விதி கிழிந்த குருவி பீரங்கி வாசல்ல கூடு கட்டிச்சுதாம். இந்த சொற்றொடரை யாராவது கேட்டிருக்கிறீர்களா?
எனது நண்பர் ஒருவர் அடிக்டி சொல்லும் சொற்றொடர் இது. அவரைத் தவிர வேறு யாரும்அதை சொல்லிக்கேட்டதில்லை.
இதை மாதிரி குரங்கிட்ட மூத்திரம் கேட்ட மாதிரி கொப்பு கொப்பா தாவுறான் என்றும் சொல்லுவான்.
இப்படி வித்தியாசமான விசயங்கள் இருந்தால் சொல்லுங்களன். கேப்பம்
அன்புடன்
சிட்னி வெய்யிலில் சட்னியாகிக் கொண்டிருக்கும்
சஞ்சயன்
நான் சிட்னி வந்திருப்பதும் விதி கிழிந்த குருவி பீரங்கி வாசல்ல கூடு கட்டின மாதிரி போல
|
Author: கானா பிரபா
•2:14 AM

ஈழத்தின் ஒவ்வொரு ஊருக்கும் விசேடமான அம்சங்கள் அவை உணவுப் பதார்த்தமாகட்டும் அல்லது இயற்கையோடு மையப்படுத்தியதாகட்டும், அல்லது கைத்தொழில் சார்ந்த விடயங்கள் ஆகட்டும் இவற்றை ஒரு பதிவில் அடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு எனக்குத் தெரிந்த தகவல்களோடு வருகின்றேன்.
உங்கள் பின்னூட்டங்கள் மூலம் விடுபட்டவையை அறியத் தந்தால் அவற்றை பிற்சேர்க்கையாக இணைத்துக் கொள்வேன்.
இணுவில் - மரவள்ளிக் கிழங்கு (எங்களை எல்லாம் கிழங்கு என்ற அடைமொழியோடு தான் மற்ற ஊர்க்காரர் அழைப்பார்கள்)
தாவடி - புகையிலை
மட்டுவில் - கத்தரிக்காய்
ஆனைக்கோட்டை - நல்லெண்ணை
நிலாவரை - வற்றாத கிணறு
பருத்தித்துறை - பருத்தித்துறை வடை (தட்டையாக மொறு மொறு என்று இருக்கும் பதத்தில் செய்தது)
பளை - தேங்காய் ( நிறைய தென்னை மரங்கள் வளர்க்கப்பட்டு தேங்காய் விளைவிக்கப்படும் ஊர்)
கீரிமலை - யாழ்ப்பாணத்தவர் பிதிர்க்கடன் தீர்க்கப் போகும் கடல், கூடவே விடுமுறை நாட்களில் நீச்சலடிக்கும் இடம்
கசூர்னா பீச் - கசூர்னா என்ற பெயரோடு அழைக்கப்படும் கடற்கரை
யாழ்ப்பாணப் பிரதேசம் - பனங்காய் பணியாரம், ஒடியற்கூழ், புழுக்கொடியல்
பரந்தன் - இரசாயனத் தொழிற்சாலை (ஒருகாலத்தில் இருந்தது)
ஆனையிறவு - உப்புத் தொழிற்சாலை (ஒருகாலத்தில் இருந்தது)
காங்கேசன் துறை - சீமெந்து தொழிற்சாலை (ஒருகாலத்தில் இயங்கியது)
வாழைச்சேனை - காகிதத் தொழிற்சாலை
மண்டைதீவு - சுருட்டு (வந்தியத்தேவன் பகிர்ந்தது)
மட்டக்களப்பு - தயிர் (மழை ஷ்ரேயா பகிர்ந்தது)
திக்கம் - சாராய வடிசாலை (சயந்தன் பகிர்ந்தது)
|
Author: கரவைக்குரல்
•9:58 AM
ஒரு வேலையை சும்மா முடிக்கவே ஏலாது பாருங்கோ,அதைவிட அதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் விதமாகவும் முடிக்க முடியாது எண்டால் அதிலை உண்மை இருக்குது பாருங்கோ,என்னதான் பெரிய திட்டம் போட்டு செய்தாலும் அதற்கு எதிரான கருத்துடையவர்கள் உருவாகுவது தவிர்க்க முடியாத விடயம்.நிகழ்வுகள் முடிந்த பின் அப்படியாக நிகழ்வுகள் சம்பந்தமாக அதை நிராகரித்து கருத்துரைப்பவர்களும் இருகிறார்கள்,அதேபோல ஆமோதித்து கருத்துரைபவர்களும் இருக்கிறார்கள்,அவையெல்லாம் நிகழ்வு அமைப்பாளர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை கொடுக்கும் என்பதோடு எதிர்காலத்தில் சிறந்த முறையில் ஒழுங்கமைக்க உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை,
இப்படியாக நிகழ்வினால் வரும் எதிர்பார்க்கமுடியாத கஷ்டங்களாலும் தடங்கல்களாலும் சிலர் நிகழ்வினை ஒழுங்கமைத்துக்கொண்டிருக்கும்போது ”என்ன ஆக்கினை பிடிச்ச வேலையில் தலை குடுத்தேனோ” என்று மனம் கசந்து கொள்வார்கள் சிலர்.
அதுமட்டுமில்லாமல் எந்த ஒரு செயற்பாட்டுக்கும் வெற்றியும் உண்டு,தோல்வியும் உண்டு பாருங்கோ,வெற்றிபெற்றால் ”ஆகோ ஓகோ எண்டு வேலை போகுது” எண்டு சொல்லும் எங்கடை சனம், தோல்வியிலை போனால் “ஐயோ ஆக்கினை பிடிச்ச வேலையிலை தலை வைச்சு படுக்கிறதேயில்லை எண்டு தலையிலை கை வைப்பினம்,
இப்படியாக “ஆக்கினை” என்பது ”கஷ்டம் கொடுத்தல்” என்பதாகவும் அதனுடன் சேர்ந்து வரும் ”விழுந்த வேலை” என்பதற்கு தனியாக கருத்துக்கொடுக்காமல் ஆக்கினையில் அதாவது கஷ்டம் கொடுக்கும் வேலையில் பங்கெடுத்துவிடல் அல்லது முற்றுமுழுதாக ஈடுபட்டுவிடல்” என்றவறாக கருத்துக்கொடுக்க முடியும், அதை சிலர் "ஆக்கினை விழுந்த வேலை" என்பதை "ஆக்கினை பிடிச்ச வேலை" என்றும் சொல்லிக்கொள்வர்.
சிலருக்கு சிலர் எப்போதும் கஷ்டம் கொடுத்தபடியே இருப்பதாக அந்தச் சிலர் உணர்வார்கள்,அந்த வேளைகளிலும் கூட ”இவன் எப்பவும் ஒரே ஆக்கினை தான்”அல்லது ”ஒரே ஆக்கினை பிடிச்சவன்” எண்டு மனதோடு திட்டுவதும் உண்டு் எங்கடை சனம்.
அதைவிட அற்புதமாக ”ஆக்கினை விழுவானே” எண்டு முதியவர்கள் சிலர் கோவத்திலும் சிலர் நட்பிலும் மற்றவர்களை ஏசுவதுமுண்டு.
இப்படியாக ”ஆக்கினை” என்பது ஈழத்து வழக்கோடு ஒட்டிவிட்ட சொல்.இது வயது வந்த எம் முதியோர்களால் இப்போதும் அடிக்கடி கேட்ககூடியதாக இருக்கும்.
என்றாலும் நடுத்தர வயதானவர்களாலும் இளையோர்களலும் இடையிடையே இக்காலங்களில் சொல்லப்பட்டாலும் சிறியவர்களால் அது சொல்வது மிகக்குறைவு என்று சொல்லலாம்.என்றாலும் இந்த சொல் வழக்கொழியும் மற்றைய சொற்களைப்போல அல்லாமல் சிலகாலம் எம்மவர்கள் வாயில் நின்று நிலைக்கலாம் என்று எண்ணத்தோன்றுகிறது,இது சம்மந்தமான உங்கள் கருத்தையும் பகிர்ந்துகொள்ளுங்கோவன்.
சரி இவன் என்ன ஆக்கினை விழுவான் சும்மா என்னடா உளறிகொண்டிருக்கிறான் எண்டு நினைக்கிறீங்க என்ன? உங்களுக்கும் ஆக்கினை தராமல் நானும் போட்டு வாறன்,இன்னுமொரு சொல் நினைவுவரேக்கை நான் வாறன், மற்றவைக்கு ஆக்கினை தராமல் இருப்போமாக.
குடுதேனோ- கொடுத்தேனோ எங்கடை- எங்களுடைய
நினைவுவரேக்கை- நினைவு வரும்பொழுது
Author: கானா பிரபா
•2:01 AM

"கண்ணுபடப்போகுதய்யா சின்னக்கவுண்டரே! சுத்தி போட வேணுமய்யா சின்னக்கவுண்டரே" இது ஒரு பிரபலமான தென்னிந்திய திரையிசைப்பாடல். இந்தப் பாடலை ஈழத்துப் பாடலாக்கும் வாய்ப்பு வந்தால் "கண்ணூறு படப்போகுதய்யா சின்னக்கவுண்டரே! நாவூறு கழிக்க வேணுமய்யா சின்னக்கவுண்டரே" இப்படித்தான் பாடவேணும் போல.

"கண்ணு படப்போகுது" என்று என்று தமிழக மொழிவழக்கில் பரவலாகப் பேசும் வார்த்தைப் பிரயோகம் ஈழத்து மொழி வழக்கில் "கண்ணூறு பட்டுடும்" என்றே புழக்கத்தில் பயன்படும். கண்ணூறு என்பதைப் பிரித்துப் பார்த்தாலே புரிந்து விடும் இந்த சொல் கொண்டு வரும் விளக்கம். கண்+ஊறு என்று பிரித்துப் பொருள் உணர்ந்தால் பிறரது கண்பார்வை பட்டால் ஒருவருக்கு பாதிப்பு ஏற்படும் என்ற மூதாதய நம்பிக்கையே இது கொண்டு வரும் விளக்கம். பெரும்பாலும் குழந்தைகளைப் பாதுகாக்கவே இப்படியான சொற்பிரயோகமும் பயன்படுத்தப்படுகின்றது.
திருஷ்டி சுத்தி போட வேணும் என்று தமிழக வழக்கில் இருக்கும் சொற்பயன்பாட்டையே "நாவூறு கழிக்க வேணும்" என்று ஈழமொழி வழக்கில் பயன்படுத்துவார்கள். நாவூறு என்பதற்கு ஈழத்து மொழி அகராதியில் "நாத்தோஷம்" என்றே விளக்கப்படுகின்றது. அதாவது ஒரு அழகான குழந்தையைப் பார்த்து "ஆகா இந்தப் பிள்ளை கொழு கொழுவென்று எவ்வளவு அழகான, துறுதுறுப்பான பிள்ளையாக இருக்கிறதே" என்று ஒருவர் நாவூறு பட்டால் அந்தப் பிள்ளைக்கு தோஷம் வந்து விடும் என்ற மூதாதய நம்பிக்கையே இங்கே சுட்டப்படுகின்றது. பொதுவாக ஈழத்தின் வாழ்வியலில் ஒரு குழந்தை பிறந்து விட்டால், தேங்காச்சிரட்டையில் (கொட்டாங்குச்சி என்று தமிழக வழக்கில் சொல்லப்படுவது)கருநிறப் பொட்டைத் தயாரித்து குழந்தையின் நெற்றியில் ஒரு பெரும் பொட்டை இடுவதோடு கன்னத்தில் சின்னஞ்சிறு குட்டிப் பொட்டு எதுக்குப் போடுவார்கள் வேறு எதெற்கு நாவுறு படாமல் தான்....
எனது மகளுக்கு ஒன்றரை வயதானபோது குடும்பத்துடன் கொழும்புக்குவந்துவிட்டேன். அப்போது எனதுசகோதரிக்கு ஒருபெண்குழந்தை பிறந்துஆறு மாதமாகியது. ஐந்துவருடங்களீன் பின்னர் சகோதரிக்கு சத்திரசிகிச்சை செய்யவேண்டியதால் சகோதரிகுடும்பத்துடன் கொழும்புக்குவந்து என்னுடன் தங்கினார்.
பிள்ளைகள் இருவரும்முதலில் சேரத்தயங்கினர்.பின்னர் பிரிக்கமுடியாதபடி இணைந்துவிட்டனர்.
ஒருநாள் இரவு ஊரைப்பற்றியும் கொழும்பு வாழ்ககையைப்பற்றியும் நாங்கள் கதைத்தோம்.அப்போதுதிடீரென சகோதரியின் மகள் வீரிட்டு அலறியபடி ஓடிப்போய் தாயைக்கட்டிப்பிடித்தார். எனதுமகள் ஏங்கியபடி எல்லோரயும்பார்த்தார்.சகோதரியின் மகளிடம் காரணம் கேட்டோம்.அழுகைகூடியதேதவிர காரணத்தை அவர் சொல்லவில்லை.என்ன நடந்ததென மகளிடம் கேட்டேன்.
"நீங்கசத்தமா கதைச்சீங்க.சந்தைமாதிரிகிடக்கெண்டா.பக்கத்துகாம்பராவிலை போயிவிளையாடுவம் எண்டுநான்சொன்னேன். உடனை அழுதா."
என்று எனதுமகள் கூறினார்.கொழும்பிலை காம்பறா<சிங்களம்> என்றால் அறை. வைத்தியசாலையில் பிரேத்தை வைக்குமிடத்தை காம்பறா என ஊரில் சொல்வார்கள்.கொழும்பில் அதனை மய்யக்காம்பறா என்பார்கள்.
எனது நண்பரொருவர் கொட்டாஞ்சேனையிலிருந்து தெஹிவளைக்கு தனதுமைத்துணருடன் போனார். நண்பனுக்கு சிங்களம் அரைகுறையாகத்தெரியும். மைத்துணருக்கு சிம்க்களம் தெரியாது. பஸ்ஸில் ஏறியதும்" தெஹிவளை தெக்காய்" என்றார் நண்பர்.மற்றவர் யாரென சிங்களத்தில் நடத்துனர் கேட்டார். "அத்தான் எக்காய். நான் எக்காய் .தெஹிவளை தெக்காய் என்று நண்பைகூறினார்.
சாப்பாட்டுக்கடை ஒன்றில் மலையாள நண்னபரொருவர்சப்பிட்டுக்கொண்டிருந்தார்.பரிமாறுபவர் குழம்புவிட்டதும் மதிமதி என்றார். பரிமாறுபவர் மீண்டும் குழம்பு ஊற்றினார். மலையளநண்பர் சத்தமாக மதிமதி ந்ண்றுகத்தினார். மலையாளத்தில் மதி என்றால் போதும். சிங்களத்தில் மதி என்றால் போதாது.
இவை தொடற்பாடலை தவறாக விளங்கிக்கொண்டதால் ஏற்பட்ட குழப்பங்கள்.நாயும் பூனயு கண்டதும் சண்டைப்படுவதற்கும் தவறானதொடர்பாடல்தான் காரணம்.
நண்பனைக்கண்டதும் நாய் வாலை ஆட்டும்.இரையைக்கண்டால் பூனைவாலை ஆட்டும்.நான் உன்நண்பனென்று வாலை ஆட்டி நாய் கூறுவதை ,தன்னை இரையாக நாய் நினைப்பதாக பூனை தவறாக விள்ங்கிவிடுகிறது.
நான் உன் எதிரியல்ல நண்பன் என்று வாலை உயர்த்தி த்னது நட்பைவெளிப்படுத்துகிறது பூனை.நாய் எதிரியைக்கண்டால் வாலை உயர்த்தும்.தொடர்பாடலில் ஏற்பட்டகுழப்பத்தால் நாயும் பூனையும் சண்டையைஆரம்பித்துவிடும்.
Author: சின்னக்குட்டி
•3:28 AM
இந்த பதிவும் எனது பழைய பதிவு தான் ...எனக்கு பிடித்த இந்த பதிவும் ஈழத்து முற்றத்துக்கு ம் பொருத்தமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இங்கு பிரசுரிக்கிறேன்
வால்ராஜா முனையிலிருந்து ஹரியானா மாநிலம் பெற்றெடுத்த சிங்கம் கபில்தேவ் பந்து வீசி கொண்டிருக்கிறார் அழகிய தமிழில் சென்னை வானொலியில் வர்ணணையாளர் மணியின் குரல் அழகிய தமிழில் கூவி கொண்டிருக்கார்...
உந்த கிரிக்கற் மச்சுக்கள் நடந்தால் காதோரம் வைத்து உந்த டிரான்சிஸ்ட் பெட்டிகளோடு மாரடிச்சு கொணடிருப்பன். விடிஞ்சால் பொழுதுவிட்டால் உதோடை கிடக்கிறாய் மோனை வேற வேலை வெட்டி இல்லையே அதாலை போன அப்பம்மா புறு புறுத்தண்டு போகுது... அப்படி ஒரு கிறேசி, வெறி.. அப்படி ஒரு. உந்த கிரிக்கட் விளையாட்டிலை அந்தக்காலம் எங்கள் தரவளி களுக்கு..
. உந்த சோம்பேறி கனவான் விளையாட்டை இந்திய உபகண்டத்துக்கு சொத்தாய் கொடுத்திட்டு போயிருக்கிறான் வெள்ளைகாரன். அவனே இப்ப உந்த கனவான் விளையாட்டிலை இன்ரறைஸை காணலை.
டிரான்சிஸ்டர் வந்த படியால் படுத்து கொண்டு காதோடை கேட்க கூடியதாயிருக்கு....... அந்த காலத்து றேடியோ ஒன்று இப்ப வீட்டு மூலையிலை கவனபாரற்று கிடக்கு அப்ப உதுக்கு இருந்த மவுசு.காலம் காலமே பரம்பரை சொத்து போல பாவிப்பினம்... அந்த பழம் றேடியாவின்ரை பற்றியை பார்த்தாலை இப்ப இருக்கிற டிராஸ்டிட்டாரிலும் பார்க்க அந்தா பெரிசு வீட்டுக்கு வெளியிலை வயர் இழுத்து அதுக்கு வேற அரைப்பனை உயரத்திலை கேடர் கம்பு தாட்டு உச்சத்திலை ஏரியல் பூட்டினால் தான் கேட்குமாம்.
ஊரெல்லாம் அமெரிக்கன் பாசனிலை வீடுகள் எழும்பியிருக்கிற நேரத்திலை சங்கிலியன் தோப்பு மாதிரி முன் தோற்றமுள்ள போர்ட்டிக்கோ சுண்ணாம்பு வீட்டுடோய் இருந்தாலும் எல்லாருக்கும் தெரியிற இந்த ஏரியல் இவை உண்மையாய் இவை வாழ்ந்து கெட்ட குடும்பம் தான் என்று பறை சாற்றி கொண்டிருக்கிறது. அந்த காலம் றேடியாக்கள் இருக்கிறாக்கள் இவை இவை தானென்று உந்த ஏரியலை வைச்சு சொல்லலாம். அந்த ரேடியாவிலை மீற்றர் பிடிக்கிற பாடென்ற அந்தா பாடு படுவினம்..
அப்பிடி மீற்றர் பிடிபட்டாலும் ஆக்கள் கிணற்றுக்குளை யிருந்து கதைக்கிற மாதிரி தான் கேட்கும்...திருச்சி, சென்னை வானொலி ஈசியாய் பிடிபட்டாலும் இந்த கொழும்பு றேடியோ ஸ்டேசன் பிடிக்கோணும் என்றால் படாதபாடு படணும். வானிலை சரியில்லாமால் பிடிபடாமால் இருந்து திருச்சி சென்னை பக்கம் திருப்பினால் வயலும் வாழ்வும், வயலின் இசையும் தனக்கு புரியாத சங்கீதத்தையும் போடுவினம் ஆர் கேட்கிறது.
பிரசித்தி பெற்ற கோயில் தேர் தீர்த்தத்துக்கெல்லாம் நேர் முக வர்ணனை செய்யிறவை தான் எங்கட தாத்ஸ் ஒன்று நேரிலை நடக்கிற மாதிரி ரசிச்சு கேட்கும். உப்பிடித்தான் அப்போலா11 விண்வெளிக்கலம் சந்திரனிலை இறங்கி ஆம்ஸ்ரோங் என்றவன் காலடி வைத்ததை வரிக்குவரி உந்த நேர் முகவர்ணனையிலை கேட்டதை ஏதோ குவாலிபிகேசன் மாதிரி புழுகும் உந்த தாத்ஸ்...
ஆயிரம் அறிவிப்பாளர் இருக்கட்டுமன்.வீட்டுக்கு வீடு வானொலி பெட்டிகருகில் ஆவலுடன் காத்திருக்கும் என்று விடிய வலம் வரும் பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சிக்கு வரும் மதுர குரலோன் கேஎஸ் ராஜாவை எல்லோருக்கும் பிடித்த மாதிரி எனக்கும் பிடிக்கும். அந்த காலத்தில் 83 கலவரத்தின் பின்னர் இங்கு நடந்த கொடுமைகளெல்லாம் சொல்ல போகிறோன் என்ற வரிகளடங்கிய நாகூர் ஹனீபாவின் பாடலை வானொலியிலை அடிக்கடி போட்டு தார்மீக கோபத்தை வெளிபடுத்தியவர்.
இதோ எனது டிரான்சிஸ்ரரில் ஓரே சன வெள்ளத்தின் கோரஸ் சத்தம் அதையும் மீறி அறிவிப்பாளர் மணி அற்புதம் அற்புதம் உயரமாக எல்லைகோட்டை தாண்டி சென்று கொண்டிருக்க்கிறது நிச்சயமாக ஆறே தான்..... கபில்தேவ் விளாசிக்கொண்டிருக்கிறராம்.... இப்ப இண்டியன் ரீம் பட் பண்ணுது போலை... எனக்கும் அந்த மாதிரி சந்தோசம் தான்.... அந்த காலத்திலை நாங்கள் இலங்கை ரீமுக்கு சப்போட் பண்றலே இந்தியன் ரீமுக்கு தானே சப்போட் பண்றது....
|
Author: வந்தியத்தேவன்
•6:37 AM
பிரபா : என்ன வந்தி கனகாலமா முத்தத்துப் பக்கம் காணவில்லை?
வந்தி : ஒண்டுமில்லையண்ணை கொஞ்சம் சோலி கூட.
பிரபா: உங்கடை சோலியள் எனக்குத் தெரியும் தானே ஹிஹி
வந்தி : ஏனப்பா சபைசந்தியில் என்னுடைய மானத்தை வாங்கிறியள்
பிரபா : உதைவிடுங்கோ ஊரிலை என்ன புதினம்?
வந்தி : வாற ஞாயிற்றுக்கிழமை எங்கடை டாக்குத்தர் ஜீவராஜுக்கு கலியாணம் மலையிலைதான் கலியாணமாம் நேரம் கிடைத்தால் ஒரு எட்டுப் போயிட்டு வரலாம்.
பிரபா : யார் ஜீவநதியின் சொந்தக்காரரோ? அவரும் முத்ததிலை இடைக்கிடை வந்து இளைப்பாருகின்றவர். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களைச் சொல்லிவிடுங்கோ.
வந்தி : ஓம் நான் சொல்லிவிடுகின்றேன். மற்றது அண்ணை எங்கட குழப்படிக்காரியின் கொம்பியூட்டர் பழுதாப்போச்சாம் இப்ப சில நாளாக ஆள் ஒன்லைனிலை இல்லை, ஆள் இருந்தால் நிறைய விடுப்பு கேட்கலாம்.
பிரபா : யாரையப்பா சொல்றியள் ஓ சினேகிதியைச் சொல்றியளோ அவர் ரொம்ப நல்லவராச்சே ஆனாலும் அடிக்கடி விடுப்பு பிடுங்குகின்றேன் என்று எல்லாத்தையும் சொல்லிவிடுவார்.
வந்தி : வேறை என்ன பூராயம் நாட்டிலை?
பிரபா : என்னத்தைச் சொல்வது எங்கட பக்கத்து வீட்டுப் பெடியன் முளைச்சு மூண்டு இலை விடேல்லை யாரோ ஒரு உடுவில் பெட்டைக்கு லைனாம்? எங்கட காலத்திலை உப்பிடியே வந்தி?
வந்தி : ஓமண்ணணை இப்பத்தைப் பொடியள் நல்லா முன்னேறிவிட்டினம், உதைவிடப்பா எனக்கு நேரம் போட்டுது நான் நாளைக்கு வாறன்.
பிரபா : சரி சரி கவனமாக போட்டுவாங்கோ
பொருள் விளக்கம்
சோலி : வேலை அல்லது அலுவல் என்பதை இப்படிச் சொல்வார்கள், இதே நேரம் எந்தவித சண்டை சச்சரவுக்கும் போகாதவரையும் சோலி சுரட்டு இல்லாத பிள்ளை என ஊரிலை சொல்வார்கள்.
உதாரணம் : உவன் வந்தி ஒரு சோலி சுரட்டுக்கும் போனதில்லை.
சபை சந்தி : பொது இடம்
புதினம் : செய்தியைத் தான் புதினம் எனக் கேட்பார்கள். என்ன புதினம் இண்டைக்கு. இதேபோலை புதினத்தை ஆச்சரியம் என்ற பொருள் படும் வகையிலும் பயன்படுத்துவார்கள்.
உதாரணம் :
உங்கைபார் உந்தப் புதினத்தை சிவத்தாரின்ரை பெட்டை மோட்டர்சைக்கிளை போகுது.
மலை : திருகோணமலையை அங்குள்ளவர்கள் பெரும்பாலும் மலை என்றே குறிப்பிடுவார்கள்.
விடுப்பு : வம்பு அளத்தல், கிசுகிசு போன்றவை விடுப்பு எனப் பொருள்படும். இப்படியான கதைகளைப் பேசுபவர்களை விடுப்புப் பிடுங்குபவர்கள் என்பார்கள். இப்போது ஸ்டைலாக விடுப்ஸ் என்பார்கள். மற்றவர்களைப் பற்றிக் கதைத்தல், தேவையற்ற விடயங்கள் பேசுதல் போன்றவன விடுப்பாகும்.
உவர் சரியான விடுப்ஸ் என்றால் ஆள் நல்ல வம்பளப்பார் எனப் பொருள்.
பூராயம் : இதுவும் விடுப்பு போன்ற அர்த்தம் தரும் சொல்தான்.