Author: Subankan
•7:04 AM

“என்ன அன்டி, கையில பாக்கையும் காவிக்கொண்டு வந்திருக்கிறியள்? என்ன விசயம்?”
“ஒண்டுமில்லை, சண்முகமண்ணேன்ட கடையில நல்ல வெள்ளைச் சீனி வந்திருக்கு. கொழும்பு விலையைவிட கிலோ இருவது ரூவாதான் கூடவாம். அதுதான் வேணுமெண்டா வாங்கிவையுங்கோவெண்டு சொல்லிட்டுப் போக வந்தனான்”

எந்த ஒரு பொருளுக்கும் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விற்பனை விலைதான் இந்தக் கொழும்புவிலை. என்னதான் அதிகபட்ச விலை என்றாலும், தரைவழிப்போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, பல கட்டுப்பாடுகளுக்கும் தடைகளுக்கும் இடையில் நடந்துகொண்டிருந்த கடல்வழிப் போக்குவரத்தாலும் இந்த விலை எங்களுக்கு எப்படியும் குறைந்தபட்ச விலையிலும் குறைவாகத்தான் இருக்கும்.



ஊர்க்கடைகளில் விற்கப்படும் பொருட்களின் விலை சமயங்களில் கொழும்பு விலையின் இரண்டு, மூன்று மடங்கைவிட அதிகமாக இருக்கும் சந்தர்ப்பங்களும் இங்கே சகஜம். இந்த விலை அதிகரிப்பை பொருளின் தேவை, கடல்மார்க்கத்தில் எடுத்துவர ஆகும் செலவு, யுத்த சூழ்நிலை முதற்கொண்டு கடையில் இருக்கும் பதுக்கல் வரை தீர்மானிக்கும்.

இந்தக் கொழும்புவிலை என்பது பல ஆண்டுகாலப் பாவனையால் நம்மவர்கள் இரத்தத்தில் ஊறிவிட்டது. எந்தப் பொருளையும் அதன் கொழும்புவிலையுடன் ஒப்பிடுவதும், அதுகுறித்து அடுத்தவருடன் பேசிக்கொள்வதும், அதேபோல கொழும்புக்கு வருபவர்கள் குறைந்தவிலையால் தேவைக்கு அதிகமாக வாங்க விரும்புவதும் எம்மவரிடையே இயல்பான ஒன்று.

இந்த விலைவித்தியாசத்தால், கொழும்பிலிருந்து ஊருக்குப் பயணப்படும் ஒவ்வொருவரும் தமது சக்திக்கும் அப்பாற்பட்ட பொருட்களை தம்முடன் எடுத்துச்செல்வார்கள். மாரளவு தண்ணீரில், தலையில் பொருட்களைச் சுமந்துசென்றும், படகிலும், பின் முன்னாலும் பின்னாலும் பலகை அடித்த மண்ணெய் மோட்டார்சைக்கிளிலும் கொம்படி ஊரியான் பாதையில் பயணித்து, வீடு வந்து சேர்கையில் பொருட்கள் தமது உண்மையான தன்மையையே பல நேரங்களில் இழந்துவிட்டிருந்தாலும், கொழும்பிலிருந்து வந்தால் இப்படியாக பொருட்கள் காவிவருவதும், அதை உறவினர், அயலவருடன் பகிர்வதும் ஏறத்தாள எழுதப்படாத சட்டம்போன்றது.

பல ஆண்டுகளாக நம் பாவனையில் இருந்து இந்தக் கொழும்புவிலை நம் வட்டாரச் சொற்களில் ஒன்றாகவே மாறிவிட்டது. தரைவழிப் போக்குவரத்துகள் சீர்செய்யப்பட்டு, விலை வித்தியாசங்கள் இல்லாமல் போய்விட்ட இன்றும்கூட,
“மச்சான் பைக் ஒண்டு பாத்திருக்கன், இங்கை 1.60 சொல்லுறாங்கள். அங்க எவ்வளவு போகுதெண்டு ஒருக்காப் பாத்துச் சொல்லுறியா”
 என்ற நண்பனின் அழைப்பிலும், ஆப்பிள்களை பைக்குள் அடைந்துகொண்டு யாழ் செல்லும் ஆச்சிகளிலும், “கொழும்பு விலையில்…” என்று ஆரம்பிக்கும் யாழ்ப்பாணத்துப் பத்திரிகை விளம்பரங்களிலும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது இந்தக் கொழும்பு விலை.

Author: கானா பிரபா
•4:09 AM

"கோழி மேய்ச்சாலும் கோறணமெந்தில மேய்க்கோணும்"இது ஈழத்துப் பேச்சு வழக்கில் அதுவும் பழைய காலத்தவரிடையே அதிகம் புழக்கத்தில் இருந்த ஒரு முதுமொழி. கோறணமெந்து என்றால் என்ன என்று பலர் திக்கித் திணறக் கூடும். அதன் அர்த்தம் என்னவென்றால் கவர்ன்மெண்ட் என்ற ஆங்கிலப் பதத்தின் திரிந்த பேச்சு வழக்குச் சொல்லே "கோறணமெந்து" ஆயிற்று. இந்த முதுமொழியின் அர்த்தம் இனி உங்களுக்கு இலகுவாகவே புரியக் கூடும். அதாவது அரசாங்க உத்தியோகம் கிட்டுவதென்றால் அது பெரும் வாய்ப்பாகக் கருதப்பட்ட காலமது. எவ்வளவு சம்பளம், அல்லது அரசாங்க அலுவலகத்தில் என்ன உத்தியோகம் எல்லாம் பொருட்டாகக் கணிக்க மாட்டார்கள், அரசாங்க உத்தியோகம் என்றாலே போதும். அதற்குக் காரணம் நிம்மதியான, நிரந்தரப் பொருளாதார வாய்ப்பை அரசாங்க உத்தியோகம் ஒப்பீட்டளவில் மற்ற வேலைகளை விடக் கொடுக்கும் என்பதே ஆகும். முன்பெல்லாம் அரசாங்கப் பள்ளி ஆசிரியர்கள் என்றால் கேட்கவே வேண்டாம் வரிசை கட்டி திருமண வாய்ப்புக்கள் அவர்கள் கதவைத் தட்டுமாம்.

இன்றைய தலைமுறை ஈழத்தவரிடையே கோறணமெந்து என்பது எவ்வளவு தூரம் தெரிந்து வைத்திருக்கும் பேச்சு வழக்கு என்பது கேள்விக் குறி ஆயினும். இந்தக் கோறணமெந்து என்பதும் "கோழி மேய்ச்சாலும் கோறணமெந்தில மேய்க்கோணும்" என்ற முதுமொழியும் ஈழத்து மக்களின் முந்திய காலகட்டத்து பண்பாட்டுக் குறியாக இருந்த காரணத்தால் அதைப் பதிவு செய்கின்றேன். இந்த அரசாங்க உத்தியோகம் குறித்து தினகரன் (இலங்கை) நாளிதழில் ஜீவிதன் என்பவர் எழுதிய சுவையான பகிர்வை இங்கே தருகின்றேன்.


கண்ணை மூடு மட்டும் காசு!


‘கோழி மேய்ச்சாலும் கவர்மண்டில் மேய்க்க வேணும்!’ யாழ்ப்பாண மக்கள் மத்தியில் இப்படி ஒரு பேச்சு வழக்கு இருக்கிறது. ‘பிள்ளைக்குக் கல்யாணம் பண்றதெண்டாலும், கவர்மண்ட் மாப்பிள்ளையாகப் பார்க்க வேணும்’ என்பர். ஓர் அரசாங்க உத்தியோகத்தனுக்கு எந்தளவு ‘மவுசு’ இருக்கிறது என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ளலாம்.

அரசாங்க உத்தியோகத்துக்கு ஏன் இந்தளவு மதிப்பும் மரியாதையும் கொடுக்கிறார்கள்? எல்லாம் ஓய்வு காலத்தில் கிடைக்கும் ‘பென்ஷன்’ பணம்தான் காரணம் என்று இலகுவில் கூறிவிடுவீர்கள். ‘கண்ணை மூடு மட்டும் கவர்மண்ட் காசு வரும்தானே!’ என்று ஒவ்வொரு அரச உத்தியோகத்தரும் தைரியமாக வாழ முடியும் என்று நம்பிக்கை கொள்ளலாம்.

இதனால், அரச உத்தியோகத்தரை மணந்த மனைவிமாருக்குச் சற்று ‘ராங்கி’ அதிகம் என்கிறார்கள் ‘பென்ஷன் மாப்பிள்ளைகள்’. கணவன் இறந்தாலும் பரவாயில்லை! பாதுகாப்புக்குத்தான் அவரது ‘பென்ஷன்’ இருக்கிறதுதானே! என்று எண்ணும் பெண்கள் கணவனை உதாசீனப்படுத்தாமல் இருந்தாலும் அதிர்ஷ்டம் என்கிறார்கள் சிலர்.

மனைவிதான் அவ்வாறென்றால், இந்தப் பென்ஷனியர்மார் இருக்கிறார்களே, அவர்களுக்குப் பெரும் ‘கர்வம்’ என்று சலித்துக்கொள்ளும் மனைவிமார், பிள்ளைகளும் உள்ளார்களே! ‘நாங்கள் எதிலும் தங்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறது.

கண்ணை மூடுமட்டும் கவலை இல்லை’ என்று சொல்வதால், பிள்ளைகள் போட்டி போட்டிக்கொண்டு பராமரிக்க வந்தாலும், ‘நீ உன்ர வேலையைப் பார், நான் என்ர வேலையைப் பார்க்கிறன்’ என்பார்கள் அரச உத்தியோகத்தர்கள். இதில் விதிவிலக்கானவர்கள் இல்லாமல் இல்லை.

இலங்கையில் 1956 ஆம் ஆண்டுக்குப் பின்னர்தான் ஊழியர் சேமலாப நிதியம் அறிமுகமாகியது. அதற்கு முன்பு அரசாங்க உத்தியோகமும், பென்ஷனும்தான். தனியார் துறை நிர்வாக முகாமைத்துவம் வளர்ச்சியடைந்ததன் பின்னர், அரசாங்க உத்தியோகத்தர் மத்தியில் ஒருவித மந்தநிலை ஏற்பட்டதாக உணரப்படுகிறது என்பதை மறக்க முடியாது.

தனியார் துறையில் அதிகம் உழைத்து வருமானம் ஈட்டலாம் என்றாலும், அதில் ஓய்வு கால அனுகூலமாய் கிடைக்கும் ஊழியர் சேமலாப நிதியம் துரிதகதியில் கரைந்துவிடும்!

சிலர் அந்தப் பணத்தைத் துரிதமாகப் பெற்றுத் தம் பிள்ளைகளுக்குப் பகிர்ந்தளித்து விடுகிறார்கள். அதனால் ரொக்கமாய்க் கிடைக்கும் பெருந்தொகைப் பணம் விரைவில் இருந்த இடம் தெரியாமல் குறைந்து; மறைந்துபோகிறது. ஆகவே, ஓய்வூதியம் (பென்ஷன்) தான் மாதா மாதம் வாழ்க்கையை நடத்த பாதுகாப்பு அளிக்கிறது. அதனால்தான், அரசாங்கத் துறை உத்தியோகம் உயர்ந்தது என்ற எண்ணம் வேரூன்றிப் போயிருக்கிறது.

ஓய்வூதியத்தில் சிவில் பென்ஷன், மைனர் பென்ஷன், ரீச்சர்ஸ் பென்ஷன், பெண்கள், அநாதைகள் பென்ஷன், மலாயன் பென்ஷன் என வகைப்படுத்தலாம்.

வெளிநாடுகளில், குறிப்பாக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மலாயா, போனியோ போன்ற நாடுகளில் பணியாற்றியவர்களுக்கும் பென்ஷன் கிடைக்கிறது. இதனைப் பெறுவதில் மோசடிகள் இடம்பெற்ற வரலாற்றுச் சம்பவங்களும் உள்ளன.

சரி, மாதாந்தம் இந்தப் பென்ஷனைப் பெறுவதற்கு அலுவலகம் செல்வோர் என்ன மனநிலையில் இருப்பார்கள் என்பதைப் பற்றி நமக்கு ஊகிக்க முடியுமா? முடியும்! அன்றுதான் மிகக் கலகலப்பாக அவர்கள் காணப்படுவார்கள் என்று பொதுவாக சொல்ல முடியாத நிலை சற்று வேதனையானதுதான்!

வயது முதிர்ந்தவர்களுக்கு நன்றாக உடையணிவித்து; அலங்கரித்துக் கூட்டிச் செல்லும் பிள்ளைகள், பென்ஷனைக் கையில் வாங்கியதும், அவர்களை வங்கியிலேயே இருக்கவிட்டுவிட்டு ‘ஷொப்பிங்’ போகிறார்கள். பின்னர் அவர்களுக்குத் தேவையானவற்றைக் கொள்வனவு செய்து முடித்ததும் மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

இப்படி அபூர்வமாய் நடக்கிறது என்றாலும், பென்ஷனின் தாற்பரியம் சிதைக்கப்படுவதாக, மனதைச் சற்று நெருடவே செய்யும்! கண்ணை மூடு மட்டும் ‘கவர்மண்ட்’ காசு யாருக்கு? உழைத்தவருக்கா, உதவா பிள்ளைகளுக்கா?!
Author: `மழை` ஷ்ரேயா(Shreya)
•3:02 AM
உங்களுக்கு ஒதிய மரத்தைப் பற்றித் தெரியுமா? கண்டிருக்கிறீர்களா? (மரங்களைப் பற்றித் தொடர் போல ஆரம்பித்த வசந்தனுக்குத் தெரிந்திருக்கக்கூடும்)

நெடு நெடுவென்று வளருமாம்.. ஆனால் யாருமே இந்த மரத்தில் ஏற மாட்டார்களாம். ஏனா? ஏறினால் பலமில்லாத மரத்துக் கொப்பு முறிஞ்சு ஆள் கீழ மண்ணைக் கொஞ்சிக் கொண்டிருப்பார். கை கால் மேலெல்லாம் நோக, நகர இயலாமல் விழுந்து கிடப்பராம்.

அதனாலேயே ஆகவும் ஏலாமல் சவண்டு போய்க் கிடப்பவர்களைக் கண்டால் 'என்னடா ஒதிய மரத்தால விழுந்தவன் மாதிரிக் கிடக்கிறா?" என்று 'அன்பாக' விசாரிப்பார்களாம் ஊரவர்கள்.

எனக்கு ஒரு சந்தேகம்.. "ஒடியும் மரம்" தான் பேச்சு வழக்கில் ஒதிய மரம் என்று ஆனதா?

அ.பொ.சொ.வி:

கொப்பு - கிளை
மேல் - மேனி
ஆகவும் - அதிகமாக (ரொம்ப)
ஏலாமல் - இயலாமல் / முடியாமல்
சவண்டு -சோர்ந்து
Author: Unknown
•7:12 AM
வல்லிறக் கோயில் திருவிழா காலங்கள் பெரும்பாலும் சுத்து வட்டாரப் பொடியளுக்கு ஒரு சந்தோசமான காலம்தான். எனக்கு மட்டும் ஒரு சின்னப்பிரச்சினை. என்னெண்டு சொல்லிச் சொன்னால் என்ர ஊர் வந்து வல்லிறக் கோயிலுக்கும் தூரம், சந்நிதியானுக்கும் தூரம் எண்டு ஒரு நடுச்சென்ரர் ஊர். வீட்டுக்காரச் சனம் வல்லிறக்கோயிலுக்கோ சந்நிதியானுக்கோ திருவிழாக் காலத்தில விடாதுகள். திருவிழாக் காலத்தில நீங்கள் சாமி கும்பிட மாட்டியள் சாமினியத்தான் கும்பிடுவியள் எண்டு அடிக்கடி அப்பா சொல்லுவார். அதனால இந்த வெடிவால் முளைச்ச காலத்தில ஒரே ஒருக்கா சந்நிதிக்கும், வல்லிறக் கோயிலுக்கும் போன ஞாபகம் இருக்கு. அது பதினோராம் வகுப்பில. சின்னனில கனதரம் போயிருக்கிறன் எண்டுறது வேற விசயம். இப்ப அந்த வெடிவால் வயசில வல்லிறக் கோயிலுக்குப் போய்வந்த அனுபவம் பற்றிச் சொல்லுறன்.

அந்தமுறை வல்லிறக் கோயிலுக்குக் கட்டாயம் போறதுதான், தேர், தீர்த்தம் ரண்டு நாளும் போறது போறது தான், வேற கதைக்கே இடமில்லை எண்டு வீட்டில சொல்லியாச்சு. பதினாறு வயசாச்சு நான் ஒரு நாளும் சந்தோசமா இருக்கேல்ல எண்டு அம்மாட்ட சொல்லிக்கில்லி ஒப்புக்கொள்ள வச்சாச்சு. அம்மாவை ஓமெண்ட வைக்கிறதுதான் பெரும்பாடு. அம்மா ஓமெண்டால் அப்பரும் ஓம்தான். இப்பதான் அடுத்த சிக்கல். நான் கூடப் போக இருந்த பொடியள் சொல்லிப்போட்டாங்கள் வேட்டியோடதான் வரவேணும் எண்டு. எனக்கு சாறமே கட்டத்தெரியாது, இதுக்குள்ள வேட்டிய எங்க காட்டுறது? உள்ளானுக்கு மேல ஒரு காச்சட்டை போட்டு அப்பர் வேட்டி கட்டிவிட்டார். பெலிட் எல்லாம் போட்டு இறுக்கிக் கட்டி ஒரு தூணில கையப் பிடிச்சு சைக்கிள்ள ஏறி கேற்றடியில போய் நிக்க பொடியள் வந்து சேர்ந்தாங்கள்.

எங்கட ஊரில இருந்து வல்லிறக் கோயிலுக்குப் போகேக்க வழமையா மாலுசந்திக்குப் பிறகுதான் பயணம் களைகட்டும். மாலுசந்தியில தான் முதல் தண்ணீர் பந்தல் இருக்கும் நாங்கள் போற ரூட்டில. சக்கரத்தண்ணி, மோர் எண்டு சும்மா கலக்குவினம். மாலுசந்திக்குப் பிறகு வல்லுறக் கோயில் போய்ச் சேரும் வரையில இன்னும் கனக்க தண்ணீர்ப்பந்தல் இருக்கும். முக்கியமா உபயகதிர்காமம் தண்ணீர்ப் பந்தலில புட்டளை அண்ணைமாரும், நண்பர்களும் (ஹாட்லியில படிச்சவடியா) கொஞ்சம் நல்லா கவனிப்பினம், ஆரும் பெம்பிளைப் பிள்ளையள் தண்ணீர்ப்பந்தல் பக்கம் வராத வரைக்கும். தண்ணீர்ப்பந்தலில அடுத்த ஸ்பெசல் என்னெண்டா ஸ்பீக்கர் கட்டி, பொக்ஸ் பூட்டிப் பாட்டுப் போடுவினம். 96க்கு முன்னால மாலுசந்தி தண்ணீர்ப் பந்தலில் புரட்சிப் பாடல்களும், 96க்குப் பின்னால பக்திப்பாடல்களும் ஒலிக்கும். நானறிய அவையள் ஒருகாலமும் சினிமாப் பாட்டே போடேல்ல.

இப்பிடி இதெல்லாத்தையும் பாத்துக்கொண்டு, கோயிலுக்கு வாற பெம்பிளைப் பிள்ளையளுக்குக் கதை சொல்லிக்கொண்டு அந்த வருஷமும் தேர்த்திருவிழாவுக்குப் போனம். வடம் பிடிக்கிறது எண்டுதான் முடிவு. எனக்கு ஒரே நடுக்கம். 4ம் வகுப்பில வேட்டியோட குலனைப் பிள்ளையாரில வடம் பிடிக்கப் போய் நான் துகிலிழந்தது ஞாபகம் வந்தது. ஆனால் வல்லிபுரத்தான் என்னைக் கைவிடேல்ல..எங்களால வடத்துக்குக் கிட்டவே போக முடியேல்ல. ஆக தேருக்குப் பின்னால நடந்து நடந்து கொஞ்ச நேரத்தால தேர்களுக்குப் பின்னால நடக்கத் தொடங்கினம். அப்பத்தான் அந்த மனிசனைப் பார்த்தம். ஆள் ஒரு ஒல்லிப்பைத்தங்காய். காவி வேட்டி காடியிருந்தார். உடம்பெல்லாம் சந்தனமும் திருநீறும். மொட்டந்தலை. மனிசனை இதுக்கு முதல் ஒருக்கா சன்னதியில கண்ட ஞாபகம். ஆள் தேர் வாற வீதீலை இருந்த எல்லா கரண்ட் போஸ்ட்டிலயும் தலைய மோதுது. போஸ்ட் ஆடுற அளவுக்கு வேகமா பின்னுக்குப் போய் வலு வீச்சா வந்து மோதுது. கல் இருக்கிற இடமா பாத்து குட்டிக்கரணம் அடிக்குது. ஆனா சொன்னா நம்பமாட்டியள் பாருங்கோ, ஒரு சின்னக் கீறல் கூட அந்த மொட்டை மண்டேல வரேல்ல. அதுக்குப் பிறகு ஒரு நாள் அதே வேலைய இந்த மனிசன் சந்நிதியிலயும் செய்தது. எனக்கெண்டால் அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப் போச்சு.

உங்களுக்கே தெரியும்தானே. திருவிழா எண்டால் இந்தக் கச்சான் காரர், கடலை காரர், இனிப்புக் காரர், மணிக்கடைகாரர், கூல்பார்காரர் எண்டு எல்லாரும் வந்து கடை போடுவினம்தானே கோயில்ல. அப்பிடித்தான் குணம், ராஜா அது இது எண்டு எல்லாக் கூல்பார்காரரும் கடை போட்டிருந்தினம். எங்களுக்கு அப்ப விளையாட்டுச் சாமான் வாங்கிற வயசில்லை எண்டபடியால் ஆளுக்கொரு ஸ்பெசல் குடிக்கலாம் எண்டு உள்ள போனம். அப்ப உவன் ஸ்ரீகாந்தன் சொன்னான் எடே ஆறு பேர் இருக்கிறம். மேசைக்கு மூண்டு பேர் இருந்து ஸ்பெசல் குடிச்சிட்டு ரண்டு தனித்தனி பில்லையும் வாங்கீட்டு, ஒரு பில்லுக்கு மட்டும் காசு குடுத்துட்டு ஓடிப்போவம் எண்டு. சொன்னனான் தானே வெடிவால் வயசெண்டு. எல்லாரும் ஓமெண்டாச்சு. ஆறு ஸ்பெசலுக்கு 180 ரூபாய். 2 பில் போட்டதால ஒரு பில்லுக்கு 90 ரூபா கட்டவேணும். நான் பில் கட்ட அந்த பில்லைக் காட்டி வெளியேறுவது எண்டு பிளான். ஆனால் பிடிச்சுப் போட்டாங்கள். பிடிச்சது ஒரு மூண்டு பேரை. நான் அவயளைத் தெரியாத மாதிரி பில்லுக்குக் காசு குடுத்துட்டு வந்துட்டன். ‘வேட்டிய விரிச்சுக் கொண்டு குந்துங்கோடா' அப்பிடி இப்பிடி எண்டு ஒரே ஏச்சு. அவங்களும் ஒரு மாதிரி பில்லுக்கு காசு குடுத்துட்டு வந்த பிறகு வீட்டை வரும்வரை ஒரே சிரிப்புதான்.

அடுத்த நாள் தீர்த்தம் பாருங்கோ. வல்லிறக்கோயில் தீர்த்தம் எவ்வளவு அருமையான ஒரு அனுபவம். எவ்வளவு சனம் எவ்வளவு சனம். அதுவும் அந்த ‘சக்கரம் சக்கரம் சங்கு சக்கரம்' எண்டு சொல்லிக்கொண்டு சங்கு சக்கரத்தோட அந்த நாலு இளந்தாரியள் ஓடேக்க சனம் முழுக்க பக்திப்பரவசத்தில மெய் மறந்து போய்விடும். பிறகு அந்தத் தீர்த்தமாடின தண்ணி உடம்பில படோணும் எண்டு ஒரு நெரிசல் வரும்பாருங்கோ, அதைச் சொல்லவும் வேணுமே. ஒரு சோகம் என்னவெண்டால் அந்த வல்லிறக்கோயில் கடல் ஒவ்வொரு தீர்த்தத் திருவிழாவுக்கும் ஒராளை பலி எடுக்கிறதா சொல்லிறவை, உண்மை பொய்யைப் பற்றித் தெரியாது. இரண்டாம் நாளும் சந்தோசமாப் போய் கச்சான், கடலை, இனிப்பு, தொதல் எல்லாம் வாங்கிச் சாப்பிட்டம். என்ன கூல்பார் பக்கம் போகத்தான் பயமாயிருந்தது. அந்த வருஷத்தின் ரண்டு நாளிலையும் நான் செய்த சாதனை என்ன தெரியுமோ, வேட்டி அவிழாமல் கோயில் வீதிகளில நடந்தது மட்டுமில்ல, வீடையிருந்து கோயிலுக்கும், கோயிலிலையிருந்து வீட்டுக்கும் சைக்கிள் ஓடேக்கையும் வேட்டி அவிழாமல் பாதுகாத்தது தான்.

குறிப்புக்கள்
  • வல்லிறக் கோயில்: வல்லிபுர ஆழ்வார் கோவில்
  • சந்நிதியான்: தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் கோவில்
  • நடுச்சென்ரர்: மத்தியில் உள்ள ஒரு இடம் அல்லது புள்ளி. நடுமத்தி என்றும் சொல்லுவார்கள். நடு, மத்தி இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே பொருளுடையவை தானே?
  • வெடிவால் முளைச்ச: பதினம வயதில் உள்ள பிள்ளைகளை நோக்கிப் பெரியவர்கள் பாவிக்கும் ஒரு சொல். இதற்குப் பருவமாற்றத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு அர்த்தம் இருப்பதாகவும் கேள்விப்பட்டேன்
  • சின்னனில: சிறு வயதில்
  • கனதரம்: பல தடவைகள்
  • வடம்: தேர் இழுக்கப் பயன்படுத்தப்படும் பலமான, பாரிய, நீண்ட கயிறு
  • வடம் பிடிக்கிறது: தேர் இழுப்பது. தேர்த்திருவிழா அன்று எப்படியாவது தேர் இழுக்கப்படும் சமயத்தில் வடக்கயிறைத் தொட வேண்டும் என்று அடிக்கடி வீட்டில் சொல்வார்கள். ஏனென்று தெரியாமல் நானும் செய்து வந்திருக்கிறேன்.
  • கரண்ட் போஸ்ட்டிலயும்: மின் கம்பங்கள். மின்சார வாரியத்தின் மின் கம்பிகளைக் காவும் சீமெந்தில் செய்யப்படும் பலம் வாய்ந்த தூண்கள்
  • ஒல்லிப்பைத்தங்காய்: மிகவும் ஒல்லியான தோற்றமுடைய மனிதர்களை பயற்றங் காய்க்கு ஒப்பிடுவார்கள். சில இடங்களில் புடலங்காய் பயன்பட்டதாகவும் அறிகிறேன்.
  • மொட்டந்தலை: இதுவும் சொல்லியா தெரிய வேண்டும்? மொட்டைத் தலை.
  • வலு வீச்சா: மிகவும் வேகமாக, மிக விரைவாக
  • கச்சான்காரன்/காரி,கடலைகாரன்/காரி: திருவிழா நாட்களில் சின்னதாகக் கடை விரித்து கச்சான், மஞ்சள் கடலை போனறவற்றை விற்பவர்கள்.
  • இனிப்புக்காரர்: அநேகமாக ரோசாப்பூ நிறம் அல்லது மஞ்சள் நிறத்தில் சீனிப்பாகை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் இனிப்புகளையும், தொதல், தேன்குழல், பூந்தி போற இனிப்புகளையும், கொஞ்சம் பகோடா, உப்புக் கடலை போன்றவற்றையும் விற்பவர்கள்.
  • மணிக்கடைகாரர்: இவர்கள் அனேகமாக சிறுவர்களுக்கான விளையாட்டுச் பொருட்களை விற்பார்கள். பெரும்பாலும் இவர்களின் சந்தை சிறு பிள்ளைகளோடு வரும் பெற்றோரை நோகியதாய் இருப்பினும், இள வயது ஆண்களும் பெண்களும் கூட இவர்களை மொய்ப்பார்கள். கழுத்தில் போடும் கறுப்பு நிறக்கயிறு போன்ற இளைஞர்களுக்கான பொருட்களும், கண்ணாடிக் காப்பு போன்ற இளைஞிகளுக்கான பொருட்களும் இவர்களுக்கு நல்ல வருமானம் ஈட்டித்தருவதுண்டு.
  • கூல்பார்காரர்: ஐஸ்கிரீம் அல்லது குளிர்களி மற்றும் அது சம்பந்தமான பொருட்களை விற்போர்.
  • ஸ்பெசல்: பழங்கள், ஜெலி, பொடியாக்கப்பட்ட கச்சான் அல்லது கஜூ கொஞ்சம் கொக்கோ பவுடர் எல்லவற்றையும் கலந்து தரப்படும் ஒரு ஐஸ்கிரீம். மேற்படி கூல்பார்களில் விலை உயர்ந்த பொருள் இதுதான். அப்போது 30 ரூபாய். கிளிநொச்சி பாண்டியன் உணவகத்தில் மட்டும் ஒரு ‘மீனம்' ஸ்பெசல் 200 ரூபாய்.
  • இளந்தாரியள்: இளைஞர்கள்
  • ஓடேக்க: ஓடும் போது. இதே ‘ஓடேக்க' என்ற சொல் ஓடையினுள் என்ற அர்த்தத்திலும் பயன்படும். அதேபோல் வரேக்க- வரும்போது, போவேக்க- போகும் போது போன்ற சொற்களும் பயன்பாட்டில் உண்டு. இதே சொற்களை தும்பளைப் பகுதியைச் சேர்ந்த ஒரு சாரார் 'போவாக்க' 'வராக்க' என்று உச்சரிப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.
  • படோணும்: பட வேண்டும்.
Author: வர்மா
•8:08 AM
நம் உறவு முறைமிகவும் அலாதியானது வயதுக்கு மூத்தவர்களை பேர் சொல்லி அழைப்பதில்லை. அண்ணா அண்ணண்ணா,சின்னண்ணா,பெரியண்ணா,மூத்தண்ணா,ஆசைஅண்ணா,குட்டிஅண்ணா.

இதேபோன்றுதான் அக்கா,அக்கக்கா,சின்னக்கா,ஆசைஅக்கா,பெரியக்கா,குட்டிஅக்கா. பெரியப்பா இன்னருவர் இருந்தால் ஆசை அப்பா ,ஆசை அய்யா,சித்தப்பா, இவருக்கு போட்டியாக வேறுபெயர் இருப்பதாகத்தெரியவில்லை.

அண்ணனின் ம்கன் என்னை சித்தப்பா என்று கூப்பிடத்தெரியாது சித்தா என்றான்.அது ஏதோ புதுமுறை என்று நினைத்த அயலட்டையில் உள்ளவர்கள்தங்கடை சித்தப்பாவையும் சித்தா என்றுசுருக்கிவிட்டார்கள்.

அம்மாவை தங்கச்சி என்று சொல்லத்தெரியாத அம்மாவின் அண்ணன் முறையான ஒருவர் அன்னைச்சி என்றார்.அதுவும் ஒருபுதுமுறை எனநினைத்தசிலர் தங்கடை சொந்தக்காரரில் ஒருவரை அன்னைச்சி என்றார்கள்.

அம்மா தனது சகோதரனை அண்ணா என்று கூப்பிடுவதைப்பார்த்து நாங்களும் அவரை அண்ணா என்றுகூப்பிடுவோம்.

கொப்பரை கோயிலிலை கண்டனான்,
கொம்மா சந்தைக்குபோட்டா.
கொப்பர் பெரியாளே
கொம்மாவை வரச்சொல்லு
கொக்கா எங்கபோட்டா
அப்பா அம்மாவை ஓய் என்றுதான் கூப்பிடுவார்.
அம்மா, வாருங்கோ என்பா
மாமா, அப்பாவை ஓய் மச்சான் என்பார்

இப்ப எல்லாம் தலை கீழாப்போச்சு.புருசனை பேர்சொல்லித்தான் கூப்பிடுவார்கள்.அவரும் பெண்டிலை பேர் சொல்லி மரியாதையாக வாருங்கோ போங்கோ என்பார்.அந்தக்காலத்திலை ஒரு பெண்ணிடம் வீட்டுக்காரரின் பெயரைக்கேட்டபோது , வீட்டுக்காரரின் பெயரை சொன்னால் பாவம் என்று மறுத்து விட்டார். எந்த ஊர் என்று கேட்டபோது அதுதானே அவற்றை பேர் என்றார். ஊர் பெயர் சிதம்பரம்.

அம்மாவை பெரியவர்கள் சின்னவர்கள் எல்லோரும் அன்னச்சி என்பதுபோல்சில உறவுகள் பொதுச்சொல்லாக மாறிவிடும்.எனது தம்பி ஒருவன் என் மகளை எங்கு கண்டாலும் ஹலோ என்பான். அவனை என்மகள் ஹலோ சித்தப்பா என்பார். அவனை நாம் எல்லோரும் ஹலோ சித்தப்பா என்போம்.

கொழும்பிலை ஆம்பிளயள் அங்கிள்,பொம்பிளையள் அன்ரி வேறுமுறை தெரியாது. எனது அலுவலகத்தில் ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது. நான் எடுத்தேன். ஒரு பெண்குரல்
என்னுடன் வேலை செய்யும் ஒருவரக்கேட்டது. அவர் வெளியே போய்விட்டார் என்றேன்.
அங்கிள் அவருக்கு ஒரு மசேச் சொல்லுவியளா என்று கேட்டது பெண்குரல்
எல்லாவற்றயும் கவனமாகக்கேட்டுவிட்டு கடைசியில் , தங்கச்சி எனக்கு 22 வயது. நான் வேலைக்குச்சேர்ந்து மூன்றுமாதம் தான் என்றேன். குழைஞ்சி குழைஞ்சு மன்னிப்புக்கேட்டார். எனக்குவயசு 40 என்றும் நான் 10 வருடமாக அங்கு வேலை செய்வதும் அவவுக்குத்தெரியாது.

ஜேர்மனியில் உள்ள தனது மகளீடம் போவதற்காக எனது உறவினர் ஒருவர் கொழும்புக்கு வந்தார். அவரை எல்லோரும் அக்காசி என்றுதான் அழைப்போம். சிறுவயதிலிருந்தே கொழும்பில் வளர்ந்த என்மகளூக்கு அக்காசி என்ற சொல் புதிதாக இருந்தது. ஒருநாள் வாய்தடுமாறி அக்காசியை யசூசிஅக்காசி என்றார். இப்போ அக்காசி மறைந்து யசூசிஅக்காசி நிரந்தரமாகிவிட்டது.

அயலட்டை////////////////////////////////பக்கத்துவீடுகள்
கொப்பர்///////////////////////////////////அப்பா
கொம்மா//////////////////////////////////அம்மா
கொப்பு////////////////////////////////////அப்பா
கோத்தை//////////////////////////////////அம்மா
கொக்கா///////////////////////////////////அக்கா
பெண்டில்//////////////////////////////////மனைவி
வீட்டுக்காரர்////////////////////////////////கணவன்
குழைஞ்சு குழைஞ்சு/////////////////////////அசடுவ‌ழிதல்
Author: கானா பிரபா
•3:00 AM
கந்தசாமி முத்துராஜா என்னும் கனடா வாழ் ஈழத்தவர் "ஆழியவளை" என்னும் யாழ்ப்பாணத்துக் கடலோரக் கிராமத்தின் பண்பாட்டு அம்சங்களைச் சுவைபட எழுதியுள்ளார். அந்த நூலின் பின்னிணைப்பில் இருந்த அருஞ்சொல் அகராதியில் இருந்து சிலவற்றை இங்கே பகிர்கின்றேன்.

அடை - கரைவலை வள்ளம் மண் புட்டிக்கு இழுக்கப்படும் பொழுது வள்ளத்தின் அடியில் உள்ள எரா இலகுவாகச் சறுக்கி வழுக்கிக் கொண்டு வருவதற்காக வைக்கப்படும். ஓர் ஒழுங்கு முறையில் அடுக்கப்பட்ட மரக்குற்றிகள் அடை எனப்படும்.

அறும்புக்காலம் - கடலில் மீன் பிடிபடுதல் மிக மிகக் குறைவாக உள்ள காலம்

அம்பறக்கூடு - பனம் மட்டையை வளைத்து, குறுக்காகக் கம்புகள் கட்டி, கிடுகினால் வேயப்பட்ட சிறுதுண்டுக் கூரை

அத்தாங்கு - "பை" போன்ற அமைப்புள்ள நூல் வலையின் வாய்ப்பகுதியில், காட்டுத்தடியை வட்டமாக வளைத்துக் கட்டுவர். இதனால் ஆழங்குறைந்த நீர் நிலைகளில், நிலத்தில் வாரி இறால் பிடிப்பர். சில இடங்களில் அவ்வளையம் இரும்பினாலும் செய்யப்படும்

ஆனைச்சொறி - நீரில் மிதந்து செல்லும் வழுவழுப்பான பெரிய அளவிலான ஒருவகைக் கடல் தாவரம்

ஆசறுதியாக - பலமாகவும், செளக்கியமாகவும் இருக்கும் நிலை

ஊடுகாடு - காட்டை ஊடறுத்துச் செல்லும் ஒற்றையடிப்பாதை

எரா - கரைவலை வள்ளத்தின் அடிப்பாகத்தில் அணியத்திலிருந்து
கடையார்வரை நீளமாகப் பொருத்தப்பட்டிருக்கும் மரத்துண்டு

ஒசுத்தேங்காய் - கடலில் விழுந்து உப்பு நீரில் கரை ஒதுங்கும் தேங்காய்,இத்தேங்காயை புழுக்கொடியலுடன் சப்பித் தின்ன மிக ருசியாக இருக்கும்

கடற்படுக்கை - கடலின் அடிநிலம்

கடியன் கடித்தல் - மீன் இனங்கள் வலைகளைக் கடித்துத் துண்டாடுதல்

கருவாட்டுச் சிப்பம் - தென்னோலைக் கிடுகில் ஏறத்தாள 4X2 அடி அளவில் பெட்டி செய்து, அதற்குள் கருவாட்டை வைத்து மூடிக்கட்டி லொறிகளில் தூர இடங்களுக்கு அனுப்புவர்

குறுகுதல் - கரைவலையை மெல்ல மெல்ல இழுத்து இறுதியாகத் தூர்மடியையும் கடற்கரைக்கு மீனுடன் இழுத்து எடுத்தல்

குட்டான் - பனை ஓலையினால் இழைப்பது, மீன் போடுவது

கூடு கட்டுதல் - மாரிகாலம் ஆரம்பிக்கிற ஐப்பசி மாதத்தில் கரைவலைத் தொழிலை நிறுத்துவர். வள்ளம், வலை சாமான்களை மழை படாமல் மூடிக்கட்டி வைப்பர்

சவள் - கரைவலை வள்ளத்தைச் செலுத்தும் சுக்கான் போன்ற நீண்ட பலகை

சிறாம்பி - பரப்புக்கடலுக்குள் கட்டப்படும் பரண், மீன் பிடிப்போர் இளைப்பாறும் இடம்

சொக்கரை - மீன் கூட்டின் பொறிவாசல் (வாய்ப்பக்கம்)

தண்டையல் - பாய்க்கப்பலைச் செலுத்தும் மாலுமி Tindall என்பதன் தமிழ் வடிவம்

திடற்கடல்
- கடலில் மண் திடல் உள்ள இடம்

தூர்மடி
- கரைவலையில் மீனைத் தாங்கி வருவது

நெருக்காறு
- கடல் அருவி சிறுகடலுடன் கலக்குமிடம்

பறி
- பனை ஓலையினால் பின்னப்படுவது, மீன், கருவாடு போடப்பயன்படுவது

மண்டாடி
- கரைவலைத் தொழிலை முன்னின்று நடத்துபவர், சம்மாட்டிக்கு அடுத்த நிலையில் உள்ளவர்

மாறுதண்டு
- கரைவலை வள்ளம் வலிக்கும் துடுப்பு, அணியத்தில் இருந்து மூன்றாவது இடத்தில் அமைந்திருக்கும்

மிதப்பு
- நீருக்கு மேல் மிதந்து நின்று வலை, கூடு, என்பனவற்றை அடையாளம் காட்டும் ஒல்லி அல்லது மரக்கட்டை
வலை பொத்துதல் - மீங்கள் சேதப்படுத்திய அல்லது கிழிந்த வலைகளைப் பின்னுதல்

வாடி
- கரைவலைத்தொழிலாளர் கடற்கரையில் தங்கும் வீடு (கொட்டில்)

வாரம்
- கரைவலையின் பங்குத் தொழிலில் சம்மாட்டிக்குக் கொடுக்கும் பங்கு.

நன்றி: கந்தசாமி முத்துராஜா எழுதிய "ஆழியவளை"
Author: சினேகிதி
•8:16 AM


உண்மையா எனக்கு குதியம் குத்துதல் என்றால் என்னென்டு தெரியாது ஆனால் இந்தச் சொல் எங்கட வீட்டில அடிக்கடி பாவிக்கப்படும். அதுவும் குறிப்பா அப்பம்மா வந்தாப்பிறகு இப்படியான நிறையச் சொற்கள் அப்ப அப்ப பாவிக்கப்படும்.

யாராவது நண்பர்கள் வந்து உருப்படியா ஒன்டும் செய்யாமால் சும்மா இருந்து அலட்டினால் அல்லது விளையாடிக்கொண்டு இருக்கும்போது....யாரும் கூப்பிட்டு என்னவும் வேலை செய்யச்சொல்லி அதைச் செய்யாமல் விட்டால் அதுக்குப் பேச்சு அல்லது அடி விழேக்க சும்மா எந்தநேரமும் குதியம் குத்திக்கொண்டிருக்கிறது சொல்வழி கேக்கிறேல்ல என்று சொல்லுவினம். இல்லாட்டா குதியம் குத்தினது காணும் முகத்த கழுவிட்டு படியுங்கோ என்று சொல்லியும் விளையாட்டை முடிக்காட்டால் மிச்சம் வரும் "இப்ப வந்தனென்டால் தடி முறியும்".

அதேமாதிரி ஒழுங்காப்படிச்சும் பரீட்சைல கோட்டைவிட்டால் குதியம் குத்துற நேரத்தில ஒழுங்காப்படிச்சிருக்கலாம் என்டுவினம்.

இந்த அர்த்தங்களை வைச்சுப் பார்க்கும்போது வெட்டியாய் இருக்கிறதுதான் குதியம் குத்துதல் என்று நினைக்கிறன்...நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்?

இதப்போல எனக்கு விளங்காத சொற்கள்:
சித்தப்பா சில நேரம்

வல்லியகாந்தர்
ஜம்புலிங்கம்
பம்புடிசிங்க

இப்பிடியெல்லாம் சொல்றவர் ஆனால் இவையெல்லாம் யார் என்று அவருக்கும் தெரியா எனக்கும் தெரியா.

பி.கு : நான் இங்க வந்து குதியம் குத்தினது பிடிக்காமல் இது எழுதிக்கொண்டிருந்த குறையில current cut ஆகிட்டுதுதுதுது. நான் வேலைல வந்திருந்து குதியம் குத்தினாலும் வீட்டுக்குத் தகவல் போகுது போல இருக்கு.
Author: வந்தியத்தேவன்
•2:53 AM
வெள்ளாப்போட படுக்கையை விட்டு எழுந்த ஆறுமுகத்தார் தாவடிப் பொயிலைக் கீலத்தை கிழித்து சுருட்டாகப் பத்தவைச்சுக்கொண்டார்.

விறாந்தையில் படுத்திருந்த மனிசி வள்ளிப்பிள்ளை " இஞ்சாரும் கச்சேரிக்கு போகுமுன்னம் சோமு விதானையார் வீட்டையும் வெள்ளெனப் போவிட்டுப்போங்கோ, அப்படியே போற வழியிலை மூத்தவன் தறைக்குள் நிற்பான் அவனுக்கு இரண்டு தோசை கட்டித்தாரன் குடுத்துட்டுப்போங்கோ" என்றாள்.

சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியே வந்த ஆறுமுகத்தாரை பக்கத்துவீட்டு மணியம் "முகத்தார் துலைக்கே? " எனக் கேட்டார்.

"என்ரை மூத்தவன் பிரபாவின்ட வேலை அலுவலாக ஒருக்கால் விதானையாரைப் பார்த்திட்டு அப்படியே பஸ்சிலை கச்சேரிக்கும் போறன்"

உன்ரை பிரபா ஒரு சோலி சுரட்டுக்கும் போகதாவன் தானே அவனுக்கென்ன வேலை கிடைக்கும் " பிரபாவுக்கு சேர்டிபிகேட் கொடுத்தார் மணியம்.

விதானையாரிட்டை வேலையை முடிச்சுக்கொண்டு மாலிசந்தியில் 750ஆம் இலக்க பஸ்சில் ஏறி கச்சேரிக்கு பயணமானர் ஆறுமுகத்தார். வல்லைச் சந்தியில் போற காரியம் நடக்கவேண்டும் என முனியப்பருக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு தன் பயணத்தை தொடந்தார்.

மேலே போல்ட்டில் இருக்கும் சொற்களுக்கான எனக்குத் தெரிந்த விளக்கம்.

வெள்ளாப்போட - அதிகாலை

பொயிலை ‍ - புகையிலை பெரும்பாலும் தாவடிப் புகையிலை நல்ல தரம் என்பார்கள்.

கீலம் - சிறிய துண்டு உதாரணம் பனையோலையை கீலம் கீலமாக கிழித்தான்.

விறாந்தை - ஆங்கிலச் சொல்லான வராண்டா தான் விறாந்தையாக மருவியுள்ளது.

கச்சேரி - அரச அதிபரின் அலுவலகம். இந்தச் சொல் இசைக் கச்சேரியையும் குறிக்கும். அரச அதிபரின் அலுவலகத்திற்க்கு இந்தப் பெயர் எப்படி வந்தது என யாராவது விளக்கம் தரவும்.

விதானையார் - கிராம சேவகர். கிராமங்களை நிர்வகிக்கும் அரச அதிகாரி. விதானை என்பதை ஒரு மரியாதைக்காக விதானையார் என ஆர் விகுதி கொண்டு அழைப்பார்கள். எந்த மொழி என்பது தெரியவில்லை.

வெள்ளென - நேரத்திற்க்கு (Early )

தறை ‍- தோட்டம்

துலைக்கே ‍- எங்கே போறியள் என்றதன் இன்னொரு வடிவம் தான் துலைக்கே அல்லது துலைக்கே போறியள். ஒருவரை எங்கே போறியள் எனக் கேட்பது சகுனத் தடை என்பதால் இந்த துலைக்கே என்ற சொல் பாவிக்கபடுகின்றது. அதே நேரம் எங்கிருந்து வாறியள் என்பதை துலையாளே? என்ற சொல் கொண்டு அழைப்பார்கள்.

சோலி - இந்தச் சொல்லுக்கு வேலை என்ற அர்த்தமும் சுரட்டு என்ற சொல்லுடன் வரும்போது சண்டை என்ற அர்த்தமும் வரும். பிரபா சோலி சுரட்டுக்கு போகாதவன் என்றால் எந்த வம்புச் சண்டைக்கும் போகாதவன் என்பது அர்த்தம். அதே நேரம் மணியாச்சி ஒரு சோலியும் இல்லாமல் இருக்கிறாள் என்றாள் எந்த வேலையும் இல்லாமல் இருக்கிறாள் என்பது அர்த்தம்.

வேறு எந்தப் பகுதிகளில் இந்தச் சொற்கள் பாவிக்கின்றவை என ஏனைய பிரதேச அன்பர்கள் தெரியப்படுத்தவும். கச்சேரி விதானை போன்றவை இலங்கை முழுவதும் பாவிக்கின்ற சொற்கள் என நினைக்கின்றேன்.
Author: geevanathy
•7:48 AM

களத்து மேட்டிலும் தேன் காட்டிலும் பொலிவை நாடும் புதுவார்த்தைகள்


திருகோணமலையில் உள்ள தம்பலகாமப் பகுதி தமிழ் முன்னோர்கள், உயிர்காக்கும் நெல்லைச் சேமிக்கும் களத்து மேட்டிலும், பூலோக அமிர்தம் என்று போற்றப்படும் தேன் எடுக்கும் பொதுக்காட்டிலும் பேசுவதற்கெனத் தங்கள் தாய் மொழியான தமிழில் இருந்து பாஷைகளைத் தோற்று வித்துப் பேசிவந்துள்ளனர். இந்த விசித்திர மொழிகள் இன்று பேச்சு வழக்கற்று மறைந்து கொண்டிருக்கின்றன. கால மாற்றத்தின் காரணமாக களத்து மேட்டில் விவசாயிகள் பேசிவந்த பாஷை தேவையற்றதாகவும் ஆகியுள்ளது.


தமிழ் மொழியில் இருந்து தோற்றிவிக்கப்பட்டவைகளாயினும் இம் மொழிகளின் வார்த்தைகள் தமிழ் மொழியின் நின்று வேறு வேறு அர்த்தமுடையவையாகவும் காணப்படுகின்றன.நெல் வயல் அறுவடை ஆனதும் வயல்களின் மத்தியிலுள்ள களத்து மேட்டில் வட்ட அணியாக சூடு வைக்கப்பட்டிருக்கும். பொங்கி விட்டு இறைவழிபாடாற்றி சூடுமிதிப்பு தொடங்கியதும் சூடுமிதிப்பாளர்களிடையே ஒரு விநோதமான மொழி பேசப்படும். களத்து மேட்டில் பேசப்படும் இப்புதிய மொழியின் வார்த்தைகள் அதிக நெல்லைப் பெறும் ஆவல் உடையதாகவே அமைந்துள்ளன.



உதாரணமாக களத்தில் பேசப்படும் வார்த்தைகளில் சில பின்வருமாறு: நெற்கதிர்கள் சூடு என்று குறிப்பிடுவது வழமை. ஆனால் களப்பாஷையில் சூட்டை - போலன் என்று சொல்வார்கள். சூடுமிதிப்புக்கு ஈடுபடுத்தும் எருமைக் கடாக்களை வாரிக்காலன் என்று அழைப்பார்கள். வாரிக்காலன் என்றால் அதிகமாக நெல்லைத்தரும் கால்களை உடையவை என்பது பொருள். வைக்கோலை விட்டு உதிர்த்த நெல்குவியலை பொலி என்று குறிப்பிடுவார்கள். பொலிஎன்றால் பொலிந்து அதிகப்படுவது என்பது பொருள். களத்தில் சூடு மிதிப்பில் ஈடுபடுவோரின் வாய்களில் பொலி,பொலி என்ற சொல் தாராளமாகவே புழங்கும். இதே போல் நெற்கதிருக்கு வயலில் வளைந்து வளைந்து மிதித்து நெல் மணிகளை உதிர்க்கும் எருமைக்கடாக்கள் போடும் சாணியைப் போல் என்றும் வைக்கோலை மிதிஞ்சான் என்றும், நெல்லில் உள்ள பதரைக் கள்ளன் என்றும், சாப்பிடுவதை அல்லது குடிப்பதைப் பெருகுவதென்றும், தண்ணீரைக் கலங்கள் என்றும், தண்ணீர் குடிப்பதைக் கலங்கள் பெருகுவதென்றும், இப்படி களத்திலுள்ள தேவைகளுக்காகப் பேசப்படும் வார்த்தைகள் எல்லாம் தமிழுக்கு வேறான ஒரு புதிய மொழியாகவே தோன்றும்.



தேன் காட்டுக் காரர்கள் பேசும் மொழி


பூலோக அமிர்தம் எனப்போற்றப்படுகின்ற தேன் பெறுவதற்காகக் காட்டுக்குச் செல்லும் தேன்காட்டுக்காரர்கள் தேனை ஒரு தெய்வீகப் பொருளாக மதிப்பதால் அவர்கள் காட்டில் பேசுவதற்கென ஒரு புதிய மொழியை உருவாக்கிப் பேசிவந்துள்ளனர். வனவேட்டையில் தேன் காடு போவது தான் மிகவும் அபாயகரமானது என்பது வேட்டைக்காரர்களின் கருத்தாகும். பத்து அல்லது பதினைந்து பேர்கள் ஒருங்கு சேர்ந்து தேன் காட்டுக்குச் சென்றாலும் காட்டில் முப்பது யார், நாற்பது யார் தூரத்துக்கு ஒருவராக காடெல்லாம் பரந்து தனித்தனியாகவே தேன் தேடிச்செல்வார்கள்.



தேன் காட்டுக்காரர்களின் முழுக்கவனமும் மரங்களில் தேனீக்கள் மேல் நோக்கிப் பார்ப்பதிலே நிலைத்திருப்பதால் கீழே காடுகளில் பதுங்கி இருக்கும் மிருகங்களைக் கவனிக்கத்தவறி விடுவார்கள். ஆகவே புதர்களில் மறைந்திருக்கும் புலிகளினாலோ, கரடிகளினாலோ தேன் காட்டுக் காரர்கள் தாக்கப்படுவது மிகச் சர்வசாதாரண விஷயம். இந்த அபாயகரமான தொழிலைச் செய்பவர்கள் தேன் காட்டில் பேசிக் கொள்ளும் மொழியும் தமிழ் அல்லாத ஒரு புதிய மொழியாகவே தோன்றுகின்றுது.


முப்பது நாற்பது யார்களுக்கு ஒருவராக காட்டில் வரிசையாகத் தேன் பார்த்து வருபவர்களில் ஒருவர் ஒரு மரக்கொம்பில் தேனைக் கண்டு விட்டாரானால் தன் சகாக்களுக்கு அதை தெரியப்படுத்த கோ என்று குரல் கொடுப்பார். அவர் குரலைக் கேட்ட சகா ஒருவர் அவர் என்ன சொல்கிறார் என்பதை அறிந்து கொள்வதற்காக கோ என்று ஒற்றைக் குரல் கொடுப்பார். அப்பதில் குரல் கேட்டதும் தேன் கண்டவர் கோ, கோ என்று இரட்டையாகச் சமிக்ஞையைவெளிப்படுத்துவார். இதை இரட்டிப்பதென்று தேன் வேட்டைக்காரர் குறிப்பிடுவார். தேன் கண்டவர் முதல் கோ என்றது நண்பர்களே! என்று காட்டில் தேன் பார்த்து வரும் தன் சகாக்களுக்கு ஒரு செய்தியைச் சொல்ல முயல்வதாகும். அதற்கு அடுத்து வந்தவர் கோ என்றது என்ன என்று கேட்பதைப் போன்று அர்த்தமுடையதாகும். அதற்கு தேன் கண்டவர் கோ கோ என்று இரட்டித்தது தேன் இங்கே இருக்கிறது எல்லோரும் இங்கே வாருங்கள் என்று கொடுக்கும் காட்டுச் சமிக்ஞை ஆகும். இந்த சமிக்ஞையைக் கேட்டதும் காடெல்லாம் வலையிட்டதைப் போல் பரவி வந்த தேன் காட்டுக்காரர்கள் தேன் இருக்கும் மரத்துக்கு வந்து கூடித் தேன் கூடுகளை வெட்டி வதைகளை எடுத்து பரப்பப்பட்ட இலைகளில் குவிப்பார்கள். எல்லோரும் அமர்ந்திருந்து தேன் வதைகளை உண்பார்கள்.



தேன் வதைகளை எடுத்துப் புசிக்குமாறு ஒருவருக்கொருவர் சொல்ல விரும்பினால் இன்றுள்ளவர்கள் ஆங்கிலத்தையும் தமிழையும் இடைக்கிடை கலந்து பேசுவதைப் போல் எடுத்துக் கொட்டாப்பி என்று சொல்லுவர். எடுத்து என்பதை தமிழ்ச் சொல்லாகவும் கொட்டாப்பி என்பது புரியாத காட்டுப் பாஷையாகவும் தோன்றும். கொட்டாப்பி என்பதற்குச் சாப்பிடு என்பது பொருள். கொட்டாப்பி, கொட்டாப்பி என்று ஒருவர் இன்னொருவரை கட்டாயப்படுத்தினால் எனக்கு வேண்டாம் அல்லது என்னால் முடியாது என்று கூறுவது தேன் காட்டுமரபாகாது. ஆகவே முன்னதான் என்று கூற வேண்டும். முன்னதான் என்றால் எனக்கு வேண்டாம் அல்லது என்னால் முடியாது என்பது பொருள். தேன் காட்டிலும் தண்ணீருக்குக் கலங்கள் என்றும் பருகுவதற்கு பெருகுவதென்றும் குறிப்பிடுவார்கள்.



தம்பலகாமம்.க.வேலாயுதம்

Author: வந்தியத்தேவன்
•11:02 AM
யாழ் தமிழரின் உயிர்-மெய் ஒலிப்பு வழக்கு என்ற பதிவில் மொழிவளனின் சில கருத்துக்கள் ஒரு சிறிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. குறிப்பாக நண்பர்களான மு.மயூரனினதும் கண்டும் காணானினதும் கருத்துக்கள் விவாதத்துக்குரிய பொருளாகியிருக்கின்றது.

இந்த குழுமத்தில் நாங்கள் இலங்கைத் தமிழராக பொதுவாக இலங்கைத் தமிழரை ஈழத்தமிழர் என்ற சொற்பதம் கொண்டு அழைப்பதில் தப்பில்லை. போராட்ட காலத்தில் பயன்படுத்திய ஈழம் என்ற வார்த்தையை இன்றைக்கும் பல அரசியல் கட்சிகள் தங்கள் பெயரில் வைத்திருப்பதாலும் அத்துடன் இலங்கைக்கு ஈழம் என்ற இன்னொரு பெயர் இருப்பதாலும் ஈழத்தமிழர் என்ற சொன்றபதம் பிழையில்லை என்பது என்கருத்து.

அத்துடன் பிரதேச வேறுபாடுகளைக் களைந்து அனைவரும் ஒரே குடையில் கீழ் ஒன்றாகவேண்டும் என்பதுதான் எனது ஆசையும் இக்களத்தின் இருக்கும் அனைவரினது ஆசையும்கூட.

இங்கே நாம் எங்கள் ஊர்களில் எங்கள் பிரதேசங்களில் பாவனையில் உள்ள அல்லது பாவித்த(காரணம் சில இடங்களில் இப்போது தமிழக ஊடகங்களின் தாக்கம் பல சொற்களை மறக்கச் செய்துள்ளன, தமிழக ஊடகங்களின் தாக்கம் பற்றி இன்னொரு பதிவில் விவாதிக்கலாம்)சொற்களைத் திரட்டுவதும் எம் ஊர் பிரதேச கலை கலாச்சார நிகழ்வுகளைப் பற்றிய ஞாபகப்படுத்தலாகவும் பதிவு செய்வதே இக்குழுமத்தின் தலையாய கடமை.

உங்கட ஊர் பாசை நல்லது நம்மட ஊர் பாசை நல்லது என்பது அல்ல. நான் இங்கே ஊர் என்ற வார்த்தையைப் பாவிக்க காரணம் அடிப்படையில் நான் யாழ்ப்பாணம் என்ற மாவட்டத்தில் , வடமராட்சி என்ற பிரதேசத்தில் கரவெட்டி என்ற ஊரைச் சேர்ந்தவன். என்னுடைய ஊரில் பாவிக்கும் சில சொற்கள் பக்கத்து ஊரில் பாவிப்பதில்லை. உதாரணமாக பருத்தித்துறையில் பாவிக்கும் சில சொற்கள் கரவெட்டியில் பாவிப்பதில்லை, வல்வெட்டித்துறையில் பாவனையுள்ளது பருத்தித்துறையில் இருக்காது. இப்படி ஊர் ஊருக்கு பல சொற்கள் வேறுபடும்.

வடமராட்சியை எடுத்தால் வடமராட்சி கிழக்கில் ஒரு வகையான சொற்கள் கலைகள் கலாச்சாரங்கள் வடமராட்சி மேற்கில் இன்னொரு வகை. இப்படி எமது பிரதேசத்தில் கூட நாம் வேறுபாடாகவே இருக்கின்றோம். இதில் பிழையில்லை என்றே நினைக்கின்றேன்.

ஒரு சில மொழியில் அதிலும் வட்டார மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவர்கள் நான் பேசும் மொழியைவைத்தே என்னை எந்த ஊர் எனக் கண்டுபிடிப்பார்கள்.

மு.மயூரன் கூறியதுபோல் "எந்த வட்டார வழக்கும் துல்லியமானது கிடையாது. மொழியில் துல்லியம் என்றொன்றில்லை". எனக்கு இன்னொரு வட்டாரத்தில் இருக்கிறவன் பேசுகின்ற என் மொழியே சிலவேளைகளில் நகைப்புக்குரியதாக இருந்தது.

இது தமிழர்களுக்கு மட்டுமல்ல ஆங்கிலத்தை தாய் மொழியாக கொண்டவனுக்கும் பொருந்தும். அமெரிக்காகாரன் ஒரு ஸ்டைலில் பேசுவான் இங்கிலாந்துக்காரன் ஒரு ஸ்டைல் அவங்களைப் பார்த்து நாம ஒரு ஸ்டைல் என ஆங்கிலம் வேறுபடுபதுபோல் தமிழும் இடத்திற்க்கு இடம் மாறுகின்றது. மொழி என்பது ஒருவருடன் ஒருவர் உரையாடவும் புரிந்துகொள்ளவும் உதவும் சாதனமே ஒழிய மதம் போல் நீ இப்படித்தான் மொழியைப் பாவிக்கவேண்டும்(உரையாடலில்) என்ற கட்டுப்பாடுகள் இல்லை.

ஆகவே இக்குழுமத்தில் நான் பெரிது என் வட்டாரச் சொல்தான் சிறந்தது என்ற விவாதங்களை விட்டுவிட்டு உங்கள் வட்டார பிரதேச மொழிகளையும் ஏனைய கலை கலாச்சாரச் சிறப்புகளையும் மற்றவர்களுடன் பகிருங்கள். இந்தப் பதிவு யாரையும் புண்படுத்தவல்ல.
Author: மொழிவளன்
•10:06 PM
இது ஒரு வட்டார வழக்குச் சொல் என்று கூறமுடியாது. ஆனால் கிட்டத்தட்ட வட்டார வழக்குச் சொல் போலவே பயன்பட்டது.

மண்டையில போடுதல், மண்டைக்கப் போடுவன், மண்டைக்கப் போட்டிருக்கினம் போன்ற சொற்கள்.

இச்சொற்கள் ஒருக்காலக் கட்டத்தில் சிறுக்குழந்தைகளின் விளையாட்டுச் சொல்லாகவும் அதிகம் பயன்பட்ட ஒரு சொல் என்றும் கூறலாம். சிறு சண்டைகளுக்கும் “டேய், அடி வேண்டுவாய்” எனும் சொற்களுக்கு பதில் இந்த “டேய், உண்ட மண்டைக்கப் போடுவன்” என்ற சொல் அடிக்கடி பயன்படும் சொல்லாகியிருந்தது.

இச்சொல்லில் எனக்கு ஒரு சுவையான அனுபவம் உண்டு. நாங்கள் கொழும்பு வந்து வாடகை வீட்டில் தங்கியிருந்தக் காலங்கள். 2002 ஆம் ஆண்டு என்று நினைக்கிறன். தேர்தல் நடைப்பெற்றுக்கொண்டிருந்தது. தொலைக்காட்சியில் தேர்தல் விளம்பரங்கள் அதிகம் இடம்பெற்றிருந்தக் காலக்கட்டம். அறிமுகமே இல்லாத சில சுயேட்சை வேட்பாளர்களும் தொலைக்காட்சியில் தமது முகத்தைக் காட்டி சென்றனர்.

அப்போது எனது சகோதரி தனது குழந்தையுடன் எங்கட வீட்ட வந்திருந்தவா. சகோதரியின் மகனுக்கு இரண்டு அல்லது அதற்கு குறைவான வயது தான் இருக்கும். சரியானக் குளப்படிக்காரன். இவன்ர குளப்படிகளைத் தடுக்கும் பொருட்டு கையில் ஏதாவது கடிக்கக் கொடுத்துவிட்டு, தொலைக்காட்சி முன் கதிரையில் இருத்திவிடுவம். இவனுக்கு இன்னமும் சரியாகப் பேசவும் வராது.

அப்பொழுது தொலைக்காட்சியில் ஒரு சுயேட்சை வேட்பாளர் முன் தோன்றி இப்படிக் கூறினார். “எனது சின்னம் மயில் சின்னம், உங்கள் ஓட்டுக்களை மயிலுக்குப் போடுங்கள்.”
இதைக் கேட்டுக்கொண்டிருந்த சகோதரியின் மகன் இவ்வாறு கூறினான். “மண்டையில் போடுங்கள்.”

அதன் பிறகு அந்த சுயேட்சை வேட்பாளர் தொலைக்காட்சியில் தோன்றும் போதெல்லாம், இவனும் “மண்டையில் போடுங்கள்” என்று சொல்லிக்கொண்டிருப்பான்.

எல்லோருக்கும் ஒரே ஆச்சரியமாக போட்டுது. இவன் எப்படி உப்புடிச்சொல்லுறான். இவனிடம் யாரும் இப்படியான சொற்களைப் பேசவும் இல்லை, கதைக்கவும் இல்லை. இன்னும் சரியாக கதைக்கவும் வராது. பிறந்து சில மாதங்களிலேயே கொழும்புக்கு கொண்டு வந்திட்டம். இப்படி ஆச்சரியங்கள் பல.

ஒரு வேலை எல்லாம் மண்வாசனையாக இருக்கும் எண்டு நினைக்கிறன்.
Author: M.Rishan Shareef
•4:00 PM
இலங்கையில் பொதுவாக அனைத்து மக்களிடமும் பாவனையிலிருக்குமொரு சொல் குசினி. எல்லோருடைய வீடுகளிலும் இருக்குமிது அனேகமாகப் பெண்கள் தங்கள் காலங்களை அதிகம் செலவழிக்கும் இடமாகவும் இருக்கிறது.

போர்த்துக்கேய மொழியிலிருந்து வரப்பெற்ற இச் சொல் சமையலறையைக் குறிக்கிறது. இந்தியா, தமிழ்நாட்டில் இச் சொல்லின் பரவல் அவ்வளவாக இருக்காது என நினைக்கிறேன். எனது சிறுகதையொன்றுக்கு வந்த பின்னூட்டங்களிலும், மின்னஞ்சல் கருத்துக்களிலும் 'குசினி' என்றால் என்னவென்று கேட்டுவந்தவை அனேகம்.

சமையலறை , சிங்கள மொழியில் 'குஸ்ஸிய' என அழைக்கப்படுகிறது. அச் சொல்லிலிருந்து மருவித்தான் 'குசினி' எனும் சொல் வந்தது எனச் சொல்லப்பட்டாலும் கூட, இச் சொல் போர்த்துக்கேய மொழியிலிருந்தே இலங்கைக்கு வந்திருக்கிறது.

இலங்கை முஸ்லிம்கள் வட்டாரத்தில் 'குசினி' எனும் சொல்லோடு, 'அடுப்படி' எனும் சொல்லும் பரவலாகப் பாவிக்கப்படுகிறது. பண்டைய வீடுகளிலும், இன்னும் சில கிராமத்து வீடுகளிலும் , இச் சமையலறையானது வீடுகளின் பின்புறத்தில் , வீட்டை விட்டும் தனியாகக் கட்டப்பட்டிருப்பதைக் காணலாம். அன்றைய காலத்தில் விறகுச் சமையலால் எழும் புகை வீட்டுக்குள் பரவாமல் இருப்பதற்காகவும், சமையற்காரர்கள் எளிதாக வந்துபோகும் படியாகவும் இப்படி அமைக்கப்பட்டிருந்ததென நினைக்கிறேன்.
Author: மலைநாடான்
•10:19 AM
" மீன்பாடும் தேன் நாட்டின் மட்டு வாவி கரையினிலே ஆடவர் தோளிலும் கா.. அரிவையர் நாவிலும் கா.." ஈழத்துக் கலைஞர் யாழ்ப்பாணம் விரமணிஐயருடன் உரையாடும் சந்தர்ப்பங்களில், ஈழத்தின் கிழக்குக்கரைபற்றிய பேச்சு வரும்போதேல்லாம் அவர் சொல்லி இரசிக்கும் வரிகளவை. அந்த வரிகளின் சொந்தக்காறரும் அநேகமாக அவராகவே இருக்க வேண்டுமென நினைக்கின்றேன்.

ஈழத்து முற்றத்தில் உரையாட அழைத்தபோதே, வடக்கின் பேச்சுக்களைப் பதிவு செய்ய பலர் இருக்கின்றார்கள். ஆகவே கிழக்கின் மொழியைப் பதிவு செய்ய எண்ணியிருந்தேன். முன்னைய பதிவொன்றில் மணிமேகலை என்ற சகோதரியும் இதே கருத்தைப் பின்னூட்டத்தில்
காலாகாலமாக ஈழத்து வரலாற்றில் ஈழத் தமிழர் என்றால் யாழ்ப்பாணத்தவர் என்றும் ஈழத் தமிழ் யாழ்ப்பாணத் தமிழ் என்றும் ஒரு பரவலான எண்ணப் பாங்கு வளர்ந்திருக்கிறது.
அதன் தவறு யாராலும் சுட்டிக் காட்டப் படவில்லை.
இனியேனும் நாம் அந்தத் தவறுகளை விடாமல் மற்றவர்களையும் (மட்டக் களப்பு,திருகோணமலை,மலையகம்)சேர்த்து கொண்டு போக வேண்டிய கடமை நம்மெல்லோருக்கும் உண்டு.
நம் கடந்த கால வரலாற்றுத் தவறுகளில் இருந்து பாடங்களைப் படிக்க வேண்டியதும் நமது கடமையாகும்.
அப்போது தான் நாம் வளர்ந்திருக்கிறோம் என்று அர்த்தம்.
இது என் அறிவுரையல்ல; ஒரு ஆதங்கம் அவ்வளவு தான்.
எனத் தெரிவித்திருந்தார். சகோதரி உங்கள் விருப்பமும் இணைந்ததே இவ்விடுகை.
என் வளர்விலும் வாழ்விலும் நிறைந்த அந்த மக்களின் மொழியில் அவர்களின் மனந்தெரியும்.

கிழக்கு மக்களின் பேச்சு மொழியில் அதிலும், குறிப்பாக மட்டக்களப்புப் பிரதேச மக்களின் பேச்சில் 'கா' எனும் ஒலி நயம் கலந்திருக்கும். அதிலம் அங்குள்ள பெண்கள் அதை மிக லாவகமாக பேச்சு மொழியில் சேர்ப்பார்கள்.
" ஏங்கா மறுகா போவிகளா..?" ( ஏனக்கா மறுபடியும் போவீர்களா )
"இல்லை மக்கா..இன்னிக்கு போறதிக்கு இல்லக்கா.." (இல்லை மக்களே இன்று போவதிற்கில்லை)
" சொன்னாக்கா கேக்கனும் மக்கா.." (சொன்னால் கேட்கணும் மக்களே)
இப்படி பேச்சு வழக்கில் சரளமாக கா வந்து சேரும்.
இந்தப் பெண்களின் பேச்சில் கலந்திருக்கும் மற்றுமொரு சொல்
"கிளி". இது அவர்களின் பாசத்தை வெளிப்படுத்தும் ஒரு மொழியடையாளம்.
"ஏன்ங்கிளி..?" " இல்ல கிளி" இது ஆண், பெண் வித்தியாசமில்லாது, இளையவர்களை அழைக்கும் போது சேர்த்துக் கொள்வார்கள். இந்த வகையில் " ஏன் மக.."" என்ன மகா" என்பதையும் சேர்க்கலாம்.
பெண்கள் இதனை சரளமாகப் பேசுவார்கள் எனினும், ஆண்களின் உரையாடலிலும் அப்படியே கலந்திருக்கும். மிகச்சிறந்த ஊடகவியலாளனாக அறியப்பட்ட தராக்கி சிவராம் அப்படிப் பேசுபவர்களில் ஒருவர். மிக அழகாகவும், இயல்பாகவும், இந்த மொழிநடையில் அவர் பேசுவார்.
"ஆளே!.. என்னாளே..?" (என்னடாப்பா என்பது போல்)
"ஓண்டாப்பா" ( ஓமடாப்பா என்பது போல)

அது சரி தொடக்கத்தில் சொன்னபடி அரிவையர் நாவில் கா வருவது புரிகிறது, அதென்ன ஆடவர் தோளில் கா என்கிறீர்கள் அப்படித்தானே..?
முன்னைய நாட்களில் மட்டக்களப்புப் பகுதியில் சில்லறை வியாபரிகள், மீனவர்கள், தங்களுடை பொருட்களை, நீளமான கயிறுகளில் இணைக்கப்பட்ட கூடைகளில் வைத்து , கயிற்றின் நுணியை நீளமான தடிக்கம்புகளில் கோர்த்த பின் தடிகளைத் தோளில் சுமந்து செல்வார்கள். தூக்குபவரின் முன்னும் பின்னும் பொருட்கள் கூடைகளில் தூக்கிச் சொல்லப்படும். அந்தத் தூக்குத்தடியை ' கா ' என்று அழைப்பார்கள்.

அதுவே ஆடவர் தோளில் கா, அரிவையர் நாவில் கா

மக்கா மறுவாட்டி பாப்பம்...
Author: கலை
•6:34 AM
பஞ்சியாக்கிடக்கெண்டா, இங்க எழுதிறதுக்கில்லை அந்தப் பஞ்சி :). அந்தச் சொல்லையும் இந்த முற்றத்தில இணைத்து வைக்கலாமேயெண்டுதான். ஏனெண்டால், நான் அடிக்கடி இந்த ‘பஞ்சியாக்கிடக்கு' அல்லது ‘பஞ்சியாயிருக்கு' எண்டு சொல்லேக்கை (அதுக்காக நான் எப்பவுமே பஞ்சிப்பட்டுக் கொண்டிருக்கிறன் எண்டு நினைக்காதையுங்கோ), இந்த வார்த்தையை விளக்கவேண்டி வந்திருக்கு.

”பஞ்சியாக்கிடக்கா? அது என்னது?” எண்டு கேக்கக்கூடிய இடத்திலதான் நானும் ஆரம்பத்தில வளர்ந்தது. பிறகு அந்த சொல் பரிச்சயத்தில வந்ததும், எனக்கு பிடித்திருந்ததால, அடிக்கடி சொல்லத் தொடங்கியிட்டன். 'அலுப்பாயிருக்கு' எண்ட சொல்லும் இந்த ‘பஞ்சியாக்கிடக்கு' எண்ட சொல்லின்ரை தம்பிதான் எண்டு நினைக்கிறன்.

மொத்தத்தில, எதையும் செய்ய விருப்பமில்லாமல் சோர்ந்து போயிருக்கிறன் என்பதை இப்படிச் சொல்லலாம்.

பி.கு. : நான் மட்டும் பஞ்சிப் பட்டது காணாதெண்டு, இந்தச் சொல்லையே தெரியாமல் இருந்த சிலரையும்கூட (இந்தியத் தமிழர்கள்), 'பஞ்சியாயிருக்கு' எண்டு சொல்ல வைச்சிட்டன் எண்டால் பாருங்கோவன் :).
Author: மொழிவளன்
•5:49 AM
இது அநேகமாக பெடியலிண்ர பேச்சு வழக்கிலேயே அதிகம் என நினைக்கின்றேன்.

மணிக்காய்

குணத்தில் நல்ல பெடியனாக இருந்தால், நல்லவனாக இருந்தால் “அவன் மணிக்காய் மச்சான்” என்று கூறுவோம்.

பேய்க்காய்

கடுங்கெட்டிக்காரனாக இருந்தால் “அவன் பேய்க்காய்” என்றும் கூறுவோம். அட உந்தக் கடுங்கெட்டிக்காரன் என்பதும் எமது பேச்சுவழக்கல்லே!

கடுங்கெட்டிக்காரன்

மறந்தே போனன், திறமைசாலி என்பதற்கு வழக்கில் இருக்கும் சொல் கடுங்கெட்டிக்காரன். இச் சொல் பொதுவாக எல்லோரிடமும் பயன்படும் சொல்.

உந்த

இஞ்சப்பாரடப்பா! உந்தப் பேச்செல்லாம் என்னிட்ட வச்சுக்காதேயும். இதில் உந்த என்பது “அந்த” என்பதற்கு இணையானச் சொல்.

அப்பு

“அப்பு” எனும் சொல் குறிப்பாக வயதில் முதிர்ந்தவர்களை பேச்சு வழக்கில் அழைக்கப் பயன்படுகின்றது. இது தாத்தா என்பதற்கு இணையானச் சொல். பாட்டி என்பதற்கு இணையானச் சொல்லாக “ஆச்சி” பயன்படுகின்றது.

எண்ரையப்பு, என்ரை செல்லையப்பு என்று தமது குழந்தைகளை கொஞ்சுவதற்கான சொல்லாகவும், வயதில் குறைந்தோரை பெரியோர் அழைக்கும் சொல்லாகவும் இந்த “அப்பு” எனும் சொல் வழக்கில் உள்ளது.

அப்பு ஆச்சியர் வாழ்ந்தப் பூமி இந்தப் பூமி தானடா!

ஒரு தாயகப் பாடலின் வரிகள். (நினைக்கும் போது நெஞ்சில் வலி பிறக்கிறது.)

மீண்டும் அடுத்தப் பதிவில்

அன்புடன் மொழிவளன் ஹொங்கொங்கிலிருந்து
Author: கானா பிரபா
•3:10 AM
வல்வை நலன்புரிச் சங்கம் அவுஸ்திரேலியா பிரிவு ஜூலை 2005 இல் வெளியிட்ட மலரைப் புரட்டியபோது அதன் ஆசிரியர் வல்வை சு.சக்திவடிவேல் இந்த "மாப்புக்கட்டு" பற்றி இப்படிச் சொல்கின்றார்.

1972 ஆம் ஆண்டு காலப்பகுதி அது. ஆசிரிய சேவையில் என்னை இணைத்துக் கொண்ட காலம். எனது ஆசிரியப்பணி அல்வாய் சிறீலங்கா வித்தியாசாலையில் தான் தொடங்கியது.

அன்று மாணவர்களுக்கு கணிதம் படிப்பித்துக் கொண்டிருந்தேன். ஒரு மாணவன் வீட்டுப்பாடம் செய்து வரவில்லை.

"பாரதிதாசன்! எழும்பு.....வா இங்கை"
கதிரையிலிருந்து கொண்டு அவனை அழைத்தேன்.
அவன் பவ்யமாக என் முன்னே வந்து நின்றான்.
என் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு, கடுப்பான தொனியில்....
"மாப்புக் கட்டடா" என்றேன் நான்.

அவன் அப்படியே நின்று கொண்டிருந்தான்.
எனக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. எனது சொல்லுக்குக் கட்டுப்படாமல்...அவன் பணிவான மாணவன் தான்! என்றாலும் நான் சொல்லும் பொழுது..அவனை அடிப்பதற்காக கையை ஓங்கினேன்.

எனது கை அவனது முதுகில் இறங்குவதற்கு முன்... எனது மனசில் ஒரு சிறு பொறி.
"கையைக் கட்டடா"
அவன் உடனடியாகக் கைகளைக் கட்டிக்கொண்டு பரிதாபமாக என்னைப் பார்த்தான்.
அப்பொழுதுதான் "மாப்புக் கட்டு என்பது எமது வல்வெட்டித்துறைப் பிரதேசத்துக்கே மட்டுமான சொல்வழக்கு என்பது எனக்குப் புரிந்தது.

மாப்புக்கட்டு என்றால் மார்பைக் கட்டு, கையைக் கட்டு என்று அர்த்தப்படும். அதாவது இரண்டுகைகளையும் மார்பை நோக்கிக் கட்டிப் பணிவாக நின்றிருத்தல் என்பதேயாகும்.
Author: வந்தியத்தேவன்
•10:53 PM
பொடியன், பொடிச்சி, பெட்டை, பொடியள் போன்ற சொற்கள் ஈழத்து வட்டார வழக்கில் பரவலாகப் பயன்படுத்தப்படுபவை. இந்தச் சொற்களின் மூலத்தை இணையத்தில் தேடு தேடென்று தேடினேன் கிடைக்கவில்லை. தமிழகத்தில் இந்த வார்த்தைகள் அவ்வளவாக பயன்படுத்தப்படுவதில்லை என நினைக்கின்றேன்.

இனி சொற்களுக்கான விளக்கம்

பொடியன் : பெரும்பாலும் சிறுவர்களைக் குறிப்பிடப்பயன்படுத்துவது. சிலவேளைகளில் இளைஞர்களையும் இந்தச் சொல்கொண்டு அழைப்பார்கள்.
உதாரணம் :
1. என்ரை மூத்த பொடியன் டொக்டருக்கு படிக்கிறான்

இங்கே பொடியன் குறிப்பிட்ட நபரது மூத்தமகனைச் சுட்டிக்காட்டுகின்றது.

2. சிவத்திற்க்கு பொடியன் பிறந்திருக்கு.

இந்த வாக்கியத்தில் பொடியன் ஆண் குழந்தையைக் குறிக்கிறது.

சிலவேளைகளில் பொடியனைச் சுருக்கி பொடி எனவும் அழைப்பார்கள்.

பொடிச்சி : பொடியனின் பெண்பால். பொம்பிளைப் பிள்ளைகளைக் குறிக்கும்.

உதாரணம் :
1. கோயிலுக்கு சிவசம்பு வாத்தியார்ட்டை சிவலைப் பொடிச்சி வந்திருந்தாள்,
இங்கே சிவலைப் பொடிச்சி சிவந்த அல்லது மாநிறமான பெண்ணைக் குறிக்கும்.

பெட்டை : பெண்களைக் குறிக்கும் இன்னொரு சொல். பெரும்பாலான கிராமங்களில் வழங்கும் சொல். கொஞ்சம் நாகரீகமாக பேசுகின்றவர்கள் இதனைத் தவிர்ப்பார்கள். குறிப்பாக கொழும்புத் டமில்ஸ். பெரும்பாலும் இளைஞர்கள் இந்தச் சொல் பாவிப்பார்கள்.

உதாரணம் :
1. வடிவான பெட்டை, சோக்கான பெட்டை. இரண்டுக்கும் அர்த்தம் அழகான பெண்.

பொடியள் : இளைஞர்கள் அல்லது சிறுவர்கள் கூட்டத்தைக் குறிக்கும் சொல். பொதுப்பாலாகும்.

உதாரணம் :
1. வைரவ கோயிலடியில் பொடியள் விளையாடுகிறாங்கள்.
2. உந்தப்பொடியள் செய்யும் சேட்டைகள் சரியில்லை.

இதனை விட விடுதலை இயக்கங்களில் இருப்பவர்களயும் பொடியள் என அழைப்பார்கள்.

3. வாசிகசாலையில் பொடியள் இண்டைக்கு கூட்டமாம்.
நூலகத்தில் ஏதோ ஒரு இயக்கத்தினர் கூட்டம் போடுகின்றார்கள் என்பது இதன் அர்த்தமாகும்.

பிற்குறிப்பு : நான் தமிழ் அறிஞன் அல்ல. அத்துடன் சாதாரண தரம் வரை மட்டுமே தமிழ் படித்தவன். மற்றும்படி நிறைய ஈழத்து நூல்கள் வாசித்த அனுபவம் மட்டுமே. ஆகையால் ஏதும் பிழை இருந்தால் சுட்டிக்காட்டவும். அத்துடன் உங்களுக்குத் தெரிந்த ஏனைய உதாரணங்களையும் இந்தச் சொற்களின் மூலங்களையும் அறியத்தரவும்.