•7:04 AM
“என்ன அன்டி, கையில பாக்கையும் காவிக்கொண்டு வந்திருக்கிறியள்? என்ன விசயம்?”
“ஒண்டுமில்லை, சண்முகமண்ணேன்ட கடையில நல்ல வெள்ளைச் சீனி வந்திருக்கு. கொழும்பு விலையைவிட கிலோ இருவது ரூவாதான் கூடவாம். அதுதான் வேணுமெண்டா வாங்கிவையுங்கோவெண்டு சொல்லிட்டுப் போக வந்தனான்”
எந்த ஒரு பொருளுக்கும் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விற்பனை விலைதான் இந்தக் கொழும்புவிலை. என்னதான் அதிகபட்ச விலை என்றாலும், தரைவழிப்போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, பல கட்டுப்பாடுகளுக்கும் தடைகளுக்கும் இடையில் நடந்துகொண்டிருந்த கடல்வழிப் போக்குவரத்தாலும் இந்த விலை எங்களுக்கு எப்படியும் குறைந்தபட்ச விலையிலும் குறைவாகத்தான் இருக்கும்.
ஊர்க்கடைகளில் விற்கப்படும் பொருட்களின் விலை சமயங்களில் கொழும்பு விலையின் இரண்டு, மூன்று மடங்கைவிட அதிகமாக இருக்கும் சந்தர்ப்பங்களும் இங்கே சகஜம். இந்த விலை அதிகரிப்பை பொருளின் தேவை, கடல்மார்க்கத்தில் எடுத்துவர ஆகும் செலவு, யுத்த சூழ்நிலை முதற்கொண்டு கடையில் இருக்கும் பதுக்கல் வரை தீர்மானிக்கும்.
இந்தக் கொழும்புவிலை என்பது பல ஆண்டுகாலப் பாவனையால் நம்மவர்கள் இரத்தத்தில் ஊறிவிட்டது. எந்தப் பொருளையும் அதன் கொழும்புவிலையுடன் ஒப்பிடுவதும், அதுகுறித்து அடுத்தவருடன் பேசிக்கொள்வதும், அதேபோல கொழும்புக்கு வருபவர்கள் குறைந்தவிலையால் தேவைக்கு அதிகமாக வாங்க விரும்புவதும் எம்மவரிடையே இயல்பான ஒன்று.
இந்த விலைவித்தியாசத்தால், கொழும்பிலிருந்து ஊருக்குப் பயணப்படும் ஒவ்வொருவரும் தமது சக்திக்கும் அப்பாற்பட்ட பொருட்களை தம்முடன் எடுத்துச்செல்வார்கள். மாரளவு தண்ணீரில், தலையில் பொருட்களைச் சுமந்துசென்றும், படகிலும், பின் முன்னாலும் பின்னாலும் பலகை அடித்த மண்ணெய் மோட்டார்சைக்கிளிலும் கொம்படி ஊரியான் பாதையில் பயணித்து, வீடு வந்து சேர்கையில் பொருட்கள் தமது உண்மையான தன்மையையே பல நேரங்களில் இழந்துவிட்டிருந்தாலும், கொழும்பிலிருந்து வந்தால் இப்படியாக பொருட்கள் காவிவருவதும், அதை உறவினர், அயலவருடன் பகிர்வதும் ஏறத்தாள எழுதப்படாத சட்டம்போன்றது.
பல ஆண்டுகளாக நம் பாவனையில் இருந்து இந்தக் கொழும்புவிலை நம் வட்டாரச் சொற்களில் ஒன்றாகவே மாறிவிட்டது. தரைவழிப் போக்குவரத்துகள் சீர்செய்யப்பட்டு, விலை வித்தியாசங்கள் இல்லாமல் போய்விட்ட இன்றும்கூட,
“மச்சான் பைக் ஒண்டு பாத்திருக்கன், இங்கை 1.60 சொல்லுறாங்கள். அங்க எவ்வளவு போகுதெண்டு ஒருக்காப் பாத்துச் சொல்லுறியா”
என்ற நண்பனின் அழைப்பிலும், ஆப்பிள்களை பைக்குள் அடைந்துகொண்டு யாழ் செல்லும் ஆச்சிகளிலும், “கொழும்பு விலையில்…” என்று ஆரம்பிக்கும் யாழ்ப்பாணத்துப் பத்திரிகை விளம்பரங்களிலும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது இந்தக் கொழும்பு விலை.
9 comments:
அடேயப்பா கனகாலத்திற்கு பிறகு கொம்படி ஊரியான் பாதையை ஞாபகபடுத்தி இருக்கிறியள்.
நீண்ட நாட்களின் பின் ஊர் சங்க கடை.... பார்த்த் மகிழ்வு .....நன்றி உங்கள் பதிவுக்கு
கொழும்பில் சிலபொருட்களை விற்கும்போது யாழ்ப்பாணத்திலிருந்துவந்ததென்றால்தான் விற்கமுடியும்.கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்குப்போகமுடியாதகாலத்தில் வண்டிலில் மாம்பழம் விற்பவர் யாப்பாண அம்பே[யாழ்ப்பாண மாம்பழம்] என்றுகூறிவிற்றார்.அவரை மறித்து யாழ்பபாண்த்திலிருந்து எப்பவந்த மாம்பழம் எனக்கேட்டபோது அப்படிச்சொன்னால்தான் விற்கலாம் என்றார்
அன்புடன்
வர்மா
ஊர் ஞாபகங்கள் தந்த பதிவு. வாழ்த்துக்கள்.
ம்ம்ம் நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஊர் போன ஞாபகம். சங்கக் கடை படம் அருமை. கொழும்பு விலையை விட யாழில் விலை குறைவு என அறிந்தேன்.
வித்தியாசமான பதிவை ரசித்தேன், நன்றி
அன்றிலிருந்து இன்றுவரை கொழும்பு விலைக்கும் மற்ற இடங்களுக்கும் விலை வித்தியாசப்படுது போல.
வித்தியாசமான சிந்தனைப் பதிவு சுபா.
எப்படி தான் யோசிக்கறீங்களோ?நல்லா எழுதி இருக்கீங்க.....
இது என்ன ?
பின்னுக்கு வாறவை