Author: கலை
•4:32 AM
சில சிலேடை வார்த்தைகளை இங்கே பகிர்ந்து கொள்ள நினைக்கின்றேன். யாழ்ப்பாணத்துத் தாத்தா, பேத்திக்குச் சொல்லிக் கொடுத்தது. ஒரே வசனத்தை வேவ்வேறு பொருளில் கூறுவது.

1. யாழ்ப்பாணம் வரவேற்கிறது என்று வைக்க வேண்டிய பதாகையில் "யாழ்ப்பாணம் வர வேற்கிறது" என்று எழுதி விட்டார்களாம். அதனை வாசித்தவர், "யாழ்ப்பாணம் வர, வேர்க்கும்தான்" என்றாராம்.

2. ஆசிரியர் "சீனி தின்றால் இனிக்கும்" என்று எழுதினாராம். உடனே மாணவன் "அதெப்படி, சீனி தின்ன, றால் இனிக்கும்?" என்று பகிடி விட்டானாம். காரணம், அவன் அர்த்தம் கொண்டது, "சீனி தின், றால் இனிக்கும்".

3. ஒரு கடையில் "இன்றுமுதல் தோசைக்கு சம்பல் இல்லை" என்று எழுதி வைத்திருந்தார்களாம். ஒருவர் வந்து சாப்பிடத் தொடங்கிவிட்டு, கொஞ்ச நேரத்தில் "சம்பல் கொண்டு வாங்கோ" என்றாராம். அதற்கு கடைக்காரர், "அதானே எழுதிப் போட்டிருக்கு. தெரியேல்லையோ?" என்றாராம். அதற்கு சாப்பிட வந்தவர், "இது இரண்டாவது தோசை எண்டதாலதான் கேக்கிறன். கொண்டு வாங்கோ" என்றாராம். அவர் வாசித்தது (அல்லது அப்படிக் காட்டிக் கொண்டது), " இன்று, முதல் தோசைக்குச் சம்பல் இல்லை" என்பதாகும்.

4. "வாரும், இரும், படியும்". இதனை "வாரும் இரும்படியும்" என்றும் சொல்லலாம்.

அடுத்தது சிலேடை இல்லை. ஆனாலும் உண்மையாக நடந்ததென்று தாத்தா கூறினார்.

முன்பு ஒரு தடவை (முன்னொரு காலத்திலே) அவரது தம்பியை அம்மா கடைக்கு அனுப்பும்போது, ஒரு துண்டில் எழுதிக் கொண்டு போகச் சொன்னாராம். அம்மா சொல்லச் சொல்ல, அவர் ஒரு சிறிய துண்டில் எழுதினாராம்.

அவர் எழுதியது இப்படி...

* தனிமல்லி,
* கால் றாத்தல் பனங்கட்டி,
* ரெண்டு குட்டான் விசுக்கோத்து

அவருடைய அம்மா உண்மையில் சொன்னது....

* தனிமல்லி - கால் றாத்தல்,
* பனங்கட்டி- ரெண்டு குட்டான்,
* விசுக்கோத்து
Author: கானா பிரபா
•4:20 AM
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஈழத்துமுற்றத்தில் பதிவிட வந்திருக்கின்றேன். இந்தப் பதிவில் விசேஷமாக ஈழத்துப் பேச்சுவழக்கில் உறவுமுறைகள் என்ற அம்சத்தை எடுத்து, வழக்கில் உள்ள சொற்களைத் தரலாம் என்றிருக்கின்றேன். ஒரு சில சொற்கள் எனது முந்திய பதிவிலும், சக குழுமப்பதிவர்களது பதிவுகளிலுமாக ஈழத்து முற்றத்தில் வந்திருக்கின்றன. இந்தப் பதிவில் விடுபட்டுப் போன மேலதிக சொற்களோடு அமையவிருக்கின்றது. அந்தவகையில் ஈழத்தில் உறவுமுறைகளை அழைக்கும் சொல்லாடல்களை அடுத்துப் பார்ப்போம்.

அப்பு - இந்தச் சொல் பொதுவாக ஒருவரின் தாய் அல்லது தகப்பனின் தந்தையை அழைக்கப் பயன்படும் உதாரணமாக பாட்டன் என்ற சொல்லுக்கு சம அர்த்தம் கொடுக்கும். ஆனால் நமது தலைமுறைக்கு முந்திய காலத்தவர் தமது பெற்ற தந்தையை அதாவது அப்பா என்ற சொல்லுக்குப் பதிலாக அப்பு என்றே வழங்கி வந்தனர். இன்றும் சிலர் தமது தந்தையை அப்பு என்றே அழைப்பர்.

"உன்னுடைய அப்பு எங்கே" என்பது "உன்ர கொப்பு எங்கை" என்று ஈழத்துப் பேச்சுவழக்கில் அமையும்

ஆச்சி- இந்தச் சொல் பொதுவாக ஒருவரின் தாய் அல்லது தகப்பனின் தாயை அழைக்கப் பயன்படும் உதாரணமாக பாட்டி என்ற சொல்லுக்கு சம அர்த்தம் கொடுக்கும். ஆனால் நமது தலைமுறைக்கு முந்திய காலத்தவர் தமது பெற்ற தாயை அதாவது அம்மா என்ற சொல்லுக்குப் பதிலாக ஆச்சி என்றே வழங்கி வந்தனர். இன்றும் சிலர் தமது தாயை ஆச்சி என்றே அழைப்பர்.

"உன்னுடைய ஆச்சி எங்கே" என்பது "உன்ர கோச்சி எங்கை" என்று ஈழத்துப் பேச்சு வழக்கில் அமையும்

அம்மான் - மாமா என்ற உறவுமுறைக்குச் சம அர்த்தத்தில் பாவிக்கப்படுவது. கூடவே ஒருவரை மரியாதையாக அழைப்பதற்கும் அதாவது நேரடி மாமா உறவு முறை இல்லாதவருக்கும் இது அழைக்கப்படும்.
"உன்னுடைய மாமா எங்கே" என்பதை "உன்ர கொம்மன் எங்கே" என்று பயன்பாட்டில் வழங்குவர்

பெரியப்பு - தகப்பன், அல்லது தாய் வழித் தந்தையின் உடன்பிறந்தோரில் மூத்த சகோதரரைப் பெரியப்பு என்று அழைப்பர். அதாவது தாத்தா/பாட்டாவின் மூத்த சகோதரர்

குஞ்சியப்பு - தகப்பன், அல்லது தாய் வழித் தந்தையின் உடன்பிறந்தோரில் இளைய சகோதரரைப் குஞ்சியப்பு என்று அழைப்பர். அதாவது தாத்தா/பாட்டாவின் இளைய சகோதரர்

சீனியப்பு - தகப்பன், அல்லது தாய் வழித் தந்தையின் உடன்பிறந்தோரில் கடைசிச் சகோதரரை குஞ்சியப்பு என்று அழைப்பர். அதாவது தாத்தா/பாட்டாவின் இளைய சகோதரர்

குஞ்சியம்மா - தகப்பன், அல்லது தாய் வழித் தந்தையின் உடன்பிறந்தோரில் இளைய சகோதரியை குஞ்சியம்ம என்று அழைப்பர். அதாவது தாத்தா/பாட்டாவின் இளைய சகோதரி

சீனியம்மா - தகப்பன், அல்லது தாய் வழித் தாயின் உடன்பிறந்தோரில் கடைசிச் சகோதரியை குஞ்சியம்ம என்று அழைப்பர். அதாவது தாத்தா/பாட்டாவின் இளைய சகோதரி

மேற்கண்ட உறவுமுறைகளை நேரடி இரத்த பந்தங்கள் தவிர்த்து மரியாதை நிமித்தம் வழங்கும் பொதுப்பெயர்களாகவும் கொள்ளப்படுகின்றன.
Author: ஹேமா
•1:30 AM
இஞ்சாரப்பா கவனிச்சியே ஒரு சிவப்பு பெட்டைக் கோழியொண்டு இஞ்சனேக்க எப்பவும் உலாவுது.அது ஆரிண்ட கோழியப்பா.தெரியுமே உனக்கு.

ஓமப்பா நானும் ஒவ்வொருநாளும் பாக்கிறன் எங்கட வளவுக்கதான் எங்கட கோழிகளோட திரியுது.இங்கதான் மரத்தில இரவிலயும் படுக்குதுபோல.ஆரும் இடம் பெயர்ந்து
போனவையின்ரயோ தெரியேல்ல.எதுக்கு இந்தக் கிழமையும் பாப்பம்.
ஏனப்பா பிடிச்சுக்கொண்டுப்போய் அம்மா வீட்டை கொண்டு போய் விடுவமே.கொஞ்சம் வளந்தாப்போல கொண்டுவரலாம்....சரியே.

என்னப்பா நீ்.....நான் மனசில வேற கணக்குப்போட்டு வச்சிருக்கிறன்.துணிபோட்டுப் பிடிச்சுச் சட்டிக்க வைக்கவெண்டு.........நீ என்னடாவெண்டா...!

சும்மாயிருங்கோப்பா.அது நல்லசாதிப் பேடுபோல இருக்கு. வளர்ந்து முட்டை போட்டா...பக்கது வீட்ல நல்ல வெள்ளடியன் சேவல்வேற நிக்குது ...பிறகு அடை வச்சுக் குஞ்சு பொரிக்குமெண்டு நான் கற்பனை பண்றன்.

அடி விசரி நீயும் உன்ர கோழிக்கனவும்....!

நீங்கள் பாருங்கோவன் ஒருநாளைக்கு எங்கட வீட்ல வெள்ளடிச் சாவல்ன்ர பமிலியே இருக்கும்.ஆசையா அடை வைக்க நான் ஒரு முட்டை கேக்கக்கூட உவள் சுமதி தரமாட்டன் எண்டவளெல்லே.

என்னவாலும் செய்து துலை. இங்க ஆராச்சும் படலை திறந்து வம்பு சண்டைக்கு வராம இருந்தாச் சரி.எப்பதான் நான் சொன்னதைக் கேட்டிருக்கிற நீ.நான் உன்னைக் கட்டி...உன்ர கொப்பருக்கு உதைக்கவேணும்.பாவம் வயசு போட்டுது எண்டுதான் பேசாமலிருக்கிறன்.இல்லாட்டி....

இல்லாட்டி இல்லாட்டி....கோழி பிடிக்கிறதுக்கும் அப்பருக்கும் ஏன் முடி போடுறியள் இப்ப...

அடி போடி கொப்பரை உதச்சு எதுக்கு.கள்ளக்கோழி அமத்திற
ஆக்கள்தானே நீங்கள்.....சரி சரி விடு !

இரண்டு மாசம் போனபிறகு....

ஏனப்பா ஆரெண்டாலும் தேடினவையே அந்தச் சிவப்பியை.சரியப்பா இண்டைக்குப் போய் அவள் சிவப்பியைக் கொண்டு வந்து விடுவமே.எதுக்கும் வேற கலர் பெயிண்ட் அடிச்சுக் கொண்டு வந்து விடுவமேப்பா.

நாசமாப் போக நீ.ஏன் அதைச் சாகடிக்கச் சொல்றியே.அதுக்குத்தானே அண்டைக்கே சொன்னனான் சட்டிக்க வைப்பமெண்டு.

ஏனப்பா பெயிண்ட் அடிச்சா என்ன.எங்கட புதுக்கோழியெண்டு
சொல்லலாமெல்லோ.உங்களுக்கு அறிவே இல்லையப்பா....

ஓமடி....ஓமடி உனக்கு நிறைஞ்சு வழியுது அறிவு.சும்மா கலர் அடிச்சா மழையில கழுவுப்பட்டுப் போகாதே.சரி கழுப்படாத பெயிண்ட் எண்டா கோழியிண்ட றெக்கை (இறகு) ஒட்டிக்கொள்ளுமெல்லே.

ஓம் எனக்கு விசர்தான்.எனக்கு யோசிக்க வரேல்லத்தானப்பா.சரி பின்னப் போய் கொண்டு வாங்கோ.அதை இப்ப அடையாளம் கண்டு பிடிக்க மாட்டினம்.அது வளந்திட்டுதப்பா.

கோழி கொண்டு வந்துவிட்ட கொஞ்ச நாளான பிறகு பிறகு....

இஞ்சாருங்கோப்பா....எங்கட சிவப்பியக் கவனிச்சீங்களே.உந்த வெள்ளடியன் சிவப்பிட்ட இங்க வருமெண்டு பாத்தா சிவப்பிய மெல்ல மெல்ல தன்ர வீட்டையெல்லே கொண்டு போய்ச் சேர்க்குது.ஒருக்கா அவையளிட்ட சொல்லி இஞ்சால கலைச்சுக்கொண்டு வாங்கோப்பா.நல்ல வடிவா வந்திட்டுது.நான் போய்க்கலைக்க என்னை உச்சுக் காட்டுது.இப்பிடியே அங்க பழகிட்டுது எண்டா அங்கயெல்லே முட்டை போடப்போகுது.நானும்
அடை வைக்கவெண்டு கனவு கண்டுகொண்டிருக்கிறன்.

ஓமடியப்பா நானும் கவனிச்சுக்கொண்டுதான் இருக்கிறன்.இப்பெல்லாம் அங்கதான் மினக்கெடுது எடுபட்டுப் போகப்போகுது.எவ்வளவு கஸ்டப்பட்டு சாப்பாடும் போட்டு வளத்துக்கொண்டு வாறம்.ஆனா ஒண்டு இந்தச் சாட்டில உன்ர கொம்மாவும் கொப்பரும் ஒரு கணக்கு ஒதுக்கிப் போட்டினம்.இருக்கட்டும் அவையள்.எனக்குச் செருப்பால குடுக்கவேணும்.என்னையும் கள்ளக்கோழி மாதிரியெல்லே அமுக்கிப் பிடிச்சனியள்.

ஓஓ...பெடிக்கும் கல்யாணம் செய்து குடுக்கப் போறம்.இப்பத்தான் உங்கட செருக்குக் கதை.வாயை மூடிக்கொண்டு கோழியைக் கலைச்சுக்கொண்டு வாருங்கோ முதல்ல.தம்பி அடுத்தமாசமளவில வாறனெண்டு சொன்னவனப்பா போன்ல.நான் சொல்ல மறந்திட்டன்.வந்தா இனி கொழும்புப் பக்கத்துக்கு விடாம இஞ்சனைக்க ஒரு வேலையப் பாத்துக்கொண்டு இருக்கச் சொல்லவேணும்.

எப்ப எடுத்தவன் தம்பி.எப்ப வாறானாம்.உது சரிவராது.இரு பிடிச்சுக்கொண்டு வாறன்.ஆக மிஞ்சிப்போச்சுதெண்டா தம்பி வந்து நிக்கேக்க கையைக் காலை முறிச்சுச் சட்டிக்கதான் வைக்கவேணும்.

இஞ்சப்பா கொதி வரப்பண்ணாதேங்கோ.சும்மா கறி...சட்டி எண்டுகொண்டிருக்காம போய்த் துரத்திக்கொண்டு வாங்கோ.

போய்க் கொஞ்ச நேரத்தில திரும்பி வாறார்....

இஞ்சாரப்பா....அங்க எங்க காணேல்ல சிவப்பியை.வெள்ளடி மட்டும்தான் நிக்குது.
வெங்காயமடி நீ...சொல்லச் சொல்லக் கேக்கேல்ல.அவளவை சட்டிக்க வச்சுப்போட்டாளவைபோல.இப்ப எனக்கும் இல்ல உனக்கும் இல்ல.....

என்னப்பா சொல்றியள்.நானும் 2-3 நாளாக் கவனிக்கேல்லத்தான் நானும்.கோதாரி போக அவளவை.வயிறு அவிஞ்சு கொள்ளையில போக.பாப்பம் இண்டைக்கு பொழுதுபட அடைய வருதோவெண்டு.

கோழி இரவாகியும் வரேல்ல மரத்தில அடைய. .....

அடுத்த நாள்...உந்தக் கோடாலி எங்கயப்பா.உந்த முருங்கை மரத்தை வெட்டிச் சரிக்கிறன்.பாவங்களெண்டுதான் விட்டு வச்சனான்.முழுக்கொப்பும் இஞ்சாலதான் சரிஞ்சு கிடக்கு.அவ்வளவு குப்பையும் நாங்கள் நித்தமும் கூட்டி அள்ளுறம்.அங்கனேக்க ஒண்டிரண்டு முருங்கக்காயைத் தானே நாங்கள் பிடுங்கிறம்.கீரையும் எப்பாலும் ஒடிச்சு எடுக்கிறம்.அவளவை எங்கட முழுக்கோழியையே திண்டு போட்டாளவையே.

சும்மா இரடி லூசி.....என்ன என்ன எங்கட கோழியோ....நல்ல பகிடிதான்.உந்த முருங்கை மரம் மாமரத்தால எங்களுக்கு எவ்வளவு லாபம்.இரவில கோழிகள் 2 அதிலதான் அடையுது.இரவோடஇரவா எவ்வளவு மாங்காயை பிடுங்கி வித்தனி.உதுகளை விட்டு வச்சிருக்கிறபடியால்தான் எங்கட 2 தென்னைமரத்தை விட்டு வச்சிருக்கிறாள் சுமதி.தேங்காய் அவைன்ர கிணத்துக்கையெல்லே அடிக்கடி விழுது.எத்தனை தரம் சொல்லிப்போட்டு விட்டு வச்சிருக்கிறாள்.
கோழியைக் காணேல்லயெண்ட கவலை எனக்கு மட்டும் இல்லையே.

பொறுங்கோ பொறுங்கோ நான் கண்டு பிடிக்கிறன் கள்ளரை.நாசம் விழ அவையளின்ர தலையில.நாளைக்கே போய் சாத்திரம் கேக்கிறன்.

மண்டைக்க சரக்கேதாலும் கிடக்கே உனக்கு.நல்லாப் போய்க் கேளு.எங்கப்பன் கொல்லைல இல்லயெண்டு சொல்ற மாதிரி கள்ளி நீதான் எண்டு சாத்திரி சொல்லும்.ஏனெண்டா கோழி எங்கடையில்லை.சும்மா கிடவடி.

இல்லையப்பா உவையளை விடப்படாது.கள்ளர்கூட்டம்.பாருங்கோவன் சரியாக் கண்டுபிடிச்சணெண்டா செய்வினை செய்து கையை அழுகப்பண்ணாட்டி நான் ...நான் இல்லை.சொல்லிப்போட்டன்.

எடி விசரி...எப்பிடியடி கண்டு பிடிப்ப.சும்மா புலம்பாதை.எங்களிட்ட தானா வந்த கோழிதானே.விடு.அவளவை கோழி இறக்கையைக்கூட குப்பையோட குப்பையா எரிச்சுக் கொளுத்தியிருப்பாளவை.அவையளை நான் வேற வழியால சரிப்படுத்துறன்.

உந்தக் கோழியின்ர யோசனைல வந்த கடிதத்தையும் மறந்திட்டன்.இந்தாப்பா தம்பியின்ர எழுத்துப்போல கிடக்கு.ஏன் போன் எடுக்காம கடிதம் போட்டிருக்கிறான்.

அதப்பா நான் அண்டைக்க்குக் கதைக்கேக்க இப்ப கிட்டடியில எடுத்த
போட்டோவொண்டு அனுப்பச் சொல்லிக் கேட்டனான்.அதாத்தான் இருக்கும்.இஞ்ச தாங்கோ.

அன்புள்ள அம்மாவுக்கு சுகம் சுகம்தானே.இன்னும் இரண்டு கிழமைல வாறன் உங்க.அம்மா அப்பா கொழும்பில இருந்து என்ன வாங்கிக்கொண்டு வரவேணும் நான்.சொல்லுங்கோ.கொண்டு வாறன். நானும் சாமான்கள் வாங்கி வச்சிருக்கிறன்.அப்பாவுக்கு ஒரு போனும்கூட.அம்மாவுக்கு கிரண்டரும் புது மொடல்ல.

அம்மா உங்களிட்ட நான் ஒண்டு சொல்லவேணும்.அம்மா நீங்கள் எனக்குக் கல்யாணம் பேசவெண்டு சொன்னியள்.நான் சொல்லப்போறதைக் கேட்டு கொஞ்சம் மனவருத்தம் உங்களுக்கு வரலாம்.அம்மா நான் இங்க ஒரு பிள்ளையக் காதலிக்கிறன் கொஞ்சக் காலமா.அவளைத்தான் கல்யாணம் செய்யவெண்டு சத்தியம் பண்ணிப்போட்டன்.நான் வரேக்க கூட்டிக்கொண்டு வாறன்.நல்ல வடிவாயிருப்பளம்மா.பழகிப் பாத்திங்களெண்டா உங்களுக்கும் பிடிக்கும் அவளை.திடீரெண்டு கூட்டிக்கொண்டு வந்தா உங்களுக்கு அதிர்ச்சியாப்போடும் எண்டுதான் இப்பவே சொல்றன்.ஒண்டுக்கும் யோசிக்காதேங்கோ.

சரியாப்போச்சு....தலையில இடி விழுகிறமாதிரி உவன் என்ன எழுதிருக்கிறான் எண்டு பாருங்கோப்பா.வீடு வாசல் நகை நட்டெண்டு நான் நல்ல சீதனத்தோட இஞ்ச கல்யாணம் பேசிக்கோண்டு தரகர்மாருக்கும் அள்ளிக்குடுத்துக்கொண்டு திரியிறன்.நாசமா போறன் எண்டு உந்தப் பெடி என்ன சொல்லுதெண்டு.

உதுக்குத்தான் சொன்னனான் கொழும்புப் பக்கம் அனுப்பாதயெண்டு.உனக்கு எல்லாத்திலயும் பேராசை.நல்ல சம்பளம் நல்ல வேலையெண்டு ஒற்றைக்காலில அவனோட ஒத்துப்பாடிக்கொண்டு அனுப்பின.அனுபவி.உதுக்கு நான் என்ன சொல்லக் கிடக்கு. எவளைக் கூட்டிக்கொண்டு வாறானோ.பாத்தியே நீ கள்ளக் கோழி அமத்திப் பிடிச்ச.எங்கட பெடியை யாரோ அமத்திப்போட்டாளவ.சரி கோழி துலைஞ்சமாதிரி திரும்பி எங்களிட்டயாவது வாறானே.அதுவே போதும் சந்தோஷம்.விடு.

அடுத்த பதினைஞ்சு நாள் போக...

தம்பி இண்டைகெல்லேப்பா வாறனெண்டவன்.சரி அவனுக்குப் பிடிச்சதாச் சமை.இப்ப என்ன அவன் அவளாரோ ஒருத்தியையும் கூட்டிக்கொண்டுவாறான்.கதைச்சுப் பாப்பம்.புலம்பாமச் சமை அவன் வந்திடுவான்.மெல்ல மெல்ல மாத்திப்போடலாம் அவனை.

சமையல் நடந்துகொண்டிக்கும்போதே ஒரு ஆட்டோ வந்து நிக்குது.....இஞ்சப்பா தம்பி வந்திட்டான் போல.இந்த அடுப்பை பாத்துக்கொளுங்கோ.சீலையச் சுத்துக்கொண்டு ஓடி வாறன்.சொன்னதைவிட நேரத்துக்கு வந்திடான்போல.வீட்டுக்குள்ள கூட்டிக்கொண்டு வாங்கோ.உங்க பக்கமெல்லாம் விடுப்புப் பாக்கும் சனம்.

ஆட்டோவிலிருந்து ஒரு வெள்ளைக்காரப் பெண்ணுடன் மகன் தன் ஒன்றரை வயதுக் குழந்தையோடு வந்து இறங்குகிறான்.வந்த மகனோடு பேசிச் சண்டை பிடிச்சுக்கொண்டிருக்கேக்க சிவப்பியும் 6 குஞ்சுகளோட வேலி நுழைஞ்சு வளவுக்குள்ள வந்துகொண்டிருக்குது.

ஏதோ என்னால.....இவ்வளவுதான் நகைச்சுவை முடியுது !
Author: ஃபஹீமாஜஹான்
•10:45 PM



மேசைமீது உருண்டோடும் பென்சிலை
"ஓடாமல் நில்" என அதட்டி நிறுத்தி
என்னுலகத்தைச் சரிசெய்தபின்
எனை அழைத்துக் கொண்டிருக்கும் குரலை
எதிர்கொண்டு தலை நிமிரும் தருணத்தில்
உங்களால் முன்வைக்கப் படுகின்ற
வினாக்களைச் செவியுற்று
வெகுவாகக் குழம்புகிறேன்
கரும்பலகையின் இருண்மைக்குள்
கண்ணெறிந்து தோற்கிறேன்
நான்,
பின்தங்கிவிட்ட சிறுமியாயிற்றே!


ஆசிரியரே..
உங்கள் உயர்மட்ட
அறிவு நிலைகளிலிருந்து
கீழிறங்கி வந்து
எனது இருக்கைதனில் அமருங்கள்
தங்களின் தேர்ச்சி மிகுந்த சொற்களை
தூர எறிந்துவிட்டுத்
திக்கித் திணறுகின்ற குரலொன்றினை
வழிகூட்டிச் செல்லுங்கள்
வளராப் பிள்ளை நான்



வகுப்பறையினுள்
வந்து விழுந்த நட்சத்திரங்கள்
உங்களைச் சூழவே இருப்பதனால்
இருளினுள் அந்தரிக்கும் என்னுலகில்
வீழ்வதேயில்லை
உம் கிரணங்கள்











எனது குறைபாடுகளை நீங்கள்
முன்வைக்கும் வேளை
தூக்கிவிடும் கரமொன்றையிழந்து
வீழ்ந்த கிணற்றினுள்ளேயே தத்தளிக்கிறேன்
ஏறமுனைகையில்
படிவரிசைக் கற்களோடு சரிந்து வீழ்வதுகண்டு
எனைச் சூழும் ஏளனச் சிரிப்பொலிகளைப்
புறந்தள்ளிவிட்டு
எதையுமினிச் சாதிக்க முடியாதெனப்
பற்றியிருக்கும் புத்தகங்களைக் கைநழுவ விடுகிறேன்



நான் என்ன செய்ய வேண்டுமென்றோ
எப்படி உருவாக வேண்டுமென்றோ
அல்லது
உங்களைச் சுற்றிவரும்
ஒரு பிரகாசமான தாரகையாக
மாறுவதெவ்விதமென்றோ தெரியவே இல்லை


கற்றுத் தாருங்களெனக்கு


கொம்புகளும் விசிறிகளுமாகப்
பயங்காட்டுகின்ற சொற்களுக்கும்
பெருக்கலும் வகுத்தலுமாக
இறுக்கமான வாய்ப்பாடுகளுக்குள்
வீற்றிருந்தவாறு
தீராச் சிக்கல் தரும்
எண்களுக்கும் மத்தியில்
முடங்கிக் கிடக்கிறதென்னுலகம்


எனக்கான கெளரவத்தையும்
என் விழிகளுக்கான ஒளியையும்
கண்டடைந்து கொள்ளவே
ஒவ்வொரு காலையிலும் வருகிறேன்
எனினும்
முதுகின் பின்னால் கிடந்த இருளை
என் முன்னே நடக்கவிட்டுப்
பயனேதுமற்ற
பளுமிகுந்த பொதியொன்றைச் சுமந்தவாறு
நிமிர முடியாப் பாதைகளினூடாகத்
தினந்தோறும் திரும்பிச் செல்கிறேன்



நீங்களும் ஒரு தேரோட்டி தான்
விபத்தின்றிக் கழிந்ததில்லை ஒருநாளும்
ஆனால்
மீள மீளக் காயப்படுவதெல்லாம் நான்தானே?


என்மீது குற்றப் பத்திரிகை வாசித்து
தினமும் தண்டனை வழங்கும்
சிறைக்கூடமே எனது வகுப்பறையெனின்
மன்னித்துக் கொள்ளுங்கள்
எப்போது மாறப்போகிறீர்கள் -
நீங்களும் ஒரு ஆசிரியராக ?

ஃபஹீமாஜஹான்
2011.02.21
Author: யசோதா.பத்மநாதன்
•4:15 AM


நேற்றய தினம் ’வானவில்’ என்ற அவுஸ்திரேலியக் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு ஒன்றை வாசிக்கும் வாய்ப்புக் கிட்டியது.அதில் இருந்த ஒரு கவிதை ஒரு கால கட்டத்து யாழ்ப்பாணத்து வாழ்வு முறையைக் கடித உத்தியில் சுவை படச் சொல்கிறது.

ஈழத்து முற்றத்துக்கு அது பொருத்தமாக இருக்கும் என்று கருதி அதனை இங்கே பதிவு செய்கிறேன்.



எந்தன் தேசத்தின் குரல் - எழுதியவர்;தெய்வீகன்


அன்புள்ள
நண்பனுக்கு,

குளிர்நாட்டில் இருந்து நீயனுப்பிய
துண்டு மடல் கிடைத்தது.
மகிழ்ச்சி.
நீ தமிழை மறக்காததையும் நினைத்து.

ஊர் புதினம் கேட்டு எழுதியிருந்தாய்.

பேச்சுவார்த்தை போலவே இங்கு
எதுவுமே நடக்கவில்லை

கொந்தல் மாங்காய் பிடுங்க நாங்கள்
கொக்கத்தடி களவெடுத்த
குமரேசன் பேர்த்தி பிரியாவுக்கு
போன வாரம் கலியாணம்.
கை நிறையக் காசோடு
பறந்து வந்த கனடாக் கணவான்
கொத்திக் கொண்டு போனான்.

வாசிக சாலை‘அமைச்சரவையில்’மாற்றம்
தண்ணீர்ப்ப்பந்தல் போட்ட காசில்
தண்ணி காட்டிப் போட்டர் எண்டு
பேரம்பலத்தாரைத் தூக்கியாச்சு

உனக்காக உன்னுடன் சேர்ந்து
நானும் கலைச்சுத் திரிந்த
பர்வதம் மகள் மைதிலி
இன்னும் காத்திருக்கிறாள்
றெஜீஸ்டர் பண்ணீட்டுப் போன
ஜேர்மன் மாப்பிள்ளை பார்த்து

தூக்குக் காவடியில் தொங்கும் போது
றோட்டோரம் நின்று சிரித்து
சிக்னல் கொடுத்த கலாவையே
எங்கட’புட்போல்’ கண்ணன்
கடைசியில கை பிடிச்சிட்டான்

கனகற்ற வளவுக்கு
சுத்து மதில் அடிச்சதால
எங்கட கிறிக்கெற் கோஷ்டி இப்ப
பள்ளிக்கூட வளவுக்கு
இடம்பெயர்ந்திட்டுது.


வழமை போலவே
வள்ளியரிண்ட வளவு
பங்குப்புளி உலுப்பும் போது
இம்முறையும் நல்ல சண்டை
ஊர் கூடி வேடிக்கை
இரண்டு பேரையும் பொலிஸ்
தூக்கிப் போச்சுது

நாங்கள் ஊமைக் கொட்டையால
எறிஞ்சு கால் முறிச்ச
கிடா மறி எல்லாத்தையும் வித்திட்டு
வடிவக்கான்ர வளவு வாங்கினதோட
இரண்டு மாட்டையும் வாங்கி விட்டிருக்கிறார்
குமார லிங்கத்தார்.

இறைப்புக்கு இஞ்சின் விட்டு
பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த தருமர்
மறைப்புக்கு மதில் கட்டிற அளவுக்கு
ரெண்டு பெடியளையும் சுவிஸுக்கு அனுப்பீட்டார்

முந்திப் பார்த்தா
மூஞ்சியைத் திருப்பிற பத்மா
இப்ப சாதுவா சிரிச்சிட்டுப் போகுது
புருசனோடு போகும் போது.

வேலியே பத்தி விடுமளவுக்கு
வேகிற வெய்யில்
வேறெ என்ன சொல்ல?

அலாரம் வைத்தெழும்பும்
அவதியான நாடெண்டாலும்
அடிக்கடி கடிதம் போடு
நீ வந்து போன சந்தோசம் வருமெனக்கு.

இப்படிக்கு,
இன்னும் இங்குள்ளவன்.

(நன்றி: வானவில்;தொகுப்பாசிரியர்.லெ.முருகபூபதி;அவுஸ்திரேலிய கலை இலக்கியச் சங்கம்;2007 ஜனவரி)


(கிராமத்துக்குத் திரும்பும் ஒருவன் தன் கிராமத்தை அண்டியவுடன் காணும் ஒவ்வொன்றையும் பார்த்து ஆற்றங்கர மரமே! அரச மர நிழலே...என்று பாடும் பாடலில் வரும் ஒரு கிராமத்து வாஞ்சையினை ஒத்ததாக இந்தக் கவிதை யாழ்ப்பாணத் தமிழில் கிட்டத்தட்ட போரின் ஆரம்பகாலத்து இளைஞரது வாழ்வியலை சொல்வதைப் போல அமைந்திருக்கிறது.)



சொல் விளக்கம்;பாரதத்துத் தமிழர்களுக்காக!




கொந்தல்: கிளி கோதிய,மரத்தில் இருக்கும் மாங்கனி.

கொக்கத்தடி:கூரான வளைந்த கத்தியுடன் கூடிய மிக நீண்ட தடி.(உயரத்தில் இருக்கும் கனிகளையோ குழைகளையோ வெட்ட இது பயன் படும்) அநேகமாக யாழ்ப்பாணத்து எல்லா வீட்டு வளவுகளிலும் இது இருக்கும்.

வாசிக சாலை: யாழ்ப்பாணத்து ஒவ்வொரு கிராமத்தின் மத்தியிலும் இது இருக்கும்.வாசிக்கும் சாலை; அதனால் வாசிப்பதற்குரிய பத்திரிகைகள்... போன்றன இருக்கும்.இளைஞர்கள் மாலையில் கூடி ஊர்வம்பு,அரசியல்..என்று பலவற்றையும் பேசும் இடமும் கூட.சமூக,கிராம முன்னேற்றம் கருதி அதற்கு தலைவர்,செயலாளர் என்றெல்லாம் ஆட்கள் இருப்பர்.’அமைச்சரவை’ என்று கவிதை குறிப்பிடுவது அந்த நிவாகத்தினரையே.

தண்ணீர்ப் பந்தல்: கோயில் திருவிழாக்காலங்கலில் பாதசாரிகள்,பக்தர்களுக்குப் பந்தல் போட்டு குளிர் பானங்கள்,மோர், தேசிக்காய் கரைசல் என்பன கொடுக்கும் இடம்.பாதசாரிகளுக்கு அது நிழலுமாகும்.

தண்ணி காட்டுதல்: ஏமாற்றுதல்

தூக்கியாச்சு: வெளியேற்றப்பட்டு விட்டார்.

வளவு: காணி

பங்குப் புளி உலுப்புதல்: புளிய மரத்தில் பங்கு போட்டு புளியம்பழம் பெற்றுக் கொள்ளுதல் ஒரு யாழ்.மரபு.அதில் சண்டைகளும் சாதாரணம்.ஒருவர் மரத்தில் ஏறி மரத்தை உலுப்பப் பழங்கள் கொட்டுண்ணும்.துணி அல்லது பாய் விரித்து அவற்றை எடுத்துக் கொள்வார்கள்.

பொலிஸ் தூக்கிப் போச்சுது: இந்த இடத்தில் பொலிஸ் கொண்டு போய் விட்டார்கள் என்ற அர்த்தத்தில் வரும்.

ஊமைக் கொட்டை: ஊமல் கொட்டை என்பதன் மருபு. இது காய்ந்த பனங்கொட்டையைக் குறிக்கும்.

கிடா:மறி: ஆண் ஆடு,மற்றும் பெண் ஆடு

இறைப்புக்கு எஞ்சின் விட்டு: யாழ்ப்பாணம் ஆறுகள் அற்ற வரண்ட செம்மண் பூமி. அங்கு கிணறுகள் வழியாகவே பாசனம் செய்யப் படுவது வளமை.சில ஏழை விவசாயிகளிடம் தண்ணீர் இறைக்கும் இயந்திரம் இருப்பதில்லை. அதனை வாடகைக்கு அவர்கள் பெற்றுக் கொள்வார்கள்.அதனைக் குறிப்பது இது.

பிழைப்பு: வருமானம்

முந்தி: முன்னர்

சாதுவா: கொஞ்சமாக

(இளைஞர்களிடையே இழையாக ஓடும் ஒரு நட்பின் அன்னியோன்னியம் அவற்றில் தொனிப்பது இக் கவிதையின் சிறப்பு.இப்போது மறைந்து போன ஒரு பண்பாட்டின் மிருதுவானதோர் இழையும் கூட.)
Author: ந.குணபாலன்
•10:34 PM





இதோ  நுப்பத்திரண்டு ஆண்டுகளின் முன்னே வீரகேசரி வாரவெளியீட்டில் வெளிவந்த நாலு கவிதைகள். நாலு கவிதைகளும் நாலு வெவ்வேறு கவிஞர்களால் எழுதப் பட்டவை. இரண்டு மாச கால இடைவெளியில் தொடர்கதை போல வெளிவந்தவை. வாசித்து மகிழுங்கள்.



புதிய காரோடு வருவேன்>பொறுத்திருங்கள்!

ஆக்கம்:செ. குணரத்தினம்
வீரகேசரி 09.09.79




மதிப்புள்ள எனதருமை
மாமாவே!
         தங்களது
இனிப்பான கடிதம் கண்டேன்..
என்றாலும் எந்தனற்கு
இனிமேலும் முத்திரைகள்
ஒட்டாமல் அஞ்சல் ஒன்றும் 
அனுப்பாதீர்! அனுப்பிவைத்தால்
அதைஎடுக்க முடியாது.


புனிதாவின் வயதுகூடிப்
போகுதென்றும், அவளுக்கென்மேல்
பிரியமென்றும், பேத்தியொன்றைப் 
பார்க்க மாமி  ஆசைகொண்டு  
உருகுகின்றாள் என்றும் சொன்னீர்!
இவர்களது ஆசைகளை
நிறைவேற்றி வைப்பேன்! இன்னும் 
நாலாண்டு பொறுத்திருங்கள். 

கையிலே பணமில்லாமல்
கலியாணம் முடித்தால் வாழ்க்கை
மையிருளாய் மாறுமென்று
மாமா! நான் எண்ணுவதால்,
வையமே போற்றி வாழ்த்த
வெளிநாடு போயுழைத்து
தையலவள் புனிதாவை நான்
தப்பாமல் மணமுடிப்பேன்!

வடக்கு நாட்டான் மாப்பிள்ளையாய்
வருவா   னென்று  சாதகத்தில்
குருக்கள் சொல்லி இருப்பதாலே,
கவலையின்றிச் சிலவருடம்
பொறுத்திருங்கள்! என்னுடைய
புதியகாரைக் கொண்டுவந்து
மருமகன் நான் ஊரறிய
மணவறையில் வீற்றிருப்பேன்!






ஏங்க வைக்கலாமோ?
ஆக்கம்: மு. சடாட்சரன்
வீரகேசரி 23.09.79

என் ஆசை மருமகனே!
                                      நீ   வரைந்த அஞ்சல்,
இருமுறை நான் படித்தவுடன் எழுதுகின்றேன். உன்றன்,
பொன்னான கையொப்பம் இல்லாத கடிதம்
போடுகின்ற பழக்கத்தை விட்டுவிடும்! இனிமேல்.

முன்வரைந்த கடிதத்தில் முத்திரை நான் ஒட்டி
முச்சந்திப் பெட்டியிலே போட்டுவிட்டதுண்மை.
இன்று "உணவு முத்திரை"தான் ஒரே பேச்சே!
என்பதனால் தபாற்காரர் கையாடிடாரோ?....

நாலாண்டு பொறுத்திருக்கக் கூறுகிறாய் தம்பி!
நாலாண்டில் எவ்வளவோ நடந்துவிடல் கூடும்.
கோலோச்சும் மன்னவர்கள் குலைந்துவிடுவார்கள்.
கொடும்புயலும், பெருமழையும் அழித்துவிட நேரும்.
ஏலாமையால் மனைவி  வாட்டிலிருக் கின்றாள்.
ஏங்கியவள் அழுவதனைப் பார்க்கமுடி யாது.
காலையெழுஞ்   சூரியன்போலக் கன்னியெழி லோடு,
காத்திருக்கும் நங்கையைநீ ஏங்கவைக் கலாமோ?

வேலையொன்றுக் காகவேநீ வெளிநாடு போனால்,
வேல்சொடும், காரோடும் வருவேனென் கின்றாய்.
கூலிகளாய்      ஹொட்டல்களில் கோப்பைவெளி யாக்கிக்
கொண்டுவரும் பணங்காசை யார்விரும்பு வார்கள்?
ஏழைகளாய் வாழ்ந்தாலும் இழிதொழிலைச் செய்யோம்.
எவருக்கும் அடிபணியோம்! எங்களுயிர் மானம்
போலிகளாய் வாழ்வதிலோர் புண்ணியமும் இல்லை.
பொழுதுகளை வீணாக்கிப் புழுங்குவதும் தொல்லை.

நல்லிளைஞர் எல்லாரும் வெளிநாடு சென்றால்
நாம்பிறந்த பொன்னாடு நலிவடைந்து போகும்!
வல்லமையும், நல்லறிவும் வெளியேறி விட்டால்
வளமெல்லாம் வீணாகி வரண்டுவிடும் ஈழம்.
கல்வியறி வுள்ளவன்நீ காலம்வீ ணாகக்
கருதுவதோ? நம்நாடு கமத்தொழிலில் ஓங்கும்!
பொல்லாத ஆசைவழிப் போயுலை கின்ற
'பூர்சுவா' ப்பேய் மனப்பான்மைபூண்   டிருக்கவேண்    டாம்.

கையிலொரு காசுமில்லை என்கின்றாய் தம்பி!
காற்சட்டை சேட்டோடு சைக்கிளிலும் ஏறி
ஓயயாரமாய்ப் பவனி போகின் றீராமே?


 A Man Riding a Bike - Royalty Free Clipart Picture
ஒவ்வொரு நாளும்சினிமா பார்க்கின் றீராமே?
மெய்யாகக் கூறுகின்றேன் மினைக்கேடுதல் விட்டு
மேல்நாட்டு மோகமதும் தீரமுயல் வாய்நீ!
கையைக்காலை வருத்தி உழைப்பாயெம் போலே!
கவலையிலை.

                                      நலம் வேண்டும்,
                                      மாமா
                                      குழந்தைவேல்



மாமாவின் மகளுக்கு மடலொன்று வருகின்றது.
ஆக்கம்: குரு-இன்பம்
வீரகேசரி 07 .10 .79


அன்புநிறை மச்சாளுக்கு,
                                                          ஆசை அத்தான் எழுதுவது;
தலைக்குமேல் வெள்ளம் தடம்புரண் டோடும்போது
கலைபேசி யுன்னைக் களிப்பூட்ட வரவில்லை.
மாமாவும் அண்ணரும் மடல்போட்டுப் பேசுகிறார்,
மங்கையுனை அண்ணனுக்கு மணம்முடிக்க என்று.
இத்தனைக்கும் நம்கதையை ஏன்தான் மறைத்தாயோ?
இறுதியிலே சொல்லலாம் என்றிருக் கின்றாயோ?

தீப்பள்ளையக் கோவில் வனவாசத் திருவிழாவில்
கற்பூரச்சட்டி ஏந்திக் கன்னிநீ போகையிலே,
காவடியெடுத்து நானுந் தாளத்தோ டாடிவந்தேன்!
உருவேறிச் சாமி உக்கிரமாய் ஆடுதென்றார்!
உனைப்பார்த்ததால் அல்லோ அவ்வாட்டம் நான்போட்டேன்.
உண்மையில் யாரறிவார் உனையன்றி என் நடிப்பை?


கொம்மா முறுக்கிவிடக் கொப்பாநின் றாடுகிறார்.
மாமிக்கு என்னோடு மருந்துக்கும் விருப்பமில்லை.
முட்டாள், மடையன் என்றுமுடிவாகச் சொன்னாவாம்.
சுட்டாலும் வெண்சங்கு கரியாகப் போய்விடாதே!
நம்முடைய முடிவுபற்றிக் கொப்பருக்குச் சொல்லிப்பார்.
நலமில்லை என்றுகண்டால் வழியுண்டு கைவசத்தில்!

சீக்கிரமாய் மருந்துபோட்டுத் திருப்பிடலாம் நம்மிடத்தில்!
சீனியின் விலையிப்போ சிறகுவந் தேறிப்போச்சு.
உப்போதித் தருகின்றேன் சோத்துக்குள் சேர்த்துவிடு.
தப்பென்று இதைநீ தவறாக நினைத்தால்
வாடகைக் காரொன்றில் வந்துநான் நிற்கின்றேன்;
உடுத்த உடுப்போடு ஓடிவரச் சம்மதமோ?

மாமா வயலுக்கும் மாமிவாட் டிலுமென்றால்,
மாறாமல் இக்கடிதம் வந்துனக்குச் சேரும்.
தந்திபோல் உன்பதிலைத் தவறாமல் அனுப்பிவிடு.
நம்பியிருக் கின்றேன் நட்டாற்றில் விட்டிடாதே!
அண்ணனைப் பற்றியிங்கே அதிகம்நான் சொல்லவில்லை.
அவனிங்கே கமலஹாசன் அப்பாவுக்குச் சொல்லிவிடு.
                                                            
                                                                                          ஆசை அத்தான்
                                                                                           குஞ்சுத்தம்பி



மாமியின் மனக்குமுறல்!
ஆக்கம்: கோட்டையூர்க் கோகிலன்
வீரகேசரி 14 .10 .79


கரியமால் நிறத்தை வென்ற
கணவரே! என்னைப் பாரும்.
காலையில் எழுந்து நீங்கள்
கரவாகு வட்டை போனால்
மாலையில் திரும்பி வாறீர்.
மற்றவை அறிய மாட்டீர்.
பக்கத்து வீட்டில் உள்ள
பார்வதிப் பிள்ளை யோடு
பாஞ்சாலி கோயில் கொண்ட
பள்ளையம் போனாள் பிள்ளை.
கற்பூரச் சட்டி ஏந்தி
நம்மகள் வலம் வந்தாளாம்.
காவடி எடுத்த அந்தக்
கந்தையர் மகன் கண்டானாம்.
பிள்ளையைக் கண்டு அந்தப்
பேய்மகன் பட்ட பாடு
சொல்லிட முடியா தென்று
சொன்னாள் 'பாறி' தானே.
ஆலயம் கோயில் செல்லும்
ஆண்களோ மிகவும் மோசம்!
ஆண்கள்தான் மோசம் என்றால்,
பெண்களும் பெரிய மோசம்!
புயலினால் சிதைந்த வேலி
புதுப்பித்து மூன்று மாதம்.
எம்மகள் ஏறி ஏறி
இரண்டடி பதிஞ்சு போச்சு!


என்னடா புதின மென்று
எண்ணிநான் எட்டிப் பார்க்கக்
கண்ணாடி அணிந்து அந்தக்
கந்தையர் மகன்தான் நின்றான்.
"எனக்கவர் வேணும்" என்று
எம்மகள் துணிந்து சொன்னாள்.
"என்னடி சொன்னாய்?" என்று
ஏசியே இரண்டு போட்டேன்.
பிறகவன் வரவு மில்லை.
பிரச்சினை எதுவு மில்லை.

Author: சஞ்சயன்
•12:32 AM
எனது அப்பா ஒருபோலீஸ் அதிகாரி. மிகவும் கண்டிப்பானவர் என்றால் அது தவறு. அவர் மிக மிக கண்டிப்பானவர். அவரின் அப்பாவை விட மிகக் கண்டிப்பாக இருந்தார்.

நான் உருப்படுவதற்கு அது தான் ஒரே வழி என்று எங்கோயே கற்றுக்கொண்டார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. கற்றதை என்னில் பிரம்பின் மூலம் பரீட்சித்துப் பார்த்து  அடிக்கடி தன் அறிவு சரியானதா என்று தோன்றும் சந்தேகத்தை அவர் தீர்த்துக்கொள்வார். நானும் அவரின் அறிவுப்பசிக்காக அடிக்கடி அடிவாங்குவதும், அம்மாவும், எங்களை வளர்த்த எம்மியும் அப்பாவின் அறிவுப்பசி தீர்ந்ததும் ஆள் மாறி ஆள் எண்ணை பூசிவிடுவதும் அந்தக் காலத்தில் வழக்கமாயிருந்தது. அவரின் இந்த அறிவுப்பசி எனக்கு 14 - 15 வயதாகும் வரை தொடர்ந்தது.

தான் கற்று, பரிசோதித்தவை பிழைத்துப்போனதாலோ? அல்லது கட்டெறும்பு ஊர்ந்து கல்லுத் தேயுமா என்று நினாத்தாரோ என்னவோ அதன் பின் ஏனோ திடீர் என அடிப்பதை நிறுத்திவிட்டார். நானும் ஏன் என்று கேட்கவில்லை. இதனால் மூன்று விதமான நன்மைகள் இருந்தன.
முதலாவது, அவருக்கு இரத்த அழுத்தமும், கோபம் வருவதும் குறைந்து
இரண்டாவது, எனக்கு அவர் ” டேய் இங்க வாடா” என்று கத்தும் போது எனக்கு திசையறி கருவி தேவைப்படாமல் போனது
மூன்றாவது, அம்மாவுக்கும் எம்மிக்கும் ஒரு வேலை குறைந்தது மட்டுமல்ல, தேங்காய் எண்ணையும் மிச்சமாகியது.

அப்பா, சற்று கணகணப்பில் இருக்கும் போது ”பைலா” பாட்டு பாடுவார். தம்பி அவரின் செல்லப்பிள்ளை. வீட்டில் இருக்கும் ”லக்ஸ்பிறே”, சஸ்டஜின் டன்களை எடுத்து வர ஏவுவார். நானும் அவரது  கட்டளையை சிரமேற்கொண்டு நிறைவேற்றப் பழக்கப்பட்டிருந்தேன். அவரின் ”பைலா” உச்சஸ்தாயியை அடையும் போது அம்மா ”நல்ல கூத்து, போய் படுங்கோ” என்பார். ”சரிதான் போடி” என்பது போல் அம்மாவை கவனிக்காமல் பாடி, ஓய்ந்து பாயில் ஒரு மலை போல் சரிந்து, தாங்க முடியாத ஒலியில் குறட்டையுடன் தூங்கிப் போவார். எனது வாழ்வு மிக மகிழ்ச்சியாய் இருக்கும் அவர் ”தெளிந்து”, தலையிடி இன்றி, வாயில் கனகலிங்கம் சுருட்டுடன் எழுந்து நடமாடும் வரை.

அப்பாவிற்கு இரு நண்பர்கள் இருந்தனர். ஒருவர் அப்பாவுடன் யாழ்ப்பாணத்தில் படித்தவர். அவரால் மட்டுமே அப்பாவை ”டேய்” என்று ஓருமையில் கூப்பிட முடிந்தது. மற்றவர் எறாவூரில் இருந்தார். இந்த மூவரில் இருவருக்கு ”தண்ணியில்” கண்டம் இருந்தது எனக்கு பிற்காலத்தில் தெரிவரும் என்பது எனக்கு அப்போ தெரியவில்லை. எனது அப்பாவும், அவரின் பால்ய நண்பரும் குடியும் குடித்தனமுமாய் இருந்ததனால் குறைந்த வயதிலேயே போய்ச் சேர்ந்தார்கள். குடியைப் பற்றி ஒன்றாய் படித்தார்களோ என்னவோ?

அப்பா யாழ்ப்பாணம் வருத்திற்கு ஒரு முறை போய் வருவார். நாமும் அவருடன் போவோம். அந் நாட்களில் இலங்கையில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நெல், அரிசி எடுத்துச் செல்வது எனின் போலீஸ் ”பாஸ்” எடுக்க வேண்டும். எனது அப்பாவுக்கு அனுமதி எடுப்பது பெரிய வேலை இல்லை. ‌நாம் வெளிக்கிடும் நாள் காலை வரை ”பாஸ்” எடுக்கமாட்டார். பஸ் வர முதல் அவசராமாக போலீசுக்கு போவார். அனுமதியுடன் திரும்புவார். அவருக்கு அவ்வளவு மரியாதை என்று நீங்கள் நினைக்கக் கூடாது. அவர் போலீசில் தான் வேலை செய்தார். இந்த ”பாஸ்”களில் அவரின் கையெழுத்து தான் இருந்திருக்குமோ என நான் இப்போது சந்தேகிக்கிறேன்.

வரும் வழியெங்கும் அரிசி மூட்டையை விட்டு விலகமாட்டார். அவரோ துக்கி இறக்குவார். சுண்ணாகம் ஸ்டேசனில் அப்பையாவின் ”சோமசெட்” கார் நிற்கும். அதில் முன்னால் அப்பா ஏற பின்னால் அம்மா, தம்பி, தங்கை,எம்மி, நான் ஏறிக் கொள்ள, அப்பையா வாகனத்தின் முன்னால் போய் ஒரு கம்பியை என்ஜினுக்குள் விட்டு மூன்று முறை கோயிலை சுற்றுவது போல சுற்ற, கார் புக் புக் என்று ஸ்டாட் பண்ணும். அது ஸ்டாட் பண்ணாமல் இருந்து அப்பையா அதை சுற்றிச் சுற்றி அவருக்கு தலைசுற்றி நாங்கள் வேறு காரில் போன நாட்களும் உண்டு. போகும் வழியில் அப்பா கையை கதவுக்கு வெளியே தொங்க விட்டபடியே வருவார். அப்பையாவின் கார் உடுவில் ”லவ்” லேன் புளியடியை அடைந்ததும் அப்பாவின் விடுமுறை ஆரம்பிக்கும். எங்களுக்கும் தான்.

அப்பா வந்திருப்பதை அவரின் பால்ய நண்பர் எப்படித்தான் மணந்து பிடிப்பாரோ தெரியாது மானிப்பாயில் இருந்து அன்று மதியம் 2 - 3 மூன்று மணிபோல் சைக்கிலில் ஒரு கலன் ஒன்றறை கட்டியபடி, கலனில் பெரியவர்கள் குடிக்கும் பாலுடன் வருவார். எப்பிடியடா இருக்கிறாய்? என்று ஆரம்பிப்பார்கள். குசினிக்குள் அப்பாவின் அக்கா ” அறுவான் வந்திட்டான், இவன கெடுக்கிறது உவன் தான்” என்பார். அவரின் தங்கைகள் ”ஓம் அக்கா” என்பார்கள். பாட்டி பேசாதிருப்பார். அம்மா கண்டும் காணாதிருப்பார். மாலை ஆறு மணிக்கு நான் விளையாடி அலுத்து வரும் போது பால்குடித்த அசதியில் அப்பாவின் நண்பர் சைக்கிலை உருட்ட முடியாமல் உருட்டிக்‌கொண்டு போவார். அப்பா விறாந்தையில் களைத்து குறட்டையுடன் உறங்கியிருப்பார். பால் குடித்திருந்தாலும் மாமா நிதானமாய் ”பெற்றோல்மக்ஸ்” க்கு காற்றடித்துக்கொண்டிருப்பார்.  அப்பாவும், நண்பரும், மாமாவும் பால்குடிப்பதன் ரகசியம் எனக்கு புரிந்த போது 11 - 12 வயதிருக்கும். அதன் பின் அப்பாவின் பால்ய நண்பர் வந்து போகும் போது அவரின் சைக்கிலுக்கு அடிக்கடி காற்றுப் போகத்தொடங்கியிருந்தது. தள்ளிக்கொண்டு போகும் சைக்கிலுக்கு காற்று தேவையா என்ன?

இதே மாதிரி ஏறாவூரிலும் பால் குடிக்க வந்த நண்பரின் சைக்கிலுக்கு வைத்தியம் பார்த்திருக்கிறேன். அவர் ஊரறிந்த பெருங்குடிமகன். நிதானம் தவறுவதை அவர் மிக நிதானமாகச் செய்வார். அவரின் அகராதியிலேயே நிதானம் என்னும் சொல் இருக்கவில்லை. இன்றும் அவரின் ”சொல் வங்கியில்” நிதானம் பதியப்படவில்லை. இனியும் அது பதியப்படும் என்ற நம்பிக்கை நிதானத்துக்கும் இல்லை, எனக்கும் இல்லை. அவர் இன்றும்  (2011) உயிருடன் இருப்பது உலக அதிசயங்களில் ஒன்று. சில வருடங்களுக்கு முன் அவரைச் சந்திக்கக் கிடைத்தது. ‌உன்ட அப்பா இல்லாதது ஒரு கையுடைந்தது போலிருக்கிறது என்றார். எனக்கு அது ”ஒரு கிளாஸ் இல்லாதது” என்று கேட்டமாதிரி இருந்தது. ”நண்பேண்டா” என்பது இதைத் தானோ?

அப்பா 14 - 15 வயதில் எனக்கு அடிப்பதை குறைத்துக் கொண்டாலும் எம்மால் பழையதை மறந்து சமாதானமடைய முடிவில்லை. அதற்கு எனது ஹோர்மோன்களும் ஒரு காரணம் என்று பிற்காலத்தில் அறிந்து கொண்டேன். அப்பா வீட்டுக்கு பின்னால் தோட்டம் செய்தார். வாழை, மிளகாய், கத்தரி, தக்காளி என இருந்தது அது. அது ஒரு மிக மிகச் சிறிய தோட்டம். ஆனால் அப்பாவோ அது பெரிதொரு  ஏக்கர் கணக்கிலான தோட்டம் என்பது போல காலையில் கனகலிங்கம் சுடுட்டுடன் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டேயிருப்பார். அவர் தோட்டத்துக்குள் நிற்பது கத்தரிவெருளிக்கு பதிலாக ஒரு போலீஸ்காரன் நிற்பது போலிருக்கும் எனக்கு. மெதுவாய் எனக்குள் சிரித்துக் கொள்வேன்.

அப்போ நாம் ஏறாவூரில் இருக்க, அப்பா பொலன்நறுவையில் வேலை செய்யவேண்டி வந்தது. காரணம் அப்பா புட்டி புட்டியாய் குடித்த பால் தான். பால் குடித்த சந்தோசத்தில் உள்ளூர் பாராளுமன்ற உறுப்பினரை இவர் ”மிக மிக அன்பாய்” அழைத்ததால், அவர் சற்று சூடாகி அப்பாவை தண்ணியில்லா காட்டுக்கு அனுப்புவதாக நினைத்து, ‌பொலன்நறுவைக்கு அனுப்பியிருந்தார். அப்போ எனக்கு 15 வயதிருக்கும். அப்பாவுக்கு  எமன் பரலோகத்துகு இன்விடேஷன் எழுதிக்கொண்டிருந்ததை அவரோ, நாமோ அறிந்திராத காலமது.

ஒரு நாள் காலை நல்ல தூக்கத்தில் இருக்கிறேன் அம்மா ”டேய், எழும்பி கம்பராமாயணத்தை படி, அடுத்த மாதம் ஓ.எல் டெஸ்ட் எல்லோ” என்றதும் கம்பனிலும், அம்மாவிலும் பயங்கர கோவம் வர, ”ம், ம்”   என்றுவிட்டு மீண்டும் சுறுண்டு கொண்டேன். ”தேத்தண்ணி வைச்சிருக்கு” எழும்பு என்ற போதும் நான் எழும்பவில்லை. முதுகில் ஒரு அடி விழ, நிதானமில்லாத அந்த வயதில் தலை வெடிக்கும் கோவத்துடன் குசினிக்குள் ஓடி, தேங்காய் உடைக்கும் பெரிய பிடி போட்ட கத்தியை எடுத்தேன். கதாயுதத்தை எடுத்த பீமன் போல் அதை தூக்கினேன். அம்மா விறைத்து விளி பிதுங்கி தள்ளியே நின்றார். அப்பாவின் தோட்டத்துக்குள் புகுந்து வாழை மரங்களை ”கம்பனின் தலை” என்று நினைத்துக் கொண்டு வெட்டினேன். அவையும் எதிர்ப்பின்றி சாய, எனக்கு வெறி இன்னும் ஏற, முழுத் தோட்டத்தையும் வெட்டிச் சரித்த போது தான் ” அட,  இது செல்வமாணிக்கத்தாரின் தோட்டமாச்சே, அவர் இன்று பின்னேரம் ரயிலில் வருவாரே” என்பது புரிந்தது.

இன்று எனக்கு ராகு உச்சத்தில் தான், தனது தோட்டத்தை கூட்டுக்கொலை செய்த என்னை  ”மனிசன்” தொலைத்து விடுவார் என்பது சர்வ நிட்சயமாய் புரிந்தது. வீட்டுக்குள் இடமில்லை என்பதால் வெளியில் வைத்துத் தான் தனது விளையாட்டைக் காட்டுவார். அருகில் இருந்த வீட்டில் என் வயதில் இரு பெண்பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களுக்கு தெரிந்தால் மானம் கப்பலேறிவிடுமே என்ற பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் முழுசிக்கொண்டிருந்தேன்.

மாலை ரயில் நிலையத்து போய் அழைத்து வந்து வீட்டில் இறக்கிவிட்டதும், எடுத்தேன் சைக்கிலை. இரவு 12 மணிபோல் வீடு திரும்புகிறேன். மனிதர் வீட்டில் இல்லை. அவசர அழைப்பு வந்து வேலைக்கு புறப்பட்டதாக அம்மா சொன்னார்.

பின்பு அம்மா, காலையில் தான் ஏன் அடித்தார் என்று விளக்கமும் தந்தார். அதில் நியாயம் இருப்பது புரிந்ததால் நான் தோட்டத்தை சூரசம்ஹாரம் செய்ததும் பிழை என்றேன். அப்பாவுக்கு தெரியுமா என்ற போது ”ஓம்”, ஆனால் அப்பா சிரித்தார் என்றார். அம்மா. தொடர்ந்து, அவரைப் போலவே உனக்கும் கோவம் வருகுதாம் என்றும்  சொன்னாராம், அத்துடன் ”அவன் வளர்ந்திட்டான் அவனை கதைத்துத் தான் திருத்தலாம்” என்றும் அம்மாவுக்கு அறிவுரை சொன்னாராம் என்றார் அம்மா.

அப்பாவிடமும் அழகிய பக்கம் ஒன்று இருப்பது புரிந்து, தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்றவரின் தோழமையை அனுபவிக்க ஆரம்பிக்க முதலே, இரண்டு மாதங்களின் பின் அப்பா இறந்துபோனார். அவரின் போதனைகளும், கோவங்களும் இன்னும் எனக்குள் இருக்கிறது. அப்பா இறந்த போது அவருக்கு 51 வயது. எனக்கு அந்த வயது வரும் போது கோவம் வராதிருந்தால் அப்பா மகிழ்ச்சியடைவார் என்று நம்புகிறேன். இன்றும் 5 வருடங்களுக்குள் எனக்கு பெரும் பொறுப்பு சுமத்தப்பட்டிருக்கிறது.