•5:54 AM
என்ன மூர்த்தியர் இண்டைக்கு வேலியடைப்போ? ஒழுங்கையால போன சுந்தரம் மாமா கேட்டுக் கொண்டே சைக்கிளை விட்டிறங்கி அருகில் வந்தார். ஒமண்ணை நல்ல நேரத்தில தான் நீங்களும் வந்திருக்கிறியள். வந்து ஒருகை குடுங்கோவன், அதுக்கென்னப்பா நானும் வாறன். இண்டைக்கு ஞாயிற்றுக்கிழமை தானே நானும் வீட்டில சும்மா தான் இருந்தனான். சொல்லிக் கொண்டே சுந்தரம் மாமாவும் அப்பாவும் நானும் கதியால் வேலியில கிடந்த பழைய உக்கிப் போன கிடுகுகளை அறுத்து கொட்டி சுத்தப்படுத்திய பின்னர் வீட்டுக்கு பின்பக்க தாழ்வாரத்தில் அடுக்கி இருந்த கிடுகுகளை எடுத்து கொண்டு வந்து வேலி நீளத்துக்கும் அடுக்கி கொண்டிருக்கிறம்.
யாழ்ப்பாணத்தில் வசதியான ஆக்கள் எண்டால் வீட்டை சுத்தி மதில் எழுப்பியிருப்பினம். சில பேர் எண்ணை பீப்பாய் தகரத்தில வேலி அடைச்சிருப்பினம். நடுத்தர வர்க்க சாதாரண குடும்ப வீடுகளில் சுத்தி கிடுகுவேலியோ பனை ஓலை வேலியோ தான் இருக்கும். என்னதான் வீட்டை சுத்தி மதில் எழுப்பினாலும் அது இயற்கைக்கு மாறான சூழல் தான். கிடுகு,பனை ஓலை வேலி எண்டால் அந்த வீட்டுக்கும் வளவுக்கும் ஒரு தனி களையே வந்த மாதிரி இருக்கும். பனை ஓலையும் தென்னோலையும் யாழ்ப்பாணத்தில இலகுவாய் கிடைக்க கூடிய பொருட்கள் தான். பெரும்பாலும் கிராமப்புறங்களில் ஒவ்வொருத்தர் வீட்டு வளவிலும் ஒரு அஞ்சு பத்து தென்னை மரமோ, பனை மரமோ கட்டாயம் இருக்கும். எங்கடை வீட்டிலையும் ஒரு ஏழு தென்னை மரம் இருந்ததாய் நினைப்பு. ஒவ்வொரு நாளும் மரத்தில இருந்து விழும் காய்ஞ்ச தென்னோலையை அம்மா இழுத்து கொண்டு போய் கிணத்தடியில போட்டு விடுவா.
குடும்பத்தில எல்லாரினதும் குளிப்பு முழுக்கெல்லாம் அதுக்கு மேல நிண்டுதான் நடக்கும் . அப்பத்தான் ஓலை நல்லா நனையும். காஞ்ச ஓலையில கிடுகு பின்ன முடியாது, நல்லா ஊறவேணும். ஒரு அறுபது எழுபது மட்டை சேர்ந்தாப்போல ஏதாவது ஒரு ஞாயிற்று கிழமை கிடுகு பின்ன முற்றத்தில இறங்கிடுவம். கிடுகு பின்னிறதே ஒரு தனிக்கலை தான். அம்மா பின்னும் போது நானும் முதுகுக்கு பின்னால நிண்டு கொண்டு எனக்கும் கிடுகு பின்ன பழக்கி விடும்படி நச்சரிப்பதுண்டு. நச்சரிப்பு தாளாமல் அவவும் சொல்லி குடுக்க ஏழு வயசிலேயே நானும் நல்லா கிடுகு பின்ன பழகீட்டன். கிணத்தடியில இருந்து நனைஞ்ச தென்னோலையை முற்றத்து மண்ணில இழுத்து கொண்டு வந்து பலகை கட்டையை போட்டு குந்தி இருந்து பின்னும் போது, முற்றத்து புழுதி மண்ணும் நனைஞ்ச ஓலை மணமும் சேர்ந்து கலவையாய் ஒரு அலாதியான வாசம் வரும் பாருங்கோ, அதெல்லாம் அனுபவிக்க குடுத்து வச்சிருக்கோணும்.
பின்னி முடிச்ச கிடுகுகளை பத்திரமா ஓரிடத்தில் பாதுகாப்பா அடுக்கி வச்சு, குறிப்பிட்ட எண்ணிக்கையில் கிடுகுகள் சேர்ந்தவுடன் வசந்த கால ஆரம்ப நாளொன்றில் வேலியடைப்பு துவங்கும். வேலியடைப்பு எண்டு சாதாரணமா சொன்னாலும் அதுவும் ஒரு குடும்ப நிகழ்வு மாதிரித்தான். காலைமை இரண்டு பேர் மூன்று பேராக துவங்கும் வேலியடைப்பு நேரம் போக போக, தெரிந்த அயலட்டை சனங்களும், நண்பர்களும் கேட்காமலே உதவிக்கு வந்து சேர, ஒரு கலகலப்பான குட்டி கொண்டாட்டமாகவே மாறி விடும். இரண்டு பேர், வேலிக்கு உள்பக்கம் ஒராள், வெளிப்பக்கம் ஒராள், முதல் வரிசை கிடுகை வைத்து கட்டி கொண்டு போக, அடுத்த இரண்டு பேர் இரண்டாவது வரிசை கிடுகை வைத்து கட்டி கொண்டு பின்னால் வருவர். இதுக்குள் என் வயதொத்த சிறுசுகளின் வேலை கிடுகு எடுத்து குடுக்கிறதும், கிடுகை கதியாலுடன் சேர்த்து கட்டும் வரைக்கும் கதியாலோடை சேர்த்து பிடிக்கிறதும், குத்தூசியில கயிறு மாட்டி விடுறதும் எங்கடை வேலை.
வேலியடைப்புக்கு பாவிக்கிற குத்தூசி இரண்டு விதம் இருக்கும். சில பேர் மரத்தில செய்து வச்சிருப்பினம். சில பேர் அரை இஞ்சி கம்பியில செய்து வச்சிருப்பினம். கூர்மையாக இருக்கும் பக்கத்தில கட்டுக்கயிறு கோத்து விடக்கூடிய அளவில் சின்னதா ஒரு துவாரம் இருக்கும். வேலிக்கு வெளிப்பக்கம் இருந்து ஒருத்தர் குத்தூசியில கயிற்றை கோத்து வேலிக்கு உள்பக்கம் நிற்கும் எங்களிடம் "ஆ இந்தா" என குரல் கொடுத்தபடி அனுப்ப நாங்கள் கயிற்றை எடுத்து வைத்து கொண்டு குரல் கொடுக்க, அவர் குத்தூசியை எடுத்து கதியாலின் மறுபுறம் குத்த நாமும் கயிற்றை இழுத்து கோத்து விட்ட பிறகு "ஆ சரி" என குரல் குடுக்க மளமளவெண்டு வேலையும் நடந்து கொண்டிருக்கும். ஒரு புறம வேலியடைப்பு நடந்து கொண்டிருக்க, மறு புறம அயலில் யார் வீட்டில் மாடு கன்று போட்டது, ஆடு குட்டி போட்டதிலிருந்து அன்றைய அரசியல் வரைக்கும் அலசல் நடந்து கொண்டேயிருக்கும்.
இடையில் பதினோரு மணியளவில் அம்மா பெரிய பாத்திரத்தில் எலுமிச்சம்பழ தண்ணீருடன் வந்து பரிமாறவும் நேரம் சரியாயிருக்கும். அன்றைக்கு வேலியடைப்புக்கு உதவிக்கு வந்த எல்லோருக்கும் மதிய சாப்பாடும் எங்கள் வீட்டில் தான். இனிமையான பொழுதுகள் மீண்டும் வரப்போவதில்லையே.
13 comments:
//என் வயதொத்த சிறுசுகளின் வேலை கிடுகு எடுத்து குடுக்கிறதும், கிடுகை கதியாலுடன் சேர்த்து கட்டும் வரைக்கும் கதியாலோடை சேர்த்து பிடிக்கிறதும், குத்தூசியில கயிறு மாட்டி விடுறதும் எங்கடை வேலை//
இந்தவேலை பாத்த அனுபவம் நிறைய இருக்கு :)
பிரகாஷ்
முதலில் ஈழத்து முற்றத்தில் இணைந்தமைக்கு மிக்க நன்றி
இரண்டாவது, இவ்வளவு சிறப்பாக எழுதும் உங்களை எல்லாம் விட்டு வைப்போமா ;) இன்னும் இப்படியான சுவையான பகிர்வுகளைத் தரவேண்டும்.
அனுபவிச்சு நல்லா எழுதியிருக்கிறியள்.
//கிடுகு எடுத்து குடுக்கிறதும், கிடுகை கதியாலுடன் சேர்த்து கட்டும் வரைக்கும் கதியாலோடை சேர்த்து பிடிக்கிறதும், குத்தூசியில கயிறு மாட்டி விடுறதும் எங்கடை வேலை.//
எனக்கும் நிறைய அனுபவம் இருக்கு..
எல்லா வேலையும் தெரிஞ்சிருக்கோணும் எண்டு சின்ன வயசில அம்மா கூப்பிட்டு கிடுகுபின்ன காட்டித்தருவா.எனக்கும் கிடுகு பின்னல் எண்டா விருப்பம் தான்.எண்டாலும் ஒரேடியா இருந்து பின்ன பொறுமை இருக்கிறேல்லை..
ஊர் ஞாபகம் வந்திட்டுது.அருமையா எழுதியிருக்கிறார் பிரகாஷ்.ஊறவிட்ட ஓலையைக் கிழிச்சுத் தாறேன் எண்டு கால் பெருவிரலையும் சேர்த்துக் கிழிச்சுக்கொண்ட ஞாபகம்தான் வருது.
கறையானை மறந்திட்டீங்களே....
தம்பீ..எழுத்து நல்லாயிருக்கு ராஜா..
அருமையாக அனுபவித்து எழுதியிருக்கிறீங்க பிரகாஸ்.... தொடரட்டும் உங்கள் எழுத்து...
ஞாயிற்று கிழமை வேலி அடைப்பு
சின்ன வயசில இது எங்களுக்கு
சந்தோஷ குதிப்பு
இந்த நினைவுகள் மனதுக்குள்
எப்போதும் மிதப்பு
உங்கள் எழுத்து இதனை
எதிர்பார்த்ததின் தவிப்பு - இவ்வாறான
எழுத்துக்கு புலம்பெயர் தமிழர் நாங்கள்
கொடுப்போம் மதிப்பு
தொடரட்டும் உங்கள்
சிறப்பான எழுத்து.
சுபாங்கன், தாருஹாசினி ஈழத்து முற்றத்தில் எனது முதல் பதிவிற்கு கருத்துரை இட்டதில் மிகவும் மகிழ்ச்சி.
பிரபா அண்ணை! ஈழத்து முற்றத்தில் பங்கு கொள்ள அழைத்ததுடன், உங்களின் ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி. நிச்சயம் எனது மண்ணின் நினைவுகளை மீட்கும் பதிவுகள் இடம்பெறும்.
ஹேமா! ஊற விட்ட ஓலையை கிழிக்கும் போது காலையும் சேர்த்து கிழித்த அனுபவங்களும் இருக்கு. எழுத மறந்து போனன். நினைவு படுத்தினதுக்கு நன்றி.
வி.அண்ணை! எங்கடை ஊர் கறையானை மறக்க முடியுமோ? பாராட்டுக்களுக்கு நன்றி. மாயா, சிறி உங்கள் கருத்துரைகளுக்கும் மிக்க நன்றி.
எமது பழைய நினைவுகளை மீட்டியிருக்கிறீர்கள்.. தொடர்ந்தும் உங்களுடைய படைப்புகளை எதிர்பார்க்கிறோம் அண்ணா...
குடும்பத்தோடு அதே வேலி அடைக்கும் நினைவுகளைப் பேசி மகிழ்ந்தோம்.
நம்மை அந்த நாட்களுக்குள் கொண்டு சென்றது தத்ரூபமான இப் பதிவு.
கிடுகு எடுத்துக் கொடுக்கிற வேலை அக்காவுக்கு.மறு புறம் நின்று குத்தூசியில் இழைக்கயிறு கோர்க்கிற வேலை எனக்கு.யோசித்து கூர்ந்து நோக்கி மினைக்கெட்டு நிறைய பேச்சு ஏச்செல்லாம் வாங்கி இருக்கிறேன்.:)
ஊறிய தென்னை ஓலைகளை வண்டி வைக்காமல் கணக்காக இலைகளை அழகாக விரித்துப் பின்னுகிற கலை அக்காவுக்கு நல்லாக வரும்.
குடும்பத்தோடு நினைவுகளை மீட்டுப் பார்க்க உதவிற்று உங்கள் அழகான பதிவு.
கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி மணிமேகலா.