Author: கானா பிரபா
•3:55 AM
வைரவர் கோயிலுக்குப் படையல் செய்யும் மும்முரத்தில் அம்மா அடுக்களையில் இருக்கிறார். மெல்லப் போய்ப் பார்த்தால் ஒரு பெரிய அலுமினியப்பாத்திரத்துக்குள் ஏதோ கிண்டிக் கொண்டிருந்தார். அந்தப் பாத்திரத்துக்குள் சர்க்கரை, தேங்காய்ப்பூ, பயறு எல்லாம் சேர்ந்த கலவையாக கூட்டணி அமைத்துக் கொண்டு தேர்தல் பிரச்சாரம் பார்க்க வந்த சனம் மாதிரி நெருக்கமாக இருக்கினம். மெல்ல மெல்லக் கிளறி சர்க்கரை நொந்து நூலாகும் வரையும் ஆக்கி விட்டு விட்டுத்தான் பேசாமல் விட்டார் அம்மா.

அடுத்தது என்ன? இன்னொரு பெரும் பாத்திரத்துக்குள் அரிசிமாவையும், கொஞ்சம் உப்பையும் போட்டுக் கொதிநீரை வாரி இறைத்து விட்டு அந்தப் பாத்திரத்தில் இருக்கும் மாவையும் கிளறோ கிளறென்று கிளறிப் பதமாக்கி விட்டுப் பின்னர் ஒவ்வொரு உருண்டையாக உருட்டிப் பின் வட்டமாக்கிவிட்டு, மற்றப் பாத்திரத்தில் இருந்த பயறு, தேங்காய்ப்பூ, சக்கரைப்பூக் கூட்டணியினரைத் திரட்டிய மாவுக்குள் மெதுவாகத் தள்ளி விட்டு மூடிக்கட்டி உருண்டையாக்கித் தலையில் ஒரு குடும்பி மாதிரி வைத்து விட்டார். ஆகா மோதகம் தயார். அதையே இன்னும் நீட்டான இலைவடிவமான தினுசாக மாற்றி விட்டு உள்ளுக்குள் அந்தக் கூட்டணியை வைத்துப் பூட்டி கொஞ்சம் பற்களைக் காட்டினால் கொழுக்கட்டை தயார்.

இப்போது விஷயத்துக்கு வருகிறேன். முன்னர் எட்டிப்பார்க்கும் போது கலவையாக இருந்த அந்தப் பயறு, சர்க்கரை, தேங்காப்பூ சேர்ந்த கூட்டணியைத் தான் "உள்ளுடன்" என்று அழைப்பார்கள்.
பெரும் எடுப்பிலான திருவிழாக்கள் என்றால் அயலவர்கள் ஒன்று சேர்ந்து, பதமாகச் செய்த உள்ளுடனை திரட்டி வைத்த மாவில் மோதகம், கொழுக்கட்டை பிடித்துக் கொண்டே உள்ளூர் , உலக அரசியல் பேசிக் கொண்டே காரியத்தை முடிப்பார்கள்.

கொஞ்சம் பணக்கார விட்டு மோதகம், கொழுக்கட்டை என்றால் முந்திரிகை வத்தல், கற்கண்டும் கடிபடும்.

மோதகம், கொழுக்கட்டை போன்றவற்றின் உள்ளே அமைந்திருப்பதால் "உள்ளுடன்" என்று வந்திருக்குமோ அல்லது "உள்ளுடல்" தான் "உள்ளுடன்" ஆகியதோ தெரியாது. தமிழகத்திலும் இந்தச் சொல் உபயோகத்தில் இருக்கிறதா என்ன? இல்லாவிட்டால் எப்படிச் சொல்வார்கள்?

என்னதான் சொல்லுங்கோ, எனக்கு மோதகம் சாப்பிடுறதிலும் பார்க்க அந்த மாவுக்குள் இருக்கும் "உள்ளுடன்" சமாச்சாரம் என்றால் கொள்ளைப் பிரியம். என் சின்ன வயசில் எனக்குக் கிடைக்கும் மோதகத்தின் தோலை (மா பகுதி) உரித்து அம்மாவின் கையில் கொடுத்து விட்டு சாவகாசமாக இந்த உள்ளுடனைச் சாப்பிட ஆரம்பிப்பேன். இதுக்காகவே எனக்காக மோதகம் உருட்டாத உள்ளுடன் பாகத்தை கொஞ்சமாக முற்கூட்டியே எடுத்து வைத்து விட்டு அம்மா மோதகம் செய்வது வழக்கம். இப்ப மட்டும் என்னவாம். உணவகத்தில் விற்கும் கொழுக்கட்டையை வாங்கி ஒரு கப்பில் போட்டு விட்டு கரண்டியால் "உள்ளுடன்" சாப்பிடும் வழக்கம் இன்னும் இருக்குப் பாருங்கோ.
தொட்டில் பழக்கம் சிட்னி வரைக்குமாமே ;)
This entry was posted on 3:55 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

11 comments:

On May 7, 2010 at 4:22 AM , சந்தனமுல்லை said...

ஹிஹி...இதை பூரணம்னு சொல்லுவாங்க அம்மா..அதுவும் இது வெல்ல வாசனையோட செம சூப்பரா இருக்கும் தனியா சாப்பிட..ஆனா படைக்காம எடுக்க விட மாட்டாங்களே...அத்தை கிட்டே கேட்டா கொஞ்சூண்டு பூவரச் இலையிலே வச்சு தருவாங்க...:-)

 
On May 7, 2010 at 4:23 AM , சந்தனமுல்லை said...

நீங்க ஒரு அன்னம் பாஸ்...தண்ணியை விட்டுட்டு பாலை மட்டும் உரியுமாமே...:)))

 
On May 7, 2010 at 4:23 AM , ஆயில்யன் said...

அட இது தானே சோமாஸு ?

இல்ல பாஸ் இல்ல ஷேப் மட்டும்தான் அப்படிக்கா இருக்கு இது வேற நான் துன்னது இல்ல :(

 
On May 7, 2010 at 4:43 AM , தாருகாசினி said...

நாங்களும் சின்ன வயசில இந்த உள்ளுடனுக்கு அலையிறது....இப்ப உள்ளுடன நீக்கி வெளி மாவை மட்டும் தான் சாப்பிடுறது...காலம் மாறிப்போச்சு....;)

 
On May 7, 2010 at 5:11 AM , கலை said...

எனக்கும் அந்த உளுடந்தான் விருப்பம். இப்ப கொஞ்சம் மாவையும் சேர்த்து சாப்பிடுறது. :)

 
On May 7, 2010 at 5:45 AM , தமிழ் பிரியன் said...

பாஸ்.. எங்க வீட்லயும் செய்வோம்.. அது பேரு பொதுவா பூரணம்.. உள்ளே வைப்பதை இரை அப்படின்னு சொல்வோம்.. எனக்கு ரொம்பப் பிடிக்கும்... இரை வதக்கும் போது கொஞ்சம் ஏலம், கிராம்பும் போட்டு இருந்தால் அடுத்த தெருவில் இருந்து ஆள் வந்து விடும்.. எங்க அம்மாவை விட எங்க அக்கா சூப்பரா செய்வாங்க..
:-)

 
On May 7, 2010 at 8:20 AM , கானா பிரபா said...

சந்தனமுல்லை

பூரணம் இப்போது தான் கேள்விப்படுகிறேன்

ஆயில்யன்

சோமாஸூ அடுத்த முறை அங்கே வரும் போது ஒரு கை பார்க்கிறேன்.


தாருகாசினி

ஆகா, எல்லாம் மாறிப்போச்சா

வாங்கோ கலை ;)


தமிழ்ப்பிரியன்


இரை என்ற பெயர் சொல்லி மிரட்டுறீங்கள் ;)

 
On May 7, 2010 at 8:23 AM , ஆயில்யன் said...

//தமிழ் பிரியன் said...

ஏலம், கிராம்பும் போட்டு இருந்தால் அடுத்த தெருவில் இருந்து ஆள் வந்து விடும்.. //

அச்சச்சோ அப்புறம் வந்த ஆளை அடிச்சு தொரத்திடுவீங்களா பாஸ்?

 
On May 12, 2010 at 8:16 AM , வலசு - வேலணை said...

வேலணையில் உள்ளுடல் என்றுதான் அழைப்போம். அதுதான் மருவி “உள்ளுடன்” ஆகியிருக்கலாம்

சமோசா வேறு கொழுக்கட்டை வேறு

 
On May 12, 2010 at 8:38 AM , கமல் said...

மெய் தான் பாருங்கோ.. எனக்கும் உந்த உள்ளுடன் என்றால் நல்ல விருப்பம். அம்மா கொழுக்கட்டை செய்ய முதலே நான் உந்த உள்ளுடனை ஒரு கை பார்த்திடுவன்.

 
On June 7, 2010 at 3:09 PM , விசரன் said...

சுகர் எண்டுட்டார் டாக்டர் என்ற விசரில நானிருக்கிறன்.. மோதகத்தின்ட படம் போட்டு.. அதப்பத்தி கனக்க எழுதி ...வேணா பிரபா
வலிக்குது