Author: கானா பிரபா
•3:06 AM

"தம்பி! உமக்கு இதில் அவ்வளவு விளப்பம் இல்லை, பெரியாக்கள் கதைக்கேக்க இடையில வராதையும்"

ஊர்ப்பெரியவர்கள் யாராவது பேசிக்கொண்டிருக்கும் போது நடுவில் பாய்ந்து முந்திரிக்கொட்டையாய் நாமும் ஏதாவது கருத்துச் சொல்ல விழைந்தால் அந்தப் பெரியவர்களிடம் இருந்து கிட்டும் விமர்சனம் இப்படியாக இருக்கும்.

விளப்பம் என்பதற்கு குறித்த விடயம் குறித்த ஆழமான அறிவு, அல்லது அந்த விஷயம் பற்றிய பின்புலம் தெரிதல் போன்றதான ஒத்த கருத்துக்களைச் சொல்லலாம்.

"இதில எனக்கு அவ்வளவு விளப்பம் இல்லை, என்னை விட்டுடுங்கோ"
இப்படியான மறுமொழியை சாதாரணமாக நம்மூர் ஆட்களிடம் கேட்கக்கூடியதாக இருக்கும். அதாவது
ஏதாவது சிக்கல் தரக்கூடிய சமாச்சாரம் என்றால் அதில் ஏதாவது அரைகுறையாகக் கருத்துக் கூறப்போய் ஏன் சிக்கலில் மாட்டவேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வின் வெளிப்பாடாக அது அமையும்.

அதே சமயம் "இந்த விஷயத்தில் எனக்கு நல்ல விளப்பம் " இப்படியான எதிர்க்கருத்தாக அமையும் சொல்லாடல்களைப் பேச்சுவழக்கில் காண்பது அரிது. அதற்குப் பதிலாக
"எனக்கு இதைப்பற்றி நல்லாத் தெரியும்" என்பதான சொல்லாடலே பதிலீடாகப் பாவனையில் இருக்கின்றது.

ஈழத்தில் பரவலாகப் புழங்கும் விளப்பம் என்ற சொற்பதத்தை மலையாளிகள் அதிகமாகப் பயன்படுத்துவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. ஆனால் தமிழகத்தவர் இந்தச் சொல்லைத் தம் பேச்சுவழக்கில் உபயோகப்படுத்துகின்றார்களா என்பதை தமிழகத்து நண்பர்கள் தான் உறுதிப்படுத்த வேண்டும்.
Author: வடலியூரான்
•5:37 AM
என்னத்தைத் தான் இண்டைக்கு தியேட்டரிலை பெஸ்ற் ஷோ(First Show), நெற்றிலே(இன்டெர்னெட்) பாட்டு, படம், ட்ரெயிலர் பார்க்க முடியுமெண்டாலும் அண்டைக்கு(95 களுக்கு முதல்)ஒரு வசதிகளுமில்லாமல் இருக்கேக்கை பார்த்த படங்கள் மாதிரியோ, அல்லது அதிலிருந்த சந்தோசம் மாதிரியோ வராது கண்டியளோ.அது தான் அந்த நினைவுகளை கொஞ்சம் மீட்டிப் பார்க்கலாம் என்று நினைக்கின்றேன்.



ஊரிலை ஒரு கலியாண வீடு,சாமத்திய வீடு முடிஞ்சால் ஊர் முழுக்க அந்தக் கலியாண வீடோ,சாமத்திய வீடோ நடந்த வீட்டுக்காரரிட்டை, "என்ன கொப்பி வந்திட்டுதோ? எப்ப வரும்? வந்தா எங்களுக்குஞ் சொல்லுங்கோ" எண்டு நச்சரிச்சு நச்சரிச்சே தொலைச்சுப் போடுங்கள்.அதுகளும் படத்துக்கு சொல்லாட்டிலும் ஏதாவது குறைவருமோ எண்டிட்டு ஊர் முழுக்க காட்(Card) குடுக்காத குறையாப் படத்துக்குச் சொல்லுவினம்.




இண்டைக்கு இரவு படமெண்டால் எல்லா வீடுகளிலும் 5,6 மணிக்கே கோதம்ப மாப் புட்டை(கோதுமை மா) அவிச்சது பாதி,அவிக்காதது மீதியெண்டு அவிச்சுக் கொட்டிப் போட்டு பெண்டுகளும் அவையளோடை பிள்ளையளும் எல்லாரும் நடையைக் கட்டிப்போடுவினம்.ஆம்பிளையளும் அவையளுக்குப் பிறகாலை ஒரு பெட் ஷீற்றை(Bed Sheet)மடிச்சு கமக்கட்டுக்கை வைச்சுக் கொண்டு படையெடுப்பினம்.பேந்தேன் பேசுவான்,படம் போடுற வீடு கலியாண வீடு மாதிரித் தான் மாறிப் போடும்.


சரியெண்டு படம் பார்க்கப் போனால் அண்டைக்கு திருவிழாத் தான். அப்பவெல்லாம் "எஞ்சின்" இலையிருந்து தான் "கறண்ட்" வரும்.எஞ்சினெண்டால் நீங்கள் இப்ப பார்க்கிற ஜப்பானிலையிருந்து வாற "ஜெனறேற்றர்" எண்டெல்லாம் நினைக்காதையுங்கோ."வோட்டர்ப் பம்பையும்" மோட்டரையும் வைச்சு எங்கன்றை ஆக்கள் கண்டு பிடிச்சது.(கஷ்ரங்கள் எங்களைச் சூழ்ந்த போது தான் எங்கன்ரையாக்கள் எத்தினையைக் கண்டு பிடிச்சாங்கள்.வால் கட்டையில அடிக்கிற வெடியிலையிருந்து வானத்திலை பறக்கிற பிளேன் வரைக்கும்)



வோட்டர்ப் பம்மின்றை புட்வால்வ் (நீரை கீழிருந்து எடுத்து மேலே தள்ளும் பின்பக்கத்திலுள்ள குழாய்)கலட்டிப் போட்டு அதையும் மோட்டரையும் பலகையிலை வைச்சுத் தறைஞ்சு தான் "மேட் இன் -- "ஜெனரேற்றைச் செய்ஞ்சிருப்பாங்கள் எங்கடையாக்கள்.முதல்லை வோட்டர்ப் பம்மின்றை காபரேற்றருக்கை கொஞ்சம்,கொஞ்சமாப் ரின்னரைப் பனுக்கி பனுக்கி அதை ஸ்டார்ட்(Start)பண்ண வைக்கிறதுக்குள்ளை அதை இழுத்து இழுத்து இழுக்க்கிறவனுக்கு மூச்சுப் போடும்.அது ஸ்டார்ட் எடுத்தாப் போலை கொஞ்ச நேரம் சோக்கிலை(chock) ஓடி, ஒரு கட்டத்துக்குப் பிறகு தான் அந்த Bar(பட்டி)ஐ மோட்டரிலை கொழுவுவாங்கள்.கேட்டால் இல்லையெண்டால் இஞ்சினுக்கு லோட்(Load) கூடி இஞ்சின் ஸ்டார்ட் எடுக்க மாட்டாதாம் எண்டு விளக்கம் வேறை குடுப்பாங்கள்.சரியெண்டு ஒருமாதிரி இஞ்சின் ஸ்டார்ட் பண்ணினாப் பிறகு T.V யிலை படம் வாறது தான் பெரிய கதை





எங்கன்ரை ஊரிலை செல்லக்கண்டண்ணை தான் ரீ.வி, டெக் வைச்சு வாடகைக்கு விடுறவர்.ஆள் ரீ.வி, டெக்கை ஓட்டத்துக்கு கொண்டு வந்தால் எங்களை மாதிரி சின்னப் பெடியளையெல்லாம் தொட விட மாட்டார்.நாலைஞ்சு வருசமாக அதைத் தங்கக்கட்டி மாதிரித் தான் வைச்சுப் பாவிச்சுக் கொண்டு வந்தார்.ரீ.வி டெக் வந்த அந்த பெட்டியைத் திறந்து, றெஜிபோமைக் கலட்டி,பொலித்தீன் பாக்குக்குள்ளாலை(Bag)அதை எடுத்து ஒரு ரீப்பொயிலை டெக்கையும் ஒரு மேசையிலை ரீ.வி யையும் வைச்சு அதுக்கு மேலை ஒரு ஒறேஞ் கலரிலை நல்ல ஒரு துணியையும் விரிக்கிறதுக்கிடையிலை "அரக்கடா..இதைக் கவனமாப் பிடி..,ஆ.ஆ ....மெள்ள .. ஆ மெள்ள ஆ.. பாத்து..." எண்டு இஞ்சத்தை எப்.எம் ரேடியோக் காரர் கணக்கா செய்யிறது கால்வாசி,சொல்லுறது முக்கால் வாசி எண்டது கணக்கா மனிசன் ஒரு ரணகளப் படுத்திப் போடும்.ஆனாலும் அந்தக் நாங்கள் காலத்திலை ஆளைப் பார்த்து வாயைப் பிளந்து தான் இருக்கிறம்.



செல்லக்கண்டண்ணையின்டை 21 இஞ்சி சொனி(Sony) ரீ.வியின் வலப் பக்க மேல் மூலையில 8 பட்டன் மாதிரி இருக்குது.அதுக்குக் கீழே ஒரு சின்னப் பெட்டிமாதிரி இருக்குது.அதுக்குள்ளை கொஞ்சக் கட்டைகள் கிடக்குது.

ஆள் வந்து, முதலாவது பட்டினை அமத்திப் போட்டு,அதுக்குக் கீழையிருக்கிற சின்னப் பெட்டியின்றை சின்னக் கதவை திறந்து,அதுக்குள்ளை இருக்கிற கட்டையளை ஒவ்வொன்றாச் சுத்தத் தொடங்குவார்.பிறகு கொஞ்சத்தாலை அடுத்த பட்ட்ன் எண்டு ஒரு மாதிரிச் சுத்திக் கொண்டு போகேக்கை திடீரெண்டு கறுப்பும்வெள்ளையும் புள்ளிகள் வந்திடும்.உடனை நாங்களெல்லாம் "ஆ.. படம் வரப் போகுது ..ஐ.." எண்டு ஒரே "கெக்கக்கை பிக்கை" எண்டு கைதட்டிக் கூ அடிச்சுச் சிரிப்பம்.திடீரெண்டு அதுவும் போடும்."பங்கை பார் நீங்கள் கத்தினபடியால தான் ரீவி பிழைப் பட்டுப் போச்சுது.சத்தம் போடாமல் இருங்கோ பார்ப்பம்" எண்டு யாராவது பெரிசுகள் பின்னுக்கு இருந்துகொண்டு அதட்டுங்கள். நாங்களும் அதுகளை எதோ உண்மையெண்டு நம்பி "கப் சிப்" எண்டு சைலென்றாயிடுவம்.செல்லக்கண்டண்ணைக்கும் கோபம் வந்திடும்.



செல்லக்கண்டண்ணையும் கோபத்தோடை ரீவிக்கு ரெஸ்ராலை குத்தி குத்தி,முறுக்க,திடீரெண்டு பாத்தால் எல்லாம் கறுப்பாக் கிடக்கும்.நடுவிலை மட்டும் மேலையிருந்து கீழை இரண்டு வெள்ளைக் கோடு மாதிரிப் போகும்.பேந்தென்ன எங்களுக்குத் துள்ளிக்குதிப்புத் தான்.அதுகும் கொஞ்சத்தாலை போடும்."உங்களுக்கு அப்பவும் படிச்சுப் படிச்சுச் சொன்னான்...பாத்தியளே இப்பவும் போட்டுது.. சத்தம் போடாமல் இருங்கோ பாப்பம்.." எண்டு அதட்டல் பிறகும் வரும்.செல்லக்கண்டண்ணையும் முறுக்கிக் கொண்டே போகும்.திடீரெண்டு பாத்தால் வானவில் மாதிரி கலர் கலரா கோடுகள் மேலையிருந் கீழை வாறமாதிரி இருக்கும்.அப்ப இனிப் படந்தொடங்கப் போகுது எண்டு நாங்கள் எங்கடை எக்ஸ்பீரியன்சிலை சொல்லிப் போடுவம்.



நாங்கள் சொன்ன மாதிரித் தான் திடீரெண்டு பாத்தால் மாப்பிளைக்கு அறுகம்புல்லு வைக்கிற சீன் போய்க் கொண்டிருக்கும்.எல்லாரும் உடனை முதல்லையிருந்து விடுங்கோவன் எண்டு செல்லக்கண்டண்ணையைக் கெஞ்ச "ஏன் இதிலையிருந்து பாருங்கோவன்" எண்டு செல்லக்கண்டண்ணையும் பெண்டுகளுக்குப் பஸ் அடிக்கிற மாதிரி அடிச்சுக் கொண்டு ரிவைண்ட்(Rewind) பண்ண,ஆக்களெல்லாம் படத்திலை பின்னுக்கு ஓடிப் போய்க் கொண்டிருப்பினம். பேந்தென்ன நாங்கள் எங்கடை "கெக்கக்கை பிக்கையைத்"7 தொடங்கிடுவம்.





உந்தத் திருவிழாவுகள் எல்லாம் முடிஞ்சு ஒரு மாதிரி நிறைகுட செற்றோடை இருக்கிற ஒரு பெரிய கப்பல் வாழைப் பழச் சீப்புக்குப் பக்கத்திலை குத்துவிளக்கைப் பாக்காமல் வீடியோவைப் பாத்துக் கொண்டு குத்துவிளக்குக் கொளுத்திற மாப்பிளையின்டை தாய் தேப்பனோடை படம் தொடங்கும்.பின்னாலை Background இலை "பிள்ளையார் சுழி போட்டு நீ நல்லதைத் தொடங்கிவிடு.." எண்டு பாட்டும் பரலலா(Parallel) போய்க்கொண்டிருக்கும்.

பிறகு மாப்பிளைக்கு அறுகம் பால் வைக்கிறது,அவர் குளிக்கிறது,அவர் வெளிக்கிட்டாப் போலை,பொம்பிளை வெளிக்கிட்டாப்போலை,மணவறை, பந்தி,கால் மாறிப் போறது,ரெஜிஸ்ரேசன் எண்டு ஒவ்வொரு லொக்கேசனுகள், அதுக்கு டெக்கரேசனுகள்,மேக்கப்புகள் எண்டு எல்லாம் மாறும்,பின்னாலை போற பாட்டுகளும்,"மாசி மாசந் தான் கெட்டி மேளதாளந்தான் ..","செம்மீனே செம்மீனே .ஒங்கிட்டை சொன்னேனே..","ஆடியில சேதி சொல்லி ஆவணில சேதிவச்ச மன்னவரு மன்னவரு தான் அழகு மன்னவரு தான்..","ராசி தான் கை ராசி தான்...ஒம் மொகமே ராசி தான்..","ஆனந்தம் ஆனந்தம் பாடும்.." எண்டு மாறிக் கொண்டே போகும்.பொம்பிளை தோழியோடை மணவறைக்கு வரேக்கை, "மணமகளே மணமகளே வா .. உன் வலது காலை எடுத்து வைத்து வா " எண்டோ " வாராயோ தோழி.. வாராயோ.. மணப் பந்தல் காண வாறாயோ" எண்டு ள்.ற்.ஈஸ்வரி பாடின பாட்டையோ போட மறக்க மாட்டங்கள்.



தாலி கட்டுக்கள்,சாப்பாடுகள் எல்லாம் முடிஞ்சு மாப்பிளை, பொம்பிளையள் கலியாண உடுப்பு மாத்தின பிறகு வாற சீனுகளுக்கு ஏன் " சின்ன ராசாவே சிட்டெறும்பு என்னைக் கடிக்குது அடிக்கடி ராத்திரி துடிக்குது .." எண்டு போடுறவங்கள் எண்டு 2,3 வருசம் கழிஞ்சாப் போலை தானே எங்களெக்கெல்லாம் விளங்கிச்சுது.அதை எல்லாம் இதிலை எழுதேலாது தானே.எண்டபடியால் அதை விடுவம்.



எல்லாரும் கலியாணவீட்டுப் படத்திலை தாங்கள் எப்ப வருவம் எண்டு வாயைப் பிளந்து பாத்துக் கொண்டிருப்பினம்.வந்தால் காணும் பேந்தேன் பேசுவான் "பங்கை பாரன் நான் நிக்கிறன்.." எண்டு சங்கக் கடையிலை மா வாங்கிறதுக்கு நிக்கிற கியூவிலை(Queue)ஏதோ முதல் இடம் பிடிச்சது கணக்கா துள்ளிக் குதிப்பினம்.



படம் பாக்கப் போனால் அண்டைக்கு விசுக்கோத்துக்கள், வடையள், வாழைப்பழங்கள், தேத்தண்ணி எண்டு வயித்துப் பாட்டுக்கும் நல்ல கவனிப்பாத் தான் இருக்கும்.பேந்தென்ன கையை வைச்சால் அம்பிடிற எல்லாத்தையும் அள்ளி ஒரு முழக்கு ஒண்டு முழக்கித் தள்ளவேண்டியதுதானே.


ஒரு மாதிரி கலியாணவீட்டுப் படம் முடிஞ்சால் அடுத்த சோ(Show) தொடங்கும்.வசந்த மாளிகை, கௌரவம், பூவேலி, மின்சாரம் அது சம்சாரம், ஓர் ஊரில ஒரு ராஜகுமாரி,முந்தானை முடிச்சு, பாட்ஷா, அண்ணாமலை,காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய், அவள் வருவாளா,ஆசை,மேட்டுக்குடி,சூரிய வம்சம், புன்னகை மன்னன், மூன்றாம் பிறை,பதினாறு வயதினிலே,சலங்கை ஒலி,தர்மா,உளவுத்துறை எண்டு இடையில ஒரு காலகட்டத்திலை வந்த படங்கள் எல்லாம் எங்கடை ஊரிலை சக்கை ஓட்டம் ஒடித் தள்ளிச்சுது.எனக்குத் தெரிஞ்சு நான் வசந்தமாளிகை படத்தை மட்டும் அஞ்சு தரம் பாத்தனான் எண்டால் பின்னைப் பாருங்கோவன்.கலியாண வீட்டுக் கொப்பிக்குப் பிறகு2,3 சினிமாப் படங்களும் போட்டு முடிக்க விடிஞ்சு போகும்.விடிய எங்களை மாதிரி கொஞ்சம் ரீவிக்கு முன்னாலையே அனாதைப் பிணங்களை மாதிரிப் படுத்துக் கிடக்குங்கள்.



இப்பிடியெல்லாம் கஸ்ரப்பட்டுப் படம் பாத்ததெல்லாம் அந்தக் காலம்.ஆனால் இண்டைக்கு எங்கடை ஊரிலை கூடுதலாக எல்லா வீடுகளிலும் பெரிய 21 இஞ்சி fலற் ஸ்க்றீன்(Flat Screen)ரீவீயள் கிடக்குது.டெக்குகள்,சிடிக்கள்(CD),டிவிடி பிளேயருகள்(DVD),படக் கொப்பிகள் எல்லாம் இருக்குது.ஆனால் பாக்கிறதுக்கு ஆக்களும் இல்லை.இருக்கிற ஆக்களுக்கு நேரமும் இல்லை.அவர்களுக்கும் பாக்கிற மனநிலையும் இல்லை.அங்கையொண்டு இஞ்சையொண்டு எண்டு எங்கன்ரை இனம் எல்லா இடமும் சிதறி, சந்தோசத்தைத் தொலைச்சுக் கிடக்குது.என்ன தான் கஸ்ரப்பட்டாலும் அந்தக் கால வாழ்க்கையே எவ்வளவோ பரவாயில்லை எண்டதோடை நிம்மதியானதும் சந்தோசமானதும் எண்டு என்ரை மனஞ் சொல்லுது.நீங்கள் என்ன சொல்லுறியள்.


கொப்பி - காணொளி பிரதி - வீடியோ

பேந்தேன் பேசுவான் - பிறகேன் பேசுவான்

தறஞ்சு -அறைதல்

ரின்னர் - பெற்றோல் போன்ற எரி பற்றுக் கூடிய எரிபொருள்

அரக்கடா - விலத்து

மெள்ள - மெல்ல

இஞ்சத்தை - இந்த தேசத்தின்

பங்கை பார் -அங்கை பார்

கப் சிப் அமைதியாயிருத்தல்

கால் மாறிப் போதல் - மாப்பிளை வீட்டுக்கு பொம்பிளை செல்லல்

சங்கக் கடை - நிவாரணம் குடுக்கப்படும் கடை(றடிஒன் ஷொப்)
Author: வர்மா
•6:52 AM
வரலாற்றுப்புகழ்மிக்க நல்லூர் தேர்த்திருவிழா இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடிக்க சிறப்பாக நடைபெற்றது.

பட உதவி;பிரியா
Author: கானா பிரபா
•7:47 PM

இத்தனை நாளும் எதிர்ப்பார்த்த நாள் இன்று நல்லைக் கந்தன் ரதமேறி வரும் நாள். எம்பெருமானின் அருள் வேண்டிப் பக்தர்கள் தவம் கிடக்க, வள்ளி தேவசேனா சமேத ஆறுமுகக் கடவுள் இன்று காலை ஏழு மணியளவில் வெளிவீதி வலம் வந்து ரதமேறித் தம் பக்தர்களுக்கு அருள் மழை பொழிந்தார்.




அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனம் நல்லைக் கந்தன் ஆலயச் சிறப்பு நிகழ்ச்சியில் சைவத்தொண்டர்களின் சிறப்புச் சொற்பொழிவுகள், நல்லைக் கந்தன் பாடல்கள், நேயர்களின் நேரடிக் கருத்துப் பரிமாறல்கள், அத்தோடு நல்லைக் கந்தன் ரதோற்சவ நிகழ்வின் நேரடி அஞ்சல் போன்ற அம்சங்கள் அரங்கேறியிருக்கின்றன

இன்று நிகழ்ந்த இந்தச் சிறப்பான நாளின் நிகழ்வுகளை நீங்களும் காது குளிரக் கேட்க வேண்டும் என்ற ஆவலில், கடந்த ஆண்டு இடம்பெற்ற நிகழ்வுகளில் இருந்து இடம்பெற்ற சில படையல்களை இங்கே ஒலிப்பகிர்வாகத் தருகின்றேன். அத்துடன் இப்பதிவில் இடம்பெறும் நிகழ்வுப் படங்கள் 2005 இல் நல்லைக் கந்தனாலயத் தேர்த் திருவிழாவில் எடுக்கப்பட்டவையாகும்.




முதலில் கணேசருக்கு அபிஷேகம் மற்றும் பூசை நிகழ்ந்த போது, எமது சிறப்புச் செய்தியாளர் சிவத்தொண்டர் ஆறு. திருமுருகன் அவர்கள் வழங்கிய ஒலிப்பகிர்வு
Get this widget
Share
Track details



ரதோற்சவ நிகழ்வின் நேரடி அஞ்சல், கொழும்பு ஊடகங்கள் வாயிலாகப் பெற்று வழங்கியது
Get this widget
Share
Track details


எமது வானொலியின் அறிவிப்பாளரும், கல்வியாளருமான கலாநிதி சந்திரலேகா. வாமதேவா, நேயர் அரங்கில் கலந்து கொண்டு வழங்கிய "முருக வழிபாட்டின் சிறப்பு"
க்குறித்த கருத்துப் பகிர்வு

Get this widget
Share
Track details



முன்னை நாள் அகில இலங்கை கம்பன் கழகத்தின் தலைவரும், சிட்னியில் நம்மிடையே வாழ்ந்து வரும் தமிழறிஞருமான, திரு.திருநந்தகுமார் அவர்கள் வழங்கிய "நல்லைக் கந்தன் ஆலய மகோற்சவம்" குறித்த சிறப்பு ஒலிப்பகிர்வு


அல்லது இங்கே சொடுக்கவும்

தமிழறிஞர், செழுங்கலைப் புலவர் குமரன் அவர்கள் வழங்கிய "தேர்த் திருவிழாவின் சிறப்பு" என்னும் விடயம் குறித்த ஒலிப்பகிர்வு


அல்லது இங்கே சொடுக்கவும்

அகில இலங்கை கம்பன் கழக சிறப்புப் பேச்சாளர் ஸ்ரீபிரசாந்தன் "நல்லூர் முருகனின் சிறப்பியல்புகள்" என்னும் விடயத்தில் வழங்கிய சிறப்புப் பேச்சு


அல்லது இங்கே சொடுக்கவும்







நன்றி: இந்தப் பெரும் பணிக்கு உதவிய அத்தனை நல்லுள்ளங்களுக்கும்

படங்கள் உதவி: ஊடகவியலாளர் துஷ்யந்தினி கனகசபாபதிப் பிள்ளை
Lanka Library, மற்றும் கெளமாரம் தளம்
Author: வர்மா
•10:07 AM
தெல்லிப்பளை துர்க்கை அம்மன் புஷ்கரணியில் தீர்த்தமாடிய அற்புதமான காட்சி






















பட உதவி; பிரியா
Author: சினேகிதி
•7:57 AM
கனடால இப்ப கோடை காலம். நேற்று கொஞ்ச நேரம் எங்கட தோட்டத்தில போய் நிண்டனான் அப்ப அங்க நிக்கிற pears மரம் மற்று அம்மா பராமரிக்கிற கொஞ்சம் வெங்காயம் கொஞ்சம் தக்காளி கொஞ்சம் பாவற்காய் கொஞ்சம் பச்சை மிளகாய் கொஞ்சம் கத்தரி கொஞ்சம் வெண்டிக்காய் இப்பிடி எல்லா மரங்களையும் பாத்துக்கொண்டு நிக்கேக்க எனக்கு 13 வருசத்துக்கு முதல் ஊரில எங்கட வீட்டில நின்ற மரங்கள் அந்த மரங்களோடு எனக்கிருந்த தொடர்பும் ஞாபகத்து வந்திச்சு.கனநாள ஈழத்து முற்றத்துக்கு வரேல்லத்தானே நான் அதான் இன்டைக்கு
எப்பிடியும் கதை சொல்ற என்டு முடிவெடுத்திட்டன்.



நான் சொல்லப்போற மரங்களில் எத்தினை இப்ப உயிரோட இருக்கெண்டு எனக்குத் தெரியாது.டக்கெண்டு இப்ப ஞாபகத்துக்கு வாறது எங்கட வீட்டு வாசல்ல ஒரு குட்டிப்பந்தல் இருக்கு அதில எப்ப படர்ந்து பூத்திருக்கிறது சின்ன சிவப்பு நிற ரோசாப்பூ.அதோட சேர்த்து மஞ்சள் நிற கோண் பூ. உண்மையா இதுக்கு என்ன பெயர் என்று எனக்குத் தெரியாது. இந்த இரண்டு பூக்களும் சேர்ந்து எங்கட வீட்டு மதிலோட படர்ந்திருக்கும். கேற்றில நிண்டு ஊஞ்சல் மாதிரி ஆடிக்கொண்டு இந்த மஞ்சள் பூவின் மொட்டை ஆய்ஞ்சு நெத்தில அடிச்சா டொக் டொக் என்டொரு சத்தம் வரும். அப்பிடி விளையாடுறதுக்காக நிறைய மொட்டுகளை அநிநாயமாக்கியிருக்கிறம் நானும் எங்கட gang ம். ஒரு நாள் அப்பிடி மெய்மறந்து மொட்டடிச்சு விளையாடிக்கொண்டிருக்கும்போது கால் சின்ன விரல் மதிலுக்கும் gate க்குள்ளும் போய்ட்டுது. போய் நசிபட்டு நிகம் சப்பளிஞ்சு போய் ரத்தமெல்லாம் வந்திச்சு ( இந்த இடத்தில நீங்க உச்சு கொட்டோணும். சரியா). இன்று வரைக்கும் அந்த நிகம் கிளிச்சொண்டு மாதிரி வளைஞ்சு ஒரு மாதிரித்தான் இருக்கு :) :(..

இந்தக் கொடிக்குப் பக்கத்தில ஒரு மரம் நிண்டது. அது கிறிஸ்மஸ் மரம் மாதிரியிருக்கும் கிட்டத்தட்ட. கிறிஸ்மஸ் சேப்லதான் வளரும். கேற்றன் 2 பக்கமும் நின்றது. எங்கட வீட்டின் அடையாளம் அந்த மரங்கள். மற்ற மரங்களோடு ஒப்பிடும்போது இந்த மரங்கள் நல்ல strong அதால நாங்கள் கயிறு கட்டிட்டு பாய்ஞ்சு விளைாயாட இந்த மரங்கள் அநேகம் உதவி செய்யும். அடிவேண்டேக்க சுத்தி சுத்தி ஓடுறதும் இந்த மரத்தைச் சுத்தித்தான்.

இதுக்குப் பக்த்தில நீட்டுக்கு 4 தென்னை மரம் நிண்டது. எங்கட வீடு நடுவில முன் பக்கமும் பின் பக்கமும் மரங்கள். முன் பக்கம் 3 தென்னை மரம். 2 பச்சைத் தேங்காய் மரம் 1 செவ்விளநீர் மரம். அது கொஞ்சம் உயரம் என்டதால எனக்குப் பெரிசா தென்னை மரத்தோட ஒத்துவாறதில்ல. ஆனால் அந்த மரங்களைப் பார்த்துத்தான் அம்மம்மா காவோலை விளக் குருத்தோலை சிரிக்கிற கதை சொல்லித்தந்தவா. இதில வந்த இளநீர் அநேகமாக் கோயிலுகு்குத்தான் போயிருக்கெண்டு நினைக்கிறன் ஏனென்டால் எனக்கு எங்கட வீட்டு இளநீ குடிச்ச ஞாபகம் இல்லை. வேற ஆக்கள் வீட்ட வழுக்கல் சாப்பிட்ட ஞாபகங்கள் நல்லாவே இருக்கு.

தென்னை மரங்களுக்கு நடுவில ஒரு தேசி மரம் இருந்தது. பெரிய உயரமில்லை. வட்டமா நிலத்தோட முட்டுற மாதிரி வளர்ந்திருந்தது. எனக்கு இந்த மரத்தில ஒரு தனி விருப்பமிருந்தது. தேசி இலையின் வாசம் நல்லாப்பிடிக்கும். நிலத்தில முட்டுற காய்ஞ்சு போன தேசித் தடிகளை முறிச்சு மரத்துக்கு கீழ அமைதியா நிழல்ல இருந்து சட்டி பானை எல்லாம் வச்சு சோறு கறி காய்ச்சினது அங்கதான். சில நேரம் நல்ல மஞ்சள் நிறத்தில தேசிப்பழம் விழிந்திருக்கும். அம்மா விடிய வெள்ளென தேசிப்பழம் விழுந்திருக்கா என்று பார்த்து எடுத்துக்கொண்டு வரச்சொல்லி என்னைத்தான் அனுப்புவா.2 நாளைக்கு முதல் மகான் என்ற தொடர் பார்த்தன் விஜய் ரீவில.அதில குட்டி பரமஹம்ஸர் சொல்லுவார் தான் மல்லிகைப் பூச் செடியோட கதைச்சனான் அதான் மரம் எனக்கு நிறையப் பூ தந்ததென்று. அது உண்மை என்டால் எங்கட தேசி மரம் நல்லாக் காய்ச்சதுக்கு நான் தானுங்கோ காரணம். எங்கட கோழியும் சில நேரம் காரணமா இருக்கலாம். ஏனென்டால் அவாவும் தேசி மரத்துக்கு கீழ வந்துதான் முட்டை போடுறவா.

மற்ற மதில் கரையில ஒரு பப்பாசி மரம் நின்டது. நல்ல ஒரேஞ் நிறப்பழம். நினைக்கவே வாயூறூது. அப்பிடியொரு இனிப்பு அந்தப் பப்பாசிப்பழம். கனடால இருக்கிற பப்பாசிப்ழம் ஊசி போட்டுப் பழுக்க வைக்கிறதாலயோ என்னவோ இனிப்பே இல்லை. எங்கட வீட்டுப் பப்பாசிப்பழத்துக்கு நல்ல கிராக்கி. எங்கட பெரியப்பாக்கு 6 பிள்ளையள். வீட்ட வாறநேரம் தன்ர வீட்ட கொண்டுபோறன் என்டு பப்பாசிப்பழம் ஆய்ஞ்சுகொண்டுபோய் ஆருக்கும் வித்துப்போட்டு அந்தக்காசோட ஆள் கள்ளுத்தவறணைக்குப் போயிடும். பிறகு நாங்கள் ரியூசனுக்குப்போகேக்க பெரியம்மா என்னடி ஒரு பப்பாசிப்பழம் கொண்டுவரேல்ல இந்த முறை. அரிசிப்புட்டோட சாப்பிட நல்லாயிருக்கும் என்டுவா அப்பத்தான் தெரியும் பெரியப்பான்ர வண்டவாளம்.

கொய்யா மரம் நிண்டது. ஆகச்சின்னனில எனக்கும் அக்காக்கும் கிரந்தி அதால அம்மா கொய்யாப்பழம் சாப்பிட விடுறேல்ல ஆனால் நாங்கள் களவா மரத்தில வச்சே கடிச்சிருக்கிறம். லக்ஸ்பிறே பாக் கட்டி அது வெடிக்கிற அளவுக்குப் பெருசா வரும். அப்புறம் மாதுளம் பழம். அது நான் நட்ட மரம். காய்ச்சல் வாற நேரமெல்லாம் நேக்ரோ குடிச்சிட்டு சத்தி எடுத்ததும் அந்த மரத்துக்குக் கீழதான். (opps). மாதுளம் பழம் பழுக்க முதல் வெள்ளையா இருக்கேக்க பிஞ்சுக்காய் சாப்பிட நல்லாயிருக்கும். பழம் இன்னும் நல்லாயிருக்கும்.

மே பிளவர் என்றொரு மரமும் நின்றது. இளநாவல் நிறத்தில கொத்து கொத்தாப் பூக்கும் அந்தப்பூ. மே-யூன் காலத்தில் மட்டும்தான் அந்தப்பூ பூக்கும். அதற்குப்பக்கத்தில் சில குறோட்டன்கள் எக்ஸோறா மற்றும் நாலுமணிப்பூ நிண்டவை. நாலுமணிப்பூ நிறைய நிறத்தில நிண்டது. மஞ்சள்தான் நிறைய நிண்டது.



வீட்டுக்குப்பின்னால மதில் கரையோட ஒரு அரலி மரம் (நாவல் நிறம்) ஒரு நெல்லி மரம் ஒரு தென்னை மரம் ஒரு பப்பாசி நிறைய செவ்வரத்தை மரங்கள் நின்றன. செவ்வரத்தம் பூவின் அம்மா யூஸ் செய்து தருவா. சுடுதண்ணில பூப்போட்டுத் தங்கச்சி குளிக்க வாக்கிறது. பிறகு அப்பிடியே ஆசையில நாங்களும் செவ்வரத்தப்பூவால் நனைந்த தண்ணில குளிக்கிறது...ம் இப்பிடியோ எவ்வளவோ ஞாபகம் வருது. அடிக்கிறதுக்கு கூட அம்மா முதல் முறிக்கிறது செவ்வரத்தம் தடிதான. நிறைய திட்டு திட்டா இருக்கும் அந்தத் தடில அடி பட்டால் சும்மா அந்த மாதிரி சுணைக்கும்.

இந்த மரங்களைப் பற்றி எழுதும்போது வேறு பல ஞாபகங்களும் கூடவே ஞாபகம் வருகிறது.

மீண்டும் வருகிறேன்.
Author: வர்மா
•8:34 PM
வரலலாற்றுப்பெருமைமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயதீர்த்தோற்சவம் நேற்று சிறப்பாக நடைபெற்றது.































பட உதவி; பிரியா