Author: யசோதா.பத்மநாதன்
•6:32 AM

ஒருகாலம் அது!

முன் விறாந்தை வைத்த மதில் கட்டிய வீடுகளும் மான் கொம்பு பதித்த சுவர்களும் பின்னல் வேலைப்பாடு கொண்ட கதிரைகளும் (அதில் தவறாமல் ஒரு சாய்வு நாற்காலி கொலுவீற்றிருக்கும்) இரண்டு பக்கமும் திறக்கத் தக்கதாகப் திறம் பலகையில் செதுக்கிய சின்ன ஜன்னல் மற்றும் காத்திரமான உள்புறம் திறாங்கு வைத்த வெளிப்புறம் பித்தளைக் குமிழியும் திறப்புத் துவாரமும் கொண்ட கதவுகளும் இரவு நேரத்தில் மங்கலாக எரியும் மின் விளக்குகளும் ஒரு விதமான யாழ்ப்பாணத்து வாழ்வைச் சொல்லும்.

அது போல கிடுகு வேலிக்குள் அல்லது சுற்று மதிலுக்குள் சமத்தாக வீற்றிருக்கும் நாற்சார வீடுகளும் யாழ்ப்பாணத்துக்கு ஒரு தனிக் களையைக் கொடுத்திருந்தன ஒரு காலம். அது தொலைக்காட்சிகள் அற்றிருந்த காலம்.அப்போதெல்லாம் இரவுச் சமையலும் அடுக்களை வேலைகளும் முடிந்த பின்னால் பக்கத்து வீட்டுக்காரரும் கூடி இரவுச் சமா வைப்பது இப்படியான விறாந்தைகளில் தான். (சமா; கூடி நாட்டு நடப்புகள் மற்றும் விடயங்களைப் பேசுதல்)

அந்த வனப்பையும் வாழ்வையும் கொண்டிருந்த வீடுகளுக்குள் பந்திப்பாய்களும் அண்டா குண்டாக்களும் விஷேச தினங்களுக்காகத் தனியறையிலும் பறன்களிலும் வீற்றிருக்கும்.

அவற்றில் சில இங்கே:







கீழே இருப்பது புற்பாய். பந்திப்பாய் இதனைப்போல பாதியளவு இருக்கும். 

அது போல சீனத்து ஜாடிகளும் இருந்தன. அவை ஊறுகாய் மற்றும் பினைந்த புளி ஆகியன போட்டு வைக்கப் பயன் பட்டன.



குத்துவிளக்கொன்று சுவாமி அறையில் தவறாமல் இருக்கும்.ஆறு மாணிக்கு கால் முகம் கழுவி விளக்கேற்றி தேவாரம் பாடி படிப்பு மேசைக்கு போக வேண்டியது அனேகமாக எல்லாப் பிள்ளைகளுக்கும் பிறப்பிக்கப் பட்ட கட்டளையாக இருக்கும்.



அது போல மண்ணெண்ணையில் எரியும் ஒரு கைவிளக்கு எப்போதும் அடுப்படி பறனில் அவசர தேவைக்காக வீற்றிருக்கும்.


போருக்கு முன்பான யாழ்ப்பாண வீடுகளுக்கென்றிருந்த சில குண இயல்புகள் இவை.

படங்கள்:நன்றி கூகுள் இமேஜ்.

Author: ஜேகே
•12:52 AM


எல்லோருக்கும் வணக்கம்!

தமிழை இப்படியும் ரசிக்கலாம் என்று கற்றுத்தந்த எழுத்தாளர் சுஜாதாவுக்கும், கம்பவாரிதி இ.ஜெயராஜுக்கும் மானசீக வணக்கங்கள்.

காலை ஆறு மணி!
தலையில் துவாய்,
கருத்தரங்கு தமிழில் துவாலை என்று சொல்லலாமா?
யாழ்ப்பாணத்து பனியோடு முட்டி மோதி
ஊமல் கரியில் பல் துலக்கி,
கரண்டு போன மின்கம்பம்
பிடுங்கிய பீங்கானில் கிணற்று கப்பி.
டயர் வாரில் தேடா வலயம்
ஆழக்கிணற்றில் வாரும்போது
அரைவாசி தண்ணீர்
ஓட்டை வாளியால் ஓடிவிடும்.
முகம் கழுவி
சைக்கிள் எடுத்து
சந்திக்கடையில் உதயனும் ஈழநாதமும்,
புதன்கிழமை என்றால் ஞாயிறு வீரகேசரியும்!
அப்பாவுக்கு ஒன்று எனக்கொன்று
வாசிப்பதில் தொடங்கும் அனுபவம்!
பாடசாலை இடை வேளை,
பரியோவான் நூலகத்தில் மகாபாரத சித்திரக்கதைகள்!
அஞ்சாதவாசம் முடிகையில் மணியடிக்கும்
வகுப்பில் இருப்புக்கொள்ளாத தவிப்பு.
அது முடிந்த பின்னும் நூலகம்
தாமதமாய் வீடு போனமைக்கு அம்மாவின் திட்டு
திருட்டுத்தனமாய் கரையெல்லாம் செண்பகப்பூ!
ப்ரியா, பாவைவிளக்கு,
அவ்வப்போது அம்புலிமாமா.
ஆடிகொருமுறை சங்கர்லால்!
பொன்னியின் செல்வன்,
கடல்புறா, கடல்கோட்டை, குவேனி.
செங்கை ஆழியானையும் சுஜாதாவையும்
காரை சுந்தரம்பிள்ளையையும்
காதலித்து வளர்ந்த ஈழத்து இளைஞன்
புலம் பெயருகிறான்.
புலம் பெயர்ந்தவர்களின் தமிழ் படைப்புகளும் ஊடகங்களும் தமிழுக்கு வளம் சேர்க்கின்றனவா? இது கருத்தரங்கு தலைப்பு. பார்த்தால் ஏதோ சந்தேகத்தில் எழுந்த கேள்வி போல படுகிறது. சந்தேகம் தேவையில்லாதது. அவர்களும் பங்களிக்கத்தான் செய்கிறார்கள் என்று சொல்லுவோம் என்று நினைக்கும்போது ….. எனக்கும் அந்த பயம் தொற்றிவிட்டது!

புலம்பெயர் தமிழ் இலக்கியம் பற்றிய பார்வையை, ஈழத்து புலம்பெயர் தமிழ் இலக்கியம் என்ற ஒரு வட்டத்துக்குள் சுருக்கி இந்த கட்டுரையை சமர்ப்பிப்பது சில திசைதிரும்பல்களை தவிர்க்கும் என்று நினைக்கிறேன். ஈழத்து புலம்பெயர் தமிழர்கள், வணிக, தொழின்முறை, மேற்குலக கவர்ச்சி (western imperialism) சார்ந்து புலம்பெயரவில்லை என்று நம்புவதோடு! அவர்களின் புலம்பெயர்வுக்கு மூல காரணம் ஈழத்தின் போரியல் நிலைமையும், இனங்களுக்கிடையேயான காழ்ப்புணர்வும் அடக்குமுறைகளும் என்று இந்த கட்டுரை முடிவு பூணுகிறது. அதை முன்முடிபு என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
புலம்பெயர் இலக்கியம் என்றால் என்ன? என்ற ஆராய்ச்சிக்குள் நுழையும் போது, “ஜூதர்கள் உலகம் முழுவதும் பரவவேண்டும் என்பது கடவுளின் விருப்பம்” என்று கிறிஸ்தவத்து பழைய ஏற்பாட்டின் உபாகமம் 28:25 சொல்லும் ஒரு விஷயம்.
I dispersed them among the nations, and they were scattered through the countries; I judged them according to their conduct and their actions.
இதிலே dispersed என்ற சொல் அப்புறம் diaspora வாக மருவியதை குறிப்பிடவேண்டும். அப்படியான ஒடுக்கப்பட்ட இனங்கள், புறக்கணிக்கப்பட்ட இனங்கள் தம் தாயகம் தொலைத்து புலம் பெயர்ந்து அங்கே மெதுவாக இலக்கியம் படைக்கும்போது, அவற்றுக்கே உரிய தனித்துவ கூறுகள் அந்த வகை இலக்கியங்களில் செறிந்து கிடக்கும். புலம் பெயர் இலக்கியம் பற்றி கலாநிதி ஷாலீன் சிங் என்ற ஆராய்ச்சியாளர் இந்த விஷயங்களை அலசுகிறார்(Diaspora Literature- A Testimony of Realism).
“Diasporic writing is full of feelings of alienation, loving for homeland dispersed and dejection, a double identification with original homeland and adopted country, crisis of identity, mythnic memory and the protest against discrimination”
புலம்பெயர் இலக்கியம் என்பது, உணர்வுகளையும், ஒதுக்கிவைக்கப்பட்டு இருப்பதால் வரும் ஆற்றாமையையும், தாயகம் மீதான காதலையும், அவர்கள் சிதறிக்கிடப்பதால் வரும் அயர்ச்சியையும், அடையாளங்கள் சார்ந்த குழப்பங்களையும்(identity crisis), நனைவிடை தோய்தலையும், இனவேறுபாடு, காழ்ப்புணர்ச்சக்கு எதிராக கிளர்ச்சியையுமே தன்னகப்படுத்திக்கு கொள்கிறது என்கிறார். இந்த வகை கூறுகள் ஈழத்து இலக்கியங்களில், குறிப்பாக புலம்பெயர் ஈழத்து இலக்கியங்களில், அந்த படைப்பாளிகள் கொண்டிருக்கும் அதிகப்படியான எழுத்துச்சுதந்திரத்தால் ஆளுமைப்பட்டு கிடக்கின்றன என்பதில் ஐயமில்லை.

இந்த வகை அடைப்புக்குள் வரையறை செய்யப்படக்கூடிய இலக்கியங்கள் தமிழ் மொழிக்கு வளம் சேர்க்கின்றனவா? எந்த இலக்கியமும், எந்த படைப்பும் அது எழுதப்பட்ட மொழிக்கு வளம் சேர்க்கவேண்டும் என்ற எண்ணத்தில் எழுதப்படுவதில்லை. கம்பனும் புகழேந்தியும், பாரதியும், கல்கியும், கி.ராஜநாராயணனும், புதுமைப்பித்தனும், சுஜாதாவும், செங்கை ஆழியானும் தமிழ் வளர்க்க இலக்கியம் படைக்கவில்லை. இலக்கியம் அதற்கென்று இருக்கும் இலக்கு நோக்கி எழுதப்படுவதே. படைப்பாளியின் திறமை, மொழி ஆற்றல், புதுமை, நோக்கு இவையெல்லாம் அபரிமிதமாகும் போது, அந்த படைப்பு சிறப்படைகிறது. அந்த சிறப்பு, அதை போன்ற சக படைப்புகளின் சிறப்பு, அதன் வாசகர் பரப்பு இவை எல்லாமே சேர்ந்து, அந்த மொழிக்கு வலிமை தானாகவே ஏற்படுத்திக்கொடுகிறது.

தமிழ் எங்கள் மொழி. தமிழில் குறிப்பிடத்தக்க ஆளுமை இருக்கிறது. சிந்தனை இருக்கிறது. ஏராளமான எண்ணங்கள், அனுபவங்கள் இருக்கிறது. அதுவும் புலம்பெயர் இனமான பின்னர், சுமந்து வந்த, வரும் சிந்தனைகளும், சூழல், கலாச்சார மாற்றங்களால் காணும் அதிர்ச்சிகளும் ஏராளமானது. இவற்றுக்கு வடிவம் கொடுத்து, வாசிப்பவனுக்கு அந்த வடிவம் நோக்கத்தை கடத்திச்செல்லுமாறு எழுதும்போது அந்த படைப்பு இயல்பாகவே முழுமை அடைகிறது. இங்கே வலியுறுத்துவது என்னவென்றால் படைப்புகளின் நோக்கம் தமிழ் வளர்ப்பதாக இருக்கவேண்டியதில்லை. நல்ல படைப்புகள் இயல்பாகவே தமிழை வளர்க்கும். தமிழ் ஒன்றும் நிறுவனப்படுத்தப்பட்ட அமைப்பு கிடையாது. யாரும் நாம் தமிழ் வளர்க்கிறோம் என்று சொல்லிக்கொண்டு இலக்கியம் படைக்கவும் தேவையில்லை. நாம் நம் எண்ணங்களை, சிந்தனைகளை பகிர்வதற்கான ஒரு ஊடகம் தான் மொழி. எம் எண்ணங்களும் சிந்தனைகளும் அதை நாம் பகிரும் வண்ணங்களும் சிறப்படையும் போது தமிழுக்கு தானாகவே அந்த வளம் கிடைக்கிறது. செழிக்கிறது. ஆக எழுத்துக்குப்பைகளையும் இலக்கியத்தையும் பிரித்துணரவேண்டிய தேவை அவசியமாகிறது. அதுவும் குண்டுமணிக்குள் குப்பைகள் இருந்த காலம் போய் குப்பைகளுக்குள் குண்டுமணிகளை தேடும் நிலை. சவால் அதிகமானது.

நல்லதொரு படைப்பிலக்கியம் எழுதிவிட்டாலேயே அது தமிழுக்கு வளம் சேர்த்துவிடுமா என்றால் இல்லை. அது யார் வாசிப்பதற்காக படைக்கப்பட்டதோ அவர்களை சென்றடையவேண்டும். அங்கீகரிக்கப்படவேண்டும். கொண்டாடப்படவேண்டும். நாற்பதுகளில் உருவாகிய தமிழ் அச்சு ஊடகங்களின் மலர்ச்சி, திராவிட எழுச்சி, சிறுபத்திரிகைகள் என்பன வாசிப்பு பரம்பலை அதிகரித்தது. எழுத்தாளன் உருவாவதற்கு முதல் தகுதி அவன் வாசகனாய் இருத்தல் வேண்டும். வாசகர்கள் அதிகமானார்கள். அவர்களுள் இருந்து எழுத்தாளர்கள் உருவாகினார்கள். இந்திய சுதந்திரப்போராட்டத்தின் பின்னரான எழுத்தாளர்களுள் மகுடம் சூடியவர்கள் எல்லோருமே 60, 70களில் எழுத்துலகில் காலடி பதித்தார்கள். திராவிட இயக்க எழுச்சியை இந்த வண்ணாத்திப்பூச்சி விளைவின் முதல் படபடப்பாகவும் சொல்லலாம்.
ஈழத்து இலக்கியபரம்பலை இந்த அடிப்படையில் ஆராய்ந்தால், 1983 ம் ஆண்டை ஒரு முக்கிய திருப்புமுனையாக கொள்ளலாம். இது 1988இல் உமா வரதராஜன் எழுதிய “உள் மன யாத்திரை” என்ற சிறுகதை தொகுப்பில் இருந்து ஒரு பகுதி.
"ஊரடங்குச்சட்டம் பற்றி திடீர் என அறிவிப்பு வந்தது. வானொலியிலும் தொலைக்காட்சியிலும் ஒரே மாதிரி சொன்னார்கள். தொலைக்காட்சியில் இந்த அறிவிப்பை வாசிக்கவந்தவன் வளமையான ஒரு அறிவிப்பாளனும் இல்லை. அவன் தப்புத்தப்பாக அறிவிப்பை வாசித்தான். சந்தைக்கு போயிருக்ககூடிய தன் மனைவியை. பாடசாலைக்குப்போன தன் குழந்தைகளைப் பற்றி இந்த வேளையில் அவனுக்கு ஞாபகம் வந்திருக்கலாம்”
இந்த வகை புதுமையான, பல தளங்களில் யோசிக்கவைக்கும் எழுத்துக்கள் 80களில் ஈழத்தில் உருவானது. அதுவே 90களில் சற்றே உணர்ச்சி மேலிட்ட, புரட்சி, போர், இன ஒடுக்கல் சார்ந்த எழுத்துக்கள் நோக்கி தீவிரப்படுத்தப்பட்டது. இதிலே மூன்று வகை இலக்கியங்கள் இருக்கின்றன. புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் தோன்றிய இலக்கியங்கள். அவை கோட்பாட்டு ரீதியான எண்ணங்கள் சார்ந்து சிறிதும் பிறழாத எழுத்துக்கள். ஈழத்தின் ஏனைய பகுதிகளில் இருந்து உருவாகிய படைப்புக்கள் பல மதில் மேல் பூனை ரகம். 95ம் ஆண்டுக்கு பின்னரான செங்கை ஆழியான் எழுத்துக்களில் அந்த வித தயக்கம் கலந்த நடையை காணலாம். மூன்றாவது வகையான புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் தம் படைப்புகளில் முழு சுதந்திரத்தை அனுபவித்தார்கள்.
“கருவில் இருந்தென்
காதல் மனையாளின் வயிற்றில் உதைத்த
பயல் நினைவில் இருந்தென்
நெஞ்சிலன்றோ உதைக்கின்றான்
நமக்கிடையே ஏழு கடலும் இணைந்தன்றோ கிடக்கின்றது
விசா என்ற பெயரில்”
என்று மனைவி கர்ப்பமாக இருக்கும்போதே நோர்வே சென்று, விசா சிக்கலால் பிரிந்திருக்கும் கணவன் துயர் சொல்லும் ஜெயபாலன் கவிதைகள் இலக்கியத்தரம் மிகுந்து வெளிவந்தாலும், புலம்பெயர் இலக்கியங்கள் என்பது பொதுவாக போர், புரட்சி, கோட்பாடுகள், விரிசல்கள் சார்ந்த எழுத்துக்களால் ஆளப்பட்டு ஒருவகை வார்ப்புக்குள் சுருங்கிவிட்டது சோகமே.

2003/2004 ம் ஆண்டுகளுக்கு முன்னர் புலம்பெயர் இலக்கியம் ஒரு சில எழுத்தாளர்களால் ஆளப்பட்டு வந்தது. அந்தந்த நாட்டில் ஒரு பத்திரிகை. சொல்லப்போனால் இரண்டு பத்திரிகைகள். ஒன்று ஆதரிக்கும். மற்றையது எதிர்க்கும்! அவ்வப்போது ஆன்மீகப்புத்தகங்கள், கவிதைத்தொகுப்பு. ஈழத்து வாழ்க்கையை நினைத்து ஏங்கும் சிறுகதைத்தொகுப்புகள் என ஆர்வமுள்ள எழுத்தாளர்கள் தாமே பணம் கொடுத்து பதிப்பிக்கும் சோகம். இந்த வகை புத்தகங்களை வாசகன் தேடி தேடி அலைந்து திரிந்து வாசிக்கிறானா என்று கேட்டால் அயர்ச்சி தான் எஞ்சும். இணையத்தளங்களும் பத்திரிகை, சஞ்சிகை வடிவிலேயே இருந்ததால் எழுத்து சமவுடமைப்படுத்தபடாமலேயே இருந்தது. பத்திரிகைக்கு எழுதுவதில் இருக்கும் சிக்கலே இணையத்திலும் இருந்தது. பிரபலமான எழுத்தாளராய் இருத்தல் வேண்டும். அல்லது இணையத்தளத்து உரிமையாளருக்கு தனிப்பட்ட ரீதியில் தெரிந்தாவது இருக்கவேண்டும். அச்சு ஊடகத்தில் படைப்பு வந்திருக்கவேண்டும். அந்த ஊரில் இலவசமாக வெளிவரும் ஒரு தமிழ் பத்திரிகைக்கு அதன் கோட்பாட்டை மீறாதவாறு எழுதவேண்டும். வாசகர் வட்டம் என்று ஒன்று கிடையாது. இது எல்லாவற்றையும் விட சிக்கல், படைப்பை கணணி எழுத்துருவாக்குவது. தமிழ் விசைப்பலகை தொழில்நுட்பம் கடினமாக இருந்த காலம். எழுத ஆர்வம் இருப்பவனும் இந்தவகை சிக்கல்களால் வாளாமல் இருந்த காலம். தொழில்நுட்பம் தெரிந்து இலக்கியம் புரியாத பலர் எழுதிக்கொண்டிருந்த காலம் அது. அப்போது தான்,
“சற்றுநேரம் என்னையே பார்த்துக்கொண்டு நின்றவள், எனக்கு மிகவும் பரிச்சயமானவள் போல ரகசியக்குரலில், “இந்தபூனை குட்டியாக இருந்தபோது ஆணாக இருந்தது. திடீரென்று ஒரு நாள் பெண்ணாக மாறிக்குட்டி போட்டு விட்டது” என்றாள். பிறகு இன்னும் குரலை இறக்கி, “இந்தக்கறுப்பு குட்டிக்கு மாத்திரம் நான் பெயர் வைத்துவிட்டேன். அரிஸ்டோட்டல்” என்றாள்.
ஏன் அரிஸ்டோட்டல்?
பார்ப்பதற்கு அப்படியே அரிஸ்டோட்டல் போலவே இருக்கிறது இல்லையா?
என்ற அ.முத்துலிங்கத்தின் “மகாராஜாவின் ரயில் வண்டி” போன்ற, வாசகனையும் புத்திசாலியாக்கும் சுவாரசிய எழுத்துக்கள் அவ்வப்போது வந்துபோகும். அவற்றை “நீயிருந்தால் நான் இருப்பேன்” ரக காதல் கவிதைகள், “தமிழனே புறப்படு, தரணியை வசப்படு” என்ற அர்த்தமற்ற வெறும் சந்தக்குப்பைகள், திரை விமர்சனங்கள், உணர்ச்சிவசப்பட்ட ஊர் நினைவுச் சிறுகதைகளுக்கு மத்தியில் தேடிக்கண்டுபிடித்து கொண்டாடவேண்டியது புலம்பெயர் வாசகர்கள் தமிழுக்கு செய்யவேண்டிய பங்களிப்பும் கூட.

இந்த சூழலில் தான் Unicode எழுத்துருவும் சம காலத்தில் Blogger, Bloglines, Wordpress போன்ற வலைப்பதிவு மென்பொருட்களும் தமிழுக்கு அறிமுகமாகிறது. யார் வேண்டுமானாலும் கணக்கொன்றை ஆரம்பித்து தனக்கென்று ஒரு இணைய சுட்டி, வடிவமைப்பு எல்லாமே ஏற்கனவே இருப்பதால் எழுதுவது மாத்திரமே இங்கே எழுத்தாளன் செய்யவேண்டிய ஒன்று. ஈகலப்பை, கூகிள் இண்டிக் போன்ற எழுது மென்பொருள்கள் தமிழ் தட்டச்சை இன்னமும் இலகுவாக்க இன்ஸ்டன்ட் எழுத்தாளர்கள் புற்றீசல் போல வெளிவர ஆரம்பித்தார்கள். அவற்றுள் ஆந்தைகளும் கழுகுகளும் புறாக்களும் இல்லாமலும் இல்லை.

யார் வேண்டுமானாலும் எப்போதும் எதையும் எழுதலாம் என்ற சுதந்திரம், எழுத்து சமவுடமையாவதற்கு பெரிதும் உதவியது. வாசகர்கள் எழுத்தாளர்களாய் பரிணாமம் அடைய இது ஏதுவானது. இதை திராவிட, இந்திய சுதந்திர போராட்ட சமயத்தில் இடம்பெற்ற சிறுபத்திரிகை, கையெழுத்துப்பத்திரிகை சார்ந்த எழுத்துப்புரட்சியுடன் ஒப்பிடலாம். எழுத முனைவுபவர்களுக்கு களமும் கருத்தும் கொட்டிக்கிடந்தது. இங்கே பதிப்பாளர் தேவையில்லை, இணையத்தள செலவு இல்லை. இன்னாரை திருப்திப்படுத்தவேண்டிய நிலையில்லை என்றவுடன் புதுப்புது இலக்கிய நடைகள், தேடல்கள், என்று புலம்பெயர் எழுத்தாளர்களின் வெளி அதிகரித்தது. பதிவர்கள் என்ற தனித்துவ எழுத்தாளர் சமூகம் உருவானது. இங்கே வாசகர்களுக்கும் எழுத்தாளருக்கும் உள்ள இடைவெளி குறைந்தது. எழுத்தை கொண்டாடும் வாசகர் கருத்துகள், படைப்பு வெளியாகி இரண்டு நிமிடங்களில் பிரசுரமானது. விமர்சனங்களும் தான். எழுத்தாளர்களை வாசகர்களும், வாசகர்களை எழுத்தாளர்களும் இனம் காணுவதற்கு பொதுவான ஒரு சந்தை இல்லாத குறையை திரட்டிகள் தீர்த்துவைத்தன. தமிழ்10, தமிழ்மணம், தமிழ்வெளி, இன்டெலி போன்ற பொதுத்திரட்டிகளும் ஈழத்து முற்றம், ஈழவயல், தேனீ, வினவு போன்ற ஒருங்கமைப்பு தளங்களும் இந்தவகை பதிவர்களை இனம்கண்டுகொள்ள உதவ, புலம்பெயர் படைப்புகள் மெல்ல மெல்ல உச்சம் பெற தொடங்கின. அது இலக்கிய உச்சமா இல்லை வெறும் எழுத்துக்களின் குப்பையா என்பது இன்னமும் விரிவாக ஆராயப்படவேண்டியது.

பதிவுலகத்தின் இலக்கிய பங்களிப்பு பற்றிய ஒரு சின்ன உதாரணம். சயந்தன் என்று ஒரு பதிவர். எழுத்துலகில் நீண்ட காலம் இயங்கி புலம்பெயர்ந்து கோட்பாட்டு வெளிக்கு அப்பால் எழுத்தில் பரிசோதனை முயற்சி செய்யும் எழுத்தாளர். பதிவுலகம் என்ற ஒன்றில்லாவிட்டால் அவர் எழுதிய ஆறாவடு என்ற நாவல் பரந்துபட்ட வாசிப்பையும் பலதரப்பட்ட விமர்சனங்களையும் அடைந்திருக்காமல் பெட்டிக்குள்ளேயே முடங்கியிருக்கும். ஆறாவடுவை விமர்சனம் செய்கையில், கதை முடியும் தருவாயில் புதிதாக ஒரு உறுத்தலான பாத்திரத்தை அறிமுகப்படுத்துவது நாவல் நெறி அல்ல என்று சுஜாதா சொல்லியதை எடுத்துக்காட்டி காட்டமாக என் பதிவில் விமர்சித்திருந்தேன். பதிலுக்கு ஒரே வாரத்தில் சயந்தன் சிறுகதை ஒன்றை எழுதுகிறார். “மகா பிரபுக்கள்” என்னும் ஈழத்து வீட்டில் கட்டப்படும் கக்கூஸ்கள் தொடர்பான ஒரு பின்நவீனத்துவ சிறுகதை. இடையில் விமர்சகர்களுக்கும் பதில் வருகிறது.

அந்த இரண்டு முதிர்ந்த ஜீவன்களுக்கிடையிலும் மௌனம் ஒரு புகையைப் போல படர்ந்தது சற்று நேரத்திற்கு. பின்னர் புகையைச் சுளகால் அடித்துக் கலைப்பது போல கனகுராசரின் வார்த்தைகள் மௌனத்தைக் கலைத்தன. “இன்னொரு ஒன்றரைப் பக்கத்தில் எல்லாம் முடிந்து விடும். அதற்கிடையில் புதியதொரு பாத்திரத்தை உள் நுழைக்கக் கூடாதென்று சுஜாதா சொல்லியிருக்கிறார்”
அன்னம்மா எதுவும் புரியாமல் விழித்தாள். மருமகளின் பெயர் கவிதா தானே.. இவர் எதையோ மறைக்கிறார். மகன் வரட்டும் அவனையே கேட்டு விடுகிறேன்..என்று நினைத்துக் கொண்டாள்.
வெறுமனே வாசகர்களாய் இருக்கக்கூடிய சுப்பனும் குப்பனும் இலக்கிய தளத்தில் எழுத்தாளனை விமர்சனம் செய்ய, அதற்கு எழுத்தாளன் சிறுகதையிலேயே பதில் கொடுக்கும் சூழல் பதிவுலகத்தில் இருக்கிறது. இலகுவில் பத்தோடு பதினொன்றாக சென்றுவிட்டிருக்கக்கூடிய அவலம் இன்றி, இந்த வகை இலக்கிய சர்ச்சைகளின் விளைவாக தமிழுக்கு ஆறாவடு என்ற நூல் பரந்த அளவில் அறிமுகமாகிறது. இருபது விமர்சனக்கட்டுரைகள். எழுத்தாளனின் பதில் ஒரு சிறுகதையில். இந்த பங்களிப்பு வெறுமனே மூன்று வாரங்களுக்குள் தமிழுக்கு கிடைக்கிறது. இது பதிவுலகம், சமூக ஊடகங்களான Facebook, twitter மூலம் மாத்திரமே சாத்தியப்படக்கூடிய ஒரு அம்சம்.

விசரன், சக்திவேல், வாலிபன், ஜி, கானா பிரபா, அருண்மொழிவர்மன், மணிமேகலை போன்ற அடுத்த தலைமுறை புலம்பெயர் எழுத்தாளர்கள் உடனடியாக நினைவுக்கு வரக்கூடிய இலக்கியம் படைக்கக்கூடிய பதிவர்கள். இந்தவகை பதிவர்களின் பொதுவான ஒரு கூறாக நனைவிடை தோய்தல் என்னும் தங்கள் இளமைக்கால ஈழத்து அனுபவங்களை பகிரும் முறையை காணக்கூடியதாக இருக்கிறது. ஈழத்து தளம் தாண்டிய, எங்கள் போரியல் வரலாறு தாண்டிய எழுத்து என்பதை காண்பது மிக அரிதாக இருக்கிறது. “என் இனிய இயந்திரா”, “மோகமுள்”, “பொன்னியின் செல்வன்”, “குவேனி”, சீரோடிகிரி போன்ற வேறுபட்ட தளங்களை தேடும் எழுத்தாளர்களும், அவற்றை இலக்கியம் என்று அங்கீகரிக்க்கூடிய வாசகர் சமூகமும் எங்கள் சமூகத்தில் இருந்து தொன்றவேண்டிய தேவை ஈழத்து இலக்கியம் ஒருவித ஸ்டீரியோடைப்புக்குள் செல்லாமல் இருப்பதற்கு மிக முக்கியம்.

பதிவுலகத்தில் மிகவும் பிரபலமான, பலரால் வாசிக்கப்படுகின்ற இரண்டு வகை எழுத்துக்கள் உண்டு. ஜனரஞ்சமான சினிமா, இசை, நகைச்சுவை என்று வாசகர்களை கவரும் விதமாக எழுதப்படும் எழுத்துக்கள். இன்னுமொன்று அரசியல், போராட்டம், புரட்சி, எதிர்ப்பு அரசியல் சம்பந்தப்பட்ட பத்திகள். இந்தவகை எழுத்துக்கள் எந்த மொழிப்படைப்பிலும் இருக்கும் தான். மொழியை ஊடகமாக பயன்படுத்தி வாசகர்களை அடையும் எழுத்துவகை. இவற்றை இலக்கியம் என்ற வரையறைக்குள் அடக்குவது இலக்கியத்துக்கு நாம் செய்யும் துரோகமாக போய்விடும்.

ஏழு வருடங்கள் கடந்தபின் பதிவுலகத்தில் முதலாளித்துவ பாண்பு அதிகரித்து வாசகர்களை கவர்வதற்காக சமரசம் செய்யும் எழுத்துக்கள் அதிகரிக்கத்தொடங்கியிருக்கின்றன. வாழ்க்கையை எழுத்துக்கே அர்ப்பணித்திருக்கும் முத்துலிங்கம் போன்றவர்களின் எழுத்துக்களை விட தினம்தோறும் எழுதப்படும் சினிமா பதிவுகள் பெரும் வரவேற்பை பெறுகின்றன. இந்த வகையில் எழுதும் நபர்களுக்கு எழுத்து தொழின்முறை துறையும் இல்லை. வாசகர்களுக்கும் இலக்கிய ஆர்வமும் இல்லை. இவ்வாறான படைப்புகள் காலப்போக்கில் பதிவுலகை ஆக்கிரமிக்காமல் இருப்பதற்கு, தமிழுக்கு பங்களிப்பு செய்யக்கூடிய படைப்புகளை எழுதுபவர்களை இனம் கண்டு கொண்டாடவேண்டும். அதை அச்சு நூல்களில் இலக்கியம் தேடும் தேர்ந்த வாசகர்கள் தான் தங்கள் கடைக்கண்னை பதிவுலகம் பக்கமும் செலுத்தவேண்டும்.

ஈழத்து முற்றம் என்று ஓரளவுக்கு ஈழத்து நினைவுகளை சுமந்துவரும் ஒரு பதிவு தளம் இருக்கிறது. இங்கே சுமார் நாற்பது எழுத்தாளர்கள் இணைந்து அவ்வப்போது ஈழம் சார்ந்த படைப்புகளை தருகிறார்கள். ஆனால் இலக்கியம் மட்டுமே பேசும், இலக்கியம் தவிர்ந்த வேறு எந்த விஷயங்களையும் தள்ளிவைக்கும் ஒரு திரட்டி தளம் நம்மிடம் இல்லை. நம் இலக்கிய படைப்புக்களை ஒருங்கிணைப்பதன் மூலம் பரந்துபட்ட ஒரு வாசகர் தளத்தையும் ஏன் எழுத்தாளர் தளத்தையும் கூட உருவாக்கலாம். நல்ல படைப்புகள் அச்சில் ஏறுவதை உறுதிப்படுத்தலாம். இதற்கு கிடைக்கும் அங்கீகாரம் பதிவுலகத்தை விட்டு ஒதுங்கியிருக்கும் மூத்த எழுத்தாளர்களையும் உள்ளகப்படுத்தும். ஒரு இலக்கிய குலாம் அமைத்து தரமற்ற பதிவுகளை மட்டுறுத்தி, ஆண்டு தோறும் சிறந்த நாவல், சிறுகதை, மரபு இலக்கியம் சார்ந்த பிரிவுகளுக்கு விருதுகள் கூட கொடுக்கலாம்.
இந்த முயற்சிக்கு ஆஸ்திரேலியா எழுத்தாளர் அமைப்பு முன்னின்று ஆதரவு வழங்கினால், நானே முதல் அடியை எடுத்துவைக்க தயாராக இருக்கிறேன் என்று கூறி, வாய்ப்புக்கு நன்றி கூறி அமர்கிறேன்.
வணக்கம்.

பிற்குறிப்பு : இது 13-05-2012 ஆஸ்திரேலிய எழுத்தாளர் விழாவில் “புலம்பெயர் படைப்புகள் தமிழுக்கு வளம் செர்க்கின்றவனா” என்ற கருத்தரங்கில் வலையுலகம் சார்பில் என்னுடைய உரை!

Author: யசோதா.பத்மநாதன்
•7:02 AM
மாங்காய் கடித்துத் தின்ற காலம், விளாங்காய் பங்குக்காய் சண்டை பிடித்த காலம், செம்புளி புளிக்க புளிக்க கண்களைச் சுருக்கிக் கொண்டு சுவைத்த பொழுதுகள்,..... 

அது போல ஒன்று தான் குருத்தோலைகளில் பாம்பும், பம்பரமும், மணிக்கூடும், காப்புகளும், கண்ணாடியும் செய்து ஏதோ ஒரு விதமான பெருமிதத்தோடு கம்பீர ராணிகளாய் நடை போட்டிருந்தோம்.கம்பீர ராஜாக்களும் அது போலத் தான்.

ஆண் பெண் சமரசம் நிலவிய வயது! 

அது ஒரு காலம்! போருக்கு முன்பான குழந்தைகளின் பள்ளிச் சீருடைக் காலம்!







பெரு விரல் காட்டி கோபமும் சின்னவிரல் காட்டி நேசமும் போட்டிருந்தோம். நான் உமக்கு .......... தாறன். நீர் எனக்கு...........தாறீரா என்று அடிக்கடி பண்டமாற்றுகள் செய்து கொண்டோம்.

வீட்டோரப் புழுதிச் சிறுவர்கள் அவிழும் கால்சட்டையை ஒரு கையால் பிடித்துக் கொண்டு மறுகையால் நீண்ட தடியில் ரின் மூடியை இணைத்து வாகன சாரதியாய் ஆகிக் கொள்ள நாம் எல்லாம் பயணிகளாய் பின்னால் ஓடினோம். வர்க்க பேதம் தெரியா மனசுகள். அதில் தான் நமக்கு எத்தனை ஆனந்தம்! பெருமிதம்!! 

சரிந்து நிற்கும் முருங்கை மரம் பஸ்ஸாய் ஆக பேப்பர்கள் எல்லாம் காசாய் ஆனது. தந்தைமார் வேலையால் வரும் நேரம் மண்ணிலும் இலைகுழைகளிலும் சமையல் தயாராது. குரும்பைகளில் தேரும் கோயிலும் சுற்று மதிலும் செலவில்லாமல் தயாரானது.


இயற்கையோடு அதன் போக்கோடு ஒன்றித்து வாழ்ந்த வாழ்க்கை நமது. நம் குழந்தைகளோ தொழில் நுட்ப யுகத்தில் சீமேந்துக் கட்டிடத்தினுள்ளே சுயாதீனமாய் உலா வருகிறார்கள்.

உங்கள் குழந்தைக் காலங்களில் என்ன எல்லாம் செய்தீர்கள்?

படம்: நன்றி, கூகுள் இமேஜ்.

Author: யசோதா.பத்மநாதன்
•7:12 PM

                   
பாதுகாப்பான; அதே நேரம் செம்மையான / செட்டான / காத்திரமான / குறை எதுவும் சொல்லமுடியாத / மிகுந்த சிரத்தையும் மன ஈடுபாடும் கொண்டு இணக்கப்பட்ட / என்று பொருள் தரத்தக்கது.

மேலும் சொற்களால் கொண்டுவரமுடியாத ஒரு விதமான குண இயல்பும் அந்தச் சொல்லுக்கு உண்டு. அதாவது இந்தச் சொல்லுக்குள் ஒரு விதமான குண இயல்பும் வாழ்வும் ஒழிந்திருக்கிறது.

House என்பதற்கும் Home  என்பதற்கும் இருக்கிற வேறுபாடு மாதிரியானது அது.

அச்சறக்கையாகக் கட்டப்பட்டது என்கிற போது அதற்குள் இங்கு கட்டப்பட்ட சுவர்களுக்கோ வேலிகளுக்கோ உள்ளே ஒரு பெறுமதியான விடயம் இருக்கிறது. மதிப்பு வாய்ந்த விஷயம் ஒன்றுக்காக இது பார்த்துப் பார்த்து உருவாக்கப் பட்டிருக்கிறது என்பதும் கூடவே தொக்கி நிற்கும். மிகப் பவித்திரமான ஒழுக்கம் அல்லது பண்பாட்டுப் பெறுமதி மிக்கது அது என்ற தொனிப்பொருளைக் அது கொண்டிருக்கும்.

அண்மையில் வசுந்தரா.பகீரதன் என்ற சிட்னி கவிஞையின் கவிதை ஒன்று பார்த்தேன். அதில் இந்த வார்த்தை இடம்பெற்றிருக்கிறது. புலம்பெயர்ந்த ஒருவரின் தற்போதய மனநிலையைச் சித்திரிப்பதாகவும் அதே நேரம் வழக்கொழிந்து போகும் இந்த வார்த்தை சரியான இடத்தில் இடம்பெற்றிருப்பதாலும் பொருத்தப்பாடு கருதி அந்தக் கவிதையையும் கூடவே தருகிறேன்.

என் வீடு

வலிகாமம் வடக்கில்
ஐந்துபரப்புக் காணிக்குள்
அரண்மனைபோல் என் வீடு
நாலறையும் விறாந்தையும்
நட்ட நடுவே மண்டபமும்
அம்மாவின் சமையலறையும்
மூன்று தலைமுறைக்கும் 
முந்திய வீடென்று
முன்னோர்கள் சொன்னதுண்டு.

அகன்ற முற்றத்தில்
அடுக்கடுக்காய் பூமரங்கள்
செம்பரத்தையும் றோசாவும்
நித்திய கல்யாணியும் மல்லிகையும்
பூக்களுக்கோ குறைவில்லை
பழமரங்கள் ஏராளம்
கப்பலும் கதலியும்
இதரையும் மொந்தனுமாய்
பலசாதி வாழைகளும் பலாவும்
தென்றல் வந்து விளையாடும்
தென்னைமரங்களும் தேமாவும்
வடகம் தந்திருந்த வேப்பமரங்களும்
சோலைவனமாய் காட்சி தந்த
அழகிய என் வீடு....

பூவரங் கதியால்கள்
நாலுபக்கம் அணிவகுக்கும்
நாய் கோழி நுழையாமல்
பனைமட்டை வரிச்சுக் கட்டி
குமர் பிள்ளை பலவென்று
கிடுகுவேலி மறைத்துக் கட்டி
அச்சறக்கையான குளியல் இடம்

கோழிக்கும் கூடுகள்; ஆட்டுக்கும்
மாட்டுக்கும் கொட்டில்கள்
ஐந்தறிவு சீவன்களும் எம்மோடு
அகம் மகிழ்ந்து வாழ்ந்த வீடு
மாமாக்கள் சித்திக்கள்
ஆக்காக்கள் அண்ணன்மார்
பலரது கல்யாணம் கண்ட வீடு
ஆறேழு சாமத்திய வீடுகளும்
அயலட்டைகளை அழைத்து
சாப்பாட்டுச் சபை நடத்தி
ஆனந்தமாய் களித்த வீடு

காலை விடிந்து விட்டால்
அடிவளவு மாமரத்தில்
அணில்கள் பல சேரும்; அதன்
கீச்சொலிகள் இசையாகும்
பழங்கோதிப் பசியாற
வந்து போகும் கிளிகளும்
போட்டிக்குக் கதை பேசும்.

மாலையாகிவிட்டால்
வேப்பமரக் கிளைகளில்
கூவிக்களித்திருக்க
குயில் கூட்டம் வந்து சேரும்
கிடுகுவேலி மேலிருந்து
அண்டன்காக்கைகளும்
செம்பகமும் அதை ரசித்துக்
கேட்டதுண்டு.......

இத்தனை சிறப்போடு அன்று
வீற்றிருந்த என் வீடு!

இன்று......

வேப்பமரங்கள் எதுவுமில்லை
கூவியிசைபாடக்
குயில்களும் அங்கில்லை
அடிவளவு மாமரமும் 
இருந்த இடம் தெரியவில்லை
தாவும் அணில்களின் 
கீச்சொலி கேட்கவில்லை
தென்னைமரம் வாழைமரம்
தேன்சுவை பலா என்ற
பேச்சுக்கே இடமில்லை
ஆடு இல்லை, மாடு இல்லை
கோழி இல்லை, குஞ்சும் இல்லை
ஆட்களைக் கண்டால் 
நின்று குரைக்க நாயுமில்லை
குரைக்கின்ற நாயை அடக்க
ஆட்கள் என்றும் யாருமில்லை

ஷெல்லும் பொம்மரும்
கிபீரும் கொட்டித் தீர்த்த
குண்டுகளில் என்வீடு
சிதைந்து இன்று
சின்னாபின்னமாய்
சுடுகாடாய் கிடக்கிறது

சிதைந்து கிடப்பது
அழகிய என் வீடு மட்டுமா?
மனமும் தான்......!

கவிதைக்கு நன்றி: வசுந்தரா.பகீரதன்



Author: யசோதா.பத்மநாதன்
•7:08 PM

கடந்த வாரம் துணிக்கடை ஒன்றுக்கு சென்றிருந்தேன்.

அங்கு ஒரு கத்தரிக்கோல் - ஒரு சின்னக் கத்தரிக்கோல் - நூல்கள் வெட்டப் பாவிப்பது. காணக்கிடைத்தது. யாரோ ஒருவருடய கற்பனை! கலை நயம்!

அது ஒரு கொக்கு மாதிரி தோற்றம் கொண்டது.! அதன் கூரிய மூக்கு தான் வெட்டும் பகுதி. ஒரு சிறு உபகரணத்தை எத்தனை அழகாய் வடிவமைத்திருக்கிறார்கள் எனத் தோன்றியது.

அதைப் பார்த்த போது நம்மிடம் அப்படி ஏதாவது கலை நயம் மிக்க பொருட்கள் இருந்தனவா என எண்ணமோடியது. அப்போது எனக்கு உடனடியாக ஞாபகம் வந்தது பாக்கு வெட்டி தான். ஒரு மான் பாய்ந்தோடுவது போல வடிவமைக்கப் பட்டிருந்த பாக்கு வெட்டி ஒன்றை யாழ்ப்பாணத்தில் ஒருமுறை ஒருவர் வீட்டில் கண்டிருந்தேன்.

வீட்டுக்கு வந்து முதல் வேலையாக கூகுளில் பாக்குவெட்டி தேடினேன். :) ரொம்ப முக்கியம் என்று நீங்கள் நினைப்பது தெரிகிறது. என்ன செய்வது எனக்கு அது முக்கியம்!! :))

எத்தனை அழகழகான கலை வேலைப்பாடுகளுடன் கூடிய பாக்கு வெட்டிகள்! அவை ஈழத்தில் இந்தியாவில் மட்டுமின்றி தென்கிழக்காசிய நாடுகளிலும் புளக்கத்தில் இருந்திருக்கின்றன. அவற்றை இப்போது உங்கள் பார்வைக்காகவும் தருகிறேன்.




















படங்கள்: நன்றி கூகுள் இமேஜ்.








Author: யசோதா.பத்மநாதன்
•7:38 PM
ஒருவரை அல்லது ஒரு நிகழ்ச்சியை ஞாபகப் படுத்த ஏதேனும் ஒரு பாடல் வரி அல்லது ஒரு இசைக்குறிப்பு அன்றேல் ஏதேனும் ஒரு சிறிய பொருள் அல்லது நடைபெறும் ஒரு சிறு சம்பவம் போதுமானதாக இருக்கும்.பழைய நினைவுகளையும் வாழ்க்கையையும் அது மீட்டுத் தந்து விட்டுப் போயிருக்கும்.

அது போலத் தான் இந்தக் கிடுகுவேலியும் மூக்குப் பேணியும்!யாப்பாணத்தை; ஊரை; அங்கு வாழ்ந்த வாழ்வை இந்தப் படங்கள் நினைவு படுத்திப் போகிறது.



கிடுகு வேலி யாழ்ப்பாணத்து இமேஜ்களில் முக்கியமானது.யாழ்ப்பாண மக்களின் கட்டுப்பாடான மற்றும் கட்டுப் பெட்டிக் கலாசாரத்தை குறிப்பாகச் சுட்டிக் காட்டுவதற்கு ’கிடுகுவேலிப் பாரம்பரியம்’என்ற சொல்லைக் குறியீடாகப் பயன்படுத்தும் அளவுக்கு கிடுகுவேலிகள் அங்கு தனித்துவமாக விளங்குவதையும் குறியீடாகக் கையாளப்படுவதையும் வரலாற்றுப் பரப்பில் தெளிவாகக் காணலாம்.



அது போலத்தான் மூக்குப் பேணியும்.அதன் தனித்துவமான வடிவமும் அன்னாந்து குடிப்பதற்கேற்ற வகையில் இருக்கும் அதன் நளினமும் அன்றாடப் பயன்பாட்டில் யாழ்ப்பாணத்தார் மூக்குப் பேணியைப் பயன்படுத்திய பாங்கும் யாழ்ப்பாணத்துப் பாரம்பரியத்தின் இன்னொரு இமேஜ்.

இந்தப் படங்களை கூகிளில் பார்த்த போது ஊர் சோகம் சூழ்ந்தது. அதனால் பதியத் தோன்றிற்று.
Author: ஜேகே
•7:44 PM


“சும்மா போ அன …இனி வெறுங்கல்லு .. என்னால தோண்ட ஏலாது”
“என்ற அச்சா குஞ்சல்லோ, இன்னும் ரெண்டு அடி தான் .. தோண்டினா .. குத்தி போட்டு மண்மூடை அடுக்கலாம்”
“அப்ப பின்னேரம் லலித்தொட கிரிக்கட் விளையாட விடுவியா?”
“சரி என்னத்தையும் போய் விளையாடு .. இப்ப இத கிண்டு”

அம்மா கிரிக்கட் விளையாட பெர்மிஷன் தந்த சந்தோசத்தில் போட்ட பிக்கான் கொஞ்சம் ஆழமாகவே விழ, யாழ்ப்பாணத்து கல்லு “நங்” என்று சத்தம் போட்டது. கொஞ்சம் கையால் மண்ணை கிளறி, கல்லை க்ளீன் பண்ணிவிட்டு, மீண்டும் சரியான கொட்டு பார்த்து பிக்கான் போட்டேன். சர்க்கென்று பிக்கான் இறங்க, நான் பிடியை ஒரு எம்பு எம்ப சர்ர்க்க்க்க் என்று இன்னொரு சத்தம்.

பிக்கான் மரப்பிடி முறிந்துவிட்டது!


என்னடா இது சிறுகதை போலே ஆரம்பிக்கிறேன் என்று நினைக்கவேண்டாம். ஈழத்தில் பிக்கான் போட்டு கைப்பிடி முறிச்ச அனுபவம் உங்களுக்கு இருக்கலாம். வாழை அடிக்கிழங்கு எல்லாம் கிளறி கிளீன் பண்ணும்போது, முறிஞ்சு போன அனுபவம் இருக்கா? பிடி என்னதான் ஸ்ட்ராங்கா இருந்தாலும், விஷயம் தெரியாமல் தெண்டிவிட்டீர்கள் என்றால் கதை சரி. .. ஆ அப்பு.. இந்த மரப்பிடி எப்பிடி செய்யிறது என்றதும் சொல்லவேண்டும். கொடாரிப்பிடியை எல்லாம் கொல்லைப்புறத்து காதலியா தனியா எழுத முடியாது. பிறகு என்னையும் கொடாறிக்காம்பு என்று சொன்னாலும் சொல்லிடுவாங்கள் இல்லையா!

கோடாலி, பிக்கான், மண்வெட்டி போன்றவற்றுக்கு மரப்பிடி செய்வது பூவரசு மரத்தில் இருந்து தான். இடியப்ப உரல், நல்ல மாட்டுவண்டில் அச்சு எல்லாம் பூவரசு மரத்தில் இருந்து செய்யப்படுவதே. மரம் பார்த்தால் நோஞ்சான் மாதிரி இருக்கும். ஆனால் ஊரில கதியால்(வேலி) அடைக்கும்போது முக்கிய பாயிண்டுகளில் எல்லாம் பூவரசு தடி தான் நடுவார்கள். அதுவும் அடைக்க தெரியாமல் அடைத்தால், மரம் சரிஞ்சு வளர்ந்து மற்றவன் காணிக்குள் தலை எட்டிப்பார்த்து, யாழ்ப்பாணத்தில் பல வேலிச்சண்டைகளை ஊதிபெருப்பித்த பெருமை இந்த பூவரசுக்கு உண்டு. காய வச்சு அடுப்பெரிச்சா கொஞ்சம் புகைச்சலாக எரியும்! இலையை சுருட்டி பீப்பீ ஊதலாம். கொஞ்சம் பெரிய இலை புடுங்கினால், வைரவர் கோவிலில் பிரசாதம் கொடுக்கலாம். ஊர்க்கோவில்களில் வெற்றிலை கட்டுப்படியாகாத காலத்தில் வீபூதி சந்தனம் சுருட்டிக்கொடுப்பதும் இதில் தான். பூவரசுக்கு அப்படி ஒரு ஹிஸ்டரி இருக்கு! அந்த மரத்தில் இருந்து தான் நல்ல பழுத்த கொப்பாக பார்த்து வெட்டி, நெருப்பு தணலில் முதல்ல போட்டு சுடுவார்கள். ஒரு பொன் நிறத்தில் எரிந்து வரும்போது, தோலை கீறி, மரவேலை செய்யும் தொழிலாளர்களிடம் கொடுத்து சீவி எடுத்து, மண்வெட்டி, பிக்கான் கோடாலிக்கு பிடி போட்டால், சிங்கன் அசையாமல் இருப்பார்!

இப்பிடி கனகசபை தாத்தா ஊரில் இருந்து செய்துகொண்டு வந்த பிடி தான் அன்றைக்கு முறிஞ்சு போய்விட்டது. அம்மாவை பாவமாய் பார்த்தேன். அம்மா நெருப்பு எடுக்க போகிறார் என்று பயம். ஆனால், அவ சோட்டியை கொஞ்சம் உயர்த்தி செருகிக்கொண்டே, “சும்மா படிச்சு படிச்சு உடம்பு பூளை பத்திப்போய் கிடக்கு, ஒழுங்கா குனிஞ்சு நிமிர்ந்து ஒரு வேலை செய்ய தெரியாது” என்று திட்டியவாறே, அங்கே இங்கே கிடந்த சின்ன சின்ன விறகு காம்புகளை எடுத்து பிக்கான் ஓட்டையில் சக்கை வைத்து, மீண்டும் பிடியை, பிடரிப்பக்கமாக சுவரில் நாளு அடி நன்றாக அடித்து இறுக்கி தந்தார். இப்போது கூட நான் இதை எழுதிக்கொண்டு இருக்கும்போது ஒரு ப்ளேன்டீ போட்டுக்கொண்டு வந்து தந்துவிட்டு, நேற்றைக்கு “Yarl IT Hub”, இன்றைக்கு “கொல்லைப்புறத்து காதலியா” என்று சொல்லிக்கொண்டே அதே மாதிரி மனசுக்குள் திட்டியிருக்கவேண்டும். கேட்கவில்லை அம்மா!

எங்கள் வீட்டு சாமியறை. பிள்ளையார், முருகன், லட்சுமி, சரஸ்வதி, நயினை நாகபூஷணி அம்மன், குட்டி சிவலிங்கம், மன்னார் அன்ரி தந்த மடு மாதா சிலை, வீட்டு குடிபூரலுக்கு யாரோ உபயம் செய்த ஓம் சரவணபவ எழுத்து போட்ட மிகப்பெரிய முருகன் படம், பிருந்தாவனத்து கிருஷ்ணன், சின்ன இயேசு படம், சிவனே என்று உட்கார்ந்து இருக்கும் புத்தர் சிலை என்று ஒரு தட்டு பூரா கடவுள்கள். ஸ்பெஷலாக லட்சுமி, முருகன், பிள்ளையார் படங்களுக்கு மட்டும் வண்ண வண்ண பல்புகள் மேலே எரியும். எங்கள் வீடு என்று இல்லை, யாழ்ப்பாணத்தில் எந்த வீட்டிலும் இப்படி தான் கடவுள்கள். பல்ப் வாங்கிக்கொண்டு இருந்தார்கள்! மேல் தட்டில் சாமிகள் இருக்க, கீழே மிக நீளமான ஒரு நிலக்கீழ் சீமந்து கிடங்கு அந்த அறையில் இருந்தது. சாமான்கள் வைப்பதற்காக அது அமைக்கப்பட்டிருக்கவேண்டும். 85, 86 களில் எல்லாம் சண்டைகள் நடக்கும் நேரம் நாங்கள் எல்லாம் அந்த கிடங்குக்குள் போய் பதுங்கிக்கொள்ளுவோம். முதல் காதலி போல் முதல் பங்கர் அது. பயந்து பதுங்கிய காலம் இன்னமும் ஞாபகம் இருக்கிறது! மேலே கடவுள்களை தாண்டி குண்டு விழாது என்று கொழும்பர் மாமிக்கும் பெரும் நம்பிக்கை. வீட்டுக்கு பங்கர் தேவையில்லை. அது போதும் எண்டு சொல்லிவிட்டார்.

இந்தியன் ஆர்மி டவுன் பக்கம் மூவ் பண்ணிக்கொண்டு இருக்கு. எங்கள் சாமியறை கிடங்கு இந்தியாவின் அடிக்கு தாக்குப்பிடிக்காது என்று இயக்கத்தில இருந்த சொந்தக்கார அண்ணா ஒருவர் சொல்லிவிட, இப்போதெல்லாம் குண்டடிக்க நாங்கள் ஓடுவது பாத்ரூமுக்கு தான். எங்கள் வீட்டு பாத்ரூமுக்கு மேலே பெரிய தண்ணீர் தாங்கி இருக்கிறது. கொங்கிரீட். ஷெல் விழுந்தாலும் துளைத்துக்கொண்டு வராது. பாதுகாப்பு. தூக்கம் வந்தால் கொஞ்சம் சாய்ந்தும் தூங்கலாம். சாமியறை கிடங்கு போதாது. பாத்ரூம் .. பயத்தில மணம் எல்லாம் பெரிசா இருக்காது.

அப்பாவின் நண்பர் ஒருவர். அவர் டீச்சர். சுதுமலையில் வசித்தவர். ஒருநாள் குண்டு அடித்துக்கொண்டு இருக்கும் போது அவர் வீட்டு பாத்ரூமில் பதுங்கியிருக்க, குண்டு வீட்டின் மேல விழுந்துவிட்டது. ஸ்பாட்டில் ஆள் க்ளோஸ். நிலநடுக்கம் வந்தால் வீட்டை விட்டு வெளியே ஓட வேண்டுமாம். இல்லாவிடில் நேரிசல்களுக்குள் சிக்கி செத்துவிடுவோமாம். அந்த அங்கிளும் அப்பிடி தான் நெரிசலில் இறக்க, அடுத்தவாரமே எங்கள் வீட்டு முன் வளவில் பங்கர் வெட்ட முடிவானது!


எங்கள் வீட்டுக்கு வந்து இருக்கிறீங்களா? வீட்டுக்கு முன்னாலே ஒரு பரப்பு காணி. பூங்கன்று தான் முழுக்க இருக்கும். நந்தியாவட்டை, நாகமணி, செவ்வரத்தை, ரோசா, தியத்தலாவ என்ற மலைக்கிராமத்தில் இருந்து அம்மா கொண்டு வந்து வைத்த பார்பட்டன்ஸ் என்று விதம் விதமாக பூத்து தொங்கும். கிணற்றடியில் ஒரு செவ்வரத்தை, மொத்தமா எட்டு ஒட்டு அம்மா ஒட்டியிருப்பார். எட்டு கலர்ல பூ பூத்திருக்க சுற்று வட்டாரத்தில இருந்தவங்க எல்லாம் வந்து பார்த்துவிட்டு போவார்கள். கம்பஸ் பக்கத்தில பூக்கன்று வீடு என்று சந்திக்கடையில கேட்டால் சேவயர்(surveyor) வீட்டை உடனே காட்டுவார்கள். பேபி ஸ்டூடியோ அங்கிள் கொடாக் பிலிம்ல போட்டோ எல்லாம் எடுத்து தன் கடையில் மாட்டி வைத்தார். சுரேஷ் அண்ணா உதயனுக்கும் அறிவிப்போம், வந்து படம் பிடிப்பார்கள் என்றார். ஆனா அடுத்த மாசம் தானே இந்தியன் ஆர்மி இறங்கீட்டுது அங்க!

பங்கர் வெட்டுவதற்கு தோதான இடம் பார்க்கவேண்டும். தொலைவிலையும் இருக்க கூடாது. கக்கூசுக்கு கிட்டவும் இருக்கக்கூடாது. கீழால பைப் லைன் இருந்தாலும் கவனிக்கோணும். கிணத்தடி கடைசியா தெரிந்தெடுக்கப்பட்டது. செவ்வரத்தைக்கு பக்கத்தால பங்கர். அது பெரிய மரம், பக்கத்தில ஒரு எலுமிச்சையும் நின்றது. மேலால பொம்மரில இருந்து பார்த்தா கண்டு பிடிக்கேலாது. முதல் பங்கர் வெட்டியாச்சு. வெட்டினது ஞாபகம் இல்லை. ஆனா ஒருக்கா ரெண்டு தரம் பங்கருக்க இருந்தது ஞாபகம் இருக்கு. கொஞ்ச நாள் தான். இந்தியன் ஆர்மி யாழ்ப்பாணத்தை பிடிச்சிட்டான். எங்கட முன் வீட்டில இந்தியன் ஆர்மி காம்ப் வந்தது. பங்கர் இருக்கிறது தெரிஞ்சா சிக்கல் எண்டு அப்பா குப்பையை போட்டு மூடிப்போட்டார்.

மூண்டு வருஷங்கள் பங்கர் இல்லாத வீடு. இந்தியன் ஆர்மியை இப்போது ஒரு வழியா கப்பலில் அனுப்பியாயிற்று. கொஞ்ச நாள் யாழ்தேவி ட்ரெயின் எல்லாம் இலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கும் ஓட ஆரம்பித்துவிட்டிருந்தது! கரண்ட் கூட அவ்வப்போது லக்ஸபானாவில் இருந்து விசிட் பண்ணும். திடீரென்று ஒரு நாள் அறுவாங்கள் சண்டையை தொடங்கிவிட, இப்போதெல்லாம் அடிக்கடி பொம்பர் விசிட் பண்ண ஆரம்பித்தது. கையோடு கோட்டை பிரச்சனை ஆரம்பிக்க, இளம் ஆட்கள் எல்லொரும் இயக்கப்பாட்டு பாடிக்கொண்டே முற்றவெளி ஏரியாவில் பங்கர் வெட்ட போயிட்டு வருவார்கள். சிலநேரங்களில் திரும்பி வராமலேயே இருந்துவிடுவார்கள். சில நேரம் பிரேதம் மட்டும் வரும்.

இப்ப இயக்கம் யாழ்ப்பாணத்தை வைத்திருக்கிறது. அப்போது நிதர்சனம் என்று இயக்கத்தின் தொலைகாட்சி இருந்தது. அதன் அலுவலகம் எங்கள் வீட்டுக்கு முன்னால். முன் வீடு ஒரு புரோக்டர் வீடு. அவர் குடும்பம் எப்பவோ ஆஸ்திரேலியாவுக்கு எஸ்கேப். அதனால் தான் முதலில் இந்தியன் ஆர்மி அந்த வீட்டில் காம்ப் போட்டது. அவர்கள் போக நிதர்சனம் காம்ப் வந்துவிட்டது. முன்னுக்கு நிதர்சனம் காம்ப் என்பதால் பொம்மர் குண்டு போடும்போது காம்பில் விழாமல் சுற்றுவட்டாரத்தில் தானே விழும்! அத்தனை வீடுகளும் பங்கர் வெட்ட ஆரம்பிக்க, அது ஒரு முஸ்பாத்தி என்றால் முஸ்பாத்தி தான் போங்கள்.

பங்கர் வெட்டுவது என்பது கிட்டத்தட்ட நவராத்திரிக்கு கொலு வைப்பது போல. வீட்டுக்கு வீடு அப்போது பங்கர் வெட்டுவார்கள். ஒரு “ட” எழுத்து வடிவில் அநேகமான பங்கர்கள் இருக்கும். சில பெரிய பங்கர்கள் “ப” வடிவில் இருக்கும். சும்மா ஒன்றுமே இல்லாமல் டப்பா “I” வடிவ பங்கர்களும் சிலர் வெட்டுவதுண்டு. யார் வீட்டில் ஆழமான பங்கர் என்பதில் தான் போட்டியே. எங்கள் ஊர் திருநெல்வேலி, கொஞ்சம் தோண்டினா கல்லு வர தொடங்கிவிடும். இரண்டு அடிக்கு பிறகு பிக்கான் போட வேண்டும். நான்கடியில் ஆப்பு வைத்து வெட்டவேண்டும். அதனால் போட்டியில் எங்கள் வீடு எப்போதுமே பின் தங்கி விடும். அன்ரி ஒருவரின் வீட்டு பங்கரில் ஆள் ஒருவர் குனியாமல் நிற்கலாம்.

நிதர்சனம் காம்ப் முன்னுக்கு வந்தது என்று சொன்னேன் இல்லையா. இப்போது கிணற்றடியில் பங்கர் வெட்டுவது பொம்மர் காரனுக்கு அல்வா எடுத்து வாயில் வைப்பது போல. போட்டான் என்றால் அடுத்த நிமிஷம் அடுத்த பிறவியில், யாரேனக்கு அப்பனோ, அவன் குழைந்தையை எடுத்து கொஞ்சிக்கொண்டு “ஜேக் சுள்ளி” என்று பெயர் வைத்திருப்பான். நல்ல காலம் நாங்கள் வீட்டுக்கு பின்னால் பங்கர் வெட்ட முடிவு செய்ததால் இன்னமும் ஜேக் ஜெகேயாகவே இருக்கிறான்!


எங்கள் வீட்டுக்கு பின்னால் ஒரு விலாட்டு மாமரம். அதற்கு அடியில் தான் பங்கர் வெட்ட ஆரம்பித்தோம். பங்கர் வெட்ட ஆட்கள் பிடிப்பது கஷ்டம். கூலியும் ப்ளேன் டீயும் குடுத்து மாளாது. நாங்களே வெட்டினோம். பக்கத்துவீட்டுக்காரரும் உதவி செய்தார்கள். எங்கள் சுற்று வட்டாரத்தில் உள்ள நான்கைந்து குடும்பங்களுக்கு ஒரு பங்குக்காணியும் கிணறும் இருந்தது. அந்தக்காணியில் மூன்று உயர்ந்த தென்னை மரங்கள். மரங்களில் காய்க்கும் தேங்காய் கூட எல்லோருக்கும் பங்கு தான். ஆனால் இரவிலே எத்தனையாவது சாமத்தில் இருந்தாலும், அந்த மரங்களில் இருந்து தேங்காய் விழுந்தால், தொப் என்று சத்தம் கேட்கும். எல்லா வீட்டுக்காராரும் அலறிப்பதைத்துக்கொண்டு இரவோடி இரவாக ஓடுவார்கள், தேங்காய் பொறுக்க. தேங்காய்க்கு பங்கில்லாதவன் முதல் ஓடுவான்! அப்படி ஒரு ஒற்றுமையான பங்கு காணி அது. இப்போது பங்கருக்கு மேலே போட்டு மூட தென்னங்குற்றி வேண்டும் என்பதால் எல்லா குடும்பங்களும் ஒத்துக்கொண்டு அந்த தென்னைகளை வெட்ட முடிவு செய்தோம். குற்றிகளை பங்கு பிரிப்பதில் கூட போட்டி தான். அடிக்குற்றி கொஞ்சம் ஸ்ட்ராங் இல்லையா. அதுக்காக சண்டை பிடிப்பார்கள். இதெல்லாம் என்னுடைய அடுத்த கதையில் சொல்கிறேன். இப்போது மாட்டருக்கு வருவோம்.

பங்கர் வெட்டி, குற்றி அடுக்கி, அதற்கு மேல் உரப்பை (போரை பாக்) யில் குரு மணல் நிரப்பியாச்சு. குருமணல் என்று சொல்வது கடற்கரை மணல். ஷெல் விழுந்தால் சரக்கென்று இறங்கி சிக்கிப்போய் நிற்கும். வெடிக்காது. சும்மா களிமண் போட்டு நிரப்பினா, கட்டி பட்டுப்போய், ஷெல் மூடையில் விழுந்த உடனேயே வெடித்துவிடும். இதெல்லாம் யாழ்ப்பாணத்து விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள். விஞ்ஞானி என்றால் அப்துல்கலாம் மாதிரி அணுகுண்டு எப்படி செய்யவேண்டும் என்று கண்டுபிடிக்க தேவையில்லை. அணுகுண்டு போட்டால் எப்படி தப்புவது என்று கண்டுபிடிப்பவனும் விஞ்ஞானி தான். ஏனோ தெரியாது அவர்களை உலகம் கொண்டாடுவதில்லை!

பங்கர் ரெடி. இப்போது இண்டீரியர் டிசைன் செய்யவேண்டும். சும்மா போய் பதுங்கி இருக்கும் பங்கர் தான்.ஆனால் அதற்குள் நிறைய விஷயம் இருக்கு. பங்கர் சுவரில் கிழக்கே பார்க்கும் வண்ணம் சதுரவடிவ அரை அடிக்கு அரை அடி, குட்டி பொந்து ஒன்று போட வேண்டும். அங்கே ஓரு பிள்ளையார் சிலை, உங்கள் ஊர் கோயில் கடவுள் படம். மடு மாதா, நல்லூர் கந்தன் படம் என் ஒரு மினி சுவாமி வைப்போம். அம்மா காலையில் சாமிக்கு பூ ஆய்ந்து வைக்கும்போது, பாவம் பங்கருக்குள்ளும் இறங்கி இரண்டு பூக்கள் வைத்து கும்பிடுவார். கோயிலில் இருக்கும் கடவுள்களை விட பங்கருக்குள் இருக்கும் கடவுள்களை தனியாக கவனிக்கவேண்டும். இல்லாவிடில் பாவம் நாங்கள், கடவுள்கள் கைவிட்டு விடுவார்கள்.

பங்கரில் அதேபோல இன்னொரு பொந்து வைத்து, அங்கே மெழுகுதிரி, நெருப்புப்பெட்டி(தீப்பெட்டி) வைக்கவேண்டும். ஹெலிகாப்டர் மேலே சுற்றினால், பங்கரின் வாசலை ஓலையால், அல்லது ஒரு தகரத்தால் உள்ளே இருந்து மூடவேண்டும். இல்லாவிட்டால் கண்டுபிடித்து சுட தொடங்கிவிடுவான். மூடிவிட்டால் உள்ளே கும்மிருட்டு, வெளிச்சம் வேண்டும். அதுக்கு தான் இந்த மெழுகுதிரி. ஆத்திர அவசரத்துக்கு பங்கருக்கு ஓடும்போது எவனாவது தீப்பெட்டி எடுத்துக்கொண்டு ஒடுவானா? அதுக்கு தான் இந்த முன் ஜாக்கிரதை. காமடி என்னவென்றால் எங்கள் முன்வீட்டுக்காரர்கள் தங்கள் பங்கருக்குள் கரண்ட் கனெக்ஷன் குடுத்து மின்விசிறி, லைட் எல்லாம் பொருத்தி இருந்தார்கள். உள்ளே இருந்த சாமிப்படத்துக்கு LED ஒளிவட்டம் வேறு. நாங்கள் எல்லாம் கண்காட்சி பார்க்க போவது போல அவர்கள் பங்கரை பார்க்க போவோம். சூப்பராக இருக்கும். ஆனால் குண்டு போடும்போது அனேகமாக கரண்ட் இருக்காது. அப்படியே இருந்தாலும் பக்கத்தில் விழுந்தால், அதிர்ச்சியில் பல்ப் வெடிச்சு கரண்ட் லீக்காகி சாகவேண்டியது தான். ஷோ காட்டுறதுல எங்கட யாழ்ப்பாணத்து ஆட்கள் போல உலகத்தில வேற எங்கேயும் ஆட்கள் பார்க்கமாட்டீர்கள். கனடாவில் அகதி அந்தஸ்து கிடைத்ததுக்கே மண்டபம் எடுத்து பார்ட்டி வைத்த ஒருத்தரை கூட எனக்கு தெரியும்! அம்மா இப்படியா கூத்துக்களை “புறக்கோலம்” காட்டுறாங்கள் என்று சொல்லுவா. யாழ்ப்பாண தமிழ் என்று நினைக்கிறேன்.

அந்த நாட்களில் சண்டை தொடங்கிவிட்டால் பள்ளிக்கூடம் இருக்காது. ஜாலி தான். என்ன ஒன்று, குண்டு அடிக்கடி பக்கத்தில விழும். அம்மா எங்களை எல்லாம் பங்கருக்குள்ளே போயிருந்து விளையாடுங்க என்று சொல்லுவா! உள்ளே ஒரு பாயை விரித்து அனேகமாக விளையாடும் விளையாட்டு தாயம் தான். யாருக்காவது தாயம் ஞாபகம் இருக்கிறதா? 32 பேட்டி, நான்கு சிப்பி சோகி, சதுரங்க ஆட்டம். யாராவது ஒருத்தன் அலாப்பிகொண்டு சண்டை பிடிக்கும் மட்டும் போட்டி தொடரும். சில நேரங்களில் மாபிள் போளை கூட விளையாடி இருக்கிறோம். பரீட்சை நேரம், படிக்கும் போது அடிக்கடி பங்கருக்குள் போனால் படிப்பு குழம்பும் என்பதால் பங்கருக்குள்ளேயே டேரா போட்டு படிப்பதுண்டு. அது ஒரு அழகிய கனாக்காலம் தான்!


குண்டு போடும்போது யாரு முதலில் பங்கருக்குள் போவது என்பதில் கொஞ்சம் பயம். பாம்பு பூரான், புலிநக சிலந்தி எல்லாம் உள்ளே இருக்கலாம். போனவருக்கு கடி நிச்சயம். அந்த சண்டையில், பத்து போடவோ, புக்கை கட்டவோ குருநகருக்கு உங்களை தூக்கிக்கொண்டு ஓட முடியாது பாருங்கள். இதிலும் அம்மா தான் சண்டிக்கட்டு கட்டிக்கொண்டு உள்ளே நுழைந்து கிளியர் பண்ணுவா! அதுக்கப்புறம் அடிச்சு பிடிச்சுக்கொண்டு உள்ளே ஓடுவோம். ஆனால் இந்த இளந்தாரி ஆண்கள் உள்ளே வர பிகு பண்ணுவார்கள். அதென்ன பொம்பிள பிள்ளை மாதிரி ஓடி பதுங்கிறது என்று சொல்லிக்கொண்டே வெளிய வாசலில் நின்று பொம்மர் பார்த்து, அது எங்கட ஏரியாவுக்கு குண்டு போடபோகுதென்றால் மாத்திரமே உள்ளே வருவார்கள். ஆனா பின்னாடிக்கு சுப்பர் சொனிக், கபீர் விமானங்கள் போன்ற ஒலியை விட வேகமாக பறக்கும் விமானங்கள் வந்த பிறகு, இவர்கள் வீரத்தை கொஞ்சம் குறைத்து, பங்கர் படிக்கட்டில் நின்று செடில் காட்டுவார்கள்!

93, 94ம் ஆண்டு காலப்பகுதியில் பொம்மர் விமானிகள் FM ட்ரான்ஸ்மிஷன் மூலம் தான் தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள். அப்பா அவர்களின் frequency ஐ tap பண்ணி, குறுக்கே கேட்பார். சிங்களத்தில் பேசினாலும் இவருக்கு கொஞ்சம் புரியும்.
“மே நண்டா காம்பேக்க டான்டோன்ன”
“தவ ரவுண்டேன் கீல, பள்ளேன்ன யன்ன .. மங் கவர் ….”
“என்னப்பா சொல்லுறாங்கள்”
“நண்டா காம்ப் அடிக்க போறாங்கடா”
“எதெப்பா நண்டா காம்ப்?”
“நந்தா என்றால் மாமி என்று அர்த்தம்.. மாமின்ட காம்ப்”
“மாமிக்கு எங்கயப்பா காம்ப் இருக்கு?”
அப்பாவும் இப்போது நாசியை தடவி யோசித்தார்.
டேய் மாமி எண்டுறது கிட்டிண்ட மாமிடா, பக்கத்து ரோட்ல தானே கிட்டு மாமி வீடு இருக்கு. ஓடுடா ஓடு பங்கருக்க..
கிட்டு அண்ணா போலவே கிட்டு அண்ணாவின் மாமி எங்கள் ஊரில் மிகப்பிரபலம். அதனால் அவர் வீட்டில் தான் குண்டு போடா போகிறார்கள் என்று பயந்து, நாங்கள் எல்லாம் ஓடி உள்ளே ஒளிந்திருக்க, குண்டுகளை எங்கேயோ தூரத்தில் போட்டுவிட்டு விமானங்கள் ஓடிவிட்டன. கொஞ்ச நேரம் கழிந்து தான் தெரிந்தது, குண்டு போட்டது கொக்குவிலில் இருந்த “நந்தாவில் அம்மன் கோவிலடி” காம்படியில் என்று. வழமை போலவே குண்டு காம்பில் விழாமல் பக்கத்துவீட்டில் விழ ஆறேழு பேர் செத்துப்போனார்கள். எண்ணிக்கை மறந்துவிட்டது. செத்தவர்களும் தான்.

என்னடா இது பங்கர் வெட்டி கனகாலம் ஆயிட்டுதே? எப்ப தான் எங்கள் முன் காம்புக்கு குண்டு போடுவாங்கள்? நாங்களும் கஷ்டப்பட்டு பங்கர் வெட்டினதுக்கு பலனை அனுபவிக்கலாம் என்று கவலைப்பட்டுக்கொண்டு இருந்தபோது தான் அந்த நாளும் வந்தது. அது ஒரு மாசி மாசத்து காலை. 1991 என்று நினைகிறேன்.

அன்றைக்கு காலையே ஏழு மணிபோல இரண்டு பொம்மர்கள் வந்து ஐந்தாறு தடவை ரவுண்ட் அடித்துவிட்டு போனது. பொம்மர் சுற்றும் போக்கை பார்த்தே அம்மா சொல்லிவிட்டார் இது நோட்டம் பார்க்க வந்திருக்கு. குண்டு போடாது என்று. நாங்களும் எங்கள் வேலைகளை பார்த்துகொண்டிருக்க தான், நாச்சிமார் கோயிலடியில் வசிக்கும் அப்பாவின் நண்பர் செல்வராஜா, அந்தக்காலத்தில் சிலோன் ஏர்போர்சில் வேலை செய்தவர் ஓடிவந்தார். அவர் வரும்போதே ஒரு அவசரம்.
“என்ன அவசரமாய் விடிய வெள்ளன இங்கால பக்கம்”
“சந்திரா, இப்ப FM கேட்டனான், பொம்மர் காரங்கள் இங்கால தான் குண்டு போட போறாங்கள்”
ஏன் அப்படி சொல்ற?
“கம்பசுக்க போட்டிடாத, அந்த காம்ப் பக்கத்து வீட்டில தாமரைக்குளம் இருக்கும், பார்த்து வை” எண்டு கதைச்சவங்கள்
தாமரைக்குளமா அது எங்க இருக்கு?
எங்கட பாங்கர் நடராசா, வீட்டு முற்றத்தில கண்டறியாத தாமரை குளம் வச்சிருக்கிறான் இல்ல? குண்டு போட்டா அங்கேயும் விழாது, காம்பிலேயும் விழாது, பின் வீடு, உன்ர வீட்ட தான் விழும்
சும்மா விசர்க்கதை கதைக்காத, அந்த சின்ன குளம் மேல இருந்து தெரியுமே, நீ சும்மா எதையோ கேட்டிட்டு.
சொல்றத சொல்லிப்போட்டன், சும்மா நடப்பு காட்டாம, இண்டைக்கு மட்டும் கொக்குவில் பக்கம் போய் இருங்க
எங்களிட்ட நல்ல பங்கர் இருக்கு, பார்ப்பம்
செல்வராஜா அங்கிள் போய்விட்டார். அப்பா டென்சன் ஆகவில்லை. ரேடியோவை எடுத்து பக்கத்தில் வைத்துக்கொண்டார். அம்மா உடனேயே அக்கம் பக்கம் விஷயத்தை சொல்லிவிட்டார். நியூஸ் தீயாய் பரவியது. அம்மா அவசர அவசரமாக சமைக்க தொடங்கினார். வீட்டுக்கதவுகளை இப்பவே பூட்டு போட்டு மூடுவிட்டு முன் வாசல் மட்டும் திறந்து வைத்திருந்தார். தாலிக்கொடி, நகை பாக் ரெடி. அவசரத்துக்கு ஓட எல்லாமே ஆயத்தம். தூரத்தே பொம்மர் சத்தம் கேட்டது!


பொம்மர் வருது என்றவுடனேயே, எங்கள் பக்கத்துவீட்டு அன்னலட்சுமி கிழவி ஓடிவந்துவிட்டது. நாங்கள் போக முன்னமேயே அது பங்கருக்குள் போய் விட, நாங்கள் எல்லாம் உள்ளே போக தயங்கினோம். அந்த கிழவி சரியாக குளிக்காது. பக்கத்தில் போனாலே “தாழம்பூவே வாசம் வீசு” தான். ஆனா “அம்மா விறகு கட்டை எடுக்கட்டா?” என்று மிரட்ட, மூக்கை பொத்திக்கொண்டு ஒவ்வொருவராய் உள்ளே போனோம். பொம்மர் இப்போது ஒரு ரவுண்ட் வந்துவிட, அம்மா கேட்டை பூட்டிக்கொண்டு(பங்கருக்குள் இருக்கும்போது தான் கள்ளர் வருவாங்கள்), பங்கருக்குள் வந்தார். அப்பா இன்னமும் வெளியே தான்! கையில் FM ரேடியோவில் பொம்மர் காரனின் லைவ் கமெண்ட்ரி கேட்டுக்கொண்டு!

இரண்டாவது ரவுண்ட். எங்கள் ஏரியாவை அடிக்க போறான் என்பது தெரிந்துவிட்டது. நாங்கள் எல்லோரும், அப்பாவை வா வா என்று கத்த, அவர் இன்னமும் நடப்புக் காட்டிக்கொண்டு நின்றார்! சரியான frequency ஐ இன்னமும் ரேடியோவில் பிடிக்க முடியவில்லை. பங்கருக்குள்ளே இன்னொரு காட்சி ஓடிக்கொண்டு இருந்தது! எட்டடி நீள பங்கரில் ஆறுபேர் இருக்கிறோம். கிழவிக்கு பக்கத்தில் யாரும் போகவில்லை. கிழவி ஒரு உருத்திராட்ச மாலையை கையில் வைத்துக்கொண்டு “அப்பனே, முருகா, பிள்ளையாரப்பா” என்று எல்லா கடவுளுக்கும் பங்கருக்குள் வரும்படி இன்விடேஷன் கொடுத்துக்கொண்டு இருக்க, எமக்கோ நாற்றம் தாங்க முடியவில்லை. மேலே வேறு அவன் குண்டு போட்ட பாடில்லை. பாவிகளா ஏண்டா இந்த சுத்து சுத்திறீங்க? வந்தமா போட்டமா என்று போகவேண்டாம்?

மூன்றாவது ரவுண்ட், பதிகிறான். மாமரத்துக்கு மேலால் கிரீச்சிக்கொண்டு சத்தம், அரை வினாடி தான், “டம்டமாங்” என்ற பெருத்த சத்தத்துடன் குண்டு விழுந்து வெடிக்கிறது. பங்கர் வாசல் அப்பாவுக்காக திறந்து இருந்ததால் படீர் என்று காற்றும் புழுதியும் உள்ளே அடிக்க, எல்லோரும் ஏக நேரத்தில் அப்பாஆஆஆஆஆஆ என்று கத்தினோம். அண்ணா உடனேயே வெளியே போய் அப்பாவை பார்க்க எத்தனிக்க அம்மா அவனை உள்ளே இழுத்தார். குண்டு இன்னமுமே சிதறிகொண்டு இருந்தது. ஒரு சில சன்னங்கள் பங்கர் வாசல் மட்டும் வந்து விழுந்தன. தென்னங்குற்றிகளுக்கிடையே இருந்து மணல் அதிர்ச்சியில் சிந்திக்கொண்டு இருந்தது. தலை எல்லாம் மண். அப்பா என்ன ஆனார்?அம்மாவும் நாங்களும் கதறுகிறோம். இரண்டு செக்கன் இருக்கும், அண்ணன் சொல்வழி கேட்காமல் எழுந்து ஓடுகிறான். எங்களுக்கு டிக் டிக் என்று இருக்கிறது. கடவாய் எல்லாம் தன்னாலே அடித்துக்கொள்கிறது. நடுக்கம். விமானம் அடுத்த ரவுண்ட் வருகிறது. கொஞ்ச நேரத்தில் அண்ணா திரும்பி ஓடி பங்கருக்குள் நுழைகிறான். அவனுக்கு பின்னால் அப்பா பட படவென உள்ளே நுழைந்ததை பார்த்த பிறகு தான், எங்களுக்கெல்லாம் நெஞ்சுக்குள் தண்ணி வந்தது, அம்மாவை திரும்பி பார்த்தேன்.

அம்மா இன்னமுமே வீறிட்டு அழுதுகொண்டு இருந்தார். அப்போது பிறந்த குழந்தை போல!
The secret of the greatest fruitfulness and the greatest enjoyment of existence is: to live dangerously!
--Friedrich Nietzsche, The Joyful Wisdom

பின் குறிப்பு:
அது தான் இந்த பதிவின் கிளைமாக்ஸ். நாங்கள் பங்கருக்குள் இருக்கும் போது மேலும் மூன்று குண்டுகள் எங்கள் வீட்டில் விழுந்ததும், நல்ல காலம் அப்பா அந்த இடத்திலேயே விழுந்து படுத்ததால் உயிர் தப்பியதும், பின்னாலே நடந்த பல நூற்றுக்கணக்கான குண்டுவெடிப்புகளும், நான் பதுங்கிய பங்கர்களும், பல சுவாரசிய விஷயங்கள் என்று இந்த பதிவு தொடரலாம் தான். ஆனால் நீண்டுவிட்டது.
சென்ற வருடம், நான் யாழ்ப்பாணம் போயிருந்த போது, அந்த மாமரத்தடிக்கு போயிருந்தேன். பங்கர் இருந்த இடம் குப்பை போட்டு மூடியிருந்தது. அதற்குள் இருந்த கடவுள்களும், விளையாட்டுகளும், பயங்களும் … எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறோம்.