Author: ந.குணபாலன்
•12:25 PM

கொண்டல்மரமே! 

கொண்டல்மரமே! கொண்டல்மரமே! சுகந்தானே? 
நாங்கள் கும்பிட்டுக் கொண்டாடுந் தெய்வமே!
கொண்டல்மரத்தாச்சீ !  நீயும் சுகந்தானே?
மீண்டும் வந்துன்னை நேரில்
கண் நிறையக் கண்டு , மனம் ;
வேண்டிக் கும்பிட எனக்கும் வேளை 
எண்டைக்கு வருமோ?
சண்டி! சாமுண்டி! சண்டிகா பரமேசுவரி !

உடைஞ்ச ஊரும் ,
இடிஞ்ச வீடுகளும், 
புறிஞ்ச உறவுகளுமாக 
குடியழிஞ்ச நாடுமாச்சே!  
தேடித் திரிஞ்சு அலைஞ்சாலும்,
கூடிச்சீவிச்ச சாதிசனத்திலை பாதிசனம்;  
ஓடிப்போன இடம்   ஆர் கண்டது?
கூடி வாழ எங்களை எல்லாம் ஊருக்குக்   
கூட்டி வருவியே?
கொண்டல்மரத்தாச்சி!
சண்டி! சாமுண்டி! சண்டிகா பரமேசுவரி !



ஆரார் எங்கினை இருக்கினம்?
பூவும், பிஞ்சும், காயும் கனியும்;
கொப்பும், கிளையுமாய் ;
வேரோடும்,வேரடி மண்ணோடும்;
பாறிப் பிரண்டு போன 
பூமரம் எது?, மாமரம் எது?
ஆரார் மோசம் போவிட்டினம்?
அள்ளி எடுக்கவும்,
கொள்ளி வைக்கவும்,
ஆளில்லாமல் அனாதையாய்
ஆரார் போக்கறப் போச்சினமோ?
அறுந்துபோன காலம் போட்டு உலைக்க,
ஆரார் ஆய்க்கினை படுகினமோ ?
ஏதிலியாய் எல்லாமே கைபறிஞ்சு
ஆரார் ஏமாந்து சாகினமோ?
அதிட்டம் எண்டு நினைச்சு
அடுத்தவன் நாடு போய்
அல்லல் படுகினமோ? இல்லை
நல்லாயிருக்கினமோ? 
பழைய நடப்பெல்லாமே
மறந்து நடப்படிக்கினமோ?
மறக்கேலாமல் மறுகிச்சாகினமோ?
இல்லை போறபோற வழிவழிய
கடலுக்கும், கண்டந்தாண்டி ,
பனி மலைக்கும்
பனி மழைக்கும்
பசளையாய்ப் போச்சினமோ?
பரமேசுவரி உனக்கென்ன?
பாத்துக்கொண்டு ஒண்டுமே
பறையாமல் இருக்கிறாய்!
சண்டி! சாமுண்டி! சண்டிகா பரமேசுவரி!


இம்மளவு ஆய்க்கினை, அவத்தைக்கையும்
அம்மாளாச்சி வாசலுக்கு ஒரு
எட்டு எட்டி வந்து கற்பூரக்
கட்டி ஒண்டு கொளுத்தி மனசாறிக்
கும்பிடேலாமல் கிடக்கே எண்டு 
நாங்கள் தான் ஏங்கி நிண்டம்.
கோயில் மணி உடைஞ்சு போச்சே!
தேரும்,  சூரனும் நொருங்கிப் போச்சே! எண்டு
பிசத்தினதும், பினாத்தினதும் நாங்கள்தான்.
கிட்டக் கிழலைக்கும்,
அண்டாமல், அடுக்காமல்,
எட்ட எங்களை நிக்க வைச்சாய். உனக்கும்
வீட்டுக்காவல் வைச்சாய்!


செய்வினை வைச்சது ஆரெண்டு 
சாமியாடுகிற கோயிலுக்குச்
சாத்திரம் கேட்டுப் போனால்;
சாமி வந்து சன்னதமாடி,
“எல்லாமே என்ரை குஞ்சுதான்!”
எண்டு கூத்தாடும்.
அப்பிடித்தான் ஆச்சி நீயும் 
"கோழியும் எங்கடை, 
புழுங்கலும் எங்கடை"
எண்டு இருக்கிறியே?
அழுந்தி எங்கடை சனம் வதைபட
ஆய்க்கினை வைச்சதெல்லாம், 
உன்ரை சதியோ? தலைவிதியோ?
முன்னை நாங்கள் செய்த கறும வினையோ?
எங்கடை சனம் முண்டி விழுங்கின 
சங்கையீனமும், வேதினையும், வருத்தமும்,
கொஞ்சமோ? நஞ்சமோ?
கொண்டல்மரத்தாச்சீ!


ஆதரிச்சுக் கும்பிட்ட தெய்வம் எண்டு
ஆய்க்கினைப்பட்டு அந்தரிச்ச நேரத்திலைகூட
ஆருமே ஆச்சி உன்னைக் கூப்பிடேல்லையே?
செருக்குப் பிடிச்ச கூட்டமெண்டு எங்களை
சீர் குலைச்சுப் பாக்கிறியே?போன பிறவியிலை 
கறுமவினை செய்த கூட்டமெண்டு எங்களை
கந்தறுந்து போகக் கைவிட்டிட்டியே?
குட்டைபிடிச்சு கறுமப்படும் தெரு
நாய் படாப் பாடுபட
நமக்கு விதிச்சு வைச்சாய்!
நரகத்துமுள்ளு விதைச்சு வைச்சாய்! 


ஆரின்ரை கண்பட்டுது?
ஆர் வைச்ச வினையிது? மனம்
பரிதவிக்க, சதிரம் பதைபதைக்க 
உறவையும், உறுப்பையும், உடமையையும்;
பறி குடுத்த நேரத்திலை,
பலி குடுத்த நேரத்திலை;
ஆர் வந்தவை ஆதரிக்க?
சொந்தமெண்டு நினைச்ச தெய்வமெல்லாம்
சோதினைகள் செய்ததெல்லே?
கையெடுத்த சாமியெல்லாம்,
கல்லாகி நிண்டதெல்லே?
கண்டியே! நமக்கெண்டு வந்த
வெள்ளிடியை? வாழ்மானத்தை?
கண்மூடி நிண்டியே நீயுந்தான்!
சண்டி! சாமுண்டி! சண்டிகா பரமேசுவரி!


ஒண்டு மட்டும் பறைவம் கேள்!
"மலையான மலை போச்சாம்
மண்ணாங்கட்டி போனாலென்ன?" 
எண்டு மட்டும் கிடப்பமே?
ஏலாத காரியம் அதெல்லே? எங்களுக்காய்
மாண்டு போன மாணிக்கங்கள் போக;
மசானவெளி தாண்டித் தப்பி 
மீண்டு மிதந்து வந்த எங்கடை
சனமும், இளஞ் சந்ததியும்;
வேண்டி விரும்பி உன்வாசல் வந்து ,
கொண்டாடும் காலம் 
ஒண்டு வரும்! ஏழு கடலும் 
தாண்டி இருக்கிற எங்கடை சனம் 
எல்லாம் வரும்! எதிர்காலமும்
நல்லாய் வரும்!
கொண்டல்மரமே! கொண்டல்மரமே!
நிண்டு நிலைச்சு நீயும் வாழி!
கொண்டல்மரத்திலை குடிகொண்டவளே!
என்னதான் உன்னை நாங்கள்
ஏலாத் தன்மையாலை ஒருநேரம் 
இல்லை நீ சாமி எண்டு ஏசிப் பேசினாலும் 
எண்டைக்கும் எங்கடை மனங்களிலை,
கொண்டகோலம் குலையாமல்
குடிகொண்டவளே! கொண்டல்மரத்தாச்சீ!
சண்டி! சாமுண்டி! சண்டிகா பரமேசுவரி!
நிண்டு நிலைச்சு நீடூழி நீயும் வாழி! 

    



சொல்விளக்கம்


எங்கினை-எங்கே
எண்டைக்கு -என்றைக்கு

புறிஞ்ச-பிரிந்த
வருவியே?-வருவாயோ?
பாறி- விழுந்து
பிரண்டு-புரண்டுமோசம் போவிட்டினம்?-மோட்சம் போய் விட்டனர்?(மரியாதைச்சொல்) -இறந்து விட்டனர்?
போக்கறப் போச்சினம்?-போக்கு அறப் போனார்கள்?(ஆற்றாமையுடன் சொல்லுதல்)  -திரும்பி வராமலே போனார்கள்?
படுகினமோ?-படுகிறார்களோ?
கை பறிஞ்சு-கை பறிந்து, இழந்து
சாகினம்?- சாகின்றார்கள்?
அறுந்து போன காலம்-கேடுகாலம்,கெட்டகாலம்
போட்டு உலைக்க-பிடித்து ஆட்ட
பழைய நடப்பு -பழைய நினைவு
நடப்படிக்கினமோ? - மற்றவர்களை விட தான் உயர்ந்தவர் என்று நினைக்கிறார்களோ? 
மறுகிச் சாகினமோ?-மனம் குழம்பிச் சாகின்றார்களோ?
போறபோற வழிவழிய-போகின்ற வழிகளிலே
பசளையாய்-பசளையாகி,
மண்ணுக்கு உரமாகி
ஒண்டுமே பறையாமல்-ஒன்றுமே சொல்லாமல்
இம்மளவு-இந்தளவு
ஆய்க்கினை,அவத்தை-துன்ப துயரம்
அம்மாளாச்சி-அம்மாள்+ஆச்சி
ஒரு எட்டு எட்டி வந்து-ஒரு தரம்  நடந்து வந்து
பிசத்தினதும்-பிதற்றியதும்பினாத்தினதும்-அலட்டினதும்
கிட்டக் கிழலைககும்- அருகிலே
அண்டாமல்,அடுக்காமல்-சேர்க்காமல்

எட்ட நிக்க-தூர நிற்க
"கோழியும் எங்கடை புழுங்கலும் எங்கடை"  - கோழியும் எங்களுடையது (காயப் போட்டிருக்கிற) புழுங்கல் அரிசியும்
    எங்களுடையது" (தின்றால் தின்று விட்டுப் போகட்டும்)

கறுமவினை- கொடிய துன்ப வினை
சங்கையீனம்-அவமானம்
வருத்தம்- நோய்
ஆதரிச்சு கும்பிட்ட-விரும்பி வணங்கிய
கந்தறுந்து-கந்து(பற்றுக்கோடு-வாழ்வாதாரம்)+அறுந்து
கறுமப்படும்- துன்பப்படும்
சதிரம்-சரீரம்,உடல்
கையெடுத்த சாமி- கும்பிட்ட சாமி
கண்டியே?-கண்டாயோ?

வெள்ளிடி- இடி போலுந்துன்பம் 
வாழ்மானம்- மானம் கெட்ட வாழ்வு
மசானவெளி- மயானவெளி 



 
 
Author: வடலியூரான்
•4:18 AM
பயணங்கள்,சுற்றுலாக்கள்,உலாத்தல்கள் எப்போதும் மனதுக்கு சந்தோசத்தை வரவழைக்கக் கூடியவை.அதிலும் பிரிந்த உறவுகளைக் காணச் செல்வது என்பது இன்னும் ஒருபடி கூடுதல் சந்தோசத்தைத் தரக்கூடியவை தான்.எல்லாவற்றையும் விட போர்,தொழில்,படிப்பு எனப் பல காரணங்களினால் பிரிந்திருந்த/பிரித்துவைக்கப்பட்டிருந்த உறவுகளை,ஊர்ச்சொந்தங்களைக் காணச்செல்லும் போது மனதில் ஏற்படும் கிலேசம் அலாதியானது.அனுபவிக்க சுவையானது.ஆனால் அந்தப் பயணங்களே சோகமாய்முடிகின்ற சோகம் ஈழத்தில் மட்டுமே அரங்கேறமுடியும்.அப்படியானதொரு சோகமான/சுமையான அலைச்சல்ப் பயண அனுபவமொன்று தான் இந்தப்பதிவு.




கொழும்பிலிருந்து 2008/04/06 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு பத்து மணி தொடரூந்தில்(ரயில்)பல்கலை நண்பர்கள் பத்துப் பேர் ஒரு படையாய் திருகோணமலையை நோக்கிப் புறப்பட்டோம்.மறுநாள் காலை ஏழுமணியளவில், எங்களை தலைநகர் நண்பர்களான சைந்தனும்,பிரதீசனும் வரவேற்றனர்.வந்ததில், பாதி சைந்தனின் வீட்டிலும் மீதி பிரதீசனின் வீட்டிலுமாக தஞ்சம் புகுந்தது.சைந்தன் வீட்டில் என்னுடன் பால்குடி,றமணன்,தனேசன் ஆகியோர் தங்கினர்.சயந்தனின் அம்மாவின் அன்பான உபசரிப்பும்,கனிவான பேச்சும்,சுவையான சாப்பாடும்,நோகடிக்காத நக்கல்களும் ,மற்றும் சைந்தனின் அப்பா,தம்பியின் உதவி,ஒத்தாசைகளும் நன்றாகவே அனைவரையும் கவர்ந்தது.





திங்கட்கிழமை மதியமளவில் யாழ் நோக்கிய கப்பல் பயணத்தை ஆரம்பிக்கலாம் என்றே நாங்களனைவரும் கோணமலையில் கால்பதித்திருந்தோம்.ஆனால் எங்கள் எதிர்பார்ப்பெல்லாம் காங்கேசந்துறையிலுருந்து புறப்பட்ட கிறீன் ஓசன்(Green Ocean) கப்பல் கடற்காற்றுக் காரணமாக காங்கேசந்துறைக்கே திரும்பவும் அனுப்பப்பட்ட சேதி கேட்டுத் தவிடுபொடியானது.நாங்களும் கப்பல் வரும் வரும் என்று எதிர்பார்த்தே களைத்துவிட்டிருந்தோம்.




ஏழு தரம் கப்பல் பயணங்களுக்காக திருகோணமலை சென்றிருந்த போதும் அவ்வளவு பரிச்சயப்பட்டிராத திருகோணமலை நகர் வீதிகளில் நண்பர்களனைவரும் மிதிவண்டியிலும்(சைக்கிள்),ஈருருளியிலும்(மோட்டார்சைக்கிள்),நடையிலுமென நடையளந்தோம்.மாலைப் பொழுதை திருகோணமலைக் கடற்கரையில்(Beach)ஆனந்தமாய்க் கழித்தோம்.அன்றைய பொழுது பெரும்பாலும் பிரயோசனமற்றதாகவே கழிந்திருந்ததனாலும்,அடுத்தநாளும் கப்பல் வருவது உறுதியில்லை என்பது உறுதியாகத் தெரிந்திருந்ததனாலும்,அடுத்தநாள்ப் பொழுதை முற்கூடியே திட்டமிட்டிருந்தோம்.




முதல்நாள் போட்ட திட்டத்தின்படி செவ்வாய்க்கிழமை காலையில் ஒரு சிறிய ஹையேஸ் வாகனம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி,கன்னியா வெந்நீர் ஊற்றுக்குச் சென்றோம்.இலங்கைத் தமிழ் மன்னனான இராவணனால் அருகருகே அம்புகளால் துளைக்கப்பட்டு,ஆவி பறக்கும் சூட்டோடுடனொன்றும்,"ஆ.. குளிருது" எனக் கத்தச் சொல்லும் குளிரோடின்னுமொன்றுமென வெவ்வேறு வெப்பநிலைகளயுடைய நீரை அருகருகிலிருக்கும் ஏழு கிணறுகள் கக்குவகைக் கண்ணுற்று அதசயித்தோம்.





போகும் வழியெங்கும்,எம்மண் கபளீகரம் செய்யப்பட்டு,வரலாற்று சின்னங்கள், வரலாறுகள் சிதைக்கப்பட்டு,அடையாளங்கள் திட்டமிட்டு மறைக்கப் பட்ட,மாற்றப்பட்ட சோகங்களை,வலிகளை,வேதனைகளை,ரணங்களை,எமது இயலாமைகளையும் கூடவே நெஞ்சில் ஏற்றிக் கொண்டே சென்றிருந்தோம்.திருகோணமலை நெல்சன் திரையரங்கில் தனுசின் "யரடி நீ மோகினி" படத்தின் மதியக் காட்சியினைப் பார்த்தோம்.பின்னேரப் பொழுதுப் வழைமை போலவே பீச்(கடற்கரை),கொத்துரொட்டிக்கடை என கரைந்தது.




அடுத்த நாளும் என்ன செய்வதென்றே தெரியாத நிலை.ஆனாலும் அன்று கப்பல் வருவதற்கு அதிகளவு சாத்தியமுள்ளதாக கொஞ்சம் நம்பிக்கையான செய்தியொன்றினைக் கேள்வியுற்றோம்.ஆனாலும் உறுதி செய்யப் படாததால் அன்று புதன்கிழமை காலையிலே ஈழத்திலே பாடல்பாடப் பெற்ற தலங்களிலொன்றான திருக்கோணேஸ்வரத்துக்கு சென்றோம்.பாவிகளான எங்கள் இனம் வழிபடுவதலானோ என்னவோ கோணைநாதரும் பழைய டச்சுக் கோடை வாசலோடு வெளியே வரமுடியதவாறு அல்லது வெளியே வரவிருப்பமின்றி உள்ளேயே பூட்டப்பட்டுக் கிடந்தார்.எத்தனை தடைகள்,முள்ளுக் கம்பிகளின் உச்சப் பாதுகாப்போடு,உயர் பாதுகாப்பு வலயத்தில் அவர் அமைதியாக அருள்பாலித்துக் கொண்டிருந்தார்.




அமைதியான சூழலில்,அமைந்திருந்த ஆலயத்தையும்,கோணமலையிலிருந்து கொண்டு மூன்று பக்கம் தரையாலும்,ஒரு பக்கம் கடலாலும் சூழப்பட்டிருந்த திருகோணமலை நகரினதும்,சிறு குன்றுகளினதும் அழகையும்,போர்த்துக்கேயரால் இடித்தழிக்கப்ப்ட்டு கடலில் மூழ்கினாலும் வெளித்தள்ளிக் கொண்டிருந்த புராதன ஆலயத்தின் சில பகுதிகளையும் கண்ணுற்றவாறே திரும்பிவந்து கொண்டிருந்தபோது, கப்பல் வந்த சந்தோசச் சேதி கேட்டு,திருகோணமலைக் கச்சேரிக்கு(அரசாங்க அதிபர் இல்லம்-இந்திய பாசையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்)மூட்டை முடிச்சுகளுடன் ஓடினோம்.





தூக்குத் தராசில் நிறுத்து,எங்களது ஒவ்வொருவரது பொதிகளின் நிறையும் 30 கிலோவைத் தாண்டவில்லை என்பதை உறுதி செய்துகொண்டபின் அந்த "ஒன்றுக்கும் உதவாத" பஸ்களில் ஏறினோம்.துணையின்றி நடக்க முடியாத கிழவியென்றாலும் தன்னைவிடப் பெரிய மூட்டை முடிச்சுகளைக் காவிச்செல்லும் ஈழப்பரம்பரையில் வந்த நாங்கள் எல்லாரும் அந்த பஸ்களீன் அரைவாசிக்குமேல் நாங்கள் ஊருக்கு கொண்டு செல்லும் பெட்டி,படுக்கைகள்,தின்பண்டங்கள்,உடுதுணிகள்,ரயர்கள்,துணிகள்,சின்னப்பிள்ளைகளூக்கு விளைய்யாட்டுச் சாமான்கள் என அனைத்தாலும் நிரம்பியிருந்தோம்.





அனைவரும் ஏறியபிறகும் பட்டப்பகலில் நட்டநடு வெயிலில் வேர்க்க,விறுவிறுக்க,கால்கள் கடுகடுக்க பஸ்ஸினுள்ளே நின்றோம்.பின்னர் ஒருவாறாக 2 மணிக்கு புறப்பட்ட பஸ் படையணி சீனக்குடா துறைமுகவாசலை 30 நிமிடத்தில் அடைந்து,மீண்டும் அங்கு காத்திருக்கத் தொடங்கியது.ஒரு 10, கிலோமீற்றருக்கும் குறைவான அந்த பஸ்பயணத்துக்கு, ஆளுக்கு 100 ரூபாவும் ஒவ்வொரு பயணப்பொதிக்கும் மேலதிகமாக 100 ரூபா வீதமும் வாங்கிக் கொள்ளையடித்த உலகமகா கொள்ளைக்கூட்டம் சனத்திடம் காசைப் புடுங்கிச்சென்றது.தமிழில் தரச்சொல்லிக்கேட்டுத் தராவிட்டால்,சிங்களத்தில் மிரட்டுவதாய் இருந்தது அவர்களது உத்தி.





மீண்டும் சீனக்குடாவில் ஒன்று,ஒன்றரை மணிநேரக் காத்திருப்புக்குப் பின்னர் உள்ளனுமதிக்கப் பட்டோம்.எதற்கும் வரிசையில் நின்று பழகிய அல்லது வரிசையில் நின்றால் தான் உங்களுக்கு பிச்சையோ அல்லது ஏதுமோ தரமுடியும் என்று பழக்கப்பட்ட/அச்சுறுத்தப்பட்ட எமது சனம் பஸ் நிறுத்தப்பட்டதும் இறங்கி ஓடி வயதுவந்தவர்களையும் தள்ளிவிழுத்தி,பயணப்பொதிகளையும் ஏறி உழக்கிக்கொண்டு வரிசையிலே இடம்பிடிக்க செம்மறி ஆட்டுகூட்டம் போல ஓடியது.வரிசையிலே காய்ந்து கருவாடாகி பைகளையெல்லாம் எடுத்து எறிந்து,கொட்டிச்சிந்தி பயணப்பை சோதனை முடிய,உடற்சோதனை,அதுமுடிய கைத்தொலைபேசிகளைக் கையளிக்க அடுத்த வரிசை(கைத்தொலைபேசிப் பாவனையைக் கப்பலில் அனுமதித்தால் கப்பலின் நடமாட்டங்கள் தரவுகடத்தப்படலாம் என்ற முன்னெச்சரிக்கையாம் இது)என்று ஒரு பாடாகிப் போய்விட்டது.






தலையில் போட்ட தொப்பி தொடக்கம்,பேர்ஸுக்கையிருந்த நயினாதீவு நாகபூசணியம்மன் படம் வரைக்கும் ஒவ்வொன்றும் அக்குவேறு,ஆணிவேராகப் பிரிக்கப்பட்டு,ஒவ்வொன்றுக்கும் ஆயிரத்தெட்டுக் கேள்விகள் கேட்டுத் துளைத்தெடுக்கப்பட்டோம்.வீட்டுக்குக் கொண்டு செல்லவென வாங்கிவந்த ஷேவிங்க் ரேஸர்கள்,நெருப்பெட்டியள்,பிளேட்டுக்கள் என்று எங்கள் காசிலே வாங்கப்பட்ட பொருட்களெல்லாம் எல்லாம் எங்கள் கண்முன்னே எங்களைக் கேளாமலே தூக்கியெறியப்பட்டன(ராசாக்கள், ஏன் உங்களை கேக்கோணும்???).என்று இவ்வாறு முதற்கட்டச்சோதனை முடிந்தபின்னர் பஸ்களில் மீண்டும் ஏற்றப்பட்டு,துறைமுகத்தில் இறக்கப்பட்டு,மீண்டும் துறைமுகப் பாதுகாப்புப் படையினரால் அடுத்தகட்டச் சோதனை என்று,இதெல்லாம் முடிந்து கப்பலில் ஏற பின்னேரம் ஐந்தைத் தாண்டியிருந்தது.




அதற்குள்ளும் பஸ்களில் "உது நான் பிடிச்சு வைச்சிருந்த சீற்..நீ என்னெண்டு இருக்கலாம் எண்டு அதுக்குள்ளை குடும்பிபிடிச்சண்டை.எவ்வளவு தான் கஸ்ரம் வந்தாலும் எங்கடை சனம் திருந்த மாட்டுது எண்டது மட்டும் நிச்சயம்.கூடவே வந்திருந்த 400,500 சனமும் சோதனைகளை முடிச்சு கப்பல் வெளிக்கிடத்தொடங்க இரவு ஏழுமணியைத் தாண்டியிருந்தது.திருகோணமலைத் துறைமுகத்தின் இயற்கை அமைப்பையும்,அதன் வனப்பையும்,அதற்குள் அமைந்திருந்த,ஒளிந்திருந்த இயற்கையான பாதுகாப்பையும் பார்த்தபோது தான் ஏன் சர்வதேச,பிராந்திய வல்லூறுகள் அதையே வட்டமிடுகின்றன என்ற இரகசியத்தைப் பரகசியமாக்கியது.





கப்பல் துறைமுகத்தைவிட்டு மெதுவாக நகர்ந்து,பாதுகாப்புக் காரணங்களுக்காக கரையோரமாகச் செல்லாமல்,செங்குத்தாக நேரடியாக சர்வதேசக் கடலெல்லையினூடே பயணித்தது.நானும் அவ்வப்போது சென்ற இடங்களிலெல்லம் சாப்பிட்ட சாப்பாடுகள்,கப்பல் புறப்பட்டு,கப்பல் குலுக்கத் தொடங்கியதும் வயிற்றைக் குமட்டச்செய்தது.நானும் பேசாமல் சத்திக் குளிசைப்போட்டிட்டு சத்தம் போடாமல்ப் படுத்திட்டன்.கடற்காற்றினால் கப்பல் அலைகளால் தூக்கிவீசப்பட்டு,முன்னோக்கி குற்றிக்குற்றி எழும்பிப் போய்க்கொண்டிருந்தது.தண்ணி கப்பலின்றை மூன்றாம் தட்டுவரை எழும்பி அடித்தது.கப்பலில் சனமெல்லாம் மாறிமாறி கப்பலுக்குள்ளும்,வெளியிலும் சத்தியெடுத்துக்கொண்டிருந்தது.சத்தியெடுக்காவிட்டாலும் அந்தக் காட்சிகளைப்பார்த்தால் சத்தி தானாகவே வந்துவிடும்.சின்னப்பிள்ளைகளின்ரை ஓலம் காதைக்கிழித்தது.




கப்பல் அன்று பகல்முழுவதும் ஓடியது.உந்தா கரை தெரியுது.அந்தா கரை தெரியுது என்று யாரையாவது ஏமாற்றி எங்கடை இயலாமைகளை வெளிப்படுத்துவதைவிட வேறு பொழுதுபோக்கு எங்களுக்கு இருந்திருக்கவில்லை."கரை தட்டும்",தட்டும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த சனமெல்லாம் சோர்ந்தே போய்விட்டது.எங்கடை சனத்திடம் காசைத்த்ட்டிப் பறித்தசாதி,கப்பல் சிற்றுண்டிச்சாலையிலும் தேனீர்,சிற்றுண்டிகளை அகோரவிலைக்குவிற்று மீண்டும் காசை வாரிச்சுருட்டிக்கொண்டது.ஒரு தேத்தண்ணி(அது தேத்தண்ணியே இல்லை.கசாயமோ எந்தக் கண்றாவியோ தெரியாது)40 ரூபாக்கும்,ஒரு நூடில்ஸ் 80 ரூபாக்கும் விற்கப்பட்டது.சனத்துக்கும் இருந்த பசிக் கொடுமையிலை எதையாவது வாங்கிச் சாப்பிடவேண்டும் என்ற அங்கலாய்ப்பிலே அந்த ஒறுத்தவிலையிலும் வாங்கி தின்று குடித்தது.அது ஏற்கனவே வயிற்றுக்குள் இருந்த சாப்பாட்டையும் சத்தியாக கப்பலுக்குள்ளும் கடலுக்குள்ளும் எடுத்துத் தள்ளவைத்தது.




அதற்குள்ளும் அந்தச் சனங்கள்,கொழும்பிலையிருந்து வீட்டுக்குப் போகேக்கை நாலு அப்பிளாவது வாங்கிக் கொண்டு போகாட்டில் அதுகள் என்ன நினைக்குங்கள் என்று கப்பலில் இருந்த கன்ரீனில் அப்பிளின் விலையைக் கேட்டு தலையில் அடித்துக்கொண்டது.வெளியில் 20 ரூபாவுக்கிருந்த அப்பிள் அங்கு 60 - 100 வரை விற்கப்பட்டது. இப்படி கஸ்ரங்கள் எல்லாத்தையும் தாங்கிக்கொண்டிருந்த சனத்துக்கு கப்பல்,காங்கேசந்துறைத் துறைமுகத்தை நெருங்கி நங்கூரம் போட்டதால் பெரிய சந்தோசம்.அங்கும் மேலும் அரைமணித்தியாலக் காத்திருப்பு.



எங்கட சனத்தை எவ்வளவு நேரமும் காத்திருக்கவைக்கலாம் தானே.ஏனென்றால் அதுகள் என்ன சொன்னாலும் செய்யிற செம்மறியள் தானே?,அதுகளுக்கு வேறைவேலைவெட்டி இல்லைத்தானே,அதுகளுக்கு நேரத்தின் அருமை தெரியாதுதானே.இந்தச்சனம் அடிமைகள் போல்,ஆட்காட்டி விரலின் அசைவுகளுக்கெல்லாம் ஒத்திசைந்து,மசிந்துகொடுக்க வேண்டும் என்பது அவர்களின் நினைப்பு.நாங்கள் என்ன செய்ய? அந்தக் காத்திருப்புக்குப்பினர், காங்கேசந்துறைமுகத்திலிருந்து வந்த கடற்படைச்சுழியோடிகள் கப்ப்லின்கீழ் சுழியோடிச்சென்று கப்பல்வரும் வழியில் எந்தவொரு வெடிபொருளும் இணைக்கப்படவில்லை என்று கப்பலையும்,சனத்தைக் கப்பலுக்கை வைத்தே மீண்டும் ஒரு சோதனை செய்தபின்னர்,கப்பலைத் துறைமுகத்தினுள் உள்நுழைய அனுமதித்தனர்.




ஆனால் எமது துரதிஸ்டம்,ஒரே ஒருகப்பல் மட்டுமே கரை நெருங்கக்கூடிய காங்கேசந்துறைமுகத்தில் ஒருகப்பல் ஏற்கனவே சாமான் இறக்கிகொண்டிருந்ததால் நடுக்கடலில் நிறுத்திவைக்கப்பட்டு,வேறு கொள்கலன்களினால் தரையிறக்கப்பட்டோம். யாழ்மண்ணிலே எமது கால்பட ஏறத்தாழ 24 மணித்தியாலங்களை அதாவது ஒருநாளை நாங்கள் கடலிலே,கப்பலிலே செலவழித்தபின்னர், அடுத்தநாள் வியாழன் மாலை ஏழுமணியளவில் கால் பதித்தோம்.ஏற்கனவே 24 மணித்தியாலத்துக்குமேல் சாப்பாடு தண்ணியில்லாமல்,சாப்பிட்டதையும் சத்தியெடுத்து மிகவும் சோர்ந்திருந்த நாங்களே(இளைஞர்கள்)கப்பலிலிருந்த சாமான்களையிறக்கப் பணிக்கப்பட்டோம்.




எதிர்த்தவர்கள் கை ஓங்கப்பட்டு,சீருடைகளால் மௌனிக்கப்பட்டு அடிமைகள் போல் நடத்தப்பட்டனர்.சனமெல்லாம் சீருடையினரால் ஓட்டப்பட்டுக் கொண்டுவரப்பட்டிருந்த இலங்கை.போக்குவரத்துக்.சபை பஸ்களிலும் அவர்கள் கொண்டு வந்த பயணப்பொதிகள்,மற்றும் குடாநாட்டுக்கு வந்திருந்த தபால்கள்,மற்றும் சில தனியார் வியாபாரிகளின் பொருட்களும் காங்கேசந்துறைமுகத்துக்கு மா ஏற்றிச் செல்லவந்திருந்த லொறிகளிலும் ஏற்றப்பட்டன.கப்பலில் வந்திருந்த ஸ்கூட்டி பெப்(Scooty Pep) மோட்டார்சைக்கிளை தரையில் நின்றிருந்த லொறிக்கு ஏற்றச்சொல்ல உத்தவிடும் அதிகாரத்தை எங்களிடம் இல்லாத "கருவி" ஒன்று அவனுக்குக் கொடுத்திருந்தது.




ஒருவாறாக எல்லாம் ஏற்றப்பட்டபின்னர்,பஸ்களில் சனம் போக,லொறிகளில் சாமான் பாக்குகள்(Bags) தெல்லிப்பளை வரை பின் தொடர்ந்தன.அங்கும் அடுத்த சோதனை,பதிவுகள்,பாஸ் நடைமுறை,படமெடுப்புக்கள் என எல்லாம் முடிய இரவு 8.30 ஐத் தாண்டியிருந்தது.பின்னர் எங்களின் பொதிகளை எடுக்க லொறிகளுக்குச் சென்றால் 10 கிலோமீற்றருக்குப் பொதிகொண்டு வந்த கூலியாக ஒவ்வொரு பொதிக்கும் 100 ரூபா கேட்டான்கள்."நாங்கள் தான் ஏலாமல் இருந்தாலும் தூக்கி ஏத்தினாங்கள்.பிறகேன் எங்களிட்டையே காசு கேட்கிறியள்?" என்று ஏற்கனவே அலுத்துப் போயிருந்த 3 நாள் திருகோணமலை வாழ்க்கை,ஒருநாள் கப்பல் பயணம்,இந்த அலுப்போடை சாமானைத் தூக்கி ஏத்தவைச்ச ஆத்திரம் எல்லாத்தையும் சேர்த்துக் கேட்டால் "அதைப்பற்றி எங்களட்டைக் கேளாதையுங்கோ.100 ரூபா வந்து லொறியின் கூலி.ஏற்றுகூலியில்லையென்றான்.இந்த வாய்கலப்புக்களின் சத்தம் கேட்டு இரண்டு சோடி சப்பாத்துக்கள் எங்களை நெருங்கிவருவது தெரிகிறது.இப்போது எங்களுக்கு 100 ரூபா பெரிதில்லை.உதுக்குப் போய்க்கதைப்பது புத்திசாலித்தனமில்லை என்பது புரிகிறது.நிசப்தமகியவாறே காசைத் தூக்கி கடுப்போடு தூக்கி எறிஞ்சுபோட்டு பைகளைதூக்கிகொண்டு நடக்கிறோம்.





சரி எவ்வளவு கஸ்ரங்கள்,வேதனைகள்,கட்டுப்பாடுகள்,இருத்தியெழுப்புக்கள் எங்கள் வீடுகளூக்குப்போவதற்கு மட்டும் என்று எங்களையே நொந்துகொண்டு,விரக்தியின் உச்சியில் இன்றைக்காவது எப்பிடியும் வீட்டை போய் சேருறது தான் எண்டு 9 மணிக்கு ஊரடங்குச் சட்டம் அமுலாகும் இடத்தில் 9.05 அளவிலே தீர்மானித்து அங்கு எஞ்சிநின்ற அந்தக் "கடைசி" வாகனத்தையும் வாடகைக்கு அமர்த்தினோம்.அங்கிருந்து கிட்டத்தட்ட 30 கி.மீக்கு அப்பால் இருக்கும் எங்கள் பிரதேசத்துக்கு செல்ல நான்,பால்குடி,கருணையூரான்,கௌரி அண்ணா,பிரதாப் அண்ணா,சுரேஸ்,இரண்டு பெண் நண்பிகள் என 15 பேர் என ஒரே ஒரு வயது வந்தவரைத்தவிர எல்லா இளந்தாரிகளும் புறப்பட்டோம்.




நான் தெல்லிப்பளைக்கு வந்து சேர்ந்தவுடனேயே வீட்டே தொலைபேசி நான் வந்திறங்கியதைச்சொல்லியிருந்தபோதும், இன்றே வீட்டே வருகிறேன் என்று சொன்னால் பேச்சு விழும் என்றபடியால் யாழ்ப்பாணத்தில் எனது நண்பர்கள் வீட்டிலே தங்கிவருவதாக்வே சொல்லியிருந்தேன்.உண்மையிலேயே யாழ்ப்பாண நகர நண்பர்களான கழுவாவும்(கஜானந்) தனேசனும் தங்கள் வீடுகளில் இரவு தங்கிவிட்டு காலையில் செல்லுமாறே கேட்டிருந்தார்கள்.ஆனால் இன்றே எப்பிடியாவது வீட்டே போய்ச்சேர்வது என்று என்று எல்லாரும் முடிவெடுத்து ஒவ்வொரும் புறப்பட்டோம்.




ஒவ்வொரு சோதனைச்சாவடியிலும் உயிரைக்கையிலே பிடித்துக்கொண்டு,சில இடங்களில் நட்ட நடுவீதியில் சாமான்களைக் கொட்டிக்காட்டி,சில இடங்களில் அடிவாங்கப்பாத்து,பல இடங்களில் "அவர்களிடம்" பேச்சு வாங்கி வீடு போனோம்.அதுவும் ஒரு இடத்தில் அவன் நிறுத்தச் சொல்லியும் இரவிலே சரியாக கவனிக்காததால் நிறுத்தாமல் சென்றதால் பின்னுக்கிருந்து அவன் வானத்தை நோக்கி துப்பாக்கியைத்தூக்கி லோட்(Load) பண்ணிக்கொண்டோடிவந்தான்.அப்போது பக்கத்திலிருந்த கருணையூரான் நகைச்சுவையாகவோ அல்லது சீரியசாகவோ சொன்ன "வெடி வைச்சானெண்டால் பின் சீற்றிலை இருக்கிற நானும் நீயும் தான் முதலிலை போவம்" எண்ட அந்த சீரியசான ஜோக்கை நான் செத்தாலும் மறக்கமாட்டன்.அந்த நேரத்தில் அப்படித் தான் நிலமையிருந்தது.




பட்டப் பகலிலேயே பலரும் பாத்திருக்கச் சுடப்பட்டாலே "இனந்தெரியாதவகளால்" விரும்பியோ, விரும்பாமலோ உரிமைகோரும்/உரிமைகோரவைக்கப்படும் மண்ணிலே,ஊரடங்குச் சட்ட நேரத்திலே அதுவும் நிறுத்தச் சொல்ல்வும் நிறுத்தாமல் சென்றால் அந்தச் சூட்டுக்கு காரணத்தைக் கண்டுபிடிப்பது என்பதுவோ அவர்களுக்கு கடினமாய் அமைந்து விடப்போவதில்லை.காரணமில்லாத "எல்லாவற்றுக்கும்" காரணங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றபோது இது ஒன்றும் கடினமல்லவே. நாங்கள் சென்ற வழியிலே அந்தக் "கடைசி" வாகனம் மூன்று இடத்திலே நின்றது.



நட்டநடு நிசியினிலே,நாய்கள் குரைக்கையிலே,சுடுகாடு போல எங்கும் சனநடமாட்டமில்லாத, இருட்டுக்குள்ளை பாதையும் தெரியாமல் நாங்கள் அந்தரப்பட்டுப் போய்க்கொண்டிருந்தாலும், போற வழிகளில் எங்கன்றை வாகனம் நிக்கேக்கையெல்லாம் இறங்கித் தள்ளி ஸ்டாட்(Start) பண்ணிப் போகேக்கையெல்லாம் சத்தம் கேட்டு சனம் றோட்டு லைற்றைப் போடுதுகளேயொழிய ஒரு சனமும் ஆபத்துக்கு உதவுவதற்கு வர தயாரில்லை.அந்தளவுக்குப் பயப்படுத்தப்பட்டிருந்ததுகள்.என்ன செய்யிறது எண்டு எங்களது சனத்தின்ற நிலையை நினைச்சு நாங்களே தள்ளி ஸ்டாட் பண்ணிகொண்டு போய் வீடு சேர்ந்தோம்.



வீட்டை போய் இறங்க இரவு 12.30 ஆகியிருந்தது.வீட்டு வாசலில் நின்று கூப்பிட்டுப் பார்த்தேன்.எவரும் வரவில்லை.Bag ஐத் தூக்கி உள்ளேபோட்டுவிட்டு,மதிலாலை ஏறிக்குதிச்சு உள்ளே போய், உள்கதவு திறப்பு எங்கே வைப்பார்கள் என்பது என்க்கு ஏற்கனவே தெரியும் என்பதால் யன்னலைத் திறந்து, உள் கதவைதிறந்து கொண்டு உள்ளே போய் வீட்டுக்காரையெல்லாம் எழுப்பினேன்.ஒரு சாப்படும் வீட்டையிருக்கவில்லை.அகோரபசி வேறை.அதுக்குப் பிறகு தான் அம்மா புட்டு அவிச்சு தந்தாப்போலை அஞ்சாறு நாள்ச் சாப்பிடாததெல்லாத்தையும் ஒண்டாச் சேத்து ஒரு பிடிபிடிச்சிட்டுப் படுக்க 1.30 ஆகி விட்டிருந்தது.எனது வாழ்க்கையில்லே அந்தப்ப்யணத்தை செத்தாலும் மறக்கமாட்டன்.உதிலே இருக்கிற யாழ்ப்பாணத்துக்கு போக நாங்கள் கொஞ்ச நாள் பட்ட பாடு,படாதபாடு.உலகிலே வேறு எந்தவொரு இனமும் ஈழத்தமிழ்ச்சனம் மாதிரிக் ஒரு விசயத்துக்கும் கஸ்ரப்ப்ட்டிருக்கது.
Author: யசோதா.பத்மநாதன்
•9:24 PM
-பாடலூடாக ஒரு பயணம் -


உங்களில் அனேகமானோருக்கு தங்கத் தாத்தா.நவாலியூர் சோம சுந்தரப் புலவரைத் தெரிந்திருக்கும்.அவர் 1880ம் ஆண்டு ஆனி மாதம் 12ம் திகதி பிறந்தவர்.சிறுவர்களுக்காக அவர் பாடிய, ’ஆடிப்பிறப்பிற்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே கூடிப் பனங்கட்டி கூழும் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம்’ என்ற பாடலும் ’கத்தரித் தோட்டத்து மத்தியிலே நின்று காவல் புரிகின்ற சேவகா’ என்ற பாடலும் ’பருத்தித்துறை ஊராம் பவளக்கொடி பேராம்’ என்ற பாடலும் அவரை எங்களுக்கு நன்றாக ஞாபகப் படுத்த வல்லவை.


அவருடய கண்களினூடாக கொழும்பில் இருந்து வன்னியூடாக யாழ்ப்பாணம் போவோம் வாருங்கள்.



இப்போது நாம் நிற்பது கொழும்பு மாநகர்.இது நாம் புறப்படப் போகிற இடம்.காலை வேளை.கொழும்பு மாநகர் களையோடு திகழ்கிறது.நெய்தல் கரையோரம்.எல்லோரும் மக்களையும் மாளிகைகளையும் கடைகளையும் தான் கண்டு களிப்பர். இவருக்குத் தெரிவதோ கடற்கரை.கடலுக்கருகில் இருக்கிறது இந்தக் கரையோரப் பட்டினம் இவருக்கு இப்படிப் புலப்படுகிறது என்று பாருங்கள்.ஒரு கடற்க் காட்சி விரிகிறது இப்படி.

‘கலைப் பட்டினம் கரைப் பட்டினம்
கலப்பட்டினம் பெருமை
தலைப்படினம் வரை பட்டிடாத்
தலைப்பட்டினம் கொழும்பு’

கலைப் பட்டினம் கலைகள் மலிந்திருக்கிற பட்டினம்.அது ஓரு கரையோரப் பட்டினம்.கலப் பட்டினம்-அதாவது மரக் கலங்கள் நிறைந்திருக்கின்ற பட்டினம்.தலைப்பட்டினம் பெருமை தலைப்பட்டிரா பட்டினம்.அதாவது தலைப்பட்டினம் இனங்கள் கலப்புற்றும் பெருமை தலைக்கேறாத பட்டினம்.இதற்குப் பெருமை சொல்ல ஒரு பட்டினம் இல்லாத பெருமைக்குரிய பட்டினம். அது கொழும்பு தலைப்பட்டினம் என்கிறார் அவர்.

இந்தத் தலைப்பட்டினத்தில் இருந்து பேருந்து புறப்படுகிறது.செழிப்பான தென்பகுதியில் இருந்து பேருந்து புறப்படுகிறது. செழிப்பான காட்சிகளைப் பார்த்துக் கொண்டு வருகிறார் தங்கத் தாத்தா.அங்கே ஒரு காட்சி;பாடலில் விரிகிறது இப்படி;


‘சரிந்த வேங்கை முரிந்த கோங்கு
நகர்ந்த சாந்து விழுந்த வேய்
இரிந்த மிருகமெழுந்த பறவை
இழிந்த அருவி கழிந்தவே’

மங்கலந் திகழ் மாப்பிள்ளைமார் வர
மாமன் பக்கம் வரவெதிர் கொள்ளல் போல்
பொங்கும் வெள்ளப் புது மண நீர் வர
புரளு மீனிரை போயெதிர் கொள்ளுமே’



சரிந்து விளங்குகின்றன மலைகள்.அங்கே மலையின் பக்கமாக கோங்குகள் முறிந்து விழுந்து கிடக்கின்றன.அதற்கப்பாலே சந்தன மரங்கள் மூங்கில் காட்டின் பக்கமாக சாய்ந்து வளர்ந்துளள்ளன.அதற்குள் இருந்து மிருகங்களின் குரல் எழுகிறது.அதைக் கேட்டு பறவைகள் எழுந்தோடுகின்றன.இவற்றை எல்லாம் பார்த்தும் கேட்டும் கொண்டு அருவி நுரை புரள மலையிலிருந்து கீழிறங்கி வருகிறது.

அவ்வாறு விழுகின்ற அருவியைப் பார்க்கின்ற போது எப்படி இருக்கின்றதென்றால் மங்கலத்துக்குரிய மாப்பிள்ளைமார் வர மாமனார் பக்கம் வந்து எதிர்கொண்டழைப்பதைப் போல பொங்கிக் கரைபுரண்டோடும் புது மணல் நீரினை மீன் கூட்டம் போய் எதிர் கொள்கின்றனவாம்.இவ்வாறு செழிப்புற்றிருக்கிறது பூமி.பச்சைப் பசேல் என்று செழித்தோங்கியுள்ள பசுமையான மரங்கள். பெறுமதி மிக்க மரங்களும் கூடவே. அந்தச் செழிப்பின் நடுவே ஓரருவி. கரைபுரண்டு வெள்ளம் பாய இயற்கை தன் வனப்பை எல்லாம் கொட்டி வைத்திருக்கிறது அங்கே.

நாம் அவற்றை எல்லாம் தாண்டி வருகிறோம்.இப்போது காட்சி மாறுகிறது.வரண்ட மண்ணினூடு அனுராதபுரக் காடு வருகிறது.அது வரட்சியையும் கூடவே இழுத்து வருகிறது.



மனித நடமாட்டங்களும் குறைந்து போய் விட்டது. அது இன்னும் இயற்கையின் காட்டு வனப்பு முழுமையாக சூழ்ந்திருக்கிற தேசப்பரப்பு. வனத்தின் ஆரம்பம் இங்கு தான் இருக்கிறது.மெல்ல மெல்லக் காடுகள் கண்களுக்குப் புலனாகின்றன.ஆங்காங்கே குரங்குகள் தாவித் திரிகின்றன.அவை எதனையோ தேடித் திரிவதைப் போல தோன்றுகிறது. கொஞ்சம் பொறுங்கள் அது பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்கிறது.ஒரு குரங்கு இதோ ஒரு பெண்னை நெருங்கி வருகிறது.



‘வண்னானின் மொழி கேட்டு
வனம் விடுத்த சீதை தனை
இந் நாளும் தேடுதல் போல்
இக்குரங்கு நெருங்கிடுமே’

பெண்ணே கவனம். முன்பொருமுறை வண்ணான் ஒருவர் கதைத்த ஒரு சிறு சொல்லினால் தீக்குளித்து கற்புள்ளவள் என்று நிரூபித்து வருமாறு இராமனால் வனத்துக்கு அனுப்பப் பட்ட சீதையினை தேடுவதைப் போல இக் குரங்குகள் வருகிற பெண்களைப் பார்த்துத் திரிகின்றன.

நாம் சற்றே அவர்களிடம் இருந்து தப்பி சற்றே அப்பால் நகருவோம். மாங்குளம் இதோ வந்து விட்டது. அதுவும் காடுதான்.அது மிருகங்கள் சூழ்ந்திருக்கின்ற காடு. அங்கே

‘காமர் நெடுங் காட்டினிலே
காணுமொரு மாபுதினம்
மாமரைகள் ஒலி கேட்டு
தாமரைகள் ஆயினவே’


பெரிய மரைகள்(மானைப் போன்ற ஒருவகை ஜாதி)அவை சத்தம் வைக்கின்றன. அதனால் ஏனைய மரைகள் தா - மரை; தாவுகின்ற மரைகள் ஆகிவிட்டன.இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டு போகின்ற போது இதோ முறிகண்டி வந்து விட்டது.பேரூந்து நிறுத்தப் பட்டு விட்டது.பிள்ளையாரை தரிசித்து சற்றே சிரம பரிகாரம் செய்த பின் தான் பேருந்து நகரும்.நாம் இனி சற்றே இறங்கி, கால் கைகளை நீட்டிச், சற்றே சிரம பரிகாரங்களையும் செய்து தண்ணீரில் கால்முகம் கழுவிப் பிள்ளையாரை தரிசிப்போம்.




‘முன்னவன்செங் கைத்தனுவிற்
பாரதத்தைப் பொறித்த
முறிகண்டி வாரணத்தின்
முளரடி பணிவாம்’

இனி யாழ்ப்பாணம் கொஞ்சத் தூரம் தான்.இதோ பளை வருகிறது; பனை தெரிகிறது.பனை தெரிந்தாலே யாழ்ப்பாணம் வருகிறது என்று தானே அர்த்தம்.


கோணிலைகள் மாறிமழை வாரிவறந் தாலும்
கொடியமிடி வந்துமிக வேவருத்தினாலும்
தாணிழ லளித்துயர் கலா நிலைய மேபோல்
தந்துபல வேறு பொருள்தாங்கு பனையோங்கும்’

கோணிலை - கோள் நிலை.கோள்நிலைகள் மாறி மாரிமழை வரத் தவறினாலும் மிடி - வறுமை. கொடுமை மிக்க வறுமை வந்து மிக வருத்தினாலும் தான் நின்று நிழல் அளித்திடும் கலா நிலையத்தைப் போல பல பொருட்களைத் தந்து எங்களைக் காக்கும் பனை இதோ வந்து விட்டது என்பது பாடலின் பொருள்.

சரி அவற்றை எல்லாம் பார்த்தபடி இதோ யாழ்ப்பாணம் வந்து விட்டோம்.யாழ்ப்பாண பட்டினத்தின் சிறப்பென்ன தெரியுமா? அது ‘எண்சாண் உடம்புக்கும் சிரசே பிரதானம் என்பது போல பொன்னைப் போல சிறப்புற்றுத் திகழும் இலங்கைக்கு சிரசினைப் போல இருக்கிறது யாழ்ப்பாணம்.அது புண்ணிய பூமி.பாருங்கள் பாடலை,




‘எண்சாணுடம்பினுக்குச் சென்னி சிறந்திடும்
என்றே உரைப்பரது போல
பொன் சேரிலங்கை சிரமெனவே வரும்
புண்ணியமோங்கிடும் யாழ்ப்பாணம்’

இப்போது யாழ்ப்பாணம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது ஒருவாறு புலப்பட்டிருக்கும்.எண்சாண் உடம்புக்குச் சிரசினைப் போல இலங்கைக்கு யாழ்ப்பாணம் விளங்குகின்றது. அங்கே புகழ் பெற்றிருக்கிறது நல்லூர் கந்த சுவாமி கோயில். அங்கு வருவோர் எல்லாம் கந்தனைத் தரிசிக்காமல் செல்வதில்லை. வாருங்கள் சென்று நாமும் தரிசிப்போம்.

‘முன்னம் புவனேக வாகு மணி நல்லை
முன்னி வகுத்திடும் வேற் கோட்டம்
மன்னு முயிர்கட் கிருவகை நோய்கட்கும்
மருந்து கொடுக்கும் அருட் கோட்டம்’

முன்னம் - முன்னுதல் எண்ணுதல்.முன்னர் புவனேக பாகு என்ற மன்னன் நல்லையிலே அமைத்திட்ட வேல் கோட்டம். மண்ணிலே வாழுகின்ற உயிர்களுக்கு இருவகையான நோய்கள் வருவதுண்டு.ஒன்று உடல் நோய். மற்றயது ஆண்ம நோய்.அவ்வகையான இருவகை நோய்களுக்கும் மருந்து கொடுக்கும் அருள் கோட்டம் நல்லூர்.என்பது பாடலின் பொருள்.



இந்த நல்ல நாளிலே திருவிழாக் கொண்டாட்டத்துக்கு வருகின்ற பக்தர்களைப் போல ஈழத்து முற்றத்துக்கு நட்சத்திர அந்தஸ்து பொலிந்திருக்கின்ற இந் நன் நாளிலே இங்கு வருகிற எல்லோருக்கும் யாழ்ப்பாணத்து நல்லைக் கந்தனின் அருள் சித்திப்பதாக!

(பண்டிதமணி சி.கணபதிப் பிள்ளை அவர்களின் இலக்கிய வழி என்ற நூலில் இருந்து சம்பவங்கள் எடுத்தளப் பட்டுள்ளன. படங்கள் கூகுள் இமேஜ்.இரண்டுக்கும் நன்றிகள்)!
Author: வி. ஜெ. சந்திரன்
•1:38 AM
ஈழத்தில் உள்ள கோயில்களை ஆகம விதிக்கு அமைந்த கோயில்கள், ஆகம விதிக்கு அமையாத நட்டு புற கோயில்கள் என இரண்டாக பிரிக்கலாம். எண்ணிகையில் ஆகம விதிக்கு அமையாத கோயில்களே அதிகம் இருக்கும் என நினைக்கிறேன். இவை பொதுவாக குறிப்பிட்ட சில குடும்பங்களின் குலதெய்வ கோயிலாக/ உரித்து கோயிலாக இருக்கும். வைரவர், அண்ணமார், வன்னியர், வீரபத்திரர், காளி, அம்மன், நாகதம்பிரான் போன்ற தெய்வங்களே இப்படியான ஆகம முறைக்கு அமையாத கோயில்களில் குடியிருப்பார்கள். பூசைகளும் வாரத்துக்கு ஒருமுறை/ இருமுறை எந்த மந்திரங்களும் இன்றி கோயிலுக்கு உரித்துடைய குடும்பங்களில் எதாவது ஒரு குடும்பத்தை சேர்ந்த ஆண் பூசகராக இருந்து பூசை செய்வர். இப்படியான கோயில்களில் வருடாந்தம் பொங்கல் நடைபெறும்.

இந்த பதிவில் இப்படியான பொங்கல் நிகழ்வில் நடக்கும் வேறுப்பட்ட சடங்குகள் பற்றி பார்க்கலாம்.

எனது வீட்டுக்கு மூன்று வீடுகள் தள்ளி இருக்கும் ஒரு கோயிலில் நடைபெறும் சடங்குகளை அடிப்படையக வைத்தே இந்த பகுதியை எழுதுகிறேன். பல அடிப்படை விடயங்கள் இப்படியான நாட்டு புற கோயில் போங்கல்களில் பொதுவாக இருந்தாலும் வேறுபாடுகள் இருக்க சத்தியம் இருக்கிறது அவற்றை தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள். அத்துடன் இறுதியாக இப்படியான பொங்கலில் கலந்து கொண்டு கிட்டதட்ட 15 வருடங்கள் ஆகிறது.

பொங்கல் சடங்குகள் பொதுவாக மலை 6 மணி போல ஆரம்பித்து மறுநாள் காலை 6 மணி போல நிறைவு பெறும். நட்டு சூழ்நிலைகள் காரணமாக எனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள கோயிலில் 1995 ஆண்டுக்கு பின் பொங்கல் நடந்ததாக நினைவில்லை.



1 . விளக்கு வைத்தல்

விளக்கு வைத்தல் என்பது பொங்கலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் நடைபெறும். அன்றைய தினம் ஏற்றிய விளக்கு பொங்கல் முடியும் வரை அணையாது பேணப்படும்?? விளக்கு வைத்த பின் மலை நேரத்தில்/ இரவில் பெண்கள் மற்றும் சிறுவர்களை கோயிலை சூழ உள்ள இடங்களுக்கு போக கூடாது என்பார்கள். விளக்கு வைத்ததன் பின் குறிப்பிட்ட தெய்வம் கோயிலில் தங்கியிருக்காது இரவு நேரம் வெளியே உலவும் என்பது ஐதிகம் என நினைக்கிறேன். அப்படித்தான் யாரோ சொல்லி எனக்கு நினைவிருக்கிறது. உங்களில் யாருக்காவது வேறு கரணங்கள் தெரிந்தால் சொல்லுங்கள்.

2 . காவடி

பொங்கல் அன்று மலை அபிசேக பூசைக்கு முன்னதாக காவடி எடுக்கும் நிகழ்வு இருக்கும். காவடிகள் எனது விட்டுக்கு அண்மையில் இருக்கும் கோயிலில் பண்டம் எடுக்கும் இடத்தில் இருந்து தொடங்கும். பொங்கல் நிகழ்வுக்கும் காவடிக்கும் பறை மேளமே பயன்படுத்தபடும். காவடி பால் சேம்பு என்பவை கோயிலை அடைந்ததன் பின் அபிசேகம் பூசை என்பன நடைபெறும்.

3 . அபிசேகம்

காவடி, பால்செம்பு போன்றவற்றில் இருந்த பாலை கொண்டு அபிசேகம், பூசை நடைபெறும்.

4 . பண்டம் எடுத்தல்

அபிசேகம், பூசை முடிந்த பின் ஊர்வலமாக பண்டம் எடுக்க செல்வர்கள். இதன் பொது பெரிய திரிசூலம், பிரம்பு, சிலப்பு, இன்னும் சில பெயர் தெரியாத பொருட்களை (தண்டுகள், சலங்கைகள்) கோயிலில் இருந்து பண்டம் வைத்துள்ள இடத்துக்கு எடுத்து செல்வர்கள். பண்டம் எடுக்கும் இடம், கோயிலில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு வெறும் கணியில் பற்றைகளை துப்பரவாக்கி தற்காலிகமாக ஒரு சிறு பந்தல் போட்டிருப்பாருக்கும் இடம். பண்டம் என்பது பொங்கலுக்கு தேவையான போருடகளான அரிசி, வழைப் பழம், வளைந்துப் பனை, போன்றவை ஆகும்.

கோயிலில் இருந்து கொண்டு சென்ற திரிசூலத்தை பந்தலின் முன்னால் நடுவார்கள், பிரம்பு, மற்றைய பொருட்களை பந்தலில் வைத்து பூசை செய்வார்கள். இதன் பொது நன்கு பெண்களும் , பூசகர் உட்பட மூன்று ஆண்கள் சிலரும் உரு வந்து ஆட தொடங்குவார்கள். பூசகர் உரு ஆடும் பெண்களுக்கு சிலம்பு, பிரம்பு போன்ற பொருட்களை கொடுப்பார். ஒவ்வொரு வருட பொங்கலிலும் குறிப்பிட்ட பெண் சில குறிபிட்ட பொருட்களையே (சிலப்பு, பிரம்பு/ சலங்கை, தண்டு??) பெறுவார். பின் பூசகர் பண்ட பொருட்களை வளந்து வைக்கும் உரித்து உடையவர்களிடம் கையளிப்பர். திரிசூலம் முன்னே செல்ல உரு ஆடுபவர்கள், பண்ட பொருட்களை கொண்டு செல்பவர்கள் அதை தொடருவார்கள். (உரு ஆட்டம் காவடியின் போதும், அபிசேகத்தின் போதும் இருக்கும் ஆனால் உரு ஆடுபவர்களுக்கு எந்த விசேட பொருட்களும் கொடுக்கப்பட மாட்டாது.) பண்ட பொருட்கள் கோயிலை அடைந்ததும், உரு ஆடுபவர்களுக்கு பூசகர் நீர் தெளித்து உரு ஆட்டத்தை நிறுத்துவார். திரிசூலம் கோயிலின் வாசலின் ஊன்றப்படும். பண்ட பொருகள் பொங்கலுக்கு தயாராக ஒழுங்கு படுத்தி வைப்பார்கள். அத்துடன் பூசை ஓய்வுக்கு வரும்.

பண்டம் எடுக்கும் இடம் : இது கோயிலுக்கு கோயில் வேறுபாடும். வன்னியில் இருக்கும் புளியம் பொக்கணை நாகதம்பிரான் கோயில் (என்று தான் நினைக்கிறேன், இல்லை என்றால் சொல்லவும்) பொங்கலுக்கு யாழ் குடாவில் இருக்கும் எனது ஊரில் இருந்து தான் பண்டம் எடுத்து செல்வர்கள். இந்த பண்டம் எடுப்பு பொங்கலுக்கு சில நாட்கள் முன்பாக நடக்கும் என நினைக்கிறேன்.

5 . உரு ஆடுதல்

பொங்கல், மற்றும் விசேட பூசை தினக்களில் ஆண்கள், மற்றும் பெண்கள் தெய்வங்களால் ஆட்கொள்ள பட்டு ஆடுவதை குறிக்கும். இதற்கு பேச்சு வழக்கில் பேயாட்டம் , கலை வந்து ஆடுதல், சாமி ஆடுதல் என பல பெயர்கள் உண்டு. எனது வீட்டுக்கு அண்மையாக உள்ள கோயிலில் உரு ஆடும் எவரும் கட்டு சொனதாக ஞாபகம் இல்லை. ஆனால் வேறு சில கோயில்களில் உரு ஆடுபவர்கள் கட்டு/ அருள் வாக்கு சொல்வார்கள். உரு ஆடுபவர்கள் எண்ணிக்கை கோயிலுக்கு கோயில் வேறுபாடும்.

6 . வளந்து வைத்தல்/ பொங்கல்

பொங்கல் நாளில் போங்க பயன்படும் பனையை வளந்து பனை என்று சொல்வார்கள். வளந்து பனை நன்கு தொடக்கம் ஐந்து கொத்து அரிசி ( 1 கொத்து என்பது 4 சுண்டு, 1 சுண்டு என்பது மில்க் மெய்ட் பால் பேணியின் கொள்ளளவு) அவிய கூடிய இதற்கென்றே சிறப்பாக செய்யபடுகிற பெரிய பனையாகும். ஆனால் காலப்போக்கில் இந்த பனையின் அளவு சிறிதாகி விட்டது. வளந்து வைப்பவர்கள் கோயிலின் உரித்துகாரர் ஆக இருப்பார்கள்.

பண்டம் எடுத்து வந்ததன் பின் ஓய்வுக்கு வந்த பூசை அதிகாலை 4 மணியளவில் மீண்டும் ஆரம்பமாகும். வளைந்து பனையை உருவந்த பூசகர் உரித்து காரர்களிடம் கொடுப்பார். அதே நேரம் ஏனைய உரு ஆடுபவர்களும் உரு ஆடுவார்கள். பொங்கல் பொங்கி சூரியன் உதிக்கும் போது படையலுக்கு தயாராகிவிடும்.

பொங்கல் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.

7 . எட்டம் மடை / வைரவர் மடை

இது பொங்கல் நடந்து 3 நாள் அல்லது எட்டம் நாள் நடைபெறும். எட்டம் மடை எனும் பெயர் எட்டம் நாள் நடைபெறுவதால் தான் வந்தது என நினைக்கிறேன்.

எட்டம் மடை முடியும் வரை கோயில் வாசலில் ஊன்றப்பட்ட திரிசூலம் அப்படியே இருக்கும்.
எட்டம் மடைக்கு மோதகம், பொங்கல், வடை முறுக்கு என பலதரப்பட்ட பொருட்களும் செய்யப்பட்டு மடை வைக்கப்படும்/ படைக்கப்படும்.

பூசை, அபிசேகம் போன்றவற்றின் பொது உரு ஆட்டமும் இருக்கும். பூசை, பொங்கல் சடங்கை முடித்து வைக்கும் இறுதி சடங்காக வழி வெட்டல் நடைபெறும் (வழி வெட்டல் பொங்கல் அன்றும் இருக்குமா? எனக்கு சரியாக ஞாபகம் இல்லை).
பூசை முடிந்ததும் மடை பிரசாதம் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.

8 . வழி வெட்டுதல்

இதன் பொது கோயில் வாசல், கோயிலிற்கு பண்டம் எடுத்து வந்த பாதையில் உள்ள நாற்சந்தி ஆகியவற்றிற்கு திரிசூலத்தை எடுத்து சென்று முன்று இளனி, பூசணிக்காய் என்பவற்றை வெட்டுவார்கள். வெட்டுவதற்கு முன் பூசகர் உறுவது கத்தியை கொண்டு நன்கு திசைகளையும் நோக்கி வெட்டுவது போல் அபிநயம் செய்து கத்தியை இன்னும் ஒருவரிடம் கொடுப்பார். வேண்டியவர் இளனி, பூசணிக்காய் என்பவற்றை வெட்டி பிளப்பார். இந்த சடங்கு வெளியே உலவ வெட்ட தெய்வத்தை மீளவும் கோயிலில் இருத்தி வைக்க ?? செய்ப்படுகிறது என நினைக்கிறேன். திரிசூலம் மீளவும் கோயிலின் உள் எடுத்துசெல்லப்பட்டு விடும்.




இப்படியான பொங்கல் நிகழ்வின் பொது சில கோயில்களில் ஆடு, கோழி என்பவற்றை பலியிடும் வழக்கம் இருக்கிறது. எனது வீட்டுக்கு அருகில் இருக்கும் கோயிலில் எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து எந்த விலங்கும் பலியிடப்படவில்லை. முன்னரும் பலியிட்டதாக எனது வீட்டில் யாரும் சொன்னதாக ஞாபகம் இல்லை.
Author: ஹேமா
•11:39 PM
வீட்டில் கணணியே கதியாய்க் கிடக்கும் ஒரு கணவனுக்கும் மனைவிக்குமான உரையாடல் அல்லது சண்டையெண்டே வச்சுக்கொள்ளுவம்.


ஸ்டார்ட்...மியூசிக்...

மனைவி....
கோதாரில போன(கோதாரி....எனக்கும் தெரியேல்ல) மனுஷனுக்கு விடிஞ்சிட்டுது.வேலைக்கும் போய்த் துலையாது....அயந்து (தன்னை மறந்து) நித்திரை கொள்ளவும் மாட்டுதாம் இப்பல்லாம்.......உந்தாளை(இந்த+ஆளை) ....!

இஞ்சாருங்கோப்பா பல்லு விளக்கியட்டியளே.குளிச்சுக் கிளிச்சு கொட்டிக்கொண்டீங்களே. ஒண்டுமில்லையேப்பா.உண்ணாணை(சத்தியம்)கடவுளே இந்த மனுஷனைக் காப்பாத்து.அயந்து நித்திரை கொள்ளுதுமில்ல.சாப்பிடுதுமில்ல.குளிக்குதுமில்ல.விடிஞ்சாப் பொழுதுபட்டா இதுக்குள்ளயே கவுண்டு கிடக்கு.....!

அப்பா.... (கணவனை) இதே பொழுதாப்போச்சு உங்களுக்கு.வீட்டில இருக்கிறமோ செத்தமோ உங்கட குரங்குக் குட்டியள் என்ன செய்து துலைக்குதுகள் அதுகளோட நான் படுற பாடு...பாட்டு எல்லிப்போல(மிக மிகச் சிறிது)ஏதும் ஒண்டெண்டாலும் தெரியுமோ.....!

உங்களுக்கு இந்தக் குடும்பம் குட்டி மட்டும் அண்டாதோ(போதாதோ).அதோட உங்கட கண்ணுக்கும் கையுக்குமெல்லோ நாசம் வரப்போகுது.பேந்து (பிறகு)இரவைக்கு வந்து கையப் பிடி காலைப் பிடியெண்டு சொல்லுங்கோ குண்டு வைக்கிறன் உந்தப் பெட்டிக்கு.சொல்லிப்போட்டன் குண்டு கிடைக்காட்டிலும் உலக்கையால உடைப்பன் ஓம்....!

கணவன்...
ஏனப்பா....விடியக்காத்தால அரியண்டம்(கரைச்சல்)தாற.அண்டக்காக்கா மாதிரி கத்தித் துலைக்கிற.கெதியில(சீக்கிரமா)உனக்கு விசர்(பைத்தியம்)பிடிக்கபோகுது பார்.சின்னதுகளை அடிச்சாவது இருத்தி வைக்கலாம்.எதுக்கும் அடங்கவும் மாட்டாத சென்மம் ஒண்டு நீ.....!

எடியே...ஏனடி..இப்ப எல்லாம் நல்லாத்தானே இருக்கு.ஏதும் சொல்லி நான் செய்யாம இருக்கிறனே.நொய் நொய் எண்டபடி.....உன்னைச் சொல்லிக் குற்றமில்ல.எனக்குச் செருப்பால குடுக்கவேணும்.உன்ர கொப்பரைக்(அப்பா)கூப்பிடு முதல்ல.வந்திட்டாள் சும்மா குளறிக்கொண்டு...அவளுக்கு எப்பவும் ஏதோ ஒரு விண்ணாணம் (புதுமை/மாசாலம்) இருக்கும் என்னோட கொழுவ(சண்டை) ......!

மனைவி...
ஏன் அந்த ஆளை இங்க இப்ப.கருப்பு (சாராயம்) அடிச்சுப்போட்டு ஊரெல்லாம் பம்பலா விடுப்புக் (வம்பு அளத்தல்/கிசுகிசு) கொண்டு திரியும்.அந்தாளை இழுக்காமச் சரிவராது உங்களுக்கு....!

என்னப்பா நீங்கள் வேலையெண்டு எங்கயோ போறியள்.அங்கயும் என்ன செய்யிறியள் எண்டும் தெரியேல்ல.அதுவும் ஒழுங்காப் போறேல்ல.சரி போறியள் எண்டு நான் கண்மூடி முளிக்க திருப்பி வந்து நிக்கிறியள்.சரி எல்லாத்துக்கும் கத்தக்கூடாதெண்டு நான் ஒண்டும் கதைக்காம இருந்தா குந்திவிடுவியள் இந்தக் கொள்ளைல போறதுக்கு முன்னால......!

உதை (அதை)அடுப்பில வச்சு எரிக்கிறன் ஒரு நாளைக்கு.இருங்கோ.கத்திக் கத்தி எனக்கு மூலம்தான் வந்ததுதான் மிச்சம்.வீட்டில காஸ் இல்ல.அடி வளவுக்கு அந்தத் தென்னை மரம் பாறிக்கிடக்கு.பின்பக்கச் சிவரெல்லாம் பாசி பிடிக்குது எத்தினை வேலை கிடக்கு வீட்ல.இதுக்கு நான் ஆரைப் பிடிக்கிறது.எனக்கு வாற ஆத்திரத்துக்கு(கோவம்)கோடாலி எடுத்துக்கொண்டு வரவே இப்ப...!

உங்க பாருங்கோவன்......உது பெரிய பகிடியாவெல்லோ(நகைச்சுவை)கிடக்கு.என்னவோ இதில இவர் கருத்துச் சொல்லேல்ல எண்டா உலகமே பிரண்டுபோமாம் (புரண்டு).என்னமோ இதுக்குள்ளாலதான் வருமானம் வாறமாதிரியெல்லோ.இருங்கோ உந்தக் கதிரையைக் கொத்தி மூலைக்க போடுறன் முதல்ல....!

கணவன்....
கவனமாக் (நிதானமா)கேள்.விசர்க்கதை கதையாதை.உனக்குத் தெரியுமோ நாங்கள் உதுக்குள்ளால அதான் இணையத் தளத்துக்குள்ளால தமிழ் வளக்கிறம்.ஏன் அதுவும் வயித்தெரிச்சலே உனக்கு.உதுக்கு முதல் கத்திக்கொண்டிருந்த...உதில வாற இழவுப் படங்கள் நல்லதோ கெட்டதோ அதை டவுண்லோட் பண்ணிப்போட்டு அதைப் பாத்துக்கொண்டிருக்கிறன்.
அதே உலகமாக் கிடக்கிறியள்....எங்களை பற்றிக் கவலைப்படமாட்டியள் எண்டு.அது உனக்குப் பிடிக்கேல்ல எண்டுதானே புளொக்கர் எழுதி அப்பிடியே தமிழையும் வளப்பமெண்டு வெளிக்கிட்டன்.இதுக்கும் ஆக்கினை (கரைச்சல்)தாற.நீ ஒரு நச்சுப்பலியடி.....!

மனைவி...
ஏனப்பா உந்தத் தமிழ் இவ்ளோ நாளும் வளந்துதானே இருந்தது.ஏன் தேய்ஞ்சுபோச்சே...நீங்கள் வளக்கிறன் வளக்கிறன் எண்றியள் புளுடா விடாதேங்கோ.படம் பாக்கிறயளோ...தமிழ் வளக்கிறியளோ....வளவளத்த ஆக்களோட எல்லாம் வம்பளக்கிறியளோ என்னண்டாலும் உதுக்குள்ளதானே கிடக்கிறியள்.எல்லாம் ஒண்டுதான்.....!

என்ன.....எப்பிடி....எப்பிடி....ஓம்...ஓம்...நான் நச்சுப்பல்லிதான்.அதுதான் கட்டிக்கொன்டு அழறன்.உங்கட சாப்ப்பாடுக்குள்ளதான் ஒரு நாளைக்கு விழுவன் பாருங்கோ.அது கிடக்கட்டும்.

ஏனப்பா தெரியாமத்தான் கேக்கிறன்.வீட்ட வந்தால் எங்களோட எல்லாம் கதைச்சுச் சிரிக்கவேணும் எண்ட எண்ணம் வராதோ உங்களுக்கு.
இண்டைக்கு என்னென்ன வேலைகள் செய்தனீ.ஆரெல்லம் வந்தவையள்.உங்கட குரங்குக்குட்டி என்ன செய்து வைக்குது....ஏதாவது உங்கட மண்டைக்குள்ள கவலை கிவலை கிடக்கோ இல்லாட்டிக் களிமண்ணோ.

வடிவாச் சாப்பிடக்கூட (நிறைவாக சாப்பிட) மாட்டியளாம்.வண்டிகூட(வயிறு) வத்திப்போச்சு பாருங்கோ.ஏதாவது காதில எப்பன்(கொஞ்சம்)எண்டாலும் விழுதேப்பா உங்களுக்கு.நான் ஒரு விசரியாக் கத்துறனெல்லே....!

கணவன்.....
ஹும் ...என்னப்பா சொன்னனீ இவ்வளவு நேரமும்.இவன் நசர் ஏதோ கேட்டவன் அதையே யோசிச்சுக்கொண்டிருந்திட்டன்.திருப்பி ஒருக்காச் சொல்லு.இனிக் கவனமாக் (அவதானமா) கேப்பன்...!

மனைவி...
ஹும்...தூரம் துலைல(காது கேக்கேல்ல).நான் மாரித் தவளைமாதிரிக் கத்திக்கொண்டிருக்கிறன்.சோத்தில உப்பு இல்லையெண்டு சொன்னனான்.நிப்பாட்டுங்கோ கொம்யூட்டர.இப்ப நீங்கள் எழும்பி வாறியளோ இல்லையோ இப்ப உடைப்பன் இப்ப உடைப்பன் சொல்லிட்டன்.மூண்டு தரம் சொல்றதுக்கிடையில எழும்பிடுங்கோ....ஓம்.....!

கணவன்...
இஞ்சாரப்பா எப்பவாலும் சொல்லியிருக்கிறனே நான் உன்னை மண்டூகம் மாரித்தவளையெண்டு.நீயாச் சொல்ற ஆனாச் சரியாச் சொல்ற.....!
சரி.....சரி ஆறுதலாச் (சாவகாசம்) சொல்லு ஏன் கத்துற.என்னெண்டு ஒருக்கா கேக்கிறன்...!

மனைவி.....
சும்மா சாட்டுக்குக் (சாக்குப் போக்கு)
கொஞ்சாதேங்கோ.இஞ்சருங்கோப்பா...நீங்கள் குடும்பம் நடத்திற லட்சணம் இப்பிடியோ.இனி என்ன புத்திமதி கல்லில உரச்சுத் தீத்தியே (ஊட்டு) விடுறது நான்.உங்கட கொப்பரும் கொம்மாவும் எங்களை ஏமாத்திப்போட்டினம்.

உங்களைப் பற்றிப் புளுகோ(பொய்) புளுகெண்டு புளுகிச்சினம் கல்யாணம் செய்து தரேக்க.இப்ப என்னட்ட தள்ளிவிட்டிட்டு....
வரட்டும் அவையள் இரண்டு பேரும்...!

வீடல் சீனி தொடக்கம் துணி தோய்க்கிற பவுடர் வரைக்கும் எப்பனும்(கொஞ்சமும்) இல்ல..பாத்ரூம் நாறுது.இதெல்லாம் ஆரப்பா செய்ற வேலை....!

கணவன்....
ஏனப்பா எல்லாம் முடிச்சிட்டியே.உன்ர ஆக்கள்தானே வந்து வந்து போய்க்கொண்டிருக்கினம்.அதுக்கு நானே பொறுப்பு.....!

மனைவி....
உடன.....உடன் பார் எங்கட ஆக்களை வம்புக்கு இழுக்கிறதை.
என்ர வாயைக் கிளறாதேங்கோ.நாங்கள் கடையளுக்குப் போய் சாமான்கள் வாங்கி இரண்டு மாசமாகுது.நீங்கள் கொம்யூட்டருக்கேப்பா தாலி கட்டினீங்கள்.இவன் சின்னவனையும் வச்சுக்கொண்டு என்னால என்ன செய்ய ஏலும்......!

வர வர உங்களுக்கு ஏத்தம்(திமிர்).ஏனப்பா...கொம்யூட்டர் வீட்ல இருக்கிறது பொழுது போகாத நேரத்தில ஏதாச்சும் பாக்கப் பயன்படத்தானே.சமையல் சாப்பாடு இல்லாம வெளில எங்கயும் போகாம யாரையும் பாக்காம அதுக்குள்ளயே கிடந்தா என்னப்பா ஞாயம் இது ....!

இண்டைக்கு எனக்கொரு முடிவு தெரிஞ்சாகவேணும்.சொல்லிப்போட்டன் ஓம்.இந்த வீடல் நான் இருக்கோணும்.இல்லாட்டி கொம்யூட்டர் இருக்கவேணும்.நானோ இல்ல அதோ எண்டு பாத்துக்கொள்றன் இண்டைக்கு....!
கணவன்....
எடியே ஏனடி...லூசுத்தனமா கொலை வெறியா மல்லுக்கட்டிக்கொண்டு(வீண் வாதம்)அரிகண்டம்(கறகறவெண்டு அரிக்கிறது)தாற.இப்ப நான் என்ன செய்துபோட்டன்.வெளுவை (அடி) வாங்கப்போற....ஓம் சொல்லிப்போட்டன்.விசர் (இதில் விசர் எரிச்சல்/கோபம்) வருது எனக்கு.ஏதெண்டாலும் சொல்லு பாப்பம்.கொலைக் குற்றம் செய்தனான் மாதிரி இருத்தி வச்சுக் கேள்வி கேக்கிற......!

மனைவி....
எனக்கு வாற வரத்துக்கு உங்களை...உங்க தமிழ் வளத்தவை வளத்துக் கொண்டிருக்கிறவை எல்லாரும் இப்பிடியே குடும்பம் நடத்தினவையள்.ஒருக்காச் சொல்லுங்கோ கொஞ்சம்....!

கணவன்.....
உந்த இடக்குமுடக்கா கேள்வி கேட்டு என்னோட கொழுவிக்கொண்டிருக்காத(சண்டை போடாத).என்னட்ட பதில் இல்ல.இப்ப உனக்கு என்ன வேணும் சொல்லித் துலை(கோவமா....சொல்லி முடி) ......!

மனைவி.....
ஓஓ....அதுசரி.நான் கேட்டதுக்கெல்லாம் அப்பிடியே டக் டக் எண்டு பதில் சொல்லிக் கிளிச்சுப்போட்டார்.உங்க சனங்களெல்லாம் (ஆட்கள்) நாக்கு வளைக்குதுகள் (கிண்டல்/எள்ளி நகைத்தல்) பிறகு கதைக்கிறியள்......!

கணவன்.....
ஆரப்பா கதைச்சவை.அவையள் எரிச்சல்ல கதைச்சிருப்பினம்.
ஏனெண்டா அவையளின்ர மனிசன்மாருக்கு (கணவன்) கொம்பியூட்டர் தெரியாதெல்லோ.சனங்களை விடு.

பாவம் அப்பா நீ.சரியா வயக்கெட்டுத்தான் (மெலிஞ்சு) போன.சரி நான் இனி ஒழுங்காச் சாமானெல்லாம் வாங்கித்தாறன்.செல்லமெல்லே அலட்டாதையப்பா....தேத்தண்ணி ஒண்டு தா....நல்லபிள்ளைபோல.
இண்டைக்கு முழுக்க கதைச்சுக்கொண்டேயிருக்கலாம் சரியோ......!

மனைவி....
தேத்தண்ணியும் இல்ல ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல.எல்லாச் சாமான்களும் முடிஞ்சுபோச்சு.முதல்ல சொல்லுங்கோ.உங்க சபை சந்தில தான் என்ர மனுஷன் நல்லவர் பெரி....ய இவரெண்டு நான் விட்டுக்குடுக்காம சொல்லிகொண்டு திரியிறன்.வீட்டுக்கு உதவாத மனுசனை என்ர தலைல கட்டி விட்டுப்போட்டு அவையள் நிம்மதியா இருக்கினம்.....!

கனக்கக் கதைக்கவேண்டாம்.எனக்குத் தெரிஞ்சாகவேணும் இண்டைக்கு நானோ கொம்பியூட்டரோ எண்டு.....ஓம்......!

கணவன்....
அடி...குரங்கு வர வர உனக்கு எள்ளளவும் (கொஞ்சம்கூட) அறிவில்லாமப் போச்சு.ஆரோட ஆர் போட்டி போடுறது.அது வாயில்லா சென்மமெல்லே....!

மனைவி....
என்னை விசராக்காதேங்கோ.உந்தச் சனியனால நான்தான் வாயில்லாப் பூச்சியா அடைபட்டுப்போனன்.

இஞ்சப்பா....இஞ்சப்பா நான் இஙக புலம்பிக்கொன்டிருக்கிறன்.திரும்பவும் அங்க என்ன பார்வை வேண்டிக்கிடக்கு உங்களுக்கு.உங்களை...உங்களை....!

அப்பா....அப்பா எங்க போறியள்.....!

கணவன்....
கொஞ்சம் பொறடி வாறன்.பிறத்தால கூப்பிடாத (பின்னுக்குக் கூப்பிடாத) ....தீர அயத்துப்போனன் (முழுசா மறந்து). புதுமொடல் கொம்யூட்டர் ஒண்டுக்கு ஓடர் பண்ணினனான் வரச்சொன்னவங்கள்.நசர் பாத்துக்கொண்டு நிப்பான்.சரி வரேக்க ஏதும் வாங்கிக்கொண்டு வரவோ.கெதியா வந்திடுவன்.....!

( தன்பாட்டுக்கு மனைவி புலம்புறா....)

அய்யோ....அய்யோ...இப்பிடிக்கொத்த (இப்பிடியான) மனுசனை வச்சுக்கொண்டு நான் கட்டியழுறன்.உங்கட வீடுகளிலயும் இப்பிடித்தானோ.
ஒருக்காச் சொல்லுங்கோ.புளுகத்தைப் (புளகம்/சந்தோஷம்) பாருங்கோவன்
புதுசொண்டு வரப்போகுதெண்டு.கரந்தை (மாட்டு வண்டில்) இழுக்க விடாம உந்தாளை ஏன் படிப்பிச்சவையோ தெரியேல்ல.

புதுக் கோதாரியோ.கொண்டு வரட்டும்.உந்தப்பெடி (அந்தப் பெடியன்) நசர்
கும்மியடிச்சுக்கொண்டு இந்தப் பக்கம் வரட்டும்......இருக்கு அவருக்கும்.....!

நசரேயனின் ஒரு பதிவின் சாரத்தோடு.....என்னுடைய மொழிக்கலவையும்.
Author: சஞ்சயன்
•8:13 PM
வெப்பிசாரம்: ஒரு விதமான கோபம். அவன் வராததது எனக்கு வெப்பிசாரமாய் இருக்கிறது.

எம்பிட்டுதல்: அகப்படுதல். அவன் எம்பிட்டுட்டான்.

ஒசில்: இச் சொல் சந்தர்ப்பத்தைப் பொறுத்து அழகு அழகற்றது என்று பொருள்படும். இது ”ஒயில்” என்பதன் திரிபு ஆகும்.

கெளித்தல்: சரித்து ஊற்றுதல்

குமுதம் . குமதம் குத்தல் பேரொளி

சவுத்துப்போதல்: களைத்துப்போதல்

சள்ளு: தொந்தரவு

துமித்தல்: தூறுதல்

தொப்பட்டம்: மழையில் தொப்பட்டமாய் நனைதல். முழுதாய் நனைதல்

வெட்டை: வெளி . வெட்டையால போ- வெளியே போ

சூம்புதல்: மெலிதல். என்னடா சும்பிப் பெயித்தாய் - என்னடா மெலிந்துவிட்டாய்.


சள்ளு : தொந்தரவு

வெள்ளாப்பு: அதிகாலை

படுவான்: மேற்கு.  மட்டக்களப்பின் மேற்குப்பகுதியை படுவான்கரை என்றும் அழைப்பர்.

பறவாதி: அவா கொண்டவன்


கிழக்கிலங்கையில் உள்ள பல இடங்களில் இஸ்லாமிய மக்கள் வாழ்கிறார்கள். இவர்களினூடாக சில அரபுமொழிச் சொற்களும் தமிழிடைக் கலந்துள்ளது.

ஆலிம்: மார்க்க அறிஞர்
கந்தூரி: அன்னதானம்
கபீர்: பெரியவர்
சாஹிப்: தோழன்
சுன்னத்து: சம்பிரதாய சடங்கு
நஜிஸ்: அசுத்தம்
ஈமான்:; நம்பிக்கை
செய்த்தான்: பிசாசு
நிக்காஹ்: திருமணம்
மத்ர்ரசா: மதபாடசாலை
மௌலவி: மார்க்கப்பண்டிதர்
(b)பலாய்: அநியாயம், கெட்டது
Author: M.Rishan Shareef
•1:14 PM

ராத்திரி கனக்க மழை பெய்திருக்கவேணும்.நல்லாக் குளிரடிச்சது.அம்மா,வெள்ளனையோட திறந்து விட்ட ஜன்னல்லிருந்து வெயில் வரேக்க எவ்வளவு சுகமாக்கிடக்குது.இண்டைக்கு இன்னும் அவளைக் காணேல்ல.வழக்கமா இந்த நேரத்திற்கெல்லாம் அவளிண்ட கூட்டத்தோட வந்து இந்த ஜன்னலடியில நிண்டு கத்திக்கொண்டிருப்பாள்.

அங்க பாருங்கோ.றோட்டிலை பிள்ளையளெல்லாம் ஸ்கூல் போறது தெரியுதில்லே?இப்படித்தான் நானும் முன்ன ஸ்கூலுக்குப் போய்க்கொண்டிருந்தனான்.வடிவா வெள்ளச்சட்டையெல்லாம் போட்டுக்கொண்டு போவன்.அம்மாதான் எண்ணையெல்லாம் வச்சு,ரெண்டு பின்னல்லயும்,கறுப்பு ரிப்பன் வச்சுக் கட்டியனுப்பிவிடுவா.சைக்கிள்ல போகேக்க ரிப்பன் பறக்கும் தெரியுமே? அவ்வளவு கெதியா நான் ஸ்கூலுக்குப் போவன் அப்பயெல்லாம்.

*****

"வாங்கோ சிவாண்ணை,எப்படியிருக்கிறியள்? வெளிநாட்டிலிருந்து வந்துட்டியளெண்டு கேள்விப்பட்டனான் தான்.நாங்களே வரவேண்டுமெண்டு இருந்தம்.வயசுப்பிள்ளை ரோஷினியை எங்கே விட்டுட்டு வாரதெண்டுதான் யோசிச்சுக் கொண்டிருந்தனான்.
உவள் ராஜமக்கா வரேல்லியே? "

"வந்தவள்.உவள் கோவிலடியில நிறைய ஊர்ப் பொண்டுகளோட கதச்சுக்கொண்டு நிக்குறாள்.கன நாளைக்குப் பிறகெல்லே ஊருக்கு வாரது.அதுவும் உந்தப் பொண்டுகள் சேர்ந்து கதைக்கத் தொடங்கிட்டுதெண்டால் நேரம் போறதே தெரியும்?அதுதான் நான் தங்கச்சி வீட்டுல நிக்குறன்.நீர் கதைச்சுப் போட்டு ஆறுதலா அங்க வந்து சேருமெண்டு சொல்லிப் போட்டு இங்க வந்தனான் "

*****

ஏன் இண்டைக்கு மட்டுமிவள் இவ்வளவு தாமதமெண்டு தெரியேல்ல.நீங்கள் பார்த்தனீங்களே அவளை?
தினமும் அம்மா தார இரவுச் சாப்பாட்டின்ர மிச்சம் மீதிகள இந்த ஜன்னலைத் திறந்து சட்டென்று வெளியே கொட்டிட்டு மூடிவிடுவன்.ராவில ஜன்னலைத் திறந்து வச்சுக் கொண்டு நிண்டமெண்டா பேய்,பிசாசு,ஆவியெல்லாம் வீட்டுக்குள்ள வந்திடுமெண்டு தெய்வானப்பாட்டி சொல்லியிருக்கிறவ.போன கிழமை குண்டடிபட்டுச் செத்த சரோ அக்காவின்ற ஆவியும் வருமாம்.

அவளும் நானும் நல்ல சினேகம்.எங்கட வீட்டுக்கு அயலிலதான் அவளிண்ட வீடுமிருக்குது.அவ வீட்டுல வெள்ளைக் கொய்யா இருக்குது பாருங்கோ.அது பறிச்சதெண்டால் எனக்கும் நாலஞ்சு காய் சொப்பிங் பேக்ல போட்டுக் கொண்டு வந்து தருவா.

*****

" இஞ்சருங்கோ.சிவாண்ணை வந்திருக்கிறார்.நீங்க உட்காருங்கோ அண்ணை.அவர் முத்தத்துல கோடறிக்குப் பிடி போட்டுக்கொண்டு நிக்கிறாரெண்டு நினைக்கிறேன்.பிள்ளைகள் வரேல்லியே?"

" இருக்கட்டும்.அவர் வேலை முடிஞ்சு மெதுவா வரட்டும்.நானும்,ராஜமும் விடிய முன்னமே வெளிக்கிட்டு வந்துட்டம்.கோயில்ல சனம் கூட முன்னம் சேவிச்சுட்டு வந்துடனுமெண்டுதான் கெதியா வந்தம்.பிள்ளையள் தூங்கிக் கொண்டிருந்தவை.இரவே சொல்லியிருந்தம்.அதாலை தேட மாட்டினம்."

"உந்த பெரிய அப்புச்சிப் பாட்டி,கிணத்தடியில வழுக்கி விழுந்து இடுப்பொடச்சிக் கொண்டவையில்லே.அப்ப இந்த ரோஷினியை சரோக்கிட்ட விட்டுட்டு ஓடிப்போய்ப் பார்த்துட்டு வந்தனான்.உங்கட பிள்ளையள் அங்கே நிண்டிச்சினம்.மாமி,மாமியெண்டு வடிவாக் கதச்சினம்.ஒரு நாளைக்கு இங்க கூட்டிக் கொண்டு வாங்கோவன் அண்ணை.சொந்த பந்தங்களையெல்லாம் அவையளும் தெரிஞ்சிக் கொள்ளவேண்டுமெல்லே."

"ஓமோம்.இப்ப பரீட்சை சமயமெல்லே.அதனாலதான் விட்டுட்டு வந்தனாங்கள்.அவையளுக்கும் இங்க வரவேணுமெண்டுதான் கொள்ளை ஆசை.அதுகளை நாங்கள் கூட்டிக் கொண்டு போனாத்தானே உண்டு.எங்கேயும் தனியா அனுப்பப் பயமாக் கிடக்கு."

*****

உங்களுக்குத் தெரியுமே...?உவள் சரோ கடைசியா வந்த நேரம்,நான் அம்மாக்கிட்ட மருதோண்டி வச்சு விடச் சொல்லி அடம் புடிச்சுக் கொண்டிருந்தனான்.உவள்தான் அரச்சு,சிரட்டையில கொண்டு வந்து,எண்ட உள்ளங்கைகள நீட்டச் சொல்லி வடிவா வட்டம் வட்டமா வச்சுவிட்டவள்.பாருங்கோ எவ்வளவு வடிவாச் சிவந்திருக்குதெண்டு.
என்னோடது வடிவான வெள்ளக் கையல்லோ.டக்கெண்டு சிவந்திடுமெண்டு அம்மம்மா சொன்னவ.நான் ஸ்கூலுக்குப் போற காலத்தில இப்படி மருதோண்டி வச்சுக் கொண்டு போனேனெண்டால் எண்ட வகுப்புல எல்லோரும் கைய நீட்டச் சொல்லி அழகு பார்ப்பினம்.அதுல உவள் ஜோதி..அதுதான் செல் விழுந்து குடும்பத்தோட செத்துப் போனாளே.உவள் என் கையை முகந்தும் பார்ப்பாள்.அவளுக்கும் என்னை மாதிரி மருதோண்டி வாசமெண்டால் கொள்ளைப் பிரியம்.

இப்பயும் எனக்கு சரோ அக்கா ஞாபகம் வரேக்கை இந்தக் கை ரெண்டையும் பார்த்துக் கொண்டிருப்பன்.வடிவா,சிவப்புச் சிவப்பா குட்டிக் குட்டி நிலாக்கள் மாதிரி இருக்கா? இது மாதிரித்தான் இப்ப சரோ அக்காவும் வானத்தில இருந்து என்னைப் பார்த்துக்கொண்டிருப்பா எண்டு அம்மா சொன்னவ.

*****

"வாங்கோ மச்சான்.எப்படியிருக்கிறியள்? முத்தத்துல கொஞ்சம் வேலையா இருந்தனான்.வந்து கனநேரமே? "

"இல்லையில்லை.இப்பத்தான் வந்தனான்.என்ன மச்சானிது? கனக்க மெலிஞ்சு போய் நிக்குறியள்?"

"அதையேன் கேக்குறியள்? வாரத்துக்கு மூணு முறை கடைக்குச் சாமான் வாங்க டவுனுக்குப் போகவேண்டிக் கிடக்கு.மாசத்துக்கு ரெண்டு முறை உவள் ரோஷினியை கூட்டிக் கொண்டு மருந்தெடுக்க டொக்டரிட்ட போகவேண்டியிருக்கு.கடும் அலைச்சல் கண்டியளே.
ஏண்டாப்பா இங்கேயே நிக்குறீர்? போய்த் தேத்தண்ணி ஊத்திக் கொண்டு வாரும்."

"ஓமோம்.குசினிக்குப் போகத்தான் இருந்தனான்.உவள் ராஜமும் வரட்டுமெண்டு இருந்தன்.இங்க பக்கத்துக் கோவிலடியில நிக்குறாளாம்.சரி.அவள் ஆறுதலா வரட்டும்.கதைச்சுக் கொண்டிருங்கோ.நான் தேத்தண்ணியோட வாறன்"

*****

என்னடாப்பா இது? காக்கை கரையுது முத்தத்துல.உந்தக் காக்கைச் சத்தம் கேட்டதெண்டால் என்றை சினேகிதி வரமாட்டாள்.முதல்ல உந்தச் சனியனை விரட்ட வேண்டும்.
"ச்சூ...ச்சூ..."
போற மாதிரித் தெரியேல்ல.என்ன பார்த்துக்கொண்டிருக்கிறியள்? கொஞ்சம் விரட்டிவிடுங்கோவன்.உதைக் கண்டால் அவள் வரமாட்டாள்.இந்த வீணாப்போனவையளக் கண்டா அவளுக்குச் சரியான பயம்.அதுலயும் கருப்பெண்டா எனக்கும் பயம்தான்.ராவைக்குக் கூட அம்மா பக்கத்துல படுத்தாலும் இருட்டில படுக்கமாட்டேன்.
இருங்கோ,இந்தப் பேனையால அவையளுக்கு வீசியடிக்கப் போறேன்.

*****

"பிள்ளைகள் வரேல்லியே?"

"இல்லை மச்சான்.உவள் ராஜமிண்ட தங்கச்சி செண்பகம் ஊரிலையிருந்து இடம்பெயர்ந்து வந்து இப்ப எங்கட வீட்டுலதான் தங்கியிருக்கிறவ.அவக்கிட்ட பிள்ளையளப் பார்த்துக்கொள்ளச் சொல்லிப் போட்டு வந்தனாங்கள்."

"ஓமோம்.அது நல்லது.உவள் 19 வயசுப் பெட்டை சரோ,இந்த மூன்றாம் வீட்டு அறிவுத்தம்பியோட மகள் உப்படித்தான்.போன கிழமை அவரிண்ட கிழக்கு வளவுக்குள்ளயிருந்து தென்னஞ்சூள பொறுக்கிக்கொண்டு வாரனெண்டு போனவள்.ரொம்ப நேரமாகியும் காணேல்லயெண்டு எல்லா இடத்திலயும் தேடித் தேடிக் கடைசில ராத்திரி குண்டடி பட்டுப் பிணமாக்கிடந்தவள சுடுகாட்டிலிருந்து தூக்கிவந்தம்.வல்லுறவுக்குமாளாக்கியிருந்திச்சினம்.வீட்டிலிருந்தாளெண்டால் உவள் இங்கேதான் ரோஷினியோட விளையாடிக் கொண்டிருப்பாள்.நாங்கள் எங்கேயாவது போறதெண்டால் கூட ரோஷினியை உவள் கிட்டத்தான் விட்டுட்டுப் போவம்.பாவம் நல்ல பிள்ளை."

"இந்தாங்கோ அண்ணை.தேத்தண்ணி ஊத்தேல்ல.வேப்பமரத்துல உந்த சாத்தாவாரி கனக்கக் கிடந்துச்சு.அதுதான் இடிச்சுக் கஞ்சி வச்சனான்.இந்தப் பனங்கருப்பட்டியோட குடிங்கோ அண்ணை.உடம்புக்கு நல்லது.வெளிநாட்டுல குடிச்சேயிருக்க மாட்டியள்."

"ஓம் தங்கச்சி.இதையெல்லாம் கனநாளைக்குப் பிறகு குடிக்கிறனான்.முன்னம் அம்மா சுவையாச் செஞ்சுதருவா இதுபோல.வெளிநாட்டுல சோறே ஒழுங்காக் கிடைக்காது."

*****

அட,பேனை வீசியடிக்கக் காக்கை பறந்திட்டுது.இங்க வாங்கோ.பாருங்கோ.அந்தக் கரண்ட் கம்பியில நிண்டு வெறிச்சுப் பார்த்துக்கொண்டு இருக்குதில்லே.உந்தக் கருப்பன்தான்.அடாடா பாருங்கோ.அதே கரண்ட் கம்பியில ஒரு வௌவால் தலைகீழாய்ச் செத்துக்கிடக்கு.உந்தக் காக்கைக்கு ஷொக் அடிக்காதே? மனுசருக்கெண்டால் ஷொக் அடிக்கும் தெரியுமே? நான் பார்த்திருக்கிறனான்.

உங்களோட கதைச்சுக் கொண்டு நிண்டதுல உவளை நான் மறந்துட்டன்.இன்னும் காணேல்லை.எனக்கு கவலையாக் கிடக்கு.பாருங்கோ,நீங்க இண்டைக்கு வந்த நேரமாப்பார்த்து இவள் வரேல்ல.தினசரி வாரவ.சிலநாள் நான் எழும்பமுன்னமே வந்து ஜன்னலடியில நிப்பாள்.பருப்புக் கடலை இருக்கேல்ல.அவளுக்கு அதுல கொள்ளை ஆசை.அவள் வந்தால் நான் அதத்தான் குடுப்பன்.
இண்டைக்கு உங்களுக்குக் காட்டோனுமெண்டு நினச்சன்.பாருங்கோ,இன்னும் வரேல்ல.

*****

"உவள் ரோஷினி எங்கே காணேல்ல? முன்னாடி நான் வந்தனெண்டால் மாமா,மாமாவெண்டு சொல்லிப் பின்னாலேயே திரிவாள்.இப்ப பதினேழு வயசு முடிஞ்சிருக்குமென்ன? என்ர பிள்ளை வாசனை விட ஒரு வயசுதானே குறைச்சல்? "

"ஓமண்ணை.பதினேழு வயசு முடிஞ்சிட்டுது.கேள்விப்பட்டிருப்பியள்.ஸ்கூலுக்குப் போயிட்டுவரேக்க 'ஐடிண்டி கார்ட் இல்ல,விசாரிக்கவேணும்'எண்டு ஆர்மியால தடுத்துநிறுத்தி முகாமுல கொண்டு போய் விசாரிச்சிருக்கினம்.கரண்ட் ஷொக் எல்லாம் கொடுத்திருக்கினம்.அதுல பிள்ளை நல்லாப் பயந்து போய் புத்தி பேதலிச்சுப் போயிட்டுது.பிள்ளை உயிரோட கிடைச்சதே போதுமெண்டு கூட்டிவந்துட்டம்.டொக்டரிட்ட காட்டிக் கொண்டிருக்கிறம்."

*****

கேட்குதே? உங்களுக்குக் கேட்குதே? அவள் வந்திட்டாள்.கேளுங்கோ.உந்த சத்தத்தைக் கேளுங்கோ.பூ நெல்லி மரத்தடியிலிருந்து கொண்டு சத்தம் போடுறவை.இப்பப் பாருங்கோ.இஞ்சையும் வரும்.அந்தப் பருப்புக்கடலையை பக்கத்துல வச்சிருப்பமென்ன?அவளுக்குக் கொடுக்க வேணும்?

நான் எழும்பிக் கனநேரமாயிட்டுது.இன்னும் மூஞ்சைக் கூடக் கழுவேல்ல.உதுகளப் பாருங்கோ.வெள்ளனையே எழும்பி எவ்வளவு வடிவா என்னைத் தேடி வந்திருக்கெண்டு.அவள் வந்தால் நான் அவள் கூடக் கதைப்பன்.நீங்களும் கதையுங்கோ.சரியே?

*****

"குழப்படியேதும் பண்றவவே?"

"இல்லையண்ணே.அவளும் அவளிண்ட பாடுமெண்டு ரூமுக்குள்ளேதான் கிடப்பாள்.தனக்குத்தானே சத்தமா கதைச்சிக்கொண்டு இருப்பாள்.உங்களுக்கும் சத்தம் கேட்குதில்லே? உவள்தான் கதைக்கிறவள்.ராமு வீட்டு நாயைக் கண்டா மட்டும் கத்திக் கூச்சல் போட்டுடுவாள்.நீங்கள் வந்திருக்கிறது தெரியாதெண்டு நினைக்கிறேன்.இருங்கோ கூப்பிடுறேன்.
ரோஷினி,பிள்ளை இங்க வாங்கோ.யாரு வந்திருக்கினமெண்டு வந்து பாருங்கோ."

*****

உவள் பெயரென்ன எண்டு கேட்க மாட்டியளே? முன்னம் நான் உவளை பாமா எண்டு கூப்பிட்டேன்.அவள் எனக்கு ஸ்கூல்ல நல்ல சினேகிதி.ஒருநாள் காணாமல் போயிட்டா.கடத்திட்டுப் போயிட்டினமாம்.அப்ப அவள் நினைவா பாமா எண்டு கூப்பிட்டேன்.இப்ப சரோ எண்டு கூப்பிடறனான்.

பாருங்கோ அந்த சாம்பல் குருவிதான்.நீங்களும் சரோவெண்டே கூப்பிடுங்கோ.இருங்கோ.அம்மா கூப்பிடுறா.யாரோ வந்திருக்கினமாம்.நான் ஓடிப்போய்ப் பார்த்துட்டு வாரன்.நீங்க சரோகிட்ட பேசிக்கொண்டிருங்கோ.அதுல இருக்கிற பருப்புக் கடலைய ஒவ்வொண்ணாப் போடுங்கோ.நான் கெதியா வாரேன்.சரியே?




-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.


நன்றி
# தடாகம்
# திண்ணை 


சொற்களின் விளக்கங்கள் :-

# கனக்க - அதிகமாக
# வெள்ளனை - காலைநேரம்
# பொண்டு - பெண்கள்
# கன நாள் - நீண்ட நாட்கள்
# ராவு - இரவு
# முத்தம் - முற்றம் / வீட்டின் வெளிப்புறம்
# கொள்ளை ஆசை - மிக விருப்பம்
# வடிவு - அழகு
# தேத்தண்ணி - தேனீர்
# குசினி - சமையலறை
# காக்கை - காகம்
# சாத்தாவாரி - ஒரு வகைக்கீரை