Author: வந்தியத்தேவன்
•10:42 PM
எமது நாட்டிலுள்ள பல ஆலயங்கள் ஆகமவிதிப்படி பூசை தொடங்கியதற்க்கு முன்னர் வேள்வி என்ற பலியிடும் வணக்கமுறையை கடைபிடித்தே வந்தன. காலமாற்றங்களால் பலியிடுதல் நிறுத்தப்பட்டாலும் இன்றும் ஆலயங்களுக்கு நேர்த்திக்காக ஆடு, கோழி வழங்குதல் நிறுத்தப்படவில்லை.



சில இடங்களில் வேள்வி பொங்கல், திருக்குளிர்த்தி, மடை என்ற பெயர்களில் பொங்கல் பொங்கி வழிபடும் முறையாக மாறியது.



அந்த நாட்களில் திருவிழாக்களை விட வேள்வியே பிரதானமாகவும் பல இடத்துமக்கள் வந்து செல்லும் விழாக்களாகவும் மாறியது. பெரும்பாலும் அம்மன் ஆலயங்களிலும் வைரவர் ஆலயங்களிலும் இந்த வேள்வி நடைபெற்றன. இன்றைக்கும் வடமராட்சி தும்பளை நெல்லண்டையில் அமைந்துள்ள பத்ரகாளி அம்மன் ஆலயத்தில் வேள்வி நடைபெறுகின்றது. முன்னைய காலம்போல் ஆடு, கோழிகளைப் பழியிடாமல் அவற்றை கோயிலுக்கு நேர்த்தி என்ற பெயரில் அன்பளிப்புச் செய்கின்றார்கள் கோயில் நிர்வாகம் பின்னர் அந்த ஆடு, கோழிகளை ஏலத்தில் விட்டு வருமானம் ஈட்டுகின்றது.

வேள்வியை நிறுத்திய பல கோயில்களில் அந்த நாளில் பொங்கல் வைத்து இறைவனைக் குளிர்விக்கின்றார்கள். எனக்கு தெரிந்து வடமராட்சியில் நெல்லண்டை அம்மன், அத்துளு அம்மன், அல்வாய் முத்துமாரி அம்மன் போன்ற கோயில்களிலும் தென்மராட்சி மட்டுவில் ப‌ண்டித்தலைச்சி கண்ணகை அம்மன், திருகோணமலை சல்லி அம்மன், உடப்பு திரௌபதி அம்மன் போன்றன பிரபல திருக்குளிர்த்தி நடக்கும் கோயில்களாகும்.



கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயத்திலும் முன்னர் பலியிடுதல் நடந்ததாக அறியமுடிந்தது.

தற்போது இந்த நிகழ்வில் பொதுமக்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை பொங்கலிட்டு மோதகம், வடை, போன்ற பண்டங்களுடன் இறைவனுக்கு படைத்து வழிபாடாற்றுகின்றார்கள்.



அன்றைய நாட்களில் வேள்விகளில் இரவில் கூத்து, சின்னமேளம் போன்றவை விடியவிடிய நடக்கும் நிகழ்ச்சிகளாகும்.



இலங்கையில் பிரபலமான ஒரு கலைவடிவம் கூத்து இதனைப் பற்றி நன்கு விபரம் தெரிந்தவர்கள் தனிப்பதிவாக இடவும். வசந்தனும் அகிலனும் எழுதிய பதிவுகள் இணையத்தில் இருக்கின்றது.

கூத்துப் பார்க்கப் போன கூத்து


கூத்தழிவு

பலியிடுதல் பற்றி கானாப்பிரபாவும் ஒரு பதிவு இட்டிருக்கின்றார்.

ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களை....

இந்த வருடம் நெல்லண்டை பத்ரகாளி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற வேள்வியில் எடுத்த படங்கள் இணைத்திருக்கின்றேன். படங்களைத் தந்துதவிய‌ மூஞ்சிப்புத்தக(Facebook) நண்பனுக்கும் நன்றிகள்.
Author: soorya
•12:30 AM
அவனது பெயர் ராக்கையா கவுண்டர்.
அது நாளடைவில் சுருங்கி...றாக்கன், என்றானது.
அவன் மலையகத்தைச் சேர்ந்தவன்.
எங்கள் வீட்டிலிருந்து படித்துக் கொண்டிருந்தான்.
அவன் வந்த புதிதில் அவனுக்கு எங்கள் சுற்றாடலைக் காண்பிக்கும் பொறுப்பு என் அப்பாவால் எனக்குப் பணிக்கப்பட்டது.

எனக்கும் றாக்கனுக்கும் ஒரே வயசு.
...........................
இனித்தான் பம்பல் வரப்போகுது.
1. அவருக்கு சையிக்கள் ஓடத் தெரியாது.
2. அவருக்குக் கிணறு தெரியாது.
3. தோட்டம், வயல் இது அவருக்குச் சுத்த சூனியம்.
4. அட, தியேட்டரில் ஒரு படங்கூடப் பார்க்கவில்லை.(ஆனால் எம்.ஜி.ஆர் தெரியும் என்று சொன்னார்)
5. கடல்.
6. சாரைப்பாம்பு.
இப்போதைக்கு மேற்குறிப்பிட்ட தலைப்புகளோடை உங்களைச் சந்திக்க ஆசை.
இதை ஒரு தொடர் பதிவுபோலை போடுற உத்தேசம்.
(யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கக்கூடாது என்பதில்,
நான் எடுக்கும் உறுதியை..., வாசகர்களும் எடுப்பீர்களாக.
மேலும், இது பம்பல் கருதியே எழுதுகிறேன்.
கலை கலைக்காக என்பதுபோல, பம்பல் பம்பலுக்காகவே.)
நீங்களெல்லாம் குதியன் குத்தலாம்..நான் குத்தக்கூடாதோ???
உங்கள் ஆர்வம் கண்டு தொடர்வேன்.
நன்றி.
Author: soorya
•11:45 PM
அன்பு நண்பர்களுக்கு,
யாழ்ப்பாண அகராதி 1,2.
அருமையான பொத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன.
இப்போதான் நான் இந்நூல்களைப் பார்வையிடுகிறேன்.
1892 ஆம் ஆண்டு முதற்பதிப்பு.
2005 ல்
தமிழ்மண் பதிப்பகம்
2. சிங்காரவேலர் தெரு
தியாகராயர் நகர்
சென்னை..600 017
தொ.பே...24339030

ஆக்கியோர்.,,
சந்திரசேகரப் பண்டிதர்
சரவணமுத்து பிள்ளை.

(நாங்கள் பாவிக்கிற எல்லாச் சொல்லுகளும் அங்கே இருப்பது போலத் தெரிகிறது. படித்துப் பயன் பெறுக.)
Author: shangar
•9:50 PM

எணேய் அம்மா, இவன் தம்பி இன்னும் நித்திரையாலை எழும்பேலை.. பக்கத்து வீட்டில பொங்கும் பூம்புனல் கேட்குது… பள்ளிக்கூடத்துக்கு நேரம் போகுதணை…

நான் வாறன் இப்ப.. உவனுக்கு மேனை கொஞ்சம் தண்ணி, வாளியோடை கொண்டே ஊத்தினனெண்டா எல்லா நித்திரையும் இப்ப போகும்.. சரி மேனைகொப்பர் எங்கே போட்டார்?

அப்பு ஆலங்குச்சி எடுக்கவெண்டு சந்திக்குப் போனவர்.. இன்னும் காணேலை…

இண்டைக்கு பல்லுவிளக்கினமாதிரித்தான். உந்த மனிசனுக்க கதை கண்ட இடம் கயிலாயம் தான்… அங்கை ஆரும் ஓசியிலை பேப்பர் பாக்க வந்திருப்பினம், பின்னை சமா வைக்கினமாக்கும; என்று புறுபுறுத்தாள்..

தம்பி அப்பத்தான் நித்திரையால எழும்பி வாறான்.. எட தம்பி கொப்பர் ஆலங்குச்சி எடுக்க போனவர். சீமான் வரக் காணேலை. ஒருக்கா உந்த சின்னக் காலாலை ஓடிப்போய் குச்சியை கொப்பரிட்டை வாங்கி பல்லை மினிக்கிக் கொண்டு தோட்டத்திலை மிஸின் றைக்குது. அதிலை குளிச்சிட்டுவா பவுண்.

வந்த மணியிடம், கொப்பருக்கு கொஞ்சம் பழஞ்சோறு கிடக்கு… உனக்கு கொஞ்சம் ஒடியல் புட்டு அவிச்சனான் .. மாங்காயும், நேற்று அவிச்சு வைச்ச நெத்தலி மீனும் போட்டனான். கெதிபண்ணி சாப்பிட்டிட்டு பள்ளிக்கூடத்துக்கு ஓடு மேனை. உன்ரை கூட்டாளி நீ குளிக்கப் போனாப்போலை வந்தவன். மினைக்கெட்டால் வாத்தியிட்டை இண்டைக்கு பூசை தான் எண்டிட்டு போட்டான்.

அம்மா நாலுறூள் கொப்பி வேண்டி வரச் சொல்லி ஆங்கிலப்பாட வாத்தி சொன்னவர். காசு தாவணெணை. அடுப்படி மட்டை வரிக்கடிலிலை ஒரு தகரப்பேணி கிடக்கு.. அதுக்கை சின்ன மடிலேங்சிக்கை சீட்டுக்காசு கிடக்கு.. அதிலை 2ருபாயை எடன் முருங்கையில கொஞ்ச காய் ஆயலாம் . தேசிக்காயும் கிடக்கு… சந்தையிலை குடுத்திட்டு எடுத்த காசை வைப்பம்.

பள்ளிக்கூடத்தில்

டேய் மணி நேற்று தந்த வீட்டுப்பாடம் செய்து போட்டியே?

இல்லயடா.. நேற்று ரா தோட்டவெளியில அரிச்சந்திரன் கூத்து ஆடினவங்கள் அதுதான் பார்க்கப் போனன். அயத்துப்போனனடா.

சரியடா நான் செய்தனான். கெதியா பார்த்து எழுது.

வாத்தியார் வாரார். வணக்கம் ஐயா. எல்லாரும் இருங்கோ. ஏன் வகுப்புக் கூட்டேலை. கூட்டு முறையாள் வரேலை ஐயா. நல்ல சாட்டு.. சரி எல்லாரும் முழங்காலிலை வெளியிலை நில்லுங்கோ. இண்டைக்கு இந்தப்பாடம் நடத்தேலாது.

வெளில வந்த அதிபர், ஏன் வெளியிலை நிக்கிறியள் என்று கேட்க கணக்கு வாத்தியார் நிப்பாட்டிப் போட்டார் ஐயா.. வகுப்புக் கூட்டேல எண்டு..

சரி.. சரி.. வகுப்பைக் கூட்டிப்போட்டு இருங்கோ. இனிமேல் உப்பிடிச் செய்யக்கூடாது.

மூன்றரை மணியளவில்… பள்ளிக்கூட மணி அடிக்க தேவாரம் பாடி முடிச்சு பொடியள் வெளியே வருகினம். மணி இண்டைக்கு தோட்ட வேலிக்கு கதியால் போடவேணும். வீட்டை வாறியே?. போடா நான் எங்கடை தோட்டத்துக்கு வெருளி கட்டவேணும். கிளியள் எல்லாம் தோட்டத்திலை காய்களை எல்லாம் சிதிலப்படுத்துதுகள்.

வீட்டை வந்தான் மணி..

தம்பி டேய்.. இதிலை புசல்மா வைச்சனான் கண்டனியே? என்ற அக்காவிடம் எனக்குத் தெரியா.. நான் என்ன பெட்டையே? அவவின்ரை கேள்வியெண்டால்…

சரி சரி.. சாப்பாட்டை போட்டுத் தா கெதியா.. விளையாடப் போக வேணும்…

நீயே போட்டுச் சாப்பிடு… அம்மா வரட்டும். அவாட்டை ரண்டு வக்கணை வேண்டித் தாரன். அப்ப சரிவரும் உன்ர வாய்க்கு,.

கண்ணன் வாறான். டேய் மணி.. நாளைக்க திருவிழாவிலை பொம்மலாட்டம் வருகுதாம். நான் போகப்போறன்.

ஏன்டா சின்ன மேளம் இல்லையே?

சின்ன மேளம் வர 3மணியாய் போம். வாணவெடியும் அப்பத்தானே போடுவங்கள். 3மணிக்குப் பிறகு சின்னண்ணணோடையும், பெடியளோடையும் போவம்.

அப்பத்தான் அங்க வந்த அம்மா.. கண்ணனைக் கண்டிட்டு, மருமேன் ஒருக்கா மறக்காமல் கொப்பரட்டைச் சொல்லு வீட்டை வரட்டாம் எண்டு. கனக்க கதைகிடக்கு.

சரி மாமி… சொல்லி விடுறன்.. நாங்கள் திருவிழாக்கு போட்டு வாறம்…

பொருள் விளக்கம்:

எணேய் - வயது கூடியவர்களை மரியாதையாக (பெரும்பாலும் ஒருவித சலிப்புடன்) அழைப்பது

மேனை - வயதானவர்கள் சிறியவர்களை , பிள்ளைகளை அழைப்பது

கொப்பர் -முன்னால் நிற்பவரின் தகப்பனை அழைப்பது

சமா - நிறைய நபர்கள் சேர்ந்து கதைப்பது

புறுபுறுத்தல் - வாய்க்குள் சத்தம் வராமல் தானே ஏசுவது.

சீமான் - மரியாதைக்கும், நக்கலுக்குத் அதை சொல்வார்கள். செல்வந்தர் என்பது பொருள்.

மினைக்கெட்டால் - நேரத்தை விரயம் செய்தால்

பூசை - அடிப்பது

மடிலேஞ்சி - பணம் வைக்கும் சிறிய கை பை(Purse)

ரா -இரவு

அயத்துப்போனனடா - மறந்துபோதல்

கெதியா - விரைவாக

பொடியள் -பிள்ளைகள்.

கதியால் - மரத்தில் இருந்து வெட்டிய கிளைகள்

சிதிலப்படுத்துதுகள். – பழுதுபடுத்துவது.

புசல்மா - முகத்திற்கு போடும் பவுடர். குட்டிகுரோப் அப்போது பிரபலமானது.

சின்ன மேளம் - கோவிலில் குழுவாக நடனமாடும் பெண்கள். சினிமா பாட்டுக்கு ஆடுவார்கள்.

கனக்க - நிறைய

Author: சினேகிதி
•1:45 PM


தோலங்கெட்டது, வெக்கங்கெட்டது, மானம் கெட்டது,ரோசம் இல்லாதது, சூடு சுரணையில்லாதது இதெல்லாம் ஒரே அர்தத்திலதான் வருமென்டு நினைக்கிறன்.

இந்தச்சொல்லைக் கேள்விப்பட்டிருக்கிறீங்கிளோ? இதுக்கு நேரடி அர்த்தம் என்னென்டு எனக்குத் தெரியாது ...தோலம் என்டால் என்ன? ஆனால் எங்கட ஊரில பரவலாப் பாவிக்கிற ஒரு சொல்லிது. இப்ப சகோதரங்கள் 2 பேர் சண்டை கட்டிப்புரண்டு சண்டை பிடிக்க அம்மாவோ அப்பாவோ 2பேருக்கும் நல்லா விளாசிப்போட்டு ஒராளோடை ஒராள் கதைக்கப்படாதெண்டு சொல்லி விட அடுத்த நிமிசமே சண்டை பிடிச்சதை மறந்திட்டுசேர்ந்து விளையாடினால்அங்கால அம்மாவோ அம்மம்மாவோ புறுபுறுப்பினம் தோலம் கெட்டதுகள் இப்பத்தான் 2ம் மல்லுக்கு நிண்டுதுகள் இப்ப பாருங்கோ ஒன்டும் நடக்காதது போல விளையாடுறதை.

இல்லாட்டப் பக்கத்து வீட்டுப்பிள்ளைட்ட நுள்ளு வேண்டிப்போட்டு வீட்ட வந்து அழுற பிள்ளைக்கு அறிவுரை சொல்லிப்போட்டு அம்மா நீ இனி அங்க விளையாடப்போவேண்டாம் என்டு சொல்லுவா. பிள்ளை அடுத்தநாளே போய் திரும்ப நுள்ளு வேண்டிக்கொண்டு வரும் அப்ப சொல்லுவா அம்மா தோலங்கெட்டது நேற்றெல்லே சொன்னான் போகதயெண்டு.

இல்லாட்டி வளர்ந்தாக்கள் ஒரு காலத்தில ஊருக்கே தெரியுற மாதிரிச் சண்டை பிடிச்சுப் போட்டுக் கொஞ்சகாலத்தில திரும்பக் கதைக்கத் தொடங்கினாலும் தோலங்கெட்டதுகள் உதுகளின்ர சண்டைக்க நாங்கள் விலக்குப்பிடிக்கப் போய் காயப்பட்டதுதான் மிச்சம்...இப்ப பாருங்கோ அவை இரண்டுபேற்ற குடும்பத்தையும்...ஒரே வாரப்பாடு இப்ப.

இல்லாட்டி இரண்டு பேர் சண்டைபிடிச்சு என்ர வீட்டு முத்தம் நீ மிரிக்கக்கூடாதெண்டு சவால் விட்டுப்போட்டு பிறகு எதுக்காகவோ வீட்டுப்படியேறி வந்தால் தோலங்கெட்ட ஜென்மம் எந்த முகத்தை வைச்சுக்கொண்டு எங்கட வீட்ட வருது என்று சொல்லுவினம்.

இல்லாட்டி வேலை செய்து முடிக்கும் வரைக்கும் ப்ளாக்ல எழுதிறேல்ல என்டுபோட்டு திரும்பவும் வந்து குதியன் குத்துறாக்களையும் சொல்லலாம்....
Author: வர்மா
•2:04 AM
எனது அம்மம்மா அடிக்கடி சொல்லும் வசனம் "கறி புளி முப்பத்திரண்டும் முடிஞ்சுபோச்சு". அந்த முப்பத்துரண்டுமென்னவென்று எனக்குத்தெரியாது. அம்மம்மாவை ஊரில் உள்ள உறவினர்கள் எல்லோரும் அப்புஅம்மா என்றுதான் அழைப்பார்கள்.நாங்களும் அவரை அப்புஅம்மா என்றுதான் கூப்பிடுவோம்..அயலவர்கள் மருந்தாச்சி என்பார்கள். அம்மாவின் தகப்பன் வைத்தியர். இதுபரம்பரைத்தொழில்.

அப்புஅம்மாசொல்லும் முப்பத்திரண்டும் முடிஞ்சுபோச்சு என்பதை அம்மாவும் அடிக்கடி சொல்வார். முப்பத்திரண்டும் என்னவென்று அம்மாவைக்கேட்டேன்.அம்மா சரியானபதில் சொல்லவில்லை.அப்புஅம்மாவிடம் கேட்டேன். அப்புஅம்மாசொன்னபதிலை நம்பமுடியவில்லை இப்படியும் இருக்குமா என்றசந்தேகம் மனதைக்குடைந்தது.

அம்மாவின் தகப்பனை உறவினர்கள் அப்பு என்பார்கள். நாங்களளும் அப்பு என்றே கூப்பிடுவோம். அயலவர்கள் மருந்தப்பு என்பார்கள். அவருடையபெயர் சிலம்பு என்பது பலருக்குத்தெரியாது.

ஜனனம் மரணம் இரண்டையும் நாடிபிடித்து சொல்லிவிடுவார்.நாடியைப்பிடித்து நோயைசொல்லிவிடுவார்.நோயாளியின் கையைப்பிடித்து அவர் இரண்டு நாள் தவணை சொன்னால் கொழும்பில் உள்ள உறவினர்களூக்கு தந்தி அடித்துவிடுவார்கள். சிலநோயளிகளைப்பார்த்து அவர் எதுவும் பேசாமல் போவார் அப்போது உறவினர்கள்மருந்தப்பு ஒண்டும் பற‌யாமல் போறியள் எனபார்கள்.அவர் ஒண்டும் பேசாதுபோனால் காரியத்தைப் பார்க்கவேண்டியதுதான்.

அப்புவுடன் சோர்ந்து இருந்ததனால் அப்புஅம்மாவும் அங்கீகரிக்கப்படாத வைத்தியரானார்.
முப்பத்திரண்டும் என்றால் குசினியில் உள்ள மஞ்சள்,மிளகு.வெந்தயம்,சீரகம் உள்ளி,வெங்காயம்,பெருங்காயம் போன்றவற்றுடன் நோய்தீர்க்கும் சில மரக்கறிகள்என அப்புஅம்மா கூறியதை சிறு வயதில் நான் நம்பவில்லை.

சுமார் 10 வருடங்களுக்குமுன்னர் கிச்சன் கிளினிக் எனும் கட்டுரை கல்கி சஞ்சிகையில் பிரசுரமானது. இலகுவாககிடைக்கக்கூடியஇயற்கைமூலிகள் 64 உள்ளன. அவற்றில் 32 எமது வீட்டுசமையறையில் உள்ளனஎன கல்கியில் படித்தபின்புதான் அப்புஅம்மாவைப்பற்றிபூரணமாக அறியமுடிந்தது.

தங்கச்சியும் மனிசியும் முப்பத்திரண்டும் முடிஞ்சு போச்சு எண்டு சொல்லத்தொடங்கிட்டினம்.

நாடி...................மணிக்கட்டில் உள்ள இரத்தம் ஓடும் நரம்பு
தவணை...............நோயாளி உயிருடனிருக்கும் காலம்.
தந்தி அடிப்பது..........உறவினர் சாகப்போகிறா என்ற அறிவிப்பு
பறயாமல்..............எதுவும் சொல்லாது
காரியம்................இறுதிக்கிரிகைக்கான எற்பாடு
குசினி/அடுப்படி ..................சமயலறை
Author: வந்தியத்தேவன்
•10:59 AM
கொழும்புத் தமிழர்கள் என் ஆரம்பகாலத்தில் கொழும்பில் வசித்துவந்த செட்டிமார்களையே குறிக்கும். பெரும்பாலானவர்கள் கத்தோலிக்கர்களாக இருக்கிறார்கள். கொழும்பு என்பது ஸ்ரீலங்காவின் தலைநகரமாகும். அதனால் அங்கே பல்லின மக்கள் வசிக்கின்றார்கள். சிங்கள மக்களைப் பொறுத்தவரை கொழும்பு சிங்களவர்கள் என்ற பதம் மிகக் குறைவாகவே பாவிக்கப்படுகின்றது. கொழும்பு செவன்(7) சிங்களவர்கள் என்ற பதம் பரவலாக பாவிக்கப்படுகின்றது.

இந்த கொழும்பு 7 மக்கள் பெரும்பாலும் உயர்தட்டுமக்களாகவே காணப்படுகின்றார்கள். ஜேஆர் ஜெயவர்த்தனா, ரணில் விக்கிரமசிங்க போன்றவர்கள் சிறந்த உதாரணங்களாகும்.

கொழும்பில் வசிக்கும் பெரும்பாலான சிங்கள மக்கள் வேறு இடங்களில் இருந்து தங்கள் வேலை வியாபாரம் காரணமாக கொழும்பில் வசிப்பவர்களாகும். தமிழ் சிங்களப் புதுவருட காலத்தில் பெரும்பாலான சிங்கள மக்களின் வீடுகளில் யாரும் இருக்கவே மாட்டார்கள் அவர்கள் தங்கள் சொந்த ஊரில் புதுவருடத்தைக் கொண்டாடச் செல்வார்கள்.

கொழும்புத் தமிழர்களாக காலங்காலமாக அங்கேயே வசிக்கும் தமிழர்களுடன் வடகிழக்கு மாகாணங்கள் மற்றும் மலையகத்தில் இருந்து கொழும்பில் வேலை வியாபார நிமித்தம் சென்று நிரந்தரமாக குடியேறியவர்களைக் குறிப்பிடலாம். இதனைவிட யுத்த சூழல் காரணமாக அங்கே சென்று குடியேறியவர்களையும் குறிப்பிடலாம். இவர்களின் அடையாள அட்டைகளில் வசிக்கும் முகவரி கொழும்பாக இருந்தாலும் பிறந்தது யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, கண்டி, நுவரஎலியா என இருக்கும். இதனால் சில பாதிப்புகளும் ஏற்படுவதுண்டு.

இவர்களின் தமிழ் பல பிரதேசத் தமிழ்களை கொண்டு ஒரு கதம்பமாகவே இருக்கும். அத்துடன் பல சிங்களச் சொற்களையும் சரளமாகப் பாவிப்பார்கள். இவர்களின் உச்சரிப்புகூட கொஞ்சம் வித்தியாசமாகவே இருக்கும். பிரதேசங்களின் உச்சரிப்புகள் பற்றி தமிழறிவு அதிகம் கொண்ட ஒருவர் எழுதினால் பலருக்கும் உதவும்.

எனது வாழ்க்கையின் முதல் பகுதி காலம் யாழ்ப்பாணத்தில் கழிந்தது. அடுத்த பகுதி கொழும்பில் கழிந்துகொண்டிருக்கின்றது. ஆனாலும் யாழ்ப்பாண நினைவுகளும் சொற்களும் பெரும்பாலும் நினைவில் நிற்கின்றன. கொழும்புத் தமிழ் ஓரளவு விளங்கும். ஏதோ எனக்குத் தெரிந்தவை. ஏனைய நண்பர்கள் தமக்கு தெரிந்தவற்றை தெரியப்படுத்தவும்.

அந்தி ‍- பின்னேரம் அந்திக்கு வீட்டுக்கு வாறேன்

மறுவ ‍- பிறகு

கதேய் ‍- விடயம் என்ன கதேய்

கேந்தி - கோபம் (சிங்களச் சொல்)

படு (சிங்களச் சொல்) - பெண்களையே குறிக்கப் பயன்படுத்துகிறார்கள். இதன் தமிழ் அர்த்தம் பொருட்கள். இதனைப் பாவிப்பது நாகரீகம் இல்லையென்பார்கள்.

ஐஸ்சுட்டி -அதனாலே பஸ் லேட் ஐஸ்சுட்டி நான் ஸ்கூலுக்கு லேட்டாப் போயிட்டேன்

வேல‌ - நேரத்திற்க்கு. வேல‌க்கு வாங்க எந்த லையா லாவா என்பது எனக்கு சந்தேகம்

அய்த்தானே - அதுதானே

மாற - நல்ல அழகான என்ற அர்த்தங்கள் வரும். நாடோடிகள் மாற படம். (சிங்களச் சொல் என நினைக்கிறேன்)

நோண்டி - ‍ அவமானப்படுதல். மச்சான் நேற்று கீழே விழுந்து மாற நோண்டி. எந்த மொழிச் சொல் என்பது தெரியாது.

பெரும்பாலும் இவர்களின் உச்சரிப்பு வித்தியாசமாகவே இருக்கும். பெரும்பாலான தமிழ்ச் சொற்கள் உச்சரிப்பு வித்தியாசத்தால் மருவி வழக்கில் இருக்கின்றன. ஓரளவு முயற்சி செய்திருக்கிறேன். பிழை இருந்தால் திருத்தவும்.

முக்கிய குறிப்பு : தமிழ்மொழி பேசும் இஸ்லாமியச் சகோதரர்களை நான் இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளவில்லை. கொழும்பு இஸ்லாமியர்களின் தமிழ் பெரும்பாலும் கொழும்புத் தமிழர்களின் தமிழ்போலவே இருக்கும்.