"கோழி மேய்ச்சாலும் கோறணமெந்தில மேய்க்கோணும்"இது ஈழத்துப் பேச்சு வழக்கில் அதுவும் பழைய காலத்தவரிடையே அதிகம் புழக்கத்தில் இருந்த ஒரு முதுமொழி. கோறணமெந்து என்றால் என்ன என்று பலர் திக்கித் திணறக் கூடும். அதன் அர்த்தம் என்னவென்றால் கவர்ன்மெண்ட் என்ற ஆங்கிலப் பதத்தின் திரிந்த பேச்சு வழக்குச் சொல்லே "கோறணமெந்து" ஆயிற்று. இந்த முதுமொழியின் அர்த்தம் இனி உங்களுக்கு இலகுவாகவே புரியக் கூடும். அதாவது அரசாங்க உத்தியோகம் கிட்டுவதென்றால் அது பெரும் வாய்ப்பாகக் கருதப்பட்ட காலமது. எவ்வளவு சம்பளம், அல்லது அரசாங்க அலுவலகத்தில் என்ன உத்தியோகம் எல்லாம் பொருட்டாகக் கணிக்க மாட்டார்கள், அரசாங்க உத்தியோகம் என்றாலே போதும். அதற்குக் காரணம் நிம்மதியான, நிரந்தரப் பொருளாதார வாய்ப்பை அரசாங்க உத்தியோகம் ஒப்பீட்டளவில் மற்ற வேலைகளை விடக் கொடுக்கும் என்பதே ஆகும். முன்பெல்லாம் அரசாங்கப் பள்ளி ஆசிரியர்கள் என்றால் கேட்கவே வேண்டாம் வரிசை கட்டி திருமண வாய்ப்புக்கள் அவர்கள் கதவைத் தட்டுமாம்.
இன்றைய தலைமுறை ஈழத்தவரிடையே கோறணமெந்து என்பது எவ்வளவு தூரம் தெரிந்து வைத்திருக்கும் பேச்சு வழக்கு என்பது கேள்விக் குறி ஆயினும். இந்தக் கோறணமெந்து என்பதும் "கோழி மேய்ச்சாலும் கோறணமெந்தில மேய்க்கோணும்" என்ற முதுமொழியும் ஈழத்து மக்களின் முந்திய காலகட்டத்து பண்பாட்டுக் குறியாக இருந்த காரணத்தால் அதைப் பதிவு செய்கின்றேன். இந்த அரசாங்க உத்தியோகம் குறித்து தினகரன் (இலங்கை) நாளிதழில் ஜீவிதன் என்பவர் எழுதிய சுவையான பகிர்வை இங்கே தருகின்றேன்.
கண்ணை மூடு மட்டும் காசு!
‘கோழி மேய்ச்சாலும் கவர்மண்டில் மேய்க்க வேணும்!’ யாழ்ப்பாண மக்கள் மத்தியில் இப்படி ஒரு பேச்சு வழக்கு இருக்கிறது. ‘பிள்ளைக்குக் கல்யாணம் பண்றதெண்டாலும், கவர்மண்ட் மாப்பிள்ளையாகப் பார்க்க வேணும்’ என்பர். ஓர் அரசாங்க உத்தியோகத்தனுக்கு எந்தளவு ‘மவுசு’ இருக்கிறது என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ளலாம்.
அரசாங்க உத்தியோகத்துக்கு ஏன் இந்தளவு மதிப்பும் மரியாதையும் கொடுக்கிறார்கள்? எல்லாம் ஓய்வு காலத்தில் கிடைக்கும் ‘பென்ஷன்’ பணம்தான் காரணம் என்று இலகுவில் கூறிவிடுவீர்கள். ‘கண்ணை மூடு மட்டும் கவர்மண்ட் காசு வரும்தானே!’ என்று ஒவ்வொரு அரச உத்தியோகத்தரும் தைரியமாக வாழ முடியும் என்று நம்பிக்கை கொள்ளலாம்.
இதனால், அரச உத்தியோகத்தரை மணந்த மனைவிமாருக்குச் சற்று ‘ராங்கி’ அதிகம் என்கிறார்கள் ‘பென்ஷன் மாப்பிள்ளைகள்’. கணவன் இறந்தாலும் பரவாயில்லை! பாதுகாப்புக்குத்தான் அவரது ‘பென்ஷன்’ இருக்கிறதுதானே! என்று எண்ணும் பெண்கள் கணவனை உதாசீனப்படுத்தாமல் இருந்தாலும் அதிர்ஷ்டம் என்கிறார்கள் சிலர்.
மனைவிதான் அவ்வாறென்றால், இந்தப் பென்ஷனியர்மார் இருக்கிறார்களே, அவர்களுக்குப் பெரும் ‘கர்வம்’ என்று சலித்துக்கொள்ளும் மனைவிமார், பிள்ளைகளும் உள்ளார்களே! ‘நாங்கள் எதிலும் தங்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறது.
கண்ணை மூடுமட்டும் கவலை இல்லை’ என்று சொல்வதால், பிள்ளைகள் போட்டி போட்டிக்கொண்டு பராமரிக்க வந்தாலும், ‘நீ உன்ர வேலையைப் பார், நான் என்ர வேலையைப் பார்க்கிறன்’ என்பார்கள் அரச உத்தியோகத்தர்கள். இதில் விதிவிலக்கானவர்கள் இல்லாமல் இல்லை.
இலங்கையில் 1956 ஆம் ஆண்டுக்குப் பின்னர்தான் ஊழியர் சேமலாப நிதியம் அறிமுகமாகியது. அதற்கு முன்பு அரசாங்க உத்தியோகமும், பென்ஷனும்தான். தனியார் துறை நிர்வாக முகாமைத்துவம் வளர்ச்சியடைந்ததன் பின்னர், அரசாங்க உத்தியோகத்தர் மத்தியில் ஒருவித மந்தநிலை ஏற்பட்டதாக உணரப்படுகிறது என்பதை மறக்க முடியாது.
தனியார் துறையில் அதிகம் உழைத்து வருமானம் ஈட்டலாம் என்றாலும், அதில் ஓய்வு கால அனுகூலமாய் கிடைக்கும் ஊழியர் சேமலாப நிதியம் துரிதகதியில் கரைந்துவிடும்!
சிலர் அந்தப் பணத்தைத் துரிதமாகப் பெற்றுத் தம் பிள்ளைகளுக்குப் பகிர்ந்தளித்து விடுகிறார்கள். அதனால் ரொக்கமாய்க் கிடைக்கும் பெருந்தொகைப் பணம் விரைவில் இருந்த இடம் தெரியாமல் குறைந்து; மறைந்துபோகிறது. ஆகவே, ஓய்வூதியம் (பென்ஷன்) தான் மாதா மாதம் வாழ்க்கையை நடத்த பாதுகாப்பு அளிக்கிறது. அதனால்தான், அரசாங்கத் துறை உத்தியோகம் உயர்ந்தது என்ற எண்ணம் வேரூன்றிப் போயிருக்கிறது.
ஓய்வூதியத்தில் சிவில் பென்ஷன், மைனர் பென்ஷன், ரீச்சர்ஸ் பென்ஷன், பெண்கள், அநாதைகள் பென்ஷன், மலாயன் பென்ஷன் என வகைப்படுத்தலாம்.
வெளிநாடுகளில், குறிப்பாக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மலாயா, போனியோ போன்ற நாடுகளில் பணியாற்றியவர்களுக்கும் பென்ஷன் கிடைக்கிறது. இதனைப் பெறுவதில் மோசடிகள் இடம்பெற்ற வரலாற்றுச் சம்பவங்களும் உள்ளன.
சரி, மாதாந்தம் இந்தப் பென்ஷனைப் பெறுவதற்கு அலுவலகம் செல்வோர் என்ன மனநிலையில் இருப்பார்கள் என்பதைப் பற்றி நமக்கு ஊகிக்க முடியுமா? முடியும்! அன்றுதான் மிகக் கலகலப்பாக அவர்கள் காணப்படுவார்கள் என்று பொதுவாக சொல்ல முடியாத நிலை சற்று வேதனையானதுதான்!
வயது முதிர்ந்தவர்களுக்கு நன்றாக உடையணிவித்து; அலங்கரித்துக் கூட்டிச் செல்லும் பிள்ளைகள், பென்ஷனைக் கையில் வாங்கியதும், அவர்களை வங்கியிலேயே இருக்கவிட்டுவிட்டு ‘ஷொப்பிங்’ போகிறார்கள். பின்னர் அவர்களுக்குத் தேவையானவற்றைக் கொள்வனவு செய்து முடித்ததும் மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்கள்.
இப்படி அபூர்வமாய் நடக்கிறது என்றாலும், பென்ஷனின் தாற்பரியம் சிதைக்கப்படுவதாக, மனதைச் சற்று நெருடவே செய்யும்! கண்ணை மூடு மட்டும் ‘கவர்மண்ட்’ காசு யாருக்கு? உழைத்தவருக்கா, உதவா பிள்ளைகளுக்கா?!
7 comments:
//இன்றைய தலைமுறை ஈழத்தவரிடையே கோறணமெந்து என்பது எவ்வளவு தூரம் தெரிந்து வைத்திருக்கும் பேச்சு வழக்கு என்பது கேள்விக் குறி ஆயினும்.//
இன்றைய தலை முறைக்குத் தெரியாதோ என்று குறைப்படுறீங்க, அன்றைய தலை முறையான எனக்கே தெரியாதே :)
அரைக் காசுன்னாலும் அரமணை ( அரண்மனை) உத்தியோகமுன்னு இருந்ததுதான் அப்புறம் அரைக்காசுன்னாலும் அரசு வேலைன்னு ஆச்சு.
கா(ல்)க் காசுன்னாலும் கவருமெண்டு வேலை வேணுமாம்.
அப்ப மீதி முக்காத்துட்டு? லஞ்சமா வந்துருமுல்லே:(
வணக்கம் கலை
நீங்கள் இளையதலைமுறை என்று பெருமையடைவதை விட்டுட்டு ;)
வணக்கம் துளசிம்மா
நீங்க சொன்ன பழமொழியின் அச்சொட்டான வடிவமா நான் கொடுத்தது இருக்கே. ஒருவேளை ரீமிக்ஸ் பண்ணிட்டாங்களோ ;)
//வயது முதிர்ந்தவர்களுக்கு நன்றாக உடையணிவித்து; அலங்கரித்துக் கூட்டிச் செல்லும் பிள்ளைகள், பென்ஷனைக் கையில் வாங்கியதும், அவர்களை வங்கியிலேயே இருக்கவிட்டுவிட்டு ‘ஷொப்பிங்’ போகிறார்கள். பின்னர் அவர்களுக்குத் தேவையானவற்றைக் கொள்வனவு செய்து முடித்ததும் மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்கள்.//
:(
//இன்றைய தலைமுறை ஈழத்தவரிடையே கோறணமெந்து என்பது எவ்வளவு தூரம் தெரிந்து வைத்திருக்கும் பேச்சு வழக்கு என்பது கேள்விக் குறி ஆயினும்.//
நானும் இப்பத்தான் கேள்விப்படுறன்...
//வயது முதிர்ந்தவர்களுக்கு நன்றாக உடையணிவித்து; அலங்கரித்துக் கூட்டிச் செல்லும் பிள்ளைகள், பென்ஷனைக் கையில் வாங்கியதும், அவர்களை வங்கியிலேயே இருக்கவிட்டுவிட்டு ‘ஷொப்பிங்’ போகிறார்கள். பின்னர் அவர்களுக்குத் தேவையானவற்றைக் கொள்வனவு செய்து முடித்ததும் மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்கள்//
எங்கட இடங்களில இப்பிடி நடக்கிறதா நான் அறியேல்லை...
பிரபா...கோறணமெந்து வேலை செய்யிற மாப்பிள்ளைககாச் சிலபேர் காத்திருந்து கல்யாணமே தள்ளிப் போயிருக்காம்.சிலபேர் கல்யாணமே செய்துகொள்ளாமல் கூட இருந்திருக்கினமாம்.உங்கள் பதிவு பற்றி அம்மாவோடு கதைச்சனான்.
இந்தத் தகவல் கிடைச்சுது.
வருகைக்கு நன்றி தாருகாசினி
ஹேமா
பதிவின் புண்ணியத்தில் அம்மாவோடு கதைச்சாச்சா ;) பகிர்வுக்கு நன்றி