Author: தாருகாசினி
•12:11 PM
என்ன கனகமக்கா அரக்கபரக்க ஓடிவாறியள் என்ன நடந்தது..என்ன மார்க்கண்டண்ணண்ர பிருந்தாவை காணேல்லயாமோ...அவள் உதில வதிரி சந்திக்கு தானே ரியூசனுக்கு போறவள்..

அது வந்து கமலாக்கா விடிய 6 மணிக்கு வகுப்பு எண்டு கருக்கலுக்குள்ளயே வெளிக்கிட்டிட்டாளாம்..8 மணிக்கு முடியிற வகுப்பு 10 மணி ஆயிட்டுது..ஆளை காணேல்ல...

அங்க சந்திக்கு பக்கத்தில சென்றி பொயின்ற் ஒண்டு இருக்கெல்லோ..அதில தான் அந்த படுபாவியள் பிடிச்சு வச்சிருக்கிறாங்களோ தெரியாது..அதான் எங்கட சுந்தரமண்ணை விசாரிக்க எண்டு போட்டார் அவருக்கு சிங்களம் நல்லா கதக்கத்தெரியும்...இங்க சின்னம்மாக்கா ஒரே ஒப்பாரி பச்சை தண்ணி கூட குடிக்கேல்லயாம்...



கொஞ்சம் பொறுங்கோ சுந்தரமண்ணை வாறார் என்னண்டு கேப்பம்..என்ன யாழ்ப்பாணத்தில இருந்து வாற வாத்தி வர பிந்திபோச்சோ...அப்பிடியெண்டா முதலே அறிவிக்கவெல்லோ வேணும் அத விட்டிட்டு .என்ன கண்டறியாத ரியூசன் நடத்துறாங்களாம் ரியூசன்..இந்த பெட்டைக்கும் கொஞ்சமெண்டாலும் பொறுப்பு இருக்கே..வாத்தி வரப்பிந்தும் எண்டா வீட்ட வந்து ஒரு சொல்லு சொல்லியிட்டு போயிருக்கலாம்..அத விட்டிட்டு பக்கத்தில கூடப்படிக்கிற பொடிச்சி வீட்ட போய் நிண்டிருக்காளாம்..நாங்கள் இங்கை நெஞ்சிடிச்சு கொண்டு...பொம்பிளபிள்ளைய பெத்து படிக்க விட்டிட்டு வயித்தில நெருப்பையெல்லே கட்டிகொண்டிருக்கவேண்டிகிடக்கு...நல்ல காலம் சுந்தரமண்ணை ஆமிக்காறனட்ட கேக்க முதல் ரியூசன்ல போய் விசாரிச்சது....



சொல்விளக்கம்

அரக்கபரக்க-மிகவேகமாக அல்லது படபடப்புடன் கூடிய என்ற கருத்தை குறிக்கும் சொல் பிரயோகம்

கருக்கல்-பொழுது நன்றாக விடிய முதல் உள்ள ஒரு மெல்லிய இருட்டு பொழுதினை குறிக்கும்...
மாலை சாயும் நேரத்தையும் கருக்கல் என்று சொல்வார்கள்..

கேப்பம்-கேட்போம்
This entry was posted on 12:11 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

15 comments:

On May 16, 2010 at 1:52 AM , கானா பிரபா said...

கருக்கல் என்பதை அந்திப் பொழுது என்று தமிழகத்தில் சொல்வார்கள். கருக்கல் என்பது அங்கும் பாவனையில் இருக்கா தெரியவில்லை. இடுகைக்கு நன்றி

 
On May 16, 2010 at 4:45 AM , தாருகாசினி said...

கருக்கல் என்ற சொல் பாவனை எங்கள் ஊரில் உள்ளது.தமிழகத்தில் பாவனை பற்றி எனக்கு தெரியவில்லை.கருக்கல் என்று பொதுவாக சொல்வது மெல்லிய இருட்டுபொழுதினை குறிக்கும்.இளையராஜாவின் பாடல் ஒன்றில் "மாலை கருக்கலில் சோலைக்கருங்குயில்" என்று ஒரு வரி வரும்.அங்கே "கருக்கல்" என்ற சொல்லை "மாலை" என்ற சொல்லோடு சேர்த்து சொல்லும்போது தான் அது அந்திப்பொழுதாகிறது என்பது எனது அபிப்பிராயம்..

 
On May 16, 2010 at 8:09 AM , தமிழ் மதுரம் said...

கருக்கல் என்ற சொல் எங்கடை ஊரிலையும் பாவிக்கிறவை. எங்கடை அம்மம்மா அடிக்கடி சொல்லுவா. மம்மலுக்கை, கருக்கலுக்கை வெளியை போகாதையடா ராசா என்று.

அரக்கப் பரக்க வந்து படிச்சு முடிச்சிட்டன்.

 
On May 16, 2010 at 8:27 AM , தாருகாசினி said...

ம்ம்..மம்மல் என்ற சொல் எங்கள் இடத்திலும் பாவிக்கிறவர்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் கமல்..

 
On May 18, 2010 at 12:12 AM , கருணையூரான் said...

ம்....புரிகிறது ...நல்ல இயல்பான உரைநடை வாழ்த்துக்கள்

 
On May 18, 2010 at 12:35 AM , ஹேமா said...

கருக்கல் பொழுதை மம்மல் பொழுது என்றும் சொல்வதுபோல ஒரு ஞாபகம்.சரியா பிரபா.

என் தளத்தில் பதிவாகிய பதிவை இங்கே திரும்பவும் பதிவிடலாமா பிரபா ?

 
On May 18, 2010 at 10:29 AM , தாருகாசினி said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் கருணையூரான்.:)

 
On May 19, 2010 at 5:58 PM , யசோதா.பத்மநாதன் said...

மிக இயல்பான கதையோட்டம் காசினி.

நீங்கள் சிறுகதை, நாவல் இப்படி ஏதாவது எழுதினால் கூட மிக அருமையாக இருக்கும்.

நல்ல யாழ் நடை!

 
On May 20, 2010 at 3:38 AM , தாருகாசினி said...

கருத்துக்கு நன்றிகள் மணிமேகலா.இனிவரும் பதிவுகளில் எழுத முயற்சிக்கிறேன்...:)

 
On May 21, 2010 at 4:14 AM , கானா பிரபா said...

ஹேமா said... கருக்கல் பொழுதை மம்மல் பொழுது என்றும் சொல்வதுபோல ஒரு ஞாபகம்.சரியா பிரபா. என் தளத்தில் பதிவாகிய பதிவை இங்கே திரும்பவும் பதிவிடலாமா பிரபா ?//

ஹேமா

மம்மல் எண்டும் சொல்லுவினம், தாராளமாக மீள் இடுகை செய்யலாம்

 
On May 21, 2010 at 6:24 AM , Kiruthigan said...

யதார்த்தம் அருமை...
அதே பாணியில் வரவேற்கிறோம்..

 
On May 21, 2010 at 9:26 AM , தாருகாசினி said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் Cool Boy கிருத்திகன்...:)

 
On May 26, 2010 at 7:05 AM , வந்தியத்தேவன் said...

தாருஹாசினி உங்கடை பேச்சைப் பார்க்கும் போது வடமராட்சி போல் தெர்கின்றது. சரியோ

 
On May 26, 2010 at 9:16 PM , தாருகாசினி said...

ஓமோம் வந்தியண்ணா...

அது எப்பிடி யாழ்ப்பாணத்திலயும் பிரதேசத்துக்கு பிரதேசம் பேச்சு வழக்கில பெரிய வேறுபாடு இருக்கே?எனக்கு தெரியேல்ல...:)

அதுசரி தவறாம பின்னூட்டம் வக்கிறியள் ஆனா ஈழமுற்றத்தில உங்கட பதிவை கண்டு கனகாலம் போல....:)

 
On May 27, 2010 at 1:42 AM , வந்தியத்தேவன் said...

வதிரிச் சந்தி எல்லாம் வருகின்றது அதுதான் கேட்டேன் முத்தத்திலை நிற்க நேரமில்லாமல் இருக்கின்றது விரைவில் ஒரு பதிவுடன் வாறன். நிறையச் சோலிகள் இருப்பதால் பிறகுவாறன்