•3:22 AM
"என்ன பிள்ளை வீடெல்லாம் ஒரே மச்ச வெடுக்கா இருக்கு, நாறல் மீனைப் பார்க்காம வாங்கீட்டியோ"
வீட்டு வாசல் படியை மிதிக்கும் முன்னமே ஐயாத்துரை அண்ணை கேட்கிறார்.
மேற்குறித்த வாக்கியத்தில் வரும் "மச்சம்" , "வெடுக்கு" ஆகியவை புதுமையான சொற்களாகக் குறிப்பாகத் தமிழகத்தவருக்குத் தென்படும்.
மச்சம் என்பது மீன் என்பதன் ஒத்த சொல் என்பது எல்லோரும் அறிந்ததே. அதற்கு நெருக்கமான உதாரணமாக கிருஷ்ண பரமாத்மாவின் "மச்ச அவதாரம்" என்பது மீன் வடிவம் எடுத்ததாக இதிகாசம் சான்று பகரும்.
ஈழத்துப் பேச்சு வழக்கில் மச்சம் என்பதைப் பொதுவாக மாமிசம் என்ற வகையறாவுக்கு ஒத்த கருத்தாகப் பாவித்து வருவது வழமை. எனவே வீட்டில் மீன் கறி என்றால் மட்டுமல்ல, கோழி, ஆடு, மாடு எதைக் கறியாக்கினாலும் "மச்சம்" என்ற பொது வழக்கில் அழைப்பதுண்டு. அதற்கு நேர்மாறாக தாவர உணவுகளை "சைவம்" சமைத்தேன் என்று அடையாளப்படுத்துவார்கள்.
தமிழக நண்பர் ஒருவர் கருத்துப்படி அசைவ உணவை "மச்சம்" என்று தமிழக வழக்கில் பாவிப்பதில்லை என்று சொன்னார். ஆனால் ஈழ வழக்கோடு பெரிதும் பொருந்திப் போகும் குமரி மாவட்டத்திலாவது இப்படியான சொற் பிரயோகம் இருக்கா என்ன?
அடுத்ததாக வரும் சொல் "வெடுக்கு"
மாமிசம் சமைத்தால் இயல்பாகவே கிளம்பும் வாசனையைத் தான் "வெடுக்கு" என்ற அடைமொழியிட்டுக் குறிப்பிடுப்பிடுவார்கள். "வெடுக்கென ஓடினான்" என்பதில் வரும் வேகம், விரைவு என்ற தொனியில் மாமிசம் காய்ச்சும் போது திடீரென நாசியைத் துளைக்கும் வாசனை மேலெழுந்து வருவதால் தானோ என்னவோ "வெடுக்கு" என்று அழைக்கிறார்கள்.
"வெடுக்கு" என்ற பதம் தவிர "வெடில்" என்றும் சம அர்த்தத்தோடு பேசுவார்கள். அதாவது "மீன் நாற்றம்" என்பதை "மீன் வெடுக்கு" "மீன் வெடில்" என்றும் சொல்லுவார்கள்.
புகைப்படம் நன்றி: இணுவில் கெளரி லோகேஸ்வரன் இணுவிலுக்குப் போன போது எடுத்தது facebook இல் போட்டவ
20 comments:
பிரபா..ஒரே வெடுக்கு மணம்.அதாலதான் வெளில கல்லு வச்சு மீன் பொரிக்கிறாபோல.
வெடுக்கெண்டு நான்தான் வந்திருக்கிறன் போல.உங்களுக்கு வெடுக்கெண்டு கோவம் வராம இருந்தால் சரி !
நல்ல பதிவு.. அப்ப இண்டைக்கு உங்கடை வீட்டை மச்சமோ இல்லை தீயதோ?
உந்த மச்சத்தை எங்கடை ஊரிலை பிலால் என்றும் சொல்லுவீனம்? சரியான சொல் ஞாபகம் வருகுதில்லை. பிலால் மணக்குது என்று பொருள் பட ஒரு சொல்லும் யாழ்ப்பாணத்தில் உபயோகிப்பதாகக் கேள்விப் பட்டிருக்கிறன். ஆனால் அது புலாலோ இல்லை பிலாலோ சரியாகத் தெரியவில்லை.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு சொல்லாடல்கள் உண்டு. "கவுச்சி" உண்டா? என்ற வார்த்தை பலரும் பயன் படுத்துவதை பார்த்திருக்கின்றேன்.
மீனாக இருந்தாலும் சரி, வேறு எந்த ஒரு இறைச்சி வகையாக இருந்தாலும் அதை கவுச்சி என்று சொல்வதுண்டு....
"மச்ச வெடுக்கு","வெடுக்கு","வெடில்" எண்ட சொல்லுகள் எங்கட ஊரிலயும் கூடுதலா பாவிக்கிறனாங்கள்...ஏதும் கெட்ட வாசனை வந்தா "வெடுக்கு நாத்தம்"அப்பிடி எண்டு சொல்லுறது வழக்கம்...
வாங்கோ ஹேமா
கனகாலத்துக்குப் பிறகு வந்து வெடுக்கெண்டு ஓடுறியள் ;)
வணக்கம் கமல்
பிலால் , புலாலில் இருந்து மருவியிருக்கலாம் எங்கட பகுதியில் இது பாவிப்பதில்லை.
ஆரூரன் விசுவநாதன் said...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு சொல்லாடல்கள் உண்டு. "கவுச்சி" உண்டா? என்ற வார்த்தை பலரும் பயன் படுத்துவதை பார்த்திருக்கின்றேன்.//
வணக்கம் ஆரூரன்
கவுச்சி என்ற சொல்லைத் திரைப்படங்கள் மூலமே அறிந்தேன், வேறு பல ஒத்த சொற்களும் உண்டு என நினைக்கிறேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தாருகாசினி
நல்ல பதிவு..
அருமை தோழா
வெடுக்கு வெடுக்குன்னு பதில்கள் இருந் தாலும் இங்க மச்சவெடுக்கு நல்லவேளையாக இல்லையப்பா.. :)
அசைவத்தை பொதுவாக மாமிசம் என்று சொல்வார்கள்.முஸ்லிம்கள் இறைச்சி என்று மாட்டிறைச்சியைக்கூறுவார்கள்.
சைவச்சாப்பாட்டுடன் கறியைக்குழைத்துச்சாப்பிடுவதென்று யாழ்ப்பாணத்தில் கூறுவார்கள்.இந்தியாவில் கறி என்று ஆட்டிறைச்சியைக்கூறுவார்கள்.
அன்புடன்
வர்மா
ஹஹ்ஹா...பாஸ்..மீன் வாசனைன்னு அழகா சொல்லுங்க..:-)
வருகைக்கு நன்றி உலவு நண்பருக்கு
வாங்க முத்துலெட்சுமி
நீங்க சைவம் போல ;)
மேலதிக தகவலுக்கு நன்றி வர்மா
ஆச்சி (சந்தனமுல்லை)
பிரியாணி வாசனையில் இருந்தா இப்படித்தான் போல ;)
எனக்கு மீன் வெடில் சரிப்படாதுங்கோ:)
வாங்க மாதேவி, நீங்களும் சைவ பட்சணி போல ;)
எங்கள் ஊரில்(வடமராட்சி) சைவம் என்பதற்குப் பதிலாக திய்யம் என்ற சொல் வழக்கத்தில் உண்டு. இது "தூய" என்பதில் இருந்து மருவியிருக்கலாம்.
இதனை விட ஆமா என்பதனை யாழ்ப்பாணத்தில் ஓம்.ஆம்.ஓ சொல்லுங்கோ. என்ன கதைச்சுக்கொண்டே இருக்கிறியல் என்று பல சொல்லாடல் காணப்படுகிறது.
நாத்தம் என்பதை , மணக்குது என்று சொல்வது உண்டு , நல்ல வாசம் மூக்கை துளைக்குது. நல்ல வாசனையை சொல்வது பேச்சு வழக்கில் இருக்கிறது
செம காச்சல் என்பார்கள்.. இந்தியாவில் ஜுரம் என்பார்கள்..
காங்கோ என்பது கொடுங்கோ என்பதற்கு பதிலாக வாக்கியங்கள் காணப்படுகிறது