எனது மகளுக்கு ஒன்றரை வயதானபோது குடும்பத்துடன் கொழும்புக்குவந்துவிட்டேன். அப்போது எனதுசகோதரிக்கு ஒருபெண்குழந்தை பிறந்துஆறு மாதமாகியது. ஐந்துவருடங்களீன் பின்னர் சகோதரிக்கு சத்திரசிகிச்சை செய்யவேண்டியதால் சகோதரிகுடும்பத்துடன் கொழும்புக்குவந்து என்னுடன் தங்கினார்.
பிள்ளைகள் இருவரும்முதலில் சேரத்தயங்கினர்.பின்னர் பிரிக்கமுடியாதபடி இணைந்துவிட்டனர்.
ஒருநாள் இரவு ஊரைப்பற்றியும் கொழும்பு வாழ்ககையைப்பற்றியும் நாங்கள் கதைத்தோம்.அப்போதுதிடீரென சகோதரியின் மகள் வீரிட்டு அலறியபடி ஓடிப்போய் தாயைக்கட்டிப்பிடித்தார். எனதுமகள் ஏங்கியபடி எல்லோரயும்பார்த்தார்.சகோதரியின் மகளிடம் காரணம் கேட்டோம்.அழுகைகூடியதேதவிர காரணத்தை அவர் சொல்லவில்லை.என்ன நடந்ததென மகளிடம் கேட்டேன்.
"நீங்கசத்தமா கதைச்சீங்க.சந்தைமாதிரிகிடக்கெண்டா.பக்கத்துகாம்பராவிலை போயிவிளையாடுவம் எண்டுநான்சொன்னேன். உடனை அழுதா."
என்று எனதுமகள் கூறினார்.கொழும்பிலை காம்பறா<சிங்களம்> என்றால் அறை. வைத்தியசாலையில் பிரேத்தை வைக்குமிடத்தை காம்பறா என ஊரில் சொல்வார்கள்.கொழும்பில் அதனை மய்யக்காம்பறா என்பார்கள்.
எனது நண்பரொருவர் கொட்டாஞ்சேனையிலிருந்து தெஹிவளைக்கு தனதுமைத்துணருடன் போனார். நண்பனுக்கு சிங்களம் அரைகுறையாகத்தெரியும். மைத்துணருக்கு சிம்க்களம் தெரியாது. பஸ்ஸில் ஏறியதும்" தெஹிவளை தெக்காய்" என்றார் நண்பர்.மற்றவர் யாரென சிங்களத்தில் நடத்துனர் கேட்டார். "அத்தான் எக்காய். நான் எக்காய் .தெஹிவளை தெக்காய் என்று நண்பைகூறினார்.
சாப்பாட்டுக்கடை ஒன்றில் மலையாள நண்னபரொருவர்சப்பிட்டுக்கொண்டிருந்தார்.பரிமாறுபவர் குழம்புவிட்டதும் மதிமதி என்றார். பரிமாறுபவர் மீண்டும் குழம்பு ஊற்றினார். மலையளநண்பர் சத்தமாக மதிமதி ந்ண்றுகத்தினார். மலையாளத்தில் மதி என்றால் போதும். சிங்களத்தில் மதி என்றால் போதாது.
இவை தொடற்பாடலை தவறாக விளங்கிக்கொண்டதால் ஏற்பட்ட குழப்பங்கள்.நாயும் பூனயு கண்டதும் சண்டைப்படுவதற்கும் தவறானதொடர்பாடல்தான் காரணம்.
நண்பனைக்கண்டதும் நாய் வாலை ஆட்டும்.இரையைக்கண்டால் பூனைவாலை ஆட்டும்.நான் உன்நண்பனென்று வாலை ஆட்டி நாய் கூறுவதை ,தன்னை இரையாக நாய் நினைப்பதாக பூனை தவறாக விள்ங்கிவிடுகிறது.
நான் உன் எதிரியல்ல நண்பன் என்று வாலை உயர்த்தி த்னது நட்பைவெளிப்படுத்துகிறது பூனை.நாய் எதிரியைக்கண்டால் வாலை உயர்த்தும்.தொடர்பாடலில் ஏற்பட்டகுழப்பத்தால் நாயும் பூனையும் சண்டையைஆரம்பித்துவிடும்.
Author: சின்னக்குட்டி
•3:28 AM
இந்த பதிவும் எனது பழைய பதிவு தான் ...எனக்கு பிடித்த இந்த பதிவும் ஈழத்து முற்றத்துக்கு ம் பொருத்தமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இங்கு பிரசுரிக்கிறேன்
வால்ராஜா முனையிலிருந்து ஹரியானா மாநிலம் பெற்றெடுத்த சிங்கம் கபில்தேவ் பந்து வீசி கொண்டிருக்கிறார் அழகிய தமிழில் சென்னை வானொலியில் வர்ணணையாளர் மணியின் குரல் அழகிய தமிழில் கூவி கொண்டிருக்கார்...
உந்த கிரிக்கற் மச்சுக்கள் நடந்தால் காதோரம் வைத்து உந்த டிரான்சிஸ்ட் பெட்டிகளோடு மாரடிச்சு கொணடிருப்பன். விடிஞ்சால் பொழுதுவிட்டால் உதோடை கிடக்கிறாய் மோனை வேற வேலை வெட்டி இல்லையே அதாலை போன அப்பம்மா புறு புறுத்தண்டு போகுது... அப்படி ஒரு கிறேசி, வெறி.. அப்படி ஒரு. உந்த கிரிக்கட் விளையாட்டிலை அந்தக்காலம் எங்கள் தரவளி களுக்கு..
. உந்த சோம்பேறி கனவான் விளையாட்டை இந்திய உபகண்டத்துக்கு சொத்தாய் கொடுத்திட்டு போயிருக்கிறான் வெள்ளைகாரன். அவனே இப்ப உந்த கனவான் விளையாட்டிலை இன்ரறைஸை காணலை.
டிரான்சிஸ்டர் வந்த படியால் படுத்து கொண்டு காதோடை கேட்க கூடியதாயிருக்கு....... அந்த காலத்து றேடியோ ஒன்று இப்ப வீட்டு மூலையிலை கவனபாரற்று கிடக்கு அப்ப உதுக்கு இருந்த மவுசு.காலம் காலமே பரம்பரை சொத்து போல பாவிப்பினம்... அந்த பழம் றேடியாவின்ரை பற்றியை பார்த்தாலை இப்ப இருக்கிற டிராஸ்டிட்டாரிலும் பார்க்க அந்தா பெரிசு வீட்டுக்கு வெளியிலை வயர் இழுத்து அதுக்கு வேற அரைப்பனை உயரத்திலை கேடர் கம்பு தாட்டு உச்சத்திலை ஏரியல் பூட்டினால் தான் கேட்குமாம்.
ஊரெல்லாம் அமெரிக்கன் பாசனிலை வீடுகள் எழும்பியிருக்கிற நேரத்திலை சங்கிலியன் தோப்பு மாதிரி முன் தோற்றமுள்ள போர்ட்டிக்கோ சுண்ணாம்பு வீட்டுடோய் இருந்தாலும் எல்லாருக்கும் தெரியிற இந்த ஏரியல் இவை உண்மையாய் இவை வாழ்ந்து கெட்ட குடும்பம் தான் என்று பறை சாற்றி கொண்டிருக்கிறது. அந்த காலம் றேடியாக்கள் இருக்கிறாக்கள் இவை இவை தானென்று உந்த ஏரியலை வைச்சு சொல்லலாம். அந்த ரேடியாவிலை மீற்றர் பிடிக்கிற பாடென்ற அந்தா பாடு படுவினம்..
அப்பிடி மீற்றர் பிடிபட்டாலும் ஆக்கள் கிணற்றுக்குளை யிருந்து கதைக்கிற மாதிரி தான் கேட்கும்...திருச்சி, சென்னை வானொலி ஈசியாய் பிடிபட்டாலும் இந்த கொழும்பு றேடியோ ஸ்டேசன் பிடிக்கோணும் என்றால் படாதபாடு படணும். வானிலை சரியில்லாமால் பிடிபடாமால் இருந்து திருச்சி சென்னை பக்கம் திருப்பினால் வயலும் வாழ்வும், வயலின் இசையும் தனக்கு புரியாத சங்கீதத்தையும் போடுவினம் ஆர் கேட்கிறது.
பிரசித்தி பெற்ற கோயில் தேர் தீர்த்தத்துக்கெல்லாம் நேர் முக வர்ணனை செய்யிறவை தான் எங்கட தாத்ஸ் ஒன்று நேரிலை நடக்கிற மாதிரி ரசிச்சு கேட்கும். உப்பிடித்தான் அப்போலா11 விண்வெளிக்கலம் சந்திரனிலை இறங்கி ஆம்ஸ்ரோங் என்றவன் காலடி வைத்ததை வரிக்குவரி உந்த நேர் முகவர்ணனையிலை கேட்டதை ஏதோ குவாலிபிகேசன் மாதிரி புழுகும் உந்த தாத்ஸ்...
ஆயிரம் அறிவிப்பாளர் இருக்கட்டுமன்.வீட்டுக்கு வீடு வானொலி பெட்டிகருகில் ஆவலுடன் காத்திருக்கும் என்று விடிய வலம் வரும் பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சிக்கு வரும் மதுர குரலோன் கேஎஸ் ராஜாவை எல்லோருக்கும் பிடித்த மாதிரி எனக்கும் பிடிக்கும். அந்த காலத்தில் 83 கலவரத்தின் பின்னர் இங்கு நடந்த கொடுமைகளெல்லாம் சொல்ல போகிறோன் என்ற வரிகளடங்கிய நாகூர் ஹனீபாவின் பாடலை வானொலியிலை அடிக்கடி போட்டு தார்மீக கோபத்தை வெளிபடுத்தியவர்.
இதோ எனது டிரான்சிஸ்ரரில் ஓரே சன வெள்ளத்தின் கோரஸ் சத்தம் அதையும் மீறி அறிவிப்பாளர் மணி அற்புதம் அற்புதம் உயரமாக எல்லைகோட்டை தாண்டி சென்று கொண்டிருக்க்கிறது நிச்சயமாக ஆறே தான்..... கபில்தேவ் விளாசிக்கொண்டிருக்கிறராம்.... இப்ப இண்டியன் ரீம் பட் பண்ணுது போலை... எனக்கும் அந்த மாதிரி சந்தோசம் தான்.... அந்த காலத்திலை நாங்கள் இலங்கை ரீமுக்கு சப்போட் பண்றலே இந்தியன் ரீமுக்கு தானே சப்போட் பண்றது....
|
Author: வந்தியத்தேவன்
•6:37 AM
பிரபா : என்ன வந்தி கனகாலமா முத்தத்துப் பக்கம் காணவில்லை?
வந்தி : ஒண்டுமில்லையண்ணை கொஞ்சம் சோலி கூட.
பிரபா: உங்கடை சோலியள் எனக்குத் தெரியும் தானே ஹிஹி
வந்தி : ஏனப்பா சபைசந்தியில் என்னுடைய மானத்தை வாங்கிறியள்
பிரபா : உதைவிடுங்கோ ஊரிலை என்ன புதினம்?
வந்தி : வாற ஞாயிற்றுக்கிழமை எங்கடை டாக்குத்தர் ஜீவராஜுக்கு கலியாணம் மலையிலைதான் கலியாணமாம் நேரம் கிடைத்தால் ஒரு எட்டுப் போயிட்டு வரலாம்.
பிரபா : யார் ஜீவநதியின் சொந்தக்காரரோ? அவரும் முத்ததிலை இடைக்கிடை வந்து இளைப்பாருகின்றவர். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களைச் சொல்லிவிடுங்கோ.
வந்தி : ஓம் நான் சொல்லிவிடுகின்றேன். மற்றது அண்ணை எங்கட குழப்படிக்காரியின் கொம்பியூட்டர் பழுதாப்போச்சாம் இப்ப சில நாளாக ஆள் ஒன்லைனிலை இல்லை, ஆள் இருந்தால் நிறைய விடுப்பு கேட்கலாம்.
பிரபா : யாரையப்பா சொல்றியள் ஓ சினேகிதியைச் சொல்றியளோ அவர் ரொம்ப நல்லவராச்சே ஆனாலும் அடிக்கடி விடுப்பு பிடுங்குகின்றேன் என்று எல்லாத்தையும் சொல்லிவிடுவார்.
வந்தி : வேறை என்ன பூராயம் நாட்டிலை?
பிரபா : என்னத்தைச் சொல்வது எங்கட பக்கத்து வீட்டுப் பெடியன் முளைச்சு மூண்டு இலை விடேல்லை யாரோ ஒரு உடுவில் பெட்டைக்கு லைனாம்? எங்கட காலத்திலை உப்பிடியே வந்தி?
வந்தி : ஓமண்ணணை இப்பத்தைப் பொடியள் நல்லா முன்னேறிவிட்டினம், உதைவிடப்பா எனக்கு நேரம் போட்டுது நான் நாளைக்கு வாறன்.
பிரபா : சரி சரி கவனமாக போட்டுவாங்கோ
பொருள் விளக்கம்
சோலி : வேலை அல்லது அலுவல் என்பதை இப்படிச் சொல்வார்கள், இதே நேரம் எந்தவித சண்டை சச்சரவுக்கும் போகாதவரையும் சோலி சுரட்டு இல்லாத பிள்ளை என ஊரிலை சொல்வார்கள்.
உதாரணம் : உவன் வந்தி ஒரு சோலி சுரட்டுக்கும் போனதில்லை.
சபை சந்தி : பொது இடம்
புதினம் : செய்தியைத் தான் புதினம் எனக் கேட்பார்கள். என்ன புதினம் இண்டைக்கு. இதேபோலை புதினத்தை ஆச்சரியம் என்ற பொருள் படும் வகையிலும் பயன்படுத்துவார்கள்.
உதாரணம் :
உங்கைபார் உந்தப் புதினத்தை சிவத்தாரின்ரை பெட்டை மோட்டர்சைக்கிளை போகுது.
மலை : திருகோணமலையை அங்குள்ளவர்கள் பெரும்பாலும் மலை என்றே குறிப்பிடுவார்கள்.
விடுப்பு : வம்பு அளத்தல், கிசுகிசு போன்றவை விடுப்பு எனப் பொருள்படும். இப்படியான கதைகளைப் பேசுபவர்களை விடுப்புப் பிடுங்குபவர்கள் என்பார்கள். இப்போது ஸ்டைலாக விடுப்ஸ் என்பார்கள். மற்றவர்களைப் பற்றிக் கதைத்தல், தேவையற்ற விடயங்கள் பேசுதல் போன்றவன விடுப்பாகும்.
உவர் சரியான விடுப்ஸ் என்றால் ஆள் நல்ல வம்பளப்பார் எனப் பொருள்.
பூராயம் : இதுவும் விடுப்பு போன்ற அர்த்தம் தரும் சொல்தான்.
*****
ஈழத்து முற்றத்தில இப்ப கொஞ்ச நாளா, நிறைய கேட்டு மறந்திருந்த சொற்கள் நினைவுபடுத்தப்பட்டிருக்கு. அப்படியே எனக்கும் சில சொற்கள் நினைவுக்கு வந்தது.
1. ஆச்சி முந்தி கேப்பா “என்ன நீ கிரந்தம் பறையிற?” என்று. ஏதாவது விடயத்தை சரியாக சொல்லாமல், அல்லது புரிய வைக்காமல் இருந்தால், (அல்லது உளறுவதுபோல் தோன்றினால்) இந்தக் கேள்வி வரும். 'பறையிறாய்' என்பது 'கதைக்கிறாய் / பேசுகிறாய்' என்பது. பறையிறது என்பது மலையாள சொல் போல என நினைக்கிறேன்.
2. இதுவும் ஆச்சி சொல்லிக் கேள்விப்பட்டதுதான். ”எப்பன் சொதி குத்தட்டோ?”. சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, “கொஞ்சம் சொதி விடட்டுமா?” என்பதைத்தான் அப்படிக் கேட்பா. ‘விடட்டுமா?' என்பதை, ‘குத்தட்டுமா?' என்று கேட்பது யாழில் தென்மராட்சி வழக்கா என்று தெரியவில்லை. வேறு பகுதிகளிலும் இப்படி கேட்பார்களா என்பது தெரியவில்லை.
3. 'மல்லுக்கட்டிறது' என்னும் சொல் தற்போதும் பலர் பாவிக்கிறார்கள் என நினைக்கிறேன். ”எதுக்கு வீணா மல்லுக்கட்டுறாய்?” என்றால், ”ஏன் வீண் விவாதம் செய்கிறாய் அல்லது சண்டை பிடிக்கிறாய்?” என்பதைக் குறிக்கும்.
******
இந்தியத் தமிழர்களுடன் பேசும்போது அவர்கள் வித்தியாசமாக உணர்ந்த சில சொற்கள்.
1. குழப்படி = குறும்பு
2. கெதியா = விரைவாக
3. யாழ் நண்பர் ஒருவரின் வீட்டு விருந்தில் ஒரு தடவை நடந்த விடயம் நினைவுக்கு வருகிறது. சிங்கப்பூரிலிருந்து வந்திருந்த ஒரு தமிழ் குடும்பமும் வந்திருந்தார்கள். அப்போது உணவு பரிமாறியபோது, ”நல்ல வடிவாச் சாப்பிடுங்கோ” என்று பரிமாறியவர், சொன்னபோது, அந்த இந்தியப் பெண், ‘திருதிரு' வென விழித்தார். மீண்டும் மீண்டும் அதே வார்த்தைகள் வந்தபோது, பொறுக்க முடியாமல், 'எப்படி வடிவா சாப்பிடுறது?' என்று கேட்டார். 'வடிவு', என்பது 'அழகு', அப்படியென்றால், 'எப்படி அழகாக சாப்பிடுவது?' என்பதுதான் அவரது கேள்வி. ஆனால் அப்படிச் சொல்வது, ”நல்ல நிறைய, தாராளமாக சாப்பிடுங்கோ” என்பதைத்தான் என அவருக்கு விளக்கினேன்.
4. வெளிக்கிட்டாச்சோ? = தயாராகியாச்சா? (கிளம்பியாச்சா?)
எங்கேயாவது வெளியே செல்ல தயாராகுவதைக் குறிக்கும். சில சமயம் ஆடைகள் அணிந்து, அலங்காரம் செய்து கொள்வதை மட்டுமே குறிக்கும். உதாரணமாக, திருமணத்திற்கு ‘பொம்பிளையை வெளிக்கிடுத்தியாச்சோ?' என்பார்கள்.
5. ‘மோனை' என்று தம்மை விட வயது குறைந்தவர்களை விழிப்பார்கள். தாத்தா, அம்மம்மா, மாமா, மாமி எனப் பலரும், இப்பவும் ‘மோனை' என்று அழைப்பார்கள். பெயர் சொல்லி அழைப்பதை விட, ‘மோனை' என்ற அந்த அழைப்பில் ஏதோ ஒரு நெருக்கம் இருப்பதான உணர்வு இருக்கும்.
6. நாம் பயன்படுத்தும் உறவு முறைகள் சிலவும் வித்தியாசமாக இருப்பதைக் கண்டிருக்கிறேன்.
குஞ்சையா (சித்தப்பா), குஞ்சம்மா (சித்தி). பழைய காலத்தில், அம்மாவை 'ஆச்சி' என்றும், அப்பாவை 'ஐயா' என்றும் அழைத்திருக்கிறார்கள். ஆனால் பின்னர், பாட்டியைத்தான் ஆச்சி என அழைக்கும் வழக்கம் வந்தது.
ஏன் என்னை ஒரு மாதிரி பார்க்கிறீங்க?
கனக்க அலட்டுறன் எண்டதாலயா நம்மள ஒரு சாங்கமா நம்மள பாக்கிறீங்க?
ஒரு சாங்கமா என்றால் ஒரு மாதிரியாக என்று அர்த்தம். (வித்தியாசமாக பார்த்தல் என்றால் அது வேற.... இது வேற)
ஒரு சாங்கமா நாங்க பலதையும் பார்க்கலாம் (அப்படி ஒரு சாங்கமா நீங்க யாரையும் பார்த்து அடி வாங்கினா நான் பொறுப்பு இல்லை)
ஒவ்வொருத்தனும் ஒரு சில விடயங்கள் மட்டும் ஒரு சாங்கமா பார்ப்பான்
லொள்ளு உதாரணங்கள்:
தண்ணியடித்துவிட்டு இன்னொரு தண்ணியடித்தவனை பார்த்தால் அதை மற்ற தண்ணியடித்தவன் என்னடா நம்மள இவன் ஒரு சாங்கமா பார்க்கிறானே என்று யோசிக்கலாம் (ஒரு சாங்கமா நாலுகுத்தும் விடலாம்...அது வேற சாங்கம்).
டேய்...அவள் ஒரு சாங்கமா பார்க்கிறாள் என்ற நட்பு சொன்னால் அவருக்கு அவளின் பார்வையில் ”குளிர” அல்லது ”நெருப்பு” தெரிந்திருக்கிறது என்று அர்த்தம். (அதிகமாக குளிராகத் தான் இருக்கும்)
அம்மாவிடம் ஏதும் காரியமாக வேண்டும் எனறாலும் ஒரு சாங்கமா அம்மாவை பார்த்தால் மனிசிக்கு புரியும்...(பாசம் பாசம்)
எனக்கு தலைக்குள்ள ஒரு சாங்கமா இருக்கு நான் போய் படுக்கப் போறன்..
பிறகு கதைபபம்..
அன்புடன்
சஞ்சயன்
|
தங்கையின் (மழை` ஷ்ரேயா(Shreya) )ப்ளாக் இல் ஒரு இடத்தில் சில நம்மூர் சொற்கள் இருந்தன அவற்றில் ஒனறு தான் தெறித்தல்.
நானும் பயங்கரமா தெறித்துத் திரிந்தவன் தான். டேய் இப்படி தெறித்ததுத் திரியாதடா எண்டு புண்ணியமூர்த்தி சேர் கூட சொல்லியிருக்கிறார். இப்ப கண்டா என்ன சொல்லியிருப்பாரோ தெரியா..
தெறித்தல் என்பது குளப்படி, சுற்றித்திரிதல், சுளட்டுதல், ரௌடித்தனம், அடாவடித்தனம், பெரியவர்களை கனம் பண்ணாமை போன்ற செயல்களின் கலவையே தவிர, வேறொன்றும் இல்லை. இதற்கென்று தனியான அடையாளங்கள் இல்லை.
ஒருவன் குளப்படி என்றால் அவன் தெறிக்கிறான்
மற்றவன் ஒரு தேவதைக்கு கொஞ்சம் அன்பு காட்டினால் இவனும் தெறிக்கிறான் (அன்பை சொடுத்தாலும் தப்பு...ஹய்யோ ஹய்யோ)
இன்னொருத்தன் ஊர்சுற்றித்திரிந்தால் இதையும் தெறிக்கிறான் என்கிறார்கள்.
தெறித்துத் திரிகிறார்கள் என்றால் ஊருக்கு உதவாதவர்களாக பெரிசுகளுக்கு(மட்டும்) தெரிகிறார்கள் என்று அர்த்தம். நட்பு வட்டத்தில் தெறிக்கிறான் என்ற சொல் பாவிக்கப்படுவது குறைவு. தெறித்தல் பல விதத்தில negativ ஆன உருவத்தையே கொடுக்கிறது
ஏன் இந்த தெறித்தல் என்ற பெயர் வந்திருக்கும்? யாரவது தெறிக்காம படிச்சு முட்டாளாயின அறிஞர்கள் இருந்தால் சொல்லுங்கப்பா..
கடைசியா ரெண்டு சந்தேகங்கள்
1. அது சரி, தெறிக்காதவன் என்று யாரும் இருக்கிறார்களா?
2. பெண்களிலும் தெறிப்பவர்கள் உண்டா? (இதில மட்டும் சம உரிமை கேட்க மாட்டார்கள்)
அன்புடன்
சஞசயன்
|
Author: கரவைக்குரல்
•10:10 AM
ஈழத்தின் பல்வேறு இடங்களிலும் உள்ள பல்வகையான சொற்களை ஈழத்தின் முற்றம் வாயிலாக கொண்டுவரும் பதிவர்களோடு நானும் கைகொடுக்கலாம் என்னுடைய எண்ணம்,அப்படியான சில சொற்கள் காலப்போக்கில் இல்லாது போய்விடுமோ என்ற அச்சம் ஒருபுறமிருக்க அதை என்றும் நிலைத்துவிட வேண்டும் என்ற பெருமுயற்சியில் ஈழத்துமுற்றம் பங்களித்துக்கொண்டு இருக்கிறது.சில சொற்கள் சொல்லும்போது அவை ஈழத்து மொழி நடையில் ஒரு அழகைத்தரும் சொற்களாகக்கூட இருக்கின்றன,
ஆனால் ஈழத்து வழக்கில் எத்தனையோ பல சொற்கள் கொஞ்சம் வழக்கில் குறைந்துகொண்டு போவதை அவதானிக்க முடிகிறது,கவலைக்குரிய விடயமும் கூட
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.............
இவையெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தால் சொல்ல வந்த விடயத்தை நான் அயத்துப்போடுவன் போல கிடக்கு.
பொதுவாக அயத்துப்போனன் எண்டு இப்போதும் சில வயது வந்தவர்களால் தான் சொல்லப்படுவதை இன்றைய காலங்களில் அவதானிக்கமுடியும்,
“என்னணை அம்மா நேற்று உங்களை ரெலிபோன் (தொலைபேசி) கதைக்க வரச்சொன்னனான் எல்லோ ஏனெணை வர இல்லை?" எண்டு அடிக்கடி தன் தாயின் மீது அக்கறையாக வெளி நாட்டிலை இருந்து கதைக்கும் மகன் கேட்க
”அட ஒம் தம்பி் நான் உன்ணாணை தீர அயத்துப்போனனெடா,என்னடா இங்கை வீட்டுவேலையும் முத்தம் வாசல் கூட்டி ஆட்டுக்கு குழையும் வெட்டிபோட்டு அந்த இந்த வேலையெல்லாம் பாத்துக்கொண்டிருந்ததாலை தீர அயத்துப்போனனெடா தம்பி” எண்டு அந்த வயது வந்த அம்மா சொல்கிறார்,
இந்த உரையாடல் மூலம் இப்போது அந்த “தீர அயத்துப்போதல்” என்பதன் அர்த்தம்
புரியாதவர்களுக்கு புரிந்திருக்கும்.”தீர” எனபது ”முழுவதும்” என்பதாகவும் ”அயத்துப்போதல்” என்பது ”மறந்துவிடுதல்” என்று பொருள் கொடுக்க முடியும்,இதை பொதுவாக இந்தக்காலங்களில் பேச்சுவழக்கில் ”முழுக்க மறந்துபோச்சு” என்று சொல்லுவினம்.
பொதுவாக இந்த காலத்து இளம்பாரயம் மட்டுமல்ல அதைவிட கொஞ்சம் வயது கூடிய மட்டங்கள் கூட ”அயத்துப்போனன்” என்ற சொல்லை பாவிப்பதே இல்லை என்றுதான் சொல்லலாம்.அப்படியிருக்கும்போது அது எப்படி அடுத்த பராயத்துக்கு எடுத்துச்செல்லப்படும் என்பது கேள்விதான்,காலப்போக்கில் இந்த சொல்லை அயத்துப்போவார்களோ என்ற ஏக்கமும் இருக்கு,
இங்கு முத்தம்- முற்றம், உன்ணாணை-பொதுவாக சத்தியம் செய்யும் முறைகளில் இதுவும் ஒன்று,