Author: வடலியூரான்
•9:57 PM
மூத்தவன் சுகமா முகாமிலையிருந்து வந்தால் முதலிப் பேத்தியம்மாளே அவனை உனக்கு காவடி எடுக்க வைக்கிறன், இடையிலை நிக்கிற இளையவன் ஒரு பிரச்சினையுமில்லாமல் இத்தாலிக்குப் போய்ச் சேர்ந்தால் இத்திமரத்தாளே எனரை இரண்டாவது பெட்டையினரை மூத்த பெடியன் காவடியெடுக்க, நான் பாற் செம்பு எடுப்பன்,எட்டிலை செவ்வாயிருக்கிற என்ரை கடைசிப் பெட்டைக்கு இந்தச் சம்பந்தமாவது முற்றாகி வந்தால் முள்ளு மிதி போட்டு நான் பாற்செம்பு எடுக்கிறன்,என்றை புருசன் ஆசுப்பத்திரியாலை சுகமா வந்து சேர்ந்தால் எனரை அம்மாளாச்சியே என்றை இரண்டாவது பெடியனை உனக்கு காவடியெடுக்க வைச்சு, அஞ்சு கொத்துப் பானையிலை பொங்கி,ஒரு பெரிய பிலாப்பழமும் வெட்டிப் படைக்கிறன் என்பது போன்ற நேர்த்திகள்( கடவுளை நோக்கி வைக்கப்படும் விண்ணப்பம்) சாதாரண, சராசரியான ஈழத்து தாய்மார்களினால் அவர்களின் இஸ்ட தெய்வங்களிடம் வைக்கப்படுவனவாகும்.



நேர்த்தி வைக்கப்பட்ட கோவில்களுக்கு,நேர்த்தி செலுத்த வேண்டிய தினங்களில், காவடியிலோ,பாற்செம்பிலோ, கரகத்திலோ தங்களை வருத்திப் பாலை சுமந்து சென்று அந்தந்தக் கோவில்களின் சுவாமிகளுக்கு அபிசேகத்திற்கு கையளிப்பதால், த்மது பாவங்கள் களையப்பட்டு, நேர்த்திகள் நிறைவேறுகின்றன அல்லது நிறைவேற்றப் படுகின்றன என்பது அவர்களின் நம்பிக்கையாகும்.



பாற்காவடி, பறவைக் காவடி, தூக்குக் காவடி,துலாக் காவடி, செடில் காவடி, ஆனந்தக் காவடி, ஆட்டக் காவடி எனப் பல காவடிகள் உள்ளன.இதிலே ஆனந்தக் காவடி, பால் காவடி என்பன செடில் குத்த இயலாதவர்களாலும் பறவைக் காவடி,தூக்குக்காவடி போன்றவை கடும் நேர்த்திக் காரர்களாலும் எடுக்கப்படுபவையாகும்.



செடில் காவடி தான் பெரும்பாலானவர்களால் எடுக்கப்படும், பம்பலான, பார்ப்பதற்கு ரசிக்கக்கூடிய, கண்டு களிக்கக்கூடியதாகவிருக்கும்.அவன் எடுக்கிறான், நான் எடுத்தாலென்ன என திடுதிப்பென ,திடீரென முடிவெடுத்து கோஸ்டியாகக் களமிறங்கக்கூடியதாக இருக்கும்.



கடுமையான நேர்த்திகாரர், காவடி எடுக்கிற கோயிலை விளக்கு வைச்ச தினத்திலையிருந்து, மச்சம்,மாமிசம் சாப்பிடாமல் இருந்து, காவடியோ,பாற்செம்போ எடுக்கிற நாளிலை சாப்பிடாமல் விரதமிருந்து காவடி எடுத்துக் கொண்டு போய், கோயிலை இறக்கினாப் போலை தான் சாப்பிடுவினம்.




காவடி எடுக்கிறதெண்டால் செடில் குத்தினாத்தான் மரியாதை."ஆ.. அவன் ஆயிரதெட்டுச் செடில் குத்தினானாம், கையிலை,நெஞ்சிலை எல்லாம் அலகு குத்தினானான்ம், இத்தினை செடிலை அறுத்தானாம் எண்டதிலை தான் அவன்ரை வீரம்??? தங்கியிருக்குது.செடில் எப்பவும் வந்து வைரவருக்கு முன்னலை வைச்சுத் தான் குத்தப்படும். பறை எல்லாம் சுத்தி நின்று அடித்துக் கொண்டிருக்க அந்த அடியிலேயும், கூடி நிக்கிற சனத்தின்ரை அரோகராக் கோசத்திலேயும் வலி பெரிசாகத் தெரியாது.



வைரவருக்கு ஒரு தேங்காயை அடிக்கச்ச சொல்லிப்போட்டு, முதல் வாய்க்குத் தான் அலகு குத்தப்படும்.எண்டால்த்தான், முதுகிலை குத்தேக்கை வலிச்சாலும் ஆளாலை கத்தேலாமல்ப் போடும் கண்டியளோ.பிறகு செடில் எல்லாம் குத்தினாப் போலை அப்பிடியே காவடியைத் தோளிலை ஏத்தாமல் ஒருக்கால் கோவிலை சுத்திவந்திட்டு, பிறகு ஐயர் காவடியை,பாற்செம்பைத் தூக்கி ஏத்திவிட்டாப் பிறகு, அப்பிடியே ஆடிக் கொண்டு வெளிக்கிடவேண்டியத் தானே.ஒவ்வொரு சந்திகள், கோயில்கள் எல்லா இடமும் நிண்டு, ஆடி, கோயிலுக்குப் போய்ச்சேர எப்பிடியும், சாமம் ஆகிப் போடும்.



சின்னனிலையெல்லாம் எப்பாடா கோவிலிலை "காவடி நாள்" வரும் எண்டு காத்துக் கிடக்கிறது. காவடி பார்க்கவென்ற பொதுவான காரணத்தை தாண்டி, இன்னுமொரு கொஞ்சம் ஸ்பெசலான காரணமும் உண்டு.ஆண்டு இரண்டு,மூன்று களில் படிக்கின்ற காலங்களிலெல்லாம் படிக்கிற புத்தகத்துக்கை வைக்கிறதுக்கு மயிலிறகுகளை இந்தக் காவடிகளிலை ஆட்டையைப் போடலாம் எண்டு தான் உந்தக் காத்திருப்பெல்லாம்.




புத்தகதுக்கை மயிலிறகை வைத்துப் பவுடர் போட்டால் அது குட்டி போடும் எண்டு முந்தி யாரோ இழக்கின கதைய நம்பி பவுடர் எல்லாம் போட்டிருந்திருக்கிறோம்.அதுமட்டுமில்லாமல் அந்த மயிலிறகு உள்ள புத்தகத்தை திறக்கும் போது வானத்தின் கண்ணில் அது பட்டுவிட்டால் குட்டி போடாது எண்டிறது அடுத்த புழுகு.ஆனால் அது குட்டியும் போடயில்லை ஒரு சுட்டியும் போட்வில்லை.





ஆனாலும் வானம் பாத்திடும் எண்டதுக்காகவேண்டி, பக்கத்திலை இருக்கிற நண்பனட்டை என்னட்டையும் மயிலிறகு இருக்குது எண்டதை காட்டாம்ல் இருக்க எப்பிடி முடியும்? மனம் விடாதே.அவனுக்குக் காட்டிறதுக்காக மேசைக்குக் கீழை போய் புத்தகத்தை மேல் பக்கமாய் படக்கென்று திறந்து,நண்பனுக்குக் காட்டி, வானத்துக்குக் காட்டாத கெட்டிக் காரர் நாங்கள் .




நண்பனுக்குத் தான் குடுக்க் மாட்ட்ம்.ஆனால் இந்த மயிலிறகை நண்பிகள் கேட்டால் மட்டும் பல்லையிளித்துக் கொண்டு எடுத்துக் கொடுத்து,செட்டையடித்து பேட்டுக் கோழியை கரக்ற் பண்ண வெளிக்கிடும் சேவலின் புத்தியும் எங்களுக்கு இருந்ததுவும் மயிலிறகின் மெல் ஈர்ப்பு வருவதற்கு அல்லது மயிலிறகை ஆட்டையைப் போட வேண்டியதொரு தேவையை எங்களுக்கு ஏற்படுத்திய இன்னுமொரு காரணம்.




ஆனால் மயிலையோ,மயிலிறகையோ காண ஏலாத எங்கள் ஊரில் மயிலிறகை எடுப்பதற்குரிய ஒரே வழி இந்தக் காவடிக்ளின் போது எடுப்பது தான்.ஆனால் காவ்டியில் உள்ள மயிலிறகு முறிந்து விழுந்து,முறிந்த இடத்தில் நான் நின்று, அந்த இடத்தில் என்னைப் போல மயிலிறகு பொறுக்குவதற்கு காத்துக் கொண்டு நிற்கும் என் சகபாடிகளோடு போட்டி போட்டு, அதுக்குள்ளாலையும் எனக்கு மயிலிறகு கிடைக்கிறது என்பது லேசுப் பட்ட காரியமில்லை.



ஒரே வழி காவடியிலியிருந்து ஆட்டையைப் போடுறது தான்.அதற்கு பொருத்தமான நேரம், காவடிகள், ஆடுபவர்களின் தோளில் ஏற்றுவதற்கு முதல் ஆலய மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கும் போது எடுப்பது தான்.ஆனாலும் அது ஒண்டும் இழுத்தெடுக்க வராது..வழி? பிளேட்டோடை களத்திலை இறங்கி, சத்தம் போடாமல் மண்டி,மண்டி காவடிக்குப் பக்கத்திலை போய் நிண்டு கொண்டு, அறுக்கிறது மாதிரி வேறை யாருக்கும் தெரியாமல் அறுத்தெடுத்துக் கொண்டு போறது தான் வழி.அப்பிடித் தான் ஒருக்கால் செய்ய வெளிக்கிட்டு, அந்தக் காவடிக்காரர் திரத்த வெளிக்கிட , குண்டியிலை குதிக்கால் அடிபட ஓடினதெல்லாம் பழங்கதை.





காவடியென்றால் பறை வேண்டும்.பறை இல்லையென்றால் அந்தக் காவடியில் வேலையே இல்லை.பாப்பவர்களுக்கும் உப்புச் சப்பில்லாதது போல இருக்கும்.ஆடுபவருக்கும் நன்றாக இழுத்து ஆட முடியாது.பண்டைத் தமிழனின் வாத்தியக் கருவியான பறையின் பவர் அத்துணை வாய்ந்தது.பறையில் கட்டப் பட்டிருக்கும் தோலில் ஆழமாக விழும் அடியில் ஏற்படும் அதிர்விலே வரும் சுருதி நரம்புக்குள் புகுந்து, காவடிய ஆடுபவரை துள்ளி ஆடச் செய்யும். எம்மையும் அந்த சுருதிக்கு ஆட அழைக்கும்.அற்லீஸ்ற்(Atleast) கால்களையாவது நம்மையறியாமல் ஆட்டுவிக்கும்.அத்தனை சக்தியுள்ளது.






அது மட்டுமில்லாமல் முதுகிலே ஆழமாக குத்தப் படும் செடிலினால் ஏற்படும் வலியையும் கூட மறங்கடிக்கச் செய்யும்.செடில் அறுத்து, குருதி கொட்டினாலும் துடி துடித்துவிடாமல் தடுத்துவிடக் கூடியது. "டிண்டு டட்டு டட்டு டட்டு டிண்டு டட்டு டட்டு டட்டு டிண்டு டட்டு டட்டு டட்டு " என்று அடிக்கும் அடிக்கு ஆடுபவன், செடில் பிடிப்பவன், காவடிக்கு முன் பைலா ஆடுபவன்,காவடி பார்க்க வந்தவன் எனப் பலரையும் ஆட வைக்கும்.அந்தமாதிரியான ஒரு இசைக் கருவி.



(உங்களுக்காக அவ்வளவு தெளிவாக இல்லாவிட்டாலும் என்னிடமிருந்த ஒரு காணொளி.)



காவடி போற ரோட்டாலை சனம் வாளிகளிலை தண்ணியள்ளிவைச்சிருக்குங்கள்.அந்தத் தண்ணியை காவடி ஆடுறவனுக்கு ஊத்திறாங்களோ இல்லையோ செடில் பிடிக்கிறவனுக்கும், பைலா ஆடுறபவனுக்கும், சேட்டுக் கழட்டாமல் மாப்பிளை போல வந்து பெண்டுகளுக்கு நல்லபிள்ளை போல நடிக்கிறவனுங்களுக்கும் ஊத்துவாங்கள்.அவங்களைச் சீண்டுவதும் அவங்களுக்கு தண்ணியை ஊத்திப் போட்டு அதைப் பார்த்த சரக்குகள் ஏதாவது ரியாக்சன் குடுக்குதுகளோ எண்டும் ஒரு லுக் விடுவாங்கள்.




காவடியாடுறவங்கள் நேர்த்தி எண்டு சொல்லி எடுத்தாலும், ஆனால் மற்றப் பெடியளுக்கெல்லாம் அது பம்பலாய்ப் போடும்.சரக்குகள் பார்க்குது எண்டால் காவடி ஆடிறவங்கள் நல்லா உன்னி இழுத்து, செடில் அறுக்க வெளிக்கிடுவாங்கள்.சிலவேளையிலை தௌவல் ஒண்டு தான் காவடி எடுத்துது எண்டால், அது பெரிசா இழுத்து ஆட்டாது.ஆனால் செடில் பிடிக்கிறவன் விடமாட்டான்.தான் இழுத்து அறுத்துப்போடுவான்.






இண்டைக்கும் எங்களுக்கெல்லாம் ஏதாவது பாட்டியளுக்குப் போனாலும் அந்தக் காவடிக்கு ஆடிற மாதிரி ஆட்டம் ஒருக்காலெண்டாலும் ஆடாட்டில் ஏதோ பாட்டியிலை ஆடினமாதிரி ஒரு பீலிங் வராதாம் கண்டியளோ.

எஙக்டை ஊரிலையும் பண்டாரி அம்மன்கோவிலிலை ஒவ்வொரு சித்திரை வருச்ப் பிறப்பண்டைக்கு பின்னேரம் தான் காவடியும், அடுத்தநாள் வேள்வியும் நடக்கும்.இந்தமுறையும் அதுக்குத்தான் போறதுக்காண்டி நாளைக்கு வெளிக்கிடிறன். போனால்த் தானே செடிலுகள் பிடிச்சு,கூத்துகள் அடிச்சு, முசுப்பாத்தியா இருக்கும்.அதுதான் அவசரமா ,திருப்பியும் பாக்காமல் எழுதிப் போட்டிட்டிப் போறன்.ஆச்சியும் பிறகு கோவிச்சுப் போடுவா, எல்லாரும் கலியாண வீட்டோடை தன்னைத் தனிய விட்டுட்டுப் போட்டாங்களெண்டு. அது தான் எதோ படக்கெண்டு எழுதிக் கிடக்குது.ஏதாவது பிழையள் கிடந்தால் சொல்லுங்கோ.

உன்னி - கொஞ்சம் ஊண்டி இழுத்தல் எண்டு சொல்லலாம்
தௌவல் - நோஞ்சான்/ஏலாவாளி மாதிரியான ஆக்கள்
செடில் - முதுகிலே அல்கால் குத்த்ப்படுவது
Author: வடலியூரான்
•1:54 AM
மழை எல்லாருக்கும் பிடிக்கும்.மழையில் நனைய மனம் துடிக்கும்.ஆனால் சளி வந்திடும் எண்டு மூளை அலாம்(Alarm) அடிச்சுப் போடும்.பிறகென்னன்டு நனையிறது...?ஆனால் தமிழ்ப் படங்களிலை மட்டும் ஹீரோவும் ஹீரோயினும் தடிமனெல்லாம் வராமல் எப்படித் தான் மழையிலை நனைஞ்சு லவுசு பண்ணினமோ எண்டு தெரியேல்லை.அதிருக்க,இண்டைக்கு உங்களையும் சேத்து ஒருக்கால் நனைய வைப்பம் எண்டு சின்ன ஒரு பிளான்.பாப்பம்.


வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி மழை,தென் மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை எண்டு இரண்டு காலப்ப்பகுதிகள் தான் இலங்கைக்கு மழையை வழங்குகின்ற காலப்பகுதிகள் எண்டு சின்னனிலை உந்த சமூகக்கல்வியும் வரலாறும் எண்ட புத்தகத்திலை படிச்சதா சின்னதொரு ஞாபகம்.அதிலையும் வடகீழ்ப்ப்பருவக்காற்று மட்டும் தான் வடக்குக் கிழக்குப் பகுதிகளுக்கு மழை வழங்குகின்ற காலம்.பொதுவாக ஐப்பசி தொடக்கம் மார்கழி வரை தான் இந்தக்க்காலம்.இயற்கை கூட எங்களை புறக்கணிக்கிறதா..?நாடெங்கும் வருடமெல்லாம் மழை கொட்ட எங்களுக்கு மட்டும் இரண்டு மாத மழை. மழையில்லை,மலையில்லை,நதியுமில்லாமல் நாதிய்ற்ற சனமான ஈழத்துத் தமிழ்ச்சனம்.ம்ம்ம்ம்.




பொதுவாக கும்பத்துக்கை(நவராத்திரி) மழை தொடங்கி, கந்தசசட்டி, பெருங்கதை, திருவெம்பா போன்ற விரதங்களுக்கெல்லாம் கொட்டி,தைப்பொங்கலோடை வெளிச்சிடும் எண்டு பெரியாக்கள் சொல்லுவினம்.அவர்களது அனுபவக் கணிப்பு பெரும்பாலும் பொய்க்காது.சிலவேளைகளிலை முந்திப்பிந்தி, காலந்தப்பிப் பெய்யும். மழை வருமட்டும் எல்லாரும் எப்பாடா மழை வரும் எண்டு பாத்துக்கொண்டிருப்பினம்.என்னடா இன்னும் மழையைக் காணேல்லை,இந்தமுறை வராதோ எண்டு எல்லாரும் மழைக்குத் தவங் கிடப்பினம்.ஐப்பசி மழை வந்தால் தானே வெங்காய நடுகையோ,நெல் விதைப்பையோ தொடங்கலாம்.ஆனால் வந்த பிறகெண்டால் அது வாங்கிற பேச்சு உலகத்திலை ஒருத்தரும் வாங்கியிராத பேச்சாயிருக்கும்."இழவு விழுந்த மழை","அரியண்ட மழை",பெய்ஞ்சால் பெய்ஞ்சு போட்டுப் போகோணும்.இது ஒரு வேலையுஞ் செய்ய ஒரு வழியில்லை.அடுப்பெரிக்க விறகுமில்லை.தெருவாலை போக வழியில்லை,உடுப்புத் தோய்ச்சுக் காயப்போட வழியில்லை,மாடுகளை மேய்ச்சலுக்கு அவிட்டு விடேலாதாம்,கூலி வேலையுமில்லை, அடியோ பிடியோ எண்டு,அது தாராளமாகத் திட்டுவாங்கும்.அந்த மழை பற்றிய பதிவொன்று தான் இது.



"என்ன நேற்றுப் பெய்ஞ்சது காணாதெண்டு இண்டைக்கும் வரப்போகுது போல கிடக்குது.இப்பவே கோலங் கட்டுது.நேற்றையான் மாரி(மாதிரி) பராதியிலை விறகுகளை எடுத்துவைக்க அயத்துப் போகாமல் இப்பவே அதிலை கிடக்கிற கொக்காரையள், மட்டையள், பழம் மூரியள்,பன்னாடையள் கொஞ்சத்தைக் கொண்டு போய் அடுப்பு மாடத்திலை காயப் போடு,அடுப்பு வெக்கைக்கு நேற்றையான் ஈரமெல்லாம் காய்ஞ்சு போடும்.மிச்சத்தைக் கொண்டு போய் குசினிக்குப் புறத்தாலை இருக்கிற பட்டடையிலை அடுக்கி வை.பேந்து நாளைக்கு,நாளையிண்டைக்கு தேவைப்படும் " எண்டு அம்மாவுக்கு, அம்மம்மா ஓடர் போடுறா.



"இஞ்சை முத்தத்திலை காயவைச்ச கொட்டை எடுத்த புளியையும் பினாட்டையும் எடுத்து சைற் அறைக்கை வைச்சுப் போட்டு பினாட்டுப் பாயைச் சுத்திக் கொண்டு போய் சின்னறைக்கை வை பாப்பம்" எண்டு மழை வரவை எதிர் பார்த்து, தம்பி தங்கச்சியோடை பழங்கொப்பியொற்றையிலை கடதாசிக் கப்பல் கட்டும் பணியில் கரிசினையோடை ஈடுபட்டுக் கொண்டிருந்த என்னை அம்மா குழப்பிறா.. நான் ஆஆய்ய்ய்ய்.. எண்டு இழுக்க......., இப்ப உதிலை கிடக்கிற ஈக்குப்பிடியாலை வாங்கப் போறாய்..சொன்னதைச் செய்து பழகு பாப்பம்.. ... பழகிறியள் பழக்கம் இப்பவே......எண்டு அம்மம்மா என்னை உறுக்குறா...நானும் வாய்க்குள்ளை வந்த எதையோ சொல்லிக் கொண்டு சொன்ன வேலையைச் செய்யிறன்...



வானம் இப்ப இன்னும் கொஞ்சம் இருட்டத் தொடங்கீற்றுது.அப்பர் மாலந்தெணித் தோட்டதுக்கை கட்டியிருந்த மாட்டை அவிட்டுக்கொண்டு வாறதுக்கு ஓடிறார்.இப்படி எல்லாரும் ஆளாலுக்கொரு திசையிலை ஓடி ஒவ்வொரு வேலையாப் பாத்துமுடிக்கவும் மழை வரவும் சரியாக்கிடக்குது.மழை கொஞ்சம் கொஞ்சமாத் துமிக்கத் தொடங்கி,கொஞ்ச நேரத்திலை கொட்டத் தொடங்குது.நாங்கள் மூண்டு பேரும் ஆ.. அய்ய்ய்ய் மழை... எண்டு துள்ளிக் குதிக்கிறம்.என்ரை ஒராம் ஆண்டு கொப்பியெல்லாம் கப்பலாக உருமாறி ஒண்டுக்குப் பின்னாலை ஒண்டா போய்க் கொண்டிருக்குது.



எங்கட்டை வீட்டிலை இரண்டு முகடுகள் செங்குத்தாச் சந்திக்குது.அதிலை ஒரு பீலி ஒண்டும் இருந்தது.அந்தப் பீலியாலை மழைத் தண்ணி பயங்கர force ஆ வந்து விழும்.அந்தப் பீலித் தண்ணி வந்து விழுகிற இடத்துக்கு கொஞ்சம் தள்ளித் தான் எங்கடை கப்பலுகள் தங்கன்ரை கன்னி அணி வகுப்பைத் தொடங்கி அணி வகுத்துச் செல்லும்.பீலித் தண்ணி விழுகிறதாலை ஏற்படுகின்ற அலைகளாலை எங்கடை கப்பலுகள் ஓரளவு கொஞ்சத் துர்ரத்துக்குப் போகும்.சிலதுகள் உந்தக் குப்பையள் ஏதாவது தடக்கி கொஞ்சத் தூரத்திலேயே நிண்டிடும்.சிலது பிரண்டு,கவிண்டு,தாண்டு போகும்.இதையெல்லாம் தாண்டி ஆற்றை கப்பல் கனதூரம் போகுதெண்டு எங்கள் மூண்டு பேருக்கும் போட்டியாய் இருக்கும்.கொஞ்சம் கடும் மழையெண்டால் ஓட்டுகுள்ளாலையும் அங்கை இஞ்சையெண்டு வீட்டுக்குள்ளையும் ஒழுகத்தொடங்கிவிடும்.பிறகு அந்த ஒழுக்குகளுக்கும் ஒவ்வொரு யத்துகளைக் கொண்டு போய் வைக்கிறதே பெரும் வேலையாப்போடும் எங்களுக்கு.




மழையோ கொட்டோ கொட்டெண்டு கொட்டிக் கொண்டிருக்கும்.எல்லாரும் ஒண்டுக்க்கு,இரண்டு,மூண்டு ஸ்வேற்றருகளையும் போட்டுக் கொண்டு கை,காலை குறட்டி வைச்சுக்கொண்டு,மழை எப்பாடா வெளிக்கும் எண்டு வெளிவிறாந்தை தாவாரத்துகு கீழை தூத்துவானம் அடிக்க அடிக்க,அதை ரசிச்சு,அந்த தூவானத்தை அனுபவிச்சுக் கொண்டிருப்பம்.ஆனால் அது விடுமே?அது மின்னல் வெட்டி,முழங்கி,கொட்டோ கொட்டெண்டு கொட்டிக்கொண்டிருக்கும்.மின்னல் வெளிச்சம் தெரியுதெண்டால் எல்லாரும் இரண்டு காதுக்குளையும் விரலை ஓட்டி இடியை எதிர்கொள்ள றெடியாகிடுவம்.



இடி எங்கடை வீட்டுக்கு மேலை விழுந்திடக்கூடாது எண்டதோடை,அது இரதை வாழை மரத்திலை விழுந்தால் அதிலியிருந்து தங்கக்கட்டி கிடைக்குமாம எண்டு அந்தக் காலத்திலை ஆரோ அவிட்டுவிட்ட ரீலை நம்பி, எங்கடை இரதை வாழையிலை இடி விழுந்தால் நல்லாயிருக்கும் எண்டு சின்னப் பிரார்த்தனையும் உள்ளுக்குள்ளாலை நடந்து கொண்டிருக்கும்.இப்ப கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு, மழை பெய்யிறது கொஞ்சம் நிண்டிட்டுது.எண்டாலும் கொஞ்சம் கொஞ்சமாத் துமிச்சுக் கொண்டிருக்கும்.எங்கனரை வீடுக்குப் பின்னலை இருக்கிற புளியங்காணி வேலிக்குள்ளாலை ஊரில் வெள்ளம் எல்லாம் எங்கடை வீட்டை ஊடறுத்த்தான் ரோட்டைப் போய்ச்சேரும்.இப்ப முழங்காலுக்கு மேலை வெள்ளம் முத்தத்தாலை ஓடிக்கொண்டிருக்கும்.




மழை விட்டவுடனை அந்த வெள்ளத்துக்கை தெம்பல் அடிச்சு, அந்தத் தெம்பல்த் தண்ணியிலை மற்றாக்களை நனைப்பிக்கிறது தான் எங்கடை அடுத்த விளையாட்டாயிருக்கும். "இஞ்சை மாட்டடி கிடக்கிற கிடையைப் பாருங்கோ.அதுகளும் மழைக்காக்கும் குளம் குளமா மூத்திரம் பெய்ஞ்சு தள்ளியிருகுதுகள்.மாட்டடியெல்லாம் சேறாக்கி வைச்சிருக்குதுகள்.உதிலை கேற்று வாசல்லை உந்த புளியங்காணிக்கிள்ளலை வந்த வெள்ளம் அள்ளிக் கொண்டுவந்த, வெள்ள மண் கொஞ்சத்தை அள்ளிக் கொண்டு வந்து போடுங்கோ பாப்பம்.பாவம் கண்டுத் தாச்சி மாடு பேந்தும் இரவு உந்தச் சக்கலுக்கை தான் படுக்கப் போகுது" எண்டு அப்பாவுக்கு அடுத்த கொமாண்ட் அம்மம்மா போடுறா. (இதெல்லாம் ஒராம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு கால ஞாபகங்கள்..இனி தமிழ்ப் படங்களிலை வாறமாதிரி வேணுமெண்டால் ஒரு " 7, 8 ஆண்டுகளுகுப் பிறகு" எண்டு வசனத்தைப் போட்டிட்டு வாசியுங்கோவன்) .



ஆம்பிளையள் எல்லாம் சைக்கிளை எடுத்துக் கொண்டோ,குடையைப் பிடிச்சுக் கொண்டோ மழைப் புதினங்களைக் கதைகிறதுக்காகவேண்டி வாசியாலையிலையோ அல்லது அரசடிச் சந்தியிலையோ கூடுவினம்.கூடி நிண்டு, "மட்டக் களப்பிலை இடுப்பளவுக்கு வெள்ளமாம்..","மலையிலை(திரிகோணமலையை மலை என்றும் அழைப்பார்கள்)காத்துக்கு வீட்டுச் சீற்றெல்லத்தையும் கழட்டிக் கொண்டு போட்டுதாம்","புத்தூர்ச் சந்தியில நிண்ட ஆலமரம் பாறி விழுந்திட்டுதாம்.","இரணைமடுக்குளம் நிரம்பீற்றுதாம்","ஓடக்கரைக்கை சைக்கிளை மேவி வெள்ளம் ஓடுதாம்" எண்டு அடியா பிடியா எண்டு நியூசுகளை அள்ளி விடுவினம்.


CNN, BBC க்காரரெல்லாம் நாங்கள் பேசாமல் தம்பசிட்டியிலையை ஒரு றிப்போட்டரை வசிச்சிருந்திருந்தால் எங்கடை சோலி,ஈசியா முடிஞ்சு போயிருக்கும் எண்டு நினைக்கிற அளவுக்கு கதை களை கட்டும்.ஆனால் அரைவாசிக்கு மேலை அப்பிடி இப்பிடி வாற கதை தானேயெண்டு எங்களுக்கு நாங்களும் அதிலை நிண்டு கதைக்கிற அளவுக்கு வயசுக்கு வந்தாப் போலை தான் விளங்கிச்சுது. சிலவேளைகளிலை எங்கடை வெங்காயப் பயிர்ச்செய்கை தொடங்கினாப்போலை வந்து எங்கடை வாழ்வை நாசமறுத்தும் இருக்குது இந்த மழை.. விடாமல் நாட்கணக்கில் கொட்டித் தீர்த்து வெங்காயம் எல்லாம் வெள்ளத்திலை மூழ்கினாப்போல அந்த வெள்ளத்தை மிசின்(வோட்டர் பம்) வைச்சு இறைச்சு விடவேண்டிய துன்பிய்ல அனுபவமெல்லாம் எங்களுக்கெல்லாம் வந்திருக்குது.வெள்ளத்துக்கு வெங்காயமெல்லாம் அழுக, போட்ட முதலெல்லாம் தோட்டத்துக்கையே தாண்டுபோன சோகங்களும் எங்கள் வாழ்வில் உண்டு.விடாது கொட்டி,எங்கள் வெங்காயங்களை அழுகவைத்து,எங்கள் வெங்காயங்களின் நாற்றம் தாங்காமல் நாங்களே மூக்கைப் பொத்திக்கொண்டோடவேண்டிய துர்ப்பாக்கியநிலைக்கெல்லாம் ஆளாக்கியிருக்கிறது இந்த மழை.ஏன் இந்தமுறையும் கோடைக்காய் செய்யிற நேரம் கொட்டுகொட்டெண்டு கொட்டி,பயிரெல்லாத்தையும் அழிச்சுப் போட்டுது.இப்பவென்னடாவெண்டு பாத்தால் வழமையா வைகாசிப் பறுவத்துக்கே ஒரு அந்தர் ஐயாயிரத்தைத் தாண்டாத வெங்காயம்,இந்தமுறை மாரிக்காய் நடுகைக்கே எண்ணாயிரம்,ஒம்பதாயிரம் விக்குதெண்டால் பின்னைப் பாருங்கோவன்.

என்ன இருந்தாலும் ஊரிலை மழையெண்டால் அந்த மாதிரித் தான் இருக்கும்.அது ஒரு அழகிய மழைக்காலம் தான்.

முத்தம் - இந்த முத்தம் காதலர்கள் பரிமாறிக்கொள்வதல்ல.முற்றத்தின் ஈழத்துப் பேச்சு வழக்கு

பாறி - வேரோடு சாய்ந்து அல்லது வேர் அழுகி, இத்துப் போய் பெரு மரங்கள் விழுவதைக் குறிக்கப் பயன்படும்

பீலி - இரண்டு கூரைகள் சந்திக்கும் போது ஏற்படுத்தும் நீரோட்டத்தை ஏந்துவதற்குப் பயன் படுத்தப் படுகின்ற அமைப்பு. அத்தோடு பனக் கிழங்கின் தண்டும் பீலியென்றே அழைக்கப் படுவதுண்டு.

தாவாரம் - வீட்டு,கொட்டில் நிலத்துக்கும், கூரைக்கும் இடைப்பட்ட நிலப் பகுதி என்றும் சொல்லலாம்.

தூத்துவானம்/தூவானம் - மழைத்துளிகள் காற்றுக்கு சிறிதாக பறந்து வருதல்

அயத்துப் போதல் - மறந்து போதல்
யத்து - பாத்திரம்
பட்டடை - விறகுகள், பாத்திரங்கள்,வைக்கோல் போன்றவற்றை பக்குவமாக அடுக்கி வைக்கப் பயன்படும் அமைப்பு

மாடம் - இடம் என்றும் சொல்லலாம்.அடுப்புக்கு பின் பக்கம் உள்ள பகுதி தான் அடுப்பு மாடம் எனப்படும்.இதே போல் படமாடம் என்ற சொல்லும் உண்டு

வெக்கை - வெப்பம்
சக்கல் - சகதி
கிடை - நிலை என்றும் சொல்லலாம்.என்ன கிடை இது?அலங்கோலமாகக் கிடக்கும் போதுதான் இது பெரும்பாலும் பாவிக்கப்படும்

மழைக்காக்கும் - மழை என்ற படியால் தான் போலிருக்குது என்று விரித்து விளங்கிக்கொள்ளலாம்

தெம்பல் - வெள்ளத்தினுள் துள்ளிக் குத்த்து விளையாடுதல்
பராதி - வேலைப் பளுவில் கவனிக்காமல் விட்டு விடுதல் கொக்காரை,மூரி,மட்டை,பன்னாடை - பனையிலிருந்து கிடைக்கப்பெறும் விறகுப் பொருட்கள்

பிறத்தாலை - பிறகாலே/பின்னாலே
பேந்து - பிறகு
குறட்டி - உள்ளுக்குள் இழுத்து கை கால்களை மடித்து குளிரிலிருந்து தற்காத்துக் கொள்ளுதல்

நாளையிண்டை -நாளை மறுநாள்
கண்டுத்தாச்சி - கர்ப்பந்தரித்த மாடு
ஆற்றை - யாருடைய
ஒண்டுக்க்கு,இரண்டு,மூண்டு ஸ்வேற்றருகளையும் - வழமையாகப் போடுகின்ற ஒரு சுவேற்றருக்குப் பதிலாக இரண்டு,மூன்று சுவேற்றைகளைப் போடுதல் என்று விரித்து விளங்கிக் கொள்ளப்படலாம்

அவிட்டுவிட்ட ரீலை - புழுகு
பறுவம் - பூரணைதினம்
மேவி - மேலால் என்று தான் இங்கே பொருள் படும்.இன்னொரு பொருள் அவன் மேவி இழுத்திருக்கிறான் என்று அவனது தலை சீவப்பட்டிருக்கும் முறையையும் குறித்துநிற்கவும் பயன்படும்
Author: வடலியூரான்
•1:53 AM
திருவெம்பாவை எண்டு கேள்விப்பட்டிருக்கிறம்,இதென்ன திருவெம்பா?,இப்பிடியொரு சொல்லை நாங்கள் கேள்விப்படவேயில்லையே எண்டு உங்களிலை கொஞ்சப் பேர் நினைக்க வெளிக்கிட்டுடிவியள் எண்டு எனக்குத் தெரியும்.இரண்டும் ஒண்டு தான்.அந்த "வை" யை உச்சரிக்கிறதிலை எங்களுக்கு ஒரு பஞ்சி.பின்னை அது தான் திருவெம்பா எண்டு சொல்லித் தான் சொல்லுவம்.


மார்கழி மாசத்திலை தான் திருவெம்பா வரும்.அதுவும் அந்தக் குளிருக்கை விடிய வெள்ளனவெல்லாம் கோயிலுகளிலை பூசைகள் நடக்கும்.இந்தமுறையும் திருவெம்பா தொடங்கப் போகுதாம் எண்டு போன வெள்ளிக்கிழமை பம்பலப்பிட்டிப் பிள்ளையார் கோயிலிலை அறிவிச்சது என்ரை காதிலை கேட்டிச்சுது.அது தான் எனக்கும் முந்தின எங்கடை காலத்து திருவெம்பாப் புதினங்களை ஒரு பதிவா எழுதிப் போடுவம் எண்டொரு யோசனை வர,சட்டுப் புட்டெண்டு இந்தப் பதிவை எழுதிப் போடுறன்.



திருவெம்பா எண்டு சொல்லிச் சொன்னால் ரண்டு விசயம் ஞாபகத்துக்கு வரும்.ஒண்டு எல்லாக் கோயிலிலையும் அவல்,கடலை எண்டு கன சாமானுகள் சாப்பிடக் குடுப்பினம்.மற்றது சங்கூதிப் பண்டாரம்.முதல்லை அவல்,கடலை அலுவலைப் பாத்திட்டு,பிறகு சங்கூதிப் பண்டாரத்தைப் பாப்பம்.ஏனெண்டால் சாப்பாட்டை காத்திருக்க வைக்கக் கூடாதெண்டு சொல்லுவினம்.



முந்தியெல்லாம் சின்னனிலை, ஒராம்,இரண்டாம் வகுப்புப் படிக்கேக்கை,திருவெம்பாக் காலத்திலை விடியக் காலமை 5 மணிக்கே அம்மாவோ,அம்மம்மாவோ அடிச்சு எழுப்பிப் போடுங்கள்."அங்கை கோயில்லை பூசையாகுது.இஞ்சை நீ படுத்துக் கிடக்கிறாய் எண்டு விடியவெள்ளனவே பேச்சு விழத் தொடங்கீடும். நாங்களும் எழும்பி,நித்திரை தூங்கித் தூங்கிப்,பல்லை மினுக்கி,முகத்தைக் கழுவிப் போட்டு,குளிக்கப் பஞ்சியாயுமிருக்கும் அதே நேரம் பயங்கர குளிராயுமிருக்கும்,குளிக்கவே மனம் வராது எண்டாலும் சும்மா ஒரு போமாலிற்றிக்காக(formality)கேக்கிறது.."... என்ன குளிக்கிறதோ.." எண்டு..."...ஆய்.. சின்னப் பிள்ளையள் தானே.. அது காரியமில்லை.." முகத்தைக் கழுவிப் போட்டுப் போ எண்டு அம்மம்மா சொல்லுவா.சிலவேளை அம்மா சுடு தண்ணி வைச்சுத் தருவா.அதுக்கை கொஞ்சம் பச்சைத் தண்ணியை விட்டு,ஒரு வாளிக்கை கலந்து போட்டு,ஒரு வாளித் தண்ணியிலையே குளிச்சுப் போட்டுக் கோயிலுக்குப் போறது.எப்பிடிப் பாத்தாலும் சிலவேளையிலை அரைக் குளிப்பு இன்னும் சில நாள் அதுவும் இல்லை.அவ்வளவு தான்.



பண்டாரி அம்மன் கோவிலை 5 மணிக்குப் பூசை தொடங்கும்.அங்கை தான் முதல்ப் போவம்.ஒரு லக்ஸ்பிறே அல்லது அங்கர் பாக்(Bag) ஐயும்(அந்தக் காலங்களிலை உந்தச் சொப்பின் பைகளின்டை பாவனை மிச்சும் குறைவு)மடிச்சுக் காச்சட்டைப் பொக்கற்றுக்கை வைச்சுக் கொண்டு தான் இந்த வானரப் படையள் கோயிலுக்குப் படையெடுக்குங்கள். போனவுடனை பாக்கிற முதல் வேலை இண்டைக்குச் சுவாமிக்கு என்ன படைச்சுக் கிடக்கிறது எண்டு பாக்கிறது தான்."...ஆ .ஆ.கடலை கிடக்குது..அவலுக்கு கக்கண்டு போட்டு வைச்சிருக்கினம் போல கிடக்குது...வெள்ளையாக் கிடக்குது...இஞ்சாலை கிடக்கிறது சக்கரைப் பொங்கல்...மோதகமும் கிடக்குது.கனக்கக் கிடக்குது... ஆளுக்கு ரண்டுப் படி குடுப்பினமோ...?அதுக்கிடையிலை கணக்குப் போட்டுப் பாக்கிறது..கோயிலிலை ஒரு 50,60 சனம் நிக்குது..எல்லாருக்கும் ரண்டுப் படி குடுத்து,பேந்து உபயகாரரும் தங்கடை வீட்டையும் கொஞ்சம் மோதகம் கொண்டு போகோணும்.. அப்பிடிப் பாத்தால் உவ்வளவும் காணாது.ஒரு வேளை ஐயர் உபயகாரருக்கெண்டு புறிம்பா உள்ளுக்கை ஒளிச்சு வைச்சிருக்கிறாரோ தெரியாது...சரி அதை விடுவம்...பெரியாக்களுக்குக் குடுக்காட்டிலும் சின்னப் பெடியளுக்கெண்டாலும் குடுப்பினம்...ம்.. பாப்பம்.பிறகு இஞ்சாலை வைரவருக்கு,சின்ன வடை மாலை தானே போட்டுக் கிடக்குது.உந்த வடை மாலையிலை 20 வடையும் வராது போல கிடக்குது.அப்ப உதைச் சனத்துக்குக் குடுக்க மாட்டினம் போல கிடக்குது.அங்காலை 2 தாம்பாளத்துக்கை கதலி வாழைப் பழமும் அடுக்கி வைச்சுக் கிடக்குது.அப்ப அதுவும் குடுப்பினம்.இந்த மனக் கணிப்பெல்லாம் கோயிலுக்குப் போன கையோடையே நாங்கள் செய்து போடுவம்.




அங்காலை ஒரு பக்கத்தாலை பூசையள் நடந்து,திருவெம்பாப் பாட்டுப் படிக்க வெளிக்கிட்டிடுவினம்.சிலவேளை ஐயரே படிப்பார்.இல்லாட்டில் ஆம்பிளையள், பெடியள்,பொம்பிளையள் எண்டு நல்லா "..ஆ. ஆ..." எண்டு இழுத்துப் பாடக் கூடினாக்கள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பாட்டா,ஒரு ஓடரிலை படிப்பினம்."...ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெருஞ் சோதியை யாம் பாடக் கேட்டேயும்." எண்டு தொடங்க,எங்களுக்கு,"எப்ப உந்தப் பாட்டெல்லாம் முடிச்சு அவல் கடலை தரப் போறியள் எண்டு யோசனை ஓடிக் கொண்டிருக்கும்.



இடையிலை ஒரு பாட்டிலை ஒரு வரி வரும்..".. போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம்.." எண்டு.நாங்கள் சின்னப் பெடியள் உதைக் கேட்டிட்டு, எங்களுக்கை சிரிச்சுக் கொள்ளுவம்.(பிழையா யோசிச்சுப் போடாதையுங்கோ.எங்களுக்கு உதை மாதிரி ஒரு கூடாத சொல்லொண்டிருக்குதெண்டு அந்தக் காலத்திலேயே தெரியும்.அவ்வளவு தான்.அட.. சொன்னால் நம்புங்கோப்பா.அடம் பிடிக்கிறியளப்பா..ம்ம்)அதெல்லாம் முடிஞ்சு,"போற்றி அருளகநின் ஆதியாம் பாதமலர்,போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்..........போற்றியாம் மார்கழி நீராடேல் ஓர் எம்பாவாய்.."எண்டு 20 ஆம் பாட்டும் முடிய பெடியளின்ரை முகத்தில சந்தோசத்தைப் பாக்கோணும்.அப்பா சொல்லி வேலை இல்லை.





பேந்தென்ன,திருநீறு,சந்தனம் எல்லாம் வாங்கிப் பூசி அடுத்த அற்றாக்குக்கு(Attack) றெடியாயிடுவாங்கள்.அடிபட்டுப் பிடிபட்டு,அந்த லக்ஸ்பிறே பாக்கை நிறைக்கிறதிலை தான் குறியாய் இருப்பம். எங்கடை ஊரிலை உள்ள கோயிலுகள் தங்களுக்கை ஒரு அகிறீமன்ற்(Agreement) வைச்சிருந்ததுகள் போல கிடக்குது.ஒண்டின்ரை பூசை முடியத் தான் மற்றதினரை பூசை தொடங்கும்.எண்டாத் தான் பக்த கோடிகள்(வேறை யார் அவல்,கடலைக்குப் ஓடிற நாங்கள் தான்)கோயிலுக்கு நிறைய வருவினம் எண்டாக்கும்.பண்டாரி அம்மன் கோயில் முடிய வைரகோயில்லை 6 மணிக்கும்.அது முடிய மாலந்தெணிப் பிள்ளையாரிலை 6.30 க்கும்,கடைசியா ஆலடிப் பிள்ளையாரிலை 7 மணிக்கும் பூசை நடக்கும்.



போகாத கோவிலெல்லாம் திருவெம்பாக்குத் தான் போவம்.ஒவ்வொரு கோயில்லையும் திருநீறு,சந்தன்ம் குடுக்க,திரும்பவும் ஏற்கனவே பூசிக்கிடக்கிற திறுநீறு சந்தனத்துக்கு மேலையே பூசுறது.காதிலை பூ வைக்க்கிறது பெரிய பாடாப் போடும்.முதல்க் கோவிலிலேயே பெரிய செம்பரத்தம் பூவையோ,தேமாப்பூவையோ காதிலை லௌட்ஸ்பீக்கரைஇ(Loud Speaker)கட்டிற மாதிரி வைச்சாப் பிறகு மற்றக் கோவிலிலை வாங்கிற பூவை எங்கை தலைக்கு மேலையே வைக்கிறது.அதிலையும் சில பேர் இரண்டு காதிலையும் ஒரு லௌட்ஸ்பீக்கரை முன்னுக்கும் மற்றதை பின்னுக்கும் பாக்கக் கட்டிற மாதிரி, முன்னுக்கும் பின்னுக்கும் பாக்கிற மாதிரி பெரிய செம்பரத்தம் பூவையோ,தேமாப் பூவையோ வைச்சுக் கொண்டு போவாங்கள்.ஒவ்வொரு கோயிலையும் போய் அங்கை தாற போவையும் காதிலை அடைவாங்கள்..ம்ம்ம்.



இப்பிடி எல்லாக் கோயில்லையும் வாங்கினதுகளை வீட்டை கொண்டு வந்து,சில வேளையில காலமைச் சாப்பாடே உதாத் தான் இருக்கும்.சிலவேளையில உதோடை சேர்த்து ஒரு றாத்தல் பாணோடை காலமை அலுவல் முடிஞ்சு போடும்.சாப்பிட்டு முடிய அந்த லக்ஸ்பிறே பாக்கெல்லாம் கழுவிக் கொடியில காயப் போட்டிடுவம்.பிறகு நாளைக்கும் எடுக்கலாம்(றீ ஊஸ் - Re Use)எண்டொரு முற்போக்கு சிந்தனை தான்.சில பேர் இதையே பள்ளிக் கூடத்துக்கு கட்டிக் கொண்டு வந்து இன்டேவலுக்கும்(Interval) சாப்பிடுவாங்கள்.இப்பிடியே திருவெம்பா போகும்.எங்களுக்கும் திருவெம்பாப் பூசை இருக்குது.முட்டிக்கொத்தாத்தைப் பிள்ளையாரிலை(முட்டிக் கொற்றவத்தைப் பிள்ளையார்)6 ம் பூசையும் மாயக்கைப் பிள்ளையாரிலை 7 ம் பூசையும் எங்கடை தான்.அந்த 2 நாளும் உபயகாரர் எண்டு எங்களுக்கு கொஞ்சம் கூட அவல்,கடலை,மோதகம்,வடை,பஞ்சாமிர்தம் எல்லாம் பூசைக்கு வந்த சனம் ஓரளவு போய் முடிய ஐயர் எடுத்துக் கொண்டு வந்து தருவார்.அந்த 2 நாளும் அலுக்க அலுக்கச் சாப்பிட உந்த அவல் கடலைப் பைத்தியம் எல்லாம் அதோடை தன்ரை பாட்டிலை நிண்டிடும்.உதைத் தான் சொல்லிறது, அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்செண்டு.உதெல்லாம் சின்ன வயசுச் சமாச்சாரங்கள்.




இனி சங்கூதிப் பண்டாரத்துக்கு வருவம்.சங்கூதிப் பண்டாரம் எண்டால் என்னெண்டு தெரியாதாக்களுக்காண்டி,திருவெம்பாக் காலங்களிலை ஊரிலை இருக்கிற பெடியள் எல்லாம் ஒரு குழுவாக சேர்ந்து விடிய வெள்ளன எழும்பி,சேமக்கலம்,சங்கு எல்லாம் ஊதிக்கொண்டு,திருவெம்பாப் பாட்டுப் படிச்சுக் ஒண்டு போறதை தான் சங்கூதிப் பண்டாரம் எண்டு எங்கடை ஊரிலை சொல்லுறது.நீங்களெல்லாம் வெடிவால் முளைச்ச வயசுகளிலை, உங்கடை ஊர் சங்கூதிப் பண்டாரங்களிலை ஊதப் போயிருப்பியள்.அது நல்ல பம்பலாத் தான் போகும்.எங்கடை ஊரிலையும் சங்கூதிப் பண்டாரத்துக்கு ஊத போற பெடியள்,ஊரிலை இருக்கிற மற்ற எல்லாக் கோயிலுகள்ளையும் இருந்து சேமக்கலங்கள்,சங்குகள்,ஒரு பெற்றோல் மாக்ஸ்,திருவெம்பாப் பாட்டுப் புத்த்கம் எல்லாம் எடுத்து வைச்சுக் கொண்டு எங்கடை ஊர் வாசிகசாலைக் கட்டிடத்துக்குள்ளை தான் படுப்பாங்கள்.



விடிய 2,3 மணிக்கு எழும்பி,அந்தப் பனிக்குளிருக்கை ஒராள் பெற்றோல்மாக்ஸ் பிடிக்க,இன்னொராள் பாட்டுப் படிக்க,ஒவ்வொரு பாட்டும் முடியிற இடைவெளிக்குள்ளை சேமக்கலம் அடிச்சு,சங்கூத கொஞ்சம்,பக்கப் பாடு,பம்பலுக்கெண்டு ஒரு மிச்சம் எண்டு ஒர் 15 - 20 ஒண்டாப் போகும்.ஊரிலை இருக்கிற எல்லா ரோட்டாலையும் 2,3 தரம் போய் ஊதிப் போட்டு,வந்து 4 ,5 மணிக்குப் படுத்திடுவாங்கள்.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டுக் காரர் பெடியளுக்கு ஒரு பெரிய கேத்திலுக்கை தேத்தண்ணியும்,கடிக்கிறதுக்கு,கல்பணிஸோ,மலிபன் பிஸ்கட்டோ இல்லையெண்டால் தட்டை வடையோ(அது தான் எங்கடை பருத்துறை வடை)குடுப்பினம்.



பம்பலாத் தான் இருக்கும்.வெடிவால் முளைச்ச வயசு தானே?வாசியாலைக்கை படுத்திருகேக்கை ஒருத்தன்ர சாரத்தை கலட்டிறது(ஆனால் எல்லாரும் உள்ளை காற்சட்டையும் போட்டு கொண்டு தான் வருவாங்கள்),காலைப் போடுறது,கையைப் போடுறது,நித்திரையைக் குழப்பிறது எண்டு கொசப்பு வேலையளுக்கும் குறைவில்லை.அதோடை சங்கூதிக் கொண்டு போகேக்கை றோட்டுக் கரையோடை காய்ச்சு நிக்கிற கொய்யா,மாதாளை,மாங்காய்,முத்தின வாழைக்குலையெல்லாம் இதோடை காணாமல்ப் போடும்.வாழைக்குலை முத்தாட்டிலும் பரவாயில்லை,திருவெம்பா தொடங்கிறதுக்கு முதல் வெட்டிப் போடோணும் எண்டு வெட்டிப் போடிறளவுக்குக் கூடச் சனம் இருக்குது.


அதோடை பட்ட சீசனும் தொடங்கீடும் எண்டதாலை(பட்டம் பற்றிய முந்தியதொரு என் பதிவு) வேலியளிலை கட்டி கிடக்கிற கமுகஞ்சிலாகையளும் திருவெம்ப்பாவோடை காணாமல் போடும்.அதோடை கடைசி,கடைசிக்கும் முதல் நாளுகளிலை ஒரு பறையை வாடகைக்கு எடுத்து சங்க்கூதிப் பண்டாரத்தோடை சேத்து அடிச்சுக் கொண்டு போற வழக்கமும் எங்கடை ஊரிலை இருந்துது.அந்தக் காலம் 50,100 ரூபா குடுத்தே ஒரு பறையை வாடகைக்கு எடுக்கலாம்.இப்ப 400,500 குடுக்கோணுமாம்.


பறையை ஒரு பெரிய கரியல் உள்ள சைக்கிளொண்டில்(உங்கடை அம்மப்பாமார்,அப்பப்பாமார் வைச்சிருந்திருப்பினம்.பெரிய வெங்காய மூட்டையள்,அரிசி மூட்டையள்,தவிட்டு,புண்ணாக்கு மூட்டையள் ஏத்திக் கொண்டு போகலாம்.இல்லாட்டில் குடும்பம் 4,5 பெடியள் எண்டு கொஞ்சம் பெரிசெண்டாலும் ஒரு பெரிய கரியல் பூட்டினால் தான் எல்லாத்தையும் ஒண்டா இழுத்துக் கொண்டு வல்லிறக்கோயில் மாதிரிப் பெரிய கோயிலுகளுக்குப் போகலாம்.)கட்டி,சும்மா பம்பலா அடிச்சுக் கொண்டு போறது.



ஆரும் பெரிசுகள்,பெடியளை வாசியாலையிலை வைச்சு அப்பிடி இப்பிடியெண்டு பேசியிருந்தால் அவற்றை வீட்டு வாசல்லை கொண்டு போய் விடிய வெள்ள்ன அவரை எழும்புமட்டும் அடிச்சு அவரை எழுப்பிறதுக்குத் தான் பறையடிக்கிறது.அப்பத்தான் அதுகளும் ,"உதகளுக்கேன் புத்தியைச் சொல்லுவான்,உதுகளைத் திருத்தேலாது" எண்டு யோசிக்குங்கள்.


நான் போனமுறை கனகாலத்துக்குப் பிறகு திருவெம்பாக்காலத்திலை ஊரிலை போய் நிண்டனான்.என்ரை ஒண்டை விட்ட அண்ணன் ஒருத்தன்.என்னை விட 3 வயசு கூட.அவன் இப்ப இருக்கிற சங்கூதப் போற பொடியளட்டைச் சொன்னான்"உந்தப் பறை கொண்டோய் அடிக்கிற குரங்குச் சேட்டையொண்டும் செய்யாதையுங்கோ.பாட்டை மட்டும் படிச்சுக் கொண்டு போங்கோ.ஊரிலை சனம் நிம்மதியாப் படுக்கிறேல்லையே?" அதுகளும் விட்டிச்சுதுகளே.உவரென்ன எங்களெக்குச் சொல்லிறது.இந்தமுறை உவற்றை வீட்டு வாசல்லை தான் கொண்டோய் வைச்சு அடிக்கிறது.


அவனுக்கும் தெரியும் தானே.அவனும் உவங்களின்டை வயசெல்லாம் கடந்து வந்தவன் தானே. அவனும் உப்புடி ஆற்றையோ வீட்டு வாசல்லை அடிச்சு ஆரையும் எழுப்பியிருந்திருப்பான் தானே.?பூவரசங் கம்பெல்லாம் முறிச்சு கேற்(Gate) வாசல்லை வைச்சிட்டுத் தான் படுத்தவன்.அவன்ரை வீட்டு வாசல்லை றோட்டுக்கு லைற்ற் போட்டு வைச்சிருக்கிறான்.ஆனால் அதுக்கு சுவிச் கறண்ட் எல்லாம் இவன்ரை வீட்டையிருந்து தான்.விடியக் காலமை வெள்ளன 3 மணிக்குப் போய் நிண்டு கொண்டு அவன்றை வீட்டு வாசல்லை நிண்டு அடிச்சிருந்திருக்கினம்.அவன் எழும்பி வந்து உள்மதிலடியில நிண்டு கொண்டு ஆராக்கள் எண்டெல்லாம் வடிவாப் பாத்துப் போட்டு,லைற்றை நிப்பாட்டிப் போட்டு,பூவரசங்க் கம்போடை மதிலாலை ஏறி றோட்டுக்குக் குதிச்சு,வெளு வெளு எண்டு வெளுத்தெடுத்துவிட்டான்.அவங்கள் சைக்கிள்,பறை எல்லாத்தையும் போட்டிட்டு,அங்காலை இருந்த வேலிக் கண்டாயங்களுக்குள்ளாலையும் மதிலாலையும் ஏறி விழுந்து ஓடித் தப்பிட்டாங்கள். ம்ம்ம்.. அப்பிடி இப்பிடியெண்டு திருவெம்பாக் கால ஞாபகங்கள் பம்பலா,பசுமையா,இப்பவும் கிடக்குது.ம்ம்ம்ம்ம்


புறிம்பு - புறம்பாக/வேறாக
தாம்பாளம் - நைவேத்தியம் சுவாமிக்குப் படைக்கப் பயன் படும் தட்டு
வாசியாலை - வாசிகசாலை
வல்லிறக்கொயில்- வல்லிபுரக்கோவில்
மாதாளை - மாதுளை
முத்தின - முற்றின
கமுகஞ்சிலாகையள் - கமுகம் சலாகை
காரியமில்லை - பெருந்தவறல்ல
சட்டுப் புட்டென - உடனேயே
சேமக்கலம் - ஒரு வகை கோயில் மணி என்று சொல்லலாம்
Author: வடலியூரான்
•3:00 AM
இதென்னடா இது அவனவன் சந்திரனுக்கும், செவ்வாய்க்கும் ரொக்கட் அனுப்பிற காலத்திலை வந்து நிண்டு கொண்டு கறண்டைக் கண்டு பிடிச்சாலும் பரவாயில்லை, கறண்ட் ஊருக்கை வந்ததையே ஒரு கதையெண்டு கதைக்க வந்திட்டானென்று நினைக்காதையுங்கோ.நாங்களாவது பரவாயில்லை உதையெண்டாலும் கதைக்கிறம்.இண்டைக்கும் கறண்டைக் காணாமல் குப்பி விளக்கிலை படிச்சுக் கொண்டிருக்கிற எங்கடை தம்பி,தங்கச்சிமார் எத்தினை பேர் இருக்கிறார்கள்.கறண்ட் வேண்டாம்.ஆண்டாண்டு காலமாய் ஆண்டு ஆண்டு வந்த எங்கன்றை சந்ததை அஞ்சுக்கும் பத்துக்கும் கையேந்தி,கஞ்சிக்கும் காத்திருக்கிற நிலைமைக்கு மாற்றிவிட்டார்கள்.அந்த தம்பியோ,தங்கச்சியோ நாளைக்கு இதைவிடப் புதுமியாய் கதை சொல்லும் போது நாங்களும் கேட்டு நிற்போம்.



எண்பதுகளில் இனப்பிரச்சினை முனைப்புப் பெறமுன்னர்,எமது ஊர்களிலெல்லாம் இலக்சபானாவில் இருந்து இருபத்து மணித்தியாலக் கறண்ட் இருந்ததாம்.எங்கள் தோட்டங்களுக்கெல்லாம் இரவிலே லைற்(light) வெளிச்சதிலை மோட்டர் பூட்டித் தான் தண்ணி மாறுகின்றனாங்கள் என்று எங்களின் மாமாமார்,ஊரின் அண்ணாமார் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறோம்.அதன்பிறகு இனப்பிரச்சினை முனைப்புப் பெற்றதன் பின்னர் கற்ண்ட் எங்களெல்லாருக்கும் 'கட்' பண்ணப்பட்டது.



அதனால் வீதிகளில் சும்மா நின்ற ரயின் தண்டவாளத்தைப் போன்ற இரும்பாலான கறண்ட் கம்பங்களை எல்லாரும் ஆளுக்காள் பிரட்டி,தேவையான அளவுகளில் வெட்டி வேலிகளூக்கு பொறுப்பான தூணாகவும்,ஆடு மாடு கட்ட கம்பியாகவும் என்று பல வேறு வழிகளில் பயன்படுத்தினார்கள்.வேலியின் மேலும் கீழும் கறண்ட் கம்பியை இழுத்துக்கட்டிய பின் மூரியை(பனம் மட்டை)அதிலே வரிந்தார்கள்.


கறண்ட் போஸ்ற்(post) இலிருந்த கப்பியைக் கழட்டி கிணத்திலே தண்ணி அள்ளப் பாவித்தார்கள்.ஏற்க்னவே கிணத்திலே கப்பி இருந்தவர்களூம்,துலா வைத்திருந்தவர்கள் கூட ஏன் ஓசியிலை கிடக்கிறதை சும்மா ஆரும் அள்ளிக் கொண்டு போகவிடுவானெனென்று மிஞ்சின கொஞ்ச நஞ்ச கப்பிகளையும் கொண்டு போய் வெங்காயக் கொட்டிலின் மூலைக் கைமரங்களிலே பவுத்திரமாகத் தூக்கி வைத்தார்கள்.இப்பிடி கறண்ட் ச்ப்ளை(supply) நிண்ட கையோடையே எங்கடை சனம் ஊரில நேற்று வரை கறண்ட் இருந்ததெண்டதுக்கு ஒரு சாட்சியமும் விடாமல் வழிச்சுத் துடைச்சு எல்லாத்தையும் கலட்டி,புடுங்கி எடுத்துக் கொண்டுத்துகள்.




நாங்களெல்லாம் பிறந்து 13, 14 வருசமாக கறண்டைக் கண்ணாலை கண்டது கூட இல்லை.கறண்ட் எப்பிடியிருக்கும், என்ன செய்யும் எண்டு கூடத் தெரியாத நாங்கள் கறண்டுடன் கற்பனையில் விளையாடினோம்.எங்கண்ரை வீட்டின் வெளி விறாந்தையோடிருந்த சுவிட்சை மேசைக்கு மேலை ஏறி மேல்நோக்கியோ, கீழ் நோக்கியோ போடுறது சரியென்று கூடத் தெரியாமல் ஏதாவது ஒரு பக்கம் தட்டிப் போட்டு "ஆ .... கறண்ட் .. வந்திட்டுதாம்..." எண்டு ஊரிலை எங்களைமாதிரி இருந்த எங்கடை வயசையொத்த குஞ்சு குருமனெல்லாம் விளையாடுவோம்.



வீட்டை கனகாலம் கறண்ட் இல்லாமல் இருந்ததால் பாவிக்காமல் பழுதாய்ப் போன ஒரு ரேடியோவும் இந்தியன் ஆமி தூக்கி எறிந்ததால உடைந்து போயிருந்த ஒரு பெரிய "பொக்ஸ்" ரேடியோவையும் தூக்கி வைத்துக் கொண்டு,எங்கன்றை தலைகளை ரேடியோக்களுக்குப் பின்னால் ஒளித்துக் கொண்டு, நாங்களே பாட்டுப் படிச்சு,நாங்களே மகிழவேண்டிய சூழல் எங்களுக்கு.table fan ஐ எடுத்து அதன் முன் கவரைக் கழட்டி விட்டு நாங்களே கையாலை சுத்தி காத்து வாங்கி விளையாடினோம்.


சீலிங் fan இன் தகடுகள் எங்கள் தோட்டங்களின் வாய்க்கால்கள் உடைப்பெடுக்காமல் இருக்க மடைக்கு அணையாக வைக்கப் பயன்பட்டுது. இப்பிடி ஊரிலுள்ள அனைவரினதும் முந்திப் பாவித்த மின்சார சாதனங்கள் எல்லாம் அவற்றின் சம்சாரமான மின்சாரமில்லாமல் போனதால் தூக்கியெறியவேணடிய நிலைக்குப் பழுதாகிப் போயிருந்தாலும் எல்லாரும் கறண்ட் வந்தால் போட்டுப் பார்த்துட்ட்டுச் செய்வம் எண்டிட்டு வைச்சிருந்தார்கள்.இப்பிடியிருந்த எங்கடை ஊருக்கு கறண்ட் வந்தால் எப்ப்டியிருக்கும்.



யாழ்ப்பாணம் இராணுவத்திடம் வீழ்ந்து 1,2 வருடங்களின் பின்னர் எல்லா இடங்களூக்கெல்லாம் கறண்ட் வழங்கும் வேலைகள் முடுக்கி விடப்பட்டன.அந்த வேலைகள் தொடங்கப்பட்டு 1, 1 1/2 வருடங்களின் பின்னர் திடீரென்று ஒருநாள் இலங்கை மின்சார சபையின் கன்ரரிலே கொங்கீரீற்றாலை அரியப்பட்ட லைற் போஸ்ற்களை கொண்டு வந்து கிறேனாலை இறக்கினார்கள்.ஊரிலை உள்ள எல்லாருக்கும் மின்சாரம் பாய்ஞ்சது போல இருந்தது.



கொண்டு வந்து இறக்கிய மின்சார சபையின் ஊழியர்கள் எல்லாருக்கும் நல்ல மரியாதை.அவர்களுக்கு தேத்தண்ணீ, வடை,விசுக்கோத்து,கல்பணிஸ்,வாழைப்பழம் எண்டு எல்லாம் கொடுத்து உபசரித்தார்கள் ஊரவர்கள்.கவனிப்போ கவனிப்பு அப்படியொரு கவனிப்பு.அவர்கள் அவர்கள் வாழ்க்கையில் அதற்கு முன்னர் அப்படியொரு கவனிப்பை கண்டிருக்க மாட்டடார்கள்.சரி போஸ்றைப் போட்டு விட்டுப் போய்விட்டார்கள். போஸ்ற்றுகள் போட்ட போட்ட படியே போட்ட போட்ட இடத்திலே போட்ட போட்ட படியே மாதக்க் கணக்கிலே இழுபட்டன.



பிறகொருநாள் கொஞ்சப் பேர் வந்து போஸ்ற்றுகளை நடுவதற்கு கிடங்கு கிண்டினார்கள்.மீண்டும் பிரமாதமான் உபசரிப்பு அவர்களூக்கு.மறுபடியும் போய் விட்டார்கள்.மழை வந்து வெள்ளத்தால் நிரவுப் பட்டன கிடங்குகளெல்லாம்.மீண்டும் இடைவெளி.மீண்டும் காலம் கடந்து வந்து அந்தப் போஸ்ற்றுகளை நட்டு விட்டுவிட்டுப் போனார்கள்.நாட்கள் உருண்டன.


கறண்ட் கம்பியிழுக்க காலம் கனியவில்லையெண்டு எங்கள் காத்திருப்பை நீட்டி மேலும் பார்த்திருக்கச் செய்தார்கள்.ஒரு மாதிரி கறண்ட் கம்பி இழுக்கப் பட்டாலும் பிரதான வீதியிளுள்ளவர்களுக்கே முதலில் இணைப்பு வழங்கப்பட்டதால் துணை வீதியொன்றிலிருந்த எங்களுக்கு கைக்கெட்டிய கறண்ட் வாய்க்கெட்டாமல் போனது பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.


இந்தக் கறண்ட் கூட ஒன்றும் இருபத்துமணித்தியாலமும் தொடர்ச்சியாக வருகின்ற கறண்ட் இல்லை.எங்களூருக்கும் எங்கள் அயலூர்கள் சில்வற்றுக்கும் சேர்த்து ஒரு ஜெனெரேற்றரை எங்களூரிலே பொருத்தி அதிலிருந்து எல்லா ஊர்களுக்கும் மின்சாரத்தை ஒன்றைவிட்ட ஒரு நாள் இரவு ஆறு மணியிலிருந்து பத்து மணி வரையும் காலை நாலரை மணியிலிருந்து ஆறு மணிவரையும் ஏதோ கறண்ட் என்ற பெயரில் காண்பித்தார்கள்.


பிரதான வீதியோடிருந்த சிவா அண்ணை என்பவரின் வீட்டிலிருந்து அவரின் வீட்டில் உள்ள ஒரு கோல்டரில்(holder) ஒரு அடப்ரரைக்(adapator) கொளுவி அதன் மற்ற முனையில் இன்னுமொரு அடப்ரரைக் கொளுவி எங்கள் வீட்டுக் ஹோல்டரிலே கொண்டு வந்து சொருகினோம்.எங்கள் வீட்டிலே லைற் எரிந்த அந்த அருமையான நேரம் இன்றும் என் கண் முன்னே நிற்கின்றது. நாங்க்ள் போட்ட கூச்சல்களூம்,துள்ளல்களூம் கும்மாளங்களும் பக்கத்து வீட்டுக் காரர்களுக்கெல்லாம் சொல்லாமலே காட்டிக் கொடுத்தது எங்கள் வீட்டிலே கறண்ட் வந்த சேதியை.


அடுத்த நாள் பள்ளிக் கூடத்திலும் ரியூசனிலும் காணூமிடமெங்கும் நண்பர்களிடமெல்லாரிடமும் எங்களுக்கு கறண்ட் வந்த சேதியை சொல்லி மகிழ்ந்ததையெ்ல்லாம் நினைக்க இன்று சிரிப்பாக இருக்கினறது.பின்னர் சிறிது காலத்தின் பின்னர் எங்களுக்கும் நேரடி இணைப்புக் கிடைத்தது.இணைப்புப் பெறாமல் பலர் சட்டவிரோதமாக கறண்ட் கம்பியிலேயே ஒரு கொக்கைத்தடியாலை பக்குவமாகக் வயரைக் கொழுவி direct ஆக கறண்ட் எடுக்கத் தொடங்கினதாலை இரவிலையெல்லாம பல்ப்(bulb) இன் இழை தணல் மாதிரி சிவப்பாத் தான் எரியும்.ஆகக் கூடின பவர் அதுக்கு அவ்வளவு தான்.வெளிச்சமே இருக்காது.ஏனாடா இதுக்கு கறண்டை தருவதை விட தராமலே இருந்திருக்கலாமே ஏன்று கூட யோசிக்கத் தோன்றும்.



ஒன்று இரண்டு வருடங்களின் பின்னர் 24 மணித்தியாலக் க்றண்டும் வந்தது.24 மணித்தியாலக் கறண்ட் வந்த செய்தி கேட்டு ரியூசனாலே சைக்கிளில் கூவிச் சென்று சுவிட்சைப் போட்டுப் பார்த்ததெல்லாம் பசுமரத்தாணி மாதிரி மனசிலை பதிஞ்சிருக்குது.ஆனாலும் இன்றுவரைக்கும் 24 மணித்தியாலம் என்று சொன்னாலும் கூட இரவிலே மின்னி மின்னி எரியும் அல்லது இரவிலே 'கட்' ப்ண்ணுப்படும்.


ஆனால் ஐஞ்சு நிமிசம் கறண்ட் போனாலே அஸ்ஸு, புஸ்ஸூ, ஐயோ என்று என்று a/c க்காகவும் serial பாக்கிற பொம்பிளையள் கத்திறதியும் பார்க்கேக்கை அவையெளெல்லாரையும் எங்கடை சன பட்ட, படுகிற கஸ்ரங்களையெல்லாம் கொண்டு போய்க் காட்ட வேணும் மாதிரிக் கிடக்குது.எங்கன்ரை எல்லாச்சனமும் எப்பதான் கறண்ட் மாதிரி எல்லா வசதியும் கிடைச்சு சுயமா சுதந்திரமா நிம்மதியா வாழுறது எண்டு தெரியாமல் கிடக்குது
Author: வடலியூரான்
•2:55 AM
மொறட்டுவைப் பல்கலைக் கழகத்தின் பொறியியல் பட்டப்படிப்புக்காக வீட்டைவிட்டு,குடும்பம்,உற்றார்,உறவினர்,ஊரவர்,நண்பர்களை,நண்பிகளைத் தவிக்க விட்டுவிட்டு வெளிக்கிட்டு கடந்த மாசி 8ம் திகதியுடன் ஐந்து வருடங்களாகிவிட்டது.வீட்டுச்சாப்பாட்டை மறந்து,கிணற்றுக்கட்டுக்கருகில்,ஒரு ஈச்சாரில்(எஅச்ய் சைர்)கிணற்றைச் சுற்றிநின்ற கமுகு,வாழை,தென்னையின் காற்றோடு சேர்ந்து சத்தமே போடாமல் வருகின்ற நித்திரை கொண்டெளும்பிய நாட்களைத் தொலைத்து ஆண்டுகள் ஐந்து அஸ்தமித்துவிட்டது.



கோயில் மறந்து,குளம் மறந்து,காலைநேரத் தேத்தண்ணி மறந்து,பின்னேர கள்ளப்பணியாரம், காலமைச் சாப்பாடு,கோயில்த் திருவிழாக்கள், கலியாண வீடுகள்,சாமத்திய வீடுகள்,செத்த வீடுகள்,ஊரில உள்ள எல்லா நல்லது கெட்டதுகள் எல்லாம் மறந்து,மறக்கச்செய்து மறைந்துவிட்டன அவுருதுக்கள்(வருடங்கள்) ஐந்து. இந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு கஸ்டங்களைப் பட்டாலும் சாப்பாட்டுக் கஸ்ரம் பற்றி அலசவே இந்தப் பதிவு. நான் மட்டுமல்ல என்னைப் போல எத்தனை எத்தனை ஆயிரம் இளைஞர்கள்(யுவதிகளும் தான்) உயர்கல்விக்காகவும் வேலை வாய்ப்புகளுக்காகவும் இழக்க முடியாதவற்றையெல்லாம் இழந்து நகரங்களிலும் பல நாடுகளிலும் தஞ்சம் புகுந்திருக்கின்றனர்.புகுகின்றனர்.




மாட்டுக் கொட்டிலுக்குப் பக்க்கத்திலை மாட்டுமூத்திர மணத்தோடு படுக்கச் சொன்ன மாட்டு மணம் படைத்த எத்தனை வீட்டுக்காரகளைப் பார்த்துக் கொதித்தெழுந்திருக்கிறார்கள்.fan ஐப் போடாதே,இப்பிடி தண்ணியை அள்ளி ஊத்தி ஊத்திக் குளிக்காதே.லைற்றை நிப்பாட்டிப் போட்டுக் கெரியாப் படு.இத்தனை மணிக்கு முதல் வீட்டை வந்து போடோணும்.இல்லையெண்டால் கதவைப் பூட்டிப் போடுவன்.தெரிந்தவன் ஒருத்தனையும் வீட்டுக்கை விடக் கூடாது.பெத்த அப்பனெண்டாலும் பரவாயில்லை.ஒருத்தரும் வரக் கூடாது என்று எத்தனை எத்தனை கட்டுப் பாடுகள் எல்லாம் கை நிறைய அட்வான்சை, வாடகையைப் புடுங்கிய பின்னும்.இவற்றைத் தான் ஓரளவு பல்லைக் கடித்துக் கொண்டு சமாளிக்க வெளிக்கிட்டாலும் சாப்பாட்டுக் கஸ்ரம் அதை விடக் கொடுமையானது.


நாக்குக்கு ருசியா நல்ல சாப்பாடு சாப்பிடாமல் விட்டே நாக்கு வறண்டு போட்டுது.உப்புச் சப்பில்லாத இங்கத்தைச் சாப்பாட்டிலை இப்ப உப்பில்லையெண்டோ புளி குறைவெண்டோ தெரியாத அளவுக்கு நாக்குக்கு ருசி மறந்து போச்சுது.நாங்கள் தான் ஓரளவு பரவாயில்லை.ஒரு நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்ந்து, ஓரளவு எங்கடை சனம் வசிக்கிற பிரதேசங்களில் வசிக்கின்றோம்.ஆனால் புலம் பெயர்ந்து குளிரிலும், பனியிலும் வேறொருவனின் நாட்டிலே எம் உறவுகள்,நட்புக்கள் படும் கஸ்டங்களை எண்ணிப் பாருங்கள்.எவ்வளவு அல்லல் பட்டுக் கொண்டிருப்பார்கள் அவர்கள். எல்லாக் கஸ்ரங்களும் எமக்காக, எம்மைச்சார்ந்தவர்களுக்காக என்று நினைக்கும் போது நொடிப் பொழுதில் மறந்துவிடுகின்றன அந்தத் துன்பங்களெல்லாம்.சரி விசயத்திற்கு வருவோம்.



வடிவேலுவின்றை பாசையிலை சொன்னால் "நாங்களெல்லாம் கோதம்ப மாப் புட்டை நீத்துப் பெட்டியோடை டிறெக்ராக்(Direct) கோப்பைக்கை கொட்டிக் குழம்பை விட்டுக் குழைச்சடிக்கிறாக்கள்.ஒடியல் புட்டு, குழம்புக்கை தாண்டு போறமாதிரி கறியை அள்ளி உண்டன விட்டுக் குழைச்சு,சாப்பிட்டாப் போலை கையில கிடக்கிற மிச்ச சொச்சத்தையும் விடாமல் நக்கி,வழிச்சுத் துடைச்சுச் சாப்பிடிற ஆக்கள்.பழஞ்சோத்துக்கை உப்பும் கறித்தூளும் போட்டுப் பினைஞ்சு அதை கவளங் கவளமா எடுத்து கறிமுருங்கை இலையிலை வைச்சு,மற்றக் கையிலை பச்சைமிளகாயையும் வெங்காயத்தையும் கடிச்சுக் கடிச்சு சாப்பிட்டு வளந்து வந்த ஆக்கள்.உழுத்தம்மாக் கழி, ஒடியல் கூழ்,எள்ளுப்பா, ஆலங்காய்ப் புட்டு,பொரி விளாங்காய்,பைத்தம் பணியாரம் எண்டு விதம் விதமா, பதம் பதமா, இதம் பதமாச் சாப்பிட்ட எங்களுக்கு இஞ்சத்தைப் பச்சைத்தண்ணிச் சாப்பாடு பிடிக்காமல் போறதிலை நியாயம் இல்லாமலும் இல்லை.(வடிவேலு ஓவரதான் பந்தா விட்டிட்டுதோ)



அறைகளில் தங்கிப் படிக்கும் போது காலமையிலை யார் சாப்பாடு எடுக்கப் போறானோ அவன்ரை தலையிலை எங்கடை சாப்பாடு கட்டும் பொறுப்பையும் சேர்த்துக் கட்டிவிட மற்றவர்களெல்லாம் காத்துக்கிடப்போம்.பாவம்.அவனும் ஒருநாள்,இரண்டு நாள் என்றால் எடுக்கலாம்.ஒவ்வொருநாளும் என்றால் பாவம் அவனும் என்ன செய்யிறது.அவனொண்டும் போடுதடியில்லையே.மனுசன் தானே.சில நாட்களில் தனக்குப் பசித்தாலும் இண்டைக்கு எனக்குப் பசிக்கவில்லை.நான் இண்டைக்கு சாப்பாடு எடுக்கப் போகவில்லை எண்டு சொல்லி நிண்டு போடுவான்.நாங்களும் வீறாப்புக்காண்டி எங்களுக்கும் பசிக்கவில்லை எண்டு நடிச்சுக் கொண்டு,பட்டினி கிடக்க வெளிக்கிட்டாலும்,வயிறு அடிக்கடி சத்ததைப் போட்டுக் காட்டிக்கொடுத்துவிடும்.வயித்திலையிருந்து அந்த பசிக்குரிய ஓமோன்கள் வரேக்கை வாற எரிவை பச்சைத்தண்ணியைக் குடித்து அணைத்திருக்கிறோம்.



சிலவேளைகளில் சமபோசவோ(ஒரு வகை உடனடி காலை உணவு - Instant food)மலிபன் பிஸ்கட்டோ காலைப் பசியைச் சமாளிக்கப் போராடியிருக்கின்றன.இன்னும் சிலவேளைகளில் மகீ நூடில்சை சுடுதண்ணியிலை ஊறப்போட்டிட்டு வெறுமனே சாப்பிட்டிருப்போம்.மத்தியானங்களில் மச்சச் சாப்பாடு என்றால் கொஞ்சம் பரவாயில்லை.விலையைக் கேட்டால் தான் விக்கல் வருகின்ற போதும் வீணாய்ப் போன வயிற்றுக்கு அது விளங்குவதில்லையே.



சாப்பிட கடைக்குப் போனாலும் அங்கையும் சுகாதாரம் ஒரு மருந்துக்கும் கிடைக்காது.சாப்பாட்டுக் கடையின் பின்பக்கம் போய்ப் பார்த்தால் விளங்கும் சாப்ப்ட்டுக் கடையினதும் சமையற்காரனதும் சுத்தத்தை. கோழிக்கறிக்காக நாய்,காக இறைச்சிகளையும் கோழியிறைச்சியிலை கோழிச்செட்டை உரிக்காமல் வந்த சந்தர்ப்பங்களை எதிர்கொண்ட துன்பியல் அனுபவங்கள் எங்கள் நட்புக்களுக்கு உண்டு.ஆனால் புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்று கிடக்கின்ற தாவரபோசணிகள் தான் சரியான பாவம்.பருப்புக் கறியுடனும் பொள் சம்பலுடனும்(தேங்காய்ச் சம்பல்)சம்பாச் சோற்றை ஒவ்வொரு பருக்கைகளாக பொறுக்கிப் பொறுக்கி ஒவ்வொன்றாக எண்ணி எண்ணிச் சாப்பிடும் அவர்களைப் பார்க்கும் போது தான் படுபரிதாபமாக இருக்கும்.




பின்னேரம் தேத்தண்ணி குடிக்கலாம் எண்டு போனால் பால்தேத்தண்ணி அம்பது ரூபா எண்டும் பருப்புவடை 35, 40 ரூபா எண்டும் விலையைக் கேட்டவுடனேயே எச்சிலை மிண்டி விழுங்கி தேனீர் குடித்ததாக நினைத்துக்கொண்டு கடையை விட்டுப் போறாக்கள் கனபேர். இரவுச் சாப்பாடு எண்டால் இரண்டு ரூபாக்குத்தியைவிடக் கொஞ்சம் பெரிய சைசிலை(size) இடியப்பத்தை வைச்சுக்கொண்டு 5, 6 ரூபாக்கு வித்துக் கொள்ளை லாபம் அடிப்பாங்கள்.அதை ஒரு நுனியிலை தூக்கி வைச்சுக் கொண்டு இதென்னடா இதுக்குப் போய் 5 ,6 ரூபாவோ எண்டு யோசிச்சால் முன்னலை இருக்கிறவன் ஏதோ தன்னை இடியப்ப ஓட்டைக்குள்ளாலை நோட்டம் பாக்கிறான் எண்டு மற்றப் பக்கத்தாலை துள்ள வெளிக்கிட்டிடுவான்.அது பெரிய கரைச்சலாப் போடும்.


சொதியைப் பாத்தால் பச்சைத்தண்ணிக்குள்ளை மஞ்சளைப் போட்டுக் காய்ச்சின மாதிரி இருக்கும்.மத்தியானம் மிஞ்சின எல்லாத்தையும் ஒண்டாக் கலக்கி ஒரு சாம்பார் எண்டு கொண்டு வந்து கேட்காமலே "அவக்" கெண்டு ஊத்துவாங்கள்.இரண்டு நாளைக்கு முதல் மிஞ்சின வடையெல்லாத்தையும் வடிவா மிக்சியிலை போட்டு அரைச்சு, கோழிமுட்டை சைசிலை வடை எண்டு சொல்லிக்கொண்டு 35,40 ரூபாக்கு விப்பாங்கள்.இப்பிடி இவங்கள் அடிக்கிற பகல்கொள்ளையளை என்னெண்டு சொல்லிறது. சரி காசு தான் போனால் போகட்டும் எண்டு சாப்பிடப்போனால் அதிலை ருசியும் இல்லை.ஒரு கோதாரியும் இல்லை.



சரி இவ்வளவும் சொல்லிற நாங்கள் சாப்பாடெண்டால் சிந்தாமல் சிதறாமல் சாப்பிடிற ஆக்கள் எண்டு நீங்களே நினைச்சால் நாங்கள் என்ன செய்யிறது. வீடுகளிலை இருந்த நாளிலையெல்லாம் நாங்கள் வீட்டுச் சாப்பாட்டை அமிர்தமா நினைச்சு,கொட்டாமல்,சிந்தாமல் சாப்பிடிறமோ எண்டால் அது இல்லை.இதிலை உப்புக் கரிக்குது.அதிலை புளி இல்லை எண்டு ஆயிரத்தெட்டுக் காரணத்தைச் சொல்லி வீட்டை இருக்கு மட்டும் வீட்டுச் சாப்பட்டுக்கு குறை சொல்லிப் போட்டு கடைச் சாப்பாட்டுக்கு நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலையிறது.



அங்கெல்லாம் சாப்பாட்டுகளைத் தட்டிக் கழித்திருக்கிறோம்.தூக்கி எறிந்திருக்கின்றோம்.ஆனால் இன்று தரமான,ருசியான சாப்பாட்டுக்காக ஏங்குகின்றோம்.இன்று எம்மில் எத்தனை பேர் காலமைச் சாப்பாட்டைச் கடைக்கு நடந்து போகிற பஞ்சியில்,சாப்பாடு ருசியிலாததாலை சாப்பிட மனமில்லாததாலை சாப்பிடாமல் விட்டு இன்று அல்சர் மாதிரி வருத்தம் எல்லாம் வாங்கி வைத்திருக்கிறோம்?.இதனால் தானோ அன்று சொல்லி வைத்தார்கள் உப்பில்லாவிட்டால் தான் தெரியும் உப்பின் அருமை....!!!...வீட்டை விட்டு வெளிக்கிட்டால் தான் தெரியும் வீட்டுச் சாப்பாட்டினருமை.