்தால் அழிந்து போயிருக்கக் கூடும் இந்தக் கொடிப் பூக்கள்!.






படங்கள்; நன்றி, கூகுள் இமேஜ்)