Author: Pragash
•8:42 AM
இந்த வசனத்தொடர் ஈழத்து பேச்சு வழக்கில் மாசி மாதங்களில் இடம்பெறும் ஒரு வசனம். வருடத்தின் புரட்டாசி மாசத்தில் ஆரம்பிக்கும் மழை, புதிய வருடம் தை மாசத்தில் ஓரளவிற்கு முடிவிற்கு வந்திடும். அதுக்கு பிறகு பங்குனி வெய்யில துவங்க முன்னம் மாசி மாதத்தின் இரவுகளில் பனி கொட்ட துவங்கி விடும். இரவில் படுக்கைக்கு போகேக்குள்ள தலையணையும், போர்வையும் தலைமாட்டில தான் இருக்கும். பிறகு நேரம் போக போக தலையணை ஒரு பக்கம், போர்வை ஒரு பக்கம், பாய் ஒரு பக்கம், நான் ஒரு பக்கம் கிடப்பன். பின்னிரவு தாண்டி நிலம் குளிரும்போது தான் தெரியும், நான் அறை முழுக்க பிரதட்டை அடிச்சுக்கொண்டு இருக்கிறன் எண்டது.

அதுக்கு பிறகுதான் தலையணை, போர்வை, பாய் எங்கெங்க கிடக்குதெண்டு இருட்டுக்குள்ள கையை காலை போட்டு துழாவி கண்டு பிடிச்சிடுவன். அதுக்குள்ளை அம்மாவிட்டை ஒரு குட்டும், தம்பியிட்டை ஒரு எத்தும் வாங்கியிருப்பன். மெல்ல மெல்ல விடியத்துவங்கும். விடியக்காலம்பிறை நாலரை அஞ்சு மணிக்கெல்லாம் எழும்பி படிக்கவேணுமெண்டு அம்மாவின்ரை ஓடர். மீற முடியாது. அந்த பனிக்குளிருக்குள்ளை எழும்ப மனம் வருமே?. அந்த குளிருக்குள்ளை போர்வையின்ரை ஒரு பக்கத்தை நல்ல இறுக்கமா இழுத்து காலுக்குள்ளை வைச்சுக்கொண்டு, இன்னொரு பக்கத்தை இழுத்து தலைமாட்டுக்குள்ளை செருகி, ஒரு கூடாரம் மாதிரி ஆக்கி, குறண்டிக்கொண்டு குறட்டை விடுகிறது ஒரு தனி சுகம் தான். ஆனாலும் அம்மா விடமாட்டா. டேய் எழும்படா எழும்பி படி எண்டு அதட்டிக்கொண்டே இருப்பா. எழும்பாட்டி சிலவேளை நாயே பேயே எண்டு திட்டெல்லாம் கூட விழும்.   

திட்டு விழ விழ தான் அந்த பனிக்குளிர் படுக்கை இன்னும் சுகமாய், இன்னும் கொஞ்சநேரம் படுத்திருக்க சொல்லும். அம்மாவின்ரை ஒவ்வொரு அர்ச்சனைக்கும் அங்கை புரண்டு இங்கை புரண்டு சோம்பல் முறிக்கையுக்குள்ளை, சரியா அஞ்சுமணிக்கு வயல்வெளி நடுவுல இருக்கிற ஐயனார் கோவில் மணி அடிக்கவும், வீட்டுச்சாவல் இன்னொருக்கா கூவவும் சரியாயிருக்கும். இனி இதுக்கு மேல படுக்க முடியாது, எழும்பித்தான் ஆகோணும். இல்லையெண்டால் வீட்டில குடிக்க வச்சிருக்கிற ஒரு குடம் தண்ணியால படுக்கையில வச்சே அம்மா குளிப்பாட்டி போடுவா. இருக்கிற குளிருக்கை இந்த வம்பு வேண்டாமே.  விடியக்காலமை இருட்டுக்குள்ளை கிணத்தடிக்கு போக முடியாததால, முதல் நாளிரவே ஒரு பெரிய வாளியில தண்ணி எடுத்து கொண்டு வந்து முன்வாசல் படிக்கு பக்கத்தில வச்சிடுவா. பனியோடை பனியாய் அதுவும் சில்லிட்டு போய் இருக்கும்.   

வெட வெடக்கிற குளிருக்குள்ளேயே எழும்பி, போட்டிருந்த முழுக்கைச்சுவெட்டரை, கைகள் இரண்டையும் முழங்கை வரைக்கும் இழுத்துப்போட்டு, வாசல் படியில இருந்த தண்ணியில வேகமா வாயை கொப்புளிச்சுக்கொண்டு, இரண்டு மூண்டு தரம் சளார், சளாரெண்டு முகத்தில தண்ணி அடிச்சு கழுவிப்போட்டு, துண்டால துடைச்சுக்கொண்டு உள்ளை போக அம்மா சுடச்சுட ஆட்டுப்பால் தேத்தண்ணி போட்டுத்தர, பனிக்குளிருக்கு சூடான தேத்தண்ணி இதமாய் தானிருக்கும். பிறகென்ன மண்ணெண்ணெய் விளக்கை கொளுத்தி வச்சிட்டு, படிக்க துவங்குவன். என்னதான் அந்த பணிக்குளிருக்குள்ளை எழும்ப பஞ்சிப்பட்டாலும், எழும்பினதுக்கு பிறகு கோயில் மணிச்சத்தத்தையும், விடியக்காலை குருவிகள், பறவைகளின்ரை கீச்சுக்குரல் சத்தங்கள், வீட்டுக்கூரையில இருந்து சேவல் செட்டையை பட படவெண்டு அடிச்சு கூவும் ஒலிகள, எங்கேயோ தூரத்து கோவிலில் கேக்கும் சுப்ரபாதத்தையும் கேட்டுக்கொண்டு அந்த விடிகாலை நேரத்தை அனுபவிக்கிறதில எனக்கு ஒருக்காலும் அலுக்காது.

ம்ம் இனி விடிஞ்சுட்டுது, ஆறரை ஆச்சுது போல. இனி குளிக்கவேணும். எட்டுமணிக்கு பள்ளிக்கூடத்துக்கு வெளிக்கிடவேணும்.   கையில அண்ணா பல்பொடியையும், துவாய், கைவாளியையும் எடுத்துக்கொண்டு மூலை வளவு கிணத்தடிக்கு போக ஆயத்தமாக, பின்னால அப்பாச்சி " டேய் தம்பி தலையில ஏதாவது துண்டை கட்டிக்கொண்டு போ அப்பு, வெளியில ஒரே பனிப்புகார் மூட்டமாய் இருக்கு. மாசிப்பனி மூசிப்பெய்யுது. குளிர் காதுக்குள்ளை போனால் தடிமன் பிடிச்சிடும்."  அப்பாச்சி சொன்ன படி துண்டை கட்டிக்கொண்டு கிணத்தடிக்கு போறன். சுருட்டு குடிக்கிறவையால மட்டும் தான் ஸ்ரைலா சுருள் விட முடியுமே?. எங்களாலயும் முடியும். எப்பிடி எண்டு கேக்கிறீங்களோ? மாசிப்பனியில நல்லா மூச்சை இழுத்து வாயால விட்டுப்பாருங்கோ. உங்கடை வாயில இருந்தும் புகை சுருள் சுருளாய் வெளிக்கிடும். பனிக்காலத்தில எனக்கு பிடிச்ச விளையாட்டுக்களில இதுவும் ஒண்டு. கிணத்தடியில நிண்டு பார்த்தால் முன்னாலை புகார் மூட்டத்தோடை அரிவிவெட்டுக்கு ஆயத்தமாய் மஞ்சள் நிற நெல்கதிர்மணி பாரம் தாங்காமல் தலைசாய்த்து வயல்வெளி பரந்து விரிகிறது. கிழக்கு திக்கில் அடிவானத்தில் சூரியன் சிவப்புக்கோளமாய், பெரிசாய் மெல்ல மெல்ல பனி புகாருக்குள்ளாலை எட்டிப்பார்க்கிறான். அண்ணா பல்பொடியை வச்சு பல் தேச்சுக்கொண்டே சூரிய உதயத்தையும் வடிவாய் பார்த்துக்கொண்டு எவ்வளவு நேரம் தான் நிற்கிறது. 

அண்ணா பல்பொடி, பல்லு தீட்டிநானோ இல்லையோ அரைவாசி வயித்துக்குள்ளை போயிட்டுது. அவ்வளவு இனிப்பு.  இனியும் லேட் பண்ண ஏலாது. அம்மா பூவரசங்கம்போடை வந்தாலும் வந்திடுவா. தண்ணியை அள்ளி தலையில ஊத்தவா, விடவா?. உடம்பெல்லாம் வெடவெடக்குது. டக்கெண்டு ஒரு வாளி தண்ணியை உடம்பிலை ஊத்தினால் எல்லாம் சரியாய் போய் விடும். பனிக்குளிரில கிணத்து தண்ணி சூடும். எப்பிடியோ குளிச்சு முடிச்சு வீட்டுக்கு வந்து, ஆறிப்போன தேத்தண்ணியை மடக்குமடக்கெண்டு குடிச்சிட்டு, பாணும் சம்பலும் சாப்பிட்டது போக மிச்சத்தை கட்டிக்கொண்டு, புத்தக பையையும் தூக்கி சைக்கிள் கரியரில வச்சு கொண்டு, இரண்டு பக்கமும் வயல் நடுவால போற ரோட்டில பள்ளிக்கூடத்துக்கு வேகமாக சைக்கிளை மிதிக்கிறன்.  காலமை நேர பனிக்காத்து இரண்டு காதுகளிலும் மெல்ல இரைகிறது. பனிப்புகார் இன்னும் கலையவில்லை. இண்டைக்கு பனி கடுமையாய் இருக்கு. வெய்யிலும் நல்ல காட்டு காட்டுமோ?. இண்டைக்கு நாடு விட்டு நாடு வந்தாலும், பனி விழுகின்ற நாடுகளில வாழ்ந்தாலும், சொந்த ஊரில வெடவெடக்கிற பனிக்குளிரில, வயல் வரம்புகளில் நடக்கையுக்குள்ள, புல்லில இருந்து சொட்டிக்கொண்டிருக்கிற பனித்தண்ணியில கால் படேக்கை கிடைக்குமே ஒரு சில்லிட்ட உணர்வு. அது சொந்த நாட்டை தவிர வேறெந்த நாட்டிலையும் கிடைக்காத சொர்க்கம்.
This entry was posted on 8:42 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

4 comments:

On June 9, 2010 at 4:22 PM , மணிமேகலா said...

பிரகாஷ், மிக அழகாக எழுதி இருக்கிறீர்கள்.

ஒரு கால கட்டத்தின் வாழ்க்கை முறையை அதன் அழகு குலையாமல் எடுத்து வந்திருக்கிறது உங்கள் எழுத்து.

வருகைக்கும் பகிர்வுக்கும் வணக்கங்களும் வாழ்த்துக்களும்.

 
On June 10, 2010 at 3:09 AM , Dr.எம்.கே.முருகானந்தன் said...

மாசிப் பனியின் கூதலையும் ஏனைய அனுபவங்களையும் அணுஅணுவாக ரசித்து எழுதியிருக்கிறீர்கள். நன்றாக இருக்கிறது.

 
On June 10, 2010 at 4:05 AM , கானா பிரபா said...

மூசிப்பெய்யும் சிட்னிக் குளிரில் இருந்து கொண்டே பதிவை வாசித்து ரசித்தேன்

 
On June 11, 2010 at 9:43 AM , PRAKASH said...

மணிமேகலா, டொக்டர், பிரபா அண்ணை. உங்கள் கருத்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி. ஏதோ என்னாலை முடிஞ்ச நினைவழியா நாட்களை இங்கு பதிவு செய்கிறேன்.