Author: ஹேமா
•2:06 AM

ஏனப்பா....ஏன் என்ர குஞ்சைப் போட்டு அடிக்கிற !

அதுசரி ...உங்கட பிள்ளைக்கு ஒண்டெண்டா உடன வந்திடுவியள்.அதுவும் துண்டை முறுக்கித் தோள்ல போட்டுக்கொண்டு.

நீ இஞ்ச வாடாப்பு ராசா...ஏன் கொம்மா இப்பிடிப் போட்டுக் கும்முறா உன்னை?

ஓம்...ஓம்...அப்பிடியே சொல்லிக் கிளிக்கத்தான் போகுது குரங்கு.வாய் மட்டும்தான் வங்காளம்போல...அதுவும் என்னட்ட மட்டும் !

சரி..சரி...இப்ப என்னப்பா நடந்தது அதைச் சொல்லன் நீ .

ஓம் ஓம்....கால் முளைச்சிட்டுதெல்லோ உங்கட நோஞ்சானுக்கு.உங்கால இஞ்சாலயெண்டு அந்த வளைவு மூலை வளவு வரைக்கும் வெளிக்கிட்டுடார் இப்பல்லாம்...துலைஞ்சவன்.

அதுக்கேனப்பா இப்பிடி அலம்புற.சின்னதுகள் எண்டா வீட்டுக்குள்லயே புளுக்கை போட்டுக்கொண்டு உன்ர சீலைக்குள்ளயே கிடக்குமோ.வெளில போய்க் கீய்த்தானே வருங்கள்.நீ ஏன் இந்தப் பாடு படுறயப்பா.

ஓ...ஓ...இப்பிடியே அவனுக்குச் வக்காளத்து வாங்கி வாங்கியே அவன் நாசமாய்ப் போறான்.அங்கத்தைப் பெடியள் எல்லாம் உதவாததுகள்.அதுகளோட பிழங்கிப் பழகி ஒரு சதத்துக்கு உதவாம வருது உது.எல்லாத்துக்கும் நல்லா வாயடிக்குது.

சரி...விடு விடு...அவன் கெட்டிக்காரன்.சரியாயிடுவான்.

ஓம்...ஓம் உப்பிடியே சொல்லிச் சொல்லித்தான் கழுதை குட்டிச்சுவர்ல ஏறி நிக்குது.பிறகு உதே வாய் என்னைத்தான் குற்றம் சொல்லும்.வளத்த வளப்பைப் பார் எண்டு.அப்ப கேட்டுக்கொள்றன் உங்களை.

யேய்...கொஞ்சம் சும்மா இரு பாப்பம்.சும்மா முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடுற.புத்தி இருக்கோ உனக்கு.நீ ஒரு சென்மம்.

அதெண்டாச் சரிதான்.நான் புத்தி கெட்டவளெல்லோ.இஞ்ச வாருங்கோ.
சொல்லித் தாங்கோவன்.

என்ன....நானும் பாத்துக்கொண்டிருக்கிறன்.சத்தம் உச்சத்தில ஏறிக்கொண்டேல்லோ போகுது.கவனமாயிரு...சொல்லிட்டன்....ஓம்.
சும்மா இருங்கோப்பா.ஏதோ நான் சத்தம் போட்டா அடங்கிற ஆள்மாதிரி.பேசாமப் போங்கோ பாப்பம்.

யேய்...இப்ப வாய் மூடப்போறியோ இல்லையோ.இல்லாட்டி...!

ஓம்...ஓம் என்னத்தைச் சொன்னாலும் அடக்கிப்போடுவியளே...இது உங்கட குடும்பத்துக்கே பழக்கிப்போன ஒண்டெல்லோ...

யேய்....இப்ப என்ன உனக்கு....என்னண்டாலும் என்னோட இருக்கட்டும்.தேவையில்லாமலுக்கு என்ர குடும்பத்தை இழுத்தியெண்டா...
சொல்லிட்டன் ஓம்...

அடப் போங்கோப்பா...உங்கட கும்பத்தைப் பற்றித் தெரியதோ.உலுத்துக் கெட்ட குடும்பம்.என்ர அப்பர் சொன்னதைக் கேக்காம உங்களுக்குப் பின்னாலதான் துலைவன் எண்டு அழுங்கு பிடிச்சுக்கொண்டு வந்த எனக்கு வேணும்....வேணும்....இதுவும் வேணும்.....இன்னமும் வேணும்.

ஓமடி நானும் அப்பிடித்தான்.என்ர தலையெழுத்து.எங்காதம் போனாலும் தன்பாவம் தன்னோட எண்டதுபோல சனியன் உன்னோட மாரடிக்க வேண்டிக் கிடக்கு.

ஓம்...ஓம் என்னவோ சும்மா கூட்டிக்கொண்டோ வந்தனியள் வந்த மாதிரியல்லோ.எங்கட அப்பரிட்ட விடாப்பிடியா நண்டுபோல நிண்டு 15 பவுண் நகை வாங்கேக்க உங்கட மார் அடிக்கேல்லையோ.

இஞ்ச பார்...சும்மா எல்லாத்துக்கும் எதிர்த்துக் கதைக்காத.வாய் காட்டாத.ஒண்டு வச்சனெண்டா உனக்கு.நல்லா வாங்கப்போற...

ஓம்..ஓம்....அதுக்குத்தானே அப்பர் என்னைப் பெத்து உங்களிட்ட வாய்க்கரிசி போட்டவர்.அடிப்பியள் நீங்கள்.

(ப்ப்ப்ளார்.............)

என்ர ஐயோ...கடவுளே அடிச்சுப் போட்டியளெல்லோ..இவ்வளவு காலமும் இல்லாம கை நீட்ற அளவுக்கு உங்கட கை வளந்திட்டுதெல்லோ.இனியும் இந்த விசரி உங்களோட இருந்தாளெண்டா....நான் போறன் என்ர வீட்டுக்கு.

போடி...போ என்னவோ உவ இல்லாட்டி உலகமே இல்லையாக்கும்.வாழ ஏலாதோ...பெரிய இவவெண்டு நினைப்பு இவவுக்கு.

ஓம் ...இப்ப உங்களுக்குத் தெரியாது.கொஞ்சம் பொறுங்கோ.நாளைக்கு றோட்டில நிப்பியள்...யாரடா ஒரு சொட்டுக் கஞ்சி ஊத்துவினம் எண்டு கிளிஞ்ச சாரத்தோட நிப்பியள் பாருங்கோ...அப்ப தெரியும்.

ஓமடி போடி...நீ இல்லாட்டி ஒரு ஆண்டி மடம்...அரச மரம்...சந்தி மடம்...
கிடைக்காமலே போகும்.

சரி சரி நான் வெளிக்கிடுறன்.ரெண்டொருநாள் செல்ல எங்கட வீட்டுப் பக்கம் "இஞ்சாரப்பா".... எண்டுகொண்டு வருவியள்...சமாதானம் பேசிக்கொண்டு...அப்ப பேசிக்கொள்றன் உங்களை.

ஓ...அப்பிடி ஒரு நினைவிருக்கோ உனக்கு.என்னவோ பூனை கண்ணை மூடிக்கொண்டா பூமியே இருண்டு போகுதெண்டு நினைப்பாம் அதுக்கு.....விளங்கிச்சோ... ஒருக்காலும் நான் உன்ர வீட்டுப்பக்கம் வரன் தெரியுமோ.

அதையும் நான் பாத்துக்கொள்றன்...கொப்பரும் பிள்ளையுமாக் கிடந்து காயுங்கோ....வாறன்.

**************************************

அம்மா.....அம்மா....அம்மாய்..அம்மா வேணும் எனக்கு.அப்பாய்....அம்மாய்

என்னடா இப்ப உனக்கு.அம்மாய் கொம்மாய் சும்மாய்...அதான் போட்டாளெல்லோ....
உன்னாலதான் எல்லாம் ....இனிமேல்பட்டு அந்தப் பக்கம் அந்தப் பெடியளோட போவியே....எங்கயடா அந்தத் தடி.அறுந்தவள் அதையும் எடுத்து ஒளிச்சுப்போட்டுப் போட்டாளே.இரு....கிளுவங் கம்புதான் உனக்குச் சரி.

டேய் நில்லடா....ஓடினா இன்னும் உதைப்பன்....

(அடி...1...அடி2 3 4 5 6 )

ஐயோ....அம்மா.....அப்பா....அடிக்கிறார்.


பாலாஜியிட்ட இருந்து எங்கட மொழி அசைவில் எடுத்து மீள்பதிவாக்கினது பாருங்கோ.இதுதான் என்ர முதல் பதிவும் ஈழத்து முற்றத்தில.
This entry was posted on 2:06 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

11 comments:

On May 26, 2010 at 2:56 AM , க.பாலாசி said...

வாழ்த்துக்கள் ஹேமா...கலக்குங்க...

 
On May 26, 2010 at 3:25 AM , Ashok D said...

ஆங்.. ரைட்டு...

 
On May 26, 2010 at 5:44 AM , தாருகாசினி said...

முதலும் ஒருக்கா இந்தப்பக்கம் வந்தனான்.மனுசனும் மனிசியும் சண்டைபிடிக்கிறத பாத்து பயந்து திரும்பி ஓடியிட்டன்.இப்ப ரெண்டாம் தரம் மனசை திடப்படுத்திகொண்டுவந்து பின்னூட்டம் வச்சிருக்கன்...

நல்லாய் இருக்கு...
ஆனா பயமா இருக்கு..;)

 
On May 26, 2010 at 6:29 AM , வந்தியத்தேவன் said...

அருமையான சண்டை எல்லா வீட்டிலும் நடப்பதுதானே இது பெரும்பாலும் ஆம்பிளைப்பிள்ளையள் அம்மா செல்லம் பொம்பிளைப்ப் பிள்ளையள் அப்பா செல்லம்
செல்லம் கொடுத்து கொடுத்து பிள்ளையளை பழுதாக்கிப்போடுவினம்

 
On May 26, 2010 at 7:17 AM , ILA (a) இளா said...

அட்டகாசம்

 
On May 26, 2010 at 7:50 AM , நிலாமதி said...

வீடுச்சண்டை ..பதிவுலகம் வரைக்கும் வந்திட்டுது. ஒருவர் பிள்ளயை திருத்தமுற்படும் பொது மற்றவர் குறுக்கீடு .....செய்யும்வேலை. .....விபரீதத்தில் முடியும்.

 
On May 28, 2010 at 12:49 PM , ஹேமா said...

பாலாஜி...உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லணும்.நன்றி பாலாஜி.எங்கே காணோம் குழந்தைநிலாவில உங்களை !


அஷோக்...கு ரொம்ப நன்றி.
இங்கயும் வந்து ரைட்டு சொன்னதுக்கு.


தாருகாசினி...முதல்ல உங்கட பேர் எனக்குப் பிடிச்சிருக்கு.அருமையான தமிழ்ப் பெயர்.

என்ன தாருகாசினி...எங்கட வீடுகளில நடக்காததையா
பாலாஜி பதிவில போட்டார்.
பயப்பிடாதேங்கோ.சிலநேரம் இன்னும் பயங்கரமான பதிவெல்லாம் பட்டிக்கவேண்டி வருமெல்லோ !


வந்தியத் தேவனுக்கு ஈழத்துமுற்றத்தில் முதல்வணக்கம்.
பிள்ளைகளுக்கு செல்லம் கொடுத்துக் கொடுத்து வளத்திட்டு இப்பிடி எங்களைப்போல அநாதைகளா விட்டிருக்கினம்.வாழ்க்கையை எப்பிடி வழிநடத்திறதெண்டே தெரியாமல் கிடக்கு சிலநேரம் !அதிருக்க பிள்ளைக்கு அடிக்கத்தொடங்கின சண்டை எங்க கொண்டு போய் நிப்பாட்டியிருக்கு பாருங்களேன்.


இளா...நன்றியும் அன்பும்.


நிலா...இங்கும் வாழ்த்துச் சொன்னதுக்கு நன்றி தோழி.


கமல்...எங்க ஆளையே காணேல்ல.பதிவைப் போடுங்கோ ஈழத்து முற்றத்தில எண்டு சொல்லிப்போட்டு ஒண்டும் சொல்லாம இருந்தா எப்பிடி !


பிரபா....நீங்களும் எங்க ?

 
On May 28, 2010 at 7:54 PM , Unknown said...

ஈழத்து வழக்கு மொழியில் நல்ல எழுத்து நடை..
வாழ்த்துக்கள் ஹேமா ..

 
On May 28, 2010 at 8:06 PM , தாருகாசினி said...

//தாருகாசினி...முதல்ல உங்கட பேர் எனக்குப் பிடிச்சிருக்கு.அருமையான தமிழ்ப் பெயர்.//

நன்றி ஹேமா...பதிவுலகுக்கு வைத்த பெயர் மட்டுமல்ல என்னுடைய சொந்த பெயரும் அதுதான்.தமிழ் தெரிந்தவர்களே சிலவேளைகளில் என்னுடைய பெயரை சொல்ல ஞாபகப்படுத்தி வைத்திருக்க கஸ்டப்படும்போது
கொஞ்சம் சங்கடமாகவும் இருக்கும்.வீட்டில் அப்பாவுக்கு தமிழ் ஆர்வம்,அறிவு கொஞ்சம் அதிகம் என்பதால் தமிழ் அகராதியோ நிகண்டுவோ எங்கேயோ இருந்து இந்த பெயரை எடுத்ததாக அம்மா சொல்லியிருக்கிறார்.

//பயப்பிடாதேங்கோ.சிலநேரம் இன்னும் பயங்கரமான பதிவெல்லாம் பட்டிக்கவேண்டி வருமெல்லோ !//

ம்ம்..பாப்பம்..பாப்பம்...;)

 
On May 31, 2010 at 8:00 AM , அப்பாதுரை said...

ஆகா!

 
On June 2, 2010 at 12:13 AM , கவி அழகன் said...

நல்ல சிந்தனை வாழ்த்துக்கள்