Author: வந்தியத்தேவன்
•12:04 AM
குதிரை ஓடுதல் என்ற சொல் இலங்கையில் பரவலாக கள்ளமாக சோதனை எழுதுதல் அதாவது ஒருவருக்கு பதிலாக இன்னொருவர் ஆள்மாறாட்டம் செய்து சோதனை எழுதுதல் என்பதாகும்.

பெரும்பாலும் ஓஎல்லுக்கும் ஏஎல்லுக்கும் தான் இந்த குதிரை ஓட்டம் நடைபெறும். இது தண்டனைகுரிய குற்றமாகும் ஆனாலும் சிலர் துணிந்து எழுதுவார்கள் பிடிபட்டால் அதிகாரிகளால் எச்சரிக்கை செய்தே பெரும்பாலும் அனுப்பபடுவார்கள் காரணம் குதிரை ஓடுபவர் நன்றாகப் படிக்ககூடியவராக இருப்பார், அவரது எதிர்காலத்தை கருதி அவரை எச்சரிக்கையுடன் விட்டுவிடுவார்கள். இதுவரை நான் ஆண் குதிரைகளையே கண்டிருக்கின்றேன். பெண் குதிரைகள் ஓடுவதில்லை என நினைக்கின்றேன். காரணம் அவர்களுக்கு இந்த கள்ளவேலைகளில் அவ்வளவு விருப்பமில்லை.

இனி என்ரை சொந்தக் கதை சோகக் கதைக்குப்போவோம். என்னுடைய வலைமனையில் இருந்ததை திருத்து எழுதியிருக்கின்றேன். அந்தப் பதிவு நான் வலையுலகத்தில் காலடி எடுத்துவைத்தபோது எழுதியது. நிறையப் பிழைகள் இருக்கின்றது. ஆகவே இது ஒரு மீள் பதிவு அல்ல திருத்திய வடிவம்.

நான் உயர்தரம் படிக்கும்போது எனக்கும் அப்படி ஒரு நிலமை ஏற்பட்டது. கல்விப் பொதுத் தராதர(சாதாரணதரம்/ ஓஎல்) பரீட்சை பொதுவாக டிசெம்பர் மாதத்தில்தான் இடம் பெறும். நான் என்ரை ஓஎல் சோதனையை வெற்றிகரமாக முடித்துவிட்டு உயர்தரம் படித்துக்கொண்டிருந்தேன் . பொதுவாக டிசம்பர் விடுமுறை என்பதால் வீட்டுக்காரர் எல்லோரும் கொழும்புக்கு சென்றுவிட்டார்கள். நான் மட்டும் வீட்டிலை, ரியூசனுக்கு ஒழுங்காச் செல்லவேண்டும் எனக் கண்டிப்புடன் சொல்லிவிட்டு அவர்கள் என்னை வீட்டிலை தனியே விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள். 30 நாள் லீவிலை நான் 5 நாள் மட்டும் ரியூசன் சென்றது வேறு கதை.

ஒரு நாள் இரவு கூட்டாளிப் பொடியன் ஒருவன் இன்னொரு தெரிந்த பொடியனுடன் வந்து "மச்சான் இவன் ஓஎலிலை கணக்கு பாடம் சென்ற வருடம் பெயிலாகிவிட்டான் அவனுக்கு ஏ எல்( Advanced Level ) படிக்க கணக்கு பாஸ் பண்ணவேண்டும் இவனுக்கோ கணக்கு சுத்த சூனியம். நீ தான் இவனுக்காக குதிரை ஓடவேண்டும்" என்றான்.

நானோ முதலில் பயத்தில் மறுத்துவிட்டேன். எனக்கு உந்த ரிஸ்க் எடுக்கிற வேலையெல்லாம் சரிப்பட்டுவராது. அதாலை அவனிடம் "அட விசரா நான் பிடிபட்டால் என் படிப்பும் போய்ச்சு இவன்ரை படிப்பும் போய்ச்சு நான் மாட்டேன்" என்றேன்.

அவனோ விடாப்பிடியாக நீ தான் கணக்கிலை புலியாச்சே(பாப்பாசி மரத்திலை ஏத்துகிறான்) நல்லா எழுதுவாய் சும்மா பாஸ் காணும் இவணுக்கு ஒன்றும் டீயோ(Distinction ) சீயோ(Credit) ஒன்றும் வேண்டாம் ஒரு எஸ்(Simple Pass) போதும்" என்று கெஞ்சினான்.

நானும் கொஞ்சம் யோசிச்சிட்டு வீட்டுக்காரர் ஒருத்தரும் இல்லை களவும் கற்றுமற என பெரிசுகள் சொல்லியிருக்கிறார்கள் ஒருதரம் முயற்சி செய்தால் என்ன என நினைச்சு ஓம் எண்டுவிட்டேன். அத்துடன் என்ரை கண்டிசன் எல்லாம் சொன்னேன். எக்ஸாம் ஹோல் என்ரை பள்ளியாக இருக்ககூடாது என்றேன், அதற்கு அவர்கள் அதில்லை பள்ளிக்கூடம் என்றுவிட்டு ஒரு பிரபல பெண்கள் பாடசாலையை சொல்ல நான் விண்ணில் மிதந்தேன். நான் உடனே அடுத்த கண்டிசனான யார் அங்கே மேற்பார்வையாளர் எனக் கேட்க அவங்களும் அது யாரோ தெரியாத மாஸ்டர்தான் உனக்கு தெரிந்த ஒருதரும் இல்லை பயப்படவேண்டாம் என்றார்கள்.

அடுத்த கட்ட முக்கிய நடவடிக்கை தபால் அடையாள அட்டை மாத்துவது அவனது அடையாள அட்டையியில் என்னுடைய படம் ஒன்றை மாத்தி ஒட்டவேண்டும். இதற்கென சில பொடியள் இருக்கிறார்கள் அவங்கள் நல்ல வடிவாகச் செய்வார்கள் என அவங்கள் என்ரை படம் ஒன்றை வாங்கிக்கொண்டு போய்விட்டார்கள். சோதனை அண்டைக்கு பள்ளிக்கூட வாசலில் எனக்கு அடையாள அட்டையைத் தருவதாக சொன்னார்கள்.

விடிஞ்சால் சோதனை நான் சோதனை எழுதும்போது கூட‌ இப்படி பதட்டப்பட்டதில்லை, ஒரே ரென்சன். காலை நேரத்துக்கு எழும்பி குளித்துவிட்டு அப்படியே பிள்ளையாருக்கும் ஒரு சலூட் போட்டுவிட்டு பக்திப் பழமாகா போனால் பிடிக்கமாட்டார்கள் என்ற நினைப்பிலை பள்ளிக்கூட‌ வாசலில் நண்பர்களுக்காக நின்றேன்.

எனக்குத் தெரிந்த பொம்பிளைப் பிள்ளையள் எல்லாம் என்னை ஏதோ நான் அவர்களை சைட் அடிக்க நிற்பதாக நினைத்து ருத்ர பார்வை பார்த்துவிட்டுப்போனார்கள். வாசலிலேயே என் மானம் கொஞ்சம் கொஞ்சமாக கப்பல் ஏறிவிட்டது. சோதனை தொடங்க 15 நிமிடங்கள் இருக்கும்போது தான் அவர்கள் இருவரும் வந்தார்கள் "என்ன மச்சான் இப்படி லேட் பண்ணிவிட்டிர்களே" எனக் கேட்க அவங்களோ "இல்லை இப்ப நீ போனால்தான் சரியாக இருக்கும்" என்றதுடன் என்னை வாழ்த்தியும் அனுப்பினார்கள். (செய்வது கள்ளத்தனம் இதிலை வாழ்த்து வேறை).

நானும் பாண்டியராஜன் முழிமாதிரி கண்ணைப் பிரட்டிகொண்டு என் சீட்டைத் தேடினேன். அவங்கள் முதலிலே சொல்லியிருந்தாங்கள் மச்சான் ரிலாக்சாகபோய் எழுது பயந்துகொண்டுபோனியோ என்றால் பிடித்துப்போடுவார்கள். ஒருமாதிரி சீட்டைக் கண்டுபிடித்து இருக்க மேற்பார்வையாளார் வந்தார். அவரும் என்னை நோக்க நானும் அவரை நோக்க என் மனதில் பெரிய அணு குண்டே வெடித்தது.

அவர் வேறையாரும் அல்ல எனது பாடசாலை இரசாயனவியல் ஆசிரியர் அவரின் முகத்தில் எள்ளும் கொள்ளும் சேர்ந்துவெடித்தது. ஆனாலும் உடனே அதைக் காட்டிக்கொள்ளாமல் என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு வெளியே அழைத்துச் சென்றார். வெளியிலை வைத்து என்ரை அடையாள அட்டையைச் சோதித்தார். என்ரை பேருக்கு பதிலாக இன்னொரு பெயர் அவ்வளவுதான் தொடங்கினாரே அர்ச்சனை.

மற்ற மாணவர்களுக்கு நான் யார் என்பதைக் காட்டிக்கொடுக்காமல் வெளியே வைத்து சரமாரியாக ஏசினார். இறுதியாக ஓடடா வீட்டை என என்னை துரத்தினார். இதேடை விட்டிருந்தால் பரவாயில்லை. பள்ளி தொடங்கியபின் அம்மாவைக் கூப்பிட்டு என் சாகசத்தைச் சொல்லி வீட்டிலும் எனக்கு அர்ச்சனை கிடைக்கச் செய்தார்.

இதற்க்குப் பிறகு நான் குதிரை ஓடுறது என்றாலே ஓரே ஓட்டம் தான்.

இலங்கையில் தற்போது கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை நடக்கின்றது. ஆகையால் காலத்திற்க்கேற்ற பதிவாக இந்தப்பதிவு.